சுந்தரத்துக்கு பொங்கல் நாளதுவுமாக மிகவும் வாதையாக இருந்தது.  முன்னெல்லாம் இப்போது போல இருந்ததில்லை. அப்போது கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பே மனைவி அலமேலு பொங்கலுக்கான ஆயத்த வேலைகளை தொடங்கி விடுவாள். ஒவ்வொரு மூட்டையாக பாத்திரங்களை பரணிலிருந்து இறக்கி கழுவி காய வைப்பதும்,  துணி அடுக்குகளை குளத்தில் கொண்டு போய் துவைத்து அலசி, அடுக்குவதுமாக இருப்பாள். 

 இவருக்கு ஆட்களை வைத்து ஓட்டைப் பிரித்து மாற்றுவதும், வெள்ளை அடிப்பதுமென வேலைகள் இருக்கும்.  நடுவில் பசங்களுக்கு சின்னச் சின்ன வேலைகளைக் கொடுப்பதுண்டு. மாட்டுப் பொங்கலுக்கு மாட்டை குளிப்பாட்டி அலங்காரம் சொல்வதென்றால் பசங்களுக்கு உவகை அதிகமாகி விடும்.

அலமேலு திடீரென ஒரு நாள் கண்மூடுகையில் பசங்க ரெண்டு பேரும் படிச்சி முடிச்சிட்டு வெளியூர் வேலையில் இருந்தார்கள். தாயில்லாத பிள்ளைகளை அப்படியே விட்டாலாகதென, முதலில் பெரியவனுக்கும் சில மாதங்கள் இடைவெளியில் சின்னவனுக்கும் மணமுடித்து வைத்தார். 

அதன்பிறகும் ஒவ்வொரு பண்டிகைக்கும் மகன்கள், மருமகள்களென ஒன்றாக சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்திருந்தனர். அவர்களுக்கும் பிள்ளைகள் வந்து சற்று பெரியவர்களானதும் வந்துசெல்வது சிரமமாயிருப்பதால் வரமுடியவில்லையென தவிர்க்கத் தொடங்கினர்.

எப்போதாவது பள்ளி விடுமுறையில் ஓரிரு நாட்கள் வந்து போவதோடு சரி. மற்றபடி நேரம் கிடைக்கும் போது மட்டும் அழைத்து பேசுவார்கள்.  நாம் பேசினால் வேலையாக இருப்பார்கள்.

மாடுகளை தனியே பார்ப்பது சிரமமாயிருப்பதால் எல்லாவற்றையும் கொடுத்து விட்டார்.  இப்போதெல்லாம் வயல் விட்டால் வீடு, வீடு விட்டால் வயலென ஆகிப்போனது.

ஆனால் இந்த பண்டிகை காலங்களில் பசங்களையும் பேரப்பிள்ளைகளையும்  காணாமல் தவித்துதான் போகவேண்டியுள்ளது. அங்கு செல்லவும் அங்குள்ள சூழல் ஒத்து வரவில்லை. அதனால், பண்டிகை நாட்களில் இழுத்து போர்த்திக் கொண்டு படுத்தே கிடப்பார்.

ஆனால்,  பொங்கலுக்கு மட்டும் அப்படி முடிவதில்லை. முன்பு போல மார்கழியில் எங்கோ ஒரு கோவிலில் சிறிது நேரம் மட்டுமே ஒலிக்கும் பக்தி பாடல்களில்லை. மூலைக்கு மூலை பாட்டு, அதிலும் பாதி சினிமாப் பாடலென ஒரே இரைச்சல்.  பொங்கலன்றும் தொடர்வதால் மிகுந்த சங்கடமாயிருக்கும்.

இன்றும் அப்படித்தான் படுத்துக் கொண்டிருந்தார். அப்போது வெளியில் யாரோ அழைக்கும் குரல் கேட்டது.  வந்து பார்த்தபோதுதான் வழக்கமாக அந்த தெருவில் யாசகம் பெறும் சாமியாரொருவர் நின்று கொண்டிருந்தார்.

“என்னங்கய்யா, உங்க வீட்ல இன்னைக்கு பொங்கல் வாங்கி சாப்பிடலாம்னு வந்தா… நீங்க இப்போதான் எழுந்து வர்ரீங்க போல. மத்த நாள்ல கிடைக்கிற வீட்ல, கிடைக்கறத சாப்பிட்டு கெடந்தாலும். .. பொங்க , தீவாளிக்கு நம்ம வீட்ல மட்டுந்தான் வாங்குறது. நடுவுல சில காலமாய் கோவில் கோவிலா யாத்திரைக்கு போயிட்டு இந்த வருஷந்தான் இங்க வந்துருக்கேன். அதான் வழக்கம்போல வந்து பாத்தேன்” எனவும். 

சோர்ந்து போய் படுத்துக் கிடந்த மனதை புரிந்து கடவுளே அனுப்பி வைத்ததாக எண்ணிக் கொண்டு,” ஐயா, இந்த திண்ணைல கொஞ்சம் நேரம் ஓய்வெடுங்க. எல்லாத்தையும் எடுத்துட்டு உங்கள கூப்பிட்றேன். நாம சேந்து பொங்கல் வைப்போம். பொங்கல் வச்சதும் வேற யாரும் சாமியாருங்க இருந்தா கூப்பிட்டு வந்தா எல்லாரும் சேந்து சாப்பிடலாம்” என பரபரப்பாக அதற்கான பணிகளைத் தொடங்கினார். 

இன்னும் கடவுள் நம்மள கொடுக்கும்  நெலையிலதான் வச்சிருக்காரு. இனி  நாம ஒருத்தரப் பத்தி நெனைச்சி படுத்து கிடக்காம ஏதோ நம்மளால முடிஞ்சத செஞ்சி.  இது போல யாருடன் பகிர்ந்து சாப்பிடலாம். முடியாத குடும்பங்களுக்கும் பண்டிகைக்கு தேவையானத கொடுத்து உதவலாமென முடிவெடுத்து மீண்டும் பழையபடி உழைத்து… உதவி…உவகையுடன் வாழத் தொடங்கினார் சுந்தரம்.

++

அன்பிற்கினியவன்

இயற்பெயர் கோவிந்தசாமி கணேசன். சில படைப்புகள் வெளிவந்துள்ளன.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *