கடந்த ஒரு மாதமாக நடந்த சண்டையில் அந்த ஊரே கலவர பூமியாக இருந்தது. கடைசித் தண்ணீர் அந்த ஊரின் மையத்தில் இருந்த தொட்டியில் இருந்தது. தண்ணீர் கொண்டு வந்து ஊற்றிச் சென்றவர் இன்றைய தண்ணீரே  கடைசித் தண்ணீராக இருக்கலாம். இனி தண்ணீர் கிடைக்க மாதமாகலாம் ஏன் ஒரு வருடம் கூட ஆகலாம் என்று கூறிச் சென்று விட்டார். கிட்டத்தட்ட 500 பேர் வாழ்ந்து கொண்டிருந்த அந்த ஊரில் தண்ணீரின் அளவை அரசு குறைக்க குறைக்க வயதானவர்களுக்கு தண்ணீர் கொடுப்பது நிறுத்தப்பட்டது. தங்களுடைய குழந்தைகளுக்காக சிலர் அவர்களாகவே குடிப்பதை நிறுத்தி விட்டார்கள்.  வயதானவர்கள் இறந்து கொண்டே இருந்தார்கள். குழந்தைகளும் இருந்து கொண்டிருந்தார்கள்.   நடுத்தர வயதினரும் கூட தங்கள் குழந்தைகளைக் காப்பாற்ற தண்ணீர் குடிப்பதை நிறுத்தி விட்டார்கள். படிப்படியாக கிராம மக்களின் எண்ணிக்கை குறைந்து 150 பேராக மாறியது.

 கடைசியாக வந்த ஐம்பது லிட்டர் தண்ணீர் வழக்கம் போல சமாதானமாக பிரித்துக் கொள்ளாமல் மெலிந்த உடல்களும் வறண்ட நாக்குகளும் தண்ணீருக்காக ஏங்கிக் கிடந்த நிலையிலும் சண்டையிட்டு ஒருவரை ஒருவர் அடித்து மாண்டு விட்டனர்.

தண்ணீர் அருந்தாமல் மயக்கத்தில் கிடந்த தமிழ் மெதுவாக கால்களை இழுத்து இழுத்து உட்கார்ந்த நிலையில் தவழ்ந்து தண்ணீர் இருக்கும் இடத்திற்கு சென்றான். சொட்டுத் தண்ணீர் குடித்தும் மூன்று நாட்கள் ஆயிற்று. விழுங்குவதற்கு எச்சில் கூட இல்லை. தண்ணீரைப் பார்த்தவுடன் அள்ளி அள்ளிப் பருகினான். பசியோடு இருந்த குழந்தை தாயின் மார்பை முட்டி மோதியதைப் போல் இருந்தது.

ஆங்காங்கே மனிதர்கள் இறந்து கிடந்தார்கள். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் இறந்து போயிருந்தன.

தமிழ் தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து பக்கத்தில் இருந்த பிளாஸ்டிக் டப்பாவில் ஊற்றினான். கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தண்ணீர் டப்பாவை நகர்த்தி அவன் வீட்டின் முன்பு கொண்டு வந்து வைத்தான். தவழ்ந்து கொண்டே வீட்டிற்குள் சென்று படுத்துக் கொண்டான். அப்பொழுது மேஜையின் மீது இருந்த ஒரு புத்தகத்திலிருந்து வெள்ளைக் காகிதம் பறந்து அவன் முன் வந்து காற்றில் அசைந்தது.

“தமிழ் உன்னைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது. என்னுள் இருக்கும் 10 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்” என்றது.

தமிழ் பேசத் திரனற்றுக் கிடந்தான். கண்கள் மட்டும் திறந்த நிலையில் கருவிழிகள் நீரற்ற குளத்தில் நீரை தேடிய மீனைப் போல் அங்கும் இங்கும் அலை மோதிக் கொண்டிருந்தது. “பேச முடியலையா?” என்று கேட்ட அந்த வெள்ளைக் காகிதத்தைப் பார்த்தான்.

மெதுவாக எழுந்து சுவற்றைப் பற்றி சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். “என்னைப் பார்த்தால் உனக்கு கேலியாக இருக்கிறதா?” என்றான் மெதுவாக.

“கேலி எல்லாம் இல்லை”

“உன்னிடம் 10 லிட்டர் தண்ணீரா? இந்தத் துக்கத்திலும் என்னைச் சிரிக்க வைக்காதே” என்றான் தமிழ்.  “தமிழ் உண்மையாகத்தான் சொல்கிறேன். என்னைத் தயாரிக்க பத்து லிட்டர் தண்ணீர் தேவைப்பட்டது. உனக்குத் தெரியுமா?”

“என்னது பத்து லிட்டரா? எப்படி?”

“என்னை எங்கிருந்து தயாரிக்கிறார்கள்? நான் எதிலிருந்து உருவாகிறேன்?”

“நீ மரத்திலிருந்து உருவாகிறாய்”

“அந்த மரம் வளர எத்தனை லிட்டர் தண்ணீர் தேவை? அந்த மரத்திலிருந்து என்னை இப்படி காகிதம் ஆக்குவதற்கு எவ்வளவு  தண்ணீர் தேவை? யோசனை செய்து பார்” என்றது காகிதம்.

பள்ளிகளில் தாள்களை கிழித்து கிழித்து சுருட்டி எறிந்து விளையாடிய தருணம் மனதிற்கு ஓடியது தமிழுக்கு.

உன்னைத் தயாரிக்கவாவது பத்து லிட்டர் தான். ஆனால் என்னைத் தயாரிக்க பத்தாயிரம் லிட்டர் உனக்குத் தெரியுமா?” என்று சத்தம் கேட்டு தன் இடுப்பில் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்டை பார்த்தான். ஆம் அதுதான் கூறிக் கொண்டிருந்தது.

வெளியில் இருந்து பயங்கர சிரிப்பான ஒலியுடன் “என்னைத் தயாரிக்க நாலு இலட்சம் லிட்டர் தண்ணீர்.  என் பக்கத்தில் இருக்கும் இவனைத் தயாரிக்க 6 லட்சம் லிட்டர்.” என்று பக்கத்தில் இருந்த  வெள்ளைநிறக் காரைப் பற்றியும் தன்னைப் பற்றியும் கூறியது சிவப்பு நிற கார். கேட்டுக் கொண்டிருந்த தமிழுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது “பசி” என்று கூறிக் கொண்டே மயங்கி சரிந்தான். முகத்தில் தண்ணீர் தெளிக்கும் உணர்வு ஏற்பட்டு மெதுவாக எழுந்தான்.

’ஐ இன்னைக்கு நான் சீக்கிரமா எழுந்து உன் முகத்துல தண்ணி அடிச்சிட்டேனே.’ இந்த சத்தம் கேட்டு கண்களை விரித்துப் பார்த்தான் தமிழ்.  அட இங்கே இருக்கிறோமா!. “அப்போ இதெல்லாம் கனவா! ஐயோ  இது கனவாகவே இருந்துவிடக் கூடாதா!” என்று கூறியதைக் கேட்டதும், “என்ன ஆச்சு தமிழ்? இன்னைக்கு என்ன கனவு கண்டே.   தண்ணி இல்லாத மாதிரி தானே கனவு கண்டே?” என்று சமையல் அறையில் இருந்து கேட்டுக்கொண்டே வந்தார் தமிழின் அம்மா சுதா.

“ஆமா அம்மா தண்ணீர் இல்லாமல் எல்லோரும் இறந்து விடுகிறார்கள். நான் மட்டும் உயிரோடு இருக்கிறேன். உங்களையும் அப்பாவையும் பாப்பாவையும் கூட நான் பார்க்கவில்லை. கடைசியாக என்னிடம் யாரெல்லாம் பேசினார்கள் தெரியுமா?”

“யாரெல்லாம் பேசினார்கள்?”

“அம்மா ஒரு வெள்ளைக் காகிதம் என்னிடம் பேசியது. நான் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் என்னிடம் பேசியது. நம் வீட்டு வாசலில் நின்றிருந்த கார் கூட என்னிடம் பேசியது.  என்னிடம் தண்ணீர் இருக்கிறது எடுத்துக் கொள் என்று கூறியது”

“சரி சரி பள்ளிக்கூடத்துக்கு கிளம்பு. மீதியை இரவு வந்து பேசிக் கொள்ளலாம்” என்று கூறி வேக வேகமாக தமிழையும் இனியாவையும் பள்ளிக்கு கிளப்பினார் சுதா.

அன்று இரவு வழக்கம் போல சுதா குழந்தைகளோடு உரையாட ஆரம்பித்தார். அம்மா எப்படி அம்மா ஒரு சின்ன பேண்ட் தயாரிக்க  பத்தாயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது.

“கண்ணா அதற்குத் தேவையான துணி எப்படித் தயாரிக்கிறார்கள்?”

“பருத்திச் செடியிலிருந்து பஞ்சு எடுக்கிறார்கள்.  பஞ்சில் இருந்து நூல் கிடைக்கிறது. நூலைத் துணியாக்குகிறார்கள். அதன் பிறகு சாயம் ஏற்றுகிறார்கள் தைக்கிறார்கள்”

“வாவ்!!!   சரியாச் சொன்னேடா தங்கமே.  ஒரு பேண்ட் தயாரிக்க எவ்வளவு கிலோ பருத்திதேவை? அது விளைவதற்கு எவ்வளவு தண்ணீர்? அது கடைசியாக நம் கையில் வரும்  பத்தாயிரம் லிட்டர்  செலவு ஆகி இருக்கும்”

“அடேங்கப்பா” என்றான் தமிழ்.

“வெளிநாடுகளில் இருந்து வந்து நமது ஊர்களில் கார் கம்பெனி வைக்கிறார்கள். பனியன் துணிகளும் ஏற்றுமதி ஆகிறது. அவர்கள் ஊரில் இல்லாத தொழில்நுட்பமா? ஆனால் அவர்கள் இங்கிருக்கும் தண்ணீரைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்கிறார்கள். இங்கிருக்கும் மனிதர்களின் உழைப்பைச் சுரண்டுகிறார்கள்”

“அம்மா நமக்குக் காசு கிடைக்கிறது அல்லவா?”

“காசு கிடைக்கிறது ஆனால் வருங்கால சந்ததியினருக்கு தண்ணீரே இல்லாமல் போய்விடும். நீ கண்ட கனவு ஒருநாள் பலித்து விடும் கண்ணா.

ஒரு காலத்தில் தண்ணீர் காசு கொடுத்து வாங்கும் பொருளாக இல்லை. ஆனால் இன்று காசு கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம். நாளை காசு கொடுத்தாலும் கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கும் பொருளாக மாறிவிடும்”

“இதெல்லாம் உங்களுக்குத் எப்படி அம்மா தெரியும்?”

“புத்தகங்கள் வாயிலாகதான் தெரிந்து கொள்கிறேன். நீங்கள் பள்ளிக்குச் சென்ற பின் நான் நூலகம் சென்று புத்தகங்களை எடுத்து வந்து வாசிக்கிறேன்”

”நான் இதை நாளை என் நண்பர்களிடம் சொல்லப் போகிறேன் அம்மா. நான் சொல்லும் அத்தனையுமே அவர்களுக்குப் புதிதாக இருக்கிறது.  பள்ளியில் என் ஆசிரியர் கூட சில நேரங்களில் என்னிடம் இன்று என்ன புதிதாகக் கொண்டு வந்திருக்கிறாய்? என்று கேட்டாரு.  நான் கூறும் விஷயங்களை ஆர்வமாகக் கேட்பார்”.  என்று பெருமை பொங்கக் கூறினான் தமிழ்.

“இதற்கெல்லாம் நாம் என்ன அம்மா செய்ய முடியும்?” என்று கேட்டாள் குட்டி பாப்பா இனியா.

இப்படி கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும்   விர்ச்சுவல் வாட்டர்ப் பற்றிப் பேசுவோம். நமது நீரை நாம் காப்பாற்றுவோம் என்றார் அம்மா.

“கண்டிப்பாகச் சொல்கிறோம் அம்மா” என்றார்கள் தமிழும் இனியாவும்.

000

சரிதா ஜோ

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சரிதா ஜோ தமிழிலும் உளவியலிலும் முதுகலை பட்டமும் கல்வியியலில் நிறைஞர் பட்டமும் பெற்றவர். கதை சொல்லியாக தமிழ் இலக்கியத்திற்குள் பயணத்தை தொடங்கிய இவர் ஏராளமான சிறார் புத்தகங்கள் எழுதியுள்ளார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *