1
ஞாயிறு மதியம் மட்டும் சமையல் செய்கிறவன்
அலைபேசியில்
முன்னால் செல்பவரின் அடியொற்றி
யூ குழாயில்
நீங்கள் சென்று கொண்டிருக்கையில்
உங்களது
ஒரு துளி,ஒரு துளி கவனக்குறைவினால்
நெருப்பிலிருந்த எண்ணெய்த் துளி
உங்கள் கைகளில் தாவி அமர்கிறது
கிளை பரப்பும் எரிச்சலில் பதறும் நீங்கள்
வீட்டில் இல்லாத பர்னாலைத்
தேடித் தவிக்கிறீர்கள்
அப்போதுதான் கவனிக்கிறீர்கள்
என்னைக்காவது கிச்சனுக்கு வந்தா
இப்படித்தான்.
தண்ணில கை வைங்க
எரிச்சல் அடங்கும் என்றபடி
குழாயைத் திறக்கும் கைகளில்
கொதிக்கும் எண்ணையிட்ட
ஏராளமான புள்ளிகளை.

2
அய்யர் பங்களா சிக்னலில் நடனமாடுபவன்
90லிருந்து கீழிறங்கும் சிவந்த எண்களை
எண்ணிக் கொண்டிருக்கிறாள்
இரு சக்கர வாகனச் சிறு பெண்.
இடைவெளிகளை நிரப்பியபடி
காலுதைத்துக் காத்திருக்கின்றன
இரு சக்கர,பல் சக்கர வாகனங்கள்
எதிர்த் திசையில்
விடுபட்ட வாகனங்களின் உரத்த பாடல்களோசை
சின்னச் சின்ன இடைவெளிகளைக் கண்டடடைந்து
சாலையைக் கடக்கும் பெண்ணின்
ஒரு கையில் குழந்தை
மறு கையில் ராஜ்மஹால் கட்டைப்பை
பெட்ரோல்,டீசல் நறுமணங்கள்
தலைக்கவசம் இறுகப் பற்றியிருந்த
அலைபேசி உரையாடல்கள்
ஒரு மலர் மலர்வது போலப் பரவியது
ராயல் கேஃபின் கொத்து புரோட்டாவின் இன்னிசை.
டட்டனட்ட, டட்டனட்ட,டட்டனட்ட
டட்டனட்ட, டட்டனட்ட,டட்டனட்ட
டட்டனட்ட, டட்டனட்ட,டட்டனட்ட
டட்டனட்ட, டட்டனட்ட,டட்டனட்ட
டடடடன்ட்ட, டடடடன்ட்ட, டடடடன்ட்ட
டடடடன்ட்ட
என்னையிழந்து
வாகனத்திலிருந்து இறங்கி
கைகளை உயர்த்தி,விரித்து
நடனமாடத் துவங்கினேன்
இணைந்து கொள்கிறீர்களா?
++

ஜி சிவக்குமார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர்.வேதியியலில் முனைவர்
பட்டம் பெற்றுள்ளார்.தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி
இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார்.கவிதைகள், சிறுகதைகள்
எழுதுவதோடு,பயணங்கள் செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும்
விருப்பம் கொண்டவர்.ஆனந்த விகடன், கணையாழி, காணி நிலம்,புரவி
இதழ்களிலும், கொலுசு,கோடுகள் முதலான மின் இதழ்களிலும் இவரது
கவிதைகள் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. வெம்புகரி என்ற சிறுகதைத்
தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும்
யானை,ஆத்மாநாமின் கடவுள்,தோடுடைய செவியள் ஆகிய கவிதைத்
தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்