பெரியாப்பாவை நினைக்கும்போதெல்லாம் உள்ளுக்குள் ஒரு கொதிப்பு அவனை அறியாமலேயே ஏற்பட்டுவிடும்! குளுமையான மாலைக் காற்று கூட சூடாக இருப்பதாக உணர்ந்தான்! இக்பாலுக்கு அவனுடைய பெரியாப்பா மீதுள்ள கோபமும் வெறுப்பும் இன்னும் கொஞ்சம் கூட குறையவே இல்லை. இப்போதும் தன் அண்ணன் பற்றி வாப்பா ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்! தன்னுடைய அண்ணன் குறித்து வாப்பா ஏதாவது பேச ஆரம்பித்தால் பொருட்படுத்தாமல் நகர்ந்துவிடுவான். உம்மாவும், ”மனுசனுக்கு எப்பப்பாரு அண்ணன் புராணம்..! சீமையில் இல்லாத அண்ணன்..” என்றவாறு அடுப்படிக்குள் சென்று விடும். வாப்பாவுக்கு ஜீவு ஜிவென்று கோபம் தலைக்கு ஏறும். உட்கார்ந்த இடத்திலிருந்தே மனைவியையும், மகனையும் முணுமுணுத்தபடி திட்ட ஆரம்பித்துவிடுவார்.
இக்பாலின் பெரியாப்பா காதர் ஹாஜியார் முசுடு பிடித்தவர் ஆள் தராதரமெல்லாம் பார்க்கமாட்டார் யாராக இருந்தாலும் வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என ‘வெடுக்’ பேச்சுதான். ஆரம்பம் தொட்டே அவரின் சுபாவம் இப்படியாக இருந்தது. சின்ன வயதிலிருந்தே இப்படித்தான். தன் அண்ணன் இப்ராஹீம் ஒரு அப்பாவி என்பதை விட, அவரை அப்படி அப்பாவியாக்கியதே காதரின் இந்த கைங்கரியம்தான்.. என்பது குடும்பத்தினருக்கு தெரிந்த சங்கதி! அண்ணன் பாவம்.அவருக்கு ஒண்ணும் தெரியாது என்று எல்லாவற்றிலும் முந்திரிக் கொட்டையாக துருத்திக்கொண்டு, தன்னை முன்னிலைப் படுத்திக்கொள்வார் காதர். .
இதனால் அவருடைய அண்ணன் இப்றாகீம் தம்பி காதர் சம்பந்தப்பட்ட விசயங்களிலிருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருந்தார். இதையே ஒரு காரணமாகக் கொண்டு வாப்பாவின் மௌத்துக்குப் பிறகு அண்ணனை அப்படியே ஒதுக்கிவிட்டார் காதர். இந்த சுபாவம் அவருக்கு குடும்பத்தில் ‘ஆள் ரொம்ப..தைரியசாலியாக்கும்.’ என்கிற பெயரைக் கொடுத்திருந்தது. இதை ஒரு கூடுதல் கௌரவமாகவும், தன் பெயருக்குப் பின்னே கொண்ட ஒரு பட்டமாகவும் பாவித்துக் கொண்டார் காதர்.
தெங்காசி தரவாட்டில் காதர் ஹாஜியார்தான் வசதி படைத்தவராக இருந்தார். அதனால் குடும்பத்தில் அவர் சொல்லை யாரும் தட்டுவதுமில்லை. மீறுவதும் இல்லை! தெங்காசி தரவாடு மொஹல்லாவில் பெரிய தரவாடாக இருந்தது.. பெரிய தரவாட்டுக்காரர் என்பதால் யாரும் மறு பேச்சில்லாமல் தலையாட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த மொகல்லாவில் உள்ள பணக்காரர்களில் காதர் ஹஜியாரும் ஒருவராகிவிட்டதால் மொஹல்லாவிலும் அவர் சொல்வதெல்லாம் வேதவாக்காக இருந்தது! குடும்பத்தினருக்கு சின்ன உதவிகள்கூட செய்யத் தயங்கும் அவர் ஊரருக்கு தாராளமாக உதவிகள் செய்வார் !
காதர் ராவுத்தர், காதர் ஹாஜியார் ஆன பிறகு முன்னைவிட கூடுதல் செருக்கும், மிடுக்கும் அவரிடம் இன்னும் கூடிப்போனது. இந்த மிடுக்குக்கு ஏற்றது போலவே நல்ல நெடு நெடுவென்ற உயரம் . ஹஜ்ஜுக்கு சென்று வந்த பிறகு தலையில் தொப்பியும், தோளில் வெள்ளை நிறத் துண்டுமாக ஆளின் தோரணை மேலும் கூடிப்போனது. ஹாஜியார்னாலே பயம் கலந்த ஒரு மரியாதை எல்லோருக்குள்ளும் ஊடுருவியிருந்தது .
. மொஹல்லாவில் புனித ஹஜ் யாத்திரை சென்று வந்த ஒரு சிலரில் காதர் ராவுத்தரும் ஒருவர். தெங்காசி குடும்பத்திலேயே முதல் ஹாஜியார் காதர் ராவுத்தர்தான். அப்போதெல்லாம் ஹஜ் பயணம் என்பது மிகவும் சிரமமான யாத்திரையாக இருந்த காலம். சென்று வர குறைந்தது ஆறு மாதங்களாகும். பம்பாய் சென்று அங்கிருந்துதான் சவுதிக்கு புறப்பட்டுச் செல்ல வேண்டும். குறைந்த கட்டணத்தில் போக வேண்டுமானால் கப்பல் பயணம் மேற்கொள்ள வேண்டும். “அல்லாஹு அக்பர்…” என்ற முழக்கத்துடன் அப்போது கோட்டைப்புதூரே ரயில் நிலையம் வரை திரண்டு வந்து காதர் ராவுத்தரை வழி அனுப்பி வைத்தது! அன்றைய காலகட்டத்தில் அது ஒரு மிகப் பெரிய நிகழ்வாகும்.
பெரியாப்பாவை வழி அனுப்ப வேறு வழியேதும் இல்லாமல் குடும்பத்தாருடன் இக்பாலும் வேண்டா வெறுப்பாக ரயில் நிலையம் வரை சென்று வந்தான். பெரியாப்பாவைப் பிடிக்கவில்லை என்றாலும் இது இறைவழியிலான ஒரு நல்ல காரியம். இதைப் புறக்கணிப்பது பாவமான செயலாகிவிடும் என்று கூட்டத்துடன் கூட்டமாக கலந்து கொண்டான். அவனுடைய படிப்புக்கு வாப்பா அவ்வளவு கெஞ்சியும் கடனாகக் கூட பணம் தந்து பெரியாப்பா உதவவில்லை என்கிற கோபம் அவனுக்குள் அடி ஆழத்தில் அப்படியே புதைந்து கிடக்கிறது. நல்லாப்படிச்சிருந்தா நண்பன் குமாரைப் போல பொதுப்பணித் துறையில் இஞ்சீனியர் ஆகியிருக்கலாம். வாப்பாவின் கனவும் அதுதான். ஆனால் பெரியாப்பா கம்பெனியில் வேலை செய்தும் கூட வாப்பாவுக்கு அவர் உதவாததால் அந்த கனவு தகர்ந்து போனது. ஆனாலும் வாப்பா இது குறித்து பின்பு அப்படியே மறந்து போனவராக அண்ணன் துதி பாட ஆரம்பித்துவிட்டார்!
தன் தம்பி மகனின் கல்விக்கே உதவாத காதர் ராவுத்தரைப் போலத்தான் நிறைய பணக்காரர்கள் ஹாஜிகளாக இருக்கிறார்கள்! உதவும் குணம் இல்லாமல் ஹாஜிகளாகி என்ன புண்ணியம்..? வெளியே பெரிய பரோபகாரராக காட்டிக்கொள்ளும் காதர் ஹாஜியார் தன் குடும்பத்தில் உள்ள வசதியற்றவர்களுக்கு ஒரு நயாபைசா கொடுத்து உதவ மாட்டார். இது குறித்து இக்பாலுக்கு தன் பெரியாப்பா மீது கடுங்கோபமும் வருத்தமும் இன்னும் உண்டு! பெரும்பாலும் பெரிய தரவாட்டுக்காரர்களின் குணம் இப்படியாகத்தான் இருக்கிறது! ஆனாலும் மொகல்லாக்களில் இவர்களுக்குத்தான் மதிப்பும் மரியாதையும் கூடிக்கிடக்கிறது! இவர்களை தூரத்தில் பார்த்துவிட்டாலே பவ்வியமாக சலாம் சொல்வதும், ஒதுங்கி நிற்பதும் ஒருசில மொஹல்லாவாசிகளின் வழக்கமாக இருக்கிறது!
உம்ஸல்மா இவருக்குத் தகுந்த மனைவி. மிகவும் கறார் பேர்வழியான காதர் ஹாஜியர் பொண்டாட்டி கிழித்த கோட்டை மட்டும் தாண்டவே மாட்டார். மனைவி சொல்வதெல்லாம் அவருக்கு வேதவாக்கு! ‘நா எது சொன்னாலும் மனுஷன் காதுலயே வாங்குறதில்லையாக்கும்..’ என்பதாக உறவினர் மத்தியில் உம்ஸல்மா சொல்லித் திரிவதும், பொண்டாட்டியை அடக்கி ஒடுக்கி வைத்திருப்பதாக அவர் ஒரு பம்மாத்து காட்டிக் கொள்வதும் எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான் என்றாலும் , எதும் தங்களுக்குத் தெரியாதது போலவே உறவினர்கள் காட்டிக் கொள்வார்கள். அவர்களை இப்படியாக பணிய வைத்திருந்தது ஹாஜியாரின் செல்வாக்கு. ஒட்டு மொத்த தெங்காசி குடும்பமும் அவர் சொல்லுக்கு கட்டுப்பட்டிருந்தது. தோல்ஷாப் கணக்குப் பிள்ளையாக இருக்கும் போதிலிருந்தே அவருக்கு கிடைத்த அந்தஸ்து இது. பெருமை கிட்டும் என்பதற்காக. வெளி ஆட்களுக்கு சீக்கிரம் உதவுவார். குடும்பத்தில் இப்படி உதவினால், வெளிப் பெருமை கிடைக்காதே. இப்படியொரு குணம் ஆரம்பம் தொட்டே காதர் ராவுத்தருக்கு..
மூன்று ஆண்களும், மூன்று பெண்களுமாக காதர் ஹாஜியாருக்கு ஆறு வாரிசுகள். மூத்தவன் அக்பர் அலி. ஆரம்ப காலங்களில் ஒர்க் ஷாப் வேலை பார்த்து வந்தான். இப்போது வாப்பாவின் தோல் வியாபாரத்தை தம்பி முகம்மது உசேனுடன் சேர்ந்து கவனித்து வருகிறான். மூன்றாவது பெண் தாஜ்னீஷா கோட்டைமேட்டிலேயே உறவினர் ஒருவரின் மகனுக்கு கட்டிக் கொடுக்கப்பட்டாள். ஆத்துப்பாலத்தில் வசித்தபோது எளிமையாக நடந்த திருமணம் இது. நான்காவது மகன் அஷ்ரப் அலி படிக்கிறேன் என்று முதல் வருடம் மட்டும் காலேஜ் சென்றான். பிறகு நண்பர்களுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டான். இப்போது சைட் வாங்கி விற்கும் ப்ரோமோட் வியாபாரி ஆகிவிட்டான். இந்த மொகல்லாவுக்கு குடி வந்த பிறகு ஐந்தாவது பெண் மும்தாஜ்க்கு நிக்காஹ் நடந்தது. கேரளா எர்னாகுளத்தில் உள்ள உறவினர் ஒருவரின் மகனுக்கு மிகச் சிறப்பாக பொன்னும் , பொருளுடனும் விமர்ச்சையாக நடந்த திருமணம் இது. காதர் ராவுத்தர் காதர் ஹாஜியாரான பிறகு ஆறாவது பெண் ரகமத்துனீஷாவுக்கு பெரிய இடத்திலிருந்து மாப்பிள்ளை தேடிவந்து அமைந்தது. போட்டோவும் பிடிப்பதும், வீடியோ எடுப்பதுமாக மண்டபமே அமளி துமளி பட்டது.
அதன் பிறகு நடந்த பெரும்பான்மையான திருமணங்களிலும் கொஞ்சம் கொஞ்சமாக போட்டோ, வீடியோ என்பதில் ஆடம்பரமும் கொலோச்ச ஆரம்பித்தது. பணக்காரர்கள்தான் இப்படியாக ஆடம்பரத்தையும்,வீண் விரயத்தையும் ஆரம்பித்து வைக்கிறார்கள். இதைப்பார்த்து நடுத்தர வர்க்கத்தின் ஒரு சிலரும் கடன் வாங்கியாவது இந்த ஆடம்பரத்தை நிலை நிறுத்த, அஞ்சு பவுனுக்குக் கூட வக்கில்லாத ஏழைகள்தான் தங்களின் குமறுகளை கரை சேர்த்த வழியில்லாமல் ஏக்கப் பெருமூச்சு விட்டபடிக்கு ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் மொஹல்லாக்கள் தோறும்.
இதில் என்ன வேடிக்கையென்றால், வசதியுள்ளவர்கள் என்ன ஆடம்பரம் செய்தாலும், வீண்விரயம் செய்தாலும் அதைக் கண்டு கொள்ளாத கண்டிக்காத இந்த மக்கள், தங்கள் ஆசைக்கு நடுத்தரவர்க்கம் இப்படி செலவழித்தால் போதும் வீறு கொண்டு எழுந்து’ ‘கொண்டையுள்ள சீமாட்டி அள்ளி முடியிறா.. இவுனுக்கெல்லாம் இது தேவையா…..?’ என்கிற ரீதியில் கண்டதையும் பேசி தங்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டித் தீர்க்கும்.! எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் பொதுவான இந்த மனித இயல்பு மொஹல்லாவாசிகளுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன.?
. “பழசை எல்லாம் மனசுல வச்சுக்காமா நீ போயி உன் பெரியாப்பாகிட்ட பேசுப்பா..இன்னும் எத்தன காலத்துக்கு நீ இப்பிடியே இருப்பே? என்ன இருந்தாலும் அவர் உன்னோட பெரியாப்பா…” என்று உறவினர்கள் எல்லாம் இக்பாலிடம் எப்போதும் இதை வலியுறுத்திக்கொண்டே இருந்தார்கள். வாப்பாவும் அவனை திட்டிக்கொண்டேதான் இருந்தார். இந்த விஷயத்தில் இக்பால் கறாராக இருந்தான். பெரியாப்பாவிடம் பேச அவன் மனம் இடம் கொடுக்கவே இல்லை!
காதர் ராவுத்தரின் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டதைச் சேர்ந்த தென்காசி. அவரின் முன்னோர்கள் பஞ்சம் பிழைக்க கோயம்புத்தூர் வந்ததாக வரலாறு. எல்லாப் பகுதிகளிலிருந்தும் இங்கு வந்து குடியேறியவர்கள்தான் இப்போது மண்ணின் மைந்தர்களாக பரவிக்கிடக்கிறார்கள். “தென்காசிக்காரங்க”..என்று அழைக்கப்பட்டு நாளடைவில் அது ‘தெங்காசி’ என்ற குடும்பப் பெயராகிப் போனது. புதுக்கோட்டையிலிருந்து வந்தவர்கள் ‘புதுக்கட்ட’. தென்காசிலிருந்து வந்தவர்கள் ‘தென்கச்சி அல்லது தெங்காசி ‘. முத்துப்பேட்டை வம்சாவழி என்றால் ‘முத்துப்பட்ட’ இப்படியாக தரவாட்டு குடும்பப் பெயர்கள் முன்னோர்கள் செய்த வியாபாரத்தைக் காரணமாகக் கொண்டும் ஏற்பட்டிருக்கிறது.
சட்டி, பானை வியாபாரம் செய்தவர்களின் குடும்பப் பெயர் ‘சட்டிக்குடும்பம் ‘மாவு இடித்து விற்பனை செய்தவர்களின் குடும்பம் ‘மாவிடிச்சான்’. ‘எந்த’ என்ற பெயரில் கூட ஒரு குடும்ப வகையறா இருக்கிறது .’எந்த இப்ராகீம்’ என்றுதான் அந்த குடும்பத்தின் மூத்தவரின் பெயர். இந்த ‘எந்த’ என்பதின் பெயர் காரணம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. ஒரு வேளை எந்தவித அடையாளமும் அவர்களின் அந்தக் குடும்பத்திற்கு இல்லாமல் இருந்திருந்திருக்கும். அதனால் கூட “அது எந்தக் குடும்பம்” …? என்று கேட்கப்பட்டு, நாளடைவில் அந்த குடும்பத்தின் பெயரே ‘எந்த’ என்றாகியிருக்கலாம்.!
அதே போலவே ‘கொப்புளி’ ,’பிச்சக்காரர்’ ,’எரப்பாளி ‘ ‘வேஷக்காரக் குடும்பம்’ என்றெல்லாம் தரவாட்டுப்பெயர்கள் உள்ளன. இவையெல்லாம் பெரிய பெரிய தரவாடுகள். ஆனாலும் இந்த குடும்ப வகையறா பெயர் காரணம் சரியாக யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. வேஷக்கார குடும்பத்தின் முன்னோர்கள் வேஷம் கட்டி நடிக்கும் நாடக நடிகர்களாக இருந்திருப்பார்களோ…? என்று நினைத்துக் கொள்வான் இக்பால். அதேபோலவே எரப்பாளி குடும்பத்திற்கு இந்தப் பெயர் எப்படி எதனால் வந்திருக்கும் என அவனுக்கு இன்னும் அந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.! ஏனென்றால் எரப்பாளி என்பது ஒருவசவுச் சொல்! ஒரு சிலரை பெரியவர்கள் “எரப்பாளி நாயே!” என்று திட்டுவதை அவன் கேட்டிருக்கிறான்.
‘மஜீத்’ என்றால்,’ எந்த மஜீது …?’ என்று கேட்பார்கள். ‘பிச்சக்கார மஜீது’ என்றால் உடனே புரிந்து கொள்வார்கள். இப்படியாகத்தான் இஸ்லாமியர்களின் தரவாட்டுப் பெயர்கள் அவர்களையும் குடும்பத்தையும் அடையாளப்படுத்திக் கொள்ளும் வகையில் மொஹல்லா தோறும் எல்லா ஜமாஅத்களிலும் தொன்று தொட்டு தொடர்கிறது -.
“பிச்சக்கார குடும்பம்” னு சொல்றாங்களே….! அப்ப இவங்க முன்னோர்கள் பிச்சை எடுத்திட்டியிருந்தாங்களா…?” இக்பால் ஒரு முறை காஜா உசேனிடம் கேட்டதுக்கு அவன் பதில் சொல்லாமல் சிரித்துக்கொண்டான்.
“ஏன்டா சிரிக்கிறே …?”
“யாருக்குத் தெரியும் …?”
“அதுகேண்டா…சிரிக்கிறே…? தெரியலன்னு சொல்லேன்…” பல பேரிடம் இக்பால் கேட்டுவிட்டான். யாருக்கும் தெரியவில்லை. “..பிச்சக்கார.. குடும்பம்” என்கிற சந்தேகதிற்கான பதில் சிரிப்பாகவே இருந்தது. இந்தக் குடும்பம்தான் முஹல்லாவில் இருப்பதிலேயே சிறிய குடும்பம். நாளடைவில் இந்த குடும்பப் பெயர் இல்லாமலேயே போய்விடலாம். இந்த தலைமுறையில் உள்ளவர்கள் இந்த குடும்பப் பெயரை மறக்க நினைக்கிறார்கள். அவர்கள் தங்கள் இனிஷியலாக குடும்பப் பெயரின் ‘பி’ என்கிற முதல் எழுத்தை இப்போது அடையாளப்படுத்துவதில்லை. சில தரவாட்டுப் பெயர்களை இந்த தலைமுறை கேவலமாக நினைப்பதே அதற்கு காரணம்.
தன் பேச்சை யாரும் கேட்காமல் இருக்கவே கோபத்துடன் முணு முணுத்துக்கொண்டே, நான்காம் வகுப்பு படிக்கும் இக்பாலின் மூத்த மகனான முபாரக் அலியுடன் வழக்கம்போல விளையாட ஆரம்பித்தார் காஜா உசேன் ராவுத்தர். அப்பாடா என்று சகஜ நிலைக்கு வந்தான் இக்பால். விளையாடிக்கொண்டிருந்த முபாரக் திடீரென்று தன் பெத்தாவிடம் (தாத்தா) “பெத்தா! எதுக்கு எனக்கு இரண்டு இனிஷியலு.?” என்று கேட்டான். அவன் எப்போதும் இப்படித்தான் சில விசயங்களை பெத்தாவிடம்தான் சகஜமாக பேசுவான் கேட்பான். அதற்கு காஜா உசேன் பெருமை பொங்க சிரித்தவாறும், பேரனின் கேள்வியை வியந்தவாறும். சந்தோஷத்துடன், “‘டி’ நம்ம குடும்பப்பேருக்குற முதல் எழுத்தாக்கும்..‘ஐ’ ஒன்னோட வாப்பா பேருக்குற முதல் எழுத்து. என்றார். பேரன் விடவில்லை .”குடும்பத்துக்கெல்லாம் பேரிருக்கா…பெத்தா…? அப்ப நம்ம குடும்பப் பேரென்ன..?”.
“நம்ம குடும்பப்பேரு தெங்கச்சி…” என்றார் பெருமை பொங்க.
“தெங்கச்சியா…..! அப்பிடினா..?” பேரனின் முகத்தில் ஒருவித இகழ்ச்சி ஓடியதை அவர் கவனிக்க தவறவில்லை.
“எங்க பெத்தா காலத்துக்கும் முன்னால இருந்தவங்க தென்காசியிலிருந்து இங்க வந்தவங்க நம்ம குடும்பத்த அடையாளப்படுத்த ‘தென்காசிக்காரங்கன்னு’ அப்ப சொல்லுவாங்க. அதான் இப்ப ‘தெங்கச்சி’ன்னு ஆயிருக்கு சபீர்! இதுதா நம்ம தரவாட்டுப் பேரு.”
“பேரப்பாரு… தெங்கச்சியாம்! .பேரே நல்லால்ல பெத்தா..!” பேரனின் இந்தக் கூற்று காஜா உசேன் ராவுத்தரை திடுக்கிடச் செய்தது. இந்த தலைமுறை எதையும் அடையாளப்படுத்த விரும்பவில்லையோ.. இல்ல எதிர்க்க….கேள்வி கேட்க விரும்புதோ..?. எங்க காலத்தில் நாங்க இப்படியெல்லாம் கேள்வி கேட்டதேயில்லை! மொதல்ல இப்படியான நெனப்பே தோணாது. வாப்பாவ கண்டாலே பயப்படுவோம் அப்பறம் எங்க கேள்வி கேட்குறது.! அவருக்குள் இப்படியாக சிந்தனை ஓடியது
அவர் சிந்தனையைக் கலைத்தான் பேரன் சபீர். “குடும்பப்பேரு எதுக்கு….பெத்தா….? குடும்பப் பேரயெல்லமா இனிஷியலா……வப்பாங்க..? எம் பிரண்ட்ஸ்கெல்லாம் ஒரு இனிஷியல்தா…இருக்கு பெத்தா!”
இந்தக் கேள்வியை பேரனிடமிருந்து அவர் எதிர்பார்க்கவில்லை . சட்டென பேரன் இப்படிக் கேட்டதும் கொஞ்சம் மிரண்டுதான் போனார். யோசிப்பதாக பாவனை செய்தால், ‘இதுக்கெல்லாம் யோசிக்கிரியே பெத்தா…’ன்னு அடுத்தக் கேள்வி வந்தாலும் வரும். லேசாக சிரிப்பைக் காட்டிய காஜா உசேன் அவனை தன் பக்கம் மெல்ல இழுத்து பக்கத்தில் உட்கார வைத்தார். எனக்கெல்லாம் பெரியவனான பிறகு வந்த சந்தேகங்களும் கேள்விகளும் தன் மகனுக்கு சிறு வயதிலேயே வருகிறதே என்று இந்தக்காலத்து தலைமுறைகளின் அறிவை வியந்தபடி வாப்பாவுக்கும் தன் மகனுக்கும் நடக்கும் விவாதத்தை ரசித்தவாறு பார்த்துக்கொண்டிருந்தான் இக்பால்…
சபீர், பெத்தாவை கூர்ந்து பார்த்துக்கொண்டே அவர் பக்கத்தில் உட்காந்தான். அவன் பார்வை ‘பதில் சொல்லத் தெரியலையா உனக்கு….? ‘ என்பதாக இருந்ததை உணர்ந்தார் ராவுத்தர். “நமக்கான -நம்ம குடும்பத்துக்கான ஒரு அடையாளமாக்கும் குடும்பப்பேரு. ஒவ்வொருத்தரும் குடும்பப் பேர வச்சுத்தாண்டா அந்தக்காலத்துல இன்னாருன்னு அடையாளப் படுத்துனாங்க. உம் வாப்பாவச் சொன்னா…என்னத்தெரியும்….உடனே ‘தெங்கச்சியா..?’ னு குடும்பத்த தெரிஞ்சுக்குவாங்க. ஆனா…உன்னச் சொன்னாலோ… உம்பேரச் சொன்னாலோ… நம்ம குடும்பத்துலயே யாருக்கும் தெரியாது! காஜா உசேன் ராவுத்தரோட பேரனாக்கும்னா…சட்டுனு தெரிஞ்சுக்குவாங்க . அப்பவும் எந்த காஜா உசேன்னு….கேள்வி வரலாம். ‘தெங்கச்சி’னு சொன்னா … ஓ …! னு நம்ம தரவாட்ட .தெரிஞ்சுக்குவாங்க. அதுக்குத்தா இந்தக் குடும்பப் பேரு. இப்பப் புரிஞ்சுதா…எதுக்கு குடும்பப் பேருங்குறத…?” என்றவாறு பேரனின் தலையை வாஞ்சையுடன் தடவினார் காஜா உசேன். .
பிறகு, ”அதுமட்டுமில்ல சபீர், ஒரு தரவாட்டின் பேரச் சொன்னாலே, அது எப்பிடிபட்ட தரவாடுங்கறதும் தெரிஞ்சுரும்..அதாவது அந்தக் குடும்பத்தின் குணா நலன்கள் எல்லாம் தரவாட்டுப் பேர வச்சு தெரிஞ்சுக்குவாங்க…” என்றார். எல்லாவற்றையும் கூர்மையாகக் கேட்டுவிட்டு , “இந்தத் தரவாட்டுக் குடும்பப்பேரத் தெரிஞ்சு என்ன பண்ணப் போறாங்க…..பெத்தா…?” என்ற சபீர், பெத்தாவின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அவன் பாட்டுக்கு எழுந்து போனான். வியப்பும்,கொஞ்சம் அதிர்ச்சியுமாக இன்றைய இளைய தலைமுறையின் போக்கை எண்ணிக்கொண்டு பெருமூச்சு விட்டவாறு பேரன் கண்ணிலிருந்து மறையும் வரை அவனையே பார்த்துக்கொண்டிருந்தார் காஜா உசேன்.. இக்பால் எதுவும் பேசாமல் வாப்பாவையே பார்த்தபடி இருந்தான். அவனுக்கு சிரிப்பு வந்தது.
அன்று முழுக்க பேரனின் கேள்வி அவருக்குள் அலைந்தபடியே இருந்தது. குடும்ப அடையாளம் பற்றியெல்லாம் சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் இந்த வயசிலேயே தோணும் இன்றைய தலைமுறை குழந்தைகளைக் குறித்து வியப்பு ஏற்பட்டாலும் புரியாத வயசு கேள்வியாகவும் ஒரு எண்ணம் தோன்றியது. இருந்தாலும் குடும்ப அடையாளம் எல்லாம் எதற்கு என்று கேள்வி கேட்கும் இன்றைய இந்த தலைமுறை அவரை அதிர்ச்சியடைச் செய்தது. மகன் இக்பால் கூட தன் அண்ணனுடன் இன்னும் பேசாமல் இருப்பது குறித்தும் இப்போது நினைத்து விசனப்பட்டார். மனைவியிடமும் இது பற்றிப் பேசி தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
“நம்ம சபீரா இப்படியெல்லா கேட்டது…..ம்…ம்…யா அல்லாஹ் !” மைமூன்பீபியின் முகம் ஆச்சிரியத்தில் விரிந்தது.
“என்னளா..! என்ன சொல்லிட்டேன்னு இப்பிடிக்கெடந்து பூரிக்கிறே….? பேரன் இப்பிடி எகத்தாளமா கேக்குறானேன்னு உங்கிட்ட சங்கடமா சொன்னா…நீயி கெடந்து சந்தோசப்படுறே….?” கோபம் பொங்கக் கேட்டார் காஜா உசேன்.
“ஆமா.. .நீங்களும் ஒங்க குடும்பமும். அப்பிடியென்ன ஒங்க குடும்பத்தப்பத்தி சபீர் தப்பாப் பேசிட்டான்னு இப்பிடி கோவப்படுறீங்க…ம்..?” மைமூன்பீபி வெடுக்கென கேட்க, “ஒனக்கு மயிரளா தெரியும் ..?.” கோபமா கத்தினார் காஜா உசேன். . ‘இப்ப எதுக்கு தேவைல்லாம இந்த மனுஷன் இப்படிக் கோவப்படுராரு…’ முசுக்குனு தேவைல்லாம கோபப்படும் கணவனின் குணம் தெரிந்துதான் என்றாலும், இப்போது அவள் சும்மா இருக்கவில்லை. ”இந்த ஒண்ணுமில்லாத சின்ன விசியத்துக்குப் போயி இப்படி கோவப்படனுமாக்கும்?. பேரன் இப்படிக் கேட்கிறானேன்னு மனுஷன் சந்தோசப்பட வேண்டாமாக்கும்.!. அப்படி என்ன கேட்டுட்டான்….சபீர்? .நல்ல மனுஷன்….! உங்கண்ணனுக்காக .நாய் படாத பாடு படுறீங்க. இருந்தும் உங்க பையனோட படிப்புக்குக் கூட உதவாத உங்க அண்ணன்கிட்ட இந்தக் கோவத்தக் காட்டுங்க பாக்கலாம்…தரவாடாம்..தரவாடு.. சீமையில் இல்லாத பெரிய தரவாடு..!” என்று கோபத்துடன் கத்திவிட்டு மைமூன்பீபி அடுப்படிக்குள் நுழைந்தாள். காதில் விழாததுபோல மெல்ல நகர்ந்து அங்கிருந்து வெளியேறிப் போனார் காஜா உசேன் ராவுத்தர். அடுப்படிக்குள்ளிருந்து கரண்டியோ பாத்திரமோ கீழே விழுந்த சத்தம் வாசலுக்குக் கேட்டது.
000
ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
இயற்பெயர் . H. நஸீர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் (TWAD Board) வரைவு அலுவலராக (Draughting Officer) பணி புரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளேன்.
முதல் கதை “ புரட்சிப்பித்தான் “ என்கிற புனைபெயரில் சாவி –வார இதழில் 1985 ல் வந்தது. அதன் பிறகு ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன் என்கிற பெயரில் கணையாழியில் (1988) எழுத ஆரம்பித்து 35 ஆண்டுகளாக எழுதி வருகிறேன்.