கமலா முரளி

கடைசிப் பருவத் தேர்வுகள் முடிந்து விட்டன. விஷ்வாவுக்கு ஆறு நாட்கள் விடுமுறை.

“ஆதித்யா கூப்பிடறான், விளையாடப் போகட்டுமா?”  காலையிலேயே ஆரம்பித்துவிட்டான்.

“சாயங்காலமா போலாம். இப்ப வெயிலா இருக்கும்”

“இல்லம்மா, கீழ நிழலாத் தான் இருக்கும்”

“இப்போ கொஞ்ச நேரம் படி. கதை புத்தகம் வாங்கிக் கொடுத்து இருக்கேன். அதைப் படி”

“அம்மா, இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்?”

“விஷ்வா, அர்த்தம் தெரியலன்னா அகராதியை எடுத்துப் பாரு. அம்மாவுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு.தொந்தரவு பண்ணாத.” என்றார் சித்ரா.

“அம்மா இங்க பாரு, எப்படி வண்ணம் தீட்டி இருக்கேன்”

“அம்மா, பசிக்குதும்மா, ஏதாச்சும் தரயா?”

“அம்மா, அப்பா எப்ப வருவாரு?”

“ஏய், கொஞ்சம் அமைதியா இரு. ஒரு முக்கியமான தொலைபேசி கலந்துரையாடல் இருக்கு” என்றார் சித்ரா.

“கீழ ஆதித்யா குரல் கேட்குது. நானும் போகட்டா”

அம்மாவைக் கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தான் விஷ்வா. சித்ரா பொறுமை இழந்து கொண்டு இருந்தார்.

அவரது ‘திட்டப் பணியில்’ இன்று முக்கிய நாள். நிறைய பணிச்சுமை. விஷ்வா மீண்டும் மீண்டும் அழைத்ததால் பணியில் கவனம் சிதறியது. இன்னும் சற்று நேரத்தில் கலந்துரையாடல் வந்துவிடும்.

‘டமால்’ என ஏதோ கீழே விழும் சத்தம் !

“அம்மா” என விஷ்வா கத்தினான்.

மடிக்கணிணியைத் தள்ளி வைத்துவிட்டு ஓடினார் சித்ரா.

நல்ல வேளை! விஷ்வாவுக்கு ஒன்றும் இல்லை. மேசையில் இருந்த பீங்கான் கிண்ணம் கீழே விழுந்து உடைந்து விட்டது.

“என்னாச்சு விஷ்வா?” கண்கள் கலங்கியபடி நின்றிருந்த பிள்ளையை அணைத்தபடி கேட்டார் சித்ரா.

மடிக்கணிணியில் அழைப்பு மணி. சித்ரா மீண்டும் தன் அறைக்கு செல்லத் திரும்பினார்.

“அம்மா, கீழ போகட்டுமா?”

அப்போதைக்கு அதுவே சித்ராவுக்கும் நல்ல தீர்வு.

“சரி, வெயில்ல விளையாடக் கூடாது. எந்த வண்டியையும் சேதம் பண்ணிடக் கூடாது”

“சரிம்மா”.

அந்த அடுக்குமாடிக் குடியிருப்பு வளாகத்தை இரண்டு முறை சுற்றி வந்து விட்டான். நண்பர்கள் குழுவில் யாரையும் காணோம்.

”இந்த அம்மா- அப்பாக்களிடம் இருந்து ஒரு ‘அனுமதி’ பெற்று கீழே வருவதும் கடினம் தானே!  ஆனால், எப்படியும் வந்து விடுவார்கள்” என நினைத்தான் விஷ்வா.

வளாகத்தின் முன் பகுதிக்கு அருகில் சிறிது நேரம் உட்காரலாம். ஏதேனும் வாகனங்கள் வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கலாம் என நினைத்தான்.

“என்னடா தம்பி, தனியா உலாத்திகிட்டு இருக்க. உன் நண்பர்கள் யாரும் வரலியா?” என்றார் குடியிருப்பின் காவல் பணியாளர்.

அவர் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அந்தப் பகுதியில் நல்ல காற்றும் இருந்தது.

”இல்ல தாத்தா. யாரையும் காணோம்” அவன் குரலில் சலிப்பு தெரிந்தது.

”ஏம்பா தம்பி, என்னப் பாத்தா தாத்தா மாதிரியா தெரியுது?”

“ஆங், அப்ப நான் என்ன உங்க தம்பி மாதிரியா தெரியுறேன்? எங்க அப்பாவுக்குக் கூட உங்க தம்பி வயசு இருக்காது”

“ இந்த கால பசங்க கிட்ட வாயக் குடுத்து மீள முடியுமா ? உன் பேரென்னப்பா?

“விஷ்வா”

“விஷ்வா…சின்ன பசங்கள ‘தம்பி’ன்னு கூப்பிடறது ஒரு வழக்கம்”

“அத மாதிரி  உங்கள மாதிரி பெரியவங்கள ’தாத்தா’ ன்னு கூப்பிடறது ஒரு வழக்கம் தாத்தா”

“ரொம்ப வயசாயிருந்தா சரி தான்,  நா எவ்வளவு ஃபிட்டா பலசாலியா இருக்கேன் பாரு” என்று கதிரேசன் என எழுதியிருந்த உலோகப் பட்டை ஜொலிக்க கம்பீரமாக நின்றார் பெரியவர்.

அன்று வார இறுதி நாள் கிடையாது. அதனால், வாகனங்களோ, விருந்தினர்களோ யாரும்  வரவில்லை.

“விடுமுறையில ஊர் சுத்த எங்கயும் போகலியா?” என்று கேட்டார் பெரியவர்.

“எங்க அம்மா அப்பாவுக்கெல்லாம் வேல இருக்கே . உங்கள மாதிரி சும்மா நாற்காலில உட்காந்தா இருக்காங்க”

“ஆதித்யா… ஆதித்யா” என சத்தமாகக் கத்தினான் விஷ்வா.

அங்கிருந்து கத்தினால் ஆதித்யா வீட்டுக்குக் கேட்கும்.

வெண்சீருடை அணிந்த மேற்ப்பார்வையாளர் இன்னொரு பகுதியில் இருந்து வந்தார்.

“என்ன சத்தம்! கதிரேசன் என்ன நடக்குது இங்க?”

கதிரேசன் நாற்காலியில் இருந்து எழுந்தார்.

“ஒண்ணுமில்ல சார், இந்த தம்பி இங்க வந்தாப்ல. அதான் யாருன்னு…”

“அநாவசியமா பேச்சு கொடுக்காதீங்க. யாரு தம்பி நீ ? என்ன வேணும்?”

“ஒண்ணும் வேணாம் அங்கிள் !”

விஷ்வா ’அங்கிள்’ என்று சொல்லி விட்டு கதிரேசனைப் பார்த்து கள்ளப் புன்னகை ஒன்றை அனுப்பினான்.

”இங்கெல்லாம் நின்னு பேசிகிட்டு இருக்கக் கூடாது”

“ஆதித்யா… ஆதித்யா” விஷ்வா  மேலே பார்த்துக் கத்தினான்.

“வீட்டுக்குப் போய் கூப்பிடுப்பா. அப்புறம், உங்களுக்கான பூங்காவுல மட்டும் தான் விளையாடணும், சரியா” என்றார் மேற்ப்பார்வையாளர்.

“அங்கல்லாம் இப்ப வெயிலா இருக்குமேப்பா” எனச் சொன்னார் கதிரேசன்.

ஆதித்யா வந்து விட்டான். கூடவே கார்த்திக், சிவா மற்றும் அனன்யா.

“வாடா, நாம வலது பக்கம் போயிடலாம். எல்லா வண்டியும் போயிருக்கும். அங்க விளையாடலாம்” என்றான் ஒருவன்.

“வண்டி நிறுத்துகிற இடத்தில விளையாடக் கூடாது. உங்களுக்கு எங்க விளையாட இடம் கொடுத்து இருக்காங்க?” என்றார் மேற்பார்வையாளர்.

“அங்க வெயிலா இருக்கே” என்றான் ஆதித்யா.

“சரி, கொஞ்ச நேரம் விளையாடிட்டுப் போகட்டுமே” என்றார் கதிரேசன்.

“கொஞ்ச நேரத்தில சண்டை போடுவாங்க. அடிச்சிப்பாங்க. அழுவாங்க. ஏதாவது வண்டி கண்ணாடியைக் கூட உடைப்பாங்க.  அப்புறம் நமக்குத் தான் பிரச்சினை ஆகும்” என்றார் மேற்ப்பார்வையாளர்.

“குடியிருப்போர் நல சங்கத்தில சொல்லி, ஒரு ஏற்பாடு செய்யலாம். அந்த ‘விசிட்டர்ஸ் ரூம்’ விருந்தினர் அறை சும்மாவே தான இருக்குது” என ஒரு தீர்வை முன் வைத்தார் கதிரேசன்.

”அத நாளைக்குள்ள ஏற்பாடு பண்ணலாம். இன்னிக்கி வீட்டுக்குப் போங்க”என்றார் மேற்ப்பார்வையாளர்.

“நாங்க விளையாட மாட்டோம் அங்கிள், கொஞ்ச நேரம் உக்காந்து பேசிட்டு போயிடறோம். ஓகே யா?” என்றான் விஷ்வா.

“சரி, சத்தம் கேட்டா விரட்டிடுவேன்”

“தேங்யூ அங்கிள்”என்று மேற்ப்பார்வையாளரைப் பார்த்துச் சொல்லி விட்டு, “வரோம் தாத்தா” என்று கதிரேசனைப் பார்த்துக் கண்ணைடித்தான் விஷ்வா.

தாத்தாவும் சிரித்தார். தம்பியும் சிரித்தான்.

00

கமலா முரளி

கமலா முரளி எனும் பெயரில் தமிழில் கதை, கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழிபெயர்ப்புப் படைப்புகளை எழுதி வரும்,இவரது இயற்பெயர்  திருமதி.கே.வி.கமலசுந்தரம் ஆகும்.

ஆங்கில இலக்கியம் மற்றும் கல்வியியலில் முதுகலைப்பட்டம் பெற்ற கமலா முரளி,சென்னை, பெரம்பூர்,விவேகானந்தா பள்ளியில் சில வருடங்கள் பணியாற்றிய பின், கேந்திரிய வித்யாலயா சங்கதனில் ஆங்கில ஆசிரியையாகப் பணியேற்றார். கேந்திரிய வித்யாலயாவின் தேசிய அளவிலான “சீர்மிகு ஆசிரியர்” விருதினை 2009 ஆண்டு பெற்றார்.

கமலா முரளியின்,கதை கட்டுரை, கவிதைகள் மற்றும் மொழியாக்கப் படைப்புகள் தினசரி.டாட் காம், மஞ்சரி, கலைமகள்,குவிகம் மின்னிதழ், கேலக்ஸி தளம், நமது உரத்த சிந்தனை, மலர்வனம், பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ், சிறுவர் வனம் ,ஆனந்தசந்திரிகை, மங்கையர்மலர், கோகுலம் , இந்து தமிழ்திசையின் மாயாபஜார் , வாசகசாலை, தினமலர் பட்டம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

இவரது “மங்கை எனும் மந்திர தீபம்”  (“எ லேடி வித் த மேஜிக் லேம்ப்”)எனும் மொழிபெயர்ப்பு நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இவர் எழுதிய, “இந்துமதி கல்யாணம் எப்போ?” என்ற சிறுகதைத் தொகுப்பு மணிமேகலைப் பிரசுர வெளியிடாக மலர்ந்துள்ளது.

மற்றும் இவரது சிறார் கதை நூல், “கிளியக்காவின் பாட்டு” லாலிபாப் சிறுவர் உலகம் வெளியீடாக வந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *