காம தாண்டவம்
வாசனையை உணரும் போதே
பார்வையிலும் அசைகிறது.
இறுகச் சாற்றப்பட்ட அறைக்குள் எப்படி வந்ததது?
எந்த விதப் பதட்டமுமின்றி
என்னையே பார்த்தபடி
எத்தனை இயல்பாக
கூர் நுனிக்கெதிரான
விரிந்த பெரும் படத்தை
யட்சியென அசைத்தபடியேயிருக்கிறது.
பயமும்,பரவசமும்
அடுத்தடுத்த கண்ணிகளாய் நீள்கின்ற
பெருந் தொடரில்,ஒற்றை பயமில்லை
மினுங்கும் அடுக்கடுக்கான மடிப்புகளில்,
மழை மின்னல்களான,
பிளவு பட்ட ஈர நாக்கின் நடனத்தில்,
சதைச் சும்மாட்டுச் சுருளின் அழகில்
என்னிலையிழந்து ஒத்திசையத் தொடங்குகிறேன்
அதிலிருந்து வந்த நான்.
000
நீலச் சிலுவையின் நிழலில் இருப்பவர்கள்
உணவுகளைப் பங்கிட,
எல்லைகளைத் தீர்மானிக்க,
புணரும் இணை மீதான உரிமையை உறுதி செய்ய,
நீர் நிலைகளில் அமலைகளைப் போல்
தெருக்களில் பெருகியவர்களின்
பெருங்குரல்களால் அதிர்கின்றன வெளிகள்.
விடாமல் துரத்திய
மாநகராட்சி,நகராட்சி கூண்டுகளின் பேரச்சங்கள்
அவர்களின் நினைவுகளிலிருந்தே மறைந்து விட்டன.
கூர் பற்களை மழுக்கிக் கொள்ளும்
அவர்களின் கருணையில்லாமலிருந்திருந்ததால்
பெருந் தொற்றுக் காலம் போல
மருத்துவமனைகள் வழிந்திருக்கும்
என்றாலும்
பகலிலும்,இரவிலும்
உங்களின் மென்மையான சதைகளில்
கூர் பற்கள் உள்ளிறங்கும் சாத்தியங்களுடன்தான்
உங்கள் தெருவில் நுழைகிறீர்கள்.
சாலைகளில்
அவர்கள் விளையாடும் போது
குறுக்கே வந்து
உங்கள் வாகனங்களைக் கவிழ்த்தது
உங்களின் பிழைதானே.
லேசான சிராய்ப்புகள்தானே,
கை,கால்கள் முறிவுதானே,
உயிர்தானே போனது
முணுமுணுக்காதீர்கள்.
குரலெழுப்பாதீர்கள்
குறை சொல்லாதீர்கள்
அவர்கள் பாக்யவான்கள்
நீலச் சிலுவைகளின் நிழலில் இருக்கும்படி
ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்.
000

ஜி சிவக்குமார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர்.வேதியியலில் முனைவர்
பட்டம் பெற்றுள்ளார்.தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி
இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார்.கவிதைகள், சிறுகதைகள்
எழுதுவதோடு,பயணங்கள் செய்வதிலும் புகைப்படம் எடுப்பதிலும்
விருப்பம் கொண்டவர்.ஆனந்த விகடன், கணையாழி, காணி நிலம்,புரவி
இதழ்களிலும், கொலுசு,கோடுகள் முதலான மின் இதழ்களிலும் இவரது
கவிதைகள் சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. வெம்புகரி என்ற சிறுகதைத்
தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும்
யானை,ஆத்மாநாமின் கடவுள்,தோடுடைய செவியள் ஆகிய கவிதைத்
தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்