உன்னிடம் தமிழில் பேசினாலும் நீ ஆங்கிலத்திலேயே பதில் அளித்தாய் எல்லோருக்கும். அதனால் சிலர் உன்னை பொதுவெளியில் அவமானப்படுத்தினர். இதனால் தான் இந்தியாவையும் இந்தியர்களையும் நீ வெறுப்பதாகச் சொன்னாய். முன்னேற நினைப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றாய். தேச பக்தி மோஸ்தராக இருந்த வகுப்பு அது. சும்மா இருப்பார்களா? எல்லோரும், ‘இப்போதே இந்த நாட்டை விட்டு வெளியேறு’ என்று கத்தினார்கள். நீ உடனேயே பையில் இருந்த உன் கடவுச் சீட்டை எங்கள் முன் காட்டி, ‘நான் தயார், அனுப்பி வையுங்கள்’ என்றாய்.

நீ எதற்காக கடவுச் சீட்டை பையில் வைத்துக்கொண்டு திரிகிறாய் என்று யாருக்கும் புரியவில்லை. பைத்தியக்காரத் தனமாகவும் மர்மமாகவும் இருந்தது.

எல்லோரும் உன் வெள்ளைக்காரத் தன்மையை அத்துமீறல் என்று சாடினர். ஆனால் நான் அப்படி அல்ல. நான் உன்னை வழிதொடர ஆரம்பித்தவன். நான் மட்டும்தான்.

நீ எதற்கும் தயங்கியவன் கிடையாது. வெள்ளைக்காரனை போல. அனைத்துக்கும் முதலில் எழுந்து நிற்பாய். நான் மனதில் அரைத்துக் கொண்டிருக்கும் போது நீ ஏற்கனவே செயலில் இருப்பாய்.  யோசித்து விட்டு செய்கிறாயா அல்லது செய்யச் செய்ய யோசிக்கிறாயா என்று சொல்ல முடியவில்லை.

வாய்ப்பு என்ற வெட்டவெளி மட்டும் தான் உனக்குத் தெரிகிறது. எதிரில் நாங்கள் இருக்கிறோம் தெரிகிறதா என்று யாரோ கேட்டதற்கு. ‘நீங்கள் எனக்கான வாய்ப்பு ஒன்று ஏந்தி வாருங்கள், என் கண்களுக்கு நீங்கள் புலப்படுவீர்கள்.’ என்று நீ ஆங்கிலத்தில் சுற்றி சுற்றி பேசியதை நாங்கள் இப்படிப் புரிந்துகொண்டோம். நீ எதிர்பார்ப்பது வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு என்பதை மட்டும் நான் மேலதிகமாக புரிந்து கொண்டேன்.

என்ன திமிர் என்று மற்றவர் சொல்லும் போது எனக்கு மட்டும்தான் அது நியாயமாகப்பட்டது. உன்னை இப்படி மறைமுகமாக பலமுறை பாராட்டி இருக்கிறேன். நீ அது தெரியாதது போலவே இருந்திருக்கிறாய்.

ஒருமுறை கணக்கு வாத்தியார் சரியில்லை என்று எங்களுக்குள்ளாகவே நாங்கள்  பேசிக் கொண்டிருப்பதைப்  பார்த்துவிட்டு மடமடவென்று நீ தலைமை ஆசிரியரின் அறைக்குச் செல்வதை பீதியுடன் நாங்கள் பார்த்து நின்ற ஞாபகம் இன்னும் எனக்கு பசுமையாக நினைவிருக்கிறது. அப்போதுதான் உன் வெள்ளைக்காரத் தன்மையை முதன்முதலில் செயலில் கண்டோம். அதற்காக நீ ஒரு கையெழுத்து போராட்டம் நடத்தினாய். நீ எழுதித் தந்த தீர்மானத்தை நாங்கள் ஆங்கில அகராதியைக் கொண்டு புரிந்துகொள்ள முயற்சித்தோம். பெரும்பாலான வார்த்தைகள் அந்த அகராதியில் இருக்கவில்லை. இருப்பினும் நாங்கள் அனைவரும் கையெழுத்திட்டோம். மறுமொழி இல்லாமல். உனக்கு பின்னால் ஒரு சிறு கூட்டம் அணி சேர்ந்தது. அந்த கூட்டத்தில் நானும் ஒருவன் என்று சொன்னால் உன்னால் நம்ப முடிகிறதா? உன்னிடம் பலமுறை பேச முயற்சித்து தோற்றுப் போயிருக்கிறேன். இப்படி ஒருவன் இருக்கிறேன் என்று உன்னிடம் எடுத்துரைப்பார் யாருமில்லை. என் இருப்பே உனக்கு தெரியாததாகத் தான் இருந்திருக்கிறது. போராட்டத்தின் விளைவாக கணக்கு வாத்தியார் மாற்றப்பட்டார்.

இப்படித்தான் இன்னொரு போராட்டமும்  நடந்தது. கல்லூரி புறக்கணிப்புப் போராட்டம்.  எதற்காக நடக்கிறது எதற்காக காவல்துறை வாகனம் கல்லூரிக்குள் வருகிறது என்று புரியாமல் நாங்கள் கலைந்து ஓட்டம் பிடித்தோம். நீ மட்டும் தான் தைரியமாக நின்று போலீஸிடம் பேசினாய். அநேகமாக ஆங்கிலத்தில் தான் பேசியிருப்பாய். ஓடி மறைந்தவர்களுள் சிலர் வெளிவந்து உன் அருகில் நின்றனர். அருகில் நின்றவர்களின் அருகில் நான் நின்றேன். தூரத்தில் தான் நின்றேன் என்றாலும் உனக்கு பின்னால் நின்றேன் என்பதை நீ அறிந்திருக்க மாட்டாய். 

உன் வெள்ளைக்கார தன்மையை அநேகர் வெறுத்தனர் என்றாலும் என்னைப்போல் ஒரு சிலர் அதை வழிபாட்டுணர்வுடன் பார்த்தனர் என்பதை நீ அறிவாயா? 

இப்படித்தான் கல்லூரிக்குள் துரை என்ற பெயர் வாங்கினாய். பல பெண்களுக்கு துரைசானியாகும் விருப்பம் இருந்தது பற்றி உனக்குத் தெரியாது. நான் உன்னிடம் சரியாக பேசும் வாய்ப்பு கிடைத்திருந்தாலோ அல்லது உன் சகாவாக என்னை நீ சேர்த்துக் கொண்டிருந்தாலோ இதையெல்லாம் உனக்குச் சரியாக சொல்லி இருப்பேன்.

கல்லூரி விழாக்களிலோ அல்லது கல்லூரிக்கும் கல்லூரிக்கும்  நடக்கும் அடிதடியிலோ உன் பார்வை என்று ஒன்று இருக்கும். அது எப்போதும் புதிய மோஸ்தராவே இருக்கும். கல்லூரியை பிரதிநித்துவப்படுத்தி நீ பேசாத அரங்கமோ ஊடகமோ இல்லை. உன் ஆங்கில மேலாண்மையே கல்லூரியின் மேலாண்மை என்று மற்றவர்கள் நம்பும் அளவிற்கு செய்து விடுவாய். 

இப்படியாக கல்லூரி இறுதி வருடம் வந்தது. பெருநிறுவனங்கள் அனைத்தும் ஏனோ நம் கல்லூரியை ஒருமித்து புறக்கணித்த போது, நாங்கள் அனைவரும் வேலை வாய்ப்புக்காக கலங்கி  நிற்பதைத் தவிர வேறு எதுவும் செய்யத் தெரியவில்லை. ஒரு சிலர் நீ ஏதாவது இதற்காக இயக்கமோ போராட்டமோ முடுக்கி விடுவாய் என்று எதிர்பார்த்தனர். என்னையும் உட்பட. உன் துரைத்தனம் மூலம் அந்த நிறுவனங்களை எங்களை நோக்கி திசை திருப்பித் தருவாய் என்று நினைத்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே ஒரு கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்தாய்; ஊடகங்கள் அனைத்தையும் கூட்டி வந்து பேசினாய்; பெரிய பெரிய கட்டுரைகளை எழுதினாய்; எல்லோரையும் அழைத்து கல்லூரி நிர்வாகத்திடம் பேசினாய். ஏதோ அதிசயம் நிகழப்போகிறது என்ற தோன்றுமளவிற்கு ஆர்ப்பரிக்கும்  நடவடிக்கைகளில் ஈடுபட்டாய். இதோ எல்லோருக்கும் வேலை கிடைத்து விடப் போகிறது என்பதாகவே அது புரிந்து கொள்ளப்பட்டது. நானும் பாதி தூரம் அவ்வாறே எண்ணினேன். ஆனால் நடுவில் துணுக்காக ஒன்றே ஒன்று எனக்கு தோன்றியது. நான் நினைத்தது போலவே ஒரு அசுர நிறுவனத்தில் நீ மட்டும் வேலை வாங்கிக் கொண்டு சென்று விட்டாய்.  அந்த இயக்க நாடகம் அத்தோடு முடிவிற்கும் வந்தது. கேட்டால் ‘வேலை என்பது வெளியிலும் வாங்க முடியும் என்பதை நான் செய்து காட்டியுள்ளேன், அதையே நீங்களும் செய்யுங்கள்’ என்ற அளவில்தான் உன் பதில் இருந்தது.

நீ இத்தனையும் செய்தது உன் ஆங்கிலத் திறமையையும் வெள்ளைக்கார பாவனையையும் வெளிக்காட்டி விளம்பரப்படுத்தத் தான் என்பதை பிறகே நான் அறிந்தேன். அது நீ எங்கே போக நினைத்தாயோ உன்னை அங்கே கொண்டு சேர்த்தது. மற்றவர்கள் அனைவரும் நீ ஏமாற்றி விட்டதாய் சொன்னபோது, நான் மட்டும் தான் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் உன் வழியை பின்தொடர நினைத்தேன். உன் துரைத்தனத்தால் கிட்டும் பிரபல்யத்தை நீ எப்படி உலகில் வாய்ப்பாக மாற்றுகிறாய் என்பதை நான் அருகில் இருந்து கண்டேன். நான் அதை பயிற்சி செய்ய முனையும்போது தான் தயக்க உணர்வு கார்மேகம் போல் என் மேல் கவிகிறது. ஆனால் இன்று அதை போராடி வென்றிருக்கிறேன் என்பது கண்கூடு. அதாவது ஒரு அளவேனும் வென்றிருக்கிறேன். ஒரு அளவேனும் என்றால் நீ அங்கீகரிக்கும் அளவேனும். 

நீ மட்டும் என்னை நண்பனாக ஏற்றுக் கொண்டிருந்தால்,  நண்பனாக கூட வேண்டாம் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டிருந்தால் உன்னுடைய முதல் தர மாணவனாக இருந்திருப்பேன். அது உனக்கு பெருமை தான் சேர்த்து இருக்கும். ஆனால் உனக்கு இப்படிப்பட்ட ஒரு  விசிறி இருப்பதே தெரியாது. 

இன்னும் என்னிடம் என்ன தான் எதிர்பார்க்கிறாய். நான் என்ன செய்தால் ஒப்புக் கொள்வாய்.

அந்த பெரு நிறுவனத்தில் நீ வேலைக்கு சேர்ந்து ஆறு மாதங்கள் கழித்து நான் சேர்ந்த போது நீ ஒன்றும் அவ்வளவு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக எனக்குத் தெரியவில்லை. என்னை உனக்குத் தெரியும் என்பதையே நீ காட்டிக் கொள்ளவில்லை. நான் ஒதுங்கி இருக்கிறேனா அல்லது என்னை நீ ஒதுக்கி வைத்திருக்கிறாயா என்பதை கணிக்கக் கூடத் தெரியாதவனாக தான் என்னை நீ வைத்திருந்தாய். எப்படியாவது உன்னிடம் பேசி விட வேண்டும் என்று நான் முயன்று கொண்டிருந்தேன். என் தைரிய பாவனையை பலமுறை மனதில் நிகழ்த்திப் பார்த்து மறுநாள் உன்னிடம் பேச நினைக்கும் போது நீ இந்நிறுவனத்தில் இருந்து விலகிக் கொண்டு நாட்கள் பல ஆகிறது என்று தகவலை அறிந்தேன். மெல்லிய சோகமும் அதைவிட மெல்லிய விடுதலையும்  ஒருங்கே உணர்ந்தேன். சில நாட்கள் ஒருவித விலகல் தன்மையுடன் இருந்தேன். அதுவே ஆற்றாமையாக முற்றியது. சொல்லிக்கொண்டு சென்றிருக்கலாம். ஒருவேளை என்னால் தான் நீ இவ்விடம் விட்டு நீங்கினாயோ என்று கூட நினைத்திருந்தேன். விசாரித்து பார்த்ததில் இந்நிறுவனத்தில் உடனே அமெரிக்கா செல்ல போதிய வாய்ப்பில்லை என்று கடைசியாக நீ யாரிடமோ சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாய். 

ஒரு சொல், ஒரு அங்கீகாரம், ஒரு பாராட்டு தானே எதிர்பார்த்தேன் என்று பல நாட்கள் நான் ஏங்கி இருப்பதை நீ  உணர்ந்திருக்க வாய்ப்பில்லை. உன் அளவிற்கு இல்லாவிட்டாலும் அதில் பாதிக்கு பாதியாவது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தேன் அப்போது. அது போதாதா? பாவப்பட்டாவது என்னை நீ சகாவாக ஏற்றுக் கொண்டிருக்க வேண்டாமா? 

நானும் உன்னைப் போல் வேலையை விட்டு விடலாமா என்று கூட யோசித்து இருக்கிறேன். வேலை விடுகிறேன் என்று சொன்னால் முதலில் வேலை தந்தவர்கள் என நினைப்பார்கள். நினைப்பது பற்றி இருக்கட்டும் முதலில் எப்படி சொல்வது? நீ எப்படி சொன்னாய்? சொன்னாயா? ஒருவேளை நீ என் அருகில் இருந்திருந்தால் உன்னை போலவே நானும் கண்டிப்பாக வேலையை விட்டிருப்பேன்.

நீ எந்த நிறுவனத்தில் வேலை செய்கிறாய் என்பதை தெரிந்து கொண்டு, ஆறு மாதகாலம் விடாப்பிடியாக முயற்சி செய்து, அதே நிறுவனத்திற்கு மாற்றிக்கொண்டு வந்தேன். வந்ததும் தான் தெரிந்தது நீ அமெரிக்காவுக்கு சென்று விட்டாய் என்று.  இம்முறை எந்த சோகமோ விடுதலை உணர்வோ நான் அடையவில்லை. தெரிந்தது தானே என்பது போல் தான் இருந்தது. 

அதற்குப் பிறகு நீ அப்படியாக நான் இப்படியாக நம் வாழ்வு சென்றது. அங்கே நீ இருக்கும் குடியிருப்பு; நீ சொந்தமாக வைத்திருக்கும் கார்; நீ செல்லும் சுற்றுலா; உன் வெளிநாட்டு நண்பர்கள்; நீ அடிக்கடி சென்று வரும் உணவகம் என்று எல்லாமே எனக்குத் தெரிந்திருந்தது. நீ முயற்சி எடுத்து மாறுகிறாயா அல்லது உன் இயல்பு வடிவத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கிறாயா என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. ஆனால் இந்தியா மீதும் இந்தியர்கள் மீதும் உனக்கு உள்ள ஏளனப் பார்வை இன்னும் உறுதிப்பட்டிருக்கும் என்று என்னால் நன்றாகவே ஊகிக்க முடிந்தது.

ஒவ்வொரு நாளும் நீ அமெரிக்கனாக மாறி வருவதை நான் இங்கிருந்தே கவனித்தேன். வீட்டுக்குள் காலனி போட்டு நடப்பதில் ஆரம்பித்து மசாலா கலந்த உணவுகளை தவிர்ப்பது; எட்டு பத்து கடன் அட்டைகள் வைத்திருப்பது; டொயோட்டா ஹோண்டா நிசான் கார்களை தவிர்த்து போர்டு கார்களை மட்டுமே விரும்புவது; கிரிக்கெட் கேரம் விளையாடாமல் ஸ்நூக்கர் புட்பால் ராக்கெட் பால் விளையாடுவது; சைபரை ‘ஓ’ என்றழைப்பது வரையில் நீ மாறியிருந்தாய். 

அடிக்கடி வெள்ளையர்களை வீட்டுக்கு அழைத்து வந்தாய். அப்போதும் அவர்கள் வீட்டுக்கு நீ சென்றாயா என்பது எனக்கு இன்னும் சந்தேகமே.

நீ கல்யாணம் செய்து கொண்டதை அறிந்த போது எனக்கும் யோசனை வந்து நானும் செய்து கொண்டேன். ஆனால் முதலில் எனக்குத் தான் குழந்தை பிறந்தது. ஆண் குழந்தை. எங்கே நீ ஒத்திப் போட்டு விடுவாயோ என்று நினைத்து மனம் லேசாக குறுகுறுத்தது. ஆனால் அடுத்த சில மாதங்களிலேயே உனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த போது, வருங்காலத்தில் நம் இருவருக்கும்  நடக்கப்போகும் பிணைப்பை கற்பனை செய்து மகிழ்ந்தேன் என்று சொன்னால் நீ நம்புவாயா? வேடிக்கையாகத்தான் இருக்கிறது அல்லவா?

தெய்வாதீனமாக என் முயற்சி என்று ஏதும் இல்லாமல்… சரி வேண்டாம்… உண்மையை சொல்லிவிடுகிறேன்… பெரு முயற்சியின் காரணமாக எனக்கும் அமெரிக்கா வரும் ஒரு வாய்ப்பு கிட்டியது. நீ இருக்கும் அதே சிகாகோ நகரம். இதெல்லாம் ஒரு தற்செயல் என்று நீ நினைக்கக்கூடும். ஆனால் அப்படி இல்லை என்று கூறிக் கொள்கிறேன்.

உன் வீட்டு விலாசம் தான் எனக்கு மனப்பாடம் ஆயிற்றே. சிக்காகோ வந்த இரண்டு வாரங்களில் நீ இருக்கும் அதே குடியிருப்பு பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு பார்த்து குடியேறினேன். உன்னை பின் தொடர்ந்து தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன், இவ்வளவு முன்னேற்றம் என்று நீ நினைத்தால் நான் அதை மறுக்கப் போவதில்லை.

இந்த பொன்னுலகுக்கு வந்ததிலிருந்து ஒரு அந்நிய உணர்வு ஒட்டிப் பிறந்தது போல் கூடவே இருந்தது. எல்லாம் உன்னை நேரில் பார்த்ததும் சரியாக விடும் என்று இருந்தேன். அவர்களுள் ஒருவன் ஆனவன் நீயல்லவா. எங்களின் பிரதிநிதி. உன்னை அமெரிக்கர்களின் நடுவில் வைத்து பார்க்க வேண்டும். ஆனால் பல நாட்கள் கண்ணுக்கு அகப்படாமல் இருந்தாய். நீ தென்படாமல் இருந்த ஒவ்வொரு நாளும் என் மனதில் நீ வெள்ளையனாக வெளுத்துக் கொண்டே வளர்ந்தாய். உன்னை நேரில் பார்த்தால், வந்து பேசலாமா கூடாதா என்று ஒரு குழப்பம் இருந்தது. அப்படியே வந்து பேசினாலும் நீ பேசுவாயா என்ற தயக்கமும் இருந்தது. என்னை நீ நேரில் பார்க்கும் தருணத்தில் உன் மனதில் என்ன ஓடும்? உன் பழைய உலகம் உன்னைப் பின் தொடருவதாக நினைப்பாயோ?

உன்னை உன் குடும்பத்துடன் ஒரு பல்பொருள் அங்காடியில் வைத்துப் பார்த்தேன். வெள்ளையன் போலவே இல்லை, மிக சாதாரணமாக இருந்தாய். முதலில் எனக்கு அது பெரும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. 

அந்த ஏமாற்றத்தின் விளைவாக உன்னிடம் பேச முயற்சிக்காமல் வெளியே வந்து விட்டேன். நான் செய்த ஒரே தவறு அது தான். ஒருவேளை உன்னைப் பார்த்த மாத்திரத்திலேயே நான் வந்து பேசியிருந்தால் என்னை முற்றிலும் நிராகரிக்காமல் இருந்திருப்பாய் அல்லது அப்படி ஒரு வாய்ப்பாகவேனும் இருந்திருக்கும். என்னை அன்று நீ பார்த்திருக்கலாம். ஒருவேளை பார்த்திருந்தால் நான் உன்னை அவமானப்படுத்தியதாக நீ எண்ணியிருக்கக் கூடும். நீ இப்படி நினைப்பதற்கு நான் என்ன செய்ய முடியும். உன்னை இப்படி சாதாரணமாகப் பார்க்கத்தான் நான் இவ்வளவு தூரம் வந்தேனா? நான் ஆகவிருக்கும் பிம்பம் இன்னும் ஆகியிருக்கவில்லை என்று உணர்ந்த எனக்கு எப்படி இருக்கும்? இதைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறாயா? உனக்கு என்ன தெரியும்?

அதற்குப் பிறகு சில காலம் உன்னை கவனிப்பதே கதியென்று நான் இருந்தேன் என்று சொன்னால் நீ நம்ப வேண்டும். அங்கு இருக்கும் போது வெள்ளையனாக தெரிந்த நீ, இங்கே ஏன் இந்தியனாக தெரிகிறாய்? எப்படி கற்பனை செய்து பார்த்தாலும் உன் இந்தியத் தன்மை துருத்திக் கொண்டு தெரிகிறது. நீ என்னிடம் பேசினால் அல்லவா இதையெல்லாம் உன்னிடம் எடுத்துச் சொல்ல முடியும்? இதையெல்லாம் எடுத்துரைப்பார் உன் அருகில் யாரும் இல்லை. நீயோ வந்து சேர்ந்து விட்டோம்; ஆகி விட்டோம்; ஈடேறி விட்டோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்.

உன் தேக்க நிலையை உனக்கு உணர்த்தும் வாய்ப்பு ஒன்று தானாகவே அமைந்தது. அமெரிக்க இதழியல் ஊடகம் ஒன்று இந்தியாவைப் பற்றி இந்தியர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள நம் குடியிருப்புப் பகுதியில் வீடு வீடாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. நான் தான் உன் வீட்டை சுட்டிக் காட்டி நீ இதைப் பற்றி வெகு நன்றாக பேசுவாய் என்று அனுப்பி வைத்தேன். 

‘இந்தியாவைப் பற்றி எனக்கு என்ன தெரியும்…’ என்று நீ அவர்களை நோக்கி கத்தியதும் தான் எனக்கு திருப்தியாக இருந்தது.

அடுத்த முறை உன்னை பார்க்கும் போது நீ இந்தியன் போல் இல்லாமல் இருந்தாய். அடுத்த சில நாட்களுக்கு நீ வெளுத்துக் கொண்டே வருவதை நான் தூரத்தில் இருந்து கவனித்து வந்தேன். அப்புறம் ஒரு முறை உன் மனைவி குட்டைப் பாவாடை அணிந்து வெளியே வந்த போது, உன் மனதில் என்ன ஓடுகிறது என்பதை படம் போட்டு காண்பித்தது போலிருந்தது. 

ஹூஸ்டன் சிம்பொனிக்கு நீ சீசன் டிக்கெட் எடுத்திருப்பதாகக் கேள்விப்பட்டபோது மற்றவரெல்லாம் சிரித்திருக்கக் கூடும். நான் மட்டும்தான் அதை புரிந்துகொண்டவன். அநேகமாக உன் குடும்பத்தார் அதை வெறுத்திருப்பர். நீ கூட அந்த அரங்கில் தூங்கியிருக்கக் கூடும். பிரதி வாரமும் நீ வெள்ளையர் செல்லும் ஷாப்பிங் மால், ஹோட்டல் என்று சென்று வந்தாய். தவறாமல் கம்யூனிட்டி கூட்டத்திற்கு சென்று வந்தாய். நூலகத்துக்கு  நூல்கள் வழங்கினாய். அனைத்தும் அமெரிக்க நூல்களாக இருந்தன. ஞாயிறு தவறாமல் சர்ச்சுக்கு சென்று வந்தாய். பார்பீக்யு அடுப்பு வாங்கி எல்லோருக்கும் தெரியும் படி வீட்டின் பால்கனியில் வைத்து புகை போட்டாய் . 

நம் இந்தியர்களும் உன் வெள்ளைக்காரப் புகையை மோப்பம் பிடித்தார்கள். 

இப்படியிருக்க, நம் பகுதியில் ஒரு விசித்திரமான குழந்தைக் காய்ச்சல் ஒன்று பரவியது. நாம் அனைவரும் நம் குழந்தைகளை சொல்லி வைத்தாற்போல் அந்த மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றோம். பரிசோதனைக்காக குழந்தைகளிடமிருந்து ரத்தம் எடுக்கப்பட்டது. அடுத்த நாள் மருத்துவமனையில் இருந்து நமக்கு அழைப்பு வந்தது. மீண்டும் ரத்தம் எடுக்க வேண்டும் குழந்தைகளை கூட்டி வாருங்கள் என்று. நாங்கள் அனைவரும் மறுசொல் இல்லாமல் குழந்தைகளை மீண்டும் ரத்தம் கொடுக்கக் கூட்டிச் சென்றோம். நீ மட்டும் தான் எதற்கு இன்னொரு முறை என்று கேட்டாய். முதலில் எடுத்த ரத்தம் ஒரு விபத்தில் மாறிவிட்டது, ஆகையால் மீண்டும் எடுக்க வேண்டும் என்று மருத்துவமனையின் தரப்பில் சொல்லப்பட்டது. நீ உடனே அந்த மருத்துவமனை மீது ஒரு வழக்கு தொடர்ந்தாய்.

மற்ற அனைவரும் குழந்தையின் ரத்தத்தை வைத்து நீ பணம் பார்க்க எண்ணுகிறாய் என்று வாயில் அடித்துக் கொண்டனர். ஆனால் அதன் மூலம் நீ ஐம்பதாயிரம் டாலர் சம்பாதித்தாய். அதை உன் குழந்தையின் பெயரிலேயே முதலீடு செய்தாய். 

உன் துரைத்தனத்தை அவர்களுக்கு முதன் முதலாக நிகழ்த்திக் காட்டினாய். 

அன்றிலிருந்து எப்போதெல்லாம் அவர்களுக்கு வெள்ளையர்களின் உலகில் ஊடுருவல் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் உன்னிடம் உதவி நாடினர். நீயும் துரையின் பாவனையோடும் கரிசனத்தோடும் அவர்களுக்கு உதவினாய். வாடகை வீடு பார்க்க வேண்டும் என்றாலோ; புதிய கார் வாங்க வேண்டும் என்றாலோ; குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்றாலோ; முதலீடு செய்ய வேண்டும் என்றாலோ உன்னையே நாடினர். 

அவர்களுக்கு உதவியதால் நீ வெள்ளையனாக இருந்தாய், நீ வெள்ளையாக இருப்பதனால் உன்னிடம் உதவி கேட்டார்கள். நானும் அவ்வாறே எண்ணினேன். 

ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல் ஒரு சம்பவம்  நடந்தேறியது. 

உன் மனைவிக்கு அன்று பிறந்த நாள். உள்ளூர் கோவிலுக்கு செல்லாமல் பக்கத்து கவுண்டியில் இருக்கும் கோவிலுக்கு நீ குடும்பத்துடன் சென்றிருந்தாய். அது அமெரிக்கா வந்ததிலிருந்து நான் வழக்கமாக செல்லும் கோயில் தான். அன்று நானும் அங்கு தான் இருந்தேன். சுவாமி தரிசனத்தின் போது தான் நான் உன்னைப் பார்த்தேன். நீயும் என்னை பார்த்திருக்க கூடும். இம்முறை உன்னிடம் ஏதாவது பேசி விட வேண்டும் என்று உன் பின்னாலே வந்தேன். நீ உன் கார் அருகில் வந்ததும் தான் கவனித்தாய் உன் கார் கண்ணாடி உடைந்து கிடந்ததை. நீ பதட்டமாக குழந்தையை உன் மனைவியிடம் கொடுத்துவிட்டு காருக்குள் சிதறி கிடக்கும் கண்ணாடிச் சில்லுகளை கலைத்து உள்ளே ஏதேனும் திருட்டு போயிருக்கிறதா என்று பார்த்தாய். நான், “இந்தியர்களின் காருக்குள் என்ன கிடைத்திவிடப் போகிறது..” என்று எல்லோருக்கும் கேட்கும் படி சொன்னேன்.  நீ என்னை கண்டு கொள்ளவில்லை. நான் தான் உன் தோளைத்தொட்டு காரின் பின் சக்கரம் காற்று இறங்கி இருக்கிறது என்று சொன்னேன்.

‘அடடா! இப்படி ஆகிவிட்டது.. இப்போது என்ன செய்ய.. குழந்தை வேறு இருக்கிறதே.. இருட்டிக் கொண்டு வருகிறது’ என்று பதட்டமாக சொன்னாய். அதுதான் நீ முதல் முதலாக என்னிடம் பேசிய வார்த்தை.  நம்ப முடிகிறதா? 

நான் தான் போலீசுக்கு அழைத்தேன். போலீஸ் வந்து இந்தியர்களின் காருக்கு சமீப காலமாக   இப்படி அடிக்கடி நடக்கிறது என்று பேச்சுவாக்கில் சொன்னார்கள். நான் ‘ஏன்’ என்றேன். ஆனால் நீ ‘அது எப்படி இது இந்தியர்களின் கார் என்று ஒருவனுக்கு தெரியும்?’ என்று வினவினாய். போலீஸ், ‘எங்கள் எல்லோருக்கும் இந்தியர்களின் கார்களைப் பார்த்தவுடன் சொல்லிவிட முடிகிறது. குறிப்பாக பின் இருக்கையை பார்த்தால்..’ என்றார்கள்.

‘பார்த்தாலே சொல்லிவிட முடியுமா’ என்று அழுத்தி கேட்டாய்.  அவர்கள், ‘ஆம்,  இதெல்லாம்  ரேகையைப் போல, கையெழுத்து போல.’  என்றார்கள்.  அவர்கள் சாதாரணமாகச் சொன்னதை மனதில் தீவிரமாக அலசிக்கொண்டிருந்தாய். 

‘காரில் ஒன்றும் திருடு போகவில்லையே’ என்று நான் கேட்டேன். ‘கண்டிப்பாக போயிருக்கும் நன்றாக பாருங்கள். உங்கள் வீட்டு சாவி இருக்கிறதா என்று பாருங்கள். காணவில்லை என்றால் உடனே உங்கள் வீட்டுக்கு நாங்கள் ரோந்து காவலர்களை அனுப்ப வேண்டும்.’ என்றனர் போலீஸ்.

அவர்கள் சொன்னது போல வீட்டு சாவியை காணவில்லை. உன் வீட்டுக்கு போலீஸ் அனுப்பப்பட்டது.  உன் வீடு கொள்ளை போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டது. 

உனக்கு மேல் மூச்சு வாங்கியது. முதல் முறை உன்னை அப்படிப் பார்த்தேன்.

திருடர்களுக்கு வீட்டு விலாசம் எப்படி தெரியும் என்று நான் தான் கேட்டேன்.  உங்கள் இன்சூரன்ஸ் பேப்பரில் விலாசம் இருக்கும். பொதுவாக இந்தியர்கள் தங்க நகைகளை வீட்டில் வைத்திருப்பார்கள் என்றார்கள். தலைகுனிந்து இருந்த நீ கோபமாக நிமிர்ந்து உன் மனைவியைப் பார்த்தாய்.

உன் காரை பக்கத்து கராஜில் விட்டு விட்டு உங்களை நான் தான் வீடு கொண்டு வந்து சேர்த்தேன். அங்கும் போலீஸ் வந்து குறித்துக் கொண்டு உன்னிடம் கையெழுத்து பெற்று சென்றார்கள்.

உன் மனைவி தனியாக புலம்பிக் கொண்டிருந்தார். நீ அமைதியாக ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாய். நீ என்னை இரு என்றும் சொல்லவில்லை போ என்றும் சொல்லவில்லை. நான் தான் ‘செல்கிறேன்.. தேவை என்றால் உடனே எந்நேரமும் என்னை தயங்காமல் கூப்பிடு’ என்று விட்டு சென்றேன். நீ கடைசிவரை மௌனமாகவே இருந்தாய்.

உனக்குள் ஏதோ உருண்டு கொண்டிருக்கிறது என்று தோன்றியது. 

நான் எதிர்பார்த்தது போலவே இந்தியர்கள் பெரும்பாலும் குடியிருக்கும் இந்த இடத்திலிருந்து வேறு குடியிருப்புக்கு மாற்றிச் சென்றாய். வெள்ளையர் குடியிருப்புக்கு. ஆம், இந்தியர்களின் வெள்ளையனாக இருப்பதில் என்ன பெருமை. வெள்ளையர்களின் வெள்ளையனாக இருப்பதல்லவா நம் குறிக்கோள். ஆனால் அங்கேயும் உன்னைத் தேடி நம்மவர்கள் வரத் தொடங்கினர். நீ அங்கே சென்றது நம்மவர்களுக்கு இன்னும் வசதியாக போய்விட்டது. எனக்கு தெரியும் உன் பாடு என்னவென்று. அவர்களுக்கு தெரியுமா? ஆகையால் நான் குறுக்கிட்டேன். நீ இது நாள் வரை செய்து வந்த கைங்கரியத்தை நான் ஏற்றுக் கொண்டேன். எல்லோரையும் என்னை நோக்கி திருப்பிக் கொண்டேன். அவர்களின் துரையாக நான் ஆகிப் போனேன். எனக்குத்தான் எப்படி பேச வேண்டும் என்னென்ன செய்ய வேண்டும் என்பது அத்துப்படி ஆயிற்றே? அப்படியாக உன் விடுதலையில் எனக்கு பெரும் பங்கு இருக்கிறது. 

நீ மீண்டும் வீடு மாற்றிக் கொண்டு சென்றாய். நீ எங்கு சென்றிருப்பாய் என்று என்னால் ஊகிக்க முடிந்தது. அந்த எண்ணம் உன் உள்ளத்தில் உருண்டு கொண்டிருக்கும்போது எனக்கு தெரிந்து விட்டது.  இன்னும் அதி வெள்ளையர் குடியிருப்பு பகுதிக்கு. இன்னும் சரியாக சொல்லவேண்டும் என்றால் வெள்ளை ஆங்கிலோ சாக்ஸன் சீர்திருத்த கிருத்துவ குடியிருப்பு பகுதிக்கு. மதம் மாறி இருந்தாலும் சொல்வதற்கு இல்லை.

நீ என்னிடமாவது சொல்லிக் கொண்டு சென்றிருக்க வேண்டும். அல்லது சில நாட்கள் கழித்து ரகசியமாக உன் இருப்பிடத்தை எனக்கு தெரிவிப்பாய் என்று நினைத்தேன். நீ பிற இந்தியர்களைப் போலத்தான் என்னையும் நினைத்தாய் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. நீ எங்கு சென்றாய் என்று எனக்கு உண்மையிலேயே தெரியவில்லை. சில காலம் மற்றவர்களின் வாயில் புழங்கினாய். அப்புறம் அவர்கள் உன்னை மறந்து விட்டனர். என்னைத் தவிர.

சிறிது காலம் வருத்தமாக தான் இருந்தது. அப்புறம் இதெல்லாம் இப்படித்தான் முடியும் என்று தோன்றியது. காலம் செல்லச் செல்ல, நீ வெள்ளையர்களின் மத்தியில் எங்கோ காணாமல் போயிருப்பது எனக்கு ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருந்தது.

நீ இங்கிருந்து செய்ய வேண்டிய காரியங்களை நான் செவ்வனே செய்து வருகிறேன். இப்போது இங்கே நான் தான் துரை. உனக்குப் பிறகு பலர் வந்தார்கள். அவர்களுக்கெல்லாம் நான் தான் முன்னோடி, நானே சகா, நானே குரு, நானே வழிகாட்டி. அவர்கள் அனைவரும் என்னிடமே கற்றனர். கற்று என்னை தாண்டிச் சென்றனர். அதற்கு நான் முழு மனதுடன் ஒத்துழைத்தேன். ஒவ்வொருவரும் என்னுடன் இப்போதும் தொடர்பில் இருக்கின்றனர். உன்னைத் தவிர.

உன்னில் துளிர்விட்ட துரைத்தனம் இப்போது என்னில் கிளை பரப்பி நிற்கிறது. உன்னைப் போல் பலர் உன் உலகிற்குள் ஊடுருவி கொண்டிருக்கிறார்கள் என் பெயர் சொல்லி. நானே அவர்களுக்கு செல்வாயில். இனி நீ அவர்களை எல்லாம் சந்தித்துக் கொண்டே இருப்பாய். அவர்கள் எல்லாம் என் பெயர் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இனி உன்னை சுற்றி நானே அருவமாக இருப்பேன். நீ என்னை ஒருபோதும் மறக்க முடியாது. விடவும் மாட்டேன். 

ஒரு சொல், ஒரு பாராட்டு, சிறியதோர் அங்கீகாரம். இதை மட்டும் தானே எதிர்பார்த்தேன்.

எப்போதாவது.. எப்போதாவது நாம் இருவரும் சந்திக்க கூடும். இது அதையும், அது இதையும் ஒன்றையொன்று பார்த்து நிற்கும்.

இவ்வுலகில் இப்போது இரண்டு விசைகள் தான் உள்ளது. நீ மற்றும் நான். உன் அணி மற்றும் என் அணி. உன் உலகம் மற்றும் என் உலகம். அப்படித்தான் நான் நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை என்பது போல் ஒரு சம்பவம் நடந்தேறியது.

அது நம் இருவரையும் ஒரே அணியில் வீசி எறிந்தது. 

டிரம்ப் ஆட்சிக்கு வந்து சரியாக ஒரு வருடம் ஆகியிருந்தது. இந்தியர்களின் விசா கொத்துக்கொத்தாக நிராகரிக்கப்பட்டு வந்தது. எங்கு திரும்பினாலும் இதே பேச்சு. குடியுரிமை உள்ளவர்கள் ஒரு தோரணையிலும் விசாவை நம்பி இருப்பவர்கள் ஒரு தோரணியிலும் இருந்தனர். நாளொன்றுக்கு ஒருவர் விசா நிராகரிக்கப்பட்டது என்ற செய்தி வந்து கொண்டே இருந்தது. 

பகிர் பகிர் என்று அடித்துக் கொண்டிருந்த என் மனம் இடைவிடாது உன்னையே நினைத்துக் கொண்டிருந்தது. எண்ணியது போலவே நீ உன் உள்வட்டத்தை விட்டு வெளியே வந்தாய். உன்னை டிவியில் தான் பார்த்தேன். இந்த அநீதிக்கு எதிராக மாபெரும் கையெழுத்துப் போராட்டம் நீ நடத்திக் கொண்டிருப்பதை விளக்கிக் கொண்டிருந்தாய். அதைத்தொடர்ந்து ஒரு குழு அமைத்து வழக்கு தொடரப் போவதாகவும் சொல்லிக் கொண்டிருந்தாய். 

இனி நடக்கப் போகும் கூத்து எனக்கு தெரிந்ததே. விசா நிராகரிக்கப்பட்டவர்கள் சாரை சாரையாக உன் பின்னால் அணி சேர்வார்கள். அந்த மந்தைகளைக் கொண்டு ஒரு போராட்ட நாடகம் நடத்துவாய். அதிகாரத்தை நடித்து மக்களிடம் பேசுவாய். மக்களிடம் நீ பேசுவதால் அதிகாரத்தை பெருக்கிக் கொள்வாய். அவ்வதிகாரம் கொண்டு உனக்காக பேரம் பேசி நீ மட்டும் தப்பித்து செல்வாய். 

நான் இருக்கும் குடியிருப்பு பகுதியில் ஒவ்வொரு இந்தியருக்கும் நீ தனிப்பட்ட முறையில் அழைத்துப் பேசினாய் என்பதை அறிந்தேன். அப்படி என்றால் நீ எனக்கும் அழைப்பாய். நீ அழைத்தால் என்ன பேசலாம் என்று மனதில் பெரிய உரையாடலையே நிகழ்த்திக் கொண்டிருந்தேன் என்பதை நீ அறிய மாட்டாய். 

சரி என்று உன்னோடு அணி சேர்ந்து உன் பின்னால் வந்து நிற்பதா. அல்லது எனக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் விசா உள்ளது ஆகையால் தற்போதைக்கு நான் சுகமே என்று சொல்வதா? தர்கித்துப் பார்த்தால் எதைச் சொன்னால் உன் சகாவாக முடியும் என்பது கண்கூடு. ஆனால் இறுதி வரை நீ என்னை அழைக்கவே இல்லை. அந்த பாக்கியம் எனக்கு கிட்டவே இல்லை. 

யோசித்துப் பார், உனக்கு பின்னால் நான் நின்று இருந்தேன் என்றால் அது எவ்வளவு பெரிய விசையாக இருந்திருக்கும்.

உன் கையெழுத்து இயக்கம் பெருகிக்கொண்டே வந்தது. கனடா பிலிப்பைன்ஸ் தென்னமெரிக்கா ஆசிய நாடுகளின் மக்கள் இவ்வியக்கத்துக்கு ஆதரவு தந்தனர். எல்லோரும் உன்னைப் பற்றிய பேசினர். எங்கு திரும்பினும் உன் பிம்பமே. பத்திரிக்கையில் எழுதினாய், தொலைக்காட்சியில் விவாதங்களில் தோன்றினாய். உன் கருத்தே அவ்வியக்கதின் கருத்தாக இருந்தது. உன் நோக்கமே அங்கெங்கும் வியாபித்திருந்தது. நீயே அதன் முதற்முகமாக இருந்தாய். இந்தியாவில் இது செய்தியாகியது அதற்குப் பிறகு அமெரிக்காவிலும் செய்தியாகியது. முதலில் இதெல்லாம் என் பங்களிப்பென்று எதுவுமே இல்லாமல் நடக்கிறது என்று வருத்தமாக தான் இருந்தது. பின்பு சட்டென்று எனக்கு ஒன்று பட்டது. இந்தியர்களின் கூட்டத்துக்குள் நீ மூழ்கிக் கொண்டிருக்கிறாய், அவர்களில் ஒருவனாக நீ அடையாளம் கொள்கிறாய், துரைத்தனம் மறைந்து இந்தியத்தனமே அலை அலையாய் உன்னில் அடித்துக் கொண்டிருந்தது என்று.

உன் பிடி தீவிரமடைந்து கொண்டு வருகிறது என்று நான் நினைக்கையில் திடீரென்று அங்கே உன்னைப் போல் பல தலைவர்கள் உருவாகி செயல்பட தொடங்கினர். எல்லோரும் என் தீவரத்தை ஒத்திருந்தனர். அப்படியானால் அவர்கள் எல்லோரும் உன் வார்ப்புகள், உன் சகாக்கள். நான் இருக்க வேண்டிய இடம். இதுநாள் வரை அவர்கள் என்னைச் சுற்றி தான் இருந்திருக்கிறார்களா?

ஒரு கட்டத்தில் அவர்கள் என்னை விட உன்னை விட தீவிரமாக தெரிந்தார்கள். 

ஊடகங்களில் நீ இருக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இருந்தார்கள். உன் செயலை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். நாட்கள் செல்ல செல்ல நீ கொஞ்சம் கொஞ்சமாக பின்னுக்குத் தள்ளப்படுவதை நான் உணர்ந்தேன். அவ்வியக்கம் உன்னையும் மீறிப் போய்க் கொண்டிருந்ததை நான் பிறகுதான் கவனித்தேன். அவர்கள் உன் ஆட்கள் தானா? இல்லையா? என்று நான் ஊகிப்பதற்குள் ஒரு நாள் நீ யாருக்கும் தட்டுப்படாமல் மறைந்து போனாய். நீ எங்கும் காணக் கிடைக்கவில்லை. 

அந்தப் போராட்ட இயக்கம் விசை கொண்டு எங்கெங்கோ எப்படி எப்படியோ சிதறிக் கொண்டிருந்தது. 

வெடித்து விடும்.. வெடித்து சிதறிவிடும்.. இதோ இப்போது.. இல்லை இதோ இப்போது என்று இருக்கையில் புஷ் என்று அந்த இயக்கம் அவிந்து போனது.

சிலருக்கு..வெகு சிலருக்கு.. ரொம்ப சொற்பமானவர்களுக்கு விசா புதுப்பிக்கப்பட்டு இருந்தது. ஏனைய பெரும்பான்மையோர் சத்தம் இன்றி நாட்டை விட்டு வெளியேறினர். அப்புறம் அது போராட்டமும் இல்லை இயக்கமும் இல்லை அது வெறும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு சிறிய குமிழ்தான் என்று அமெரிக்க இதழில் ஒரு பெட்டிச் செய்தியாக வந்தது. இப்படி ஒன்று நடந்தது என்பது யார் மனதிலும் இப்போது நினைவாகக் கூட எஞ்சவில்லை.

கடந்த ஆறு மாதங்களாக நீ என்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறாய்.

இனி உன்னிடம் சொல்ல எனக்கு ஒன்றே ஒன்று தான் இருக்கிறது.

“முட்டாள்!! இப்போது நீ அங்கிருக்கிறாய், நான் இங்கு இருக்கிறேன்.”

????????????????????????????????????

விஜயக்குமார் சம்மங்கரை 

கோவையில் வசித்து வருகிறேன். தனியார் துறையில் பணிபுரிந்து வருகிறேன்.

மிருக மோட்சம் என்ற சிறுகதை தொகுப்பு 2022 ல் வெளிவந்துள்ளது.

தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறேன்.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *