கி.ச.திலீபன்
இந்த இந்தியப் பயணத்தில் இமயமலைப் பகுதிகளுக்குதான் அதிகம் சென்றிருக்கிறேன். காசியிலிருந்து ஹரித்துவார் நோக்கிச் செல்லும் பயணம் கூட இமயமலையை நோக்கிய பயணம்தான். ஹரித்துவாரில் இருந்து ரிஷிகேஷ் வழியாக கேதார்நாத் என்பதுதான் திட்டம். காசியிலிருந்து மதிய வேளையில் ஹரித்துவார் செல்லும் ரயிலில் ஏறினேன். அங்கு எனக்கு மேல்படுக்கைதான் ஒதுக்கப்பட்டிருந்தது. மதிய வெயிலின் கடுமையான வெப்பம் மேல்படுக்கையில் அப்படியே இறங்கியது. என்னால் அந்த வெப்பத்தை கிரகித்துக்கொள்ள முடியவில்லை. நான் வைத்திருந்த துருக்கித் துண்டை தண்ணீரில் நனைத்து வந்து காய்ச்சலுக்குப் பத்துப் போடுவதைப் போல நெற்றியில் போட்டுக்கொண்டேன். அந்த வெப்பத்தில் துண்டின் ஈரப்பதம் வெகு விரைவில் காணாமல் போக மீண்டும் மீண்டும் என நான்கைந்து முறைக்கு மேல் நனைத்து வந்து போட்டுக்கொண்டே இருந்தேன். அப்படியாக மதிய வேளையைக் கடக்க முடிந்தது. ரயில் அடுத்த நாள் காலையில்தான் ஹரித்துவாருக்குச் செல்லும் என்பதால் எந்த இடையூறுமற்ற நிம்மதியான உறக்கம் தேவைப்பட்டது. வேடிக்கை பார்க்காமல் செல்வதெல்லாம் ஒரு பயணமே கிடையாது என்றுதான் எனக்குத் தோன்றும். ஆகவே மேல் படுக்கை எப்போதும் சலிப்பூட்டக்கூடியது. தூங்குவதற்கு மட்டும்தான் அது சரிப்பட்டு வரும். பயணங்களில் தூங்குவதற்குக் கிடைக்கும் நல்ல சந்தர்ப்பங்களையெல்லாம் தெளிவாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நல்ல உறக்கம் அமையப்பெரும் சந்தர்ப்பங்கள் இது போன்ற தொடர் பயணங்களில் பல நேரங்களில் கிடைக்காது. ரயில்வே கேண்டீன் சப்பாத்தியைத் தின்று விட்டு தூங்கி விட்டேன். உண்மையிலும் நல்ல உறக்கம். எந்தளவு ஆழ்ந்து தூங்கினேன் என்றால் ஹரித்துவாரை ரயில் கடந்து விட்டது என்பது கூட ரிஷிகேஷ் வந்த பிறகுதான் தெரிந்தது. ரிஷிகேஷில் இறங்கினேன். முறையாகப் பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு செல்லும் பெரும்பாலான வேளைகளில் டிக்கெட் பரிசோதகர் வழிமறித்து சோதித்ததில்லை. ஹரித்துவாருக்குச் சீட்டு வாங்கி அசந்து தூங்கியதன் விளைவாக ரிஷிகேஷில் இறங்கியபோதுதான் டிக்கெட் பரிசோதகர் வாயிலருகே நின்றிருந்தார். எனது பயணச்சீட்டினைச் சோதித்து விட்டு இருநூறு ரூபாய் வாங்கிக் கொண்டு அனுப்பினார். ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் பேருந்து நிலையத்துக்குச் சென்றேன். முதலில் கேதார்நாத் சென்று விடலாம். திரும்பி வருகையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்துவாரில் சுற்றலாம் என்பது எனது திட்டமாக இருந்தது.
கேதார்நாத் செல்ல வேண்டுமெனில் சோன்ப்ரயாக் வரையிலும்தான் பேருந்து வசதி உள்ளது. நான் சென்றபோது ரிஷிகேஷில் இருந்து சோன்ப்ரயாக் செல்லும் பேருந்து சற்றுநேரத்தில் புறப்படத் தயாராக நின்று கொண்டிருந்தது. பயணக் கட்டணம் ரூ. 580 செலுத்தி ஜன்னலோர இருக்கையை முன்பதிவு செய்து கொண்டேன். பயண நேரம் எட்டு மணி நேரத்துக்கும் மேலாகும் என்றார்கள். ஆகவே அன்றைக்கு இரவு சோன்ப்ரயாகில் தங்கி விட்டு மறுநாள் காலையில்தான் கேதார்நாத் மலையேற்றம் என திட்டத்தை வகுத்தபடியே பேருந்தில் உட்கார்ந்திருந்தேன். எனக்கு அருகே இருவர் வந்து அமர்ந்தனர். பேருந்து புறப்பட்ட பிறகு எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவன் குட்கா போடுவதற்காக எனது ஜன்னலோர இருக்கையைக் கேட்டான். ஜன்னலோர இருக்கை கிடைக்கவில்லை என்பதற்காக காத்திருந்து அடுத்த பேருந்தில் கூட ஏறிச் சென்றிருக்கிறேன். அந்த இருக்கையின் மூலம் மட்டுமே பயணத்தின் நிறைவை அடைய இயலும் என்பதால் யாருக்காகவும் அதனை விட்டுத்தந்ததில்லை. ஆகவே அவன் கேட்டதை புன்னகையோடு மறுத்தேன். அவனது பெயர் சிரிஸ் துபே. அவனது நண்பனோடு கேதார்நாத் செல்ல வந்திருக்கின்றனர். நானும் அதற்காகவே வந்திருக்கிறேன் எனக்கூறி அவனோடு கை குலுக்கினேன்.
இந்தியாவின் பாரம்பரிய நகரங்களில் ஒன்று என்பதோடு மிகமுக்கிய ஆன்மிகத் தளங்களில் ஒன்று ரிஷிகேஷ் என்பது பரவலாக அறியப்படுவதுதான். தென்னிந்தியர்கள் பெருமளவில் அறியாத வேறொரு முகம் ரிஷிகேஷுக்கு இருக்கிறது. இந்தியாவில் சாகச விளையாட்டுகளின் தலைநகராகத் திகழ்கிறது ரிஷிகேஷ். பங்கீ ஜம்பிங், பாரா கிளைடிங், ரஃப்டிங் என சாகச விளையாட்டுகளுக்காக ரிஷிகேஷ் வருபவர்களும் அதிகம். ரிஷிகேஷினை இரண்டாகப் பிரிக்கலாம். முதலாவது ஆன்மிக வழிபாட்டுத் தலங்கள், மடங்கள், வழிபாட்டுக்கு வருகிறவர்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் விடுதிகள், உணவகங்கள் என பாரம்பரிய நகரமான ரிஷிகேஷ் தனி. அதன் இன்னொரு பகுதிதான் சமீபகாலங்களில் வளர்ச்சி கண்ட சுற்றுலாத்தலம். சோன்பிரயாக் செல்லும்போதே இமயத்திலிருந்து கங்கை ஆறு சமதளத்துக்கு இறங்கும் பகுதியினைக் கடந்துதான் செல்வோம். அங்கே ரஃப்டிங் என்கிற சறுக்குப் படகு விளையாட்டுக்காகவும் வேறு சில சாகச விளையாட்டுகளுக்காகவும் வரும் இளைஞர்களையும் இளம்பெண்களையும் அதிகம் காண முடியும். இந்தியாவிலேயே உயரமான பங்கீ ஜம்பிங் தளமும் அங்கேதான் இருக்கிறது. ஒரு ஆன்மிகத்தலம் என்று மட்டுமே ரிஷிகேஷினை நினைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதன் இன்னொரு முகம் நிச்சயம் பெரும் ஆச்சரியத்தையும் மெல்லிய அதிர்ச்சியையும் கொடுப்பதாக இருக்கும். அங்கே உலவும் இன்றைய நவீன இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களும் அவர்களது ஆடைகளும் சற்றே கோவாவினை நினைவுறுத்துவது போல இருக்கும். ரிஷிகேஷ் என்றால் மனதில் நாம் உருவகித்திருக்கும் சித்திரத்துக்கு அப்படியே நேரெதிராக இருக்கும். அங்கிருந்து கொஞ்ச தூரம் கடந்ததும் இமயமலைப் பயணம் ஆரம்பித்தது. வழிநெடுக கங்கை ஆற்றுடனே பயணம் செய்தபடி சென்று கொண்டிருந்தேன். பெருமளவில் கழிவுகள் கலக்காத தூய்மையான ஆறு. கேதார்நாத் அருகே உற்பத்தியாகிற மந்தாகினி பத்ரிநாத் அருகே உற்பத்தியாகி வருகிற அலக்நந்தா ஆற்றுடன் ருத்ப்ரயாக் எனுமிடத்தில் கலக்கிறது. அங்கிருந்து அலக்நந்தா ஆறாகச் சென்று தேவ்ப்ரயாக் எனுமிடத்தில் பாகீரதி ஆற்றுடன் கலந்து கங்கையாக ரிஷிகேஷுக்கு வருகிறது. ஆக சோன்ப்ரயாக் செல்லும் வழிநெடுக நாம் காண்பது கங்கையின் துணை ஆறுகளைத்தான்.
என்னருகே அமர்ந்திருந்த சிரிஷ் துபே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவன். ஜெய்ப்பூரும் இந்தப் பயணத்திட்டத்தில் இருக்கிறது என்று கூறி ஜெய்ப்பூரில் காண வேண்டிய தலங்கள் பற்றி அவனிடம் கேட்டேன். ஆம்பர் கோட்டை, ஜல் மஹால், ஹவா மஹால், நஹர்கர் கோட்டை என ஒரு பட்டியலிட்டவன் ஜெய்ப்பூர் வரும்போது அவசியம் அழைக்கும்படி சொன்னான். இந்த நெடுநேரப் பயணத்தில் எங்களுக்கு நல்ல அணுக்கம் உருவாகியது. இடையில் சாப்பிட நிறுத்தியபோது சிரிஷ்துபேவின் நண்பனுக்கு இரண்டு பேர் அறிமுகமாகினர். சிகரெட் சிநேகிதம் என்று அதைச்சொல்லலாம். அவர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஆக அவர்கள் இருவரும் நாங்கள் மூவரும் சேர்ந்து சோன்பிரயாகில் ஒன்றாக அறை எடுத்துத் தங்குவதென முடிவு செய்தோம்.
இமயமலைப் பயணங்கள் பெரும்பாலும் சாகச உணர்வைக் கொடுப்பதாக இருக்கும். ஏனென்றால் நிலச்சரிவுக்கான வாய்ப்புகள் அதிகமுள்ள அந்தப்பாதை சில நேரங்களில் நம்மை அச்சுறுத்தும். சோன்பிரயாக் பயணம் அப்படியானதாக இருக்கவில்லை. சன்னமாகப் பெய்து கொண்டிருந்த மழையில் அதன் ஈரநிலத்தின் காட்சியும் சரிவைநோக்கிப் பாய்கிற கங்கை ஆற்றின் நீல நிற ஜெல்லியைப் போன்ற நீரையும் பார்த்தபடியே பயணிப்பது ஆசுவாசம் அளிப்பதாக இருந்தது. பேருந்து தேவபிரயாகையைக் (தேவ்ப்ரயாக்) கடக்கையில் அலக்நந்தா ஆறும் பாகீரதி ஆறும் சங்கமிக்கிற இடத்தில் திதி உள்ளிட்ட சடங்குகள் செய்து கொண்டிருந்தனர். இங்குதான் இந்த இரு நதிகளும் இணைந்து கங்கை உருவாகிறது என்பதால் இது புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. ஆகவேதான் இங்கே 108 திவ்யதேசங்களில் ஒன்றான நீலமேகப் பெருமாள் கோயில் இருக்கிறது. கங்கை உருவாகும் சங்கமத்தில் நடைபெறும் சடங்குகளைப் பார்க்கும் வரையிலும் எனக்குத் தேவபிரயாகையைப் பற்றி எதுவும் தெரியாது. அதன் பிறகுதான் தெரிந்து கொண்டேன். வழி நெடுக பல சிற்றூர்களைக் கடந்து சென்றோம். தேவபிரயாகைக்கு அடுத்து ருத்ரப்ரயாகைதான் (ருத்ப்ரயாக்) இப்பாதையில் உள்ள முக்கிய நகரம். இங்குதான் கேதார்நாத் – பத்ரிநாத் பிரிகிறது. அங்கிருந்து இடப்புறமாகத் திரும்பி சோன்பிரயாக் நோக்கி பேருந்து சென்றது. பேருந்து சோன்பிரயாகை அடையும்போது இருளத்தொடங்கியிருந்தது. இந்நகரத்தின் பொருளாதாரம் பெருமளவில் கேதார்நாத் தரிசனத்துக்கு வருகிறவர்களை அடிப்படியாகக் கொண்டு இயங்குகிறது. எங்கும் தங்கும் விடுதிகள், உணவகங்கள், துணிக்கடைகள், மணி மாலைகள் விற்கும் கடைகள், வாடகை வண்டிகளுக்கான முகமைகளென கேதார்நாத் பயணிகளுக்காகவும், பயணிகளாலும் அந்நகரம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. நாங்கள் ஐவரும் சேர்ந்து ஒரு விடுதி அறையினை வாடகைக்கு எடுத்தோம். மொட்டை மாடியில் முழுவதும் கூரையால் வேயப்பட்டிருந்த நீண்ட அறையைக் கொடுத்தனர். கட்டில் கிடையாது. கீழே மெத்தை விரிக்கப்பட்டு, போர்வை தரப்படும். அதன் வாடகை ஆயிரம் ரூபாய். அதனைப் பங்கிட்டால் ஒரு நபருக்கு 200 ரூபாய்தான் என்பதால் தரையில் படுப்பது பற்றி எங்கள் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அதிகாலையிலேயே எழுந்து கிளம்ப வேண்டியிருந்ததால் சாப்பிட்டு விட்டு வந்து சீக்கிரத்திலேயே படுத்து விட்டோம். என்னைத்தவிர மற்ற நால்வரும் இந்தியில் சரளமாக உரையாடிக் கொண்டிருந்தனர். அவர்களது பேச்சின் சாரம் என்னவென்பதைக் கூட அறியாது நான் படுத்திருந்தேன். பயணக்களைப்பில் எனக்குப் பெரிதாக பேசாமல் சிறிது நேரத்திலேயே தூங்கி விட்டேன். காலை 5.30 மணிக்கெல்லாம் என்னை எழுப்பி விட்டனர். குளித்துத் தயாராகிக் கிளம்புவதற்கே 7 மணியாகி விட்டது. விடுதியை காலி செய்து விட்டு அவர்களிடம் பேசி எங்களது பேக் பேக்குகளை மட்டும் அங்கேயே வைத்து விட்டுக் கிளம்பினோம். இறங்கி வந்தால் கேதார்நாத் செல்பவர்களுக்கான வரிசை ஒன்று நெடுந்தொலைவுக்கு நின்று கொண்டிருந்தது.


தேவாரத்தில் பாடப்பெற்ற தலம் கேதார்நாத், 108 திவ்யதேசங்களில் ஒன்று பத்ரிநாத் ஆக மிகமுக்கியமான சைவ, வைணவத்தலங்களான இவையிரண்டு கோயில்களுக்கும் ஏப்ரல் அல்லது மே தொடங்கி அக்டோபர் அல்லது நவம்பர் வரையிலும்தான் செல்ல அனுமதியுண்டு. ஒவ்வொரு ஆண்டும் பருவநிலையைப் பொறுத்துத் திறக்கப்படுவதும் மூடப்படுவதும் எந்த மாதம் எனத் தீர்மானிக்கப்படும். பிற மாதங்களில் இத்தலங்கள் இரண்டும் பனியால் சூழப்பட்டு விடும். ஆகவே திறக்கப்படுகிற இந்தக் குறுகிய காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் தரிசனத்துக்காக வந்து கொண்டே இருப்பார்கள். இந்த 2023ம் ஆண்டில் மே மாதம்தான் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் பாதை பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது. நான் சோன்பிரயாக் வந்திருப்பது மே 22-ம் தேதி. மே மற்றும் ஜூன் மாதங்களில்தான் பருவநிலை உகந்ததாக இருக்கும் என்பதால் இவ்விருமாதங்களில் கேதார்நாத் வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். சோன்ப்ரயாக் பாலத்தின் மூலம் மந்தாகினி ஆற்றைக் கடந்துதான் கேதார்நாத்துக்குச் செல்ல முடியும். சோன்ப்ரயாக் பாலம் வரையிலும் மக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பகுதி பகுதியாக பிரித்து அனுப்பப்படுவார்கள். ஆகவே வரிசை ஒரு கிலோ மீட்டருக்கும் அதிகமாக நீண்டிருந்தது. சிரிஷ் துபே மற்றும் மூவரும் எனக்கு சைகை காட்டி அழைத்து வரிசையைத் தாண்டிச் சென்று கொண்டிருந்தனர். யார் யார் எங்கே இருக்கிறார்கள் என்று கூடத் தெரியவில்லை. கிடைக்கிற இடைவெளிகளில் எல்லாம் புகுந்து கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள். நானும் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தேன். அப்படியாக சிறிதுநேரத்தில் மந்தாகினி ஆற்றுப் பாலத்தைக் கடந்து விட்டோம். திடீரென எனக்குக் கடும் வயிற்று வலி. அதாவது சுருண்டு படுத்துக்கொள்ளும் அளவுக்கு வலி. வட இந்தியப் பகுதிகளில் பெரும்பாலும் பச்சரிசியில் சமைக்கிறார்கள். நேற்று சாப்பிட்ட பச்சரிசி சாப்பாட்டின் விளைவாகக்கூட வயிற்று வலி ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தேன். அவர்கள் நால்வரும் பார்வைக்கு அப்பாற்பட்டு முன்னே சென்றிருந்தனர். நான் மந்தாகினி ஆற்றுப்பாலத்தை ஒட்டியிருந்த கூடாரம் ஒன்றில் வயிற்று வலி தாளாமல் படுத்து விட்டேன். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வயிற்றைப் பிடித்தபடி படுத்துக் கிடந்தேன். நிச்சயமாக என்னால் கேதார்நாத் செல்ல முடியாது. இந்த வயிற்று வலியில் 18 கிலோ மீட்டர் மலையேற்றத்தை நினைத்துப் பார்க்கும்போதே மலைப்பாக இருந்தது. மருந்தகத்துக்குச் சென்று வயிற்று வலிக்கான மாத்திரைகளை வாங்கிக் கொண்டு மீண்டும் நாங்கள் தங்கியிருந்த மொட்டை மாடிக் குடிசைக்கே 500 ரூபாய் வாடகை கொடுத்துப் போய் விட்டேன். அன்றும் அதற்கு மறுநாளும் மாத்திரை எடுத்துக்கொண்டு நன்றாக ஓய்வெடுத்தேன். மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்தது. சாப்பிடுவதைத் தவிர வேறு எதற்கும் வெளியே செல்லவில்லை. தொடர் பயணங்களில் சரியாக ஓய்வெடுக்கவில்லை என்றால் உடலே நம்மை அடித்து ஓய்வெடுக்கச் சொல்லும். ஆக உடல் எனக்கு இட்ட கட்டளையென நினைத்து நன்றாக ஓய்வெடுத்தேன்.
நல்ல ஓய்வுக்குப் பிறகு மே 25ம் தேதி காலை 5 மணிக்கே எழுந்து கேதார்நாத் யாத்திரைக்குக் கிளம்பினேன். கேதார்நாத் யாத்திரைக்கு இரவு பகலெல்லாம் கிடையாது. எந்நேரமும் மக்கள் சென்று கொண்டே இருப்பார்கள். இரண்டு மணி நேரம் வரிசையில் நின்று மந்தாகினி ஆற்றுப்பாலத்தைக் கடந்தேன். அங்கிருந்து 4 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கௌரிகுந்த் வரை செல்ல ஜீப் வசதி உள்ளது. 50 ரூபாய்க்கட்டணத்தில் கௌரிகுந்த் கூட்டிச் செல்வார்கள். அங்கிருந்துதான் மலையேற்றம் தொடங்கும். கேதார்நாத் யாத்திரை 5 – 6 மாதங்கள் மட்டும்தான். ஆகவே சோன்ப்ரயாகிலும் சரி கௌரிகுந்திலும் சரி நிரந்தரமான கடைகள் மற்றும் வளாகங்களை விட தற்காலிகமாக எழுப்பப்படும் தகரக்கொட்டகையிலான கடைகளே அதிகமாக இருக்கும். சோன்ப்ரயாகைப் போலவே கௌரிகுந்திலும் தங்கும் விடுதிகளே அதிகம். அதைத்தாண்டி பெரும்பாலும் தகரத்தாலும், ப்ளாஸ்டிக் பாய்களாலும் அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக உணவகங்கள், தேநீர் விடுதிகளே அதிகமாக இருக்கின்றன. ப்ளாஸ்டிக் தாளாலான ரெய்ன்கோட் குறைந்த விலையில் விற்கப்பட்டது. மலையேறும் பயணிகள் பெரும்பாலும் அதனை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தனர். நான் ஜெர்க்கின் அணிந்திருந்தேன். ட்ராக் பேண்ட் அணிந்து ஜாகிங் போவதற்காக வாங்கிய ஷூவினை அணிந்திருந்தேன். ஜெர்க்கினே போதும் என நினைத்ததால் ரெயின் கோட் வாங்கவில்லை. மலையேற்றத்துக்குத் தாங்கிப் பிடித்துச் செல்ல மூங்கில் தடிகள் விற்பனை செய்யப்பட்டது. நான் ஒரு தடியை வாங்கிக் கொண்டேன். கௌரிகுந்தில் காலை உணவு சாப்பிட்டதும் 8 மணிக்கு முன்னதாகவே மலையேற்றத்தைத் தொடங்கினேன்.

கௌரிகுந்தில் நூற்றுக்கணக்கிலான கச்சர் நின்று கொண்டிருந்தன. கச்சர் என்பது குதிரை மற்றும் கழுதையின் கலப்பினம். முக்திநாத்திலேயெ கச்சரைப் பார்த்திருக்கிறேன். குதிரை போன்ற தோற்றத்தில் சாதாரண மக்கள் ஏறுவதற்கு வாட்டமாக கழுதையின் உயரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட கலப்பினம்தான் கச்சர். இந்தக் கச்சரில் ஏறி கேதார்நாத் செல்ல வேண்டுமென்றால் 4 ஆயிரத்திலிருந்து 6 ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள். இரு மூங்கில் தடிகளுக்கு நடுவே மூங்கிலால் ஆன நாற்காலியைக் கட்டி அதில் அமர வைத்து, நான்கு முனைகளையும் நான்கு பேர் பல்லக்கினைப் போலத் தூக்கிச் செல்லும் ‘பால்கி’ பயணம். ஒரு நபர் உட்கார்ந்து வரும் அமைப்போடு முடையப்பட்ட மூங்கில் கூடையில் ஒரு நபரை ஏற்றிக்கொண்டு தோள்பட்டையில் அக்கூட்டையை மாட்டிக்கொண்டு அழைத்துச் செல்லும் ‘கண்டி’ பயணம் என பல விதங்களில் நாம் கேதார்நாத்தை அடைய முடியும். கௌரிகுந்தில் இருந்து கேதார்நாத் எத்தனை கிலோ மீட்டர் என்பதிலேயே பல குழப்பம் இருக்கிறது. இந்த மலையேற்றம் 18 கிலோ மீட்டர் என மனதில் நிறுத்தியிருந்தேன். இந்தக் கடுமையான பாதையில் 18 கிலோ மீட்டரை இன்றே கடந்து இரவுக்குள் கேதார்நாத்தை அடைந்து விட முடியும் என்கிற நம்பிக்கையில் கிளம்பினேன்.
மந்தாகினி ஆற்றை ஒட்டியபடியேதான் கேதார்நாத்தை நோக்கிச் செல்ல முடியும். பள்ளத்தாக்கினுள் ஆறு ஓடிக்கொண்டிருக்கும். மேலே அதனை ஒட்டியே செல்லும் மலைப்பாதை வழியாகத்தான் கேதார்நாத் செல்வோம். அப்பாதை அகன்று விரிந்ததல்ல. சற்றுக் குறுகியதுதான். மலை பெய்வதன் காரணமாக அந்த மண்பாதையே பல இடங்களில் சேறாகக் கிடந்தது. ஆயிரக்கணக்கான கச்சர் வருவதும் போவதுமாக இருப்பதால் அதன் சாணமும் அந்தச் சேற்றோடு கலந்தே இருந்தது. சேற்றையும் சாணத்தையும் மிதித்தபடிதான் நாம் மேலே செல்ல முடியும். நடந்து செல்கையில் மிகக்கவனமாக செல்ல வேண்டியிருக்கும். பத்துப் பதினைந்து கச்சர்களில் ஆள்களை ஏற்றிக்கொண்டு வரிசையாக மேல் நோக்கி வரும் அந்த கச்சர் ரயிலுக்கு நாம் வழி விட்டுதான் நடக்க வேண்டும். கீழிறங்கி வரும் கச்சர்களும் அதிகம். பால்கியிலும், கண்டியிலும் ஆள்களைச் சுமந்து வருகிறவர்களுக்கும் போகிறவர்களுக்கும் வழிவிட்டு நகர வேண்டியிருக்கும். ஆக இதையெல்லாம் கவனித்தபடியேதான் நாம் மலையேற வேண்டும். இந்த மலையேற்றத்துக்கு நான் முறையாக என்னைத் தயார்படுத்திக் கொள்ளவில்லை. எனது அலட்சியத்தின் விளைவை நான் மலையேற ஏறும்போது அனுபவிக்கத் தொடங்கினேன். ரெயின் கோட் வாங்காமல் வந்தது நான் செய்த முக்கியமான தவறு. எனது ஜெர்க்கின் குளிரினை மட்டுமே கட்டுப்படுத்துமே தவிர மழைக்கானது அல்ல. ஆகவே மழைநீரை அது உள்ளீர்த்துக் கொண்டது. இதன் விளைவே எனக்குள் குளிரின் தாக்கம் அதிகமானது. அடுத்தது நான் ஜாக்கிங் செல்லும் ஷூவினை அணிந்து வந்தது. இந்த வகையான ஷூக்கள் நடப்பதற்கு எடையின்றி இலகுவாக இருக்கும் என்றாலும் அவை தண்ணீரை எளிதாக உள்ளீர்த்துக் கொள்பவை. ஆகவே சாக்ஸ்களும் நனைந்து விட்டன. ட்ராக் பாண்ட் வழியாகக் குளிர் ஊடுருவது ஒன்றும் அவ்வளவு கடினமல்ல. ஆகவே மேலே செல்லச் செல்ல குளிரின் தாக்கம் கூடியது. மழைநீர் உட்புகுந்த ஈரம் ஒருவித நமைச்சலைக் கொடுப்பதாக இருந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல்தான் மலையேறினேன். சிலரை முந்தி நான் போய்க்கொண்டிருந்தேன் சிலர் என்ன முந்திச் சென்று கொண்டிருந்தார்கள். இரவுக்குள் எப்படியும் கேதார்நாத்தை அடைவது மட்டுமே நோக்கமாக இருந்தது.
கேதார்நாத் செல்லும் வழி நெடுகிலும் ப்ளாஸ்டிக் தார்ப்பாய்களால் அமைக்கப்பட்டிருக்கும் தேநீர் விடுதிகள் நிறைந்திருந்தன. அங்கே தேநீர் மட்டுமின்றி சாப்பிட நூடுல்ஸ் செய்து தருவார்கள். தண்ணீர் பாட்டில்கள் விற்கப்படும். ஆனால் எல்லாமே அங்கு கூடுதல் விலையில் விற்கப்படுவதைப் பற்றி நாம் புகார் சொல்ல முடியாது. 20 ரூபாய் தண்ணீர் பாட்டிலின் விலை 50 ரூபாய், தேநீர் 20 ரூபாய். இக்கடைகள் எல்லா நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும். கச்சர் மூலம் தேவையான சரக்குகளை ஏற்றி வருகின்றனர். ஆங்காங்கே நின்று ஓய்வெடுத்தும், தேநீர் அருந்தியபடியும் சென்று கொண்டிருந்தேன். சற்றுக் கடினமான பயணம்தான் என்றாலும் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நம்முடன் பயணம் செய்கையில் அது சற்று இலகுவாகத் தெரியும். கீழே பாயும் மந்தாகினி ஆறு, சுற்றிலும் இமயமலைச்சிகரங்கள் ஆகியவற்றுக்கு நடுவே மலைப்பாதையில் நடந்து போய்க்கொண்டிருந்தேன். பாதையின் பக்கவாட்டில் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. வழிநெடுக ஆங்காங்கே முதலுதவி மையங்கள் இயங்கி வந்தன. பனிமூட்டம் பெரும்பரப்பினை ஆட்கொண்டு விடும் மூர்கத்தோடு திரளாக நகர்ந்தபடி இருந்தது. தூரத்தே உயர்ந்து எழுந்திருந்த மலைகளில் எல்லாம் பனி கொட்டி மூடியிருந்தது. நடந்து செல்லும் பாதையில் கூட சில இடங்களில் பனி அப்படியே பாறையைப் போலாகி உறைந்து கிடந்தது.

மலையேற்றம் என்றால் செங்குத்தாக ஏறுவதல்ல. சமதளப்பாதையிலேயே வளைந்து நெளிந்து ஏறுவதாக இருந்தது. அப்பாதையின் பல இடங்களில் கற்களைப் பதித்து சாலையாக்கியிருந்தனர். மிகக்குறுகிய நேர இடைவெளியில் வரிசையாக ஹெலிகாப்டர்கள் பறந்து கேதார்நாத் நோக்கிப் போய்க்கொண்டே இருந்தன. கேதார்நாத் செல்ல ஹெலிகாப்டர் வசதி இருக்கிறது என்பதே அதைப்பார்த்த பிறகுதான் தெரிந்தது. புறக்காட்சிகளுக்கு கவனம் கொடுத்து என்னால் இயன்ற வேகத்தில் போய்க்கொண்டே இருந்தேன். இடையே சிறியதாக ஓய்வு எடுத்துக் கொண்டாலும் ஒரு கட்டத்தில் என்னால் நடக்க முடியவில்லை. உடல் கடுமையான சோர்வினை உணர்ந்தது. நல்ல உறக்கம் மட்டுமே அப்போதைய அத்தியாவசியத் தேவையாக இருந்தது. நேரம் போகப்போக குளிரின் தாக்கம் பெருகியது. மழையில் நனைந்து ஈரமான ஜெர்க்கினால் குளிரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. உடலை உதற வைத்துக் கொண்டிருந்தது அக்கடுங்குளிர். ஈரமான ஷூ, சாக்ஸைக் கழற்றி எறிய வேண்டும் போலிருந்துதது. கேதார்நாத்துக்கு இன்னும் 5 கிமீ செல்ல வேண்டியிருந்தது. இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில் இப்போது கேதார்நாத் செல்வதைக் காட்டிலும் தூங்கிவிட்டுக் காலையில் புத்துணர்ச்சியுடன் புறப்படுவதுதான் சரியாக இருக்கும் எனத்தோன்றியது. வழி நெடுக சிறியது முதல் பெரியது வரை கூடாரங்களை அமைத்திருந்தனர். பயணிகள் மடித்து எடுத்துச் செல்லும் கூடாரங்கள்தான் அவற்றில் அதிகமாக விரித்து அமைக்கப்பட்டிருந்தன. ஒருவர் மட்டும் தங்கக்கூடிய அக்கூடாரத்துக்கு அந்த இரவுக்கு மட்டும் 500 ரூபாய் வாடகை கேட்டனர். எப்போதும் பேரம் பேசி விலையைக் குறைக்கிற நானோ எதுவும் சொல்லாமல் கேட்ட பணத்தைக் கொடுத்தேன். களைப்பு என்னைப் பிய்த்துத் தின்று கொண்டிருந்தது. குளிரில் உடல் உதறல் எடுக்கத் தொடங்கியிருந்தது. போர்வைக்கு என்னைத் தைத்துக் கொண்டு ஓர் ஆழ்ந்த உறக்கத்துக்கு சென்றால் போதும் என்றிருந்தது. அதற்காக இன்னும் 500 ரூபாய் அதிகம் கேட்டாலும் கொடுக்கத் தயாராகவே இருந்தேன். ஆகவே எதுவும் பேசாமல் 500 ரூபாயைக் கொடுத்து அந்தக் கூடாரத்தை வாடகைக்கு எடுத்தேன். இன்னும் கொஞ்ச தூரம் முன்னே சென்றால் சாப்பாட்டுக் கடைகள் இருக்கும் என்று சொன்னார்கள். பசியினைக் கூடப் பொருட்படுத்தாது கூடாரத்துக்குள் நுழைந்ததும் முதலில் ஈரமாக சேறப்பியிருந்த ஷூ, சாக்ஸைக் கழற்றி ஓரம் போட்டேன். பின்னர் ஜெர்க்கின், ட்ராக் பாண்டயும் கழற்றிப் போட்டு விட்டு கம்பளிக்குள் புதைந்து கொண்டேன். நெடுநேரம் அடக்கி வைத்திருந்த சிறுநீரைப் பாய்ச்சுகையில் உண்டாகிற ஆசுவாசம் அப்போது கிடைக்கப்பெற்றது. நிமிடங்கள் கூட இல்லை சில நொடிகளிலேயே தூங்கி விட்டேன்.

மறுநாள் காலை எழுந்ததும் கழற்றியெறிந்தவற்றை மாட்டிக்கொண்டு நடைபயணத்தைத் தொடங்கினேன். மழை விட்டிருந்ததோடு குளிரின் தாக்கமும் குறைந்திருந்தது. வழியில் மீண்டும் நூடுல்ஸ்தான் சாப்பிட முடிந்தது. என்னோடு கேதார்நாத் வந்து கொண்டிருந்தவர்கள் பெரும்பாலும் குழுவாக வந்தவர்கள். சிரித்துக் கதைபேசியபடி களைப்பே அறியாதவர்களாகச் சென்று கொண்டிருந்தனர். நான் இரண்டு இடங்களில் நின்று ஓய்வெடுத்து வந்ததில் இறுதியாக கேதார்நாத்தை அடைந்தேன். தொலைவில் கோயிலின் விமானம் தெரிந்ததும் உத்வேகம் பெற்று வேகமாக நடந்தேன். கோயிலை ஒட்டியே சிறிது தொலைவில் ஹெலிபேட் அமைக்கப்பட்டிருந்தது. பயணிகளைக் கூட்டி வந்து இறக்கிய மறுகணமே திரும்பும் பயணிகளை ஏற்றிக்கொண்டு பறந்தது. தரிசனத்துக்குச் செல்கிறவர்களுக்கென நீண்டிருந்த வரிசையில் சென்று நின்றுகொண்டேன். அந்த நெடுவரிசையில் கொஞ்சம் கொஞ்சமாக முன்னகர்வதற்கே நேரம்பிடித்தது. வரிசையில் இடையில் முட்டி நுழைகிறவர்களை எதிர்த்து எழும் வசைக்குரல்களை பல இடங்களில் கேட்க முடிந்தது. பேரனுபவத்தைப் பெற வேண்டுமெனில் அதற்குப் பெருங்காத்திருப்பு அவசியமாகிறது. கேதார்நாதரை விழிததும்பக் கண்டு பெரும் பரவசத்துக்குள்ளாகப்போகிற அந்தச் சில நொடிகளுக்காக சில மணி நேரங்களை கொடுப்பதில் என்னவாகிவிடப் போகிறது. வெள்ளை நிறப் பஞ்சுமிட்டாய் போலிருந்த மூடுபனிக்கூட்டம் சுற்றிலும் பரவிக்கொண்டிருந்தது. நாற்புறத்திலும் பார்வையைச் சுழல விட்டேன். கேதார்நாத் கோயிலுக்கு வலப்புறத்தே எழுந்திருந்த மலையில் தூரக்காட்சியாக ஒரு கோயில் தெரிந்தது. அங்கிருந்தும் பக்தர்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள் என்றாலும் அது பெரிய எண்ணிக்கையில் இல்லை. அதைப்பற்றி விசாரிக்கையில் அது பைரவ்நாத் கோயில் என்று சொன்னார்கள். அதாவது காலபைரவர் கோயில். கேதார்நாதரை வழிபட்ட பிறகு சிலர் காலபைரவர் கோயிலுக்குச் சென்று விட்டுதான் திரும்புகிறார்கள். அங்கே செல்வது சற்று சவாலானதுதான். தோராயமாக 70 பாகைக் கோணத்தில் ஏற வேண்டியிருக்கும். பைரவ்நாத் செல்வது பற்றி எந்த யோசனையும் என்னிடம் இல்லை. கேதார்நாதர் தரிசனத்துக்குப் பிறகுதான் மற்ற திட்டங்கள் எல்லாம். 5 மணிநேரக் காத்திருப்புக்குப் பிறகு மலை வடிவில் கேதார்நாதரைக் கண்டேன். கூப்பிய கைகளை உயர்த்தி வணங்கி சில நொடிகள் உள்ளார்ந்து பேரமைதி கொண்டு அவரைப் பார்த்தபடியே நின்றிருந்தேன். எல்லாம் மிகக்குறுகிய நேரம்தான். அதுவே நிறைவாகத்தான் இருந்தது. வெளியே வந்ததும் நேரம் பார்த்தேன். மணி மாலை 5 ஐக் கடந்திருந்தது. சற்றே இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. காலபைரவர் கோயிலுக்குச் செல்லவதற்கான சூழல் வாய்க்கப்பெறவில்லை. நேரம் மற்றும் உடல்நிலை என எல்லாம் ஒன்றாகத் திரண்டு உருவான காரணம் அது. அப்போதே கீழிறங்கி விடலாம் என்கிற முடிவோடு வந்த பாதையிலேயே திரும்பினேன்.


ஏறுவதைக் காட்டிலும் இறங்குவது சற்று சுலபமானது என்றாலும் நம்மை இழுத்துச் செல்லும் விசையினைக் கட்டுப்படுத்தி நடப்பது சற்று சவாலானது. நள்ளிரவில் கூட அப்பாதையில் மக்கள் திரளாக வந்து கொண்டிருப்பார்கள் என்பதால் எந்தப் பிரச்னையும் இல்லை. சிறிது தொலைவு சென்ற பிறகு இன்னொரு பாதை பிரிந்தது. அதுவும் கௌரிகுந்த் – கேதார்நாத் பாதைதான் என்பதால் ஒரு மாறுதலுக்காக அந்தப் பாதையில் இறங்கினேன். சன்னமாக மழைத்துறிக்கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாமல் நடந்து போய்க்கொண்டிருந்தேன். இரவு பத்து மணிக்குள்ளாக கௌரிகுந்தை அடைந்து விட்டால் அங்கே ஏதேனும் விடுதியில் தங்கி விட்டு காலை எழுந்து சோன்பிரயாக் சென்று அப்படியே ரிஷிகேஷ் போய்விடலாம் என்கிற திட்டத்தை வகுத்தபடியே போய்க்கொண்டிருந்தேன். மழை ஈரத்தில் சேறாகக் கிடக்கும் பகுதிகளில் சறுக்கும் அபாயம் இருந்தது. மூங்கில் கம்பு மட்டும் இல்லையென்றால் இந்த சறுக்கும் பாதையில் விரைவாக இறங்குவதெல்லாம் சாத்தியப்பட்டிருக்காது. சில இடங்களில் தேநீர் அருந்தினேன். 50 ரூபாய்க்குத் தண்ணீர் பாட்டில் வாங்கிக் குடித்து வயிற்றை நிரப்பினேன். நூடுல்ஸ் சாப்பிடுவதில் ஈடுபாடில்லாமல் கௌரிகுந்தில் உள்ள உணவகத்தில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்கிற திட்டத்தோடு போய்க்கொண்டிருந்தேன். வேகமாகப் போய்க்கொண்டிருப்பதாகத் தோன்றினாலும் பத்து மணியைக் கடந்து விட்ட பிறகும் கௌரிகுந்த்-ஐ அடைந்திருக்கவில்லை. உடல் முற்றிலும் சோர்ந்து போயிருந்தது. இதோ இன்னும் கொஞ்சம் தொலைவுதான் எனச் சொல்லி என்னை நானே தேற்றியபடி நடந்து கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் என்னால் நடக்கவே முடியவில்லை. கடுமையான உடல் வலி. அப்பாதை இன்னும் இன்னும் என விரிந்து போய்க்கொண்டே இருப்பதைப் போலத்தோன்றியது. தேநீர்க்கடையொன்றில் விசாரிக்கையில் இன்னும் 3 கிலோ மீட்டர் செல்ல வேண்டும் என்றார்கள். சற்று ஊக்கம் பெற்று நடந்து கௌரிகுந்த்-ஐ அடைந்த போது 12 மணியைக் கடந்திருந்தது.

கௌரிகுந்தில் விடுதிகள் எல்லாமே நிரம்பியிருந்தன. ஒரு வளாகத்தில் வரிசையாகப் பலர் போர்வையை விரித்துப் போட்டுப் படுத்திருந்தார்கள். அங்கு தூங்குவதற்கு 500 ரூபாய் கேட்டனர். அநியாயமாகத்தான் தெரிந்தது. சீசனாயிற்றே கொடுத்தேன். அதனை வாங்கிக் கொண்டதும் அவரது உள்ளுணர்வே அவரைச் சீண்டியிருக்கூடும் என நினைக்கிறேன். நூறு ரூபாயைத் திருப்பிக் கொடுத்து விட்டார். ஓரளவு நல்ல உறக்கம். எந்தளவு என்றால் வாடகைக்கு நானூறு ரூபாய்க் கொடுத்தது பற்றிய வருத்தம் துளியளவு கூட இல்லாத அளவுக்கு. சோன்ப்ரயாக் விடுதிக்குச் சென்றேன். சிரிஷ் துபே உள்ளிட்ட நால்வரும் முன்தினமே வந்து கிளம்பி விட்டதாகச் சொன்னார்கள். எனது பேக் பேக்கை எடுத்துக் கொண்டு ரிஷிகேஷுக்குப் புறப்பட்டேன்.
– ரிஷிகேஷில் தொடர்வோம்
கி.ச.திலீபன்

