சென்னை ஃபோரம் மாலின் மூன்றாவது தளத்திலிருந்து இறங்கும் எஸ்கலேட்டரில் நின்றபடி சுற்றிலும் வேடிக்கை பார்த்து வந்த அவனுக்கு அங்கிருந்து குதித்துக் கண்மறைவாகிவிடவேண்டும் போல் இருந்தது. 

எட்டு வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட, கொஞ்சம் குண்டாக அதே சமயத்தில் மார்டனாகவும், பாப் கட்டிங், பளீச் கண்களென அழகாகவும் இருந்த அவளை, முன் நெற்றியில் முடி வளர்ந்திருந்த மச்சத்தைக் கொண்டு அவள்தான் என உறுதி செய்து கொண்டான்.

வேகமாகப் பின்னோடிய மனம், கடந்த காலத்தைத் தூக்கிக்கொண்டுவந்து அவன் முன் கொட்டி, அதிலிருந்து கிளறி ரணத்தை எடுத்து நீட்ட, ஒரு தூணுக்கு மறைவில் நின்றபடி நினைவுகளோடு கலந்தான்.

*******

முதலிரவு அறை…

அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் விளிம்போரம் அமர்ந்திருந்தான் நெடுமாறன். வாசலுக்கும் தரைவிரிப்புக்குமாக அலைந்து கொண்டிருந்தது அவன் பார்வை. அயற்சியுற்று எழுந்து உள்ளார நடந்தான். அங்கிருந்த ஆளுயரக் கண்ணாடியின் முன் நின்று சிரித்துப் பார்த்தான்.  முகக் கோணத்தையும்,  இதழ் விரிவையும் எவ்வளவுதான் சரி செய்தாலும்  , செயற்கைத்தனமே நிறைந்திருந்தது. அந்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, கதவில் பொருத்தப்பட்டிருந்த குட்டி லென்ஸ் வழியாக கூர்ந்து  வெளியேப் பார்த்தான். ஹாலில்  வாணி அமந்திருக்க,  நெடுமாறனின் அக்கா உட்பட இன்னும் நான்கைந்து பெண்கள்,  கேலி கிண்டலோடு  பேசிக் கொண்டிருந்தார்கள்.

அதிலிருந்த ஒருத்தி ,  மல்லிகைப் பூவை வாணியின் , பின்னந்தலையில் வைத்துவிட்டு ” போம்மா ….போயிட்டு வாம்மா..! ” என்றபடி அவளுக்கு எதிரில் வந்து நின்று அவர்களுக்கான  அறை இருக்கும் பக்கம் நோக்கி ஊஞ்சல் ஆட்டுவது போல் தன் கைகளை அசைத்தாள்.

அவர்களிடம் வாணி  ” ஏய்…என்னப்பா  ”  என்றபடி வெட்கம் மேலிட குனிந்த தலையோடு அங்கிருந்து எழ, நெடுமாறன்  வேகமாக ஓடிச் சென்று  மீண்டும் கட்டிலில் அதே இடத்தில் அமர்ந்து கொண்டான் .

மெதுவாக உள் நுழைந்த வாணிக்கு, மொத்தமே அந்த அறை அளவுக்கு மட்டுமே இருக்கும் அவளது வீடு மனதில் வந்து நின்றது. ஒப்பிடுதலைத் தடுக்க முடியவில்லை அவளால். ஆனால் நொடியில் அதிலிருந்து மீளும்படியாக, நெடுமாறன் “வாணி” என்று அழைக்க ,திரும்பினாள்.

நெடுமாறன் நல்ல உயரம், சிவப்பு நிறம். முன்கழுத்து மறையும் அளவுக்கு அடர்ந்த தாடி,  கூந்தல் வளர்த்து  அதை ஒன்றாகக் கூட்டி குதிரை வாலாக ரப்பர் பேண்டு சுற்றியிருந்தான் “கல்யாணத்துக்காச்சும் அந்த மண்டை மசுர ஒழுங்கா வெட்டப்படாதா ” என்று அவனது அம்மா வைதபோதும்  திருத்திக்கொள்ளவில்லை. ஆனால் இதனால்  தனித்தும் தெரியும் நெடுமாறனை  நிறையவே பிடித்திருந்தது வாணிக்கு.

அன்று காலை திருமணம் முடிந்தபிறகு, சிறு வெண்கலக் குடத்துக்குள் மோதிரத்தைப் போட்டு, யார் எடுக்கிறார்களென மணமகனுக்கும் மணமகளுக்கும் போட்டி வைக்க அந்நேரத்தில் முன்நெற்றிக்கு வந்து அவன் கண்களை மறைக்கும் மயிர்க்கற்றின் மீதே இருந்தது வாணியின் பார்வை.  அப்போது ஒருத்தி  “அண்ணி நீங்க தோக்கத்தான் போறீக , உங்க கவனம் வெளையாட்டுல இல்லையே ” கிண்டல் செய்ய , உண்மையில் நெடுமாறனுக்குத்தான் கிடைத்தது அந்த மோதிரம்.

இப்போது மூச்சுக்காற்று படும்படியான தூரத்தில் நெடுமாறனுக்கு மிக அருகில் நின்றிருப்பது வாணிக்கு பறப்பது போல் உணர்வு. கால் விரல்களை அழுத்தி ஊன்றிக் கொண்டாள். எந்நொடியிலும் அவன் தன் கைகளைப் பற்றக்கூடும் என்ற ஆவல் மிகுதியில், பொங்கிப் பொங்கி உச்சி தொட்டு உடல் முழுவதும் பரவும் புதிய உணர்வினை அனுபவித்துக் கொண்டிருந்தாள்.

“இங்க உட்காரு வாணி … ” நெடுமாறனின் குரல் அவளை ஏறிட்டுப் பார்க்கச் செய்தது.

வெறும் இருபது நாளுக்குள்ளாகவே நடந்து முடிந்தத் திருமணம்.  ஒன்றிரெண்டு முறை பேசியிருக்கிறார்களேத் தவிர, பொழுதுக் கணக்குயில்லாமல் அவர்களுக்குள் உரையாடல் நிகழ வாய்ப்பு அமையவில்லை.

தயங்கி நின்ற அவளிடம் “அட, என்ன? … எந்த பார்மாலிட்டிஸ் ம் வேண்டாம். வா …உட்காரு ” என்று நெடுமாறன் சொன்ன போது பொத்தினாற்போல் மென்மையாக அவனுக்கு அருகில் அமர்ந்தாள்.

அவன் உடம்பிலிருந்து எழுந்த  அப்ஸெஸன் பெர்ஃபியூமின் வாசனை இதுவரை அவளுக்கு அறிமுகமற்றது.

முக்கியமாக, வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதுக்கு வாணியின் வீட்டில் அனுமதியில்லை. பன்னிரெண்டாவது வகுப்பில்  தோழியொருத்தி ஜவ்வாது பவுடரை அவளுக்குத் தெரியாமல் வேண்டுமென்றே துப்பட்டாவில் தூவிவிட , அதோடு வீட்டிற்குச் சென்றவளை,  விளக்கமாற்றைத் திருப்பிப் பிடித்துக்கொண்டு அம்மா அடித்திருக்கிறாள். அப்பா அவர் பங்குக்கு ஒரு வாரம் முகம் கொடுத்துப் பேசவில்லை. 

அவர்களைப் பொறுத்தவரை  அது போலானவற்றின் மீதான ஈடுபாடு, அந்த வயதுக் கோளாறுகளைச் செய்யத் தூண்டும் என்ற எண்ணம்தான் அதற்கு காரணம். இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்ததால்தானோ யென்னவோ வாணிக்கு யாராவது மணக்க மணக்க அருகில் வந்தார்களெனில் மூக்குப்பிடிக்க வாசனையை இழுப்பாள்.

 மங்கிய மஞ்சள் நிற ஒளி உமிழும் மின்விளக்கில் வாணியின் கண்களுக்கு நிறையவே அழகாகத் தெரிந்தான்  நெடுமாறன்.  இடக்கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் கடிகாரத்தின் இள நீல நிற கண்ணாடி அடைப்புக்குள் சுற்றிக்கொண்டிருக்கும் முட்கள் பத்து மணியைத் தாண்டி ஓட, அதன் பளீர் தன்மையில் மெய்மறந்திருந்த வாணி” உனக்கென்னம்மா, வெளிநாட்டு மாப்பிள்ளை , பந்தாவா வாழுவ , வசதி கூடிப்போகும்,  தோலு மினுமினுப்பாகும் , கொஞ்ச நாள்ல, ஆளே மாறிப்போயிருவ ” நீட்டி முழக்கி சித்திக்காரி சொன்னது ஞாபகம் வர , உள்ளுக்குள் பெருமைபொங்க மகிழ்ந்துகொண்டாள்.

வசதியையும் அழகையையும் காரணங்காட்டி நிறைய மாப்பிள்ளை வீட்டார் தட்டிக்கழித்துவிடவே, கணவனும் இல்லாத நிலையில் மகளின் திருமணம் தள்ளிக்கொண்டே செல்கிறதுயென வருத்தப்பட்டுகொண்டிருந்த போது “வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு உன் பொண்ணைக் குடுப்பியா“ என்று தூரத்து உறவு முறை அத்தையொருத்தி வாணியின் அம்மாவிடம் கேட்க , லாட்டரிச்சீட்டில் கோடி விழுந்ததாக எண்ணி ஆனந்தப்பட்டாள் அம்மா. அதற்கடுத்து எதையும் யோசிக்கவில்லை மளமளவெனத் திருமணத்தேதி குறித்தார்கள். எந்தவிதக் குளறுபடிகளும் இல்லாமல் வாணியின் கழுத்தில்  தாலி ஏறியது.

 அமெரிக்காவுக்கு செல்வதற்கு முன் நெடுமாறன் எப்படியெல்லாம் இருந்தான் என்று அறிந்துகொள்ளும் ஆவலோடு  அறைச்சுவரில்  அவன் புகைப்படம் ஏதேனும் மாட்டப்பட்டிருக்கிறதாயெனச் சுற்றிப்பார்த்தாள் வாணி.  ஆனால் அங்கு ஆளுயர பிரேமுக்குள்,  கால் மேல் கால் போட்டபடி,  கூலிங்கிளாஸ், கோட் சகிதமாக, சிம்மாசனத்தைப் போலான ஒரு இருக்கையில் கதாநாயகனென அமர்ந்திருந்தான் நெடுமாறன். அவனுக்கு முன்னிருந்த கண்ணாடி டீப்பாயின் மீது பொம்மையாக முழித்துப் படுத்திருந்தது ஒரு குட்டி நாய். இன்னொரு இடத்தில்,  தவழும் நிலையில் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் ஜொள்ளொழுக சிரித்துக்கொண்டிருந்தான் நெடுமாறன்.

ஆழ்ந்திருந்த அவளது கவனத்தை கலைக்கும் விதமாக, நெடுமாறன் “வாணி…”  என்று எதையோ சொல்ல வாயெடுத்து அமைதியாகி அவளையேப் பார்க்க…

சினிமாவில் காட்டியது போல்,  கதைப் புத்தகங்களில் வாசித்தறிந்ததுபோல் என்ன நடக்குமோ?  எப்படி இருக்குமோ?  என்ற தவிப்போடு இருந்தாள் வாணி.

ஆனால் அவன் பட்டென்று  “வாணி,  நாளெல்லாம் நின்னுட்டே இருந்ததுனால ரொம்ப டயர்டா இருக்கு,  உனக்கும் அப்படித்தானே ” யெனக் கெட்டுத் திடுக்கிட வைத்தான்.

ஆமா அல்லது இல்லை எதைச் சொன்னால் இவன் சந்தோஷப்படுவான்? என்று வாணி யோசிப்பதற்குள்…

“தூங்குறேன் நான். குட் நைட்” என்றவன் அப்படியே தலையணை மீது சாய்ந்தான்.

வாணிக்குச் சப்பென்று ஆகிவிட்டது. பெரிய ஏமாற்றத்தோடு, முதுகு காட்டி படுத்திருக்கும் அவனையேப் பார்த்தபடி “நிஜத்துல எல்லோருக்குமே முதல் இரவுன்னாலே இப்படித்தான் போல ” எண்ணிச் சிரித்து சமாதானம் கொண்டாள்.

அடுத்தநாள் பகல்  குலசாமிக் கோயில்,  கறி விருந்துயெனப் பகட்டாகக் கழிந்துவிட, அன்று இரவும் அதே காரணம்,  அதே தூக்கம்.  

தானாக விருப்பத்தைச் சொன்னால், எதுவும் தவறாக நினைத்து விடுவானோயென்றத் தயக்கத்தில் எதுவும் பேசவில்லை. ஒருவேளை தன்னை அவருக்குப் பிடிக்கவில்லையோ  என்ற சந்தேகம் மெலிதாகத் துளிர்விட்டது வாணிக்கு.

 உயரத்தில் வேண்டுமானால் அவனுக்கு மிகச் சரி இணையாக இருப்பாள். மற்றபடி அவளைப் பொருத்தவரை அத்தனையிலும் மேன்மையானவன் நெடுமாறன் என்பதே வாணியின் எண்ணம்.

நியூயார்க்கில் ‘தமிழகன் ரெஸ்ட்ராரன்ட்’ என்ற பெயரில் மதுரை நண்பர்கள் நால்வர் நடத்தும் உணவகத்தில் நெடுமாறனும் ஒரு பங்காளன்.

திருமணத்திற்காக இருபது நாள் மட்டுமே அவனுக்கான விடுமுறை எடுத்திருந்தான். ஒவ்வொரு நாள் இரவு நெருங்கும்போதெல்லாம் ” இன்று என்ன காரணம் சொல்லப் போகிறானோ ” என்று நினைத்தபடிதான் படுக்கைக்குச் செல்வாள். எதிர்ப்பு சொல்ல முடியாத, எதையாவது சொல்லிச் சமாளித்துத் தூக்கத்தை கெட்டியாகப் பிடித்துக் கொள்வான்.

ஒருமுறை அந்த வாரத்திய வார இதழ் ஒன்றில் ” மனசே ரிலாக்ஸ்”   பக்கத்தில் லயித்திருக்கையில், அம்பு பாய்ச்சுவதற்கு முன்பு ஆயத்த நிலை கொள்வதுபோல், மெதுவாகச் செருமி தொண்டையைச் சரி செய்துகொண்டாள். முன்னும் பின்னும் பேச்சு வளர்க்காமல் நேரடியாக, வாணி  “என்னைப் பிடிச்சிருக்கா ” என்று அவனிடம்  கேட்க..

நெடுமாறன் நிமிர்ந்து “கழுத்துல தாலி கட்டின பிறகுமா இந்த சந்தேகம் ” அவளைப் பார்க்காமலே பதில் சொன்னான்.

“இல்லை, இன்னும் சில  நாட்கள்தான்  இருக்கு நீங்க ஊருக்கு போக  , என்ட்ட சரியாக்கூட பெசமாடேங்கறீங்க, அதான் கேட்டேன் “

“அப்படியொன்னும் இல்லை, நார்மலாத்தானே இருக்கேன் “

“யோவ் , புதுப் புருசன் பொண்ணாட்டிக்கு இது நார்மலா “ எதிர்த்துக்கேட்க வேண்டும்போல் இருந்தது வாணிக்கு. ஆனால் அவள் என்ன பேசுவது என்று தெரியாமல் “அடுத்த முறை என்னையும் உங்களோட கூட்டிட்டுப் போவீங்கள்ல ” 

என்னவோ அதிர்ச்சியான விசயம் போல் ” வாட்…அங்க நீயுமா?  , கல்யாணத்துக்கு முன்ன  தெளிவா சொல்லியிருந்தேனே. எல்லாமே உங்க வீட்ல பகிர்ந்துக்கிட்டதா எங்க அம்மா சொன்னாங்களே …” முகம் வியர்க்கப் படபடவெனப் பொரிந்து பேசினான் நெடுமாறன்.

ஆனாலும் நிதானமாக வாணி ” ஆமா சொன்னாங்க, படிப்பும் வசதியும் நீங்க எதிர்பார்க்கலைன்னு, உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு ” ,என்றாள் பெருமையோடு அவனைப் பார்த்தபடி…

 “ம்ம்…அங்கெல்லாம் நீயெதுக்கு? அம்மாவுக்கு இங்க யாரு இருக்கா?  லீவ் கிடைக்கும்போது எப்பவாவது நான் வருவேன், உன்னை அங்க கூட்டிட்டு போற ஐடியா  இல்லை வாணி, நான் மட்டும்தான் நியூயார்க் போவேன் ” ஆசை நிராகரிக்கப்பட்டதும், கூர் கல்லால் உச்சி மண்டையில் யாரோ அடித்துத்  துளையிடுவது போல இருந்தது வாணிக்கு. இருந்தாலும் வலியக்கட்டி இழுத்துவந்த பொறுமையால் எதுவும் பேசாமல், அவன் ஏதாவது காரணம் சொல்வதற்கு முன்பாக,  தூங்குவது போல முகம் திருப்பிப் படுத்துக் கொண்டாள்.

*****

மறுநாள் காலை எழுந்ததும், தனது தாய்மாமனைப் பார்த்துவிட்டு வருவதாக அம்மாவிடம் மட்டும் சொல்லிச் சென்றான் நெடுமாறன்

அவனை அங்கு அத்தைதான் வரவேற்றாள். “என்ன மாறா, இவ்வளவு சீக்கிரம் வந்திருக்க,  உங்களை விருந்துக்கு அழைக்க நானும் மாமாவும் இன்னைக்கி அங்க வர்ரதா இருந்தோம்,  அதுக்குள்ள நீயே…”

“ஆமா அத்தை , தோணுச்சி வந்துட்டேன் “

“சரி சரி , மாமா உள்ள இருக்காக ,பேசிட்டு இரு காபி கொண்டாரேன் ” என்று சமையலறை நோக்கிச் சென்றாள் அத்தை..

 வெளியே எட்டிப்பார்த்த மாமா  “அடடே , வா மாப்ள ” நிதானமாக வந்து நாற்காலியில் அமரப் போனார்,  அதற்குள்ளாக நெடுமாறன் ” மாமா , சட்டைய மாட்டுங்க , ஒரு சின்ன வேலையிருக்கு ” என்று அவசரப்படுத்தினான்.

“வீட்ல எதுவும் பிரச்சினையோ , பய மூஞ்சியே சரியில்லையே ” நினைத்தவாறு நேற்றுக் கழட்டிப்போட்ட சட்டை ஷோபாவில் கிடக்க, அதையே மாட்டிக்கொண்டு அவனோடு  கிளம்பினார்.

தென்றல் நகரிலிருந்து முருகன் தியேட்டருக்கு முன்பாக,  அவ்வளவாக கூட்டம் வராத டீக்கடையில் பைக்கை நிறுத்திய நெடுமாறன் ” மாமா,  நான் உங்ககிட்ட சொன்ன விசயத்தை நீங்க வாணி வீட்ல சொல்லலையோ ” பதைபதைக்கக் கேட்டான் .

“அதெப்படிடா முடியும், என்னதான் நியாய வாதியா இருந்தாலும் சில விசயங்கள்ல நேர்மைய பொழி போட்டாத்தான் காரியம் ஆகும். ஒளிவு மறைவு இல்லாம உண்மையைச் சொல்லிக் கல்யாணம் முடிச்சி வைக்கனும்னு  நினைச்சா, எங்க அக்கா அவன் மகனை மாலையும் கழுத்துமா என்னைக்குப் பார்க்க? சேர்ந்து வாழுங்க எல்லாம் சரியாப்போகும் மாறா… ” என்றார்

” மாமா உங்களுக்கு புரியலையா, இது பாவம்,  எவ்வளவு பெரிய தப்பு பண்ணிட்டோம் நாம , இதுக்குத்தான் நான் கல்யாணமே வேணாம்னு சொன்னேன்,  அம்மா அழுதுட்டே கிடக்கான்னு சம்மதிச்சது தப்பாப் போச்சு , நான் அங்கேயே இருந்து தொலைச்சிருக்கனும் ” சிடுசிடுத்து எரிச்சல்பட்டு ” பெத்தவங்ககிட்டச் சொல்லத் தைரியமில்லாததுனாலதானே உங்களை நம்புனேன். கடைசியில நீங்களும்…ஏன் மாமா.”  வருத்தத்தோடு அவரை ஏறிட்டுப் பார்த்து ” இன்னும் பத்துநாள் லீவ எப்படிக் கடத்தப் போறேனோத் தெரியலை ” என்றான் நெடுமாறன்.

“எல்லாம் சரியா போயிரும் மாப்ள “

“மாமா…அதெல்லாம் ஆகாது ” 

” ….”  எதுவும் பேசவில்லை அவனையே பார்த்தார்.

“என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ எனக்குத் தெரியாது,  நீங்களே வந்து வாணிகிட்ட சொல்லுங்க,  இல்லைன்னா அவங்க வீட்ல தெரியப்படுத்துங்க “

“அது எப்படிய்யா மாப்ள ….இனி சொன்னா ரொம்ப அசிங்கமாகிப் போயிரும்ல ” தயங்கினார்.

“ஓகோ , அப்ப சரி ,  நீங்க சொல்ல வேணாம்,  இங்க இருந்து பஸ் பிடிச்சி எப்படியோ வீட்டுக்குப் போய்க்கோங்க,  நான் கிளம்புறேன் ” அவரின் பதிலுக்கு எதிர்பார்க்காமல் கோபமாக பைக்கினை ஸ்டார்ட் செய்து விரைந்தான் நெடுமாறன் .

****

அடுத்த நாள் நெடுமாறனின் அம்மா யதார்த்தமாக “இந்தாதானே இருக்கு கொடைக்கானல்,  அவளைக் கூட்டிட்டுப் போகலாம்ல ” மகனிடம் சொல்ல…

நெடுமாறனுக்கும் இது நல்ல யோசனையாகப் பட்டது,  இதைச் சாக்காக வைத்து வாணியிடம் உண்மையைச் சொல்லிவிடலாமென்று முடிவு செய்தான். அம்மாவின் மூலமாகத்தான் கொடைக்கானல் போகும் விசயத்தை  வாணியிடம் தெரியப்படுத்தினான்.

            முகத்தில் அடித்தாற்போல் பேசியது தவறு என்று நினைத்திருக்கலாம். அதனால் தான் மறைமுகமாகச் சமாதானத்துக்கு வழி தேடுகிறார் போல எண்ணிக்கொண்டு, மனதுக்குள்   “வந்தியா வழிக்கு ”  வெளியே சொல்லாமல் உள்ளுக்குள் சொற்களை உருட்டி மகிழ்ந்து விளையாடிக்கொண்டே கிளம்பத் தயாரானாள்

காருக்குள் ஏறி அமர்ந்ததும், வாணியைப் பார்த்து புன்னைகைத்தான் நெடுமாறன். அது என்னவோ அவளுக்கு “இப்போ சந்தோசமா” என்று கேட்பதுபோல் இருந்தது. சிறிது தூரம் சென்றதும் வழியில் ஓரிடத்தில் இறங்கி இளநீர் குடித்தார்கள் இருவரும்.  சாதாரணமாகப் பேசினான். டோல்கேட் வரிசையில் நிற்கையில் கைக்குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு , பிஞ்சு வெள்ளரிக் கீற்றுகளை நீட்டிய பெண்ணைப் பாவமாகப் பார்த்தபடி இருந்தாள் வாணி. அப்போது நெடுமாறன்  “இந்தா ஒன்னு வாங்கிட்டு,  அவளை அனுப்பிவிடு ” பர்ஸிலிருந்து பணத்தைக் கொடுத்ததும் , அவள் வேறொரு கார் கண்ணாடியைத் தட்டப் போய்விட்டாள். இன்னும் அவளிலிருந்து அகலாதிருக்கும் வாணியின் கண்களை மீட்டெடுக்க  “வாணி,  நீ லவ் பண்ணியிருக்கியா? ” நமட்டுச் சிரிப்போடுக்  கேட்டான் நெடுமாறன்.

வாணி “அட….” என்பதுபோல அவன் முகத்தை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்து ” அப்படியொரு இனிய சம்பவம் என் வாழ்க்கையில நடக்கவே கூடாதுங்குறதுல எங்க அப்பா தெளிவா இருந்தாரு. அதுக்காகவே கேர்ள்ஸ் ஸ்கூல்தான். அதை முடிச்சிட்டு பி.ஏ ஹிஸ்டரி போனா, அங்கேயும் அப்படித்தான் ” என்றதும்…

“ஓகோ , ஆனா சென்னையில இருக்குற பொண்ணுங்கன்னாலே ஃபிரீடெம் நிறைய…ல்ல ” 

“அப்படியெல்லாம் இல்ல, பொண்ணுங்களைப் பொறுத்தவரை எல்லா  ஊர்லயும் ஒரே மாதிரிதான். என்னவொன்னு கிராமங்கள்ல குளம்,  கோயில் ன்னு மட்டும் இருக்குறவங்களுக்கு,  நகரம்னா வெளில போயிட்டு வர நிறைய இடங்க இருக்கு அவ்வளவுதான்.  அதுவும் போக  நான் அங்க பொறந்தவ இல்லையே, திருநவேலி சைடு கிராமத்துக் காரிதானே. எங்க அம்மா எத்தன வருசம் சென்னையில இருந்தாலும், சில விசயங்கள்ல மாறாமத்தான் இருப்பாங்க இப்பவும். வெளில போயிட்டு வர்ரேன்னு சொன்னா போதும்,  எங்க போற,  யார் கூடப் போற,  எப்ப வருவன்னு ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்டு,  கடைசியில அதெல்லாம் ஒன்னும் போகக்கூடாதுன்னு, ஒரே வார்த்தையில சொல்லிருவாங்க, இது எதுக்குடா வம்புன்னு வீட்டுக்குள்ளேயே இருக்கத்தான் தோணும் “

“ஓகோ  ” 

“ஆனா எப்போவாவது அழுதுசெஞ்சி , ஃப்ரண்ட்ஸ்ங்க கூட போக வாய்ப்பு கிடைச்சா,   உங்களை மாதிரி ஸ்டைலா, அழகா இருக்குற ஆண்களை சைட் அடிச்சது, உண்மையில்லைன்னு நான் சொல்ல மாட்டேன் ” சிரித்தபடி அவள் சொல்ல,  ஸ்டீயரிங்கில் அரைவட்டம் கால்வட்டமென சுற்றிக்கொண்டிருந்த கையை எடுத்து, முகவாயைத் தடவியபடி, புன்னைகையோடு நெடுமாறன் அவளைப் பார்த்த போது, தலையைக் குனிந்து வெட்கப்பட்டாள் வாணி.

தொடர்ந்து , பிடித்தத் திரைப்படங்கள் குறித்தும், பிடித்த உணவு, இடம், வாசித்தப் புத்தகங்கள் என சுவாரசியமாக உரையாடல் தொடர எல்லாம் மறந்து சகஜ மனநிலைக்கு வந்திருந்தாள் வாணி.

அவர்கள் சென்று கொண்டிருந்த ஜீப் மெரிடியன் காரில், எண்பதுகளில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் ஒலித்துக் கொண்டிக்க. கண்ணாடிக் கதவினை மெலிதாகத் திறந்து வைத்திருந்த வாணியின் உச்சந்தலையில் குளிர்ந்த காற்று வருடிக்கொண்டே வந்தது. அவள் இரண்டு கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் கொடைக்கானல் மலை மடிந்து மடிந்து எழும்பியிருப்பது அளவில் பெரிய யானைகள், பெருங்காட்டில் நின்றிருப்பதுபோலத் தெரிய, பிரமித்து பார்த்தபடி வந்தாள் வாணி.

****************

நெடுமாறன் ” இதுக்கு முன்ன கொடைக்கானல் வந்ததுயில்லையா நீ ” என்று கேட்க…

வாணி “ம்ஹும்…இதான் ஃபர்ஸ்ட் டைம்”  அவளுக்கு முன் விரிந்திருந்த ரம்யமான அழகிலிருந்து பார்வையை நகற்றாமல் பதில் சொன்னாள்.

நெடுமாறன் “வாணி…உன்ட்ட ஒன்னு சொல்லனும் ” கேட்டபொழுது,  ஒரு மரத்தின் கீழ் கார் நிறுத்தப்பட்டிருந்தது..

“இல்லை, பரவால்லை பேசுவோம் “

“ஓ…சரி ” நெடுமாறன் பக்கம் திரும்பினாள் வாணி.

            அவளிலிருந்து பார்வையை விலக்கி, தன் ஒத்தாசைக்கு மடிப்பு மலைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து,  அதன் உச்சியின் மீது  தன் பார்வையை பதித்துக்கொண்ட நெடுமாறன் ” வாணி… நான் இம்போடெண்ட்… என்னால் இயலாது ”  கை நடுங்கி கண்ணாடி டம்ளர் கீழே விழுகையில் உண்டாகும் படபடப்பு அவன் வார்தைகளில் தெரிந்தது.

“அப்படின்னா ”  உண்மையில் அந்த ஆங்கிலச் சொல்லுக்கான அர்த்தம் புரியாமல் விழித்தாள். இன்னும் சொல்லப் போனால், அவன் என்ன வார்த்தை சொல்கிறானென்றுகூட அவளால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. அத்தனை வேகமாகச் சொல்லி முடித்தான். அப்படி அவன் பதைபதைக்கும்படியாக  என்னதான் அது என்ற தவிப்பும் குழப்பமும் அதிகரித்தது வாணிக்கு.

” நஜமாவே எனக்கு பொருள் வெளங்கலை,  தயவு செய்து என்னன்னு சொல்லுங்களேன்? “

” ஏய்…கேள்வி கேட்காதே…”  இயலாமையை மறைக்க  முறுக்கேறியது அவன்  கோபம். ஆனால் அடுத்த நொடியே “சாரி வாணி ,எனக்கு உடம்புக்கு என்னவோ பண்ணுது வீட்டுக்குப் போகலாமா” அவன் கேட்க…

“அய்யோ என்னாச்சு ஆஸ்பிட்டல் போலாம்“ பதறினள் அவள்.

“இல்லை, வீட்டுக்குத்தான்…  கார்ல ஏறு … ”  என்ற முறைப்போடு சொன்ன அவன் குரலுக்குக் கட்டுப்பட்டவளாய்,  இயந்திரம் போல நடந்து, இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.

            சக்கரம் உருள உருள, கார் தன்  திறந்த வாய் வழி  தார்ச்சாலையை விழுங்கிக் கொண்டே வந்தது. ஆனாலும்  வளர்ந்து கொண்டே சென்றது நீளம். ஓரம் சிதறாமல் நெடுமாறனின் பார்வை சாலையின்  மீது மட்டும் இருந்தது.

இசை ஒலிக்கப்படாததால் அவர்களோடு மௌனம் காத்தார் இளையராஜாவும். காரின் வேகத்துக்கு ஈடாக பின்னோக்கி ஓடும் மரங்களை முழுமையாகப் பார்க்க முடியாமல் தோற்றுக்கொண்டே இருந்தாள் வாணி. உள்ளுக்குள் குழம்பிக் கொண்டிருக்கும் மனதை பிரதிபலிக்கும் விதமாக அவள் கைவிரல்களை கோர்த்தும் விடுவித்தும், ஒரு உள்ளங்கைக்குள் மற்றொன்றை வைத்து,  விரல்களை மொத்தமாக மடக்கிப் பின் நீட்டி,  தனித்தனியாக வளைத்து சொடக்குச் சத்தம் எழும்படிச் செய்து,  எதையாவது கேட்க அல்லது பேசத் துடிக்கும் இதழ்களை மட்டியிட்டு மழுங்கடித்து, என்னன்னவோ பாவனைகள்  செய்தவண்ணம் இருந்தாள். 

அதி வேகத்தாலும்,  இடையில் எங்கும் நிற்காததாலும், வீட்டிலிருந்து போகும் போது எடுத்துக் கொண்ட நேரத்திற்கும், திரும்பி வீடு சேர்வதற்கு ஆன நேரம் நாற்பத்தைந்து நிமிடம் வித்தியாசப்பட்டது.

காரிலிருந்து இறங்கியதும்  நெடுமாறன் அவளைக் கண்டு கொள்ளாமல் வீட்டுக்குள் சென்றான்.  

வெளியிலிருந்தவாறே தன் தோழி காயத்திரிக்கு போன் செய்தாள் வாணி. காயத்திரி இவளுக்குப் பள்ளித் தோழி. இப்போதுவரை தொடரும் நட்பு.  சென்னையில் பெயர்பெற்ற தனியார் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக இருக்கிறாள். 

சம்பிரதாயமாக நலம் விசாரித்துவிட்டு , குரலைச் சுருக்கி அழாத குறையாக அவளிடம் ”  கயத்திரி…இம்பண்டோ, இண்னோவோன்ட்டு .இம்பிட் அப்படி என்னவோ சொன்னாரு டி ,எனக்கு அர்த்தம் புரியலை , ஆனா அதுக்கடுத்து அவர் முகமே மாறிப்போச்சு , ஒருவேளை நான்   சைட் அடிச்சிருக்கேன்னு சொன்னதை தப்பா எடுத்துக்கிட்டாரா , பாதியில டிரிப்பக் கேன்சல் பண்ணிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாரு ,அது என்னவா இருக்கும் “

“ஏய் , பேசுனது நீங்க, எங்கேயோ இருக்குற என்ட்ட விளக்கம் கேட்குற , இப்படி  அரைகுறையாச் சொன்னா எனக்கென்னடி தெரியும்  , அவர்ட்டயே திரும்பவும் கேட்குறதுதானே ” கத்தினாள் காயத்திரி..

“கேள்வி கேட்டா பிடிக்காதுடி அவருக்கு “

“ஓ, அப்போ…முத்தம் கேளு” எனச் சொல்லி காயத்ரி சிரிக்க…

“ஏய், கடுப்பேத்தாதடி, அதெல்லாம் எப்டி இருக்குமுன்னே தெரியாது “

“ம்கும்… நடிக்காதடி எரும, அப்போ ,மூடிட்டு போன வை , நான் காலேஜ்லயிருந்து வீட்டுக்கு போயிட்டு  இருக்கேன் ” அவசரப்படுத்தினாள் காயத்ரி

“ஒழுங்கா எனக்கு பதில் சொல்லிட்டுப் போ “

“அய்யோ, ஏன்டி உயிரை வாங்குற,  சரி மறுபடியும் சொல்லு …”

“அதான் எனக்குத் தெரியலையே , நான் இம்பண்டு, என்னால இயலாது ன்னு சொன்ன மாதிரி இருந்துச்சி   “

“எங்க இன்னொருவாட்டி சொல்லு “

“நான் இம்பண்டு, என்னால இயலாது ” மறுமுனையில் காயத்ரியிடமிருந்து பதில் வரவில்லை, அவள் யோசிக்கிறாள் என்று மறுமுனையில் காத்திருந்தாள் வாணி.

” ஒருவேளை இதுவா இருக்குமோ ” சட்டென்று யூகித்தவளாய் வாணியிடம் ” புது ஜோடி நீங்க , மற்ற விசயங்கள்ல  சந்தோஷமா இருக்கீங்களா? ”  கேட்டாள் காயத்திரி

” ம்ஹூம் ” ஒற்றை வார்த்தையில் பதிலை முடித்துக் கொண்டாள் வாணி…

“அப்போ நீ சொன்னது நிசந்தானா? ஸாரி டி வாணி”   ஒரே சொல்லால் வாணிக்கு அத்தனையையும் விளங்கும் படிப் புரிய வைத்து விட்டாள் காயத்திரி.

தன் மொத்த வாழ்வின் மீதும் பெருக்கல் குறியிட்டு உதவாது என்று சீல் வைக்கப்பட்டது போல மனதால் நொறுங்கிப் போனாள். என்ன செய்வதென்று தெரியாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கதவுவொட்டி நழுவியபடி தரையில் அமர்ந்து  அழுதாள். அவனுக்கு முன்னமே எல்லாம் தெரிந்திருக்கிறது . தான் ஏமாற்றப்பட்டது பட்டவர்த்தனமாகப் புரிய,  மறுபடி அந்த வீட்டிற்குள்கூட நுழையாமல் வாசலில் இருந்தவாறே சென்னைக்குத் திரும்பக் கிளம்பிவிட்டாள் வாணி.

******

அம்மா வீட்டில்…

பாயில் குப்புறக் கவிழ்ந்து படுத்து உடல் குலுங்க அழுதுகொண்டிருந்த வாணிக்கு அருகில், சித்த பிரம்மை பிடித்ததுபோல் அமர்ந்திருந்தாள் அவளது அம்மா.

மூங்கில் கூடை நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு, கைவாக்கில் சிலும்பலாய்த் தெரியும் நரம்புகளைப் பிய்த்துப் போட்டுக் கொண்டே , தங்கையை வெறித்துப் பார்த்தபடி இருந்தான்  அண்ணன் ஞாலன்.

இதில் எதிலும் சிக்கிக்கொள்ளாமல் புகைப்படத்தில் இருந்தபடி சிரித்துக்கொண்டிருந்தார் அவளது அப்பா.

திடீரென என்ன நினைத்தாளோ வாணியின் அம்மா ” இன்ன காரணத்துக்காக எம் மக புருஷனோட வாழலைன்னு  வெளில சொன்னா கேவலம் நமக்குத்தான்டி ” ஆத்திரமும் கோபமுமாக மகளின் முதுகில் நான்கு அடி கொடுத்து ஆத்திரமாகக் கத்திப் பேசினாள்.

தடுக்க எழுந்த மகனை “டேய்,  ஞாலா, நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ எனக்குத் தெரியாது,  தாலி கட்டிக்கிட்டவன்தான் கடைசிவரைச் சொந்தம்,  அங்க போய் விட்டுட்டு வந்துரு இவள, அவளாச்சு அவ புருஸனாச்சு, லட்ச்சக்கணக்குல கடன் வாங்கி நான் கல்யாணத்த முடிச்சி வைப்பேனாம், இவ நொட்டை காரணத்தைத் தூக்கிக் கொண்டுவந்து நீட்டி, நான் வாழமாட்டேன்னு சொல்வாளாம், போ…கொண்டு போய் விடு  ” ஒரேவாக்கில் பொறுப்பை ஞாலனின் பக்கம் கோர்த்து விட்டாள்.

“என்ன பேசுற மா நீ ,நான் என்னன்னு அங்க போய் நிப்பேன்,  நீதான வெளிநாட்டு மாப்ள, வெளிநாட்டு மாப்ளன்னு , வானத்துக்கும் பூமிக்குமா குதிச்சி மகுந்து போன” கொதித்தான்.

“ஆமா, இப்போ என்ன குறைச்சல் பங்களா மாதிரி வீடு, நாத்தானார், மச்சினன்னு எந்தத் தொல்லையும் இல்லை, ஒரே ஒரு புள்ளைதான், தவம் இருந்தாலும் இப்படியொரு வாழ்க்கை யாருக்காவது கிடைக்குமா ?   வெளில இன்ன காரணம்னு சொல்லவே நா கூசுது,  ஒரு பொம்பளைப் புள்ள இதைப் பத்திப் பேசுனா, எவ்வளவு மட்டமா எடை போடுவாங்க மனுஷங்க,  வேண்டாம்டா வெளில தெரியாம நாம முடிச்சிக்கிடுவோம்,  நீ கூட்டிட்டு போ இவள ” அவிழ்ந்திருந்த கொண்டையை முடிச்சுப் போட,அது மறுபடியும் நிற்காமல் கழண்டு விழுந்தது.

    திடீரென மனமிறங்கி மகளிடம்  “வாணிக் கண்ணு,  எழுந்திரு மா, சாராயம் குடிக்கான்,  கண்ணுல காண விடாம அடிக்கான்,  சோறு போடமாட்டாங்குறான் இப்படின்னு ஏதாவது,  அவன் மேல குறை இருந்திருந்தா, நானே அவன்கூட வாழ வேண்டாம்னு நம்ம வீட்டுக்கு வா ன்னு கூட்டிட்டு வந்துருப்பேன். கேக்குற ஆளுகளுக்கு பதில் சொல்லவும் விசயம் நம்மகிட்ட இருக்கும்.  ஆனா,  உடம்பு சுகம் கெடைக்காம எம் மக புருஷனை விட்டுட்டு வந்துட்டான்னு எப்படிச் சொல்லுவேன் நீயே சொல்லு ” கெஞ்சிக்கொண்டிருந்த அம்மாவின் கையை படக்கென்று உதறித் தள்ளிவிட்டு எழுந்தாள் வாணி.  கண்ணீர் நனைத்த ஈரமுடிகள் ஒழுங்கற்ற கோடுகளாக முகத்தில் நிறைந்திருக்க, கைகளால் ஒதுக்கிவிடக்கூட மனமின்றி மூச்சு இறைக்க நின்றபடி….

“அப்போ ஊருக்காகத்தான் எனக்கு கல்யாணம் முடிச்சி வச்சியா ம்மா?  அதே ஊருக்காக நான் அவனோட சேர்ந்து வாழணும்னு கட்டாயப்படுத்துற இல்ல” அம்மாவின் கைகளை எடுத்து தன் முகத்தில் மாறி மாறி அடித்தாள். அம்மாவும் அவளோடு அழ, ஞாலன் இருவரையும் தேற்றமுடியாமல் திணறினான்.

தொடர்ந்து வாணி ” தன்னைப் பத்தி நல்லாத் தெரிஞ்சும்,   அவனோட அம்மா நச்சரிப்பு தாங்கமாட்டாம,  சும்மா பேருக்குத்தான் கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கான். ஆனா அங்க ஒரு பொண்ணோட வாழ்க்கை சீரழியுதுங்குற பிரச்சினை இல்லை அவனுக்கு,  உனக்கு என்னடான்னா  ஊர்ப் பெருமை வாங்கி சேர்க்க, வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு எம்மகளக் கட்டிக்குடுத்துருக்கேன்னு பெருமை பீத்தனும்னு நினைக்க …இல்ல…ஆக என்னைப்பத்தி யாரும் யோசிக்கலை.அப்படித்தானே ” மூச்சுவிடாமல் பேசினாள் .

வாயடைத்துப் போய் அவளையேப் பார்த்தாள்  வாணியின் அம்மா.

“உனக்கென்ன நீ கேட்காமலே உனக்கு அப்பா கிடைச்சாரு,  நாங்க பெறந்தோம், வசதி இல்லைன்னாலும், உன் மேல உசுராக் கிடந்தாரு எங்க அப்பா, இப்போ எங்களுக்கு  கல்யாணத்தை முடிச்சித் தள்ளி விட்டுட்டா உன் வாழ்க்கை பரிபூரணமா நிம்மதியாப் போகும். ல்ல..,  அதுதானே உனக்கு வேணும் ” ஆத்திரமாகப் பேசினாள் வாணி.

“நான் அதைச் சொல்லலை… எதிர்காலத்தை எப்படிச் சமாளிக்கப்போறோம்னு யோசிக்க வேணாமா பா…நாமா தனியா எத்தன நாளைக்கு…”என்ற அம்மாவை முழுதாக பேசி முடிக்கவிடவில்லை வாணி…

“என்ன பெரிய தனியா, கழுத்துல தாலி கட்டிட்டாங்குற ஒரே காரணத்துக்காக, அவன் வீட்டுல தியாகின்னு பதவிப் பிரமாணத்தோட வாழணுமாயென்ன? அப்படின்னா, நான் என்ன தப்புப் பண்ணினேன்? கிட்டத்தட்ட சோத்துக்கு வழி இல்லாம இன்னொருத்தங்கிட்ட கையேந்துர மாதிரிதாம்மா அது, எங்க அப்பா இருந்திருந்தா என்னை இந்த அளவுக்கு கஷ்டப்பட விட்டிருப்பாரா? எவ்வளவுதான் உள்ளுக்குள்ள மனிதாபிமானம், அன்புன்னு பேசிக்கிட்டாலும், யாதார்த்த வாழ்வுக்கு அது சரிப்பட்டு வராதும்மா ”

“….”

“எனக்கு ரொம்ப சாராசரி மனசுதான், ஆஹா ஓஹோன்னு கிரீடம் வச்சி பாராட்டுற அளவுக்கு நியாயம், தர்மம்னு போலியா சகிச்சிட்டு, வாழத் தெரியாதும்மா,ப்ளீஸ்… நான் இங்கேயே இருந்துக்கிறேனே… ” அமர்ந்து மடித்திருந்த முட்டியின் மீது நெற்றி படியக் கதறினாள் வாணி, அருகில் சென்ற ஞாலன் அவள் உச்சந்த் தலையில் தடவிக் கொடுத்தபடி, வார்த்தையற்று உட்கார்ந்தான். இருவரையும் வெறுமையோடு பார்த்தபடி நின்றிருந்தாள் வாணியின் அம்மா.

அந்நேரம், வெளியே கம்பிக் கதவின் கொண்டிச் சத்தம் கேட்க, யாரோ வருகிறார்களென அவசரமாக எழுந்தான் ஞாலன்.

ஆனால் நெடுமாறனும் அவனது தாய்மாமனும் முதுகு காட்டி அங்கிருந்து நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் சமாதானத்துக்கு கொண்டு வந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தாமல் வழி நெடுக உதிர்த்து விட்டுப்போவது போலிருந்தது அவர்களின் வெறுங்கை வீச்சு.

அந்த வாரக் கடைசியில், நெடுமாறன் வெளிநாடு செல்வதற்கு முன்னமே, ஊர்ப் பெரியவர்களை வைத்து மனம் ஒன்றிப் பிரிந்து கொள்ள, செல்லாத காசாகிப்போனது நெடுமாறன் மற்றும் வாணியின் கல்யாணம்.

******* 

“ சார், கொஞ்சம் நகருங்க“ என்றபடி நீரில் முக்கியெடுத்த மாப்போடு நீலக்கலர் மேற்சட்டையணிந்த ஒருத்தித் துடைப்பானோடு நிற்க , நிஜத்திற்கு வந்தான் நெடுமாறன்.

     “அவள் வாணி, முறைப்படி என் மனைவியானவள், என் குறையினால் என்னை விட்டு விலகிப்போனவள்“ குலுக்கிபோட்ட சோளிகள், அங்கொன்றும் இங்கொன்றும் சிதறிக் கிடப்பது போல, இடைவெளி விட்டு விட்டு வார்தைகளை வெளியேற்றினான் நெடுமாறன். உள்ளங்கை வியர்க்க, நெஞ்சுப் படபடத்தது .

நூறடி தூரத்தில் குழந்தைகள் விளையாடும் இடத்தில் திரையில் ஓடும் பைக்கிற்கு, தன்னை வளைத்து வளைத்து, ஹேண்ட் பார் பிடித்துத் திசை மாற்றிக்கொண்டிருந்த மகனை கைதட்டி உற்சாகப் படுத்திக்கொண்டிருந்தாள் வாணி. அவர்கள் இருவரையும் மகிழ்வோடு கைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தான் அவளது கணவன்.

     தோற்றவன் தன்னை ஒளித்துக்கொள்ள பிரயத்தனம் செய்வது போல வாணியின் கண்களில் படாதவாறு, வெளியேறுவது அவ்வளவு பெரிய கட்டிடத்தில் நெடுமாறனுக்கு சிரமமாக இருக்கவில்லை.

     ஒருமுறை அவள் இருக்கும் திசை திரும்பிய நெடுமாறன் “நல்லாயிரு வாணி ” என்றது நிச்சயம் அவளுக்குக் கேட்டிருக்காது.

                     ************

தென்காசி மாவட்டம் வெள்ளாகுளம் சொந்த ஊர்.

*என் கனா யாழ் நீ

* அகயாழின் குரல்

* உன் கிளையில் என் கூடு

எனும் மூன்று கவிதை நூல்களும்

* பாறைக்குளத்து மீன்கள்

என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது

பல வார மாத இதழ்களில் கதைகளும்,  கவிதைகளும்

பிரசுரமாகியிருக்கின்றன.

மற்ற பதிவுகள்
Sorry no related post found

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *