ஜன சந்தடி மிகுந்த ஹாலில் மின்விசிறி இருந்தும்கூட வியர்த்துப்போய் அமர்ந்திருந்த கவிதா, திடீரென ஒலித்த கேவலில் திடுக்கிட்டாள். பக்கத்து இருக்கையில் வெளிர் சிவப்புப் புடவையுடனும் அள்ளியெடுத்துச் செருகிய கேட்ச் க்ளிப்புடனும் அமர்ந்திருந்தவளிடம் இருந்துதான் அந்த ஓசை வந்தது. அந்தப் பெண்ணின் கையில் இருந்த தண்ணீர் பாட்டிலைப் பிடுங்கி வாய்க்குள் பலவந்தமாக அழுத்தித் தண்ணீர் குடிக்க வைத்துக் கொண்டிருந்தாள் சற்றே வயது முதிர்ந்த இன்னொரு பெண். கண்களில் நீர் மல்க அமர்ந்திருந்த பக்கத்து இருக்கைப் பெண்ணின் தொண்டைக்குள் சொட்டுச் சொட்டாகத் தண்ணீர் இறங்குவது தெரிந்தது. லேசாகப் பின்னுக்கு நகர்ந்தபோது, மூன்றாவது இருக்கையில் இருந்த வயது முதிர்ந்த அந்த இன்னொரு பெண், வெளிர் சிவப்புப் புடவைப் பெண்ணிடம், “ஏ! பவித்ரா. இன்னும் கொஞ்சம். இன்னும் கொஞ்சம் குடி. எதுக்குமே முடியாதுனா எப்படி?” என்று அவளை வற்புறுத்திக் கொண்டிருந்தாள்.

வயது முதிர்ந்த பெண், வட்டமான முகமும், பெரிய குங்குமமும், நிறம் மங்கிய வெள்ளைக் கல் கம்மலும், முன்மண்டை தெரிய இறுக்கப் போடப்பட்ட கொண்டையுமாக இருந்ததைப் பார்த்தபோது இங்கத்திய ஆட்கள்தான், வெளியூர் இல்லை என்று நினைத்துக் கொண்டாள் கவிதா. வேலப்பாடி, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, சேப்பாக்கம், தொரப்பாடி என இங்கே எங்கோ பக்கத்தில்தான் இவர்கள் இருக்கவேண்டும். அந்தப் பெரிய குங்குமம் உடனேயே பாக்கியத்தம்மாளை  நினைவூட்டியது.

திருமணமான புதிதில், அவள்,

“ஏம்மா மருமவளே, காலையில எழுந்ததுமே மொத வேலையா குளிச்சி முழுகிட்டுதான் சமையல் ரூமுக்குள்ள வரணும்னு எத்தன முறை சொல்றது?” என்றபோது,

கவிதாவுக்கு அது அதிர்ச்சியாக இருந்தாலும், மெல்லப் பழகிக்கொண்டாள். எல்லாவற்றுக்குமேதான். ஆனால் ஒவ்வொரு சொல்லுக்கும் சுணங்கி வாடும் இந்த மனதை அவளால் பழக்கவேமுடியவில்லை.

முதல்முறை அம்மாவிடம் இதைப் பற்றி பேச முயன்றாள்.

ஒருநாள் திடுமெனக் காலையில் கிளம்பி அம்மா வீட்டுக்குப் போனாள். “தைரியமா இரு. சிரிச்சமாதிரி மொகத்த வச்சுக்க. பாதி பிரச்சனை தீர்ந்துடும். இவ்வளவு வருஷமா நான்லாம் இல்லையா?” புடவை மடிப்பை நீவி, உதட்டுச் சாயம் பூசியபடி மகளிடம் அவசரமாகப் பேசிக்கொண்டே அலுவலகத்துக்குக் கிளம்பிக் கொண்டிருந்தாள் கீதா.

பிறகு எதையோ நினைத்துக் கொண்டவளாக ட்ரெஸ்ஸிங்க் டேபிளுக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தபடி, “இங்க பாருடா. நீ எதுக்கு இப்ப இவ்வளவு ஃபீல் பண்ற? மாமியார்னா அப்படிதான். என்ட்ட சொன்னதுமாதிரி உன் ஹஸ்பெண்ட்கிட்ட அவங்களைப் பத்திக் கொற சொல்லிக்கிட்டு இருக்காதே. மென் டோண்ட் ஹேவ் சோ மச் பேஷன்ஸ் யூ சீ. சரி. எனக்கு நேரமாச்சு. நைட் பேசலாம். லவ் யூ” என்றவள் கவிதாவின் பதிலுக்குக் காத்திருக்காமல் கார் சாவியை எடுத்துக்கொண்டு, “வா. உன்னை வழியில் அப்படியே உன் ஆஃபீசில் ட்ராப் செய்துடறேன்” என்றாள். தன் மனதின் முடிச்சுகளை ஒவ்வொன்றாகப் பேச நினைத்திருந்தவள், தன் அம்மா லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்த விதத்தைப் பார்த்ததும், அதற்குமேல் எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியாகிவிட்டாள்.

சுற்றும்முற்றும் பார்த்த கவிதாவுக்கு நெஞ்சு படபடத்தது. குமட்டிக்கொண்டு வந்தது. தன்னுடைய முறை மறுபடி எப்போது வரும் என்று காத்திருந்தாள். பணியாளப் பெண், “திரும்பத் திரும்ப வந்துருட்டுருக்காதீங்க. எத்தீனி மொற சொல்றது. ப்ளாடர் ஃபுல்லா இருக்கணும் புரியுதா?” என்று பொதுவாக சொல்லிக்கொண்டே அங்கிருந்த எல்லாப் பெண்களையும் ஒரு பார்வை பார்த்தவளின் கண்கள் கவிதாவிடம் நிலைத்தன.

இன்னும் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதைவிட ரெஸ்ட் ரூம் பக்கம் போகவேகூடாது என்பது எவ்வளவு அப்ஸர்ட் என்று தோன்றியது. அரைமணி நேரத்தில் ஏகப்பட்ட தண்ணீர் குடித்ததில் வாந்தி வருவது போலிருக்க, சிறிது நடந்தால் ஓரளவு நன்றாக இருக்கும் என்று எழுந்தவள் தன்னையும் அறியாமல் தாங்கமுடியாதவளாக பாத்ரூமுக்குள் நுழைந்துவிட்டிருந்தாள். அப்பாடா! எவ்வளவு ஆசுவாசமாக இருக்கிறது. இதைப் போன்ற மன நிம்மதி தரும் விஷயங்கள் உலகில் வேறு என்னென்ன இருக்கின்றன என்ற யோசனையுடன் ஹாலுக்கு வந்தாள்.

இருக்கையில் அமர்ந்த நொடி “டோக்கன் 122” என்ற அழைப்பு வந்தது. இது என் டோக்கன் நம்பர். சுதாரித்து எழுந்தவள் கவுண்ட்டரில் இருந்த பெண்ணிடம் மெல்லிய குரலில் விளக்க ஆரம்பித்ததும், “ஏம்மா! உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னா புரியாதா? தண்ணீ நெறய குடிக்கணும். பாத்ரூம் போவக்கூடாதுனு படிச்சுப் படிச்சுச் சொன்னப்ப, நல்லா மண்டய மண்டய ஆட்டுன. போமா. போய் வொக்காரு. நல்லா நெறய்ய தண்ணீ குடி. பாத்ரூம் போவாத. சரியா?” என்று உச்சஸ்தாயியில் கத்தினாள். ஹாலில் இருந்த எல்லாத் தலைகளும் அவள் பக்கமாகத் திரும்பின. கூனிக் குறுகியபடி இருக்கையில் போய் அமர்ந்தாள். மறுபடியும் தண்ணீர், குமட்டல்,  காத்திருப்பு என்பது புரிந்தது.

ஏதோ உறுத்துவதுபோலிருக்க திரும்பிப் பார்த்தாள். பின் வரிசை இருக்கையில் இருந்த ஒருவன் தன்னை வெறித்துப் பார்த்தபடி இருந்ததைக் கண்டதும் எரிச்சல் அடைந்தாள். இந்த உடன் உணர்த்தும் ஆற்றல் எப்படிச் செயல்படுகிறது? ஒரு தவறான பார்வையை மூளை இனங்கண்டு அடுத்த மில்லியன் நொடிகளுக்குள் கழுத்தைத் திருப்ப வைத்து, கண்களைத் தேடவிட்டு, ஏ அம்மா! என்று தோன்றியது. இது நல்லதா, கெட்டதா? ஒருவன் முறைப்பதைத் தெரிந்துகொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம்? இருக்கிற கடுப்பை இது இன்னும் அதிகமாக்கும், வேறென்ன? இல்லை. இந்த உள்ளுணர்வு சில மோசமான சம்பவங்கள் நடக்காமல் நம்மைக் காப்பாற்ற முதலில் வாய்ப்பு தருகிறது.

கவிதாவின் வீடு இருந்த அதே தெருவில் செம்பருத்தி பூத்துக் குலுங்குகிற ஒரு வீட்டை அவளுடைய ஸ்கூட்டி கடக்கும் போதெல்லாம் தன் புல்லட்டை உறுமவிட்டுக்கொண்டு அவள் பார்வை படும்படி ஒருவன் அமர்ந்திருப்பான். இதையும் அவள் உள்மனக் குரல், தன் மெல்லிய முணுமுணுப்பின்மூலம்தான் முதலில் அவளுக்குத் தெரியப்படுத்தியது. அவளுடைய ஸ்கூட்டி அருகே வந்ததுமே இவன் தன் வண்டியை ஸ்டார்ட் செய்வது, மொபைலில் ‘கருகரு விழிகளால்’ என்று சிச்சுவேசன் சாங்க் வைப்பது என்ற சேஷ்டைகள் நாளுக்கு நாள் வளர்ந்தன.

இது எதேச்சையாக நடந்தது என்று நினைக்காதே என்று அவளுக்குள் ஒரு குரல் கூறியதைப் புறக்கணித்துக்கொண்டே இருந்தபோதுதான் ஒரு நாள் அவன் அவளைப் பார்த்துத் தன் உதட்டை மெதுவாக ஸ்லோமோஷனில் சுழற்றித் தன் நாக்கைத் தடவி ஈரப்படுத்தியது நடந்தது. உவ்வேக். என்ன கருமம்டா இது. மனசுக்குள் ஒரு கை எழுந்து தலையில் அடித்துக்கொண்டது. பிறகு அவனை மொத்து மொத்தென்று மொத்தியது. பிறகு வேறேதோ வேலைகளில் அன்று அது மறந்துபோனாலும் மாலை அந்த வீட்டைக் கடக்கும்போது திடுக் என்றது. நல்லவேளை அந்த ஜந்து இல்லை என்று நிம்மதியடைந்தது. அடுத்த நாளில் இருந்து பக்கத்துத் தெரு வழியாக சுற்றிக்கொண்டு ஆஃபீசுக்குப் போகத் தொடங்கியதில் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாள். அல்லது, அப்படித்தான் நினைத்திருந்தாள்.

நாளை ஞாயிற்றுக்கிழமைதானே, வழக்கத்தைவிட அரைமணிநேரம் தூங்கலாம் என்று நினைத்துக் கூடத்தில் அமர்ந்து கணவனுடன் டிவி பார்த்துக்கொண்டிருந்தாள். உள்ரூமில் இருந்து சத்தமாக பாக்கியத்தம்மா,”ஏம்மா கண்ணு. நாள காலீல சீக்கிரம் எழுந்துடு. குளிச்சு மொழுகி பூஜ செய்யணும். கோயிலுக்குப் போய் நெய் வெளக்கேத்தணும். நெறய வேல கெடக்கு. சீக்கிரம் போய்த் தூக்குங்க”

என்றதும் மறுவார்த்தை பேசாமல் எழுந்த பார்த்திபனைப் பின் தொடர்ந்து படுக்கையறைக்குப் போனபோதுகூட அடுத்த நாள் தன் தலைமீது இப்படியொரு இடியாக இறங்கப்போகிறது என்று அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை.

சமையல் முடித்துவிட்டு ஹெட்ஃபோனில் பாட்டு கேட்டுக்கொண்டே சாயந்திரம் தேய்க்கத் தோதாக சிங்க்கில் பாத்திரத்தை இட்டுக்கொண்டிருந்தவளிடம் சைகையில் பாக்கியத்தம்மா ஏதோ சொல்லவும், பாட்டு வால்யூமைக்  குறைத்தாள். “சீக்கிரம், சீக்கிரம். வா வா. இதெல்லாம் அப்புறம் செஞ்சுக்கலாம். வா” என்று கையைப் பிடித்து இழுக்காத குறையாக வாசலுக்கு அழைத்துச் சென்றவள்

ஹாலில் இருந்த மஞ்சள் கலந்த தண்ணீர்க் குடத்தை எடுத்துக்கொண்டாள். மேளச் சத்தமும் நாதஸ்வரமும் பக்கத்தில் எங்கிருந்தோ கேட்டன. என்ன ஏது என்று புரியாமல் தெரு வாசற்படியில் நின்றவளின்மீது தொபதொபவென்று குடத்தில் இருந்த மஞ்சள் நீரைக் கொட்டினாள். ஒரு நிமிடம் கவிதாவின் நெஞ்சு, விடாமல் அடித்துக்கொண்டது. இது என்ன இது. தெப்பக்கட்டையாக, அதுவும் தெருவில். புடவை முழுதும் அங்கங்கு ஒட்டி வழிந்துகிடக்க நீர்த் துளிகள் உடலில் இருந்து தெறித்துக்கொண்டிருந்தன.

“அத்தை, இது …என்னதிது?” என்று கேட்க வாயெடுத்த அதே நொடியில், கவிதாவின் கையைப் பிடித்திழுத்து மஞ்சள் வைத்திருந்த ஒரு கிண்ணத்தை அவளிடம் தந்த அவளுடைய மாமியார், ”காவடி வருது பாரு. காவடி எடுத்தாரவங்க கால்ல தண்ணிய ஊத்திக் கழுவி,  இந்த மஞ்சளை வெச்சுவிடு. சஷ்டி காவடி. அடுத்த வருசம் இந்த நேரம் நம்ம வீட்டுக்கு ஒரு ஆண் வாரிசு வந்துட்டுருக்கும். வா” என்று கிட்டத்தட்ட இழுத்து வந்தாள். மேளச் சத்தம் நெருங்கி வருவது தெரிந்தது. பத்துப் பதினைந்து பெண்கள் கும்பலாக வருவதும், வீட்டின்முன் நிற்பதும், பூக்களால் அலங்கரிக்கப்பட்ட காவடியும் முகத்தில் வழிகிற தண்ணீரில் கலங்கலாகத் தெரிந்தன. “கண்ணு! பூசுமா” மெல்ல லாவகமாக அவளை மண்டியிட வைத்துக் கிண்ணத்தைத் தந்தாள். மாமியார் சொல்லச் சொல்ல வெள்ளை வெளேரென்று இருந்த அந்தக் கால்களை வேறு வழியின்றி நீரூற்றிக் கழுவினாள். நாசூக்காக வெட்டப்பட்ட தன் விரல் நகங்களில் மஞ்சளும் குங்குமம் படிய அதை அந்தக் கால்களில் வைத்தவள், வழக்கமான மனதின் குறுகுறுப்பு மணி ஒலிக்க நிமிர்ந்து பார்த்தாள். அவளைப் பார்த்து மறுபடியும் அந்த நாக்கு உதடுகளை ஈரப்படுத்தியது தெரிந்தது. அந்த முகம் ! இல்லை. தனக்கு ஒருவேளை அப்படித் தோன்றியதா? இல்லை அவனேதானா?

வேகவேகமாக உள்ளே செல்லும் முன் திரும்பிப் பார்த்தபோது தெள்ளத் தெளிவாகத் தெரிந்தது. அவன்தான். குளியல் அறைக்குள் நுழைந்தவள், உடல் முழுக்கப் படர்ந்த அவமானத்தைத் தேய்த்தெடுப்பதுபோல் சோப்பைப் போட்டுப் ‘பர் பர்’ என்று தேய்த்தாள். அதில் போய்விடும் அழுக்கா இது என்று நினைத்துக்கொண்டு அரைமணி நேரம் கழித்துத் தோற்றுப் போனவளாக வெளியே வந்தாள். டைனிங்க் ஹாலில் அம்மாவும் மகனும் சாப்பிட்டுக்கொண்டிருக்க, “வா கண்ணு சாப்பிடலாம்” என்று ஒலித்த மாமியாரின் குரல் காதில் கேட்காததுபோல் வேகமாகப் படியேறித் தங்கள் அறைக்குள் புகுந்துகொண்டாள்.

இது நடந்து இன்றோடு ஒரு மாதமாகி இருக்கும். பாக்கியத்தம்மா, தன் மகனிடம் சொல்லும் விதமாகச் சொல்லி இதோ ஸ்வேதா இந்த ஸ்கேன் சென்டரில் காத்திருக்கிறாள். “கவிதா! நீ பர்மிஷன் சொல்லிட்டு நேரா அங்க போயிட்றியா? நான் உன் ஆஃபீசுக்கு வந்து, உன்னைக் கூட்டிட்டு, அங்கேர்ந்து டிராஃபிக்கில் சிக்கி போய்ச் சேர்றதுக்குள்ள ரொம்ப லேட் ஆகிடும்” என்றவனைப் பார்த்துச் “சரி” என்று தலையசைத்ததை நினைத்து இப்போது வருத்தப்பட்டு என்ன ஆகப் போகிறது? பார்த்திபன் உடனிருக்க வேண்டும் எனுமளவுக்கு அதைப் பெரிதாக ஆசை என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. ஆனால், யாராவது கூட இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. எதற்கு என்று தெரியவில்லை. இந்த லேப் டெக்னிஷியன்ஸ், நர்ஸ்கள், என மருத்துவமனைபோன்ற ஒரு அமைப்பு இந்த உணர்வை ஏற்படுத்துகிறதா? இல்லை, நான் உண்மையிலேயே டிபண்டன்ட் ஆக இருக்கிறேனா?

அலுவலகத்தில், “ப்ரமோஷன் வரும் நேரம்”  “நான் இப்ப திருமணத்துக்குத் தயார் இல்லை” என்றெல்லாம் அவ்வப்போது அம்மாவிடம் சொல்லிக் கொண்டேதான் இருந்தாள் கவிதா. ஆனால் நம்ம சாதியில், நல்ல சம்பளம்; நல்ல குடும்பம் என்ற தன் மூன்று க்ரைடீரியாக்களில் யார் எல்லாவற்றிலும் சரிவருகிறாரோ அவர்தான் மாப்பிள்ளை என்பதில் அப்பா உறுதியாக இருந்தார்.

பொறுக்கமாட்டாமல் ஒருநாள் அம்மாவிடம், “மா, யார்னே தெரியாத ஒரு ஆளோடு எப்படிமா யூ வாண்ட் மீ டு ஸ்பெண்ட் மை எண்டயர் லைஃப்?” என்று கேட்டாள் கவிதா.

கீதா, “சீரியஸ்லி, கவிதா! உனக்குக் கல்யாணம் வேணாம். அதுக்காக இப்ப புதுசா இதக் கண்டுபிடிச்சிருக்கியா?”

“இதுதான்மா ரொம்ப முக்கியமான காரணம்”

“அதுக்காக ஆஃபீஸ்ல ப்ரொபேஷன் பீரியட், ட்ரெயினிங்க் மாதிரி இந்த விஷயத்திலும் ஏதாவது பண்ணலாம்னு நெனக்குறியா? ஸ்டுப்பிட்மாதிரி பேசாத”

“மம்மி….”

“ஏன், நான் அப்படிதான் கல்யாணம் பண்ணிட்டு வந்தேன். நாங்க வாழலயா? கொழந்த பெத்துக்லயா? நல்லா இல்லையா?”

“அதெல்லாம் வேணாம். நீ ஹேப்பியா இருக்கியா?”

“……..”

“இதான். இதுக்கு உடனே திடமான இல்லனுகூட சொல்லமுடியாம நீ யோசிக்கிற பாத்தியா மம்மி. எனக்கு இந்தமாதிரி ஒரு வாழ்க்கை வேணாம்”

“கல்யாணம் பண்ணாம அப்படியே இங்கேயே இந்த வீட்லயே வொக்காந்திருப்பியா? எல்லோரும் கேக்க ஆரம்பிச்சிட்டாங்க. எந்த விசேஷத்துக்குப் போனாலும் உங்க பொண்ணுக்கு வயசாச்சே இன்னும் கல்யாணம் பண்ணலயா னு கேக்கறாங்க”

எரிச்சலான கவிதா,”யாரோ கேக்குறதுக்காக எல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்கமுடியாது” என்றாள்.

அம்மாவுக்கும் கவிதாவுக்கும் இடையே இப்படி எத்தனையெத்தனையோ வாக்குவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது வெகு சாதாரணமாக இந்தக் கல்யாணத்தை முடிவுசெய்தார் அப்பா. “சேம் ஓல்ட் ஸ்டோரி, நல்ல படிப்பு, சம்பளம், நல்ல குடும்பம்”  என்று அம்மாவிடம் அடம்பிடித்தாளே தவிர தன் சிறுவயதுமுதலே இறுக்கமான முகத்துடனேயே பார்த்துப் பழகிய அப்பாவிடம் எதையும் பேச கவிதாவுக்குப் பயமாக இருந்தது. பார்த்திபன் ஃபோன் எண்ணை வாங்கி அவனிடம் சில நாட்கள் பேசிய பிறகு “சரி. நாட் பேட்” என்று தோன்றினாலும் மனதுக்குள் புலம்பியபடிதான் கவிதா தன் திருமண வரவேற்பில் நின்றாள்.

ஃபோனில் பேசும்போது கீதா சில சமயங்களில், “எல்லாம் நல்லபடியா போகுதுல்ல?” என்று கேட்பாள்.

அடுத்த நொடியே,“எது?” என்று கேட்கத் தோன்றும்.

“கவிதா, உனக்கு நாக்கில் கொடுக்கு. சுரீர்னு இருக்கு நீ பேசினா” சிறிய வாக்குவாதங்களின்போது அவள் பேசுவதைப் கேட்டு, நெருங்கிய தோழியான ரம்யா சொன்னது நினைவுக்கு வந்து எதுவும் பேசாமல், அம்மாவை வெறித்துப் பார்ப்பாள்.

இப்போது, தன் டோக்கன் எண் அழைக்கப்படுவதற்காகத் தனியாக இங்கு அமர்ந்திருக்கிறாள். அம்மாவைக் கூப்பிட்டிருக்கலாமோ? “நானும் உங்கப்பாவும் எங்க லைஃப்ல…” என்று எதையாவது பேசிப் பேசிக் கடுப்பை ஏற்படுத்தியிருப்பாள். ஆனாலும் “மூணு வருஷம் ஆச்சுல! மாமியார் ஏதாவது பேசுனாகூட பொறுத்துக்க. எதுக்கும் கவலப்படாதடா” என்று கைகளை இறுகப் பற்றிக் கொள்வாளே, அதுவே போதும் போலிருந்தது. ஆனால் அம்மாவைத் தொந்தரவு செய்யவேண்டாம். சமாளிப்போம்.  வேறொரு கூடு கட்டிக்கொண்ட பிறகு எந்தப் பறவையாவது அம்மாவின் கூட்டுக்கு ஆதரவு தேடிப் போகிறதா என்ன? அதுவும், இது தங்கத்தால் செய்த கூ(ண்)டுவேறு.

நிறைய மருத்துவர்கள், வெவ்வேறு விதமான சிகிச்சைகள், ஸ்கேன்கள், வாராவாரம் ஒரு விரதம், அவ்வப்போது குலதெய்வ வழிபாடு, நேர்த்திக் கடன் செலுத்துவது, காசு முடிந்து வைப்பது, மரத்தில் தொட்டில் கட்டுவது என்று வாழ்க்கை ஏன் கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது? இல்லை. அது எப்போதுமே என் கையில் இருந்ததே இல்லை.

ஆஃபீசில், ரம்யா, “இப்பல்லாம் இதெல்லாம் ரொம்ப சிம்ப்பிள். ரொம்ப மாடர்ன் சிகிச்சைகள் வந்துடுச்சு ஸ்வேதா. ஜஸ்ட் கோ ஃபார் இட்” என்றாள். அவள் சொன்ன எல்லா நவீன முறைகளையும் நெட்டில் போட்டுப் பார்த்த கவிதா, ஆன்லைனில் எது வாங்கினாலும் ரிவ்யூ படிக்கும் பழக்கத்தில் பக்கவிளைவுகள் குறித்தும் பொறுமையாகப் படித்துப் பார்த்தாள். பகீர் என்றது. நம் நாட்டில், வெளிநாடுகளில் என்று எல்லாவற்றையும் அலசினாள். எதில்தான் பக்கவிளைவு இல்லை என்று அதை எளிதாகக் கடக்க முடியாமல் தவித்தாள். எடை அதிகரிப்பு, நரம்புத் தளர்ச்சி, வெகு விரைவில் வயதான தோற்றம், பெரும்பாலும் இரட்டைப் பிள்ளைகள், அதனால் குழந்தை வளர்ப்பில் சந்திக்கும் சிக்கல்கள் என ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான பிரச்சனைகளைச் சந்தித்ததைப் பற்றித் தெரிந்துகொண்ட பிறகு, இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு குழந்தை தேவையா? குழந்தை தேவை என்பதைவிட குடும்பத்துக்கு வாரிசு தேவை.

“அப்புறம் கல்யாணம் செய்து கொள்கிறேன்” என்றாள். அது நடக்கவில்லை. “பொறுமையாக குழந்தை பெற்றுக்கொள்ளலாம்” என்று நினைக்கிறாள். அதற்கும் விடமாட்டேன் என்கிறார்கள். இங்கு நான் யார்? மகள், மனைவி, மருமகள் அப்புறம் அம்மா. எனக்குப் பிடித்ததை நான் செய்யவே முடியாதா? தனக்குப் பிடித்ததை மட்டும் என் அம்மா செய்ய நினைத்திருந்தால்? என்னை வளர்த்து ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள். தன் சிந்தனை போகும் பாதையை உடனே தடுத்தாள். இனஃப். இதுதான் இங்கு சிக்கலே. இதுதான் தொடர்ந்து நடக்கிறது. இதையேதான் என் கொள்ளுப்பாட்டி முதற்கொண்டு செய்திருப்பாள். நான் ஏன் அதையே செய்யணும்?

உடனே அம்மாவுக்கு ஃபோன் செய்து அவள் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்துவிட்டாளா என்று உறுதி செய்துகொண்டபின் ஒரு கால் டாக்சி புக் செய்து வீட்டுக்குப் போய் இறங்கினாள்.

தனக்கு ஸ்கேன் சென்டரில் தோன்றிய, இவ்வளவு காலமும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லி வந்த விஷயத்தைத்  தெளிவாக காப்ஸ்யூல் வடிவத்தில் அம்மாவிடம் சொன்னாள்.

அம்மா, “அப்ப, கல்யாணம் வேண்டாம். குழந்தை வேண்டாம். அப்படியே வேலை செஞ்சி, ஷாப்பிங்க் போய், சாப்பிட்டு, தூங்கி, ஊர் சுற்றி….இதான் வாழ்க்கையா?” என்றாள்.

“இல்லை. லவ், கல்யாணம், குழந்தை, எதுவா வேணா இருக்கட்டும். அது வேணுமா வேணாமானு சம்பந்தப்பட்டவங்க முடிவு பண்ணிக்கிறோம். யாரோ கல்யாணத்தில, கருமாதில பாத்து உங்களக் கேட்டாங்க னு உடனே இங்க வந்து குதிக்காதீங்க. நீங்களும் இராத்திரி தூக்கம் கெட்டுப்போய், எங்க உயிரையும் எடுக்காதீங்க. இத்தனை ஃபெர்ட்டிலிட்டி ஹாஸ்பிட்டல் எப்படி வந்தது இங்க? எல்லாம் “இன்னும் விசேஷம் இல்லையா?” னு யாரோ உங்களைக் கேட்ட ஒரே கேள்வியால்தான்”

“எல்லோரும் ஒரு அக்கறைல கேக்குறாங்க. அதுவொரு குத்தமா?”

“அதுபேரு அக்கறை இல்லம்மா. அநாகரீகம். கொரோனா சமயத்தில் யாரும் யார் கிட்டேயும் நெருங்காம, யாரையாவது தொட்டாலே தனக்கு ஏதாவது வந்துடும்னு பயத்தில் இருந்தோமே, அதுதான் உண்மையிலேயே நம்ம சுபாவம். தனக்குப் பிரச்சனை இல்லாதவரை தான் ஓட்டல், உரசல் எல்லாம். கொரோனாவுக்கு இன்னும் நிறைய பெயர்கள் இருக்கு. கடன், சிக்கல், அவமானம் இப்படி ஏதாவது ஒன்று வரட்டும் நமக்கு. எல்லாரும் ரொம்ப தொலைவு தள்ளிப்போய் நிப்பாங்க. அப்ப எங்க போகும் இந்த அக்கறை”

கொஞ்சம் பயந்தவளாக அம்மா, “ஸ்கேன் சென்டர்ல இருந்து திடீர்னு கிளம்பி இங்கவந்து உக்காந்துக்கிட்டு ஏன் இப்படி உளர்ற ஸ்வேதா? மாப்பிள்ளையை வரச் சொல்லவா? உங்களுக்குள்ள ஏதாவது சண்டையா” என்றாள்.

“ஒண்ணுமே இல்லை. நான் பாத்துக்கறேன்மா” என்றபடி பார்த்திபனுக்கு ஃபோன் செய்து, “நான் அம்மா வீட்டில் இருக்கேன். நாளைக்கு இங்கிருந்தே ஆஃபீஸ் போய்ட்டு அப்படியே வீட்டுக்கு வந்துர்றேன்” என்று சொல்லிவிட்டு, டி.வியை ஆன் செய்து தனக்குப் பிடித்த நிகழ்ச்சியைத் தேடியெடுத்து வைத்தபடி, சிறுவயதில் மகிழ்ச்சியாக இருக்கையில் அவள் வழக்கமாகச் செய்வதுபோலத் தன் அம்மாவைப் பார்த்து வெகு காலத்துக்குப் பிறகு கண் சிமிட்டினாள்.

பிறகு பையிலிருந்த பாட்டிலை எடுத்தவள்  மிச்சமிருந்த தண்ணீரை ஒரே மூச்சாகக் குடித்துவிட்டு இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தாள்.

முனைவர் கயல், வேலூரில் தன்னுடைய பள்ளி, கல்லூரிப் 

படிப்பை முடித்து தன் 26 ஆண்டுகாலக் கல்லூரிப் பணியில், 

வணிகவியல் துறை விரிவுரையாளராக, மேலாண்மையியல் துறை

இயக்குனராாகப் பணியாற்றி, வேலூரில் உள்ள முத்துரங்கம் அரசு 

கலைக் கல்லூரியில் வணிகவியல் துறை இணைப் பேராசிரியராகத் 

தற்போது பணியாற்றுகிறார்.

இவர் மூன்று துறைகளில் முதுகலைப் பட்டமும், வணிகவியல், 

வணிக மேலாண்மையியல் ஆகிய இரண்டு துறைகளில் முனைவர் 

பட்டமும் பெற்றுள்ளார். 

கல்லூஞ்சல் (2015), மழைக்குருவி (2016), ஆரண்யம் (2018) 

ஆதிவாசிகள் நிலத்தில் போன்சாய் (2019) உயிரளபெடை (2020) 

ஆகிய கவிதை நூல்களும், கனவு இல்லம்: அமெரிக்கச் சிறுகதைகள் 

(2022), பழைய துர்தேவதைகளும் புதிய கடவுளரும்: சமகாலத் 

திபெத்தியச் சிறுகதைகள் (2022), போரொழிந்த வாழ்வு (நாவல்) 

(2024), இஸ்தான்புல்லின் இரகசியக் கனவுகள் (நாவல்) (2025) ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. ‘போரொழிந்த வாழ்வு’ நாவல் 2024 ஆம் வெளிவந்த சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான பொள்ளாச்சி 

நா மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருது (இரண்டாம் பரிசைப்) பெற்றுள்ளது. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *