பெயர் தெரியாத தலைவர்

நகரைப் பிரிக்கும் மையப் பகுதியில்

ஒவ்வொரு முறையும் குழப்பிக் கொள்ளும்

பெயர்தெரியாத தலைவரின் சிலையை

இனம்புரியாத ஆச்சரியம் கொண்டு

வழக்கம் மாறாமல் பார்த்துக் கடப்பேன்

செயற்கை நீரும் சில ஊமைச் செடிகளும்

நகரத்தின் மயக்கத்தை லாலியில் இசைக்கும்

கடக்கிற பொழுதுகள் அத்தனை முறையும்

திசைகளை மாற்றியே நிற்பதாய்த் தோன்றும்

பெயர்தெரியாத தலைவரின் சிலையில்

பொதுப்படையான

சலிப்பையே காண்பேன்

சிலைகளை மாற்றும் அரசியல் பேயோ

திசைகளை மாற்றும் உளவியல் நோயோ

சமீபமாக என்னைத்

துரத்த

சிதையில் கிடத்திய சடலங்கலெல்லாம்

மெழுகாய் எழுந்து

சிலையாய் சமையும்

துர்க்கனவொன்றில் வியர்த்து எழுந்தேன்

பெயர் தெரியாத தலைவரின் சிலைக்கு

தன்னிச்சையாக கால்கள் சென்றது.

குச்சிச் சாத்தான்கள்

சிகரெட் புகைகளை முகரும் இச்சையில்

தெருக் கடைகளுக்கு அடிக்கடி செல்வேன்

டீயோ காப்பியோ குடிக்கும் சாக்கில்

எரிமலை நாசியின் அனல்சூட்டோடு

புகைத்துத் தள்ளும்

மனிதர்கள் பக்கம்

முதுகுப் புறமாக

ஒட்டி நிற்பேன்

ஊதும் புகைக்குள்

உணர்வுகள் பதுங்கும் ஒருநொடி யின்பம்

இருமல் போதை

கண்களைத் திருப்பி முறைத்துப் பார்த்தால்

நமட்டுச் சிரிப்புடன்

நழுவிச் ஓடுவேன்

கடைகளை மாற்றி

முறைகளை மாற்றி   முகர்ச்சியில் கழிந்தன வெளிரிய நாட்கள்

அன்றைய தினமோ

மழைப் பொழுதாகும் இருட்டைக் கக்கிய

டீக்கடை யொன்றில்

மூத்திர நெடி வரும்

இடது மூலையில்

நடுத்தர வயது

மனித னொருவன்

பெட்டியில் இருந்து

சிகரெட்டை உருவினான்

பழக்க தோசத்தில்

மும்முறை இருமினேன்

அவன் முதுகுப் புறமாய்

சுவர் வளர்ந்திருக்க  போதையைத் தணிக்க

வேறு வழியே இல்லை 

அவன் கண் முன்னேயே அபத்தமாய் நின்றேன்

கீழும் மேலும் ஏற இரங்க

என் அவஸ்தையைப் புரிந்து வாய்க்குள் சிரித்தான்

உதட்டுக்குள் ளிருந்து

துருத்தி நின்ற சிகரெட்டை பார்க்க

ரம்யமாய் இருந்தது

தீப்பெட்டி தேடும் மும்முரத்தோடு

பைகளைத் துளாவி

எரிச்ச லடைந்தான்

வாய்க்குள் இருந்து

நீண்டு வளர்ந்த

சிகரெட்டில் இருந்து

பூடகமாக

மெல்லிய வலையமாய்

புகை வரக் கண்டேன் தீப்பெட்டிகளின் மர்ம இருளில்

சுயநினைவு வுணர்வு

சுருண்டு நின்றது

என்னிடம் ஏதும் உள்ளதா என்று

கேட்பது போன்று

வெரித்துப் பார்த்தான்

கருப்புத் தலை கொண்ட வெள்ளைவால் குச்சிகள்

என் முதுப்புறமாய்

ஊறத் தொடங்கின

இரத்தம் குடிக்கும்

எறும்புக் குஞ்சுகள்

புத்துப் புத்தாக வளரும் பிரம்மை

முதுகுப் புறமாய்

கவ்வத் தொடங்க

கேள்விக் கண்களை கொண்டு துளைத்த நடுத்தர வயது மனிதனை ஒரு கணம் கொன்றுவிடவும் சித்தமாய் இருந்தேன்

ஆத்திரம் பொங்க முறைத்துப் பார்க்க

எனக்குள் விதைந்த அச்சச் சுவட்டை

நமட்டுச் சிரிப்புடன்

முகத்தில் நிறுத்தினேன்

எச்சிலில் நனைந்த சிகரெட் நுனியை

வாய்க்குள் இருந்து உருவியெடுத்து

எல்லா மனிதரும்

செய்வது போலே

உச்சென் றொருமுறை

சத்தம் எழுப்பி

மூத்திரக் கரைமேல் வீசியெறிந்தான்

முதுகில் ஊறும்

குச்சிச் சாத்தான்

சதையைத் துழைத்து

உள்ளே இறங்க

மரண அவஸ்தை வீறிட்டெழுந்தது

வெள்ளை வால்களால்

துளைகளமைத்து

கருப்புத் தலைகளால்

உள்ளே இறங்கும்

குச்சிச் சாத்தான்களின் சாவுக் கலியில்

நடனக் கூத்திட்டன மூளை நரம்புகள்

நடுத்தர மனிதன் டீக்கடையெல்லாம்

காலச் சுழற்றிசியில் துகள்களாய் பொறிய

தற்கொலை செய்த

காதலி மார்பில்

சிகரெட்டில் சுட்ட

வடுக்களைக் கண்டு

பைத்தியமான

இரவுக்கு மீண்டேன்

யாதொரு உணர்வையும் வெளிப்படுத்தாத

எத்தனை இரவுகள்

கழிந்தன உன்மேல்

இறப்பதில் கூட

வஞ்சகம் கொண்டே

அன்னாந் தருந்தினாய் விஷத்தை நீயும்

மீறியே உந்தன்

மெல்லிய நாவில்

மிஞ்சிய விஷத்தை முத்தமிட்டிழுத்தேன்

உன் பிணத்துக்களித்த முத்தங்களெல்லாம் இரவிரவாக என்னைத் துரத்தும்

மரத்துபோகும் போதையில் லயிக்க

அற்பச் சுகங்களை

கற்கத் தொடங்கினேன்

சிகரெட் புகை போல்

மூத்திரக் கரைபோல் நாட்களுக்கிடையில் மெல்ல அழிகிறேன்

++

தீனன்

எனது பெயர் கி. தினேஷ் கண்ணன், இலக்கற்ற பயணங்களை விரும்புபவன். இலக்கியத்திலும் சினிமாவிலும் நாட்டம் உண்டு. கூதிர் இதழில் கண்ணிவெடிகளின் தேசம், ஐந்தாவது முத்திரை ஆகிய கட்டுரைகள் வெளிவந்துள்ளன. தீனன் என்ற பெயரில் இதுவே முதல் கவிதை. ஊர் இராஜபாளையம். தற்சமயம் இதழியல் துறையில் இயங்கி வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *