1
சமீபத்திய மழையில்
பச்சை பீறிட்டிருந்த வனத்தினுள்
உறுமி நகரும் உலோகத்தினுள் அமர்ந்திருந்தோம்.
மரத் திரையின் கிழிசல்கள் வழி
அங்கங்கே தரையிறங்கியிருந்தது சூரியன்.
மெலிந்த நதியின் முணுமுணுப்பைக் கேட்டபடி
பாறையில் அமர்ந்திருந்தது கொக்கொன்று.
சாலையோர வளைவில்
செடிகளை வளைத்து உடைத்துத் தின்றபடி
நின்றிருந்த யானையொன்றைக் கண்டோம்.
சிவாவுக்கு யானை ராசி.
எப்படியும் வந்துருது பாரு என்றார் நண்பர்.
சிரித்துக் கொண்டேன்.
நானறிவேன்
யானை மட்டுமல்ல
காட்டு மாடு,மான் கூட்டங்கள்,
தோகை விரித்தாடிய மயில்
எல்லாம் வந்தது
என்ன Chillness.
இந்த மேகங்கள்,காடு.இதெல்லாம் பாக்கறப்ப
ஒரு Princess மாதிரி பீல் பண்றேன் மேடம்
என்று வெகுளித்தனமாய்ச் சொன்ன
உன்னைப் பார்க்கத்தானே
சிவரஞ்சனி
2
பறந்து பறந்து பறந்து
பறந்து பறந்து பறந்து
பறந்து பறந்து பறந்து
களைத்த தும்பி ஓய்வெடுக்கிறது
கரிச்சானின் கூரலகில்.
3
ஜன்னல்களும் இறுகியிருந்தன.
வெளி அதிர அதிர
அழைப்பு மணியை ஒலித்தேன்.
தொண்டை வறள வறள
குரலெழுப்பி அழைத்தேன்
கை வலிக்க வலிக்க
கதவைத் தட்டினேன்
சலித்துத் திரும்புகையில்
தாள் விலகும் ஒலியைக் கேட்டேன்.
00
ஜி சிவக்குமார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்தவர். வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது மதுரையில் நீர்வளத் துறையில் உதவி இயக்குனராகப் பணி புரிந்து வருகிறார்.
வெம்புகரி என்ற சிறுகதைத் தொகுப்பு மற்றும் புல்லாங்குழல்களைச் சுவைக்கும் யானை, ஆத்மாநாமின் கடவுள், தோடுடைய செவியள் ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்