“அன்பார்ந்த … ஆசிரியர்களே ! …மரி…யாதைக்குரிய …மாணவர்களே!” தயங்கித் தயங்கித் தொடங்கினான் தங்கராஜு.
“கட், கட், கட்….நிறுத்துடா!” என சிவனேஷ் கத்தினான்.
சிவனேஷ், செல்வம் மற்றும் தீபன் மூவருமே ‘கெக்கெபிக்கே’ எனச் சிரித்தார்கள்.
தங்கராஜூக்கு அவர்கள் ஏன் சிரிக்கிறார்கள் என்பதே புரியவில்லை.
ஏற்கனவே, தயக்கத்திலும் கலக்கத்திலும் இருந்த தங்கராஜின் கண்களில் இருந்து ஓரிரு துளிகள் கண்ணீர் வெளியே எட்டிப் பார்த்தது.
“உனக்கு எதுக்குடா இதெல்லாம்! ஏதோ இரண்டு விளையாட்டுப் போட்டில சேர்ந்து விளையாடு!” தீபன்.
“ஆமா! அதோட நிறுத்திக்கோ!” செல்வம் கிண்டலாகச் சொன்னான்.
“ஏண்டா! சிரிக்கிறீங்க? இன்னும் நான் பேசவே ஆரம்பிக்கல்ல!” எனச் சிணுங்கினான் தங்கராஜு.
“தங்கம்! நீ என்ன பேசின தெரியுமா? அன்பார்ந்த ஆசிரியரே…. அது கூட பரவா இல்ல! ஆனா, மரியாதைக்குரிய… மாணவர்களே…. அப்படின்னு சொல்லி கவுத்துட்டயே!”, சிவனேஷ்.
தங்கராஜுவுக்கே சிரிப்பு வந்து விட்டது.
எல்லோரும் திரும்பவும் சிரித்தார்கள்.
அடுத்தப் பாடவேளையில் தமிழ் வகுப்பு. தங்கராஜூ பேச வேண்டும். அதற்குத்தான் அவன் பயிற்சி எடுத்துக் கொண்டு இருந்தான்.
தங்கராஜூ தன்னையே நொந்து கொண்டான்.
போன வருடம் விளையாட்டு நாள் விழாவில் தங்கப்பதக்கம் வாங்கினான். அதைத் தொடர்ந்து கூடைப்பந்து பயிற்சி… மெல்ல மெல்ல பள்ளியின் கூடைப்பந்து குழுவில் இடம் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டான்.
தங்கராஜூ முகத்தில் ஒரு தன்னம்பிக்கையும் மலர்ச்சியும் இருந்தது.
எல்லாம் போன வாரம் மாறி விட்டது.
பள்ளியின் தமிழ்த்துறை ஆசிரியர்கள் இருவர் ஒவ்வொரு வகுப்புக்கும் சென்று மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டிக்கு மாணவர்களைத் தேர்வு செய்து கொண்டு இருந்தனர்.
தங்கராஜூவின் வகுப்புக்கு அவர்கள் வந்த போது, வழக்கமாக பேச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் சந்திரமோகன் மற்றும் அன்பரசன் ஆகிய இருவரும் எழுந்து நின்றார்கள்.
அவர்கள் இருவரும் இது வரை எந்தெந்த போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கிறார்கள் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டனர் இரு ஆசிரியர்களும்.
”வேற யாராவது பெயர் கொடுக்க விரும்புகிறீர்களா?”
அப்போது தான் தீடீரென தங்கராஜுவுக்கு ஒரு ஆசை!
டக்கென எழுந்து நின்று விட்டான்.
“பேர் என்ன? இது வரைக்கும் எந்த பேச்சுப் போட்டிகளில் பங்கேற்றிருக்கிறாய்?”
முதல் கேள்விக்கு மட்டும் பதில் சொன்னான் தங்கராஜு.
தங்கராஜுவுக்குப் போதுமான பயிற்சி இல்லை என்றாலும் அவன் பெயரையும் எழுதிக் கொண்டார்கள்.
மறுநாள் பெயர் கொடுத்த மாணவர்களுக்கான முதல் சுற்றுத் தேர்வு.
தங்கராஜால் எதுவும் பேசமுடியவில்லை.
நடுவர்களில் அவனது தமிழ் ஆசிரியரும் இருந்தார்.
“நீ முதல்ல நம் வகுப்பில் நடக்கும் போட்டிகள், பள்ளியில் நடக்கும் போட்டிகளில் பங்கு பெற வேண்டும், தங்கம்!” என்று சொன்னார் அவனது தமிழ் ஆசிரியர்.
சூட்டோடு சூடாக வகுப்பறை பேச்சுப் போட்டியையும் அறிவித்து விட்டார்.
அந்த வகுப்பறைப் போட்டி தான் அடுத்த பாடவேளையில் நடக்கப் போகிறது.
”அடுத்த போட்டியாளர்… தங்கராஜு”
“மரியாதை… மரியாதை” என்று செல்வம் கிசுகிசுக்க, தங்கராஜூ எழுந்து சென்றான்.
“மரியாதை உடைய… மா…” , இழுத்தான் தங்கராஜு.
இல்லை, இல்லை என்பது போல மண்டையை ஆட்டிக் கொண்டு தொடர்ந்தான்.
“மரியாதை உடைய… மரியாதை உடைய…”
“பாத்து, பாத்து! ரொம்ப உடைஞ்சுடப் போவுது! மரியாதை” என யாரோ ஒரு மாணவன் சத்தமாகச் சொல்லவும், வகுப்பு கலகலத்தது.
“அமைதி! அமைதி!” ஆசிரியரின் கண்டிப்பான குரல்.
“பேச முயற்சி செய்யுற தங்கராஜை நாம எல்லோரும் ஊக்குவிக்கணும். நம்ம வகுப்பு தான தங்கம்! நண்பர்களாகிய நீங்க தான அவனுக்கு ஆதரவு தரணும். நீங்களே கிண்டல் பண்ணலாமா?” என ஆசிரியர் சொன்னார்.
”தயங்காம பேசு, தங்கம்!” என ஆசிரியர் சொல்ல, ஒருவழியாக எப்படியோ சொற்களையும் வாக்கியங்களையும் பிரித்துப் பிரித்து, உடைத்து உடைத்துப் பேசி விட்டு, உடைந்து போய் தன் இடத்தில் போய் அமர்ந்தான் தங்கராஜு.
”இது போன்ற வகுப்பறைப் போட்டிகள் இனி ஒவ்வொரு வாரமும் தொடரும். வகுப்பில் உள்ள எல்லா மாணவர்களுமே சுழற்சி அடிப்படையில் பங்கு பெற வேண்டும்” என்றார் ஆசிரியர்.
கூடவே, தொலைக்காட்சிகளில் வரக்கூடிய ஒன்றிரண்டு மேடைப்பேச்சு நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டார் ஆசிரியர்.
“சும்மா கிறுக்குத்தனமான ’இன்ஸ்டா ரீல்ஸ்’ பாத்துட்டு இருக்காம, பள்ளி மாணவர்கள் பேசுகிற மேடைப்பேச்சு நிகழ்ச்சிகளையும் பாருங்க” என்றார் ஆசிரியர்.
தங்கராஜின் “உடைந்து போன மரியாதை” பற்றி, அவன் அம்மா அப்பாவிடம் போட்டு உடைத்து விட்டான் செல்வம்.
”என்ன தங்கம், மறுபடியும் ஆரம்பிச்சிட்டியா உன் சாதனைப் பயணத்தை… பேச்சுப் போட்டில சேர்ந்தாலும்…. வெஜ் ரோல் தருவாங்களா?” எனக் கிண்டல் அடித்தார் அப்பா.
அம்மா வழக்கம் போல் தங்கராஜுவுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார்.
”மொதல்ல சின்ன சின்னக் கதைகள் சொல்லிப் பாரு, தங்கம்! நல்லாப் படிச்சிட்டு சொல்லு! தயங்காத தங்கம்! முயற்சியே பயிற்சி“ எனத் தேற்றினாள் அம்மா.
இப்போதெல்லாம் சிறார் கதைகளைப் படித்தல், மேடைப்பேச்சு குறுங்காணொளிகள் பார்த்தல், தொலைக்காட்சிகளில் மேடைப்பேச்சு நிகழ்ச்சிகளைப் பார்த்தல் எனப் போகிறது தங்கராஜின் பொழுதுகள் !
விரைவில் மாவட்ட அளவு பேச்சுப்போட்டிக்கே தயாராகி விடுவானோ?

கமலா முரளி
கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர் திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.
ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.
கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.
இவரது “மங்கை எனும் மந்திர தீபம்” (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.
மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

