குமரகுரு. அ
“எல்லாருக்கும் சொல்லிவிட்டாச்சா?” என்று மறுபடியும் ஒரு முறை ஆதவனிடம் கேட்டு உறுதி படுத்தி கொண்டான் உத்தமன். அவனுக்கு உத்தமன் என்று பெயர்தான் ஆனால், ஒரு காலத்தில் ஊரெல்லாம் அவனை குடிகாரன் என்றுதான் அழைப்பார்கள்.
ஆதவன் உத்தமனின் ஒரே மகன்.
உத்தமனின் அக்கா தனலட்சுமி தனது 61 வது வயதில் கேன்ஸர் நோய் வந்த அவதி முடிந்து இன்று காலைதான் தன் உயிர் நீத்தார். உத்தமன் அவளின் ஒரே தம்பி. உருப்படாமல் போய்விடுவான் என்று பொத்தி பொத்தி தான் வளர்த்தார் அவர்களின் அப்பா அப்படியிருந்தும் எப்படியோ தறுதலையாகத்தான் திரிந்தான் உத்தமன்.
படிக்க வேண்டிய காலத்தில் பள்ளிக்கே போகவில்லை. மார்கெட்டில் அப்பா வைத்திருந்த வெங்காய மண்டிக்கு, கல்லா பெட்டியிலிருந்து காசு எடுக்க மட்டும்தான் போவான். அவனிடம் மன்றாடி மன்றாடியே அவன் பெற்றோர் இறந்து போயினர்.
சொன்னால் வியந்து போவீர்கள், உத்தமன் தனலட்சுமி பிறந்து 20 ஆண்டுகள் கழித்துப் பிறந்த கடை குட்டி. அவன் பெற்றோருக்குத் திருமணமான மறு வருடமே தனலட்சுமி பிறந்து விட்டார். அப்போது உத்தமனின் அம்மாவிற்கு 14 வயது, அப்பாவுக்கு 15 வயது.
சின்ன வயதில் பிள்ளை பெற்றதால் மிகுந்த உடல் உபாதைகள் வந்து உத்தமனின் அம்மாவுக்கு தொல்லை கொடுத்தபடியிருந்தன. அம்மா சொல்லுவாள், உத்தமன் பிறக்கும் முன்னே ஆறு பிள்ளைகள் உருவாகி, கருவிலேயே செத்து போனார்களாம். இவன்தான் எப்படியோ தப்பிப் பிழைத்து பிறந்தவனாம்.
சொந்தத்தில் எல்லாரும் ஒத்த பெண் பிள்ளையா போச்சு, கொள்ளி வைக்க வாரிசில்லைன்னு சொன்னதால அத்தனை வருசத்துக்கப்புறம் உடம்பு ஒத்துழைக்கலைனாலும் மெனக்கெட்டுப் பிள்ளைப் பெத்துக்கிட்டாளாம் உத்தமனின் அம்மா.
*****
அக்காவுக்கு கேன்சர் வந்து மூன்றாண்டுகளாயிற்று. அவளுக்கு இரண்டு பெண் குழந்தைகள். அல்லி, அமுதா. அல்லி திடீரென்று ஒரு நாள் மயங்கி விழுந்து அவளின் பதின் பருவத்திலேயே இறந்து போனாள். ஏனென்று யாராலுமே கண்டுபிடிக்க முடியவில்லை. அமுதாவுக்குத் திருமணமாகி இப்போது சிங்கப்பூரில் அவள் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.
உத்தமனுக்கு தனலட்சுமி அக்கா, இன்னொரு அம்மா மாதிரிதான். சின்ன வயதில் அக்காவின் மடியில் படுத்துக் கொண்டு கதை கேட்டபடியே உறங்கி போவான். அக்கா நிறைய கதை சொல்லும். படிக்காத பெண்தான் ஆனால், அக்காவுக்கு ஊர் கதைகள் அவ்வளவு தெரியும்.
அவள் திருமணம் வெகு விமர்சையாகத்தான் நடந்தது. அவளின் கணவர், ஆவுடையப்பன் மிகவும் நல்லவர். எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. மூன்று நான்கு தலைமுறையாகவே திருப்பூரிலேயே வாழ்பவர்கள். துணிக்கடை வியாபாரம், கொழித்த பணம். நன்றாகத்தான் வாழ்ந்தாள் அக்கா.
அவருக்கு நாற்பது நாற்பத்தியிரண்டு வயதான போது, திடீரென்று வலிப்பு வந்து விழுந்தவர். சிறிது காலம் படுத்த படுக்கையாக கிடந்து பிறகு இறந்து போனார்.
அதற்குள்ளாக உத்தமனுக்கும் திருமணமாகி ஆதவன் பிறந்திருந்தான்.
உத்தமனால் அக்காவையும் அக்காப் பிள்ளைகளையும் தனியாக திருப்பூரில் விட்டு செல்லவும் மனமில்லை. அக்காதான் அடம் பிடித்து, ” தம்பி! அங்கே வந்து உனக்கு பாரமா இருக்கவும் விரும்பல. அதே நேரம் நாங்க இங்கேயும் சந்தோசமாதான் இருக்கோம். எங்களுக்கு எந்த குறையுமில்லப்பா. ஏதும் பிரச்சனைன்னா நான் உன்கிட்டதான வருவேன். கவலைப்படாம போ!!” என்று நம்பிக்கைக் கொடுத்து அனுப்பினாள்.
*****
அல்லி இறந்ததிலிருந்துதான் அக்கா முழுவதுமாய் உடைந்து போனாள். மாமா ஆவுடையப்பன் இறந்து மூன்று நான்கு வருடங்களிருக்கும். முற்றத்தில் நின்று சில்லு விளையாடி கொண்டிருந்திருக்கிறார்கள் அமுதாவும் அல்லியும், அப்போது திடீரென்று மயங்கி விழுந்துவிட்ட அல்லியைப் பார்த்து பயந்து போன அமுதா, கத்திக் கூப்பாடு போட்டு அனைவரையும் வர வைப்பதற்குள், அல்லியின் உடல் சில்லிட்டு கருத்துப் போக ஆரம்பித்திருக்கிறது.
உடனே மருத்துவமனைக்கு கொண்டு போக வேண்டுமென்று தனலட்சுமி அக்கா மாட்டு வண்டியைக் கட்ட சொல்லியிருக்கிறாள். அக்காவின் மாமியாரோ, “தனம்!! உச்சி வெயிலுல விளையாடியிருக்காங்க, எதோ பேய் அடிச்சிருக்கு” ன்னு சொல்லி, “டாக்டர் கிட்ட போக வேணாம், எனக்குத் தெரிஞ்ச மாந்திரீகம் தெரிஞ்சவர்கிட்ட போவோம்”னு அக்கா அவ்வளவு கெஞ்சியும் வண்டியில ஏத்திக் கூட்டிட்டு போயிருக்காங்க. திரும்பி வரும்போது அல்லி பிணமாதான் வந்தா.
ஆவுடையப்பன் மாமாவுக்கு முடக்குவாதம் வந்துபோதும் அக்கா எவ்வளவு கெஞ்சியும் மருத்துவமனைப் பக்கமே போக விடல. அந்த கோபத்துலேயிருந்து அக்கா மீண்டு வரும் முன்னர், இப்படி அல்லியவும் காவு கொடுத்துட்டு நிர்கதியா நின்னதும், உத்தமன் “எங்கூட ஊருக்கு வந்துருக்கா” என்று சொல்லவும். உத்தமனின் மனைவி மீனாளும் அதை ஆமோதிக்கவே, அக்காவை அழைத்து வந்துவிட்டார்கள்.
*****
மூன்றாண்டுகளுக்கு முன், காரணமேயின்றி மெலிந்து கொண்டே வந்த அக்கா, ஒரு நாள் திடீரென்று மயங்கி விழுந்தாள். உத்தமன் வீட்டில் இல்லாத நேரம். மீனாள் அவனுக்கு சேதி சொல்லி அனுப்பி விட்டு, ஆட்டோவுக்கு சொல்லி விட்டிருந்தாள். ஆட்டோ வருவதற்குள் ஏதுமாகிவிட கூடாதென்று பயந்து கொண்டிருந்தாள்.
தனலட்சுமி அக்கா வீட்டுக்கு வந்ததிலிருந்தே உத்தமன் குடிப்பதில்லை. அமுதாவும் அக்காவும் ஆதவனும் தன்னை நம்பி வாழ்வதைப் புரிந்து கொண்டு, அப்பா விட்டுப் போன வெங்காய மண்டியைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். வியாபாரம் செய்யத் தெரியாமல் துவங்கி, மெல்ல மெல்ல கற்று கொண்டு இப்போது ஓரளவு லாபம் பார்க்குமளவு கற்று வைத்திருந்தான். அப்பா காலத்திலேயே தொழில் கற்றிருந்தால் இந்நேரம் நிறைய சம்பாதித்திருக்கலாமென்று அவ்வப்போது மூளை அவனைத் திட்டும்.
கடலின் அலைகள் தொடர்ந்து அடித்துக் கொண்டேயிருந்தாலும் ஒவ்வொரு அலையும் ஒவ்வொரு மாதிரிதானே எழும் விழும். அதுபோல்தான் பிறப்பும். எத்தனை மனிதர்கள் பிறந்தாலும் அத்தனை பேரும் ஒரே மாதிரி வாழ முடியுமா என்றால்? கண்டிப்பாக முடியாது. அப்படி வாழ்வதால் இந்த நிலத்துக்குதான் என்ன பயன்?
அப்படிதான் உத்தமனும் பயன் நோக்கி வாழத் துவங்கி சில ஆண்டுகளாகி விட்டன. மார்கெட்டில் ஓரளவுக்கு செல்வாக்கும் இப்போது கிடைத்துவிட்டதால், குடிகாரன் என்ற பெயரும் கூட ஓரளவுக்கு நீங்கிதான் விட்டது.
அக்காவுக்கு லிவரில் கேன்ஸர் என்று மருத்துவர் சொன்னதுமே கலங்கிதான் போனான். பழைய உத்தமனாக இருந்திருந்தால் கூட அதிலிருந்து மீண்டிருக்க மாட்டான். ஆனால், இப்போதிருக்கும் உத்தமனுக்கு நம்பிக்கை சற்றே அதிகம். லிவர் கேன்ஸருக்கு மருந்துகளே இல்லை என்றுதான் சொன்னார்கள். ஆனால், அக்காவின் வலி தீர்க்க என்னென்னவோ செய்தான்.
கர்நாடகாக்கிட்ட ஏதோ ஒரு ஊரில் மரப்பட்டையில் கேன்ஸருக்கு மருந்து தருகிறார்கள் என்று கேள்விபட்டு, நடு ராத்திரியில் எழுந்து விடிகாலையே அங்கே சென்று வரிசையில் நின்று வாங்கி வந்து அக்காவுக்கு கொடுத்தான்.
எல்லா செக்அப்புகளுக்கும், உத்தமனே அக்காவை அழைத்து சென்றான். சென்னைக்கு சென்று அவன் நண்பர்களின் மூலமாக மிகச்சிறந்த மருத்துவர்களை எல்லாம் அணுகி வெளிநாட்டு மருத்துவம் அல்லது மருத்துவர்கள் யாராவது இதை குணப்படுத்த வாய்ப்புண்டா என்று கேட்டு ஏமாந்தும் திரும்பினான்.
செலவு அவன் கை மீறி போனது. ஆனாலும், அவன் சிறிதும் அயற்சியடைவில்லை. அக்காவுடன் இன்னும் சிறிது காலம் வரை இருக்க வேண்டுமென்று மெனக்கெட்டான்.
*****
எப்போதும் போல் ஒரு நாள் மாலை உத்தமன் குடித்துவிட்டு வீட்டுக்குள் வந்தான். அப்போது அக்கா அல்லிப் பிரசவத்துக்காக ஊருக்கு வந்திருந்தாள். அம்மா இல்லாத வீடு. அப்பாவும் கடைக்கு சென்றிருந்தார். அக்கா தனியாகத்தான் இருந்தாள்.
உத்தமன் வந்ததும் அவனுக்குத் தட்டில் சாப்பாட்டை வைத்துவிட்டு எதிரில் அமர்ந்து கொண்டாள். “ஏன்யா இப்படி குடிச்சு உடம்பைப் பாழாக்கிக்குற? உன்னை குடிக்க வேண்டாம்னு சொல்லல, அளவா குடி. அப்பாக்கும் கொஞ்சம் ஒத்தாச பண்ணு”
உத்தமனுக்கு கோபம் தலைக்கேறி சோற்றைப் பெரிய பெரிய உருண்டைகளாக உருட்டி உள்ளே தள்ளத் துவங்கினான். அவனுக்கு யார் உபதேசம் சொன்னாலுமே பிடிக்காது. அக்கா மட்டும்தான் இதை கேட்காமல் இருந்தாள் இப்போது அவளும் கேட்கிறாள் என்று கோபம் தலைக்கேறியது. அன்று கடைக்குப் போய் குடிக்க காசு கேட்டதற்கு வேறு அப்பா திட்டியத் திட்டில் வெந்து போயிருந்தான்.
தொட்டிலில் உறங்கி கொண்டிருந்த அல்லி லேசாக சிணுங்கினாள். கை நீட்டி எட்டும் தூரம் தான், ஒரு கையால் தூளியை ஆட்டியபடியே தனலட்சுமி அக்கா உத்தமனிடம் பேசி கொண்டிருந்தாள்.
“டேய் தம்பி , அப்பாவோட போய் சித்த மண்டியைப் பார்த்துக்கிட்டனா அதையே வச்சுப் பொண்ணு பார்த்து உனக்கும் கல்யாணம் பணணிடலாம்ல?” என்று சொன்னதும உத்தமனால் பொறுக்க முடியவில்லை.
“இப்ப என்னாக்கா நான் உதவாக்கரையா தண்ட சோறா இருக்கேன்னு நீயும் குத்தி காட்டுறீயா? ஆமா இந்த ஊரே சொல்லற மாதிரி நான் குடிகாரன்தான்? திகட்டத்திகட்ட குடிப்பேன்தான். ஆனா, யார் குடியையாவது கெடுத்திருக்கேனா? இல்ல யாரு வம்புதும்புக்காவது போய் உங்களை அசிங்கபடுத்தியிருக்கேனா? நான் உருப்படனும்னு நினைக்கிறியே, அந்தாளோட நான் கடையில போய் உட்கார்ந்தேன்னா அதுதான் எனக்கு உண்மையான நரகம். இப்போவே என்னை அந்த பேச்சு பேசுறாரு, கடைக்குப் போய் உட்கார்ந்தேன்னா என்றை முழு அடிமையா நடத்த ஆரம்பிச்சிடுவாரு. அதெல்லாம் போக முடியாது. வேணுமுன்னா பாஸ்போர்ட் எடுக்குறேன் என்னை துபாய்க்கு அனுப்பி விடுங்க. அங்க போய் எதாவது வேலை செஞ்சு பிழைச்சுக்கிறேன். உங்களுக்கும் என்னால எந்த அசிங்கமும் வராது” ஈன்று சொல்லவிட்டுத் தட்டைத் தள்ளி விட்டு எழுந்து வேகமாக சென்றுவிட்டான். தட்டைச் சுற்றிலும் சிதறியிருந்த பருக்கைகளை அள்ளி ஒரு கையால் தட்டில் போட்டபடியே கண்களைத் துடைத்து கொண்டாள் தனலட்சுமி அக்கா.
*****
அமுதாவுக்குக் கல்யாணம் செய்யும் வயது வந்த போது, அக்காவை அழைத்துக் கொண்டு எங்கெங்கோத் திரிந்திருக்கிறான். ஒவ்வொரு மாப்பிள்ளையையும் அக்காவுக்குத் தெரியாமல் ஆள் வைத்து விசாரித்து, “நம்ம வீட்டுத் தங்கத்தை வைரத்துக்கிட்டதான் புடிச்சு கொடுக்கனும்” னு சொல்லி மெனக்கெட்டுதான் சிங்கப்பூர் மாப்பிள்ளையைப் பார்த்து முடிவு பண்ணான்.
ராகுல் சிங்கப்பூரில் ரு ஆடிட்டிங் கம்பெனியில் அப்போது வேலைக்கு இருந்தார். அவரின் பின்புலம் எல்லாம் விசாரித்து நல்ல பையனாக இருக்கவேத் திருமணம் முடித்து அவர்களை அனுப்பி வைத்தார்கள்.
அமுதாவுக்கு ஒரு பையன் ஒரு பெண். எல்லோரும் சிங்கப்பூரிலிருந்து அக்காவின் சடலத்தை எடுக்கும் முன் வந்து விடுவதாக சொல்லியிருக்கிறார்கள், உத்தமனுக்கு அக்காவை “ஃப்ர்ஸர் பாக்ஸு” க்குள் பார்க்க பார்க்க மனம் வெந்து குமைந்தது.
வேறு வழியின்றி, அக்காவுக்கு கேன்சர் வந்ததிலிருந்து குடிக்காமல் இருந்தவன், அவன் கூட்டாளியிடம் சொல்லியனுப்பி வீட்டு மாடியில் அமர்ந்து குடிக்கத் துவங்கியிருந்தான்.
அவனுக்குப் பள்ளி தேர்வு முடிவுகள் வந்த நாட்களில் எல்லாம், அவன் எடுத்த குறைந்த மதிப்பெண்களைப் பார்த்து அப்பா அவனை வையும் போதெல்லாம், அடிக்கும் போதெல்லாம் அம்மாவைப் போல வந்து காப்பாற்றி, “எப்போவ்! இப்ப அவன் படிக்கலைன்னாதான் என்னா? உன் வெங்காய மண்டிய பாத்துக்கிட நீ என்னா படிச்சிட்டா வந்த?” என்று மறித்து நின்று அவனுக்காகப் பேசிய அக்கா இப்போது அமைதியாகப் படுத்துக் கிடக்கிறாள்.
பிறகொரு முறை, காய்ச்சல் வந்து நகர முடியாமல் கிடந்த நாளில் பத்து போட்டு, பல் விளக்கிவிட்டு, குண்டி கழுவி விட்ட அக்கா அவள். அவளை அம்மாவென்று கூட அழைத்தாலும் தகும்.
பல நாட்கள், குடித்துவிட்டு வந்து நிலையில்லாமல் கிடந்த எனக்கு அக்கா உணவை ஊட்டிவிட்டிருக்கிறாள். அவளுக்கு எதோ ஒரு மூளையில் என் மீது ஒரு நம்பிக்கை இருந்திருக்கிறது. குடித்து சீரழிந்து போகும் என் மீது அவள் ஏன் மற்றும் எதற்கு அவ்வளவு அன்பைப் பொழிந்தாள். எக்கேடோ கெட்டுப் போகட்டுமென்று மற்றவர்களைப் போல அவளும் என்னைத் திட்டித் தீர்த்திருந்திருக்கலாம். ஆனால், அவள் அதை செய்யவில்லை, ஒரு வேளை அதனால்தான் எனக்கும் அவளை இவ்வளவு பிடிக்குமோ?” என்று நினைத்தபடியயே ஒவ்வொரு கிளாஸாக விஸ்கி இறங்கி கொண்டிருந்தது.
மணி மாலை ஆறரை ஆகிவிட்டது இந்நேரமாவது சிங்கப்பூரிலிருந்து அமுதாவும் அவள் கணவரும் குழந்தைகளும் வந்துவிட்டால் போதும், நாளை காலை அக்காவின் உடலை தகனம் செய்து அவளின் வலிகளுக்கெல்லாம் முடிவு வைத்துவிடலாம்.
********
மாடிக்கு ஏறி வந்த ஆதவன் “அப்பா அமுதா அக்காலாம் வந்துட்டாங்க கீழ வரியா?” என்றான்.
“இதோ வரேன்யா…” என்றபடி எழுந்தவனின் காலில் டேபிள் இடறியது. நினைவுகளின் ஆழத்தில் பறந்து கொண்டே கால் தரையில் படாத அளவுக்கு குடித்துவிட்டதை உணர்ந்தான்.
நிலை குலைந்து விழப் போனவன், “ஆ….தவாஆஆ…” என்று அழைத்த சத்தம் கேட்டு மாடி படியில் இறங்கி கொண்டிருந்த ஆதவன், மீண்டும் படியேறி வந்து பார்த்த போது, உத்தமன் டேபிளுக்கு அருகில் வாந்தியெடுத்து அதன் மீதே விழுந்து கிடந்தான்.
“எப்பா!! இவ்வளவு நாளா ஒழுங்காதான இருந்த இன்னைக்குன்னு ஏம்பா இப்படி பண்ணித் தொலையுற?” என்று கத்தியபடியே அவனை எழுப்பி சேரில் அமர்த்தினான் ஆதவன்.
அம்மாவுக்கு ஃபோன் போட்டான், “அம்மா அப்பா நல்லா குடிச்சிட்டு மாடியில வாந்தியெடுத்து அதுக்கு மேலேயேப் படுத்துக் கிடக்காரு ம்மா, கொஞ்சம் மேல வாயேன்?” என்று அங்கே நடந்ததை அவளிடம் சொன்னான்.
“குடிக்காமதான இருந்தாரு, ஏன் திடீர்னு இன்னைக்குப் போய் குடிச்சாரு. அக்கா செத்த துக்கம் தாங்காம குடிச்சிட்டாரு போலிருக்கு இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு அவளைக் கட்டியணைத்தபடி அழுது கொண்டவர்களிடமிருந்து விடுவித்துக் கொண்டு மாடிக்கு விரைந்தாள் மீனாள்.
உத்தமனின் நிலைகுலைந்த முகத்தைப் பார்த்தாள். கண் செருகியபடி ஏதோ முனகிக் கொண்டிருந்தான். டேபிளை வேகமாக சுத்தம் செய்துவிட்டு. மாடியிலிருந்த பக்கெட்டில் தண்ணீர் பிடித்து வாந்தியில் ஊற்றி சுத்தம் செய்தாள். மாடி டாய்லெட்டில் இருந்த ஃபினாயிலை ஊற்றிவிட்டு, உத்தமனை ஆதவனின் உதவியுடன் மெதுவாக கீழே இறக்கிக் கொண்டிருந்தாள். உத்தமன் உளறலை நிறுத்தியபாடில்லை.
அவனின் அறைக்குக் கூட்டி சென்று படுக்க வைத்துவிடலாமென்றுதான் படிக்கட்டில் அழைத்து வந்தார்கள், திடீரென்று இருவரையும் உதறித் தள்ளிவிட்டு அக்காவின் உடல் இருந்த ஃபிரீசர் பாக்ஸ் அருகில் ஓடித் தடுமாறி விழுந்தவனின், உடல் எடைத் தள்ளிய வேகத்தில் ஃபிரீசர் பாக்ஸ் மூடி நகர்ந்து, அதன் மேல் அடுக்கப்பட்டிருந்த மாலைகள் எல்லாம் சுற்றியிருந்தவர்கள் மீது விழவே, எல்லாரும் கத்தத் துவங்கினார்கள்.
“ஏன்யா அக்கா செத்து போய் கிடக்கு இன்னைக்குமா இப்படி குடிச்சிட்டு வந்து அழிச்சாட்டியம் பண்ணுவீங்க? என்ன இழவு மனசுய்யா உங்களுக்கெல்லாம்! அமுதா நான் வெளியில போய் உட்கார்ந்திருக்கேன். உங்க மாமா பண்ணுற டிராமாவையெல்லாம் என்னால பார்க்க முடியாது” என்று சொல்லிவிட்டு வாசலுக்குப் போனார் ராகுல்.
சிங்கப்பூரிலிருந்து அவசர அவசரமாகக் கிளம்பி வந்த பதற்றம், அம்மா இறந்து போன துக்கம், ராகுல் பேசிய பேச்சில் வெகுண்டு வந்த கோபம், என அமுதா தன் தலையை முடிந்தாள், ஆதவன் அதற்குள் சுதாரித்து உத்தமனைத் தூக்கி நிற்க வைத்திருந்தான்.
மீனாளுக்கு இன்னும் என்ன செய்வதென்றேப் புரியாமல் குழம்பி அவமானத்தில் உறைந்து போயிருந்தாள். “அம்மா அப்பாவை ஒரு கைப்புடிம்மா ரூமுக்கு கூப்புட்டு போவலாம்” என்று ஆதவன் சொன்னதும் மீனாள் உத்தமனின் இன்னொரு கையை எடுத்துத் தன் தோளில் போட்டு ரூமுக்கு அழைத்து சென்றாள். ரூம் கதவு சாத்தப் போகும் போதுதான் கேட்டது…
“இந்த குடிகாரப்பாவிக்கிட்ட எங்கம்மா என்ன பாடு பட்டாளோ? மருந்துக்குதான் காசு கொடுத்தானா இல்ல மருத்துவந்தான் பாத்தானான்னுதான் தெரியல. எங்கம்மாவை காவு கொடுத்துட்டுத் துக்கத்துல இருக்குற அன்னைக்கும் இப்படி குடிச்சிட்டு வந்து நின்னு அசிங்கப்படுத்துறானே? இவன்லாம் என்னா ஜென்மமோ தெரியலையே…” என்று அமுதா உத்தமனைத் திட்டித் தீர்த்துக் கொண்டிருந்தாள்.
“என்னம்மா இப்படிலாம் பேசுறாங்க? அப்பா குடிக்குறதை விட்டு எத்தனை நாளாச்சு. இன்னைக்கு அத்தை செத்துருச்சுன்னு துக்கத்துலதான குடிச்சிருக்காரு? அவரைப் போயி இப்படி பேசுறாங்களேம்மா.” என்றான் ஆதவன்.
“விடுப்பா…” என்று சொல்லிவிட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டாள் மீனாள். “அவங்க பேசுறதையெல்லாம் பேசிட்டு நாளைக்கே சிங்கப்பூருக்குப் போயிருவாங்க. அப்புறம் அவங்க யாரோ நாம யாரோன்னுதான் இருக்கப் போறோம். நாம் என்ன செஞ்சோம், அப்பா என்ன பண்ணாருன்னு நமக்குதான் தெரியுமே. அவ அம்மா செத்த துக்கத்துல என்னமோ பேசிட்டுப் போறா போ…” என்று மீனாள் சொன்னது உத்தமன் காதில் விழுந்தது. அரைக்கண்ணைத் திறந்து மீனாளைப் பார்த்தான். அவன் கன்னத்தில் கண்ணீர் வழியத் துவங்கியிருந்தது. இருவரும் சேர்ந்து உத்தமனை மெத்தையில் படுக்க வைத்தார்கள்.
ஆதவன், “சரிம்மா நான் வெளில போயி வந்துருக்கவங்களுக்கு டிபன் சொல்லிட்டு வரேன்” என்று கூறிவிட்டு சென்றான்.
வாந்தி எடுத்திருந்தவனின் மீசை தாடியையெல்லாம் தன் புடவையால் துடைத்துவிட்டாள் மீனாள். மீனாளின் கைவிரல்களை இறுக்கிப் பிடித்துக் கொண்ட உத்தமனின் முனகல் அந்த அமைதியான அறையில் தெளிவாக கேட்டது,
“அவ என் அக்கா இல்லை என்னைப் பெக்காத அம்மா”
இதைத்தான் அவன் மாடியிலிருந்து இறங்கும்போதும் முனகியபடி வந்திருக்கிறான். இது தெரியாமல் தான் வெளியே அமுதா அவனை அப்படித் திட்டி பேசியிருக்கிறாள் என்று உணர்ந்ததும் மனது பொறுக்காமல், உத்தமனைத் தன் நெஞ்சோடு அணைத்து அவன் நெற்றியில் முத்தமிட்டு அழத் துவங்கினாள் உத்தமனுக்காக தனலட்சுமியாக மாறியிருந்த மீனாள்.
000
குமரகுரு
சென்னையில் வசிக்கிறார். இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. மணல் மீது வாழும் கடல் மற்ரும் ஒரு உபரியின் கவிதைகள்.