“அய்யய்யோ, பையனத் தேளு கடிச்சிடுச்சே” ஆயாவின் குரல் அந்தக் காலையை கலைத்துப் போட்டது. எனக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. தலை சுற்றுவது போலிருந்தது. முதுகுப்புறம் கடுகடுவென தாங்க முடியாத வலி.
இரவு தூங்குகையில் புரண்டு படுக்கும் போது, ஏதோ சுருக்கென கடித்தது போலிருந்தது. தூக்கக் கலக்கத்தில் எதிர்ப்புறம் புரண்டு படுத்துக் கொண்டேன். மீண்டும் சற்று நேரத்தில், மறுபடியும் சுருக். இப்போது வலி அதிகமாக இருந்தது. விழிப்பு வந்து விட்டது. வலி தாளாமல் துடிக்க ஆரம்பித்து விட்டேன். மரண பயம் என்னைத் தொற்றிக் கொண்டது.
ஐந்து ஐந்தரை இருக்கலாம். அம்மாவிடம் சொன்ன போது, பாயை உதறிப் பார்த்தபோது, கருந்தேள் ஒன்று தாக்குதலுக்குத் தயாராக இருந்தது. அருகிலிருந்த விளக்குமாறை எடுத்து, நாலைந்து முறை தேளை அடித்த பின், எடுத்துப்போய் வீட்டுக்கு முன்னிருந்த கனகாம்பரம் செடியிருந்த தோட்டத்தில் கொட்டினாள்.
ஆயாவின் குரல் கேட்டதும், அப்பா “சரி சரி, ஊரைக் கூட்டாத. பாட்டப்பன வரச்சொல்லி ஒரு பாடம் போடச் சொல்லலாம்” என்றார்.
பக்கத்துக் காட்டு சின்னான், காத்தாயி ஆகியோரின் பெரிய மகன்தான் பாட்டப்பன். இரண்டு ஏக்கர் நிலத்தில் குச்சிக் கிழங்கோ, சோளமோ போடுவான். அவன் தம்பி மாதேஸ்வரன். இரண்டு தங்கைகள். சொந்த நிலத்தில் வேலை செய்து கொண்டே வெளி வேலைக்கும் சென்று வந்தார்கள்.
ஆம்பளை ஆட்களுக்கு ஏர் ஒட்டுதல், பரம்படித்தல், பார் போடுவது என்றால், பொம்பளை ஆட்களுக்கு களை எடுத்தல், பயிர் நடவு, உரம் போடுவது, விதை போடுவது என எல்லா வேலைகளுக்கும் செல்வார்கள்.
அண்ணன் சந்துரு, பாட்டப்பனை ஓடிப் போய் அழைத்து வந்தான். தூக்கக் கலக்கத்திலிருந்த பாட்டப்பன், வரப்பில் என்னை நிற்க வைத்தான். தென்னை மரத்தாலான விளக்குமாறிலிருந்து ஒரு குச்சியை உருவி எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான். கண்களை மூடிக்கொண்டு மந்திரத்தை உச்சரித்தபடியே விளக்குமாற்றுக் குச்சியால் எனது முதுகில் தடவினான். பிறகு தலையிலிருந்து கால் வரை தடவினான். மூன்று நான்கு முறை இது நடந்தது. பிறகு கையெடுத்துக் கும்பிட்டு, குச்சியை உடைத்து வீசினான். அம்மாவிடம், “இன்னும் ரெண்டு நாளைக்கு, புளி, உப்பு, காரம் வேணாம். மூணு நாளு கழிச்சுக் குடுங்க. வலி இன்னும் கொஞ்ச நேரத்தில கொறஞ்சிடும்” என்றான். அண்ணன் சந்துருவும், தம்பி ராஜும் பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தனர்.
மயக்கத்திலிருந்த நான், வந்து பாயில் படுத்துக் கொண்டேன். ஒரு மணி நேரத்தில் வலி சுத்தமாக இல்லை. பயம் விலகியிருந்தது.
எங்கள் கிராமத்தின் பெயர் செல்லியம்மன் நகர். சேலத்திலிருந்து வாழப்பாடி செல்லும் வழியில் மேட்டுப்பட்டிக்கு அடுத்தது எங்கள் ஊர். ஒரு ஓடைக்கு அருகில், அம்மனை வழிபட்டு வந்திருக்கிறார்கள். அந்த ஓடையின் பெயராலேயே அம்மனும், செல்லியம்மன் என அழைக்கப்பட்டாள். அப்போதெல்லாம் எங்கள் கிராமத்துக்கு பேருந்து நிறுத்தம் கிடையாது. மேட்டுப்பட்டியை விட்டால், வெள்ளாள குண்டம் தான். ரூட் பஸ்ஸில் ஏறி விட்டால் திட்டு வாங்க முடியாது. கெஞ்சிக் கூத்தாடி இறங்குவோம்.
எங்கள் காடு கோதமலை அடிவாரத்தில் இருந்தது. மலைமேல் கோதண்டராமர் கோவில் இருப்பதால் கோதமலை என்ற பெயர் வந்தது என்று சொல்லக் கேள்வி.
இன்றும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மலையில் ஏறி கோதண்டராமனுக்குப் படையலிட்டு வழிபடுவது வழக்கமாக இருக்கிறது.
எங்கள் வீடு, மண்ணால் எழுப்பப்பட்ட சுவர்களால் ஆன, தென்னைமர ஓலைகளால் வேயப்பட்ட, மூன்று அறைகள் கொண்ட வீடு.
இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது தென்னை ஓலைகளை மாற்ற வேண்டும். மழை வருகையில் ஓட்டையில் இருந்து மழைத் தண்ணீர் வீட்டுக்குள்ளே ஒழுகும். வீட்டிலிருக்கும் அண்டா, குண்டா எல்லாவற்றையும் வைத்து, ஒழுகும் நீரைப் பிடிப்பது எங்களுக்கு ஒரு விளையாட்டு. ஆனால் அம்மாவுக்கு பிடிக்காத விளையாட்டு. ஏற்கனவே செம்மண் தரையில் சாணி போட்டு மெழுகிக் கையெல்லாம் காயமாக இருக்கும். “ஏங்க, இந்தக் கூரைய மாத்தலாமில்ல.எங்க பாத்தாலும் ஒழுவுது. ராத்திரியில ஈரத்துல தூக்கமே போயிடிச்சி. தரையெல்லாம் ஊறிப்போயிடுச்சி” என்பாள் அப்பாவிடம். “எங்க வாங்கற சம்பளம் எல்லாம் இந்தக் காட்டுல போடுறதுக்கேச் சரியாப் போயிடுது. இதுல எங்க கூரைய மாத்தறது. கெழங்கு புடுங்கன வாட்டி பாக்கலாம்” என்பார்.
“இந்தக் காட்ட வித்துத் தொலச்சாத்தான் எனக்கு நிம்மதி” என்பாள் பதிலுக்கு. அப்பாவிடமிருந்து மறுபேச்சு வராது.
எங்கள் தோட்டம் தான் செல்லியம்மன் நகர் கிராமத்தில் கடைசி. எங்கள் காட்டை அடுத்து பாரஸ்ட் ஆரம்பிக்கிறது. இரவுகளில் நரி ஊளை விடுவது நன்றாகக் கேட்கும். ஒண்ணுக்கு வந்தாலும் வெளியே செல்லாமல் பயத்தில் அடக்கிக் கொள்வேன்.
பாத்ரூமெல்லாம் கிடையாது. புதர் பக்கத்தில் ஒதுங்க வேண்டும். வெய்யிலில், குளியல் கிணற்றுப் பக்கத்தில் இருந்த தொட்டியில். குளிர் காலத்தில், கல் மூட்டி, அலுமினியக் குண்டாவில் சுடுதண்ணீர். நான்கு தென்னை ஓலைகளைச் சேர்த்துக் கட்டினால், குளியலறை. பக்கெட்டில் தண்ணீர் விளாவி, சொம்பில் மொண்டு ஊற்றிக் கொள்வோம். குளிர் காலத்தில் அப்பா நேரமாக எழுந்து, தண்ணீர் சுட வைப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார்.
ஒருநாள் காலையில் வழக்கம் போல காலைக் கடனுக்கு ஒதுங்கும் போது, காலில் ஏதோ கடித்தது போலிருந்தது. தரையில் பார்த்தால், சிலந்தி போல ஏதோவொன்று ஓடிக் கொண்டிருந்தது. எப்படியோ நொண்டி அடித்தபடியே வீட்டுக்கு வந்து விட்டேன். சிறிது நேரத்தில் வலி தாளாமல் துடிக்க ஆரம்பித்தேன். தாத்தா வெளியே சென்றிருந்தார். அப்பா அப்போது பனமரத்துப்பட்டியில் கிராம சேவகராக வேலை செய்து வந்தார். சைக்கிளிலேயே சென்று வந்தார். சில சமயங்களில் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அலுவலகத்திலேயே தங்கி விடுவார். அம்மாவுக்கு பஸ் ஏறித் தனியாகச் சென்று பழக்கமில்லை.
ஆயா தான் கைப்பிடித்துக் கூட்டிக் கொண்டு சென்றது. கொஞ்ச தூரத்தில்,”ஆயா, காலு ரொம்ப வலிக்குது. நடக்க முடியல” என்றேன். “கொஞ்ச நேரம் பொறுத்துக்க. டாக்டர் கிட்ட காமிச்சு ஊசி போட்டா சரியாய்ப் போகும்” என்று சொல்லி, இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ஏறக்குறைய ஓடியது. வழியில் பால்கார சின்னம்மாவிலிருந்து பலரும் விசாரித்தனர்.
நல்ல வேளை சேலத்துக்கு உடனே பேருந்து வந்தது. அரைமணி நேரத்தில் அம்மாபேட்டை காந்தி மைதானம் நிறுத்தத்தில் இறங்கி ஆஸ்பத்திரி நோக்கி நடந்தோம். வரவேற்பறையில் இருந்த பெண்ணிடம்,”டாக்டர் எங்க சொந்தக்காரர் தான். பையன பூரானோ எதுவோ கடிச்சிடுச்சி. தூரத்திலிருந்து வர்றோம்.கொஞ்சம் சீக்கிரமா பாக்கனும்”. “இரும்மா, கேட்டுட்டு வர்றேன்” என்றபடியே சென்றவள், திரும்ப வந்து, “டாக்டர் வரச் சொல்றாரு” என்றாள். டாக்டரைப் பார்த்ததும் ஆயா ஒப்பாரி வைக்க ஆரம்பித்தது.
எனக்கோ வலி தாங்க முடியாமல் இருந்தது. காய்ச்சலில் உடல் நடுங்கியது. “இரும்மா, அழுவாத. பார்க்கலாம்” என்று சொல்லியபடியே, ஊசியை எனது இடுப்பில் குத்தினார். வலியால் துடித்தேன். ஆயா எனது இடுப்பை நன்றாக தேய்த்து விட்டது. “பயப்படும்படி ஒண்ணும் இல்லம்மா. ஊசி போட்டிருக்கிறன். மாத்திரை எழுதித் தர்றேன். நாலு நாளைக்கு சாப்பிடக் குடுங்க. வலி இருந்தா வாங்க. இல்லன்னா தேவையில்லை” என்றார். அது ஏனோ என்னை மட்டுமே பார்த்துப் பார்த்து இந்த தேளும் பூரானும் கடிச்சிதுங்க.
காட்டில் பெரும்பாலும் மேட்டாங்காடு. பாதிக்கு மேல் பயிர் செய்ய இயலாது. சோளம் அதிகம் போடுவோம்.
கிணற்றில் ஓரளவிற்கு தண்ணீர் இருந்தது. பயிர் செய்ய முடிந்த நான்கு ஏக்கர் நிலத்தில், வருடம் முழுவதும் குச்சிக் கிழங்கு தான் நடுவோம். கிணற்றில் தண்ணீர் நன்றாக இருந்த காலத்தில், நெல்லும் நட்டு இருக்கிறோம். குச்சிக் கிழங்குக்குச் செய்யும் வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல. வயலை நன்றாக உழ வேண்டும். பிறகு பறம்பைக் கொண்டு நிரவ வேண்டும். பிறகு பாத்திகளாகப் பிரிக்க வேண்டும். தண்ணீர் பாய்ச்சிய பின்னர் மரவள்ளிக் கிழங்கு குச்சிகளை சிறிய அளவில் வெட்டி அக்குச்சிகளை பாத்திகளில் வரிசையாக ஊண வேண்டும். இதற்கென்றே ஒரு கட்டிங் மெஷின் இருந்தது. கைப்பம்பு அடிப்பது போல நீண்ட கைப்பிடியுடன் இருக்கும். யாராவது ஒருவர் குச்சிகளை எடுத்து வைக்க, மற்றவர் கைப்பிடியை அழுத்த வேண்டும். சரியான அளவில் வெட்ட வேண்டும். தோல் பிரியாமல் இருக்க வேண்டும். தோல் கழண்டு விட்டால், அந்த குச்சி வளராது. அது வளர்ந்து கிழங்கு பெருகும் வரை கண் கொத்திப் பாம்பாக கவனமாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். இடையில் களை எடுக்க வேண்டும். உரமிட வேண்டும். கிழங்கு வந்ததும் எலிகள் நோண்டாமல் பாதுகாப்பு செய்ய வேண்டும்.
இத்தனையும் செய்து முடித்தால், ரோட்டில் இருக்கும் சீன மில்காரன் வந்து அடிமாட்டு விலைக்கு கிழங்கு புடுங்கி தனது ஜவ்வரிசி மில்லுக்கு எடுத்துச் சென்று விடுவான். சீன மில்லிலிருந்து ஒரு ஆள் வருவான். கிழங்கைப் பிடுங்கி அதன் பாலின் தன்மையைப் பார்ப்பான். நல்ல கெட்டியான பாலாக இருந்தால், ஜவ்வரிசிக்கு உகந்தது என்பதால், விலை சற்று கூடுதலாக கிடைக்கும். எப்படி இருந்தாலும் எழுவது கிலோ மூட்டையொன்றுக்கு நூற்றியிருபதிலிருந்து, நூற்றியம்பதுதான் அதிக பட்சமாக கிடைக்கும். அதுவும் பொடுசு, மண் என்று, ஒரு டன்னிலிருந்து நாற்பது ஐம்பது கிலோ கழித்து விடுவார்கள். பெரும்பாலும் நட்டம்தான். வந்த பணம் வாங்கிய கடனுக்கும், மீண்டும் நடவுக்குமே சரியாக இருக்கும். ஆனாலும் விவசாயம் யாரை விட்டது. “பக்கத்து காட்டுக் காரனெல்லாம் காட்ட சும்மா போட்டு வச்சா என்ன நெனப்பான்?” என்று சொல்லிச் சொல்லியே, அப்பா மீண்டும் கடன் வாங்கிக் குச்சிக் கிழங்கு பயிரிடுவார். தாத்தாவுக்கும் விவசாயத்தில் ஆர்வமிருந்ததால் அப்பாவைத் தடுக்க மாட்டார்.
ஐந்தாம் வகுப்பு வரை, மேட்டுப்பட்டி ஊருக்குள்ளிருந்த ஆரம்பப் பள்ளிக்குச் சென்று வந்த நாங்கள், ஆறாம் வகுப்புக்கு மேல், மேட்டுப்பட்டி ரோடு மீது இருந்த, உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தோம். வீட்டிலிருந்து பள்ளிக்கு ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தூரம். நடந்து தான் செல்வோம்.
பப்பாளி மரத்தில் இருந்து, குச்சிகளை ஒடித்து அதை ஓட்டிக்கொண்டே செல்வோம். பனம்பழம் தின்றபின் அதை வண்டியாக்கி, மற்றொரு குச்சியால் தள்ளிக் கொண்டே செல்வோம்.
சைக்கிள் டயர் கிடைத்து விட்டால் கொண்டாட்டம் தான். சிறிய குச்சியால் தட்டிக்கொண்டு ஓடுவோம். கால் வலிக்கிறது என்று எப்போதும் புகார் சொன்னதேயில்லை.
ரோட்டுக்கு பக்கத்தில், ஒரு பெரிய எட்டி மரமிருக்கும். ஒரு முறை காலையில் நடந்து செல்கையில், ஒரு மிகப் பெரிய பாம்பு ரோட்டின் குறுக்கே சென்றது. அதுவரை அவ்வளவு நீளமான பாம்பைப் பார்த்ததேயில்லை. கால்கள் நடுங்க ஆரம்பித்தது. அது சென்ற பின்னாலும் நடுக்கமிருந்தது. அதன் பிறகு அந்த இடம் வந்தாலே ஒரு நடுக்கம் வர ஆரம்பித்தது. இரண்டு பக்கமும் ஜாக்கிரதையாகப் பார்த்த பிறகே நடப்போம்.
ஒரு நாள் மாலை நான் மட்டும் தனியாகப் பள்ளி விட்டபின் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தேன். அந்த எட்டி மரத்தின் மேல் ஒரு ஆந்தை அமர்ந்திருந்தது. அது என்னையே பார்த்துக் கொண்டு இருந்தது. பயத்தில் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது. கல்லை எடுத்து வீசிப் பார்த்தேன். வாய் விட்டுக் கத்திப் பார்த்தேன். ஆந்தை அசைவதாகத் தெரியவில்லை. உடனே ஓட்டமெடுத்தேன். ஒரு கிலோமீட்டர் தாண்டிய பின்னரே நின்றேன்.
பள்ளிக்குச் சென்று வருகையில் பல சாகசங்கள் நடக்கும். வீட்டிலும் சாகசங்கள் நடக்கும்.
அப்படித்தான் ஒரு முறை, மூவரும் விஞ்ஞானிகளாகி விட்டோம். குண்டு பல்பில் ஒயரை இணைத்து, நேரடியாக பிளக் பாயிண்ட்டில் சொருக, சார்ட் சர்க்யூட் ஆகி, தீ வர ஆரம்பித்தது. அம்மா கத்த ஆரம்பித்தாள்: “நெருப்புடா, கூரை பத்திக்கும்டா”. கூரைக்கு தீ பரவுவதற்குள் தண்ணீரை ஊற்றினோம். எப்படியோ கூரையில் தீப்பிடிக்காமல் அணைந்து விட்டது. “அம்மா, அம்மா, அப்பாகிட்ட சொல்லிராதம்மா” எனக் கெஞ்ச ஆரம்பித்தோம். “சரி இனிமேல் இப்படி செய்யாதிங்க” என எங்களை மன்னித்து விட்டாள்.
பள்ளி செல்லும் வழியில் ஒரு ரயில்வே பாலத்துக்கு அடியில் வர வேண்டும். நாங்கள் பல சமயங்களில் பாலத்தின் மீது ஏறி பிறகு அடுத்த பக்கம் கீழே இறங்குவோம். அப்படித்தான் ஒரு முறை, பாலத்தின் மீது ஏறி, தண்டவாளத்தின் மீது ஒண்ணுக்கு அடித்துக் கொண்டு இருந்தோம். திடீரென சத்தம் கேட்டது. நாங்கள் எல்லோரும் குடுகுடுவென தண்டவாளத்தைத் தாண்டி விளிம்பில் நின்று கொண்டோம். தம்பி ராஜ் தண்டவாளத்தின் நடுவில் ஜாலியாக ஒண்ணுக்கு அடித்துக் கொண்டு இருந்தான்.
பக்கத்திலேயே ரயில் வரும் சத்தம் கேட்க ஆரம்பித்தது. “டேய் ராஜ், ரயிலு வருதுடா. தண்டவாளத்தில் இருந்து கீழ எறங்குடா” எனக் கத்தினோம். அவனுக்குச் சரியாக கேட்க வில்லை. மீண்டும் எல்லோரும் சேர்ந்து கத்தவும், ராஜ் தண்டவாளத்தில் இருந்து காலை எடுக்கவும், ரயில் பாலத்தைக் கடக்கவும் சரியாக இருந்தது. பயத்தில் பாலத்தின் மேலிருந்து உருள் ஆரம்பித்து, கீழே வந்து விழுந்தான். உதடு கிழிந்து, ரத்தம் வர ஆரம்பித்தது. வலியில் கத்த ஆரம்பித்து விட்டான். சந்துருவும் வந்து சேர, நடந்ததை கேட்டபின் எங்களுக்கு அடி விழுந்தது.
சேகர் தினமும் வீட்டுக்கு வந்து விடுவான். தினமும் சேர்ந்து தான் பள்ளிக்குச் செல்வோம். அப்போது எனக்கு வேக வைத்த முட்டைகள் உண்பதில் அவ்வளவு ஆர்வமிருந்தது. ஒரு நாள் காலையில் அம்மா முட்டைகள் தந்தாள். சக்திக்கு மீறி இரண்டு முட்டைகளை உள்ளே தள்ளி விட்டேன். வயிறு பிடித்துக் கொண்டது. வயிற்று வலியால் அழ ஆரம்பித்து விட்டேன். “ஏண்டா இப்படிப் பண்ற. சேருலன்னா, கொஞ்சமா சாப்புடனும்.” என்றாள் அம்மா.
கட்டில் மீது படுக்க வைத்து, தொப்புளுக்கு எண்ணெய் வைத்து விட்டாள். அது வயிறு உப்புசத்தால் வந்த வயிற்று வலி என அம்மாவுக்கும் தெரியவில்லை. சேகர் வந்து விட்டான். அப்பா என்னை திட்ட ஆரம்பித்தார். “எரும வாய அடக்குனாதான. முட்டையத் தின்னுட்டு படுத்துக்கிட்டு இருக்கான் பாரு சேகரு”. வலியை விட, சேகரின் முன்பு அப்பா திட்டியதால் இன்னும் அதிகமாக அழ ஆரம்பித்தேன். “ஸ்கூலுக்குப் போறியா, இல்லையா?” எனக் கத்த ஆரம்பித்தார். “இருங்க, கொஞ்ச லேட்டாப் போனா ஒன்னும் ஆகாது” என அம்மாதான் என்னைக் காப்பாற்றினாள். அரை மணி நேரம் கழித்து, வயிற்று வலி ஓரளவிற்கு குறைந்ததும், பள்ளிக்கு நடக்க ஆரம்பித்தோம்.
அப்பா அலுவலகம் சென்று வர அட்லஸ் சைக்கிள் வைத்திருந்தார். வார இறுதியில் சுத்தம் செய்வது எங்கள் வேலை. அண்ணன் சந்துரு சக்கரங்களுக்கு எண்ணெய் விடுவான். அதெற்கென ஒரு சின்ன டப்பா இருக்கும். எனக்கும் தம்பிக்கும் துணியால் சைக்கிளைத் துடைக்கும் வேலை. பச்சை வண்ணம் அடித்திருக்கும். சைக்கிள் சீட் கவரின் வண்ணங்கள் பச்சை, சிவப்பு, நீலம் என மாறியபடியேயிருக்கும். கேரியர் வைத்த சைக்கிள்.முதலில் சைக்கிளைத் தள்ளக் கற்றுக் கொண்டேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக குரங்கு பெடல் அடிக்க ஆரம்பித்தேன். ஒரு நாள் தனியாக ரோடு வரை சென்று விட்டேன். மிகப் பெரிய சாதனை செய்த பெருமிதம். திரும்பி வருகையில், பாலத்துக்கு அடியில் கடந்து, மேட்டில் மிதிக்க இயலாது மிதித்து, முனை திரும்ப, ஒரு மினி லாரி சட்டென எதிரே வந்தது. லாரியின் ஓட்டுநர் சடன் பிரேக் போட்டு நிறுத்தும் போது, பானட்டை எனது சைக்கிள் தொட்டுக் கொண்டு இருந்தது. “ஏண்டா, நீ சாவறதுக்கு என்னோட வண்டிதான் கெடச்சுதா?” என்றார். ”பிரேக் சரியா புடிக்கலண்ணா” என்றேன். ”பிரேக் சரியா இல்லீன்னா, சைக்கிள ஏண்டா எடுக்கறீங்க. சரி சரி, பார்த்துப் போ. இன்னிக்கி உன்னோட நல்ல நேரம்” எனத் திட்டிய படியே, வண்டியை நகர்த்தினார்.
ஆறாம் வகுப்பு முதல் படிப்பு மேட்டுப்பட்டி உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்தது. சின்னத் தமிழ் அய்யா மிகவும் கண்டிப்பானவர். அரைக்கை சட்டை, பேண்ட் அணிந்திருப்பார். ஒட்ட வெட்டப்பட்ட தலைமுடி. எண்ணெய் வழியும். நெற்றியில் குங்குமப் பொட்டு. கையில் பிரம்பு. இதுதான் நாங்கள் பார்த்த தமிழய்யா. கேட்டுக்கு அருகிலியே பிரம்புடன் நின்றிருப்பார். தாமதமாக யார் வந்தாலும் அடி விழும். தப்பித்து ஓடினால், துரத்தித் துரத்தி அடிப்பார். அவருக்காகவே எல்லோரும் நேரமாக வந்து விடுவோம்.
மரங்களிலிருந்து விழும் இலைகள் மற்றும் குப்பைகளைத் தினமும் கூட்ட வேண்டும். ஒரு நாள், என்னை அழைத்து,”நாளக்கு ஈச்சம்பிரம்பு எடுத்துட்டு வா” என்றார். அம்மாவிடம் சொன்னால், “ஈச்சம்பிரம்புக்கு எங்கடா போறது” எனத் திட்டிவிட்டு, “சேகர வேணும்னா கேட்டுப் பாரு” என்றாள். சேகரின் வீட்டுக்கு நடந்தேன். சேகரின் அம்மா தான்,”வா கண்ணு. இரு சேகரக் கூப்புடறன்” என்றார். சேகர் வெளியே வந்து, ”என்ன கண்ணா, புக் ஏதாவது வேணுமா? நாளைக்கி பரிட்சை எதுவும் இல்லையே?” என்றான். “இல்லடா, சின்னத் தமிழய்யா, நாளைக்கி என்னைய ஈச்சம்பிரம்பு எடுத்துட்டு வரச்சொல்லி இருக்கிறார். என்ன பண்றதுன்னு தெரியல” என்றேன். “இரு, அப்பாவைக் கேட்டுப் பாக்கலாம்” என்று, அவன் அப்பா ராமசாமியை அழைத்தான். “வா, கண்ணா” என்றவர், விஷயத்தைச் சொன்னதும்,”பக்கத்து காட்டு மாதய்யனக் கேட்டுப் பாருங்க. ஓடப்பக்கம் வெட்டித் தருவான்” என்றார். நானும் சேகரும் மாதய்யனைச் சென்று பார்த்தோம். எங்களை ஓடைப்பக்கம் கூட்டிச் சென்று, அங்கிருந்த ஒரேயொரு ஈச்ச மரத்திலிருந்து, குச்சிகளை ஒடித்து, நன்றாக சீவி, கட்டாகக் கட்டிக் கொடுத்தான்.
அடுத்த நாள் காலை வழக்கம் போலப் பள்ளியில் குப்பையெல்லாம் கூட்டும் போது, அய்யாவிடம் ஈச்சம் பிரம்புகளைக் கொடுத்தேன். அன்று அரையாண்டுத் தேர்வு மதிப்பெண்கள் வெளிவந்தது. தமிழில் எப்போதும் முதல் மதிப்பெண் பெறுகின்ற நான், இரண்டாம் இடத்தில் இருந்தேன். எல்லோரும் அடி வாங்கிய படியே தங்களின் தேர்வுத் தாள்களை வாங்கியபடி இருந்தார்கள்.
எனக்கு எப்படியும் முதல் மதிப்பெண் வந்து விடும் என்ற நம்பிக்கையில், நமக்கெல்லாம் அடி விழாது என்று நினைத்தேன். பக்கத்தில் சென்றதும், ”நீட்டு கைய. இரண்டாவது மார்க் வாங்கயிருக்க. ஏன் சரியா படிக்கல” என்றார். பயந்து கொண்டே கையை நீட்ட, முதல்முறையாக ஈச்சம் பிரம்பில் அடி வாங்கினேன். வலியில் துடித்தபடியே,”அய்யா, அடுத்த முறை நன்றாக எழுதறேன்” என்றேன். இப்படியாக கஷ்டப்பட்டு தேடிப் பிரம்புகளை எடுத்துப் போய் அடி வாங்கியவன் நானாகத்தான் இருக்கும்.
பள்ளியில் மறக்க முடியாத மேலும் இருவர் என்றால், ஆறாம் வகுப்பு எடுத்த தேவி டீச்சரும், பத்தாம் வகுப்பு வகுப்பு ஆசிரியர் ராமகிருஷ்ணன் சாரும் தான்.
ஆறாம் வகுப்பு சேர்ந்த சில நாட்களில், வகுப்பு ஆசிரியர் சபாபதி சார், “நாளையிலிருந்து உங்களுக்கு வேற டீச்சர் வரப் போறாங்க. நான் மாற்றாலாகி அம்மாபேட்டை பள்ளிக்குப் போகிறேன்” என்றார். அடுத்த நாள் எப்போது வரும், புதிய ஆசிரியரை எப்போது பார்ப்போம் என்று எங்களுக்கு ஆர்வம்.
காலையில் முதல் வகுப்பு ஆரம்பித்ததும், சபாபதி சார், ஒரு அழகான பெண்ணோடு வந்தார். “இவர் பேரு தேவி. இனிமேல் இவர்தான் உங்களுக்கு கிளாஸ் டீச்சர்” என்றார். தேவி டீச்சர் அவ்வளவு அழகு. வானிலிருந்து இறங்கி வந்த தேவதை போலிருந்தார். தலை நிறைய மல்லிகை வைத்திருந்தார். அழகாக சிரித்தார். அவர் என்ன செய்தாலும் அழகாக இருந்தது.
மற்ற வகுப்பு பையன்களுக்கு எங்கள் மீது பொறாமை. நாங்களும்,”எங்க தேவி டீச்சர் தான், உலகத்திலேயே அழகு” என பெருமைபட்டுக் கொள்வோம். தேவி டீச்சரிடம் நல்ல பெயர் வாங்க எங்களிடம் கடுமையான போட்டியிருந்தது. வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்று வந்ததால், தேவி டீச்சருக்கு என் மேல் பாசம் அதிகமாக இருந்தது. எல்லாம் எட்டாவது செல்லும் வரைதான். எட்டாம் வகுப்புக்கு வேறு கிளாஸ் டீச்சர். முதலில் மிகவும் கஷ்டமாக இருந்தது. பிறகு படிப்பு, மதிப்பெண் என கவனம் மாறியதால், தேவி டீச்சரை மறந்து விட்டேன்.
பிறகு ஒரு நாள் ஒன்பதாம் வகுப்பு படிக்கையில், ஆசிரியர் அறைக்குச் சென்ற போது, தேவி டீச்சரைப் பார்த்தேன். “கண்ணா, எப்படி இருக்க. எப்படி படிக்கிற. நீதானே பர்ஸ்ட் மார்க்? என்னடா, வெயிட் போட்டுட்ட?” என அன்பு மழையில் நனைத்து விட்டார்.
பத்தாம் வகுப்பில் தான் ராமகிருஷ்ணன் சாரை சந்தித்தேன். அவர் தான் எங்களுக்கு கிளாஸ் டீச்சர் மற்றும் கணக்கு ஆசிரியர். அவருக்கு வலது கண் மிகவும் சிறியதாக இருக்கும். “அவருக்கு ஒரு கண்ணு தெரியாதுடா” என்று சேகர் தான் புரளி கிளப்பி விட்டான். அவருக்கு ஆங்கிலத்திலும் கணக்கிலும் மிகச் சிறந்த புலமை இருந்தது.
ஒரு முறை விவேகானந்தர் பற்றிய பாடம் நடத்தும் போது, மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக இருந்தார். கிராமங்களில் சாமியாடுபவர்கள் போல், விவேகானந்தர் பற்றிப் பேசிக்கொண்டே போனார். அவரின் “எழுமின், விழுமின், முடிக்கும் வரை உறங்காதீர்” என்னும் புகழ்பெற்ற வாசகங்களைச் சொல்லும் போது, அவரது கண்கள் பளிச்சிட்டன. வேறு ஒரு சக்தியால் இயக்கப்படுபவர் போலிருந்தார்.
அதே மனநிலையில் விவேகானந்தரின் குருவான ஶ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கை பற்றியும் சொன்னார். உரையாற்றினார் என்பதே சரியான வார்த்தையாக இருக்கும். அன்றிலிருந்து இன்றுவரை எனது ஆதர்சம் விவேகானந்தராக இருப்பதற்கு எங்கள் ராமகிருஷ்ணன் சார் தான் காரணம். அதற்காக அவருக்கு எனது வாழ்நாள் முழுவதும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.
அண்ணன் சந்துருக்குத் தனியாக சைக்கிள் வாங்கித் தந்து விட்டார் அப்பா. அவன் சைக்கிளில் பள்ளிக்கு வர, நானும் தம்பியும், சேகருடன் நடந்து வந்தோம்.
அம்மா எப்போதும் தக்காளி சாதம் அல்லது தயிர் சாதம் தான் மதிய உணவுக்கு டிபன் பாக்ஸில் கொடுத்தனுப்புவாள். அண்ணனின் நண்பர்களுடன் அமர்ந்து சாப்பிடுகையில், அவனின் முஸ்லிம் நண்பர்கள் கொண்டு வரும் சப்பாத்தி கிடைக்கும்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாக வந்தேன். அப்போது தேவி டீச்சரையும் பார்த்து சாக்லேட் கொடுத்தேன்.
இப்படியாக பத்தாவது வரை மறக்க இயலாத பள்ளி எனது மேட்டுப்பட்டி உயர்நிலைப் பள்ளி.
-வளரும்.
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.