தாத்தாவின் இறப்புக்குப் பின்னர், எட்டு, பதினாறு மற்றும் முப்பது நாட்கள் கும்பிடுவது என்று எல்லா நிகழ்வுகளுக்கும் மோகனசுந்தரம் வர ஆரம்பித்தான்.
அப்பாவிடம் குழைந்து குழைந்து பேச ஆரம்பித்தான். அவன் நோக்கமெல்லாம் எப்படியாவது அப்பாவைச் சம்மதிக்க வைத்து விட வேண்டும் என்பதாகவே இருந்தது.
“சம்பளப் பணம் எல்லாத்தையும் போட்டுவிட்டு இப்பப் பென்ஷன் பணத்தையும் இந்தக் காட்டுலயே போடுறீங்க. ஒத்த பைசா கூட திரும்பி வருவது கஷ்டம். பேசாம வித்துட்டு எங்கூட ஜெயங்கொண்டம் வந்திருங்க. இல்லையெனில் அம்மாப் பேட்டையில ஒரு நல்ல வீடா வாங்கி செட்டில் ஆகிடுங்க. எங்க அம்மாவுக்கும் ஒரு சப்போர்ட்டா இருக்கும்” என்றான்.
அப்பா விட்டுக் கொடுக்காமல் தான் பேசினார்: “பாக்கலாம் சுந்தரம். இத்தன வருஷம் கஷ்டப்பட்டு உழைச்சாச்சு. ஒரு நல்ல மழை பேஞ்சு, தண்ணி வரத்து நல்லா இருந்தா, எல்லாத்தையும் எடுத்துறலாம். நான் நேரம் வரும்போது சொல்றேன். இப்ப வேணாம்”.
“எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டிங்க. சரி ஒங்க இஷ்டம்” என்று எழுந்து கொண்டான்.
இந்த சமயத்தில் தம்பி எம்சிஏ முடித்து விட்டு வேலை தேட ஆரம்பித்திருந்தான். நான் சின்னச் சின்ன வேலைகள் செய்து வந்தேன். நல்ல வேலை கிடைக்காமல் இழுபறியாகவே இருந்தது.
அப்போது தான், என்னுடன் பொறியியல் கல்லூரியில் படித்த நண்பன் தியாகுவைச் சந்தித்தேன். பேசிக் கொண்டு இருக்கும்போது, மேச்சேரியில் உள்ள ஒரு தனியார்க் கம்பெனியில், கணினித் துறையில் ஆள் எடுப்பதாகவும், கொஞ்சம் செலவாகும் என்றும் சொன்னான். கொஞ்சம் என்றால் லட்சங்களில் செலவாகும் என்றும், ஆனால் கட்டாயம் வேலை நிச்சயம் என்றும் சொன்னான்.
அன்று இரவு உணவுக்குப்பின் அப்பாவிடம் மெதுவாக ஆரம்பித்தேன், “எஞ்ஜினியரிங் முடிச்சி ரெண்டு வருஷத்துக்கு மேல ஆவுது. ஆனா, இன்னும் நிரந்தரமா ஒரு கம்பெனியிலும் வேல கெடக்கில. நம்ம சேலத்தில, மேச்சேரியில இருக்கிற கம்பெனியில வேல இருக்குதாம்ப்பா. ஆனாக் கொஞ்சம் செலவு ஆகுமாம். ஆனா, உறுதியாக் கெடச்சிடுமுன்னு பிரண்டு சொல்றாம்ப்பா. முயற்சி பண்ணலாமா?”.
“கொஞ்சம்னா எவ்வளவு? ஒரு இருபத்தஞ்சு?”. “இல்லப்பா. ஒரு லட்சம் ஆவுமாம்.நல்ல சான்ஸ். முயற்சி பண்ணலாம்ப்பா”.
“அவ்வளவு பணத்துக்கு எங்கடா போறது? இருக்கற காச எல்லாம் இந்தக் காட்டுல தான் போட்டுருக்கறன். எப்ப திரும்ப வரும்ன்னு தெரியாது”.
அம்மாதான் காப்பாற்றினாள்: ”காட்டுக்குன்னா செய்வீங்க, பையனோட வேலைக்குச் செய்ய மாட்டீங்களா?”.
“சரி, பணத்துக்கு எங்க போறது?”. “இதுதான் நல்ல நேரம். நல்ல வெல கெடச்சுதுன்னா, நெலத்த கொடுத்துறலாம். அந்த மோகனசுந்தரம் அவ்வளவு தூரம் சொல்றானே, அவங்கிட்டயே கேட்டுப் பார்க்கலாம். ஏதாவது நல்ல பார்ட்டியா இருந்தா சொல்லுவான்”.
அப்பா எதுவும் பேசவில்லை. அவருக்கு விருப்பமில்லை என்று முகத்திலேயே தெரிந்தது. ஆனால் யோசிக்கிறார் என்று மட்டும் தெரிந்தது. அம்மாவும் அதற்கு மேல் வற்புறுத்தவில்லை.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் சுந்தரம் வந்திருந்தான். அப்பா கொஞ்சம் நெகிழ்வான முறையில் வரவேற்கும் போதே புரிந்து கொண்டான். பழம் ஓரளவுக்குப் பழுத்து விட்டது. “என்ன மாமா, நான் சொன்னத ஏதாவது யோசிச்சுப் பாத்திங்களா?” என்றான். “சரிப்பா. ஏதாவது நல்ல பார்ட்டியா இருந்தா பேசலாம்.அப்படியே முன் பணம் ஏதாவது குடுப்பாங்களான்னு ஒரு வார்த்தை கேட்டுப் பாரு” என்றார். அவனுக்குத் தலை கால் புரியவில்லை. ஆனாலும் வெளிக்காட்டாமல்,”சரிங்க மாமா. நல்ல பார்ட்டியா இருந்தா கூட்டிட்டு வர்றேன்” என்று கிளம்பினான். அவன் குரலில் சந்தோஷம் தெளிவாக வெளிப்பட்டது. அதற்கு மாறாக,”சரிப்பா” என்று சொன்ன அப்பாவின் குரல் கம்மியது.
சரியாக பதினைந்தே நாட்களில், சுந்தரம் பார்ட்டியோடு வந்து விட்டான். இரண்டு பேர் வந்திருந்தனர். இருவரும் சேலத்தில் நூல் வியாபாரம் செய்வதாகவும், இருவரும் இணைந்து ரியல் எஸ்டேட் செய்வதாகவும் சொன்னார்கள். இருவருக்கும் வயது ஐம்பதுக்கும் குறைவாகவே இருக்கும். ஒருவருக்கு வயிறு மட்டும் சற்று பெருத்திருந்தது. மற்றொருவன் நல்ல பருமனாக ஒரு தவளையைப் போல இருந்தான்.”ஏக்கர் எவ்வளவு சொல்றீங்க” என்று ஆரம்பித்தான் சுந்தரம்.
”எங்க அப்பாவோட பென்ஷன், என்னோட பென்ஷன் பணம் எல்லாம் இந்தக் காட்டுல தான் போட்டுருக்கறம். இது வரைக்கும் ஒத்த பைசா லாபம்னு கண்ணுல பாக்கல. குடும்பமே சேர்ந்து உழைச்சிருக்கம். இத உட்டா எங்களுக்கு வேற எந்த ஆதாரமும் இல்ல. ஏக்கருக்கு ஒண்ணு முப்பது கொடுத்திடுங்க” என்று முடித்தார் அப்பா.
“என்னங்க நெலவரம் தெரியாமப் பேசறிங்க. பாதி நெலம் மேட்டாங்காடு. வெவசாயத்துக்கு யாரும் வாங்க மாட்டாங்க. வேற ஏதாவது தான் பண்ணனும். ஏக்கருக்கு தொண்ணூறு வாங்கிக்கங்க”.
“இல்லிங்க, அவளோ கம்மியாக் குடுக்கறத்துக்குப் பேசாமலேயே இருந்துடலாம். நெலம் என்ன கெட்டாப் போயிடும். அது பாட்டுக்கு இருந்துட்டுப் போகட்டும்”.
“இப்படி ரெண்டு பேரும் புடிவாதம் புடிச்சா எப்படி? யாருக்கும் மனஸ்தாபம் வேணாம். ஏக்கருக்கு ஒரு ரூபா வாங்கிக்கங்க” என்றான் சுந்தரம்.இதைத்தான் எதிர்பார்த்தது போல, அப்பா ஒப்புக் கொண்டார். அவர்கள் தங்களின் வீம்பைக் காண்பிக்க வேண்டும் அல்லவா?
“ஒண்ணுலாம் அதிகம்பா. ஒன்னோட இஷ்டத்துக்கு வாய்க்கு வந்தத சொல்லிடறதா?” என்றார்கள். சுந்தரம் அவர்களுடன் தனியாக ஏதோ பேசினான். பிறகு மீண்டும் அனைவரும் திண்ணையில் அமர்ந்தார்கள்.
“ஏக்கருக்கு ஒரு ரூபா. அட்வான்ஸ் இரண்டு லட்சம். அதுக்கு ஒரு பத்திரம் போட்டுக்கலாம். அதிலிருந்து இரண்டு மாசத்துல கெரயம்.இடையில பேச்சு மாறக்கூடாது. சரின்னு சொன்னிங்கன்னா, நாளைக்கே அட்வான்ஸ். சரின்னு சொல்லுங்க மாமா” என்றான் சுந்தரம்.
சிறிதும் யோசிக்காமல்,”சரிப்பா, அப்படியே செஞ்சிடலாம்” என்று முடித்தார் அப்பா.
சொல்லி விட்டாராயொழிய, அப்பாவின் முகத்தில், மிகப்பெரிய சோகம் கவிந்திருந்தது.
அடுத்த நாளே அட்வான்ஸ் பணத்தோடு வந்து விட்டனர். பத்திரத்தில் அப்பா கையெழுத்து இட்டதும், இரண்டு லட்சம் கைமாறியது.
“அப்ப நாங்க கெளம்பறோம். மீதிப் பணத்தை பொரட்டுறத்துக்கு டைம் வேணும். அதுக்குத்தான் இந்த இரண்டு மாசம். ரொம்ப சந்தோஷம்” என்றார்கள்.
“மாமா, அப்ப நானும் கெளம்பறன். இன்னொரு நாள் வர்றேன்” என்றபடி சுந்தரமும் அவர்களோடு கிளம்பி விட்டான்.
“வேலைக்குச் சொன்னானே ஒன் பிரண்டு, அவன வர்ற புதன் கிழமை வரச்சொல்லு. பணத்தைக் குடுத்துடலாம்” என்றார் அப்பா.
“சரிப்பா, வரச்சொல்றன்” என்றேன்.
“மீதிப்பணத்தை பேங்க்ல போட்டு வச்சிடலாம்” என்றார் அம்மாவைப் பார்த்து. “சரிங்க. அப்படியே செய்யுங்க. பையன் வேலைக்கு மட்டும் இப்பவே முழுசா குடுக்கனுமான்னு கேட்டுக்கங்க. குடுத்துட்டா திரும்ப வாங்க முடியாது” என்றாள் அம்மா.
புதனன்று நண்பன் தியாகு வீட்டுக்கு வந்திருந்தான். “அண்ணா, நீங்க நூறு சதவீதம் நம்பலாம். கம்பெனியில் மனித வளத்துறையில இருக்குற மேனேஜர் நம்பகமான ஆளு. வேல நிச்சயம். ஆனா, முழு அமௌண்ட்டும் மொதல்லயே குடுத்துடனும். வேலைக்கு நான் கேரண்டி” என்றான்.
“ஒன்னய நம்பித்தான்பா தர்றோம். கஷ்டப்பட்டு உழைச்ச காசு. நெலத்த வித்த அட்வான்ஸ் பணம். ஏதாவது ஒன்னு ஆச்சின்னா, எங்களால தாங்கிக்க முடியாது” என்றார் அப்பா.
“அண்ணா, பயப்பட ஏதுமில்லை. தாராளமாக நம்பலாம். பார்மாலிட்டிக்கு ஒரு தேர்வு இருக்கும். ரிசல்ட் ஒரே நாளுல தெரிஞ்சிடும். உடனே சொல்றேன், அமௌண்ட்டக் குடுத்துறலாம். இந்த வாரத்திலேயே முடிச்சிடலாம்” என்றான் தியாகு.
ஆனால் அந்த வாரத்தில், அவன் குறிப்பிட்ட மேனேஜர் லீவில் இருந்ததால் எதுவும் நடக்கவில்லை. எனக்கோ மிகவும் பதட்டமாக இருந்தது.
அதற்கடுத்த வாரத்தில், திங்களன்றே தியாகு தேர்வுக்கு ஏற்பாடு செய்து விட்டான். தேர்வு எளிதாகவே இருந்தாலும், எனக்கு உள்ளங்கைகளில் வியர்வை. சற்றே பதட்டம். ஆனாலும் ஓரளவுக்கு சரியாகவே தேர்வு எழுதினேன்.
வெளியே காத்திருக்கச் சொன்னார்கள். நானும் தியாகுவும் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய ஓட்டலில் சாப்பிட்டு விட்டு, ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் வந்தோம். காத்திருக்கச் சொன்னார்கள். இருபது நிமிடங்கள் கழித்து, மனித வள மேனேஜரிமிருந்து அழைப்பு வந்தது.
“கங்கிராட்ஸ். உங்கள் தேர்வு முடிவு செய்யப்பட்டது. பார்மாலிட்டீஸ் பார்த்து சீக்கிரம் முடிச்சிடுங்க. புதன்கிழமை வந்து அப்பாயிண்ட் ஆர்டர் வாங்கிக்கலாம். உடனே ஜாயின் பண்ணிடுங்க” என்றார் மேனேஜர்.
“ரொம்ப நன்றி சார்” என்றேன், உண்மையான நன்றியுடன்.
அடுத்த நாள் பணம் கைமாறியது. புதனன்று காலை அலுவலகம் சென்றதும், தயாராக கையெழுத்து இடப்பட்ட வேலை உறுதிக்கடிதம் வழங்கப் பட்டது. மிகவும் சந்தோசமாக, காற்றில் பறப்பது போல உணர்ந்தேன்.
ஆனால் அந்த சந்தோஷத்தை அதிக நாட்கள் அனுபவிக்க முடியவில்லை. அப்பாவுக்கு உடம்புக்கு முடியாமல் போனது.
ஒரு நாள் சாப்பிட்டப் பிறகு, திண்ணையில் அமர்ந்து இருந்தவர், திடீரென நெஞ்சைப் பிடித்துக் கொண்டு, அம்மாவைக் கூப்பிட்டார், ”நெஞ்சு வலிக்கிற மாதிரி இருக்கு”.
“அதெல்லாம் ஒண்ணும் இருக்காது. வாயுவா இருக்கும். வாயக்கட்டி இருந்தா தான? பெருங்காயமும் சுடுதண்ணியும் குடுக்கறன். குடிச்சிட்டு நல்லாத் தூங்கி எழுந்திருச்சா எல்லாம் சரியாயிடும்”.
ஆனால் விடியற்காலை ஐந்து மணிக்கே அப்பா எழுந்து விட்டார். இரவு முழுவதும் தூங்கவில்லை என்று பார்த்தவுடன் தெரிந்தது. மீண்டும் வலியால் துடித்துக் கொண்டு இருந்தார்.
பக்கத்து காட்டு சேட்டு மூலமாக ஒரு வாடகைக் காரை ஏற்பாடு செய்து, அம்மாபேட்டை தியாகராஜன் டாக்டரிடம் சென்றோம். அவர் தூரத்துச் சொந்தம். முன்பு அம்மாபேட்டையில் குடியிருந்த போது, ஒரே வீதியில் வசித்தவர்.
அப்பாவைப் பரிசோதித்தவர் சொன்னார்:”முருகாவுல ஒரு தடவ பார்த்துடலாம். ஈசிஜி சரியா இல்ல”.
முருகா மருத்துவமனை அருகிலிலேயே இருந்ததால், உடனே அழைத்துச் சென்றோம்.
பரிசோதனை செய்த டாக்டர் சொன்னார்:”இருதயத்திற்குச் செல்லும் குழாயில் அடைப்பு இருப்பது போலிருக்கிறது. ஒரு ஆன்ஜியோ பண்ணிப் பாத்துடலாம். அட்மிஷன் போட்டுடுடலாம்”.
அம்மாவையும் தம்பியையும் வீட்டுக்கு அனுப்பி விட்டு, நானும் அண்ணனும் மருத்துவமனையிலேயே தங்கி விட்டோம். கம்பீரமாக நடமாடிக் கொண்டிருந்த அப்பாவை படுக்கையில் பார்க்கவே சங்கடமாக இருந்தது.
காலையில் எழுந்ததும், பரிசோதனை ஆரம்பித்தது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, அப்பா மயக்கமாக தூங்கிக் கொண்டிருந்தார். டாக்டரிடம் பேசியதில், இரண்டு அடைப்புகள் இருப்பதாகவும், இன்னும் ஒரு மாதத்தில், ஆபரேஷன் செய்து அடைப்புகளை நீக்க வேண்டும் என்றும், அதுவரையில் மாத்திரைகள் சாப்பிட வேண்டும் என்றார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, அப்பாவை வீட்டுக்கு அழைத்துச் சென்றோம். அப்பாவிற்கு நெஞ்சில் ஏகப்பட்ட சளி கட்டிக் கொண்டு இருந்தது. அடிக்கடி இருமல் வந்து கொண்டே இருந்தது. மூச்சு விட சிரமப் பட்டார். நான் வேலையில் சேர்ந்து சில வாரங்களே ஆகியிருந்ததால், விடுமுறை எடுக்க இயலவில்லை. அண்ணனுக்கும் அதுவே. தம்பியும் பெங்களூரில் வேலையில் சேர்ந்து இருந்தான். அம்மா மட்டும் அப்பாவைப் பார்த்துக் கொண்டு இருந்தார். மாத்திரை என்றாலே அப்பாவுக்குப் பிடிக்காது. அம்மா வற்புறுத்தி தினமும் சாப்பிட வைத்தார். இப்போது நெஞ்சு வலி இல்லையென்பது எல்லோருக்கும் ஆறுதல். நாட்கள் வேகமாக நகர்ந்தன. எனக்குப் பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது. “அம்மா, எனக்கு இப்ப கல்யாணம்லாம் வேணாம்”. “பேசாம இரு. அப்பாவுக்கு ஒடம்பு நல்லா இருக்கும் போதே ஒனக்கு முடிக்கனும்”. இரும்பாலைக்கு அருகில் தாரமங்கலத்திலேயே பெண் அமைய, இரண்டே வாரங்களில் திருமணம் முடிந்தது. அப்பாவை அலைய விடாமல், எல்லா வேலைகளையும் நாங்களே பார்த்துக் கொண்டோம். அட்வான்ஸ் வாங்கிய பணமும் போதாமல், மேலும் கடன் வாங்க வேண்டியிருந்தது. அயோத்தியா பட்டிணம் கஸ்தூரிபாய் திருமண மண்டபத்தில் திருமணம் நடந்தது. தாலி கட்டும் போது மட்டும் அப்பாவை மேடைக்கு அழைத்து வந்தோம்.
ஒரு மாதத்தில் நடக்க வேண்டிய ஆபரேஷன் அப்பாவின் பிடிவாதத்தால் தள்ளிப் போட வேண்டியதாயிற்று. ஆன்ஜியோ செய்து நான்கு மாதங்கள் ஆகியிருக்கும். நிலம் கிரையமும் தள்ளிப் போனது. எப்படியோ கெஞ்சி சம்மதம் செய்ய வைத்தோம்.
ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் எல்லோரும் சற்று லேட்டாக எழுந்தோம். சப்பாத்தியும் வெஜிடபிள் குருமாவும் செய்வதாக திட்டம். சிறு வயதிலிருந்தே அண்ணன் சந்துருவுக்கு மாவு பிசையும் வேலை. இப்போதும் தொடர்ந்தான். நானும் தம்பியும் காய்கறிகள் நறுக்கிக் கொடுப்போம். அண்ணியும் எனது மனைவி கீதாவும் காய்கறிகளை நறுக்கிக் கொண்டு இருந்தனர். தம்பி ராஜுவும் வார இறுதியில் வீட்டுக்கு வந்து இருந்தான்.
திடீரென அப்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அலற ஆரம்பித்தார். போட்டது போட்டபடி இருக்க, பக்கத்து காட்டு சேட்டு மூலமாக ஒரு வாடகைக் காரை வரவழைத்து உடனே முருகா மருத்துவமனைக்கு ஓடினோம். நல்ல வேளையாக ஆன்ஜியோ செய்த மருத்துவர் இருந்தார். வேறு ஒரு அவசர சர்ஜரிக்காக வந்திருந்தார். “ஏங்க, உங்கள் எப்ப வரச் சொன்னேன். ஒங்க இஷ்டத்துக்கு நாலு மாசம் கழிச்சு வந்திருக்கிங்க. மாத்திரை ஒழுங்கா முழுங்கினீங்களா. இடையில் ஒரு தடவ வந்ததோட சரி. பாக்கலாம்” என்று சரமாரியாக திட்டிவிட்டு, அப்பாவை அட்மிட் செய்து, பரிசோதனை செய்ய ஆரம்பித்தார். “கொஞ்சம் சீரியஸ் கண்டிஷன். உடனே ஆபரேஷன் செய்து அடைப்புகளை நீக்கி விட்டால், உயிருக்கு எந்த ஆபத்தில்லை”.”சரிங்க டாக்டர்” என்றோம். பில்லிங் செக்ஷனில் கேட்டால், லட்சக்கணக்கில் செலவு ஆகுமென்றார்கள். அதுவுமில்லாமல் உடனே பாதித் தொகையை கட்டினால் தான் ஆபரேஷன் என்றனர்.
நிலத்திற்கு அட்வான்ஸ் கொடுத்தவர்கள் தான் உடனே ஞாபகம் வந்தனர். அம்மாப்பேட்டையில் இருந்த அருள் வீட்டிற்கு, நானும் சந்துருவும் ஆட்டோ பிடித்து ஓடினோம்.
துண்டு பண்டல்களை அனுப்பிக் கொண்டிருந்தவரிடம், ஏறக்குறைய காலைப் பிடிக்காத குறையாகக் கெஞ்சினோம்.”அருளு, எமர்ஜென்சி. அப்பாவுக்கு உடனே ஆபரேஷன் பண்ணனும். கொறஞ்சது, மூணு லட்சமாவது ஆகும். பாதியாவது உடனே கட்டுனாதான் ஆபரேஷன் தொடங்கும். கொஞ்சம் உதவி பண்ணுங்க”.
“தப்பா நெனச்சிக்காதிங்க. ஏற்கனவே ரெண்டு ரூபா குடுத்தாச்சு. கெறய தேதி யாருக்கும் இவ்வளவு நாள் வாய்தா தந்ததே இல்ல. பெரிய அமௌண்ட் ஒரு இடத்துல மாட்டிக் கிச்சு. என்னால முடியாது. பிரகாஷ்கிட்ட வேணா கேட்டுப் பாருங்க” என்று நழுவி விட்டார்.
அங்கிருந்து பட்டக்கோவிலுக்கு, பிரகாஷ் வீட்டுக்கு ஓடினோம். நல்ல வேளை வீட்டிலிருந்தான். அருளிடம் சொன்னதையே மீண்டும் அவசரமாக சொல்லி முடித்தோம். பிரகாஷ் எனது பள்ளி நண்பன் வழியாக ஏற்கெனவே தெரிந்தவன் என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டேன். “பிரகாசு, நீதாம்பா அப்பாவைக் காப்பாத்தணும்” என்றேன் அவன் கையைப் பிடித்துக் கொண்டு.”கண்ணா, நானும் ஒன்னோட நெலமையில தான் இருக்கிறேன். பணம் ஒரு இடத்துல லாக் ஆகிடுச்சு. ரொட்டேஷனுக்கு சிரமப்படறன். தப்பா நினைக்க வேண்டாம்” என்று கை விரித்து விட்டான். என் மனைவியிடம் நிலைமையைச் சொல்லி புலம்பினேன். ”உடனே குடுத்துடலான்னா, என்னோட மாமா கிட்டக் கேட்டுப் பார்க்கலாம்” என்றாள். ”நெலம் வித்தவுடனே கொடுத்துடலாம். அதுவரைக்கும் மாசா மாசம் கரெக்டா வட்டி குடுத்துடலாம்” என்றேன்.
இருவரும் வண்டியில் தாரமங்கலம் விரைந்தோம். கைலாசநாதர் கோபுரத்தைப் பார்த்து மனதார வேண்டினேன். அருகிலேயே மனைவியின் மாமா வீடு. வீட்டின் முன்பிருந்த நகைக்கடையில் அமர்ந்திருந்தார். கதர் வேட்டி சட்டையில் மிகவும் சாதாரணமாக இருந்தார். கையெடுத்துக் கும்பிட்டோம். பதிலுக்குக் கும்பிட்டவர், ”என்னம்மா இவ்வளவு தூரம்?” என்றார். மனைவி கீதா நிலைமையை விளக்கினாள். ”சரிம்மா, ரொம்ப அவசரம், அதனால தர்றேன். வட்டி கரெக்டா வந்துடனும்” என்றபடி, டக்கென்று தனது நாற்காலியின் முன்பிருந்த டேபிள் டிராயரை இழுத்து, ரெண்டு ஆயிரம் ரூபாய் கட்டுகளை எடுத்து வெளியே போட்டார். ”ரொம்ப நன்றிங்க” என்றபடியே கைகூப்பி வணங்கினேன். உண்மையில் அந்த நேரத்தில், அவர் எனக்கு கடவுளாகத்தான் தெரிந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தோம். ரிசப்ஷனில் பணம் கட்டி விட்டு, அறுவை சிகிச்சை நிபுணரிடம் தெரிவித்தோம். ”நாளக்குக் காலையில் ஆபரேஷன் வச்சுக்கலாம்” என்றபடி அவரின் ஜூனியர்கள் மற்றும் நர்ஸ்களிடம் குறிப்புகள் கொடுத்து விட்டுச் சென்றார். நானும் மனைவியும் அன்றிரவு முழுவதும் தூங்கவில்லை. ரிசப்ஷன் நாற்காலிகளிலேயே சற்று ஓய்வெடுத்தோம். அடுத்த நாள் காலையில், அப்பாவை அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்றார்கள். ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப் பின்னர், வெளியே வந்த டாக்டரிடம் பேசினோம்.
”ஆபரேஷன் நல்லபடியா முடிஞ்சது. ஒரு வாரம் ஐசியு அறையிலேயே இருக்கட்டும். முன்னேற்றத்தைப் பாத்துட்டு, சாதா வார்டுக்கு மாத்திடலாம்” என்றார்.
அடுத்த ஒரு வாரம் அப்படி ஒரு அலைச்சல். அலுவலகத்தில் ஒரு வாரம் லீவு கேட்டதில், கிடைத்தது மூன்று நாட்கள் மட்டுமே. பணம் தண்ணீரைப் போல செலவாகிக் கொண்டு இருந்தது. மாற்றி மாற்றி ஊசிகளும் மாத்திரைகளும் வாங்கிக் கொடுத்தபடியே இருந்தோம். கீதாவும் அண்ணியும் நானும் சந்துருவும் சளைக்காமல் ஓடிக்கொண்டே இருந்தோம். தம்பி ராஜுவும் ஒரு வாரம் விடுமுறை எடுத்திருந்ததால், சமாளிக்க முடிந்தது. அவனும் தனது அலுவலகத்தில் சம்பள முன்பணம் வாங்கி இருந்ததால், உதவியாக இருந்தது.
வந்தவருக்கெல்லாம் இளநி கொடுத்தவருக்கு,பாவிகள் தண்ணீர் கொடுக்க மறுத்து விட்டார்கள். பஞ்சில் நனைத்து உதடுகளை ஈரப்படுத்தினார்கள்.
ஐசியுவில் இருந்ததால், அடிக்கடி பார்க்க இயலவில்லை.
இரவெல்லாம் கொசுக்கடியில், ரிசப்ஷன் நாற்காலிகளிலேயே குட்டித்தூக்கம் போட்டோம்.
ஒரு வாரம் கழித்து, அப்பாவுக்கு மூச்சுத் திணறல் அதிகமாக இருந்தது. உடனே செயற்கை சுவாசத்தில் வைக்க வேண்டும் என்றார்கள். இரண்டு நாட்களுக்குப் பின்னர், எந்த முன்னேற்றமும் இல்லை என்பதால், கழுத்துக்கு அருகில் ஆபரேஷன் செய்து துளையிட்டு குழாய் வைக்க வேண்டும் என்றும், அப்போது தான் நன்றாக சுவாசிக்க இயலும் என்று சொன்னார்கள். நர்ஸ் வந்து எங்களிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கினார். அப்போதே எனக்கு ஏதோ தவறாகப் பட்டது. ஆனாலும் வேறு வழியின்றி கையெழுத்திட்டேன்.
அம்மா அப்போது காட்டில் இருந்தார்.
ஒரு மணி நேரம் கழித்து, டாக்டர் வெளியே வந்து,”எவ்வளவோ முயற்சி செய்து பார்த்து விட்டோம். எங்களால காப்பாற்ற முடியவில்லை” என்றார். அதை ஜீரணிக்க மூளை சற்று நேரம் எடுத்துக் கொண்டது.”சார் ஒங்கள நம்பிதான சார், கையெழுத்து போட்டோம். இப்படி சொல்றீங்களே சார்” என்றேன் அழுதபடியே. ”இல்ல சார். என்னால முடிஞ்சது எல்லாம் முயற்சி பண்ணிப் பார்த்துட்டன். உடம்பு ஒத்துழைக்கவில்லை” என்றார்.
நாங்கள் மூவரும் பிரமை பிடித்தது போல அமர்ந்திருந்தோம். கண்களில் கண்ணீர் வழிந்தபடியே இருந்தது. அம்மா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். தரைத் தளத்தில் அம்மாவைப் பார்த்ததும், எப்படி சொல்வது என்று தெரியவில்லை. அம்மாவிடம் சொல்லும் தைரியம் இல்லாமல், ஏதோ ஒரு தூணுக்கருகில் ஒளிந்து கொண்டேன்.சந்துருதான், அம்மாவை அழைத்துக்கொண்டு, இரண்டாம் தளத்துக்குச் சென்றான். நானும் பின்னாலேயே சென்றேன்.கீதாவும் அண்ணியும், அம்மாவைக் கண்டதும், ”அப்பா, நம்மள விட்டுட்டு போய்ட்டாரும்மா” என அழ ஆரம்பித்தார்கள். அம்மா அழவேயில்லை. வெறுமனே அப்பாவையே பார்த்தபடி இருந்தார். இருந்த பணத்தையெல்லாம் புரட்டி பில்லைக் கட்டிவிட்டுக் கிளம்பினோம்.
பத்து நாட்களுக்கு முன்பு, நன்றாக நடந்து உள்ளே சென்ற அப்பா, பொட்டலமாக, ஆம்புலன்ஸில் வந்தார்.
எப்படியோ செய்தி பரவியிருந்தது. காட்டுக்குக் கொண்டு செல்லும் வழியெங்கும் சனம்.
வீட்டுக்கு வந்ததும், எல்லோருக்கும் தகவல் சொல்ல ஆரம்பித்தோம்.
இப்போது ஒரு புது சிக்கல் ஆரம்பித்தது. அட்வான்ஸ் வாங்கிவிட்டதால், நிலம் வாங்கியவர்களைக் கேட்காமல், காட்டில் புதைக்கக் கூடாது என்று எவரோ சொன்ன பிறகே, மூளைக்கு உரைத்தது. செய்தி கேள்விப்பட்டு அடுத்த அரைமணி நேரத்தில் நிலம் வாங்கிய இருவரும் காட்டில் இருந்தார்கள். நானும் அண்ணனும் மாறி மாறி, அருளிடமும், பிரகாஷிடமும் பேசினோம்.
”மேட்டாங்காட்டு மூலையில, பாரஸ்ட்ட ஒட்டி, புதைச்சிடலாம். ஒங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வராது”. ”இல்லிங்க. இங்க ஒரு ரிசார்ட் வரப் போவுது. இங்க பொதச்சாப் பிரச்சினை ஆவும். யாரும் தங்க வரமாட்டாங்க. நீங்க வேற இடம் பாத்துக்குங்க”. ”அடப்பாவிங்களா. ஒங்களுக்கு இப்படி ஒரு நெலம வந்தா, என்னடாப் பண்ணுவீங்க. மனச்சாட்சியே இல்லயாடா ஒங்களுக்கு?” எனக் கத்த ஆரம்பித்தேன். அழுகையும் ஆவேசமும் என்னை ஆட்கொண்டது. கோபத்தில் உடல் நடுங்கியது. சந்துருவும் சேகரும் என்னைத் தனியே அழைத்துச் சென்று, மரத்தடியில் உட்கார வைத்தனர். “வேற வழியில்ல கண்ணா.சண்டை போட்டு பிரயோஜனமில்லை. அட்வான்ஸ் பணம் மொத்தமும் திருப்பித் தரச் சொல்லுவானுங்க. அதுவுமில்லாம, பத்திரத்துல கையெழுத்து போட்டிருக்கம். கெரயமும் மூணு நாலு மாசம் தள்ளிப் போயிருக்குது. வேற என்ன செய்யலான்னுதான் பாக்கனும்” என்றான் சந்துரு.”வேற வழியில்லை கண்ணா. மேட்டுப்பட்டி பொது இடுகாட்டிலதான் பொதைக்கணும்” என்றான் சேகர். என்னாலும் தம்பியாலும் தாங்க முடியாமல் அழுதுகொண்டே இருந்தோம். அம்மா ஒரு புறம் பிரமை பிடித்தது போல அமர்ந்திருந்தது. ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை. அம்மாவுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்று எங்களுக்கு ஒரே பயம். கீதாவும் அண்ணியும் சின்ன அத்தையும் பார்த்துக் கொண்டனர். சீராப்பள்ளியிலிருந்து எல்லாப் பங்காளிகளும் வந்து விட்டார்கள். மூத்தவரான வெங்கடன் தாத்தா எல்லோரிடமும் கலந்து பேசிய பின்னர், மேட்டுப்பட்டிக்குக் கொண்டு செல்வது என்று முடிவானது. சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்துகொண்டிருக்க, எனக்கு மயக்கம் வந்தது. சேகர் எனக்கு இளநீர் வெட்டிக் கொடுத்தான்.
எல்லாம் முடிந்து, அப்பாவை வண்டியில் ஏற்றும்போது, மோகனசுந்தரமும் ஒரு கை பிடிக்க, இரண்டடடி வைப்பதற்குள், மாடுகளைக் கட்ட வைத்திருக்கும் முளைக்குச்சியில் தடுக்கி, முழுதாக ஒரு சுற்று சுற்றிப் பொத்தென்று கீழே விழுந்தான். அப்பாவின் ஆக்ரோஷம் எங்களுக்கு மட்டும் புரிந்தது.
நாங்கள் மூவரும், சேகரும் வண்டியில் ஏற்றிக் கொள்ள, வெங்கடன் தாத்தா மற்றும் பெருமாள் தாத்தா எல்லோரும் கிடைத்த வாகனங்களில் பின் தொடர்ந்தார்கள்.
வந்தவர்களுக்கெல்லாம் இளநி கொடுத்தவர், பசியென்று வந்தவருக்கு உணவிட்டவர், கையிலிருந்த காசையெல்லாம் காட்டுக்காக செலவழித்தவர், தனக்கு ஆறடி நிலமின்றி, பொது இடுகாட்டில் புதைக்கப்பட்டார்.
-வளரும்.

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.