அந்த  ஆட்டின் பிறப்புறுப்பு பகுதியிலிருந்து ஊளைமூக்குபோல பிசுபிசுப்பான திரவம் வடியத்தொடங்கியது. ஆடு நிற்க முடியாமல் அங்கிட்டும், இங்கிட்டும் தத்தளித்தது. ஒருநிலையில்லாமல் கதறியது. வாலினை கிடுகிடுவென்று ஆட்டியது. இதைப் பார்த்தவுடனே மாரீஸ்வரிக்கு ஆறுமுகம் தாத்தாதான் ஞாபகத்துக்கு வந்தார்.

   ஆறுமுகம் தாத்தா சில நாட்களுக்கு முன் -தன் மகள் வழி பேரன் இப்பதான் பிறந்திருக்கான். அவனுக்கு பதினோராவது மாசத்தில வெம்பக்கோட்டை பாண்டி குலசாமி கோயில்ல மொட்டை, காதுகுத்து வைக்கணும்னு வீட்ல பேசுறாங்க. உங்க வீட்ல ஆடு சினையாயிருக்குது எனக்கு தோதாகிப்போச்சு. கிடாக்குட்டிக பிறந்துச்சுனா எம்பேரன் மொட்டைக்கு கொடுத்திருங்க -அதுக்காக இந்தாங்க முன்கூட்டியே  அட்வான்ஸ்னு.. பணத்தை கொஞ்சநாளைக்கு முன் மாரீஸ்வரியின் அம்மாகிட்ட கொடுத்திருந்தார் .

ஆடு பிறப்பதற்கு முன்னே அதன் இறப்புக்கு, அம்மா வாங்கிய அட்வான்ஸை இப்போது நினைக்கும்போதே மாரீஸ்வரிக்கு என்னவோ  போலிருந்தது.

 அதுக்காக ‘எப்படியாவது ஆடு பொட்டைக்குட்டிதான் போடணும், கிடாக்குட்டி போட்றக்கூடாதுனு மனதினுள் வேண்டினாள் மாரீஸ்வரி.

அவள் அப்படி வேண்டுவதற்கு ஆழமான ஒரு காரணமும் இருக்கத்தான் செய்தது.

என்னதான் தன் அப்பா ஆடு வியாபாரம்-பொங்கல் விழாக்களில் கிடாய்களை வெட்டி கறிபோடுகிற தொழில் பார்த்து கைநிறைய சம்பாரித்தாலும், மாரீஸ்வரிக்கு அந்த சம்பாத்யம் என்னவோ பாவமாய் மனதை உறுத்தியது. வயிறு கழுவ வேற வழியா இல்லை என்று தனக்குள்ளே புலம்புவாள்.

இயல்பாகவே சின்ன உயிர்களின் மீது மாரீஸ்வரிக்கு ரொம்ப பாசம், பரிவு இருந்தது. இதனாலயே மாரீஸ்வரியை ரொம்ப பேர் பெரிய ‘வள்ளலார் வம்சம்’ ‘அன்னை தெரசா பேத்தி’ என்று கேலி பண்ணுவாங்க. அதையெல்லாம் அவள் காதில் வாங்காமல் தன் மனது நம்புகிற விஷயத்தை ஆழமாக நேசித்தாள்.

உண்மையிலே மாரீஸ்வரி, ஆடுகளின் மேல் அவ்வளவு உயிராய் இருப்பதற்கு காரணம் சுப்புத்தாய் அத்தைதான்.

       சுப்புத்தாய் அத்தைக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் போனது. அதனால என்னவோ அவள் ஒரு செம்மறிகிடாக்குட்டியை தன் பிள்ளைபோல நினைத்து வளர்த்தாள். அந்த செம்மறி குட்டி, சுப்புத்தாய் அத்தை எங்கு போனாலும், பின்னாடியே ஓடும். படுத்துத் தூங்கும்போது அவள் பக்கத்திலே போய் பிள்ளைபோல படுத்துக்கொள்ளும்.

கடைசியில் அந்தக் குட்டிக்கு உண்மையிலே தாயாகிப்போனாள் சுப்புத்தாய் அத்தை.

         குழந்தைப்பருவத்தில் மாரீஸ்வரி சுப்புத்தாய் அத்தை வீட்டுக்கு விளையாடப்போவது பழக்கம். கடைசியில் மாரீஸ்வரிக்கும் சுப்புத்தாய் அத்தை மாதிரி செம்மறி கிடாக் குட்டியின்மீது பாசம் வந்தது. அதுவே பின்னாளில் சிறுசிறு உயிர்களின் மீது மாரீஸ்வரி பாசம் கொள்வதற்கு  காரணமாகிப்போனது.

      எப்போதுமே தன் வீட்டில் ஆடு சினையாகிவிட்டாள் மாரீஸ்வரிக்கு சந்தோஷம் தாங்கமுடியாது. பிறப்பது கிடாக்குட்டியாய் இருந்தால், சுப்புத்தாய் அத்தை மாதிரி நாமும் அந்த கிடாக்குட்டியை கறிக்கு விற்காமல் கடைசிவரை பிள்ளைபோல வளர்க்கவேண்டும் என்ற ஆசை அதிகமாக வரும்.அதனால் என்னவோ ஒவ்வொரு தடவையும் ஏதாவதொரு ஆடு சினையாகயிருந்தால் வீட்டில் சொல்லுவாள் “கிடாக்குட்டி பிறந்தால் இந்தவாட்டி அதை விற்கவேண்டாம்.. நான் அந்த குட்டியை சுப்புத்தாய் அத்தைபோல வளர்க்க போறேன்” என்று.

     அவள் சொல்லுவதற்கு ஆரம்பத்தில் வீட்டில் சரி என்பார்கள். பிறகு கொஞ்சநாளில் யாராவது நல்ல விலைக்கு கேட்டு வந்தால் கிடாக்குட்டியை விற்றுவிடுவார்கள். அப்போது அவளுக்கு கோபம் பொத்துக்கொண்டு வரும். அவள் கோபத்தை சரி பண்ண இன்னொரு ஆடு சினையானா -அது போடுற குட்டி ஒனக்குத்தான் என்பார்கள். இவள் வேண்டா வெறுப்பாக அவர்களது சமாதானத்தை ஏற்றுக்கொள்வாள். இப்படியேதான் அவள் நான்காம் வகுப்பு படிக்கேயிலிருந்து இப்போ பதினொன்றாம் வகுப்பு படிக்கும் வரை சொல்லிக்கொண்டே வருகிறார்கள் -ஆனாலும் அவள் ஆசை நிறைவேறுவதுமாதிரி தெரியவில்லை. ஒவ்வொரு தடவையும் ஏதாவதொரு சாக்கைச் சொல்லி குட்டியை விற்றுவிடுகிறார்கள்.

  இந்தவாட்டி ஆடு சினையாகயிருக்கும்போது கண்டிப்பா கிடாக்குட்டி பிறந்தால் அது ஒனக்குத்தான் என்றார்கள். இவளும் நம்பிக்கையில்லாட்டாலும், கொஞ்சம் சந்தோஷத்துடன் தெரிந்தாள். அந்த சந்தோஷத்தில் மண்ணள்ளிப்போடுவது மாதிரி ஆறுமுகம் தாத்தா அவர் பேரன் மொட்டைக்கு வந்து கிடாக்குட்டி பொறந்தா விலைக்கு கொடுத்திருங்க என்று கேட்கவும் அம்மா சரி என்று சொல்லி, பிறகு அவர் கொடுத்த அட்வான்ஸையும் வாங்கி வைத்துக்கொண்டாள்.

அப்போது கோபப்பட ஆரம்பித்த மாரீஸ்வரி அந்த நொடியிலிருந்து “கடவுளிடம் தயவு செய்து கிடாக்குட்டி பொறந்திடக்கூடாது” என்று பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தாள். அந்தப் பிரார்த்தனை இப்பவரை தொடர்கிறது.

நேரமாக, நேரமாக மாரீஸ்வரிக்கு ஒரே பதட்டமாக இருந்தது.

சிறிதுநேரத்தில் பனிக்குடம் உடைந்து ஆடுகளின் கால்களிடையே நீராய் ஓடியது. அடுத்த சில நொடியிலேயே தலையை பிதுங்கிக்கொண்டு வெளியே வந்தது குட்டி. அதை கையைவிட்டு உருவினார்

வீரபாண்டி.

மாரீஸ்வரிக்கு மனசு பக்பக்கேன்றது. வீரபாண்டி முழுதாக வெளியே உருவி போட்டவுடனே அவளது ஆசை பட்டுப்போனது. அவள் எதை எதிர்பார்த்தாளோ அது நடக்கவில்லை. அந்த குட்டி கிடாக்குட்டியாய் போனது. ‘ச்சே ‘நமது பிரார்த்தனை மண்ணாப்போச்சே என்று வருந்தினாள்.

அந்தக்குட்டியை அந்த தாயாடு லபக், லபக்கென்று நாக்கால் நக்கியது. அப்போது அந்த குட்டியின் மேலிருந்த பிசுபிசுப்பு கொஞ்சம் கொஞ்சமாக  நீங்கியது. அடுத்த குட்டி அதன் பிறப்புறுப்பிலிருந்து வெளியே வந்தது. அது பொட்டை குட்டியாக இருந்தது. முழுசந்தோஷம் கிடைக்காட்டாலும் பாதி சந்தோஷமாவாது கிடைத்தது மாரீஸ்வரிக்கு. பிறந்திருக்கிற பொட்டக்குட்டியைப் பார்த்து ஒன்ன இனவிருத்திக்காக ஒரு அஞ்சுஆறு வருஷமாவது உயிரோடு வளர்ப்பாங்க..ஆனா இந்த கிடாக்குட்டிய (ஆண்) ஒரு வருஷத்துக்குள்ளாகவே கறிக்கு அறுத்துருவாங்க.. அதற்கு ஆயுள் அவ்வளவுதான்..மனுஷப்பயங்க உள்ளவரை அதோட தலவிதி அவ்வளவுதான்.. என்ன பண்ண நாம நெனச்சதெல்லாம் நடக்காவா செய்யுது என வெறுமையில் மனதை தேற்றிக்கொண்டாள்.

ஆடுகள் மேல் நமக்கேன் இவ்வளவு கரிசனம். ஒருவேளை இது கிறுக்குத்தனமா..நம்மல எல்லாமே கிறுக்கின்னுதான சொல்றாங்க… சொன்னாச் சொல்லட்டமே நான் கிறுக்கியாவே இருந்திட்டுப்போறேன்..! நாம கிறுக்கின்னு பிற உயிர்களை கொல்லாதே, இறைச்சி திங்காதே என்று சொன்ன வள்ளலார்,,வள்ளுவர் எல்லாம் கிறுக்குதானே. அவர்களது போதனைகளும் கிறுக்குத்தனம்தானே..! ஆடு மேல இவ்வளவு அன்பு வச்சதனாலாதான் இந்த பேரு கிடைச்சதுனா அதுவும் சந்தோஷம்தான் எனக்கு என்று ஏதேதோ நினைப்போடியது மாரீஸ்வரி மனதினுள்.

    அந்த இரண்டு குட்டிகளையும் ஆடு மாறி,மாறி நாவால் வருடியது. ஒரு குட்டி கொஞ்சம் கொடுத்து வச்சது, இன்னொரு குட்டி என்று நினைக்கும்போது அவளுக்கு ஆறுமுகம் தாத்தா நினைவுக்கு வந்தார். பேசாமா அப்பாகிட்ட சொல்லி அட்வான்ஸ திருப்பிக் கொடுக்கச்  சொல்லிட்டு -இந்தக்குட்டியை சுப்புத்தாய் அத்தை மாதிரி நானு வளர்க்கப்போறேன்னு சொல்லலாமா.. அப்படி சொன்னால் அப்பா ஏத்துக்குவாரா- இல்ல இது தொழில்ம்மா என்று வழக்கம்போல ஏதாவது  சொல்லுவாரே..

இதுக்கு முன்னாடி நம்ம வீட்டில் எத்தனையோ குட்டி பிறக்கும்போது நான் சொல்லி அவர் கேட்டதே இல்லை..இப்ப மட்டும் எப்படி… .?என்று நினைத்தாள்.

அந்த தாய் ஆட்டின் முலைக்காம்பை பிடித்து, குட்டிகளின் வாயில் வைத்தார் வீரபாண்டி. குட்டிகள் அதன் மென்மையான ஈர வாய்களால் முதன்முதலாக தாயின் காம்பிலிருந்து பாலைக்குடிக்க ஆரம்பித்தது. அந்த ஆடு அந்தக்குட்டிகளை நக்குவதை விடவில்லை.

அதைப்பார்க்கும்போது மாரீஸ்வரிக்கு கண்ணில் ஈரம் கசியத்தொடங்கியது. இன்னும் எத்தன நாளைக்கு இந்த கிடாக்குட்டிக்கு  தாயன்பு கிடைக்கும்…?

 கடவுளை நினைக்கும்போது மாரீஸ்வரிக்கு வெறுப்பாய் இருந்தது. என் பிரார்த்தனையை இப்படி நடக்கவிடாமல் ஆக்கிட்டானே  அந்த குருட்டுக்கடவுள் என வருத்தப்பட்டாள். அந்த ஆறுமுகம் தாத்தாவுக்கு தெரியுமா இந்த கெடாக்குட்டி பொறந்தது. அப்பா இன்னும் கொஞ்ச நேரத்தில சொல்லிவிடுவாரு.

சரி அந்தக் கிடாக்குட்டியின் தலைவிதி..?

தப்பித்தவறி ஆறுமுகம் தாத்தா இந்த குட்டியை வாங்கலேனா வேற யாராவது கறிக்கு வாங்கப்போறாங்க அம்புட்டுதான்… நாம சொன்னதையொல்லாம் வீட்ல கேட்கவாப்போறாங்க.

 “ஏன்டி ஒரு கெடாக்குட்டி பொறந்திருக்காம்ல, என்று சந்தோஷத்துடன் வந்து கேட்ட, மாரீஸ்வரியோட அம்மா. “நல்லதாப்போச்சு ஆறுமுகம் சின்னையாகிட்ட -அவர் பேரன் மொட்டைக்கி வாங்கிய அட்வான்ஸ திருப்பிக்கொடுக்கத் தேவையில்லை..இந்த கிடாக்குட்டியோடு சேத்து இன்னொரு கிடாக்குட்டி ஈன்டுச்சுனா நல்லாயிருந்திருக்கும்..! சரி அதனால என்ன” என்று சீவானக்கம் செய்து கொண்டாள் அம்மா. அப்போது அவள் கொவட்டில் குத்தணும்போல இருந்தது மாரீஸ்வரிக்கு.

     பேசாம மற்ற மனிதர்களைப்போல நாமளும் இருந்துவிட்டால் நிம்மதி கிடைக்கும். நமக்கெதுக்கு இந்த கிடாக்குட்டியை வளர்க்கணும்னு இவ்வளவு ஆசை. ஏன் அதை நினைத்து இவ்வளவு கவலை. இது ஒருநோயா..? என்ற நினைப்போடியது மாரீஸ்வரிக்கு.

             ****************

     பெருமாள் கோவில் தெருவில் நுழைந்து ஒவ்வொரு வீடாய் சோறு வாங்கிக்கொண்டே வந்த அந்த நாடோடியான சர்க்கஸ் கலைஞனுக்கு  ஊருக்குள் நல்ல பாராட்டு கிடைத்தது- அதனால் என்னவோ வீடு தவறாமல் சோறுபோட்டனர். சர்க்கஸ் நல்லா இருக்கு.. உங்க சர்க்கஸ்ல அந்த சாரதிகிடாய் சூப்பரா சர்க்கஸ் வித்தை பண்ணுது.. நீங்க  சூப்பரா ஆடுறிங்க.. இப்படி ஏகப்பட்ட  பாராட்டுகள்.

அதனால் என்னவோ இந்த ஊரில் இன்னும் இரண்டு வாரமாவது இருக்க நினைத்தவன். பாராட்டு பெருகியதால் கூட கொஞ்ச நாள்-   இருக்கலாமென்று முடிவெடுத்தான்.

 இந்தப்பெருமையை நமது கூட்டத்துக்கிட்டப்போயி சொல்லுவோம்.. என்று நினைத்துக்கொண்டான் அந்த நாடோடி. சட்டி நிறைய சோறும், வெஞ்சனமும் பொங்கிக்கொண்டு வந்தது. சரி  இதுபோதும் என்று கிளம்பினான். “எண்ணே..! சர்க்கஸ் எண்ணே, உங்க சாரதி கிடாய் சூப்பரா சர்க்கஸ் வித்தை பண்ணுது” என்று  மாரீஸ்வரி சொன்னாள்-அப்போது அவனுக்கு சந்தோஷம் மனதெங்கும் பொங்கியது. தன்னால் வித்தை கற்ற கிடாயை பாரட்டும்போது சந்தோஷம் வராதா..? நம் வயிறு நிறைய-ஆடுகளுக்கு வித்தை கற்றுக்கொடுத்து, மக்களிடம் சர்க்கஸ் என்ற பெயரில் காண்பிக்கிறோம். மக்கள் அவர்களையும் மறந்து ஆடுகளின் வித்தையைப்பார்த்து கைதட்டுகிறார்கள்.

இப்படி வித்தையை கற்றுக்கொள்ளும் ஆடுகளால்தான் அதன் வயிறை மட்டுமல்ல, அதன் ஆயுளையும் முழுமையாக நிரப்பிக்கொள்ளமுடிகிறது. மற்ற ஆடுகள்…? என்று மனதுக்குள்ளே நினைத்துக்கொண்டான் நாடோடியான சர்க்கஸ்காரன்.

 மாரீஸ்வரியை நோக்கிப்போனான் அந்த நாடோடியான சர்க்கஸ்காரன். “நீங்கதான் நேத்து கெடாய் பண்ணின வித்தைக்கு பாராட்டி காசு கொடுத்ததா..?” என்றான் மாரீஸ்வரியைப் பார்த்து.

அதற்கு அவள் “ஆமா “என்றாள்.

”எல்லா ஊரிலும் பாத்துருக்கேன். எம். ஜி. ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், விஜய்-அஜித் இப்படி நடிகர்கள் பாட்டுக்குதான் காசு குத்துவாங்க. ஆனா நீங்கதான் மொதன்மொதலா இப்படி கிடாய் செஞ்ச வித்தையைப் பாராட்டி காசு கொடுத்திருக்கிங்க. இது உண்மையிலே அதிசியந்தான்” என்றான். அதற்கு மாரீஸ்வரி சிரித்துக்கொண்டாள்.

“இருங்க” என்று சொல்லிவிட்டுப்போய் கிடாய்க்கு, தவிடு எடுத்து வந்து கொடுத்தாள். மறுபடியும் சென்று சோறு எடுக்கப்போனாள். என்னடா இந்தப்புள்ள கிடாய் மேல இவ்வளவு பாசமா இருக்கு? என்று ஆச்சரியப்பட்டான்.

“ஏன்..ணே சர்க்கஸ்ல வளர்ற ஆடுகளை ஒருகட்டத்துக்குப்பிறகு கறிக்காக, பணத்துக்கா வித்துருவிங்களா” என்றாள் ஆர்வமாக மாரீஸ்வரி

அதற்கு நாடோடியான சர்க்கஸ்காரன் “சர்க்கஸ் ஆடுகளை எந்த சூழ்நிலையிலும் பணத்துக்காக, கறிக்காக விற்க மாட்டோம். அது எங்களுக்கு பொழப்புக்கொடுக்கிற தெய்வம்மா” என்றான் ரொம்ப உயர்வாக.

இதையெல்லாம் ஆடுகளுக்கு தண்ணி வைத்துக்கொண்டிருந்த வீரபாண்டி  கேட்டுக்கொண்டே இருந்தான். கடைசியாக பட்டியிலிருந்து வெளிவந்து உங்க சர்க்கஸை பார்க்க வாரேன். முக்கியமா உங்க கிடாய் வித்தையை பார்க்க வாறேன்” என்றான்.

“வாங்க” என்று சொல்லிவிட்டு சென்றான் சர்க்கஸ்காரன்.

வாங்கிவந்த சோற்றை தன் குழுவில் கொடுத்துவிட்டு, மாரீஸ்வரி  கொடுத்துவிட்ட தவிடை தண்ணியில் கலந்து வைப்பதற்கு சாரதிகிடாய் இருக்கும் இடத்தை நோக்கிப்போனான் நாடோடியான சர்க்கஸ்காரன். கயிறு மட்டும்தான் இருந்தது. சாரதிக் கிடாயை காணவில்லை. பிறகு கூட்டத்திற்கு வந்து “அவுத்து, கிவுத்து விட்டிங்களா கெடாயை” என்றான் கோபத்தில். “இல்லை” என்றார்கள் .”பெறகு, எங்க” என்றான். எல்லோரும் சாப்பாடை பாதியிலே வைத்துவிட்டு எழுந்து சோற்றுக்கையோடு திசை திசைக்கு தேட ஆரம்பித்தார்கள்.

கையில் வைத்திருந்த தவிடை கீழே போட்டுவிட்டு தெற்குத்தெருவை நோக்கிப்போன சர்க்கஸ்காரன் “சாரதி, சாரதி” என்று சொல்லிக்கொண்டே-அந்தத் தெருவைவிட்டு கீழிறிங்கி சாரதி என்று சத்தம்போட்டு அழைத்தான். “ம்மே” என்றது ஒரு குரல் வந்தது. அப்போதுதான் அவனுக்கு  உயிர் வந்தது. மீண்டும் சாரதி என்றான். “ம்மே”என்றது. ஒரு பருத்திகாட்டுக்குள் சாரதி சத்தம் கேட்டது. “ஐயையோ காட்டுக்காரன் பார்த்தால் கொல்லப்போறான் ஓடிவா..” என்றான்.

காட்டுக்குள்ளிருந்து ஓடி வந்து நின்றது அவன் முன்னால் கிடாய். கிடாயை கட்டுப்பிடித்து மேனியில் முத்தம் கொடுத்தான் சர்க்கஸ்காரன். அவன் முன்னால் போக சாரதி பின்னால் போனது. கிடாய் உடன் அவன் வருவதைப்பார்த்துவிட்டு, சந்தோஷப்பட்டனர் சர்க்கஸ் குழுவில் உள்ள அனைவரும். மீண்டும் சோறு இருக்கும் இடத்தை நோக்கிப்போனார்கள் நிம்மதியாக.

கீழே போட்டுச்சென்ற தவிடை அள்ளி, எடுத்து கிடாயிடம் கொடுத்தான். மூசாமல் நின்றது. “திண்ணு “என்றான். சில நொடிகளில் ஒரு பொம்மை மாதிரி சாய்ந்து தொப்பென்று தரையில் விழுந்தது கிடாய். அதன் வாயில் எச்சில் ஒழுகியது “ஏய் சாரதி, ஏய் சாரதி “என்றான் பதட்டமான குரலில் . சோற்றுக்கையோடு எழுந்து வந்தார்கள் அனைவரும்.

கிடாய் வாயிலிருந்து வடிந்த எச்சிலிருந்து குருணை மருந்து (விஷ மருந்து) வாடை அடித்தது. அதை தொட்டுப்பார்த்து மோந்து பார்த்துவிட்டு, அய்யய்யோ! என்று பதறி கதற ஆரம்பித்தான் சர்க்கஸ்காரன். அதைப்பார்த்து கூட்டமே கண்கலங்க ஆரம்பித்தது. அவன் கையிலிருந்த தவிடு, எல்லாம் விழுந்தது. அந்த சர்க்கஸ் குழுவே அழ ஆரம்பித்தது.

ஊரெங்கும் செய்தி பரவியது. எத்தனையோ ஆடுகளை கொன்று கறியாக தின்ன ஊர், அன்று அந்த சாரதி கிடாய்க்காக கொஞ்சம் வருத்தப்பட்டது.

விஷயத்தை கேள்விப்பட்டவுடனே மாரீஸ்வரியின் கண்ணில் நீர் வந்தது.

நேற்று சர்க்கஸ் கூடாரத்தில் சேர்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி  அதன் உச்சியின் மேல் ஏறச்சொன்னபோது மிக தந்திரமாக அந்த சர்க்கஸ் ஆடு மெல்ல ஏறிப்போய் நின்றது. அதற்கு பார்வையாளர்களின் கைதட்டல் அரங்கை அதிரவைத்தது.

    வட்டமாய் எரிந்த தீ வளையத்துக்குள் அங்கிட்டும், இங்கிட்டும் அந்த ஆடு போய் வந்தது என எல்லாமே மாரீஸ்வரியின் நினைவில் நின்றது. அதை இப்போது நினைத்துப்பார்க்கும்போது மாரீஸ்வரிக்கு வெறுமையாக  இருந்தது.

          காட்டில் விலங்கு பறவைகளை கொல்வதற்கு ஏதாவது உணவுகளில் குருணை மருந்து கலந்து வைப்பதில் பேர் போனவர் ராமசாமி. அவரைத்தான் சந்தேகப்பட்டு மக்கள் திட்டித்தீர்த்தனர்.

 கொஞ்ச நேரத்திற்கு பிறகுதான் அந்த ஆடு வீரபாண்டி காட்டுக்குள்ள மேஞ்சதனால செத்துப்போச்சு என தெரிந்தது. பிறகு அனைவரும் வீரபாண்டியை திட்ட ஆரம்பித்தனர்.

    கொஞ்சநேரத்தில் அந்த சாரதிக்கெடாயை ஊரின் ஒதுக்குப்புறத்தில் புதைத்துவிட்டு ஊரைவிட்டு கிளம்புவற்காக சர்க்கஸ் கூடாரத்தை அவிழ்க்கத்தொடங்கினார்கள் நாடோடிகுழுக்கள்.

“ச்சே சுப்புராஜ் ஆட்டுக்கு வச்ச மருந்த, கடைசியில இந்த சர்க்கஸ் கெடாய் தின்னுட்டு இப்படி செத்துப்போச்சே…. நாலுபேத்த சந்தோஷப்படுத்தின ஒரு உயிர இப்படிக்கொன்னுட்டமே,” என்று நினைத்து வருந்தினார் வீரபாண்டி.

       அந்த நொடியில் சுப்புராஜ் ஞாபகம் வந்தது. பல்லை நெறுநெறுவென்று கடித்தான் வீரபாண்டி.  என்னைக்கிருந்தாலும் அவனையும் விடக்கூடாது.. அவன் ஆடுகளையும் கொல்லாம விடக்கூடாது என்று நினைப்பு வலுக்கத்தொடங்கியது.

     “ஏன்ப்பா ..உங்களுக்கும், சுப்புராஜ் மாமாவுக்கும் இருந்த பகையால இப்படி சம்பந்தமில்லாம இன்னொரு உயிரைக் கொன்னுட்டிங்களே.. இப்ப உங்களால சர்க்கஸ்காரங்க பொழப்புப்போச்சு. அந்த கிடாய் பாவம்ப்பா..அந்த கிடாய் செய்யுற வித்தையைப் பார்த்து நேத்து ஊரே கைத்தட்டுச்சு… இன்னைக்கு..? ப்ச்” என்றாள் வருத்தமாக மாரீஸ்வரி.

      எப்பையாவது “ஆட்ட வெட்டி கறிபோடுற தொழில் வேண்டாம்பா.. நமக்கு வேண்டாம்பா.. பாவம்பா ..நமக்கு வயிறு கழுவ வழியா

இல்லப்பா” என்று மாரீஸ்வரி ,வீரபாண்டியிடம் சொல்லும்போது. ’எம்மேய் இது தொழிலும்மா..அதெல்லாம் கண்டுக்கிறகூடாதும்மா.. ஓனக்கு ஏதாவது பைத்தியம், கியித்தியம் பிடிச்சிக்கிருச்சாம்மா.. ஒனக்கு கல்யாணம் கட்டிக்கொடுக்க எப்படி பத்துபவுன் நகை செய்யிறது. அவனவன் மனுஷனயே வெட்டிக்கிட்டு இருக்காங்கே..! நீ என்னடானா ஆட்ட வெட்றதுக்கெல்லாம் இப்படி பாவப்பட்ட பேசுற.. கறிக்காரன் மகளா பெறந்திட்டு கறியே சுத்தம்மா திங்கமாட்ற.. நீயெல்லாம் ஐய்யர் வீட்ல பெறக்கவேண்டிய புள்ள.. தப்பித்தவறி இங்க பெறந்துட்ட.. வேலைய பாத்துட்ட போமா” என்பார் எப்போதும் நக்கலாக வீரபாண்டி.

    எத்தனையோ ஆடுகளை கறிபோட வெட்டிய வீரபாண்டி கைகள் உண்மையிலே இன்று நடுங்கியது. மனது சர்க்கஸ் கிடாய் இறந்ததை நினைத்து ரொம்ப வருந்தியது. அவர் மனதெங்கும் குற்ற உணர்ச்சி வந்தது.

மன்னிப்பு கேட்பதற்காக காலையில் வீட்டுக்கு சோறு வாங்க வந்த நாடோடியான சர்க்கஸ்காரனை கூப்பிட்டு வரச்சொன்னார் வீரபாண்டி. சர்க்கஸ்காரனை அழைக்க வேகமாக சென்றாள் மாரீஸ்வரி.

சிலநிமிஷங்களில் அவனை அழைத்து வந்தாள். அந்த நாடோடியைப் பார்த்ததும் வீரபாண்டிக்கு குற்ற உணர்ச்சி வந்தது. நாடோடியான சர்க்கஸ்காரன் முகத்தில் சோகம் அப்பியிருந்தது.

“ஏதோ தெரியாம நடந்ததுபோச்சு மன்னிச்சிக்கிங்க” என்றான் வீரபாண்டி. அதற்கு “இருக்கட்டுங்க” என்றான் நாடோடியான சர்க்கஸ்காரன்.

புதிதாக பிறந்த கிடாய்குட்டியை கையோடு தூக்கி வந்து அவன் கையில் கொடுத்தார் வீரபாண்டி. நாடோடி வாங்கமாட்டேன் என்றான். இவன் கெஞ்சினான். பிறகு நாடோடி வாங்கிக்கொண்டான். மாரீஸ்வரிக்கு சந்தோஷம் தாங்கமுடியவில்லை.

“புதுக்குட்டி நீதான் பார்த்துக்கிறணும், கொஞ்சநாளைக்கு தாய்ப்பால் இல்லாமல் வளர்க்கிறது கஷ்டம். போக போக சரியாயிடும்” என்றான் வீரபாண்டி. அதற்கு நாடோடி சரி என்று தலை அசைத்தான். கையில் ஆட்டுக்குட்டியுடன் நின்ற நாடோடியைப் பார்ப்பதற்கு ஏசுபோல இருந்தான்  .

தாய் ஆடு குட்டியைப்பிரிந்ததால் சத்தம்போட ஆரம்பித்தது. அதற்கு அந்தக்குட்டியும் சத்தம் போட்டது. முதன்முதலாக ஆடுகளின் பிரிவு சத்தத்தில் சந்தோஷத்தை உணர்ந்தான் வீரபாண்டி.

இதுவரைக்கும் எத்தனையோ ஆடுகளை கறிக்காக, விலைக்காக பிறருக்கு விற்கும்போது கிடைக்காத நிம்மதி -இன்று  சர்க்கஸ்காரன் கையில் குட்டியை, செஞ்ச பாவத்துக்கு கொடுக்கும்போது வீரபாண்டிக்கு கிடைத்தது.

என் ஆடு சர்க்கஸ் வித்தையைப் கற்று மத்தவங்களை மகிழ்ச்சிப்படுத்தும் உயிராய் ஆகப்போகிறது என்ற நினைப்பு வீரபாண்டி மனதெங்கும் சந்தோஷத்தை தந்தது.

எல்லோரிடம் “கிளம்புறேன்” என்று சொல்லிவிட்டு நாடோடி கிளம்ப ஆரம்பித்தான் அந்த கிடாய்குட்டியோடு.

மாரீஸ்வரிக்கு சர்க்கஸ் ஆடு இறந்தபோச்சுனு கவலை ஒருபுறமிருந்தாலும், இன்னொருபுறம் நம்ம வீட்டு கிடாக்குட்டி மத்தவங்கள சந்தோஷப்படுத்துகிற தொழிலை கற்கப்போகுதுனு சந்தோஷப்பட்டாள்.

    “போதுமாம்மா.. இந்த குட்டி உன் இத்தன நாளு ஆசைபோல வளரப்போகுது. என்னா.. ஒனக்குப்பதிலா அந்த சர்க்கஸ்காரன் வளர்க்கப்போறான் அந்தக் கிடாக்குட்டியை அவ்வளவுதான்” என்றான் வீரபாண்டி மாரீஸ்வரியைப் பார்த்து. அதற்கு அவள் சிரித்துக்கொண்டாள்.

   “ஏன்ங்க அட்வான்ஸ் வாங்கியாச்சு ஆறுமுகம் சின்னையாகிட்ட- இப்படி திடீரெனு கிடாக்குட்டியத்தூக்கி சரக்கஸ்காரன்கிட்ட கொடுத்துவிட்டிங்க..

இப்ப ஆறுமுகம் சின்னையாகிட்ட நாம சொன்ன சொல்லத் தவறுன மாதிரி ஆகிடுமே” என்றாள் வீரபாண்டி மனைவி கோபமாக.

படாரென்று “நல்லவிஷயத்துக்காக சொன்ன சொல்ல தவறது தப்பில்ல” என்றான் வீரபாண்டி.

000

க. செல்லப்பாண்டி செந்நெல்குடி சொந்த ஊர். விருதுநகர் மாவட்டம். பெரியபுள்ள என்ற சிறுகதை எழுதிய நான் எழுத்தாளர் தனுஷ்கோடி இராமசாமி 2023 சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றுள்ளேன். இரண்டு குறும்டங்கள் இயக்கியுள்ளேன்.டிப்ளமோ எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் படித்துள்ளேன். கட்டிட வேலை செய்து வருகிறேன்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *