உன் உடம்பைக் குறைக்க நான் ஏம்ப்பா ஓடி வரணும் என கேட்பது போலவே முறுக்கிக் கொண்டு வரும் அந்த ஜீவன். பல நாட்கள் பழக்கத்திற்குப் பின்பும் தன்னுடைய எதிர்ப்புக் குணத்தை கைவிட்டதில்லை பின்ட்டோ. நடைப் பயிற்சியோடு நாயைக் கட்டுப்படுத்துவதும் ஓர் உடற்பயிற்சியே என, அதி சிரத்தையோடு நாயை சாந்தப்படுத்திக் கொண்டே நடப்பார் கிஷோர் சதுர்வேதி. ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அவருக்கு, குற்றவாளிகளோடு சகவாசம் செய்து செய்து மனிதர்களைப் போலவே விலங்குகளிடமும் சகிப்புத்தன்மை காட்ட பழகிக் கொண்டார்.

“யா அல்லாஹ், என் மனப் பாரத்தை லேசாக்கி வை ரப்பே…” உதடுகள் முணுமுணுக்க சாலை இழுத்த இழுப்பில் நடந்தார் அப்துல்லா கான் பாகவி. நெஞ்சுக் குழி அடைக்க, மனம் என்னவோ போல இருந்தது அவருக்கு. இனம் புரியாத கவலைன்னு சொல்லுவாங்களே அந்த மாதிரி. “இனி இந்தியாவுல நாம நிம்மதியா வாழ முடியுமா?” நடைப் பயிற்சிக்கு புறப்பட்ட போது, அவர் மனைவி கதீஜா பீவி பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு கேட்ட கேள்வி அவர் மனகிலேசத்தை அதிகப்படுத்தியது. ஏறக்குறைய நேற்று, அவரும் இதே மனநிலையில்தான் இருந்தார்.

காலை நேர வானிலை இதம் அளிக்கவில்லை. உடலும் மனமும் தகித்தது. அந்தச் சாலை முடிவே இல்லாமால் நீள்வதாக அவர் மிரண்டார். வாகன நடமாட்டம் ஏதுமற்ற அந்த நேரத்தில் மனிதர்களின் போக்குவரத்துகூட நிச்சலனமாகவே தெரிந்தது. பூமி அப்படிக்கப்படியே இயக்கத்தை நிறுத்தி விட்டதாக உணர்ந்ததால், கனத்த மௌனத்தின் சப்தம் கான் பாகவியின் மூளையை, கனிந்த பழத்தை வண்டு அரிப்பது போல அரித்துக் கொண்டிருந்தது.

இந்தியா முழுவதுமே குஜராத்தாக மாறிவிடுமா? நினைக்க நினைக்க கண்கள் ஏறச் செருகி தடுமாறினார். அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்ததும், அதை ஒட்டிய கொண்டாட்டங்களை இட்டும்தான் அவருக்கு அச்சம். முகம் அறியாமல் எங்கோ இருப்பவர்களின் கொண்டாட்டங்கள் பற்றி அவருக்கு என்ன கவலை? நெருங்கிய நட்பு பாராட்டி, குடும்ப நண்பர்களாகப் பழகிய இரண்டு பேர் அயோத்திக்குப் போய் விட்டு வந்து, மனதாரப் புகழ்ந்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தது அவரையே நேரடியாக மிரட்டுவதாகப் பயந்தார்.

நாள்தோறும் அதிகாலைத் தொழுகையை முடித்ததும் கிளம்பி விடுவார் கான் பாகவி. நகரின் பிரதான பகுதியை அந்தக் குடியிருப்போடு இணைக்கும் சாலையில் நடைப் பயிற்சி செய்வோரில் அப்துல்லா கான் பாகவியும் கிஷோர் சதுர்வேதியும் தனித்து தெரிவார்கள். ஒருத்தர் தொப்பி போட்டிருப்பார், இன்னொருத்தர் கையில் நாயோடு எக்கி எக்கி நடப்பார்.

“என்னாச்சி அப்துல்லா? உடம்பு சரியில்லையா அமைதியா வர்ர…” நாய் பின்ட்டோவோடு மல்லுக்கட்டியதால் சதுர்வேதி மூச்சு வாங்கக் கேட்டார். தொன தொனத்துக் கொண்டு வருபவர் இன்று வாயே திறக்கவில்லை. கடந்த இருபத்தி நான்கு மணி நேர அரசியல் ஆவலாதிகளையும் சம்சார சாகரங்களையும் அசை போட்டுக் கொண்டே இருவரும் நடை பயில்வர்.

“ஒண்ணுமில்ல… ரொம்ப ஆயாசமா இருக்கு. இனிமே என்ன ஆகுமோன்னு…” குரலிலும் பாவணையிலும் சோர்வு தெரிந்தது. நடையின் வேகமும் வழக்கத்தைப் போல இல்லை.

“ஆயாசம்னா… டயர்டா இருக்கா? அப்ப எதுக்கு வாக்கிங் வந்தீங்க, ரெஸ்ட் எடுத்திருக்கலாம்ல…” நின்று, கான் பாகவியின் முகத்தைப் பார்த்து ஆராய்ந்தார் சதுர்வேதி. அக்கறையோடு பேசும் போது, அசைக்கு அழுத்தம் தந்து தெலுங்குச் சாயல் வெளிப்பட்டுவிடும் சதுர்வேதியின் பேச்சில். வளர்ப்பு பிராணிகளை எவ்வளவுதான் வசப்படுத்தினாலும் அதன் சுயரூபம் எப்போதாவது வெளிப்படத்தானே செய்கிறது. வியர்வையோ கலைப்போ தெரியவில்லை, ஆனால் பயரேகை கான் பாகவியின் கண்களில் இருளடைந்து கிடந்தது. அவரின் தோளில் சதுர்வேதி கைவைத்த போது, செல்போன் ஒலித்தது.

“ஹலோ யாரு?…”

உதட்டில் விரலை வைத்து, பின்ட்டோவை எச்சரித்த சதுர்வேதி, கான் பாகவி பேசி முடிக்கும் வரை அமைதி காத்தார்.

“அஸ்ஸலாமு அலைக்கும்… ஆலிம்ஷா, நான் Pro People TV சீனியர் ரிப்போர்ட்டர் அஹ்மது ஜலாலுதீன் பேசுறேன். ஃப்ரியா இருக்கீங்களா? பேசலாமா? வண்டி எதுவும் ஓட்டலல்ல…”

“வ அலைக்குமுஸ் ஸலாம்… சொல்லுங்க ஃப்ரியாத்தான் இருக்கேன், வாக்கிங் வந்திருக்கேன். சுருக்கமா சொல்லுங்க…” சாலை ஓரத்தில் இருந்த சிமெண்ட் திண்டில் அமர்ந்தார் கான் பாகவி.

“உங்களுக்கு நினைவிருக்கான்னு தெரியல. பேட்டி எடுப்பதற்காக பல தடவ போன்ல பேசியிருக்கேன். ஆனா உங்கள நேர்ல பார்த்ததில்ல. என் நண்பர் ஒருத்தர் உங்கள பார்க்கணுங்கிறார். அவர வீட்டுக்கு அழைச்சிட்டு வரலாமா ஆலிம்ஷா?”

“காலையில ஏழரை மணியில இருந்து ஒன்பதரை வரை வீட்டுலதான் இருப்பேன். பார்க்கலாம். யாரு அது? என்ன விஷயமா பார்க்கணுமாம். போன்லயே பேசிடலாம்ல… அவர்ட்ட கொடுக்கிறீங்களா சார்…” எழுந்து சதுர்வேதியிடம் போகலாம் என சைகை காட்டி மீண்டும் நடைப் பயிற்சியை தொடர்ந்தனர்.

“அவர் என்னோடதான் இருக்காரு, நேர்ல உங்கள பார்க்கணுமாம். நேராத்தான் பேசணும்னு விரும்புறாரு, அதான்…” கான் பாகவியை எப்படியாவது பார்த்து விட வேண்டுமென நண்பர் அழுத்தியதால், தன்னுடைய பத்திரிகை மொழி வழக்கில் நீக்குப்போக்காக பேசி படிய வைக்க முயன்றார் ஜலால்.

“சரி வீட்டுக்கு வாங்க… எது தொடர்பா பேச விரும்புறார்னு தெரிஞ்சிக்கிட்டா நல்லது. தேவையில்லாத விஷயங்கள பேசி என் நேரத்த வீணடிக்க கூடாதுல்ல…”

நேரில் சந்திக்க கான் பாகவி ஏன் மறுகுகிறார் என புரிந்து கொண்டதும், “பாபரி மசூதி தொடர்பாக உங்களிடம் பேசணுமாம்…” என தூண்டில் போட்டார்.

பிரபல இஸ்லாமிய அறிஞரும் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும் என்பதால், நேற்றைய தினத்தின் முக்கியத்துவம் கருதி, சந்திக்க ஒப்புக் கொள்வார் என பத்திரிகையாளர் கணக்குப் போட்டார். “பாபரி மஸ்ஜித் பத்தியா? என்ன விஷயமாம்? அவர் இயக்கம் எதையும் சேர்ந்தவரா?” படபடவென கேள்விகளை கொட்டிய அவரின் பேச்சில் பதற்றம் தெரிந்தது. அடுத்த இருந்த இருக்கையில் திரும்பவும் அமர்ந்தார்.

“நீங்க பயப்படுற மாதிரிலாம் எதுவுமில்ல ஆலிம்ஷா. அவர் ஒரு எழுத்தாளரு. எனக்கு நல்ல நண்பரு… வேற ஒண்ணுமில்ல. எதாவது கதை எழுத இஸ்லாமிய ஷரிஅத் விளக்கம் கேட்கவா இருக்கும். உங்களோடு பேசினாலே அந்த அனுபவத்த வச்சிகூட ஒரு கதை எழுதிடுவாரு… இன்னிக்கு முடியலன்னா சொல்லுங்க, இன்னொரு நாளைக்கு பார்க்கலாம். ஆனா என்ன… அயோத்தியில ராமர் சிலை நேத்து பிரதிஷ்டை செய்திருக்கிற இந்தச் சூழ்நிலையிலேயே உங்களைப் பார்க்கணும்னு நச்சரிக்கிறாரு அதான்…” அப்போதுதான் பத்திரிகையாளருக்கே உரைத்தது, எதுக்காக கான் பாகவியை இன்றே பார்க்க விரும்புகிறார், என்ன காரணம் என நாமே கேட்கலியே என யோசித்தார்.

வீட்டுக்கு வரச்சொல்லி அழைப்பை துண்டித்தார் கான் பாகவி. “போன்ல யாரு? உன் உடம்புக்கு என்னாச்சி? முகம் சோர்ந்து போயிருக்கே, ஒழுங்கா தூங்குனியா, ஏன் பேசாம அமைதியா வர்ர?…” கான் பாகவியின் உள்ளத்தில் உள்ளதை அறியாமல், அவர் உடல் நலம் குன்றியிருப்பதாகவே பயந்தார் சதுர்வேதி. அந்தப் பயத்தில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது. வயது ஏற ஏற சீரான தூக்கமும் குதூகலமான மனநிலையும்தானே ஆரோக்கியம்.

“கிஷோர்… அயோத்தில நடக்குற சம்பவங்கள நெனச்சுத்தான் கவலையா இருக்கு… அரசியல்படுத்தும் பாடு, ஒட்டுமொத்த இந்தியாவையும் அராஜகத்துக்கு வக்காலத்து வாங்கச் சொல்லி மிரட்டுது, ஆன்மிகப் போர்வையில ஒளிஞ்சிகிட்டு…” சொல்லிக் கொண்டே நெற்றியைச் சுருக்கி கண்ணாடியை அசைத்துப் பார்வையை தூரமாக்கி நடந்தார். கான் பாகவி மெளனம் கலைக்கவும்தான் அவர் அமைதியாக வந்ததன் காரம் உரைத்தது சதுர்வேதிக்கு.

“நாம என்ன செய்ய முடியும் அப்துல்லா? காலம்தான் ஏதாவது செய்யணும். இது மாறிடும். இதுக்கு போய் ஏன் இப்படி உம்முன்னு இருக்க…” மறத்தல் மருந்துதான் என்றாலும் நினைவுகள் நிணத்தைக் கீறி குருதி கொப்பளிக்கச் செய்து விடுகிறதே. சதுர்வேதியின் தேறுதல் மொழிகள் ஆயிரம் பொருள் கொண்ட வார்த்தைகள் என்றாலும் அந்த வார்த்தைகள் கான் பாகவியின் குழப்பத்தை தணிக்கவில்லை.

1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபரி மஸ்ஜிதை இடித்த பின்பு, நீதிதேவன்கள் எப்படியும் நீதியை நிலைநாட்டி, பாபரி மஸ்ஜித் இடத்தை முஸ்லிம்களிடம் திரும்ப ஒப்படைத்து விடுவார்கள் என்றே கான் பாகவி நம்பியிருந்தார். முஸ்லிம்களும் அந்த நம்பிக்கைப்படி பொறுமை காக்க வேண்டும் என வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர் எழுதி வந்தார். அந்த இடம் ராமர் கோயிலுக்குச் சொந்தம் என தீர்ப்பு வாசிக்கப்பட்ட போது, தான் எவ்வளவு முட்டாள்தனமாக நம்பி வந்திருக்கிறோம் என குமைந்தார். பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்ட கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட, 2024-ம் ஆண்டில் ஜனவரி 22 என்ற ஒரு தேதி அவருடைய நாட்காட்டியில் வந்திருக்கக் கூடாது. இதுவரை தன்னை முட்டாளாக உணர்ந்து வருந்திய அவர், முதன்முறையாக தன்னை ஒரு கொலைகாரனைப் போல, மோசடிப் பேர்வழியைப் போல, ஏமாற்றுக்காரனைப் போல நினைத்து நேற்றிலிருந்து உச்சக்கட்ட மனவுளைச்சலில் உழன்றார்.

வாக்கிங் முடித்ததும் கான் பாகவியின் வீட்டுக்கு வந்து, கம்பங் கூழ் குடித்து விட்டுப் போவதுதான் சதுர்வேதியின் வழக்கம். தினமும் பின்ட்டோவுக்கும் காலை டிஃபன் அங்குதான். ஓய்வு பெற்ற பின், கடைசியாக பணி செய்த இடத்திலேயே குடும்பத்தோடு இருந்துவிட முடிவெடுத்தார். ஆந்திராவில் பிறந்து வளர்ந்தாலும் தமிழ்நாட்டை தாய் வீடு போல சுவீகரித்துக் கொண்டார். இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கான் பாகவியோடு நட்பு. சதுர்வேதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு வந்த பின்பு, கிஷோர் சதுர்வேதியின் குடும்பம் அசைவத்திற்கு மாறிவிட்டது. அதனால் கான் பாகவி குடும்பத்தோடு ஒட்டுவதற்கு அவரின் குடும்பம் சங்கோஜப்படவில்லை.

கிஷோர் சதுர்வேதி ஐபிஎஸ் ஆந்திராவில் பணிபுரிந்த போது மனித உரிமை ஆர்வலர் பாலகோபாலோடு ஏற்பட்ட மோதல்தான், அவரை இவ்வளவு சமதர்மவாதியாக மாற்றிவிட்டது. கைதிகளை அடித்து துவைத்த போதெல்லாம், சதுர்வேதிக்கு எதிராக கிளம்பிவிடுவார் பாலகோபால். கடமையை முன்னிறுத்தும் காவல்துறை அதிகாரி ஒரு பக்கம், உரிமையை உரத்து முழங்கும் போராளி இன்னொரு பக்கம். இரண்டு எதிரெதிர் துருவங்களும் காந்தவியல் விசை தத்துவத்தின் படி நெருங்கி வந்தனர். பாலகோபால் குடும்பத்தைப் போலவே சனாதன தர்மத்தை ஆசாரமாக கடைபிடிக்கும் குடும்பம் சதுர்வேதியோட குடும்பம். ஆனால் பாலகோபாலைப் போல அயிரை மீனை ஆசை தீரத் தின்னும் அந்தணராகிப் போனார் சதுர்வேதி.

எட்டரை மணி வாக்கில் வீட்டுக்குத் திரும்பிய போது டிவி ரிப்போர்ட்டர் அஹ்மது ஜலாலுதீனும் அவர் நண்பரும் வாசலில் நின்றனர். வீட்டுக்குள்ள போய் இருந்திருக்கலாமே, ஏன் வெளில நிக்கிறீங்கன்னு கேட்டவர், மகள் ஜீனத்தை அழைத்தார். வாப்பா வந்த சுவட்டின் வாசனை நாசியைத் தொட்டதும், அனிச்சையாக பின்ட்டோவுக்கான உணவை ஜீனத் எடுத்து வந்தாள். சதுர்வேதி அங்கிள் தவிர இன்னும் இரண்டு புதுமுகங்கள் இருப்பதைப் பார்த்த ஜீனத் வீட்டுக்குள் அவசரமாக நுழைந்தாள். திரும்பி வரும்போது இரண்டு கோப்பைகளில் தேநீரும் இரண்டு குவளைகளில் கம்மங்கூழும் கொண்டு வைத்து விட்டு, அவளுக்கு அருகில் நின்ற பின்ட்டோவின் தலையை தடவிக் கொடுத்தாள். பிடிகிரியை பின்ட்டோ மூஸ் மூஸென்று ரசித்து பசியாறினான்.

“இவருதான் உங்களைப் பார்க்கணும்னு சொன்னது, பேரு அய்யாஷ். ராம்நாதபுரம் மாவட்டம் பூந்தாழை சொந்த ஊரு. தமிழ்மணி பத்திரிகைல சப் எடிட்டரா இருக்காரு…” தேநீர் அருந்தியபடி டிவி ரிப்போர்ட்டர் ஜலாலுதீன் அறிமுகப்படுத்தினார். முகமனைப் பரிமாறிக் கொண்ட அய்யாஷ், கான் பாகவியின் முதுகுக்குப் பின்புறமிருந்த புத்தக அலமாரியைப் பார்த்து பிரமித்தார். இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை மூலாதாரங்களான இறைவேதம் குர்ஆன் மற்றும் இறைத்தூதர் போதனைகளின் அரபி கிரந்தங்களும், அதற்கான விளக்கவுரை நூல்களும் தடித் தடியாக அணிவகுத்தன.

“பூந்தாழை கிராமமா?” உற்சாகமாக சிரித்தபடியே தொடங்கிய கான் பாகவி, “பஸீம் ஹஜ்ரத் உங்களுக்கு தெரியுமா? நாங்க ரெண்டு பேரும் ஒண்ணாத்தான் வேலூர் பாகியாத் மதரஸாவில ஓதினோம். கிஷோர்… நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன்ல ஐஏஎஸ், ஐபிஎஸ் மாதிரி, இஸ்லாம் சம்பந்தமாக படிச்சி, டிகிரி பட்டம் வாங்கும் போது, உங்களுக்கு புரியிற மாதிரி சொல்றதுன்னா ரெலிஜியஸ் ஸ்காலர் ஆகும் போது அந்த இன்ஸ்டிட்யூட் பேரையே, பட்டமா நாங்க யூஸ் பண்ணுவோம். நான் படிச்ச கல்வி நிறுவனம் பேரு பாகியாத், அதனால பாகவி’ன்னு என் பேருக்கு பின்னாடி போட்டுக்கிறேன்.”

“அப்துல்லா எத்தன தடவப்பா இதச் சொல்லுவ… காஸிமி, உலவி, ரஷாதி இதெல்லாம் மதரஸா பேருதானே… இங்க படிச்சவங்கல்லாம், இந்தப் பட்டத்த அவங்க பேரு பின்னாடி போட்டுக்குவாங்க, கரெக்டா?… உன் டார்ச்சருக்கு பேசாம, நான் ரிட்டையர்ட் ஆன பின்னாடி மதரஸாவுல சேர்ந்து பட்டம் வாங்கியிருக்கலாம், கிஷோர் சதுர்வேதி பாகவி… கேட்கவே நல்லாருக்குல்ல… ஜீனத் உங்கப்பா படுத்துறார்மா…”

‘கிஷோர் சதுர்வேதி’ பாகவி என்று சொன்னதும் நாயைத் தவிர அனைவரும் சிரித்து விட்டார்கள். பின்ட்டோவுக்கு ஒன்றும் புரியவில்லை, தலையைத் தூக்கி ஒரு மாதிரியாக பார்க்கவும், “ஒண்ணுமில்லடா நீ சாப்பிடு…” ஜீனத் பின்ட்டோவை ஆதுரத்துடன் கழுத்தை கட்டிக் கொண்டாள்.

“வாப்பா… எப்பப் பாரு, அங்கிளுக்கு கிளாஸ் எடுத்திக்கிட்டே இருக்கீங்களே… பாருங்க பின்ட்டோ மிரளுறான். அங்கிள பள்ளிவாசலுக்கு தொழுக கூட்டிட்டுப் போனா, அவங்க முஸ்லிம் இல்லைன்னு யாருக்காவது நம்ம ஏரியாவுல சந்தேகம் வருமா என்ன…”

“நல்லா சொல்லு மருமகளே, அப்துல்லா பாய் சில நேரம் இப்படித்தான் உளறி மாட்டிக்கிறாரு… அவருக்கு வயசாயிடுச்சில்ல, ஞாபக மறதி ஜாஸ்தியாயிடுத்து. அதான் சொன்னதையே சில நேரம் திரும்பத் திரும்ப சொல்லிடுறாரு…”

சதுர்வேதியும் ஜீனத்தும் சேர்ந்து கொண்டால் கான் பாகவியை விதூஷகனாக்கி விடுவார்கள். ஏதோ விழிப்புத்தட்ட, இருக்கையிலிருந்த எழுந்த கான் பாகவி திடுக்கிட்டவராக குரலை உயர்த்தினார். “அவர் பேரு என்ன சொன்னீங்க…?” டிவி ரிப்போர்ட்டர் ஜலாலைப் பார்த்துக் கேட்டவர், அருகில் அமர்ந்திருந்தவரிடம், “சார் உங்க பேரு என்ன?” என திடீரென சம்பந்தமே இல்லாமல் கேட்கவும் பத்திரிகையாளர்கள் இருவரும் தயக்கத்தோடு எழுந்தனர். எதுக்கு இப்படி பீதியடைகிறார் என டிவி ரிப்போர்ட்டர் ஜலால் கண்களை உருட்ட, கிஷோரும் ஜீனத்தும் கூட கவனம் குவித்தனர்.

இப்படி கான் பாகவி அதிர்ச்சியில் உறைந்து போகலாம் என எதிர்பார்த்திருந்தவரைப் போல நிதானமாகப் பேச்சைத் தொடங்கினார். “என்னுடைய பேரு அய்யாஷ், என்னை உங்களுக்கு நினைவிருக்கும்னு நினைக்கிறேன்…” சினிமாவில் வரும் ஹீரோ, வில்லன் மாதிரி பேசினால் எப்படி இருக்கும்? அந்தக் குரலில் பிசிரு எதுவுமின்றி அழுத்தமாகச் சொல்லிவிட்டு அமர்ந்தார். அவர் உட்கார்ந்திருந்த தோரணையைப் பார்த்தால், என்னை உங்களுக்கு நினைவில்லையா? என் பேரையும், என்னோட ஊர் பேரையும் கேட்டதுமே உங்களுக்கு ஞாபகம் வந்திருக்க வேண்டுமே? அந்த கடிதத்தை மறந்திட்டீங்களா? அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டீங்களே… என நினைவுபடுத்துவது மாதிரி இருந்தது.

அவர் பெயரைக் கேட்டதும் நிலைகுலைந்து உறைந்தார் கான் பாகவி. ஜலாலுதீனும் அமர்ந்தார். தான் அழைத்து வந்தவரைப் பார்த்து கான் பாகவி ஏன் இப்படி மிரள்கிறார்? நொடிப் பொழுதில் நிலவிய அமைதியில் அய்யாஷின் முகத்தைப் பார்த்தார். போனில் பேசும் போது, இயக்கம் எதையும் சேர்ந்தவரா என கான் பாகவி கேட்டது இப்போது நினைவுக்கு வந்தது. ஃபேஸ்புக் அறிமுகம்தான் என்றாலும் சக துறையைச் சேர்ந்தவர் என்பதால் நெருக்கமாகப் பழகி வந்தோம். நம்முடன் வந்திருக்கும் இந்த அய்யாஷ் யாரு? டிவி ரிப்போர்ட்டர் ஜலாலுதீன் யோசித்தார். சதுர்வேதியும் ஜீனத்தும் இந்த உரையாடலை ஈடுபாடின்றி கேட்டுக் கொண்டே, பின்ட்டோவோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

“இருபத்தஞ்சு வருஷம் இருக்கும்… நான் அப்போ காலேஜ் ஃபைனல் இயர் படிச்சிக்கிட்டு இருந்தேன். நீங்க தமிழ்மணி பத்திரிகைல, இப்போ நான் வேலை செஞ்சிக்கிட்டு இருக்குற அதே தமிழ்மணி பத்திரிகைல நடுப்பக்கத்துல ஒரு கட்டுரை எழுதியிருந்தீங்க, ஞாபகமிருக்கா? அந்தக் கட்டுரையோட தலைப்பு சரியா இப்ப நினைவில்ல. இஸ்லாமிய மார்க்க அறிஞர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர்னு அப்ப உங்க மேல எனக்கு பெரிய மரியாதை இருந்திச்சி…’’ அய்யாஷ் சொல்லச் சொல்ல கான் பாகவி ஏதோ குற்றச் செயல் செய்து மாட்டிக் கொண்டது போல முழித்தார்.

“ஆனா, அந்தக் கட்டுரைல, பாபரி மஸ்ஜித இடிச்ச வழக்குல நீதிமன்ற தீர்ப்பை நாம எதிர்பார்த்து இருக்கோம், உச்ச நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும்னு, இந்துத்துவ வாதிகளின் ஊதுகுழலைப் போல எழுதியிருந்தீங்க…” தேநீர் அருந்திய கோப்பையை எதிரில் இருந்த மேஜையில் வைத்து விட்டு, சினிமாவில் சண்டைக் காட்சியில் வில்லனை அடித்து வீழ்த்திய கதாநாயகனைப் போல கம்பீரமாக அமர்ந்திருந்தார் அய்யாஷ்.

ஒரு இடைவெளிவிட்டு அவர் மீண்டும் பேசத் தொடங்கிய போது குறுக்கிட்ட கான் பாகவி, “அப்ப என்னை கடிதம் மூலம் மிரட்டின அய்யாஷ் நீங்கதானா மிஸ்டர்?” என கத்திக் கொண்டு கான் பாகவி எழவும், சடுதியில் சதுர்வேதியின் போலீஸ் மூளை விழித்துக் கொண்டது.

“என்ன சொல்ற கான்… அப்போ என்ட்ட சொல்லி நீ பயந்தியே அந்தச் சம்பவமா? அப்பவே கம்ப்ளயிண்ட் கொடுன்னு சொன்னேன், நீ கேட்கல… இப்பப் பாரு துஷ்டன் உன் வீட்டுக்கே நேரா வந்திட்டான்…” ஓய்வுபெறுவதற்கு முந்தைய போலீஸ்காரர் வெளியே வந்தார்.

சதுர்வேதி அரற்றவும் பின்ட்டோ பாய்ந்து பாய்ந்து குரைத்தது. ஜீனத்தின் கைகளில் கடிவாளம் இருந்ததால் அந்த இரண்டு பேரின் தொடைச் சதை தப்பித்தது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை, கான் பாகவி அமைதியான மனநிலைக்குத் திரும்பி சதுர்வேதியை அமர்த்தினார். அவரை சதுர்வேதி முறைத்தார். பின்ட்டோவின் உறுமல் கேட்டு கதீஜா பீவியும் பயந்து போய் நடுக்கூடத்திற்கு வந்துவிட்டார். காலையில் கணவனைப் பார்த்து விம்மியது வேறு ரூபம் எடுக்கிறதோ என அவருக்கு கவலை. வந்திருக்கும் இரண்டு பேரும் யாரு? போலீஸ்காரர்களா? யூனிஃபார்ம் இல்லையே, வேறு யாராக இருக்கும்?

“பின்ட்டோவுக்கு ஜூஸ் கொடு ஜீனத்… கிஷோர் கோவப்படாதப்பா… அப்ப இந்தப் பையன் மட்டும் கடிதம் எழுதல, ஏறக்குறைய நூத்திப் பத்து கடிதம் வந்திச்சி… அதுல இருந்த கண்டெண்ட்ட வச்சி அவனுங்கெல்லாம் ஒரே குரூப்புன்னு முடிவு பண்ணினேன். எனக்கு ஒரு நம்பிக்கை இருந்திச்சி, ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிம தாக்க மாட்டான். மிரட்டல் கடிதம்தானேன்னுதான் அப்ப கம்ப்ளெயிண்ட் கொடுக்கல…”

“ஆமா ஆலிம்ஷா… அது வெறுமனே மிரட்டல் கடிதம்தான். உங்களை அந்தப் பத்திரிகை பயன்படுத்தப் பார்த்திச்சி. நான் கடிதம் எழுதுன பின்னாடி, நீங்களும் அந்தப் பத்திரிகைல அதே மாதிரி எழுதல. அந்தப் பத்திரிகைல எழுதுறதையே நிறுத்திட்டீங்கன்னு நினைக்கிறேன்… உங்க கணிப்பு சரிதான், ஆனா இயக்கம் குரூப்லாம் எதுவுமில்ல… உங்களுக்கு கடிதம் எழுதுனதுலாம் என்னோட ஃப்ரெண்ட்ஸ்தான்…” அய்யாஷ் மென்மையாக இடக்காக பேசவும் ஆத்திரமடைந்த சதுர்வேதி அவனை நோக்கி நடந்தார்.

“அதெல்லாம் சரி மேன்… இப்ப எதுக்கு வந்திருக்க? அப்துல்லா பாயை நேரா பார்த்து, அப்போ பாபரி மஸ்ஜித் பத்தி எழுதினதுக்கு இப்ப பழிவாங்கப் போறியா?” அவன் சட்டையைப் பிடித்து தூக்கினார். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. கண நேரத்தில் அந்தக் கூடமே சண்டைக் களமாக மாறிவிட்டது. கதீஜா பீவி படபடப்போடு நெருங்கி வந்து, “அண்ணே வேணாம்… வீட்டுக்கு வந்த விருந்தாளிங்க அவங்க…” அவரும் ஜீனத்தும் சதுர்வேதியின் கைகளைத் தடுத்தனர். இந்தச் சூழ்நிலையை பத்திரிகையாளர் ஜலாலுதீன் எதிர்பார்க்கவில்லை. “அய்யாஷ் நீங்க சொல்ல வந்ததச் சொல்லுங்க, நாம கிளம்பலாம்…” ஏதோ விபரீதமாகப் படுவதாக அவர் அவசரப்படுத்தினார்.

கிஷோரின் பிடியில் இருந்து பத்திரிகையாளரை விடுவித்து இருவரையும் அமரச் சொன்ன கான் பாகவி, “கிஷோர்… இன்ஃபாக்ட் அவரு எனக்கு நல்லதுதான் செய்திருக்காரு… அவர் மேல இப்ப எனக்கு துளியும் கோபமில்ல. காலையில இருந்து என் மனச அரிச்சிக்கிட்டிருக்குறது இதுவும் சேர்த்துத்தான்… நேத்து அயோத்தியில ராமர் சிலை பிரதிஷ்டைக்கு எவ்வளவோ பிரபலங்கள் அங்க போயிருந்தாங்க. நிர்ப்பந்ததுல போனாங்களான்னு பார்த்தா, அப்டிலாம் இல்ல போல… போயிட்டு புகழ்ந்து தள்ளி வீடியோ போடுறாங்க. இதப் பார்த்தா இத்தனை நாளும் நம்மள்ட்ட வேஷம் போட்டிருக்காங்க, உள்ளுக்குள்ள பயங்கர ஃபாசிஸ்டுகளா இருந்திருக்காங்கன்னு தெரியுது…” வறண்டு போயிருந்த தொண்டையை மேஜையில் இருந்த பாட்டில் தண்ணீரில் நனைத்த பின், குரலில் மென்மை படர்ந்தது.

“குஜராத் கலவரத்துல இதுதான் நடந்திச்சி… பக்கத்து வீட்டுக்காரங்களா நல்லா அன்பா பழஙகினவங்க முஸ்லிம்களை துடிக்க துடிக்க கொலை பண்ணினாங்க… கர்ப்பிணி வயித்த கிழிச்சி சிசுவை எரிச்சி கொன்னாங்க… முஸ்லிம்களோட இடுகாட்டுல கப்ருகளைத் தோண்டி, அதுல இருந்த எலும்புகள் மேல பெட்ரோல ஊத்தி கொழுத்தி இருக்காங்கன்னா எவ்வளவு வெறி இருந்திருக்கும்…” கான் பாகவி பேசப் பேச,  நம்ம கடிதம் நன்றாக வேலை செய்திருப்பதாக நினைத்துக் கொண்டு, அய்யாஷ் உன்னிப்பாகக் கவனித்தார்.

“இப்பத்தான் எனக்கு புரியுது, நீதிமன்றங்கள நம்பணும், நீதிக்கு கட்டுப்படணும், கண்ணைக் கட்டிய நீதி தேவதை அநீதிக்கு எந்தக் காலமும் துணை போகாதுன்னு முஸ்லிம்களை நம்ப வைக்க என்னைய மாதிரி ஆட்களை வச்சி, பத்திரிகைல கட்டுரை எழுத வச்சிருக்காங்க… நானும் அது வெளங்காம, ஒரு ஆலிமை மதித்து பிரபலமான பத்திரிகைல நடுப்பக்கத்துல கட்டுரை எழுதச் சொல்றாங்கன்னு பெருமைல மயங்கிட்டேன்… இசையமைப்பாளர் சிச்சுவேசனுக்கு ஏத்த மாதிரி ட்யூன மனசுக்குள்ள உருவகம் செஞ்சிடுவாரு… அந்த டியூனுக்கு தக்க பாட்டு எழுத, பாடலாசிரியர்ட்ட ட்யூன, தத்தகாரத்துல சொல்லுவாங்க, அதுக்கு பாடலாசிரியர் பாட்டு எழுதுற மாதிரி நானும் எழுதியிருக்கேன்… வறுமையின் நிறம் சிவப்பு படத்துல ஸ்ரீதேவி, தந்தன தத்தன தையன தத்தன… அப்டின்னு தத்தகாரத்த சொல்லவும், சிப்பி இருக்குது முத்து இருக்குது அப்டின்னு கமல் பாடுவாரே அந்த மாதிரி நானும் அந்தப் பத்திரிகை எதை எதிர்பார்த்ததோ அதையே கட்டுரையா எழுதிக் கொடுத்திருக்கேன்…”

தொழுகையில் தரையை நெற்றியில் வைத்து ‘ஸஜ்தா’ நிலையில், இறைவனின் தண்டனைக்குப் பயந்து, மனமிறங்கி, பாவத்தை ஒப்புக் கொண்டு மன்றாடுவது போல இருந்தது கான் பாகவியின் ஒப்புதல் வாக்குமூலம்.

அந்நியரைப் போல வீட்டுக்குள் வந்து, அடாவடியாக மிரட்டிக் கொண்டிருப்பவனாக தன்னைப் பார்த்த பார்வையை இந்தச் சந்தர்ப்பத்தில் மாற்ற விரும்பிய அய்யாஷ், விவாதத்தை தன் வசமாக்க விரும்பி, “உங்களுக்கு இப்பத்தான் புரியுது… இப்ப சொல்லுங்க நான் செஞ்சது, அதாவது மிரட்டினதா சொன்னீங்கல்ல அது தப்பா…?” என கேட்டார்.

“உண்மைதான் தம்பி… நீங்க ரொம்ப சரியா சொன்னீங்க… நீங்க மிரட்டினதா சொல்ல முடியாது, சொல்லக் கூடாது. அப்ப ஒரே சமயத்துல நூத்துக்கும் மேல கடிதம் வரவும்தான் நான் பயந்திட்டேன். வீட்டுக்காரம்மாவும் பயந்திட்டாங்க. ஆனா, அந்தக் கடிதத்தில நீங்க அறிவுறுத்தியிருந்தது, ஆமா, அறிவுறுத்தினீங்கன்னுதான் சொல்லணும், எவ்வளவு ஹக்-கான வார்த்தைகள்னு இப்ப புரியுது… அந்தக் கடிதத்துல நீங்க சொல்லியிருந்த மெஸேஜ் இப்பவும் எனக்கு நினைவிருக்கு…”

கான் பாகவியின் ஆர்வத்தைத் தூண்டும் பேச்சால் ஈர்க்கப்பட்டு, அடிக்கப் பாய்ந்த சதுர்வேதி இயல்பு நிலைக்குத் திரும்பினார். “அப்துல்லா… என்னப்பா மிரட்டல்னு சொல்லிட்டு இப்ப அந்தத் தம்பிய இப்படி புகழ்ற… அப்படி என்னதான் கடிதத்துல எழுதியிருந்தாரு…”

“ஆமா வாப்பா என்ன கடிதம்? அங்கிளுக்கும் அம்மாவுக்கும்கூட தெரிஞ்சிருக்கு… என்ன கடிதம் அது? நான் பிறக்கிறதுக்கு முன்னாடி நடந்த சம்பவம் போல… ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கு… என்னோட ரிசர்ச்சுக்கு யூஸ் ஆகும். டீட்டெய்லா சொல்லுங்க…” அரசியல் அறிவியலில் முதுகலை பட்டம் படிக்கும் ஜீனத்துக்கு சுவாரஸ்யமாக தெரிந்தது இந்த உரையாடல்.

