1

இத்தனை ஆண்டு காலம்
நானறிந்தவர்கள்
என்னையறிந்தவர்கள் வருகிறார்கள்.
இறுகிய முகங்களுடன்
மலர் மாலைகளை வைத்து விட்டு
என் முகத்தை சில வினாடிகள் பார்த்து
விலகுகிறார்கள்.
கதறும் என் மனைவிக்கு
குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்

எனக்கு ரோஜாப் பூ வாச ஒவ்வாமை உண்டு
குளிர் அதிகமாக இருக்கிறது
எனக்கு சைனஸ் பிரச்சனையும் இருக்கிறது
இதையெல்லாம் சொன்னால்
நான் வாழ முடியாது
பெட்டியிலிருந்து எழுந்து
கட்டுகளைப் பிரிக்கிறேன்
இத்தனை பேர் கை தட்டுவார்கள்
கை குலுக்குவார்கள் என்று
சற்று முன் வரை எனக்குத் தெரியாது
ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும்
இதைப் பார்க்கும்
என் மனைவியும்,குழந்தைகளும்
கை தட்ட மாட்டார்கள்
என்னுடன் கை குலுக்க மாட்டார்கள்

2

கடைசிக் காதல் கடிதத்தை கொலை செய்த நாளின் இரவு

அழுகி நாறுன பொணம்டா அது
சொல்லச் சொல்லக் கேட்காம

இத்தன நாளா சொமந்துக்கிட்டிருந்த
ஒரு வழியா ஒனக்கு மனசு வந்ததே
ரொம்பச் சந்தோஷம்டா
பூதம் போல் காத்து வந்த
உன் கடைசிக் கடிதத்தை
இத்தனை ஆண்டுகள் கழித்து
நடுங்கும் விரல்களால்
கிழித்தெறிந்த நாளின் இரவில்
இந்த வார்த்தைகளைச் சொல்லி விட்டு
அலங்கரிக்கப்பட்ட கண்ணாடிக் குவளையிலிருந்த
பொன் திரவத்தை அருந்தும்
அவன் பின்னால்
கொடைக்கானல் மலைச்சாலையில்
நட்சத்திரங்கள் இறங்கிக் கொண்டிருந்தன.
துளி ஒளியையும் சிந்தி விட்டு
மேகங்களுக்குள் நழுவியது குறை நிலவு
அமைதியில் விழுந்து பரவி மூழ்கியது
புள்ளி ஆந்தையின் கூக்குரல்
என் கையிலிருக்கும் கோப்பையினுள்
மிதக்கின்றன
கழுத்தை நெறிக்கையிலும்
துளியும் முகம் கோணாது
என்னைப் பார்த்துச் சிரித்த
அந்தக் கண்கள்  

++

ஜி சிவக்குமார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர்.வேதியியலில் முனைவர்

பட்டம் பெற்றுள்ளார்.தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி

இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார்.கவிதைகள், சிறுகதைகள்

எழுதுவதோடு,பயணங்கள் செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும்

விருப்பம் கொண்டவர்.ஆனந்த விகடன், கணையாழி, காணி நிலம்,புரவி

இதழ்களிலும், கொலுசு,கோடுகள் முதலான மின் இதழ்களிலும் இவரது

கவிதைகள் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. வெம்புகரி என்ற சிறுகதைத்

தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும்

யானை,ஆத்மாநாமின் கடவுள்,தோடுடைய செவியள் ஆகிய கவிதைத்

தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *