“அம்மா! நான் பள்ளியில் இருந்து திரும்பி வந்து சில மணித்துளிகள் கடந்து விட்டன. எனக்கான சிற்றுண்டியை தாங்கள் இன்னும் தரவில்லையே?” என்றான் துரைராஜ்.
“முதல்ல யூனிஃபார்ம் துணி எல்லாம் எடுத்துக் கூடையில போடு.” சமையலறையில் இருந்து அம்மா வேணியின் குரல்.
“அம்மா! அந்தப் பணியினை முடித்துவிட்டேன். சீருடைத் துணிகளை அழுக்குத் துணி கூடையில் போட்டு விட்டேன் !” என்றான் துரை.
டிபன் தட்டுடன் வந்தார் அம்மா.
“அம்மா! சிற்றுண்டி மிகச் சுவையாக இருக்கிறது. சிறப்பு ! அற்புதம்!”
”ஸ்கூல் நாளைக்கு லீவா துரை?” அம்மா.
“இல்லையே அம்மா! நாளை பணிநாள் தான்!”
“பணிநாளா? லீவு இல்லியா?”
“விடுமுறை ஏதும் அறிவிக்கவில்லை!”
வந்ததில் இருந்து தமிழ்ச் சொற்களை மட்டும் பயன்படுத்தி துரை பேசுவதை உணர்ந்தார் வேணி.
துரையின் அப்பா செல்வம் வந்து விட்டார். கூடவே நண்பர் பாஸ்கரும்
“இன்னிக்கி என்ன லூட்டி அடிச்சான் நம்ம ட்விஸ்ட் துரை ? என்றார் செல்வம்.
“ட்விஸ்ட் துரையா?” என்றார் பாஸ்கர்.
“ஆமா, அவன் ஏதாவது ஒரு மேனரிஸம் பண்ணிகிட்டு இருப்பான். ஒரு வாரம் ரெண்டு வாரம் கழிச்சு வேற மாறிடும்”. செல்வம்.
”அதுல என்ன ட்விஸ்ட்?”
“ஒரு நாள் எங்க நாத்தனார் குடும்பம் விருந்துக்கு வந்து இருந்தாங்க. துரை ஒரு கிண்ணியைத் தூக்கி கிட்டு வந்து, “ஐ வாண்ட் சம் மோர்” அப்படின்னு நீட்டுறான்.” என்றார் வேணி.
”என்னோட பழைய சட்டை ஒண்ணு போட்டுகிட்டு, தலை முடிய லேசா கலைச்சு விட்டு…” செல்வம்.
”காஜல் எடுத்துப் போட்டுகிட்டு, மூஞ்சி கருப்பா இருந்தது. “.வேணி.
”அடடா! கெஸ்ட் முன்னால, கஷ்டமா போயிடுச்சா?”
“எல்லாரும் கேலி செய்யப் போறாங்கன்னு நான் ரொம்ப பதறிட்டேன்” என்றார் வேணி.
“அங்க தான் ஒரு ட்விஸ்ட்!” செல்வம்.
“அவன் அன்னிக்கி போட்டது ’ஆலிவர் ட்விஸ்ட்’ வேஷமாம்! எங்க மாப்பிள்ளைக்கி பிடிச்ச கேரக்டராம் அது!” வேணி.
“அவர் எழுந்து நின்னு, அந்தக் கதையில வர்ற மாதிரி, “ வாட்?” அப்பிடின்னு கேட்டார். நம்ம பையன் திரும்பவும், “ப்ளீஸ், சார், ஐ வாண்ட் சம் மோர்” அப்படின்னு சொல்ல. ஓரே கைத்தட்டல்!” செல்வம்.
“ஆமாம் ! சரியான ட்விஸ்ட் தான் !” என்ற பாஸ்கர், “நல்ல பிரபலமான புத்தகம் தான் “ஆலிவர் ட்விஸ்ட்”. துரை அந்தப் புத்தகத்தைப் படித்து இருக்கானா?” என்று கேட்டார் பாஸ்கர்.
“ஆமாம். பள்ளி நூலக ஆசிரியர் எல்லா மாணவர்களையும் ஏதாவது ஒரு பத்தகத்தைப் படித்து அதைப் பற்றிப் பேச சொல்லி இருந்தார். அதைப் படிச்சுத் தான் அவன் ஆலிவர் ட்விஸ்ட் வேஷம் போட்டு கிட்டு ஒரு வாரம்…படுத்திட்டான்”
“ஆலிவர் ட்விஸ்ட் வேஷம் போட்டதால ட்விஸ்ட் துரையா, சரி, துரை எங்க? “
அப்போது தான் துரை வெளியே வந்தான்.
“வணக்கம் மாமா! நலமா ?” என்றான்.
“ஹாய் அங்கிள்!”எனும் விளித்தலுக்குப் பழகிய காதுகள்…”ஹௌடி…” க்குப் பழகிய காதுகள்… “நலமா” வை நலமாகவே ஏற்றுக் கொண்டது.
“ஸ்கூலுக்கு எப்படி போயிட்டு வர துரை?” எனக் கேட்டார் பாஸ்கரன்.
“பள்ளிப் பேருந்தில் மாமா” என்று அவனும், “ஸ்கூல் வேன்ல” என வேணியும் ஓரே நேரத்தில் பதில் சொன்னார்கள்.
“ஆலிவர் ட்விஸ்ட் கதை எனக்கும் பிடிக்கும்” பாஸ்கரன்.
“உங்க கிட்டயும் அதப் பத்தி சொல்லி விட்டாங்களா? எனது அத்தை குடும்பம் மிகவும் ரசித்தார்கள்” என்றான் துரை.
“ஆமா, என்னோட சட்டையெல்லாம் எடுத்து என் தங்கச்சி பசங்க போட்டுகிட்டு, அவங்களும் அந்த கதையில வர மாதிரி நடிச்சாங்க” என்றார் செல்வம்.
“சார்லஸ் டிக்கின்ஸ் எழுதின அந்தப் புத்தகத்தோட மதிப்பு இன்னிக்கி வரைக்கும் குறையவில்லை. அதையெல்லாம் துரை படிச்சு இருக்கிறதே பெருமை தான் ! ” பாஸ்கர்.
“படிக்கிறதோட நின்னா தேவல்லயே! அவன் படிச்சத வச்சு நடிக்கவும் ஆரம்பிச்சுடுவான் துரை. இன்னிக்கி வந்ததிலேருந்து ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசிகிட்டு இருக்கான்.” வேணி.
“வாவ்! சூப்பர்! … அதாவது, சிறப்பு ! அருமை” எனக் குதித்தார் செல்வம்.
“ஆமா ! ஏதோ ஒரு கோணங்கித்தனம்!” வேணி.
”இன்று தமிழ் வகுப்பில் ஆசிரியர், தமிழ் உரையாடலுடன் ஏதேனும் நடிக்க இயலுமா எனவும் கேட்டார். நான் புலவர் நக்கீரர் பேசும் காட்சியை நடித்திக் காட்டினேன்” என்றான் துரை.
இந்தக் கதையில இப்ப ஒரு ட்விஸ்ட். ஆமாம்! பாஸ்கரன் ஆரம்பித்துவிட்டார், “அங்கம் புழுதி பட அரிவாளில் நெய் பூசி…”என! அது ஒரு புகழ் பெற்ற காட்சி அல்லவா!
துரை மிகச் சிறப்பாக புலவர் நக்கீரர் போலப் பேசினான்.
“இன்று இன்னொரு வசனம் கற்றுக் கொண்டேன் என்று சொல்லி, “தேரா மன்னா…!” எனக் கண்ணகி வசனத்தையும் திறம்படப் பேசினான் துரை.
”எங்கள் ஆசிரியர் இன்று ஒரு கருத்து சொன்னார்”.
“என்னப்பா அது ?”
“ஆங்கிலத்தில் நன்கு பேசக் கற்றுக் கொள்ளுங்கள். தமிழில் பேசும் போது ஆங்கிலச் சொற்களைத் தவிருங்கள்” !
“நிச்சயமாக ! நாம் அனைவருமே பின்பற்ற வேண்டும்” என்றார் செல்வம்.
”நான் ஒரு சூழலியல் தொண்டு நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கிறேன். சூழலியல் கருத்துகளை சுவைபட உன் தனிநடிப்பால குழந்தைகளிடம் கொண்டு செல்லலாம். இந்த வார இறுதியில் வருகிறாயா? என்றார் பாஸ்கரன்.
”ட்விஸ்ட் துரை இல்ல… திறன்மிகு துரை” என முதுகில் தட்டிக் கொடுத்தார் செல்வம்.
தன் தனித்திறமை வாய்ந்த நடிப்பின் மூலம் சூழலியல் கருத்துகளை மிகச் சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்கிறான் துரை!

கமலா முரளி
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
இவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.
மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.
கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய ’திருப்பூர் சக்தி விருது’ இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.