“தம்பி எழுதின கடிதத்துல இருந்த தகவல்கள சொல்றேன்…” அலையடித்த கடற்கரை மணலாக, சினத்தின் தடம் எதுவுமில்லாமல் மிருதுவாகப் பேச்சைத் தொடர்ந்தார் கான் பாகவி.

“சரியா எந்த வருஷம்னு எனக்கு நினைவில்ல, தமிழ்மணி பத்திரிகை நடுப்பக்கத்துல நான் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அந்தக் கட்டுரையோட தலைப்பும் இப்ப நினைவுல இல்ல, ஏறக்குறைய இருபத்தஞ்சு வருஷம் ஆச்சுல்ல… அந்தக் கட்டுரைல பாபரி மஸ்ஜித் இடம் தொடர்பா, நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பை இந்திய முஸ்லிம்கள் ஏத்துக்க வேணும்னு எழுதியிருந்தேன். தமிழகத்துல நடுநிலையான, அறிவுஜீவிகள் படிக்கிற பத்திரிகைன்னு அந்தப் பத்திரிகைக்கு அப்ப ஒரு தோற்றம் இருந்திச்சி, இப்ப அப்படி இல்லைங்கிறது வேற விஷயம். அப்படிப்பட்ட டெய்லி பத்திரிகைல, அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளெல்லாம் நடுப்பக்கத்துல வரும். பெரிய பெரிய கல்விமான்கள், பேராசிரியர்கள், ஆய்வாளர்களுக்குத்தான் நடுப்பக்க கட்டுரை எழுத அந்தப் பத்திரிகைல வாய்ப்பு கொடுப்பாங்க. முஸ்லிம்கள் யாரும் அந்த சமயத்துல கட்டுரை எழுதின மாதிரி எனக்கு நினைவில்ல. நானும் இன்னொரு ஆலிம்ஷாவும் அப்பப்ப கட்டுரை எழுத தமிழ்மணி பத்திரிகை வாய்ப்பு கொடுத்திச்சி. அதை நான் பெருமையாகவும் பெரிய கவுரவமாகவும் நெனச்சேன்.” வாப்பா சொல்வதை கவனமாகக் கேட்டாள் ஜீனத்.

“அதாவது, முஸ்லிம் சமூகத்துல இருக்கிற முற்போக்கான அறிவுஜீவி நான் அப்டிங்கிற பிம்பத்த அந்தப் பத்திரிகை ஏற்படுத்துனிச்சி. அந்தப் பெருமைல மயங்கி, நானும் நடுநிலையா என்னோட எழுத்து இருக்கணும்னு அப்ப அப்படியொரு கட்டுரை எழுதினேன். ஆனா, அந்தப் பத்திரிகையோட நோக்கம் வேற மாதிரி இருந்ததை இப்போதுள்ள சூழ்நிலையோட ஒப்பிட்டுப் பார்க்கும் போது புரியுது… என்னைய அவங்க பயன்படுத்திட்டாங்கன்னுதான் சொல்லத் தோணுது…”

வாப்பாவின் அப்பாவித்தனம் ஆச்சரியமாகத் தெரிந்தது ஜீனத்துக்கு. நடப்பு அரசியலை அவள் பரந்த கோணத்தில் அறிந்து வைத்திருந்தாள். இஸ்லாமிய சட்ட நுணுக்கம், இஸ்லாமிய வரலாற்று ஆய்வு என இஸ்லாமிய மார்க்கம் பற்றி ஆழ்ந்த ஞானம் கொண்ட தன்னுடைய தந்தைக்கு, இந்திய அரசியல் சூழல் பற்றி போதுமான விழிப்பு இல்லை என்பது ஒரு மனக்குறையாக அவள் உள்ளத்தில் எழுந்தது.

ஏதோ நடந்தது நடந்து விட்டது என ஓர் அப்பாவியைப் போல கான் பாகவி தொடர்ந்தார். “தம்பி எழுதியிருந்த கடிதத்துல இருந்த வாசகங்கள சொல்ல மறந்திட்டேனே… இந்துத்துவம் வாழ்வியல் நெறின்னு உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லியிருக்கு, அப்படி இருக்குறப்ப எப்படி அந்த நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் இடத்தை உங்களுக்கு திருப்பித் தரும்னு நம்புறீங்கன்னு அந்தக் கடிதத்துல தம்பி கேட்டிருந்தார். இந்த வாதம் அப்ப எனக்கு பெரிசா தெரியல. ஒண்ணு… நீதி, நேர்மைன்னு இந்த சிஸ்டத்த அப்ப பலமா நம்பினேன். இன்னொன்னு நூத்துக்கும் மேல கடிதம் வந்ததால கொஞ்சம் பயந்து போயிட்டேன். ஆனா, இப்படி கொத்து கொத்தா கடிதம் வந்ததால ஒரு நல்லது நடந்திச்சி, அதுக்கப்புறம் தமிழ்மணி பத்திரிகைக்கு கட்டுரை எழுதுறதையே விட்டுட்டேன்…”

“பயந்திட்டீங்களா வாப்பா?…” ஜீனத் குறுகுறுத்தாள்.

“அப்படியும் சொல்லலாம்…” சொல்லிவிட்டு பத்திரிகையாளர்கள் இருவரையும் பார்த்து கான் பாகவி சிரித்தார்.

“அந்தத் தம்பி சரியாத்தான் சொல்லியிருக்காரு…” அப்பாவும் மகளும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்காதது போல பின்ட்டோவைக் கொஞ்சிக் கொண்டிருந்த கிஷோர் உரையாடலுக்குள் வந்தார். “இந்துத்துவத்த வாழ்வியல் நெறின்னு நீதிபதிகள் சொல்றாங்கன்னா நீதித்துறை எவ்வளவு கரப்ட் ஆகியிருக்கும்? கரப்ட்டுன்னா பணம் வாங்கிட்டு ஊழல் பண்றது மட்டுமில்லையே… சிந்தனை ரீதியாக அடிமையாப் போறதும் ஊழல்தானே… அப்ப அந்த நீதித்துறைய நம்பலாமா? எந்த அடிப்படையில நம்பிக்கை வைக்கிறது?”

சட்டையைப் பிடித்து உலுக்கியதால் அவமானமடைந்த அய்யாஷ், அதை மறந்து சதுர்வேதியின் பேச்சைக் கேட்க அவருக்கு முகம் கொடுத்தார். பின்ட்டோவும் அவர் பேசுவதை தலையை உயர்த்தி கேட்டது.

“அப்துல்லா பாய்… மதம் தொடர்பான விஷயத்துல தமிழ்நாட்டுல பயங்கர குழப்பம் நிலவுதுன்னு நான் நினைக்கிறேன்.” அப்துல்லா பாய் என அவர் விளித்தது தனது நண்பரை மட்டுமல்ல. அங்கிருந்த மற்ற ‘பாய்’களுக்கும் சேர்த்துத்தான் என்பதாக இருந்தது சதுர்வேதியின் குரல் ஏற்ற இறக்கம்.

“வடநாட்டுல, ஒட்டுமொத்தமா இந்து மதத்துக்கு ஆதரவா மாறிட்டாங்க. அது எந்தக் கட்சின்னு இல்ல. எல்லா கட்சியும் இந்து மதம் பத்தின பார்வைல ஒரே விதம்தான். ஆனா, தென்னிந்தியாவுல, அதுவும் தமிழ்நாட்டுல, இந்து மதம் தொடர்பா வித்தியாசமான ஒரு பார்வை இருந்திச்சி, பெரியார் மாதிரியான தலைவர்கள் அந்தப் பார்வைய இங்க ஆழமா பதிச்சிருக்காங்க… அதுல இப்போ ஒரு தடுமாற்றம் தெரியிறத பார்க்க முடியுது. ராமர் கடவுள்தான், அதுல பிரச்சினை இல்ல, அயோத்தியில அவசர அவசரமாக கோயில திறக்கிறதுதான் அரசியலா தெரியுது… அப்டிங்கிற மாதிரி பேசி சமாளிக்கிறாங்க… ஆனா, எனக்கு வேற ஒரு பார்வை இருக்கு… காஞ்சா அய்லய்யா தெரியுமா? எங்க ஊர்க்காரருதான், அவர் புக்ஸ் இங்க தமிழ்ல இருக்கான்னு தெரியல…”

“ஆமா, சார்… நான் ஏன் இந்து அல்ல… அப்டிங்கிற தலைப்புல தமிழ்ல காஞ்சா அய்லய்யாவோட புக் வந்திருக்கு, படிச்சிருக்கேன்…” அய்யாஷின் பதிலால் திருப்தியடைந்த சதுர்வேதி, “ஓ… தமிழ்ல  அவரு புத்தகம் வந்திருக்கா…” ஆச்சரியமாக தலையை ஆட்டினார்.

இவர் சரக்கு உள்ள ஆளு எனக் கணித்த அய்யாஷ், இருக்கையிலிருந்து முதுகைத் தளர்த்தினார். ஒரு பத்திரிகையாளனுக்கு தகவல்தானே ஆயுதம். இருக்கையின் நுனிக்கு நகர்ந்த அவர், “ஆலிம்ஷா… இவங்க யார்னு சொல்லலியே…” இழுத்தபடியே பார்வையை கான் பாகவி பக்கம் திருப்பினார். கிஷோர் சதுர்வேதி ஐபிஎஸ் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்தினார் கான் பாகவி.

திருமண நிகழ்வில் சின்னச் சின்ன மனஸ்தாபங்களுக்காக இரு வீட்டாரும் சண்டை பிடித்துக் கொள்ளும் போது மணமகனும் மணமகளும் தங்கள் தரப்பு பக்கம் நின்று சண்டை போட்டாலும், சற்று நேரத்தில் சச்சரவு ஓய்ந்து கணவன்-மனைவியான பின் மோகத்தோடு கரம் கோர்ப்பது போல, பத்திரிகையாளர்கள் இருவரும் அந்தக் கணம்தான் சந்திப்பது போல வெட்கம் மினுங்க சிரித்து, சதுர்வேதியோடு கைகுலுக்கிக் கொண்டனர்.

“காஞ்சா அய்லய்யா ஒட்டுமொத்தமா இந்து மதத்தையே ஃபாசிஸம்னுதான் சொல்றாரு… பஃப்பல்லோ நேஷனலிசம் அப்டிங்குற புக்குல, இந்து சமூகத்தில பெரும்பான்மையாக இருக்கக் கூடிய மக்களுக்கு சமத்துவமோ சுதந்திரத்தையோ தராத Spiritual Fascism அப்டின்னு இந்து மதத்த கடுமையான வார்தையை பயன்படுத்தி விமர்ச்சிக்கிறாரு…”

மறுபடியும் குறுக்கிட்ட அய்யாஷ், “இந்தப் புத்தகமும் எருமை தேசியம்-ங்கிற தலைப்புல தமிழ்ல வந்திருக்கு சார்…”

“பாரு அப்துல்லா… நீ சொன்ன மாதிரி தம்பி பயங்கர அப்டேட்டா இருக்கான்… அதனாலதான் உன் மேல கடுப்பாகி, கடிதம் எழுதி, தன்னோட ஃப்ரெண்ட்ஸ்களையும் எழுத வச்சி லைட்டா மிரட்டிருகிறான்… தம்பி இப்படி த்ரெட்டன் பண்றதுக்கு என்ன பனிஷ்மென்ட் தெரியுமா? ரெண்டு வருஷம் ஜெயில்…”

“சார்… அது கொலை முயற்சி செய்கிற மோடிவ்ல மிரட்டினாத்தான் ஐபிசி ஃபைவ் நாட் சிக்ஸ் சட்டப் பிரிவைப் பயன்படுத்த முடியும்… நான் வெறுமனே கடிதத்தில் சுட்டிக் காட்டினேன், அவ்வளவுதான் சார்…” அய்யாஷ் தன்னுடைய பத்திரிகைத் துறை அறிவை வெளிக்காட்டத் தயங்கவில்லை. கோபத்தை தள்ளி வைத்து விட்டு தேசத்தின் எதார்த்த சூழலை இயல்பாகப் பேசியதால், சதுர்வேதியை நட்பாக அணுகினார்.

“அதெல்லாம் இருக்கட்டும் வாப்பா… அயோத்தியில ராமர் கோயில் கட்டி திறந்த நிகழ்வுகளை நீங்க ஏன் இவ்வளவு சீரியஸா பார்க்குறீங்க… இப்படி நான் உங்களை பார்த்ததே இல்லையே… எவ்வளவு பயான் பண்ணியிருக்கீங்க? எல்லா பயான்களிலும் நம்பிக்கை தரக்கூடிய வாசகங்களைத்தானே பேசுவீங்க… உங்களுடைய அந்த உரையைக் கேட்கக் கூடிய யாருக்குமே எதிர்காலம் பத்தின கவலை போயிடுமே… இறைவன் மேல நம்பிக்கை வச்சி, அடுத்த எட்ட எடுத்து வைக்க தொடங்கிடுவாங்களே… நீங்களே இப்படி பயப்படலாமா?” கான் பாகவியின் மனதை ஊடுறுவிப் பார்த்து அவர் மனசாட்சியை உலுக்கினாள் ஜீனத்.

“மருமக சரியான கேள்வி கேட்டா, அப்துல்லா சாப், ஏன் இப்படி பயப்படுறீங்க… துப்பாக்கி வாங்க லைசென்சுக்கு அப்ளை பண்ணுவோமா?” வலது கை விரல்களை துப்பாக்கியைப் போல மடக்கி சுட்டுக் காண்பித்து சிரித்தார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இளித்தார் கான் பாகவி.

“இப்ப உள்ள ஆட்சியாளர்களெல்லாம் ஃபிர்அவ்ன் மாதிரி ரொம்ப மோசமானவங்களா இன்னும் மாறல வாப்பா… அந்த அளவுக்கு மோசமா மாறினாலும் நாம கவலைப்படத் தேவையில்ல. யாருக்குமே ஒரு முடிவுன்னு இல்லாமப் போகாதுல்ல… ஃபிர்அவ்ன் எப்படி செத்தான்னு நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய சம்பவம் வரலாற்றுல இருக்குதானே… அப்படியான ஒரு நாள் இங்கயும் வரத்தானே செய்யும்… அந்த நாள் தானே வரும்னும் சும்மா உட்காரக்கூடாது நாம… சரிதானே அங்கிள்…”

“ஆமா ஜீனத். ரொம்ப சரியாச் சொன்ன… ஃபிர்அவ்ன்னுன்னா ஃபாரோ மன்னன்தானம்மா…” தன்னுடைய வரலாற்று அறிவை உறுதிப்படுத்திக் கொண்டார் சதுர்வேதி. இந்தப் பேச்சுக்களை திசைதிருப்ப விரும்பினார் கான் பாகவி. “பழைய கதையெல்லாம் இருக்கட்டும், இப்ப என்ன விஷயமா வந்திருக்கீங்க… அதையே கேட்க மறந்திட்டேன்…” காலையில் கண் விழித்ததிலிருந்து அழுத்திக் கொண்டிருந்த பாரமெல்லாம் குறைந்து முகமலர்ச்சியோடு கான் பாகவி கேட்டார். இரண்டு பத்திரிகையாளர்களும், எதற்காக வந்திருக்கிறார்கள் என்பதை அறிய சதுர்வேதி, ஜீனத், கதீஜா பீவியும் ஆவலோடு பார்த்தனர்.

“வந்த விஷயத்தை சொல்லாம ஏதேதோ பேசி, எங்கெங்கேயோ விவாதம் போயிடுச்சி. உண்மையிலேயே நான் உங்களை சந்திக்க வந்தது, உங்களிடம் மன்னிப்பு கேட்கத்தான்… இதச் சொல்லியிருந்தா, என்ன விஷயம்னு கேட்டு ஜலால் சார், இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்க மாட்டார். அதனாலதான் அவர்ட்டகூட சொல்ல…” சொல்லிவிட்டு எழுந்த அய்யாஷ், கான் பாகவியின் கரங்களைப் பற்ற கைகளை நீட்டினார்.

எழுந்து கைகளை நீட்டிய கான் பாகவி, “இதுக்கு எதுக்கு மன்னிப்பு?” என தழுதழுத்தார். அந்தக் கூடத்தில் சற்று நேரத்திற்கு முன்பு கவிந்த இறுக்கம் தணிந்து, மோன நிலைக்கு மாறியதை, அலமாரியில் அணிவகுத்த புத்தகங்கள் ரசித்தன.

“அந்த சின்ன வயசுல ஒரு நல்ல நோக்கத்துலதான் அப்படி செஞ்சேன். அத மனசுல வச்சிக்காதீங்க… எனக்கு எதிராகவோ, அப்ப கடிதம் எழுதின நண்பர்களுக்கு எதிராகவோ எதுவும் இறைவனிடம் பிரார்த்தனை பண்ணிடாதீங்க… மன்னிச்சுக்கோங்க…” கண்களில் இருந்து கண்ணீர் வரவில்லை, மாறாக ஒரு புன்சிரிப்பே துருத்தியது. அய்யாஷின் குரலிலும் பார்வையிலும் ஆத்மார்த்தமான வருத்தமும் வேதனையும் கசிந்தது. அய்யாஷை அப்படியே கட்டிப் பிடித்து தழுவிக் கொண்டார் கான் பாகவி. அய்யாஷின் தோள்களைத் தட்டிக் கொடுத்தார் சதுர்வேதி.

ஸலாம் சொல்லிவிட்டு இரண்டு பத்திரிகையாளர்களும் வெளியேறிய பின், ஆறிப் போயிருந்த கம்பங்கூழை கான் பாகவியும் சதுர்வேதியும் குடித்தனர். “அயோத்திக்கு போயிட்டு வந்து வீடியோ போட்டது யார் அப்துல்லா? என்ட்ட இதைச் சொல்லவே இல்லையே…”

“யாருன்னு பெயர் சொல்ல விரும்பல கிஷோர். எழுத்து துறையில தொடர்புடையவங்கதான் அவங்க. எனக்கு நல்ல பழக்கம். குடும்பத்தோட வீட்டுக்குலாம் வந்திருக்காங்க. கதீஜாவுக்கும் நல்ல பழக்கம். அவங்க போட்ட வீடியோவ காட்டவும்தான் அவளும் ரொம்ப பயந்திட்டா…”

“அப்துல்லா… நாம நினைக்கிற மாதிரிலாம் ஃபாசிஸம் ஓல்ட் ஸ்டைல் ஆஃப் தாட்ஸ்ல இப்ப இல்ல. கருத்துரிமை பேச்சு, நடுநிலையான எழுத்து, முற்போக்கு சிந்தனை அப்டிங்கிற போர்வையில இப்ப ஃபாசிஸ திட்டங்கள் முன் வைக்கப்படுது…”

“அதெப்படி அங்கிள்? ரொம்ப வித்தியாசமா சொல்றீங்களே… மழை பெய்ஞ்சா சிறுத்தையோட புள்ளிகலெல்லாம் அழிஞ்சிடுமா என்ன? மக்கள் எப்படி இதையெல்லாம் நம்புவாங்க? பகுத்தறிவோட சிந்திக்கிற மக்களை ஏமாத்த முடியுமா?”

“ஜீனத், மக்களோட மனவோட்டத்த மாத்திட்டா? நாயைக் காட்டி இதுதான் சிறுத்தைன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க, ஒரு கட்டத்துல மக்களும் அதை நம்பிடுறாங்க… அதாவது மனவோட்டத்த மாத்திடுறாங்க. மாற்றப்பட்ட அந்த மனவோட்ட அடிப்படையிலதான பேச்சு, எழுத்து, செயல்பாடுகளெல்லாம் இருக்கும்…”

அப்படி மனவோட்டத்தை மாற்றுகிற கும்பலில் ஒருவராகத்தான் வாப்பாவை, அந்த நாளிதழ் பயன்படுத்தி இருக்கிறதென சிந்தனை வயப்பட்டவளாக சதுர்வேதியைப் பார்த்து ஜீனத் தலையசைத்தாள்.

“அட, வீட்டுக்குலாம் வந்திருக்காங்கன்னு சொல்ற, யாருப்பா அது?” அந்த இரண்டு எழுத்தாளர்கள் யார் எனத் தெரிந்து கொள்ள சதுர்வேதியின் போலீஸ் மூக்கு வியர்த்தது.

“அவங்க மேல எனக்கு நல்ல மரியாதை இருக்கு. அதனால பேர சொல்ல வேணாமே…”

“உனக்குப் பிடிக்கலன்னா விடு…” சொல்லிவிட்டு, சதுர்வேதி பின்டோவை அழைத்துக் கொண்டு அவர் வீட்டிற்கு கிளம்பினார். “அப்துல்லா… நாளைக்கு நான் வாக்கிங் வரல… ஃபேமிலியோட கோயிலுக்குப் போறேன், நீயும் வர வேண்டாம். நான் வாரத நாட்கள்ல நீ வாக்கிங் போகாத, என்ன…”

அதட்டல் தொனிக்க அக்கறையோடு சாலையில் நடந்தது, சதுர்வேதி வடிவில் ஆழ வேரூன்றிய விருட்சம் ஒரு பக்கம். மறுபக்கம் பச்சையம் மணக்க வீட்டிற்குள் நுழைந்தது ஜீனத் என்ற துளிர். பூமி மெதுவாக மூச்சு விட்டு ஆசுவாசமடைந்து இயல்பாகச் சுற்றத் தொடங்கியதை கான் பாகவி உணர்ந்தார்.

•••••

மால்கம் 

இயற்பெயர் குதுப். சுருக்கமாக காஜா குதுப்தீன்.

இராமநாதபுரம் மாவட்டம் நம்புதாளை என்ற கரற்கரை கிராமம் சொந்த ஊர். பொறியியல் பட்டயப்படிப்பு முடித்துவிட்டு, பதிப்பகம், ஊடகம் என எழுத்து துறையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து, தற்போது நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் senior Deputy Editor aaka paNipuriwthu varukiRaar.

‘கல்லறையை உள்ளிருந்து திறக்க முடியாது’ என்ற சிறுகதைத் தொகுப்பை பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது.

‘என் புரட்சி – Bio Fiction’ அமெரிக்க கறுப்பினப் புரட்சியாளர் மால்கம் X- ன் வரலாற்றை இலக்கியச்சோலை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

மால்கம் X அறிமுகமும் அரசியலும் நூலை எதிர் வெளியீடு வெளியிட்டுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *