ஈஷான் ஒரு குட்டி பையன். மூன்றாவது படிக்கிறான். அவன் நல்லா படிப்பான், நல்ல விளையாடுவான், ரொம்ப நல்லா ஓவியம் வரைவான். அவன் கிட்ட நிறைய நல்ல திறமைகள் இருந்துச்சு. ஆனால், அதோட சேர்த்து ஒரு சின்ன கெட்ட பழக்கமும் இருந்துச்சு. அது என்னன்னா, அவனுக்கு ஒரு பொருள் பிடிச்சதுன்னா அந்தப் பொருள் வேறு ஒருத்தரோடதாக இருந்தா கூட யாருக்கும் தெரியாம மெதுவா அதை எடுத்து மறைச்சு வைச்சுக்குவான்.

அதுக்குப் பேர் திருட்டுன்னு அவனுக்குத் தெரியாது. ஏன்னா அவன் சின்ன பையன் தானே. அவன் கிளாஸ்ல அவன் கூட படிக்கிற குழந்தைகள் கிட்டருந்து பென்சில், பேனா, ரப்பர் கலர் க்ரேயான்ஸ் பாக்ஸ், பேக்ல ஓட்டுற ஸ்டிக்கர்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ், இப்படி நிறைய பொருள்களை எடுத்து வைச்சிருந்தான்.

ஒருசில சமயம் சொந்தக்காரங்க, நண்பர்கள் வீட்டுக்கெல்லாம் போறபோது கூட குட்டிக் குட்டி பொம்மைங்க, ஃபிரிட்ஜ் ஸ்டிக்கர்ஸ் மாதிரி பொருள்களை எடுக்க ஆரம்பிச்சான். அவனோட இந்த புது பழக்கத்தை அவங்க அம்மா கவனிச்சிட்டாங்க. “ஈஷான் அடுத்தவங்க பொருளை அவங்களுக்குத் தெரியாம எடுக்கக் கூடாது. அது ரொம்ப தப்பு” அப்படின்னு அவன்கிட்ட பல தடவை எடுத்து சொன்னாங்க.

அம்மா கூட இருக்கும்போது அவங்க எடுக்கக்கூடாதுன்னு சொன்னவுடனே “சரிமா.  திருப்பி வைச்சிடுறேன்” அப்படின்னு சொல்லி வச்சிடுவான். ஆனா மறுபடியும் அதே மாதிரி ஒரு சந்தர்ப்பம் அமைஞ்சா அவனால மறைச்சி எடுத்து வச்சிக்கிற பழக்கத்தை அடக்கிக்கவே முடியலை.

கடைக்குப் போனா கூட அவனுக்கு பிடிச்ச மாதிரி இருக்கிற சின்னச் சின்ன பொருட்களை எடுத்து வச்சுக்குவான். அப்பல்லாம், அவனுடைய இந்த பழக்கம் தெரிஞ்ச அவங்க அம்மா சர்வ ஜாக்கிரதையா இருந்து “அந்தப் பொருளை எடுக்காதே ஈசான்“  அப்படின்னு சொல்லி அந்த பொருள்களை அவன்கிட்ட இருந்து வாங்கி எடுத்த இடத்திலேயே வைச்சுடுவாங்க. ஆனால் ஸ்கூல்லயும் இப்படி எடுப்பான்னு அவனோட அம்மாவுக்குத் தெரியாது.

அவன் தன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவர்கள் ரேஹான், அனன்யா, சுந்தர், திவ்யா எல்லார்கிட்ட இருந்தும் குட்டி குட்டியா சில பொருள்களை அவங்களுக்குத் தெரியாம எடுத்து மறைச்சு வைச்சுகிட்டான்.

அனன்யாவுடைய அப்பா அவளோட பிறந்தநாளுக்கு அவளுக்கு ஆசை ஆசையா ஒரு கலர் லைட்ஸ் எரிகிற பென் செட்டை வாங்கிக் கொடுத்தார். அவள் அதை பெருமையா பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்து தன் நண்பர்கள் கிட்ட காட்டி சந்தோஷப்பட்டா.  ஆனால் மதிய இடைவேளைக்குப் பிறகு அவளுக்குத் தெரியாம ஈஷான் அந்த பென் செட்டை எடுத்து மறைச்சு வைச்சுட்டான். அவ அன்னைக்கு பூரா தேடி கிடைக்காததால பிறந்த நாளும் அதுவுமா அழுதுகிட்டே வீட்டுக்கு போனாள். ஈஷானுக்கு அவ அழுகுறத பார்த்துப் பாவமா தான் இருந்தது. ஆனா கூட நான்தான் அதை எடுத்தேன் என்று சொல்லி திருப்பி கொடுக்கிற தைரியம் வரல. 

அதுக்கப்புறம் சில நாள் கழிச்சு ரேஹான் வாங்கிட்டு வந்த அழகான கலர் பென்சில் பாக்ஸை எடுத்து வச்சுக்கிட்டான். அன்னைக்கு முழு நாளும் ரேஹான் அவனுடைய கலர் பென்சில் பாக்ஸ் காணோம்னு சொல்லி தேடினான்.  டிராயிங் கிளாஸ்ல   கலர் பென்சில் இல்லாம வந்ததுக்கு மிஸ் கிட்ட திட்டு வாங்கினான்.  அப்ப கூட தன்னுடைய பென்சில் பாக்ஸில் இருந்து கொஞ்சம் கலர்ஸை ரேஹானுக்கு கடனாக கொடுத்தானே தவிர,  உன்னுடைய பென்சில் பாக்ஸ் என்கிட்ட தான் இருக்குன்னு சொல்லி எடுத்து கொடுக்கவே இல்ல ஈஷான்.

சரி, இந்த மாதிரி எடுக்கிற பொருள் எல்லாம் அவன் எங்க மறைச்சு வைப்பான் தெரியுமா? அவனோட ஸ்கூல் பையோட உள்பகுதியில ஒரு சீக்ரெட் ஜிப் இருந்துச்சு. அதுக்குள்ள இந்த பொருள்களை எல்லாம் மறைத்து வைச்சுட்டு ஜிப்பு போட்டு வச்சுருவான். யாராவது அவன் பையை வாங்கித் திறந்து பார்த்தால் கூட அந்த ஜிப் இருக்கிறது கண்ணுக்கே தெரியாது. அதனால அவன் மேல யாருக்கும் சந்தேகமே வரல.

ஆனா ஒண்ணு ரெண்டு பொருள் வைச்சாலே அந்த ஜிப்பு முடிஞ்சு போயிடும் இல்ல? அப்போ அந்த பொருளை எங்க கொண்டு போய் வைப்பான்? அவங்க வீட்ல அவன் தாத்தாவுடைய மரப்பெட்டி ஒண்ணு இருக்கு. அவனுடைய ஏழாவது பர்த்டேக்கு அவங்க தாத்தா அவனுக்கு கிஃப்ட்  கொடுத்து இருந்தாரு. அந்த பெட்டி சந்தன மரத்துல செஞ்சது நிறைய வேலைபாட்டோட அழகா இருக்கும். அந்த பெட்டியை தன்னுடைய அலமாரிக்குள்ள பத்திரமா வச்சிருந்தான் ஈஷான்.

ஈஷானோட அப்பா அந்த பெட்டியை பூட்டுவதற்கு அவனுக்கு ஒரு பூட்டு வாங்கித் தந்தார். அந்த பெட்டிக்குள்ள தான் இப்படி சின்ன சின்னதா எடுத்துட்டு வர பொருள்களை வச்சு பூட்டி, அந்த சாவியை தன் பைக்குள்ள பத்திரமா வைச்சுபான் ஈஷான்.

இப்படியே கொஞ்ச நாள் போய்க்கிட்டு இருந்துச்சு. ஒருநாள் ஸ்கூலுக்குப் போகிற அவசரத்துல மரப்பெட்டியை பூட்ட மறந்து போயிட்டான் ஈஷான். சாவி பெட்டியிலேயே தொங்கிட்டு இருந்தது.  

வீட்ல எல்லா ரூமும் கிளீன் பண்ணிட்டு இருந்தப்ப அவங்க அம்மா அந்த பாக்ஸ் திறந்திருந்தால உள்ள இருந்த பொருட்களைப் பார்த்துட்டாங்க. கொஞ்ச நாளா ஈஷான் எதுவும் எடுக்கிறது இல்லைன்னு நினைச்சு அம்மா சந்தோஷமா இருந்தாங்க. ஆனால் அந்த பாக்ஸ் முழுக்க நிறைய சின்ன சின்ன பொருளாக மறைத்து வைச்சிருந்ததைப் பார்த்து அம்மாக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு.

இன்னொரு விஷயம் அவங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவங்க அம்மா முக்கியமான விஷயங்களை எழுதி வைக்கிறதுக்காக ஒரு சின்ன நோட்டு வாங்கிட்டு வந்திருந்தாங்க அதை கூட எடுத்துட்டு வந்து வைச்சிருந்தான் ஈஷான். அந்தக் கெட்ட பழக்கம் அவ்வளவு முத்திப்போச்சு. அதனால அவங்க அம்மாவுடைய பொருளையே கூட எடுக்குற மாதிரி ஆயிடுச்சு. அம்மா ‘இதை எப்படியாவது சரி பண்ணனும் என்ன பண்ணலாம்?’ என்று ரொம்ப யோசிச்சாங்க.

அந்த சமயத்துல ஈஷானோட பர்த்டே வந்துச்சு. அவனோட அப்பா அவனுக்கு ரொம்ப பிடிச்ச மாதிரி ஒரு அழகான பூனைக்குட்டியை அவனுக்கு கிப்ட் பண்ணினார். அது ஒரு பெர்ஷியன் கேட்.  நல்ல புஸு புஸுன்னு சந்தன கலரில் பால்பன் மாதிரி அழகா இருந்துச்சு. அந்தப் பூனைக்குட்டிக்கு பேரு ‘ஜுஜூ’ என்று வெச்சிருந்தான் ஈஷான். அதுமேல உசிரையே வச்சுட்டான்.

அந்தக்  குட்டி பூனைக்கு அவனே பால் குடுப்பான். மடியில போட்டு பாட்டுப் பாடி தூங்க வைப்பான். அது கூட விளையாடுவான். ரொம்ப நல்லா பாத்துப்பான் பள்ளிக்கூடத்துக்கு போகும் போதெல்லாம் அம்மாகிட்ட “அம்மா என்னோட ஜூஜூவை பத்திரமா பாத்துக்கோங்க“ அப்படின்னு பல தடவை சொல்லிட்டு போவான்.

அப்படி இருக்கும்போது ஒரு நாள் அவன் ஸ்கூலுக்கு போயிட்டு வந்து பார்த்தா அவனுடைய ஆசை பூனைக்குட்டி ஜூஜூவை காணோம். அவனுக்கு திக்குன்னு ஆகிப்போச்சு. வீடுபூராவும், தோட்டத்திலேயும் வீட்டைச் சுற்றியும் இருட்டுற வரைக்கும் தேடினான். பூனைக் குட்டி கிடைக்கவேயில்லை.  “அம்மா, எனக்கு எப்படியாவது  என்னோட ஜூஜூ வேணும்.  அதுன்னா எனக்கு உசிரு. அதை எப்படியெல்லாம் பார்த்துக்கிட்டேன்.  அது தொலைஞ்சதை என்னால் தாங்கவே முடியலை. நான் என்ன பண்ணட்டும்?” அப்படின்னு அழு அழுன்னு அழுதான்.

அவனோட அம்மா சொன்னாங்க “ஈஷான்.  நீ நிறைய பேருடைய பொருளை எல்லாம் அவங்களுக்குத் தெரியாம எடுத்துட்டு வந்தேல்ல? நீ எடுத்ததை அவங்க தான் பார்க்கலை. ஆனால் இந்த பிரபஞ்சம் பாத்துக்கிட்டே இருந்ததில்லை?” என்று கேட்டாங்க. “பிரபஞ்சம் என்றால் என்னம்மா?” அப்படின்னு கேட்டான் ஈஷான். “இயற்கையைத் தான் பிரபஞ்சம் என்று சொல்லுவாங்க.  நாம என்ன செய்தாலும் அதை பல மடங்கா நமக்குத் திருப்பி கொடுக்கும் சக்திதான் பிரபஞ்சம். அதாவது, நாம மத்தவங்களுக்கு நல்லது செஞ்சா அதுபோல பல மடங்கு நன்மை நமக்கு வந்து சேரும். ஆனால், நாம் மத்தவங்களை வருத்தம் அடைய வச்சோம்னா நமக்கும் பல மடங்கு வருத்தம் ஏற்படும்.  அதனாலதான், பொய் சொல்றது, திருடுறது, மத்தவங்க மனசு நோகுற மாதிரி பேசுறது போன்ற செயல்களை நாம செய்யக்கூடாது” அப்படின்னு அவனோட அம்மா எடுத்து சொன்னாங்க.

“ஈஷான் நீ நல்ல பையன்தான். ஆனால், உனக்கு உன்னோட ஆசைகளை கட்டுப்படுத்த தெரியலை. அடுத்தவங்களுடைய பொருளை எடுக்கக்கூடாதுன்றதை மறந்து சுயநலமா அந்த பொருளை எடுத்துக்கற. அப்புறமா திருப்பி கொடுக்கணும்னு நினைச்சாலும் அவங்க உன்ன திட்டுவாங்களோ என்று பயந்து செய்ய மாட்டேங்குற. நான் பல தடவை உன்னை திருப்பி வைக்க சொல்லி நீ செய்திருக்க ஆனாலும் கூட நீ தனியா இருக்கும்போது இந்த மனப்பான்மை உனக்கு வருது. நீதான் முயற்சி செய்து இந்த கெட்ட பழக்கத்திலிருந்து வெளியே வரணும். உனக்கு ரொம்ப விருப்பமான ஜுஜூவை தொலைச்சிட்டு நீ எவ்வளவு வருத்தப்படுறியோ அப்படித்தானே அவங்களுக்கு பிடித்தமான பொருள்களை தொலைச்ச உன்னுடைய நண்பர்களும் வருத்தப்படுவாங்க. புரிஞ்சுதா? என்று கேட்டாங்க.

“ஆமாம்மா நான் செய்தது பெரிய தப்புதான். அவங்களுக்கு எல்லாம் எவ்வளவு கஷ்டமா இருந்து இருக்கும் அப்படின்னு எனக்கு இப்பதான் புரியுது. இனிமேல நான்  நிச்சயமாக அதை செய்ய மாட்டேன். ஆனால் எனக்கு என்னுடைய ஜூஜூ வேணும். அதுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ணுங்க” அப்படின்னு சொல்லிட்டு திரும்பி அழுதான் ஈஷான்.

அப்போது அவனோட அம்மா சொன்னாங்க “வெரிகுட் ஈஷான்.   நீ மனம் மாறினது ரொம்ப நல்ல விஷயம். எனக்கு தெரிஞ்சு ஒரு வழி இருக்கு. உன் தவறை உணர்ந்துட்ட நீ எடுத்த எல்லா பொருள்களையும் அவற்றுக்கு சொந்தமானவங்க கிட்டத் திருப்பி கொடுத்துடு. அப்படி கொடுத்துட்டேனா, பிரபஞ்சமும் உன்னுடைய ஜூஜூவை உனக்கு திருப்பிக் கொடுத்துடும் என்று நான் நம்புறேன்” அப்படின்னு சொன்னாங்க.

உடனே ஈஷான் வீட்டுக்குள்ள ஓடிப் போய் மரப்பெட்டியில் இருந்த எல்லா பொருட்களையும் எடுத்துட்டு வந்தான்.  எல்லாத்துலேயும் அந்தந்த பொருள்கள் யாருக்கு சொந்தமோ அவங்களுடைய பேயரை ஸ்டிக்கர் ஒட்டினான். மறுநாள்,  பள்ளிக்கூடத்துக்குப் போயி அவன் நண்பர்களை ஒவ்வொருத்தரா பார்த்து  தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டு அவங்களுடைய பொருளை திருப்பிக் கொடுத்துட்டான். 

 அவனோட நண்பர்கள் எல்லோருக்கும் ஒரு நிமிஷம் அதிர்ச்சியாக இருந்தாலும், ஈஷான் பொருள்களை கொடுத்து “சாரி” கேட்டது ரொம்ப சந்தோஷமாயிடுச்சு. அவங்க “பரவாயில்லை ஈஷான். நீதான் திருப்பி கொடுத்துட்டியே ரொம்ப நன்றி”ன்னு சொன்னாங்க. அப்போ அவன் மனசுக்குள்ள சொல்ல முடியாத ஒரு சந்தோஷம் பொங்கிச்சு. 

ஆனால் அதைவிட இரண்டு மடங்கு மகிழ்ச்சி சாயங்காலம் அவன் வீட்டுக்குள் நுழைஞ்சப்போ காத்துகிட்டு இருந்தது. ஆமாம், அவனோட செல்லப்பூனை ஜூஜூ அவனோட படுக்கையில உட்கார்ந்திருந்தது. “அம்மா, எப்படிமா? ஜூஜூ எப்ப வீட்டுக்கு வந்துச்சு? என்னோட வேண்டுதலை பிரபஞ்சம் ஏத்துக்கிச்சா?” என்று உற்சாகம் தாங்காமல் ஜூஜூவைக் கட்டி முத்தமிட்டு விட்டுக் கத்தினான் ஈஷான்.

அவனோட அம்மா சிரிச்சுக்கிட்டே சொன்னாங்க “ஆமாம். ஈஷான். நன்மையும் தீமையும் பிறரால் ஏற்படாது. நாமதான் நமக்கு நன்மையும் தீமையும் ஏற்படுத்திக்கிறோம். பிறகுக்கு நல்லது செய்யறவங்களுக்கு பிரபஞ்சம் நிறைய சக்தி தந்து உதவும்” என்று சொன்னாங்க.

ஈஷான் “அம்மா, அப்படீன்னா இனிமேல் நான் நல்லது மட்டுமே செய்வேன்” என்று திடமாகச் சொன்னான். ஜூஜூ பூனைக்குட்டியை தன் தோழி வீட்டில் ஒரேயொரு நாள் வைத்திருக்கச் சொல்லி அதன் மூலம் ஈஷானிடமிருந்த ஒரே கெட்டகுணத்தையும் சரி செய்துட்டாங்க அவனோட புத்திசாலி அம்மா.

++

இராஜலட்சுமி

பொருளியல் பட்டதாரி – சென்னை கிறித்துவ கல்லூரி. முதுநிலை பட்டம் மனிதவள மேம்பாடு துறையில். அமேஸான் ப்ரைம், மாக்ஸ், நெட்பிளிக்ஸ் ஆகிய ஓடிடி தளங்களில் இந்தி மற்றும் ஆங்கில படங்கள், வெப் சீரியல்களைத் தமிழாக்கம் செய்துள்ளார்..

கன்னி நெஞ்சின் ஓவியம் – சரித்திர குறுநாவல், கண்ணோடு காண்பதெல்லாம் – காதல் குறுநாவல், ஒரு இனிய மனது – அமானுஷ்ய நாவல், மறக்கத் தெரிந்த மனம் நாவல்- குடும்ப நாவல், கொலை நோக்குப் பார்வை – க்ரைம் நாவல் என் இதுவரை புத்தகங்கள் வெளிவந்துள்ளன.

1. திருப்பூர் சக்தி விருது 2024 தமிழிலக்கிய பணிக்காக.

2. மலர்வனம் 2023 சிறந்த எழுத்தாளர்

3. வளரி கவியரங்கம் 2023

4. புதுச்சேரி தமிழ்ச்சங்கம் பாப்போட்டி  2023.

5. லயோனஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம் 2024.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *