ஆயிற்று, பத்து வருடங்கள். இதுவரை நிலத்தைச் சென்று பார்க்கவில்லை. பாதி உயிர் நிலத்தை விற்றவுடன், காணாமல் போனது. பாதி உயிருடன்தான் நடமாடிக் கொண்டிருந்தோம்.

அவ்வப்போது நண்பன் சேகருடன் பேசும் போது, விசாரிப்பதோடு சரி.

“கை விட்டுப் போனதோட, நம்மளது இல்லன்னு ஆயிடுச்சு. அதப் போயிப் பாத்து என்ன பண்ணப் போறீங்க” என்ற மனைவியின் கேள்வி நியாயமாகப் பட்டாலும், மனசு தனது ஆசையை மட்டும் விடுவதாயில்லை.

பட்ட காலிலிலேயே படும் என்பதாக, இந்த ஐந்து வருடங்களில் அடுத்தடுத்து, கண் தெரியாத அத்தை சரோஜினியும், அம்மாவும் எங்களை விட்டுப் பிரிந்தார்கள்.

சரோஜினி அத்தை ஏற்கெனவே தினமும், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய்களுக்கு, நிறைய மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தது.

இந்த முறை தாரமங்கலத்தில், எனது வீட்டில் தங்கியிருந்தது. திடீரென ஒரு நாள் இரவு, மூச்சுத்திணறல் அதிகமாக இருந்தது. மனைவிக்குத் தெரிந்த குடும்ப மருத்துவரின் வீடு அருகில் இருந்தது. அவருடைய கைபேசியில் அழைத்துச் சொன்னதும், உடனே நேரில் வரச் சொன்னார். தெரிந்த ஆட்டோ டிரைவரை வரச் சொன்னோம். “சரோஜினி, டாக்டர் நேர்ல கூட்டிட்டு வரச்சொல்லி இருக்கிறார். சீக்கிரம் கெளம்பு” என்றேன். சின்ன வயதில் இருந்தே அத்தையை நாங்கள் மூவரும் பெயர் சொல்லியே அழைத்துப் பழகியிருந்தோம்.”என்னால் நடக்க முடியலடா கண்ணா” என்றது. கைத்தாங்கலாக அழைத்து வந்து, ஆட்டோவில் ஏற்றி, அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றோம். டாக்டர் லுங்கியில், எங்களுக்காக காத்திருந்தார். பரிசோதனை செய்த பிறகு, என்னைத் தனியே வரச் சொன்னார்.”கண்ணன், லங்ஸ் முழுக்க கொலாப்ஸ் ஆகியிருக்கு. இன்னிக்கு ராத்திரி தாங்கறதே கஷ்டம். வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போய்டுங்க” என்றார். “என்ன சார் இப்படிச் சொல்றீங்க” என்றேன்.”முடிஞ்சா, நானே எங்காவது கூட்டிட்டுப் போங்கன்னு சொல்லுவன். ஆனா, இது ரொம்பக் கஷ்டமான கேஸ். பொழைக்கிறத்துக்கு வாய்ப்பு ரொம்பக் கம்மி. அதனாலதாம்பா சொல்றன்”. “ரொம்ப நன்றி டாக்டர்” என்று சொல்லி விட்டு, அவருடைய பீஸைக் கொடுத்து விட்டு, அதே ஆட்டோவில் வீடு திரும்பினோம்.”கண்ணா, என்னால மூச்சு விட முடியல. டாக்டர் என்ன சொன்னாரு?” என்று கேட்டது சரோஜினி.”தொடர்ந்து மாத்திரை சாப்பிடச் சொன்னாரு. ரெண்டு நாள் கழிச்சு வந்து பாக்கச் சொன்னாரு. சரியாயிடும் தான் சொன்னாரு. இப்ப நல்லாத் தூங்கு. காலையிலப் பாக்கலாம்” என்றேன். எல்லோரும் தூங்கச் சென்றோம். ஆனால் யாருக்கும் தூக்கம் வரவில்லை. சரோஜினி இப்போது மூச்சு விட ரொம்பவும் கஷ்டப்பட்டது. இழுத்து இழுத்து, மூச்சு விட ஆரம்பித்தது. அண்ணன் சந்துருவிற்கும், தம்பி ராஜூவிற்கும், போன் மூலம் தெரியப் படுத்தினேன். அதிகாலையில் அத்தையின் உயிர் பிரிந்தது. அழுது கொண்டே இருந்தேன். அவரும் எங்களுக்கு ஒரு அம்மாதான். அவர் மடியில் அமர்ந்து எத்தனையோ நாட்கள் சாப்பிட்டு இருக்கிறோம்.

காலையில் அனைவரும் வந்து சேர்ந்ததும், நிலத்துக்கு அருகில் இருக்கும், மேட்டுப்பட்டி பொது இடுகாட்டில் புதைப்பது என முடிவானது. வேலைகள் மளமளவென நடந்தது. முடிவில், சரோஜினி அத்தைக்கு மண் இட்டுக் குழி மூடினோம்.

நாட்கள் வேகமாக ஓடின. எல்லோரும் தங்களது வேலைகளில் பிஸியாக இருந்தோம்.

அண்ணன் சந்துரு ஒரு ஞாயிறு காலையில் போன் செய்தான். அம்மாவிற்கு மார்பகம் அருகில் சில கட்டிகள் இருப்பதாகவும், வழக்கமாகக் காண்பிக்கும் டாக்டர், எதற்கும் மார்பகப் புற்றுநோய்க்கு ஒரு முறை செக்கப் செய்து பார்த்து விடலாம் என்று சொன்னதாகவும், கூறினான்.

தெரிந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எல்லோரையும் கலந்து ஆலோசித்த பிறகு, கோவையில் இருக்கும் அந்த மருத்துவமனையில் காண்பிப்பது என்று முடிவானது.

சந்துருவும் நானும் அம்மாவுடன் அதிகாலையிலேயே, பேருந்தில் சென்று, மருத்துவமனையை அடைந்தோம். புறநோயாளியாக நுழைவுச்சீட்டு வாங்கிய பிறகு, டாக்டர் சில பரிசோதனைகளைப் பரிந்துரை செய்தார். இந்தப் பரிசோதனைகளின் முடிவுகள் வரத் தாமதமாகும் என்பதால், உள்நோயாளியாக மாற்றினார்கள். அவற்றில் ஒன்று, பயாப்சி என்னும் பரிசோதனை. அந்த லேப், மருத்துவமனையிலிருந்து சற்று தொலைவில் இருந்தது. ஆட்டோவில் பயணித்து, இருபது நிமிடங்கள் கழித்து, லேபை அடைந்தோம்.

பெயர் கொடுத்து, பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு, அம்மாவைத் தனியாக ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். சற்று நேரத்தில் அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு, ஓடினோம். அதற்குள் அம்மாவே வந்து விட்டது. பின்னாலேயே, தாதி ஒருவர் வந்தார்.”ஏம்மா, இந்த வலியக் கூடத் தாங்க முடியாதுன்னா எப்படி?, இன்னும் ஒரு சேம்பிள் மட்டும் கொடுத்தால் போதும். கொஞ்சம் வாங்கம்மா” என்றாள்.

அம்மா பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பித்தாள்,”நான் செத்தா, செத்துட்டுப் போறன். எதுக்குடா இங்க கூட்டிட்டு வந்திங்க. என்னால் இந்தச் சித்திரவதையைத் தாங்க முடியலடா”.

“அம்மா, அதான் சொல்றாங்க இல்ல. இன்னும் ஒரு டெஸ்ட் தான். அப்புறம் வீட்டுக்குப் போய் விடலாம்” என்றேன்.

எப்படியோ சமாளித்து, இன்னும் ஒரு சேம்பிள் மட்டும் கொடுத்த பிறகு, அம்மாவிற்கு ஆப்பிள் ஜுஸ் வாங்கிக் கொடுத்து, சற்று நேரம் ஓய்வெடுக்க வைத்துப் பிறகு, மருத்துவமனைக்குக் திரும்பினோம். லேப் ரிசல்ட் வருவதற்கு எப்படியும் இன்னும் ஒரு நாள் ஆகும் என்பதால், அண்ணன் சந்துரு கிளம்புவதாகவும், நான் தங்கி அம்மாவைப் பார்த்துக் கொள்வது என்றும் ஏற்பாடு ஆயிற்று.

உள்நோயாளியாக இருந்தாலும் , தனி அறை கிடைக்கவில்லை. அடுத்த நாள் காலை நிச்சயமாக ஏற்பாடு செய்து தருவதாகக் கூறினார்கள். நான் இரவு  பதினோரு மணி வரையிலும், மருத்துவமனையில் இருந்து விட்டுப் பிறகு, வெளியே வந்தேன். அருகில் அறைகள் எதுவும் கிடைக்காததால், ஒரு பாட்டி நடத்திய, சிறு வீட்டில்  தங்கினேன்.

சற்று நேரம் கண் அயர்ந்திருப்பேன். கதவை யாரோ பலமாகத் தட்டுவது கேட்டு, பயத்தில் வெடுக்கென்று எழுந்து, கதவருகே சென்றேன். சில திருநங்கைகள் பணம் கேட்டு, கதவைத் தட்டுவது தெரிந்தது. கதவைத் திறக்காமல் மீண்டும் வந்து படுக்கையில் படுத்து விட்டேன். சிறிது நேரம் தட்டிக் கொண்டே இருந்து விட்டுப் போய் விட்டார்கள். தூக்கமும் தான்.

அதிகாலையில் ஒரு மணி நேரம் மட்டுமே தூங்கினேன். ஆறு மணிக்கெல்லாம், எழுந்து குளித்துவிட்டு,அறையைக் காலி செய்து விட்டு, பாட்டியிடம் இரவு நடந்ததைப் பற்றிச் சொன்னேன். பாட்டி மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொண்டு,”நான் என்னப்பா செய்வன். வயசாகிடுச்சி.இந்தத் தொல்லை, இப்ப பழகிடுச்சி”.

அருகிலிருந்த மெஸ்ஸில், இட்லி சாப்பிட்டு விட்டு, அம்மாவுக்கும் பார்சல் வாங்கிக் கொண்டு, அறைக்குச் சென்றேன்.அம்மா குளித்து ரெடியானாள்.

கடவுளின் தரிசனத்திற்காகக் காத்திருப்பதைப் போல, டாக்டரின் வருகைக்குக் காத்திருந்தோம்.

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, டாக்டர் ஒவ்வொருவராக பார்த்தபடியே வந்தார். “என்னம்மா, சாப்புட்டிங்களா?” என்றார்.”இட்லி சாப்பிட்டேன்” என்றாள் அம்மா.

லேபிலிருந்து, அதிசயமாக, ரிப்போர்ட் வந்திருந்தது. அதைப் படித்துப் பார்த்த டாக்டர்,”ஒன்னும் பயப்பட வேண்டாம்மா. இனிமேல் மாசா மாசம் வந்து பாக்க வேண்டியிருக்கும்” என்று சொல்லி விட்டு, என்னைத் தனியே அழைத்துச் சென்றார்.

“அம்மாவுக்கு மார்பகப் புற்றுநோய் கன்பர்ம் ஆகிடுச்சு. டிரீட் பண்ணி, குணமாக்குற வியாதிதான். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை, இங்க வந்து, ரேடியோ தெரபி எடுத்துக்க வேண்டியிருக்கும். கொஞ்சம் சைடு எஃபெக்ட் இருக்கும். ஆனா பயப்படத் தேவையில்லை. இன்னிக்கே வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போலாம். இன்னும் பதினைந்து நாட்களில் கூட்டிட்டு வாங்க” என்றார்.

தலையில் பெரிய இடி விழுந்தது போலிருந்தது. மயக்கம் வரும் போலிருந்தது. நாங்க யாருக்கும் எந்தப் பாவமும் பண்ணலயே. காட்டுக்கு வர்ற எல்லாருக்கும் சோறு போட்ட அம்மாவுக்கு எதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை? தெய்வம்னு ஒன்னு இருக்குதா? எனப் பல சிந்தனைகள் மனசுக்குள் ஓடியது.

“ஒன்னும் பயப்பட வேண்டாம்மா. சரியாயிடும். சாயந்தரம் வீட்டுக்குப் போய்விடலாம்” என்று சுருக்கமாக முடித்துக் கொண்டேன்.”சரிப்பா” என்ற அம்மாவும் வேறெதுவும் பேசவில்லை‌. அம்மாவுக்கு எப்படியோ தெரிந்து விட்டதோ என்று எனக்குச் சந்தேகமாகவே இருந்தது.

ஏகப்பட்ட மாத்திரைகள், கலர் கலராக. பதினைந்து நாட்கள் விரைவாகச் சென்றன. அம்மாவைத் தனியாக அழைத்துச் சென்று, ரேடியோ தெரபியை ஆரம்பித்தனர். அம்மா பெருங்குரலெடுத்துக் கத்த ஆரம்பித்தாள். “என்ன வுட்டுடுங்க. நான் போய்டறன். இது வேணாம். என்னால் முடியல” எனத் திரும்பத் திரும்பச் சொல்லியபடியே இருந்தாள்.

டாக்டர் வந்து பார்த்து விட்டு ”ஒன்னுல்லம்மா. வலியக் கொஞ்சம் தாங்கிக்கங்க. கொஞ்சம் நாளக்கித்தான். எல்லாம் சரியாகிவிடும்” என்றார். அம்மா எங்கே டாக்டரைத் திட்டி விடுவாளோ என்று எனக்குப் பயமாகவே இருந்தது. நல்லவேளை அம்மா சற்றுப் பொறுமையாகவே இருந்தாள்.

அடுத்த நாள், வீட்டுக்கு வந்து விட்டோம். இனி மருத்துவமனைக்கு வருவாளா என்று சந்தேகமாக இருந்தது.

அம்மாவுக்கு அடர்த்தியான கூந்தல். முடி கொட்ட ஆரம்பித்தது. அம்மா, முடியைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தபடியே இருந்தாள். வலியால், தூக்கம் வராமல் மிகவும் தடுமாறினாள்.

அடுத்த முறை, மருத்துவமனைக்குச் செல்வதற்கு அடம் பிடிக்க ஆரம்பித்தாள். “அம்மா, இன்னும் ரெண்டே தடவ தான், அதுக்கப்புறம் மாத்திரையே போதுன்னாரு, டாக்டர். போய்ட்டு வந்திடலாம்மா” எனக் கெஞ்ச ஆரம்பித்தேன். எப்படியோ சம்மதிக்க வைத்து, அழைத்துச் சென்றோம். இம்முறை மனைவியும் வந்திருந்தாள். இருந்தாலும், அம்மாவின் அலறலைக் கட்டுப் படுத்த முடியவில்லை. இனி இங்கு நிச்சயமாக வரமாட்டாள் என்றே தோன்றியது.

வீட்டுக்கு வந்ததில் இருந்தே அம்மா ஒரு மாதிரியாக இருந்தாள்.எனது பையனிடமும் விளையாடவில்லை. “என்னய அயோத்தியா பட்டிணத்தில் கொண்டு போய் விட்டுடு” என்றாள். “நாம எவ்வளவு தாங்கினாலும், ஒங்க அம்மாவுக்கு, அவங்க பெரிய மகன் மேலயும், அவங்க பசங்க மேலேதான் பாசம். யாராலும் மாத்த முடியாது. நானும் வர்றேன். வர்ற ஞாயிறு போய்ட்டு வந்திடலாம்” என்றாள் மனைவி.

ஞாயிறன்று காலை, ஒரு தோசை கூடுதலாகவே கேட்டு வாங்கிச் சாப்பிட்டாள் அம்மா. சொல்லியும் கேட்காமல், விக்கிக்குக் காசு கொடுத்தாள். பதினோரு மணிக்கு அயோத்தியா பட்டிணத்தில் இருந்தோம். மீண்டும் மாடியில் தனது அறையில் நுழைந்ததும், அம்மா சற்று சந்தோஷமாக இருந்தது போலிருந்தது.

ஒரு கயிற்றுக் கட்டிலில், மெலிசான ஒரு மெத்தையும், தலகாணியும் இருந்தது. பழைய தொலைக்காட்சிப் பெட்டியில் சீரியல் பார்ப்பது அம்மாவுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. அண்ணன் மகள், பெரியவளைப் பக்கத்தில், படுக்க வைத்தபடியே, சிரித்தபடியே, தொலைக்காட்சியைப் பார்த்தபடியே இருந்தாள். “சரிம்மா, அப்ப நாங்க கெளம்பறம். உடம்பை பாத்துக்குங்க” என்று சொன்னேன். “சரிப்பா, பசங்கள நல்லாப் பாத்துக்க. என்னயப் பத்திக் கவலைப்படாத” என்றாள் பதிலுக்கு.

அதுதான், நான் பேசப்போகும் கடைசி வார்த்தைகள் என்று, அப்போது தெரியவில்லை.

இரண்டு வாரங்களில், ஒரு விடியற்காலை சனிக்கிழமையன்று, அம்மா எங்களை விட்டுப் போய் விட்டாள். அப்படி ஒரு கூட்டம். காட்டிலிருந்து எல்லோரும் வந்து விட்டனர். அம்மாவின் முகம் கறுத்துப் போய், அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்தது. அம்மாவின் பழைய புகைப்படம் ஒன்றை எல்லோருக்கும் காண்பித்த படியே, நான் அழுதுகொண்டே இருந்தது, இப்பவும் நினைவில் இருக்கிறது. தம்பி ராஜுவின் நண்பன் ஒருவன், கையைத் தொட்டு துக்கம் விசாரிக்காமல், தாத்தாவைப் போலக் கட்டித் தழுவிக் கொண்டான்.

எல்லோரின் அறிவுரையின் படி, அம்மாபேட்டை இடுகாட்டில் எரித்து விட்டு, அங்கிருந்த நந்தவனத்தில், வில்வ மரத்தடியில், அம்மாவின் சாம்பலைத் தூவி விட்டோம். பேரப் பிள்ளைகள் தண்ணீர் ஊற்றினார்கள்.

அப்பா போனபோது,”யாருமே சப்போட்டுக்கு இல்லாம, இப்படித் தனியா, தவிக்க உட்டுட்டுப் போறீங்களே, அப்பா” எனக் கதறியது ஏனோ இப்போது ஞாபகத்துக்கு வந்தது. எனது மனைவியின் பக்கமும், அவளது அப்பாவும்,அம்மாவும் இல்லை.

பிள்ளைகள் தாத்தா பாட்டி இல்லாமலேயே வளருவதற்குக் கற்றுக் கொண்டனர்.

தவழ்ந்து, தடுமாறி நிற்க முயன்று, முடியாமல் கீழே விழுந்து, வீறிட்டு அழுது, பிறகு ஒரு நாள் நடக்கப் பயின்று, தனியே நடக்கும் குழந்தையைப் போல, யார் துணையும் இல்லாமல், கையை ஊன்றி கரணமடித்து, வாழப் பழகிக் கொண்டோம்.

இடையில் ஒரு முறை, தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலுக்குச் சென்று, வீடு திரும்பும் போது, பெரிய அத்தையின் இரண்டாவது பையன் சரவணன், டிவிஎஸ்ஸை நிறுத்தித் தகவல் சொன்னான். பெரியவன் மோகனசுந்தரம் பெரிய வாகன விபத்தில் சிக்கிய பின், ஒரு மாதம் படுக்கையிலிருந்த பிறகு, போன வாரம் இறந்து விட்டதாகவும், அவனது வீட்டார் எங்களுக்கு சொல்லி அனுப்ப வேண்டாம் என்று சொன்னதாகவும் கூறினான். “நன்றி, சரவணா” என்று சொல்லி நகர்ந்து விட்டேன். கடவுளும் சில சமயங்களில் அன்றே கேட்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

நாங்கள் இழந்த நிலத்தைத் திரும்பப் பார்க்க வேண்டும் என்ற ஆசை, மனசுக்குள் பெரும் விருட்சமாக வளர்ந்து கொண்டே இருந்தது. மனைவியிடம் சொன்னால், அனுமதி கிடைக்காது. “அதப் பார்த்து என்ன பண்ணப் போறீங்க?” என்ற கேள்வியே மீண்டும் வரும்.

எனது பள்ளித் தோழன் சேகர் வீட்டிற்குச் செல்வதாகச் சொல்லி விட்டு, ஒரு ஞாயிற்றுக்கிழமை பேருந்து ஏறி விட்டேன். சேலம் பழைய பேருந்து நிலையம் சென்று,பூ விற்பனை நிலையம் அருகில் சென்று நின்றேன். வேகமாக வாழப்பாடி செல்லும், எழுபத்து நான்கு வந்து நின்றது. கும்பலில் நீந்தி, ஒரு வழியாக பேருந்தில் ஏறியதும், உடம்பெல்லாம் சிலிர்த்தது. எத்தனை வருடங்கள் இந்தப் பேருந்தில் பயணம் செய்திருப்பேன்? எனது பால்ய காலம் முழுவதும் எழுபத்து நான்கிலும், நாற்பத்தி நான்கிலும் கழிந்தன. பேருந்து நிறுத்தமே இல்லாமல் இருந்த, ஒரு கிராமத்திற்கு, இப்போது டோல்கேட் அடையாளமாக மாறிவிட்டது. “ஒரு செல்லியம்மன் நகர் கொடுங்க” என்றேன். நடத்துநருக்குப் புரியவில்லை. “டோல்கேட்தான?” என்றார்.”ஆமாங்க” என்றதும், பயணச் சீட்டைக் கொடுத்தார். சிறு வயதில் பேருந்து கட்டணம் இரண்டு ரூபாய் , திருமணமான பிறகு, ஆறரை ரூபாய், இப்போது பதினெட்டு ரூபாய். தனியார் பேருந்துகளில் ரமணி பஸ் இன்னும் ஓடுகிறது. இப்போது எல்லா பேருந்துகளுமே டோல்கேட்டில் நிறுத்துகிறார்கள். பக்கத்திலேயே சேலம் பொறியியல் கல்லூரி வந்து விட்டது. ஏராளமான உணவகங்கள் திறந்து விட்டனர். செல்லியம்மன் கோவில் புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் அடையாளமாகத் திகழ்கிறது.

டோல்கேட் வந்தவுடன், சேகருக்குப் போன் செய்தேன். அவனைப் பார்த்தே நீண்ட காலம் ஆகிவிட்டது. அவனது பெண்ணின் திருமணத்தில் பார்த்தது.

சற்று நேரத்தில் சேகர் தனது பைக்கில் வந்தான்.”கண்ணா, எப்படி இருக்க?. வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என்றான். “எல்லாரும் நல்லா இருக்காங்க. அப்பா, அம்மா, பசங்க எல்லாரும் நல்லா இருக்காங்களா? நீதான் இன்னும் அப்படியே இருக்குற. நான் நல்லா வெயிட் போட்டுட்டேன்”

“அது உடல் வாகு கண்ணா. அதுக்காக கவலைப் படாத.சரி, டீ சாப்பிடலாமா?” என்றபடியே அருகிலிருந்த டீக்கடைக்கு அழைத்துச் சென்றான்.

“இது நம்ம கூடப் படிச்ச முருகனோட எடம். இன்னிக்கு ஆளக் காணம்.இப்ப பெரிய ஆளாயிட்டான். இடத்துக்கு சரியான வெல கேக்குறாங்க.இவன் தான் அடம் புடிக்கிறான். ஆச யார விட்டது?”. டீ சாப்பிட்டு விட்டுக் கிளம்பினோம்.

எங்களின் காட்டுக்குப் போகும் பாதையில் வண்டி நுழைந்தவுடன், ஒரு இனம் புரியாத உணர்வு.

”இந்த எட்டி மரத்துலதான் சேகரு, ஒரு ஆந்தயப் பாத்துப் பயந்தது. அதே மாதிரி, நானும் அண்ணனும், பெரிய பாம்பைப் பார்த்தது. இங்க இடதுபுறம் போனா, ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. அதுக்குப் பக்கத்துல, என்னோட பிளஸ் டூ நண்பனோட, பண்ணை இருக்குது சேகரு” என்றேன்.

“நமக்கும் இங்க நெலம் இருக்குது கண்ணா. பிரண்டுது எத்தன ஏக்கரு?”

“அஞ்சு ஏக்கரு. ஏக்கர், ஏழரை லட்சமாம்”. “ஆமா, டோல்கேட் வந்த பின்னால, பக்கத்து நெலங்களுக்குச் சரியான கிராக்கி”.

பேசிக்கொண்டே ரயில்வே பாலத்துக்கு அருகில் வந்தோம். “இங்கே பக்கத்துல, ஜெயராமன் கிட்டயும், நல்லதம்பி கிட்டயும், நாங்க ஒரு ஏழு பேரு சேர்ந்து, ஒரு ரெண்டரை ஏக்கர் வாங்கி இருக்கிறம். ஒன்னு இருபதுக்கு வாங்குனது, ஒன்னு எழுபதுன்னா, குடுத்துடலான்னு இருக்கிறம்”

அவன் பேசப் பேச எனக்கு பிரமிப்பு குறையவில்லை. நம்மோடு படித்த சேகர் இல்லை இது, வேற லெவல். ரியல் எஸ்டேட் செய்வதாகச் சொன்ன ஞாபகம். இப்போது வாழப்பாடியில், பேக்கரி வைத்திருக்கிறான். அரூரில் இன்னும் ஒரு கடையிருக்கிறது. நல்ல வருமானம். பரவாயில்லை, ஒரு தொழில் அதிபராகி விட்டான் என்பதில், எனக்குப் பெருமை.

சேகரைக் கண்டதும், ஜெயராமன் வந்து விட்டான். என்னையும் அடையாளம் கண்டு கொண்டது, மகிழ்ச்சி. “நல்லா இருக்கியா, கண்ணா? அம்மா இறந்தப்பப் பார்த்தது”. “நல்லா இருக்கிறன் ஜெயராமா” என்றேன். ஏதோ ஒரு பாலம் வேலை நடந்து கொண்டு இருந்தது. பாலத்துக்கடியிலத் தண்ணி வந்தா இனிமேல் பயமில்லை. அதுக்காகத்தான் இந்தப் பாலம். இங்கிலாந்து அப்படியே ஊருக்குப் பாதையும் போவுது. நெலத்துக்கு மதிப்பு அதிகமாகும். சேகரின் தம்பி, ரமேஷூம் அங்கிருந்து வேலையைப் பார்த்துக் கொண்டு இருந்தான். “கண்ணா, எல்லாரும் நல்லா இருக்காங்களா. நீங்க வீட்டுக்குப் போங்க, பின்னாலயே வர்றேன்” என்றான். “நல்லாயிருக்கறன் ரமேஷ். ஹாஸ்டல்ல படிக்கிற, பாப்பா நல்லாயிருக்கறாளா?”. “நல்லா இருக்கறா”.

“சரி ரமேஷ், பாக்கலாம்” என்று விடைபெற்று, பயணத்தைத் தொடர்ந்தோம். பாலத்தைக் கடந்ததும், மேடேறியதுமே, இடதுபுறம் செல்வி அக்கா வீடு. “அக்காவுக்குப் புற்றுநோய், யாரையும் அதிகமாகப் பாக்கறதுல்ல” என்றபடியே வண்டியை செலுத்தினான்.

சற்று தூரம் சென்றதும்,”வத்தக் கவுண்டர் ஊடு ஞாபகம் இருக்கா, கண்ணா. ரேஷன் கடையில வேலை செஞ்ச, அவரோட சின்ன மகனோட புண்ணியத்துல, அவங்க அண்ணன் தம்பிகளோட, எல்லாப் பசங்களும் சென்னையில விடுதியில தங்கிப் படிச்சி, நல்ல வேலக்கிச் சேர்த்திருக்காங்க”.

“சூப்பர் சேகரு. அடுத்த தலைமுறை நல்ல படியா வந்ததுக்கு, அவருக்கு எல்லாரும் கடன் பட்டிருக்காங்க”.

“இடது பக்கம் சின்னம்மா தம்பி மகன் நடேசன் வீடு. சேலத்தில ஏதோ வேலை.”

“வலது பக்கத்தில, பால்கார சின்னம்மா வூடு. மணி அண்ணன் இன்னமும் அந்த தீவனக் கம்பெனியில் தான் வேலை பாக்குறாரு”.

பேசிக்கொண்டே, எங்கள் நிலத்துக்குப் போகும் பாதையை வந்தடைந்தோம். இடதுபுறம் பெரிய கவுண்டர் தோட்டம். வலது பக்கத்தில் வயர்மேன் காடு.

பெரிய கவுண்டர் இறந்து போக, பெருமாள் கவுண்டருக்கும் வயதாகிவிட்டது.பெருமாள் கவுண்டருக்கு ஒரு கண் சரியாகத் தெரியாது. நாங்கள் பள்ளி செல்லும் வயதில், அவருடைய மகனும் அவரும், தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கையில் கண்ணில் நெருப்பு பட்டு, வலது கண்ணைக் காப்பாற்ற முடியாமலேயே போனது.

பார்த்ததும், அவரும், அவர் மகன் குமாரும், வந்து விட்டார்கள்.”கண்ணா, எப்படி இருக்க?”. வயர்மேன் வீட்டிலிருந்து, வேல் அண்ணன் வந்து விட்டார்.”கண்ணன், எப்படி இருக்கீங்க?”.

“எல்லாரும் நல்லா இருக்காங்க. ரொம்ப வருஷமா பாக்கல. அதான் ஒரு தடவ பாத்துட்டுப் போலாம்னு வந்தன்”.

எங்கடா இன்னும் யாரும் ஆரம்பிக்கவில்லையே என்று நினைக்கும்போதே, பெருமாள் அண்ணன் ஆரம்பித்தார்,”இப்படி உட்டுட்டுப் போய்ட்டீங்களேப்பா, இப்ப என்ன வெல தெரியுமா? சதுர அடி 600 ரூபாய். இப்ப நெனச்சாலும் வாங்க முடியுமா?”

“அண்ணா, ஏதோ ஒரு நேரம். பாக்கலாண்ணா, பசங்களாவது தல தூக்கி, என்னைக்காவது ஒரு துண்டு நெலத்தையாவது வாங்காமையா போய்டுவானுங்க?” இதைச் சொல்லும்போது உடம்பெல்லாம் நடுங்கியது. விட்டால் அழுது விடுவேன் போலிருந்தது. புரிந்து கொண்ட சேகர், “வந்ததும் வந்தோம். ஒரு எட்டு காட்டைப் பாத்துட்டுப் போய்டுவோம், கண்ணா” என்று திசை திருப்பினான்.

பொதுவாக இருவருக்கும் வணக்கம் சொல்லி விட்டு, காட்டின் தொடக்கத்தில் நின்றோம். தடமெல்லாம், புற்களால் மூடப்பட்டிருந்தது. வழி முட்களால் மறைக்கப்பட்டு இருந்தது. “யாரையாவது வந்து காட்டும்போது மாத்திரம், முள்ளை எடுத்துடுவாங்க. வாட்ச்மேன் மாதிரி யாரையும் போடல” என்றான்.

ஒரு நீண்ட குச்சியை எடுத்து, முட்களை சற்று நகர்த்தி வைத்து விட்டு, பாதையில் கால் வைத்தோம்.

எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. பெருமாள் அண்ணனின் “இப்படி உட்டுட்டீங்களேப்பா” என்ற குரல் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது. மயக்கம் வரும் போலிருந்தது. பழசெல்லாம் ஒரு நொடியில் ஞாபகம் வர ஆரம்பித்தது.அழுகையை அடக்கிய படியே நடந்தேன். வீட்டை நெருங்கும் போதே, பக்கத்து காட்டு பாட்டப்பன், கண்ணன் என எல்லோரும் வந்து விட்டனர்.

“கண்ணா, எப்படி இருக்க?”. “எல்லாரும் நல்லா இருக்காங்க”.

வந்தவருக்கெல்லாம் இளநிகளை வாரித் தந்த, தென்னை மரங்கள் இல்லை.

வீடென்ற ஒன்றே இல்லை. நானும் மனைவியும் தங்கியிருந்த, சிறிய ஓட்டு வீடு, சிதிலமடைந்து கிடந்தது.

கண்களில் வழிந்த கண்ணீரை கர்ச்சீப்பை வைத்து துடைத்தபடியே ஒரு அந்நியனைப் போல எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருந்தேன். இதை விடக் கொடுமை வேறு எவருக்கும் வரக்கூடாது.

“கண்ணா, நீங்க போனதும், ஒரு நாள் இங்க வந்தனா, இவ்வளவு பெரிய ஜீவன், நல்லா கருப்பா, வீட்டுக்குள்ள நுழஞ்சது. அடிக்கலான்னு தடி, கடப்பாரை எல்லாம் எடுத்திட்டு வர்றதுக்குள்ள காணம்”.

ஒரு நொடி, அது அப்பாவாக இருக்குமோ என்று தோன்றியது. நல்ல வேளை, அடிக்காமல் விட்டு விட்டான்.

இவ்வளவு தூரம் வந்து விட்டு, அங்கு என்னால் நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. கால்கள் நழுவி பாதாளம் என்னை இழுத்துக் கொள்ளுமோ என்று பயமாயிருந்தது.

“சரி சேகரு, இன்னொரு நாள் மறுபடியும் வரலாம். பையன் லீவுல வரேன்னு சொன்னான்” என்று சொன்னேன். என் குரலே, என்னைக் காட்டிக் கொடுத்து விடும் என்று பயமாயிருந்தது.

பாட்டப்பனிடமும், கண்ணனிடமும் சொல்லி விட்டுக் கிளம்பினோம்.

“கண்ணா, அப்படியே இந்த பக்கம் கொஞ்ச தூரம் பாத்துட்டுப் போலாம்” என்றபடியே வண்டியை காட்டிலிருந்து, வலதுபுறத்தில் ஓட்டினான்.

“மதுக்கன் மகனோட வீடு இதுதான் கண்ணா. இப்ப வட்டிக்கு கடன் கொடுக்கறப்பல.காட்டுல அந்தளவுக்கு வருமானம் ஏதுமில்லை”.

கொஞ்ச தூரத்தில், அடர்த்தியாக ஒரே இடத்தில் பல வீடுகள் முளைத்திருந்தன. இந்த மலை அடிவாரத்தில் இத்தனை வீடுகளா?

“என்ன கண்ணா, ஆச்சரியமாக இருக்குதா? எல்லோரும் முஸ்லிம்கள். வந்து கொஞ்ச நாள் தான் ஆச்சு. இன்னொன்னு பாத்தின்னா இன்னும் ஆச்சரியப்படுவ” என்று புதிர் போட்டான்.

கொஞ்ச தூரத்தில், ஒரு பெரிய இரும்பு கேட் போட்ட இடம் வந்தது. எங்களைப் பார்த்ததும், பார்ட்டிகள் என்று நினைத்து, அமர்ந்திருந்த வாட்ச்மென் கேட்டைத் திறந்து விட்டார். அழகான முறையில், பல பிளாட்கள் மாமரங்களோடு இருந்தன. “இந்த கார்னர் பிளாட் மாத்திரம் எழுவது, மத்ததெல்லாம் ஒரு பெரிய ரூபா. லால் சேட்ன்னு ஒருத்தர் இப்ப, சேலம் டூ வாழப்பாடி பைபாஸ்ல பாதிய வாங்கிட்டான்” என்றான். ஒரு கோடி என்று புரிந்தது. மாடல் வீடு ஒன்றும், பெரிய அபார்ட்மெண்ட் காம்ப்ளக்ஸ்களில் இருப்பது போல, நிகழ்ச்சிகள் நடத்த, ஒரு பொதுவான பெரிய கட்டிடமும் இருந்தது. என் கண்களை என்னால் நம்பமுடியவில்லை. கோதமலை அடிவாரத்தில் ஒரு கோடிக்கு பிளாட் என்று சொல்லி இருந்தால், நாங்களெல்லாம் சிரித்து இருப்போம். உலகம் வேறெங்கோ சென்று கொண்டு இருக்கிறது.

சுற்றிப் பார்த்து விட்டு, காட்டைக் கடந்து போகயில், “அப்படியே அப்பாவைப் பார்த்திட்டுப் போய்டலாம் கண்ணா” என்றான். விருப்பமில்லை எனினும், கல்குறி என்னை இழுத்தது.

வீட்டை அடைந்து, வண்டியை நிறுத்தியதும், சேகரின் அம்மா,’வா கண்ணு, நல்லா இருக்கியா? வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா?. இவங்க அப்பா, குறி சொல்லிக் கிட்டு இருக்கிறாரு” என்று வரவேற்று, மோர் கொடுத்தார்கள்.

குடித்து விட்டு, அருகிலிருந்த சிறிய ஓட்டு வீட்டிற்குச் சென்றோம். சேகரின் அப்பாவுடன், சிலர் அமர்ந்திருந்தனர். நெற்றி நிறைய திருநீற்றுடன், வேறு ஒரு சாமியாராக அமர்ந்திருந்தார். அருகிலிருந்தவர்கள் பயபக்தியுடன் அவர் சொல்வதைத் கேட்டுக் கொண்டிருந்தனர். எங்களைப் பார்த்ததும் எதுவும் பேசாமல், சைகையால் அமரச் சொன்னார். வந்தவர்கள் ஏதோ கேட்க, நன்றாகக் கும்பிட்டு விட்டு, கண்களை மூடிக் கொண்டு, கற்களை வீசினார். மெதுவாகக் கண்களைத் திறந்து, கற்களைப் பார்த்தபடி,”செய்யி, எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்றார். மீண்டும் மற்றொரு கேள்வி, மற்றுமொரு முறை, எல்லாம் மீண்டும் நடந்தது. “கொஞ்ச காலத்துக்கு ஒத்திப்போடு. ஆறு மாசங்கழிச்சி மறுபடியும் வா, அப்ப சொல்றன்” என்றார். வந்தவர்களுக்கு திருநீறு கொடுத்தார். அவர்கள் கொடுத்ததை வாங்கிக் கொண்டார். அவர்கள் சென்றதும்,”வா கண்ணா, நல்லா இருக்கியா, எல்லாரும் சௌக்கியமா?”. “எல்லாரும் நல்லா இருக்காங்க அண்ணா” என்று சொன்னவன், கல்குறி கேட்கும் ஆவலை அடக்கிக் கொண்டேன்.

சற்று நேரம் பேசிக் கொண்டு இருந்து விட்டுக் கிளம்பினோம்.

பேருந்து நிலையம் செல்லும் பாதையில் வண்டி விரைந்தது.

வேறு எதையும் பார்க்கவும், யாரிடமும் பேசவும், தோன்றவில்லை. எதையோ பறிகொடுத்தவனைப் போல வண்டியின் பின்புறம் அமர்ந்து இருந்தேன்.

எட்டி மரத்தைக் கடக்கும் வரையில் நான் எதுவும் பேசவில்லை. சேகர் தான், மௌனத்தை உடைத்தான். “காசிருந்தா, மூணு பேரும் சேர்ந்து கூட , ஏதாவது வாங்கிப் போடுங்க, கண்ணா. இந்த நெலமெல்லாம் கொஞ்ச நாள்ல கெடைக்காது. மண்ணுல போடற காசு என்னைக்கும் வீண் போவாது கண்ணா!” என்றான். நான் பின்னால் அமர்ந்து அழுதபடியே கேட்டுக் கொண்டிருந்தேன்.

-முற்றும்.

கண்ணன் வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *