இன்றைய இளைஞர்கள் போகத் துடிக்கிற கனவுத் தலமாக லடாக்  உருவாகியிருக்கிறது என்றால் அதற்கு சமூக வலைதளங்கள் முக்கியக் காரணம். ராயல் என்ஃபீல்ட், தண்டர்பேர்ட் பைக்குகளில் தலைக்கவசம் மற்றும் ‘நீ கேப்’ கொண்ட சூட்டுகளை அணிந்தபடி லடாக்கின் சவாலான மலைப்பாதைகளில் பயணிக்கும் காணொலிகளைக் காண்கையில் பெரும் பரவசமும், சாகச உணர்வும் மேலெழும். அக்காணொலிகளில் அந்நிலத்தின் அற்புதமான காட்சிகளை வெட்டிச் சுருக்கி அதன் பின்னணியில் ‘வாழா என் வாழ்வை வாழவே’ ‘இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடா’ ‘சேரும் வரை போகும் இடம் தெரியாதனில் போதை  தரும் பேரின்பம் வேறுள்ளதா’ என்பன போன்ற பாடல்களைச் சேர்த்து உருவாக்கப்படும் ரீல்ஸ்கள் இயல்பாகவே லடாக் பயணத்தின் மீதான கனவுகளை விரித்து வளர்ப்பவை. இன்றைக்குத் தமிழ்நாட்டின் குக்கிராமத்தில் வாழும் இளைஞர்களிடம் சென்று பயணம் பற்றிக் கேட்டால் கூட லடாக் செல்ல வேண்டும் என்று சொல்லும்படியாக லடாக் ஒரு கனவுப் பிரதேசமாக உருவாகியிருக்கிறது.

ஸ்ரீநகர், மணாலி என இரண்டு வழிகளில் லடாக் மாநிலத்தின் தலைநகரான லே-ஐ அடைய முடியும். இந்தியாவில் பெரும்பாலானவர்கள் மணாலி வழியாகவே லடாக்கை அடைகிறார்கள். ஒரு பாதையில் ஏறி மறு பாதையில் இறங்குபவர்களும் அதிகம். நானும் அப்படியாக ஸ்ரீநகர் வழியாக லே சென்று மணாலி வழியாக சண்டிகர் திரும்புவதென முடிவெடுத்தேன். அடுத்த நாள் காலை அறையைக் காலி செய்து விட்டு லால் சௌக்கிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் நடைபயணத்தில் லே பேருந்து நிற்குமிடத்துக்கு வந்தேன். ஜம்மு காஷ்மீர் மாநில அரசுப்பேருந்தில் ஸ்ரீநகரிலிருந்து லே செல்வதற்கு 1,560 ரூபாய்க் கட்டணம். பேருந்து புதியதாகவும் சுத்தமாகவும் இருந்தது. சாளர இருக்கையைக் கேட்டு வாங்கி உட்கார்ந்து கொண்டேன். லடாக் சாலையில் சரக்கு லாரிகள், எஸ்.யூ.வி கார்கள் மற்றும் ராயல் என்ஃபீல்ட் பைக்குகளும்தான் அதிகம் பயணப்படுகின்றன. மரங்கள் அடர்ந்த பசுமையான மலைகளுக்கு நடுவே, அடங்காச்சலனத்தோடு பாய்கிற இந்துஸ் ஆற்றை ஒட்டியபடியே நீண்டு சென்று கொண்டிருந்தது லடாக் சாலை. பெரும்பகுதி இடங்களில் பக்கவாட்டுத் தடுப்புகளே இல்லாதது, நம்மைச் சிறு அச்சத்துக்குள்ளாக்கும். தவாங், முக்திநாத் போன்ற முந்தைய இமயமலைப் பயணங்களில் இதனை எதிர்கொண்டிருந்தேன் என்பதால் எனக்கு அந்த அச்சம் நீங்கியிருந்தது. கோடைக்காலத்தின் இறுதி என்பதால் பனிப்பொழிவு இல்லை. மழை முகடுகளில் மட்டும் பனி கொட்டியிருந்தது. இந்துஸ் ஆற்றின் மறுகரையில் வீடுகள் பெட்டிப் பெட்டியாகத் தெரிந்தன. சரக்கு லாரிகள் அவ்வப்போது கிளப்பும் மண் புழுதிதான் புகை போல எழுந்து வேடிக்கை பார்க்க இடையூறாக இருந்தது. பேருந்து புறப்பட்ட சில மணி நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. ஜோஜிலா கணவாயை அடைந்து விட்டோம் என நினைத்தேன்.   

சமூக வலைதளங்களில் பரவலாவதற்கு முன்பே லடாக்கைப் பற்றி நான் தெரிந்து கொண்டது புகைப்படக்கலைஞர் அண்ணன் தி.விஜய் மூலமாகத்தான். பத்து ஆண்டுகளுக்கு முன்பே அவர் லடாக்கில் நடைபெறும் ஒரு பழங்குடித் திருவிழாவை புகைப்படங்கள் எடுப்பதற்காகச் சென்றார். எனது லடாக் பயணத்துக்கான ஆலோசனையை அவரிடம் கேட்டுப் பெற்றிருந்தேன். ஸ்ரீநகர் வழியாகச் செல்லும்போது ஜோஜிலா கணவாய்ப் பகுதியைக் கடப்பதுதான் பெரும் சவாலானது என்றும், ஜோஜிலா கணவாயில் பாதை மிகக்குறுகியதாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் என்பது அங்கே வாடிக்கையான ஒன்றாக மாறியிருக்கிறது என்றும் சொல்லியிருந்தார். எனது பயணத்திலும் அது அப்படியே நிகழ்ந்தது. வரும் வழி முழுக்க கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை அதிகம் பார்த்தேன். ஜோஜிலா கணவாயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் கண்டதும் அது குறித்து இணையத்தில் தேடினேன். ஜோஜிலா சுரங்கப்பாதைக்கான பணிகள் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடந்து கொண்டிருக்கின்றன. 14 கிலோ மீட்டர் தொலைவிலான இந்தச் சுரங்கப்பாதை ஸ்ரீநகர் – லே பயண நேரத்தைக் குறைத்து பயணத்தை எளிதாக்கும். சுற்றுலா வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவத் தேவைகளுக்கும் பெரும் பயனுள்ளதாக அமையும் என்பதாலேயே இத்திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. லடாக் போன்ற மிகவும் பின்தங்கிய மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியே சுற்றுலாவை நம்பி இருக்கிறது. ஜோஜிலா சுரங்கப்பாதை திறக்கப்படுவது லடாக் பொருளாதாரத்துக்கு நிச்சயம் வலு சேர்க்கும் என்பதால் இது அற்புதமான திட்டம்தான்.

அரை மணி நேரத்திலேயே போக்குவரத்து நெரிசல் சீரானது. மதியம் சாப்பிடுவதற்காக பேருந்து ஒரு சிறிய உணவகத்தில் நிறுத்தப்பட்டது. அங்கே மேகி நூடுல்ஸ் செய்து கொடுத்தனர். உணவருந்தவும், தேநீர் அருந்தவும் பேருந்து ஆங்காங்கே நின்று தவணை முறையில் பயணித்தது. எப்படியும் அடுத்த நாள்தான் பேருந்து லே-ஐ அடையும் எனக் கணிக்க முடிந்தது. மாலை இருள் சூழ்ந்த வேளையில் பேருந்து கார்கிலை அடைந்த போது, வரலாற்றுத் தடம் பதிந்த ஒரு நிலத்தில் நின்றிருக்கிற உணர்வு உச்சநிலையில் இருந்தது. தொடக்கப்பள்ளி ஆங்கிலப் பாடத்தில் கார்கில் போர் பற்றிப் படித்த நினைவு மீண்டெழுந்தது. பேருந்து நிறுத்தப்படுகிற சில நிமிடங்களில் போர் நினைவிடத்துக்கெல்லாம் சென்று காணும் வாய்ப்பில்லை. கார்கிலைத் தாண்டி சிறு தொலைவில் பேருந்து தொழுகைக்காக நிறுத்தப்பட்டது. தொழுகைக்காக பேருந்து நிறுத்தப்படுவதை அப்போதுதான் முதன்முறையாகக் கண்டேன். அங்கிருந்து புறப்பட்ட பிறகு இரவு உணவுக்காக நிறுத்தப்பட்ட பேருந்து சில மணிநேரம் அப்படியே தங்கி விட்டது. சிறு ஓய்வுக்குப் பிறகு புறப்பட்ட பேருந்து மறுநாள் காலை ஏழு மணிக்கு லே-ஐ அடைந்தது.   

ஸ்ரீநகரில் கண்ட பசுமை லடாக்கில் அறவே இல்லை. சுற்றிலும் பழுப்பு நிறத்தில் மண் திட்டுகளைப் போல மலைகள் எழுந்திருந்தன. லே-வில் ஒரு நாள் மட்டுமே தங்கும் திட்டத்துடன் வந்திருந்தேன். ஏனென்றால் தவாங் – பும்லா பாஸ் – முக்திநாத் – கேதார்நாத் – லடாக் வரை இந்தப் பயணத்தில் இமயமலைக்குதான் அதிகம் சென்றிருக்கிறேன். ஆக ராஜஸ்தான் போன்ற முற்றிலும் வேறான நிலப்பகுதியில் இனி உலவுவது என முடிவெடுத்திருந்தேன். 500 ரூபாய் வாடகைக்கு விடுதி அறை எடுத்து எனது பேக் பேக்கை வைத்து விட்டு லே-ஐ சுற்றக் கிளம்பினேன். காலை 8 மணிக்கெல்லாம் ஹிமாலயன் பைக்கை வாடகைக்கு எடுத்தேன். 2,000 ரூபாய் சொன்ன பைக் வாடகையை 1,300 ரூபாய்க்குப் பேசி எடுத்தேன். 700 ரூபாய்க்குப் பெட்ரோல் போட்டதும் 2,000 ரூபாய் நிகரானது. இருக்கிற நிதி நெருக்கடியில் இது அவசியம்தானா என்று கூடத்தோன்றியது. லேப்டாப் களவு போன பிறகு எழுத்தில் சம்பாதிக்க முடியவில்லை. முற்றிலும் எந்த வருவாயும் இல்லாமல் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். இச்சூழலில் இயல்பாகவே உண்டாகும் பணம் சார்ந்த பதற்றம்தான் இது. இருந்தும் இமயமலையின் மிக உயரமான சாலைகளில் ஹிமாலயன் பைக் ஓட்டிச் செல்லும் சாகச அனுபவத்துக்கு முன் இரண்டாயிரம் ரூபாய் பெரிய தொகையாகத் தெரியவில்லை.

இந்தப் பயணத்தைத் தொடங்குவதற்கு சில மாதங்கள் முன்புதான் இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டு குணமாகி வந்திருந்தேன். எலும்பு கூடி முழுதாக ஆறு மாதங்கள் கூட நிறைந்திருக்காத நிலையில் லடாக்கின் சவாலான பாதைகளில் இதுவரை பரிச்சயப்படாத ஹிமாலயன் பைக்கை ஓட்டிச் செல்வது சாத்தியமா என்கிற கேள்வியும் முதலில் எழுந்தது. எதுவாயினும் பார்த்துக் கொள்ளலாம் என்கிற அசாத்தியத் துணிவுதான் என்னை லே வரை கூட்டி வந்திருக்கிறது எனும் போது இதுவும் சாத்தியப்படும் என நினைத்துதான் பைக்கை வாடகைக்கு எடுத்தேன். லே நகருக்குள்ளும் லடாக்கின் வெவ்வேறான பகுதிகளிலும் பார்க்க வேண்டிய தலங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் கார்துங்லா கணவாயும், பாங்காங் ஏரியும் மிகப் பிரசித்தி பெற்றவை. பாங்காங் ஏரியை இந்தியாவும் சீனாவும் (திபெத் வழியே) பங்கு போட்டுக்கொண்டிருக்கிறது. அலைச்சீற்றமில்லாத கடல் போல நீல நிறத்தில் விரிந்திருக்கும் பாங்காங் ஏரிக்குப் போவது அற்புதமான காட்சியனுபவமாக இருக்கும் என்றாலும் 223 கி.மீ தொலைவில் இருக்கும் பாங்காங் ஏரிக்கு ஒரு நாளில் சென்று வருவது சாத்தியமல்ல. 40 கி.மீ தொலைவில் இருக்கும் கார்துங்லா கணவாய் சென்று திரும்பி விட்டு லே நகருக்குள் இருக்கும் சில தலங்களுக்குச் செல்வது மட்டுமே எனது பொருளாதாரச் சாத்தியங்களுக்குட்பட்டது.       

கார்துங்லா கணவாய்தான் உலகின் மிக உயரமான மோட்டார் வாகனச்சாலை. 5359 மீட்டர் உயரங்கொண்ட கார்துங்லாவுக்குச் சென்றேன். ஹிமாலயன் பைக்கை வாடகைக்கு எடுத்த போது அவர்கள் தலைக்கவசமும், கையுறையும் கொடுத்தார்கள். அத்தலைக்கவசத்தைக் கொண்டு தலையை நான்குபுறமும் முழுவதுமாக மூடவியலாது. முகத்தைத் தவிர மற்ற பகுதிகளை அது மூடி விடும். முகத்துக்கு முன்னால் இறக்கி விடும்படியாக இருந்த ஃபைபர் கண்ணாடி கண்களை மட்டுமே மூடும்படியாக இருந்தது. மூக்கிலிருந்து தாடை வரையிலான பகுதியை மூட வழியில்லை. அப்படியொரு தலைக்கவசத்தால் குளிர் நாசித்துவாரங்களில் ஏறும் என்பது கார்துங்லா கணவாய்க்குச் செல்லும் வழியில்தான் தெரிந்தது. கார்துங்லா செல்லும் பாதையில் பாதி தொலைவு வரையிலும் எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலையேறிச்சென்றேன். இரண்டாம் பாதியில் குளிரின் தாக்கம் அதிகரித்தது. அக்குளிர்க்காற்று நேரடியாகத் தாக்கி நாசித்துவாரங்களின் வழியே உள்ளே போய் கடும் மூக்கெரிச்சலை உண்டாக்கியது. இதனால் இடையிடையே நிறுத்தி நிறுத்திச் செல்ல வேண்டியிருந்தது. கார்துங்லா செல்லும் மலைப்பாதையிலிருந்து  லே சமவெளியைப் பார்த்தேன். மலைகள் சூழ்ந்த பாலைவனமாக இருந்தது. இயற்கை வளமோ, உயிர்வளமோ அற்ற ஒரு நிலப்பரப்பு. கடுங்குளிர் எல்லாவற்றுக்கும் எதிரானது. வெப்பம்தான் உயிர்வளத்தைப் பெருக்கக்கூடியது. இன்னும் சற்றுத்தொலைவு கடந்த பிறகு பனிப்பொழிய ஆரம்பித்தது. கார்துங்லா கணவாய் இன்னும் 10 கி.மீ இருந்த நிலையில் போய்ச் சேர்வோமா என்கிற சந்தேகம் வலுத்தது. என்னவாயினும் போயே தீர வேண்டும். பேருந்து அல்லது சுமோவில் செல்கையில் ஜன்னல் வழியே பனிப்பொழிவைப் பார்த்துக் களிப்புறலாம். பைக்கில் செல்கையில் அது சற்றுத் துயரத்தையே தருகிறது.

என்னைத்தாண்டி பைக்கர்கள் குழு ஒன்று சென்றது. கருப்பு நிற பைக்கர் சூட் அணிந்து அவர்கள் ஒருமித்துப் போய்க்கொண்டிருந்தார்கள். ஆக்டிவா வண்டியில் ஒருவர் திருச்சி – லடாக் என எழுதிய பலகையை முன்னே மாட்டிக்கொண்டு கார்துங்லா கணவாய் நோக்கிப் போய்க் கொண்டிருந்ததைப் பார்க்கையில் சற்றே வியப்பு மேலெழ அவரைக் கடந்து சென்றேன். இடையே தேநீர் விடுதி ஒன்றினைக் கடந்து போனேன். பிறகு மேல்நோக்கிச் சென்ற பாதை அப்படியே கீழே இறங்கியது. ஒரு வேளை கார்துங்லா கணவாயைக் கடந்து விட்டோமோ என்கிற சந்தேகம் அப்போதுதான் எழுந்தது. எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த இன்னொரு பைக்கர் குழுவிடம் கேட்டதற்கு கார்துங்லா கணவாயைக் கடந்து விட்டதாகச் சொன்னார்கள். வண்டியைத் திருப்பி கார்துங்லா நோக்கிப்போனேன். அங்கே பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எல்லையோரச் சாலை அமைப்பு நிறுவியிருக்கும் வரவேற்புப் பலகை முன் நின்று புகைப்படம் எடுக்க மக்கள் குழுமியிருந்தனர். இதனைக் கடந்துதான் போனேன் என்றாலும் எப்படியோ கவனிக்காமல் சென்றிருக்கிறேன். இந்தப் பலகையை நான் நீண்டகாலமாகப் பார்த்து வருகிறேன். இன்ஸ்டாகிராம் தளத்தில் பயண வலைப்பதிவர்களும், பைக்கர்களும் இப்பலகை முன் படமெடுத்து அதனைத் தங்களது சாதனையென பதிவிட்டிருப்பர். உலகின் மிக உயரமான மோட்டார் வாகனச்சாலை என்பதை அறிவிக்கும் அந்தப் பலகையில் அது 17,982 அடி உயரமானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்பலகையின் முன் நின்று புகைப்படம் எடுக்கவே காத்திருக்க வேண்டியிருந்தது. எனக்கு முன்னர் ஒரு தம்பதியரும், ஐம்பது வயதைக் கடந்த ஒரு அம்மாவும் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிறகு நானும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன். கன்னியாகுமரியில் தொடங்கிய இப்பயணம் இன்றைக்கு இமயத்தின் ஒரு உச்சத்தில் வந்து நின்றிருக்கிறது. இப்பயணத்தின் நெகிழ்ச்சித் தருணங்களில் இதுவும் ஒன்று.       

கார்துங்லாவிலிருந்து லே திரும்புகையில் பனிப்பொழிவின் வேகம் வலுத்திருந்தது. தலைக்கவசத்தின் முன்பகுதியில் மூடியிருந்த ஃபைபர் கண்ணாடி மீது பனிக்கொட்டி சாலையை மறைத்தது. ஒவ்வொரு முறையும் இடது கையால் அதனைத் துடைத்தெடுக்க வேண்டியிருந்தது. எனக்கு அளிக்கப்பட்ட கையுறையில் தோல் அல்லது ரெக்ஸின் இல்லாது துணிமட்டுமே இருந்தது. அந்தப் பனி எளிதாக உருகி இடது கையை விரைக்கச் செய்ததால் வண்டி ஓட்டவே முடியவில்லை. மூக்கிலிருந்து தாடை வரைக்கும் நேராக பனித்துளிகள் ஊசியைப் போல் வந்துக் குத்தின. பனிப்பொழிவைக் கொண்டாடும் மனநிலையில் இருந்த எனக்கு அதுவே பெரும் வாதையானதுதான் வருத்தம். பனித்துளிகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாத போது வண்டியை நிறுத்தி சிறிது நேரம் குனிந்து கொள்வதும் பின்னர் தொடர்வதுமாகச் சென்று கொண்டிருந்தேன். வழியில் மண் சாலைகள் பனி உருகிய நீரால் சேறாகியிருக்க அதில் உழன்று நான் அணிந்திருந்த ஜாகிங் ஷூவும் சேறாகியது. இந்தப் பனிப்பொழிவைக் கடந்து விட்டால் போதும் என்றிருந்தது. பாதித் தொலைவை இறங்கிக் கடந்த பிறகு அங்கு பனிப்பொழிவு இல்லை. வண்டியை நிறுத்திக் கொஞ்சம் ஆசுவாசமடைந்தேன். லே பயணத்துக்கு இந்த அனுபவமே போதும் என்கிற நிறைவை எட்டினேன். லே நகரத்துக்குள் அரண்மனை, புத்த மடாலயங்கள் எனச் சென்று காண்பதற்கு பட்டியல் போடும் அளவுக்கான தலங்கள் இருக்கிறது என்றாலும் லே அரண்மனைக்கு மட்டும் சென்று வந்தேன். இரவானதும் குளிர் கூடியதால் பைக்கைத் திரும்ப ஒப்படைத்து விட்டு சாப்பிடச் சென்றேன். அங்குள்ள ஓர் உணவகத்தில் சோறும் தாலும் கொடுத்து ரொட்டியும் சேர்த்துக் கொடுத்தார்கள். நன்றாகவே இருந்தது. எனது விடுதிக்கு வந்து தூங்குகிற வரையிலும் எனது எண்ணம் முழுமைக்கும் மணாலி செல்வது குறித்த யோசனைகளே  நிறைந்திருந்தது.     

லே-வில் இருந்து  இருந்து மணாலிக்குப் போக ஒரே ஒரு பேருந்துதான் இயக்கப்படுகிறது. அப்பேருந்தில் செல்ல ஒருநாள் முன்னதாகவே பதிவு செய்ய வேண்டும். அப்பேருந்து நள்ளிரவு 2.30 மணிக்குக் கிளம்பும் என்பதை விசாரித்து அறிந்தேன். மணாலிக்கு ஷேர் டாக்சி இருக்கிறது என்றாலும் அதற்கு ஒரு நபருக்கு 3,500 ரூபாய்க் கட்டணம். பேருந்தில் செல்வது ஒன்றே எனது அப்போதைய சூழலுக்கு உகந்தது. அடுத்த நாள் மாலை நான்கு மணிக்கு வரிசையில் முதல் ஆளாக நின்று ஜன்னலோர இருக்கையை முன்பதிவு செய்தேன். 660 ரூபாய்க் கட்டணம். பயண விவரங்களை ஒரு தாளில் எழுதிக்கொடுத்தார்கள். அதனை வாங்கிக் கொண்டு வந்த பிறகு இரவு முன்னதாகவே தூங்க வேண்டியிருந்தது. எல்லாவற்றையும் தயார் செய்து விட்டுதான் படுத்தேன். நள்ளிரவு கிளம்பி விடுவேன் என வாடகையை முழுவதும் கொடுத்துக் கணக்கை முடித்தேன். நள்ளிரவு ஒன்றரை மணிக்கு அலாரம் வைத்து எழுந்து பேருந்து நிலையத்துக்கு அரவமற்ற சாலையில் நடந்து போனேன்.

நெடுங்காலமாக நான் ஒன்றைப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன். இந்தப் பயண அனுபவத்தையும் வைத்து இன்னும் அழுத்தமாகவே சொல்கிறேன். தமிழ்நாடு அளவுக்கு பொதுப் போக்குவரத்தில் தன்னிறைவு பெற்ற மாநிலம் இந்தியாவில் வேறு எதுவும் கிடையாது. நட்டத்தில் இயங்கினாலும் இது ஓர் சேவை என்கிற கருத்தில் திராவிட அரசுகள் உறுதியோடு இருந்து வருகின்றன. லடாக் இன்றைக்கு இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம். ஸ்ரீநகர் அல்லது மணாலி இந்த இரு வழிகளில்தான் லடாக்குக்கு வருகின்றனர். லடாக் தலைநகர் லே-வில் இருந்து ஹிமாச்சலின் முக்கியச் சுற்றுலாத்தலமான மணாலிக்கு ஒரே பேருந்துதான் இயக்கப்படுகிறது. அந்தப் பேருந்தும் பின்னிரவு 3 மணிக்குக் கிளம்புகிறது. இந்தக் குளிரில் 2 மணிக்கு எழுந்து தயாராகி பேருந்தைப் பிடிப்பது உண்மையிலும் கடினமானது. 15 மணி நேரத்துக்கும் மேலான பயணம் என்பதால் 3 மணிக்கு கிளம்பினால்தான் இரவு மணாலியை அடைய முடியும் என்பது உண்மைதான். அப்படி ஒரு பேருந்து போக, காலை 6 மணிக்கு மேல் ஒரு பேருந்தை இயக்கலாம். ஏனென்றால் இதுதான் லடாக் சீசன் என்பதால் நிச்சயம் நட்டத்தைச் சந்திக்காது. நம் தமிழ்நாட்டில் உள்ளூர் திருவிழாவை ஒட்டியே சிறப்புப் பேருந்து இயக்கப்படும். அப்படியான ஒரு மாநிலத்தில் வாழ்கிறவன் என்பதால் இந்தக்கேள்வி இயல்பாகவே எழுந்தது.

ஸ்ரீநகரிலிருந்து லே வந்தது ‘அல்ட்ரா டீலக்ஸ் செமி ஸ்லீப்பர்’ பேருந்தில் என்பதால் களைப்பறியாமல் வர முடிந்தது. லடாக்கிலிருந்து மணாலி செல்வது சாதாரண பேருந்து என்பதோடு சாலையும் சற்று மோசமானதாக இருந்ததால் உடல் கடும் சோர்வுக்கு ஆளாகியது. ஸ்ரீநகர் – லே பாதையைக் காட்டிலும் லே – மணாலி பாதையில் நிலக்காட்சிகள் அற்புதமாக இருந்தாலும் கடுமையான தலைவலிக்கு ஆளாகியதால் என்னால் அவற்றை முழுமையாகக் கண்டு திளைக்க முடியவில்லை. தூங்க முயற்சித்தாலும் பேருந்து சற்றே குலுங்கிக் குலுங்கிச் சென்றதில் தூங்கவும் முடியவில்லை. மதிய உணவுக்காக பேருந்து நிறுத்தப்பட்டது. தலைவலியின் காரணமாக சாப்பிடத் தோன்றவில்லை என்றாலும் பசியோடு இருக்கக்கூடாது எனச் சாப்பிட்டேன். அந்த உணவகம்  தற்காலிகமானது என்பதால் ப்ளாஸ்டிக் தார்ப்பாய்களால் கூடாரமாக எழுப்பப்பட்டிருந்தது. உணவு பரிமாற சற்றே காத்திருக்க வேண்டிய சூழலில் உணவகத்தில் பணியாற்றிய  பெண்ணிடம் தலைவலிக்கு மாத்திரை கிடைக்குமா என்று கேட்டேன். இந்தத் தட்பவெப்பநிலை காரணமாகத்தான் தலை வலிக்கிறது இன்னும் சற்றுத்தொலைவு கீழே சென்றால் சரியாகி விடும் என்றார். எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த இருவர் கஞ்சா இழுத்துக் கொண்டிருந்தனர். “இதை வேண்டுமென்றால் இழுத்துப்பார் தலைவலி போய்விடும்” என அவர்களில் ஒருவன் என்னிடம் கஞ்சா சுருளை நீட்டினான். நான் வேண்டாமென மறுத்தேன். ஓர் உணவகத்தில் உட்கார்ந்து கொண்டு வெகு இயல்பாக கஞ்சாப் புகைக்கும் அளவுக்கு இங்கு அது சர்வ சாதாரணமாக இருக்கிறதா எனத் தெரிந்து கொள்ள நினைத்தேன்.

மணாலியை அடையும்போது இரவாகி விட்டது. சுற்றுலாப் பயணிகளால் மணாலியே தழும்பிக் கொண்டிருந்தது. மணாலி போன்ற மிகப்பெரிய சுற்றுலா நகருக்கு வருவதில் என் போன்றவர்களின் பிரச்னை என்னவென்றால் விடுதி வாடகைதான். உட்சபட்ச பயணக் களைப்பில் இருந்த நான், மணாலி மால் சாலைக்குச் சென்று விடுதிகளில் கேட்டபோது அவர்கள் சொன்ன குறைந்தபட்ச வாடகையே 1600 ரூபாய். சண்டிகருக்குப் பேருந்து ஏறி விட்டால் பயணத்திலேயே காலை வரை தூங்கி விடலாம் என நினைத்துப் பேருந்து நிலையத்துக்குத் திரும்ப வந்தேன். அங்கு விசாரித்தால் இரவு 10 மணிக்கு மேல் பேருந்துகள் இயங்காது என்றனர். மணாலியில் தங்குவதைத் தவிர வேறெந்தெ வாய்ப்பும் இல்லாத நிலையில் பழைய மணாலியில் நிறைய ஹாஸ்டல்கள் இருப்பதாக இணையத்தில் பார்த்தேன். 2 கி.மீ தூரம் நடந்து சென்று தேடியதில் ‘முஸ்டாச்’ ஹாஸ்டலைக் கண்டடைந்தேன். ஒரே அறையில் ஆறு படுக்கைகள். ஒரு நபருக்கு 500 ரூபாய் வாடகை. இது போதும் என அங்கேயே தங்கினேன். மறுநாள் காலை எழுந்ததும்தான் கசோல் செல்லும் திட்டம் உருவானது. கசோல் பற்றி நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றாலும் கசோல் உலகப் பயணிகளை ஈர்க்கும் ஓர் ஊராகத் திகழ்வது குறித்தும் அதன் ஹிப்பி கலாசாரம் பற்றியும் ஓரளவு அறிந்திருக்கிறேன் என்பதால் கசோலுக்குக் கிளம்பினேன்.

குல்லு வழியாகத்தான் கசோல் போக வேண்டும். மணாலியிலிருந்து குல்லுவுக்குப் பேருந்தில் வந்தேன். சாலையோரங்களில் வழி நெடுக பார்த்தீனியச் செடியினைப் போல கஞ்சாச் செடிகள் செழித்து வளர்ந்திருந்தன. ஹிமாச்சல் பிரதேசத்திலிருந்து கஞ்சாவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது குறித்த வரைவு பாராளமன்றத்துக்கு அனுப்பப்பட்டது. ஹிமாச்சல் பிரதேசத்தில் விளையும் கஞ்சாவுக்கு உலக அளவில் மிகப்பெரிய சந்தை இருக்கிறது. ஆகவே பொருளாதார நோக்கில் ஹிமாச்சலில் கஞ்சா விளைவித்து ஏற்றுமதி செய்யலாம் என்கிற வரைவு அனுப்பப்பட்ட நிலையில் அது நிராகரிக்கப்பட்டது. உலகப்புகழ்பெற்ற ஹிமாச்சல் கஞ்சா சாலையோரத்தில் சல்லிசாகக் கிடக்கிறது. குல்லுவை அடைந்த பிறகு புந்தர் போய் அங்கிருந்து வேறு பேருந்தில் கசோலுக்குச் சென்றேன்.

பார்வதி பள்ளத்தாக்கினை ஒட்டி அமைந்திருக்கக்கூடிய நகரம்தான் கசோல். உலகளாவிய சுற்றுலாப் பயணிகளுக்காக மட்டுமே இந்நகரம் இயங்குகிறது. உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளே இங்கு அதிகம். இங்குள்ள துணிக்கடைகளில் பொஹொமியன் கலாசார ஆடைகள், ப்ரேஸ்லெட்டுகள் மற்றும் தொப்பிகளே அதிகம் விற்கப்படுவதைக் காணலாம். அதற்கடுத்தபடியாக மதுக்கடைகள், பல வடிவங்களில் அழகிய வேலைப்பாடுகள் மிகுந்த பாங்குக் குடுவைகள் மற்றும் கலைப்பொருள்கள் விற்கும் கடைகளைப் பார்க்க முடிந்தது. கசோலை அடைந்ததுமே மதிய உணவாக சிறிய கடை ஒன்றில் மோமோஸ் சாப்பிட்டேன். கசோலில் அன்று ஒரு நாள் மட்டுமே தங்கும் திட்டத்தோடு வந்திருந்ததால் விடுதியைத் தேடிச் சுற்றினேன். 600 ரூபாய் வாடகைக்கு ஓர் அறையைப் பிடித்தேன். சில நிமிட ஓய்வுக்குப் பிறகு கசோலைச் சுற்றக் கிளம்பினேன்.

கசோலின் தெருக்களில் இந்தியர்களுக்கு நிகராக ஐரோப்பியர்களையும் அதிகம் பார்க்க முடிந்தது. கசோலுக்கு வருகிற 90 சதவிகிதம் பேர் டாக்சி மூலமாக வருகின்றனர் என்பதால் வழிநெடுக டாக்சிகளே வரிசைகட்டி நின்றிருந்தன. விடுதி அறையின் முற்றத்தில் நின்றபடியும், சாலைகளில் நடந்தபடியும் ஹாஷ் புகைத்தபடியிருக்கும் ஆண்களையும், பெண்களையும் கண்டேன். அவர்களிடம் கண்ட இயல்புத்தன்மைதான் கசோலை இன்னும் ஆழமாகப் புரிந்து கொள்ள வைத்தது. இந்நகரம் இந்தியாவிலிருந்தும், இந்தியக் கலாசார மதிப்பீடுகளிலிருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டு உலகத்துக்கான நகரமாக தன்னை நிறுவிக்கொண்டுள்ளதாகத் தோன்றியது. உலகளாவிய பயணிகளால் பெரிதும் விரும்பப்படுகிற தலமாக கசோல் உருவாகியிருக்கிறது. இதற்கான அடிப்படையான காரணம் கஞ்சாதான். ஹிப்பி கலாசாரத்தில் கஞ்சா குறிப்பிடத்தகுந்த பங்காற்றுகிறது. ஆகவேதான் கசோலிலும் ஹிப்பி கலாசாரம் வளர்ந்திருக்கிறது என நினைக்கிறேன். கஞ்சாவின் செயல்முறைக்குட்படுத்தப்பட்ட வடிவமான சாரஸ்தான் ஹாஷிஷ் அல்லது ஹாஷ் எனக் குறிப்பிடப்படுகிறது. கசோலைப் பொறுத்தவரை ஹாஷிஷ், மலானா க்ரீம் என்றும் கூறப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பயணிகள் கசோலைக் கூர் நோக்குவதற்கான காரணம் இந்த மலானா க்ரீம்தான்.

கசோலுக்கு அருகே இருக்கும் மலானா கிராமத்தில் விளையும் கஞ்சா மிகவும் தரமானதாகக் கருதப்படுகிறது. அங்கு விளையும் கஞ்சாச் செடியிலிருந்து தயாரிக்கப்படுவதுதான் மலானா க்ரீம் என்கிற சாரஸ் அல்லது ஹாஷ். கஞ்சா இலைகளை இரு கைகளாலும் நன்றாகத் தேய்த்துக் கொண்டே இருந்தால் இறுதியாக கையில் பிசின் போலப் படிந்திருப்பதுதான் இந்த ஹாஷ். அதனை வழித்தெடுத்து குறிப்பிட்ட அளவில் அதனைத் தட்டையாக்கி விற்பனை செய்யப்படுகிறது. அதனை டீ என்று குறிப்பிடுகின்றனர். பார்ப்பதற்கு வட்ட வடிவில் இலந்தை வடையைப் போல இருக்கும் அந்த ஒரு டீ ஹாஷின் விலை 2500 ரூபாய். தேவைப்பட்டால் அதனுள் பாதியை மட்டும் கூட பாதி விலையில் வாங்கிக் கொள்ளலாம் என்பதை அங்குள்ள தேநீர்க் கடை ஒன்றில் விசாரித்துத் தெரிந்து கொண்டேன். கசோலில் ஹாஷ் முக்கிய விற்பனைப் பொருள் என்பதால் அது தேநீர்க் கடை, உணவகம் என எங்கு வேண்டுமானலும் விற்கப்படுகிறது. பெருஞ்சீற்றத்தோடு பாய்ந்து கொண்டிருந்த பார்வதி ஆற்றை நோக்கிச் சென்ற நான் இரும்புப் பாலத்தின் மூலம் ஆற்றைக் கடந்தேன். ஆற்றை ஒட்டிய மண் பாதையில் சலால் எனும் கிராமத்தை நோக்கி நடந்தேன். சிறிது தொலைவு கடந்த பிறகு ஓர் உணவகத்துக்கு எதிரே பார்வதி ஆற்றினை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த குடிலில் அமர்ந்து தேநீர் அருந்த வேண்டும் போலிருந்தது.

சீறிப்பாயும் பார்வதி ஆற்றின் சலனத்தைக் கேட்டபடியே தேநீர் அருந்தினேன். அந்த உணவகத்தின் ஊழியர் என்னிடம் ஹாஷ் வேண்டுமா எனக்கேட்டார். எனக்கு அதனைப் பரிட்சித்துப் பார்க்கலாம் எனத்தோன்றியது. ஆனால் ஒரு டீ ஹாஷை 2500 ரூபாய் கொடுத்து வாங்குகிற பொருளாதார நிலை இல்லை. அது மட்டுமின்றி கசோல் பயணத்தை ஒட்டி மேற்கொள்ளும் பரிட்சார்த்த முயற்சிதான் இது. மற்றபடி நான் கஞ்சா பழக்கம் கொண்டவனல்ல என்பதால் கசோலைக் கடந்த பிறகு ஹாஷ் எனக்குத் தேவைப்படாது. ஆகவே ஒரு முறை மட்டும் புகைக்க ஒரு சுருள் மட்டும் கிடைக்குமா எனக்கேட்டேன். அப்படியே செய்து தருவதாகச் சொல்லி அதற்கு முந்நூறு ரூபாய் கேட்டார். ஒப்பீட்டளவில் அது அதிகப்படியான விலைதான் என்றாலும் வேறு வாய்ப்பில்லாததால் தருவதாகச் சொன்னேன். ஹாஷ் பற்றி எதுவும் தெரியாமல் அதனை புகைப்பது மோசமான விளைவுகளை உண்டாக்கி விடும். முதல் முறையாக ஹாஷைப் பரிட்சித்துப் பார்க்கும் எனக்கு அதனை சரியாகக் கலந்து சுருட்டித் தருவதற்காக அந்தத் தொகை என ஆறுதலடைய முடிந்தது. அவர் கொண்டு வந்த அந்தத் துளியளவு ஹாஷ்-ஐ மிகச்சிறிய நெல்மணி அளவுக்குக் கிள்ளிப் போட்டவர் சிகரெட்டிலிருந்து புகையிலையைக்கொட்டி அதனோடு கலந்தார். பிறகு அதனை ஓசிபி தாளில் சுருளாக்கிக் கொடுத்தார். நான் அதனைப் பற்ற வைத்து மூன்று முறை இழுத்ததும் உள்ளே நிகழ்ந்த ரசாயன மாற்றங்களை உணர்ந்தேன். நல்ல போதைக்கு ஆளாகியிருந்தேன். இதற்கு மேல் இழுக்க வேண்டாம் என அந்தச் சுருளை அணைத்து விட்டேன். எனது விடுதி அறையை விட்டு கிட்டத்தட்ட இரண்டு கி.மீ தொலைவில் இருந்தேன். மிதமிஞ்சிய போதைக்கு ஆளாகிவிட்டால் எனது விடுதி அறைக்குத் திரும்ப முடியாமற்போய் விடுமோ என்கிற எச்சரிக்கை உணர்வு என்னைத் தடுத்தது. ரத்த ஓட்டம் வேகமாக மூளையை நோக்கிப் பாய்வதைப் போன்ற உணர்வு எழுந்தது. விவரிக்கவியலாதபடியாக எண்ணப் பிசகல்கள் என மூன்று இழுவை ஹாஷ் என்னுள் பல வேடிக்கைகளை நிகழ்த்திக் கொண்டிருந்தது. மது போதையிலிருந்து இது முற்றிலும் வேறுபட்டிருந்தது. உண்மையில் இதுதான் போதை. இனி எங்கும் செல்லாமல் அறைக்குத் திரும்புவதுதான் நல்லது என முடிவெடுத்துக் கிளம்பினேன்.

விடுதி நிர்வாகியிடம் அணைக்கப்பட்டிருந்த ஹாஷ் சுருளை எடுத்துச் செல்வதற்காக ஒரு காலி சிகரெட் பெட்டியைக் கேட்டேன். அதற்கு அவர் “இது கசோல்… இரு விரல்களின் இடுக்கில் அதனைப் பிடித்தபடி அப்படியே நடந்து செல்லுங்கள். உங்களை யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்” என்றார். ‘இது கசோல்’ என அவர் அழுத்தமாகச் சொன்னதில் இருந்து கசோலில் அரசின் கட்டுப்பாடுகள் மீதான தளர்வுகளை கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது. கசோலில் கஞ்சா என்பது சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டதல்ல என்றாலும் அரசு இதனைக் கண்டுகொள்வதில்லை. ஹாஷ் மூலம் வளரும் கசோல் டூரிஸத்தின் வழியே அம்மாநிலம் அடையும் பொருளாதரப் பலன்களுக்கான தளர்வே இது. “ஹாஷ் சுருளை சிகரெட் பெட்டியில் வைத்தால் உள்ளிருக்கும் துகளெல்லாம் கொட்டி விடும் அதனால் கையில் பிடித்தபடி செல்வதுதான் நல்லது” என்றார். சரி என இரும்புப் பாலத்தை நோக்கிக் கிளம்பினேன்.

ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது மிகத்துல்லியமாகப் பதிவானது. பார்வதி ஆறு காதுக்குள் பாய்வதைப் போல அதன் சலனம் அழுத்தமாய்க் கேட்டது. வழியில் ஒரு ரிசார்டின் முதல் தளத்தின் முற்றத்திலிருந்து ஒரு பெண் ஹாஷ் சுருளைப் புகைத்துக் கொண்டிருந்தாள். இருபத்தெட்டு வயது மதிக்கத்தக்க அவளது முகத்தில் தென்னிந்தியச் சாயல் படிந்திருந்ததைக் கூட துல்லியமாக உற்று நோக்க முடிந்தது. இரும்புப் பாலத்தை நெருங்கும்போது தொலைவிலிருந்து ஒலிக்கும் பாடல் தெளிவின்றிக் கேட்டது. கசோலில் பல்வேறு இடங்களில் இசைக்கச்சேரிகள் நடக்கின்றன. அவற்றில் எங்கிருந்தோ விரவிக்கடந்து வந்த ஓசையே அது. பாலத்தைக் கடந்து முதன்மைச் சாலைக்கு வந்தேன். அந்நகரம் இரவுக்கான முகம் போர்த்தி பல வண்ணங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்தது. இரவு உணவுக்கு ரொட்டி வாங்கிக் கொண்டு எனது அறைக்குச் சென்றேன். இனி எதற்கும் வெளியே செல்லத் தேவையில்லை என்பதை உறுதிப்படுத்தியதும் மீதமிருந்த ஹேஷைப் புகைத்து விட்டு கட்டிலில் சாய்ந்தேன். சிறு குழந்தையின் சுவற்றுக் கிறுக்கலைப் போல எண்ண ஓட்டம் தாறுமாறாகத் திரிந்தது. வாழ்வில் அதுவரையிலும் கண்டிராத உணர்வு. எதிர்மறையான எண்ணங்களுக்குள் சென்றிடக்கூடாது என்பதை மனதினுள் ஆழமாகப் பதித்திருந்ததால் அப்படியான எண்ணங்களுக்கு ஆட்படவில்லை. சிந்தனை ஒன்றிலிருந்து ஒன்றாக விரிந்து சென்று கொண்டே இருந்தது. என்னைப் பற்றி, எனது முன்னாள் காதலியைப் பற்றி, இனித் தொடரவிருக்கும் பயணங்கள் பற்றி, எதுவுமே இல்லாத எதையோ பற்றி என்று கனவைப்போல் அது விரிய அப்படியே தூங்கி விட்டேன்.

அடுத்த நாள் எழுந்ததும் மீண்டும் பார்வதி ஆற்றின் கரையோரம் நடந்து சென்றேன். ஆற்றின் கரையிலிருந்த சிறு பாறையில் அமர்ந்தபடி எந்தச் சிந்தனையும், செயலுமற்றுக் கிடந்தேன். சில வேளைகளில் சும்மா இருப்பதன் வழியே கிடைக்கும் ஆசுவாசம் பெரியது. ஆற்றின் இரு கரையிலும் பைன் மரங்கள் வரிசையாக எழுந்திருக்க, ஒரு காட்டையே பிளந்து கொண்டு இந்த ஆறு வெள்ளமாகப் பாய்வதைப் போல இருந்தது. சிறிது நேரத்துக்குப் பிறகு அங்கிருந்து கிளம்ப எத்தனித்த போதுதான் கவனித்தேன் அன்றைக்கு எனது பயணம் தொடங்கிய நூறாவது நாள். நெகிழ்ச்சித் தருணங்கள் நிறைந்த நாள்கள் இவை. பொருளாதார நெருக்கடிகள், தொடர் பயணங்களால் உடல் எதிர்கொள்ளும் நலக்குறைபாடு என அனைத்தையும் கடந்து இந்த நூறு நாள்கள் பெரும் அகநிறைவு கொண்ட நாள்களாக இருந்தன. இப்படி ஒரு நெடும்பயணம் திரும்ப எப்போது அமையும் எனத் தெரியவில்லை. ஊர் திரும்பிய பிறகு நினைத்துச் சிலிர்க்க எத்தனையோ நினைவுகளை எடுத்துப்போவேன் என்பது மட்டும் தெரிந்தது. அடுத்ததாக அமிர்தசரஸ் செல்லும் நோக்கோடு கசோலில் இருந்து கிளம்பினேன். 

கசோலில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் சண்டிகரை அடைந்தேன். சண்டிகரில் இருந்து அமிர்தசரஸ்க்கு அதிகாலை 5 மணிக்குதான் பேருந்து. ரயிலில் முன்பதிவு செய்ய வாய்ப்பிருக்குமா என்கிற யோசனை வந்தது. ஏனென்றால் இவ்வளவு அண்மையில் இதுவரையில் ரயில் சீட்டை முன்பதிவு செய்ததே இல்லை. தேடிப் பார்த்தபோது  காலை 06.30 மணி ரயிலில் காலி இருக்கைகள் இருந்தன. உடனே முன்பதிவு செய்தேன். பேருந்தில் 400 ரூபாய்க்கும் மேல் கட்டணம் வாங்கியிருப்பார்கள். ரயிலில் முன்பதிவுக் கட்டணத்தோடு சேர்த்தே 143 ரூபாய்தான் ஆனது. ரயில் சேவை உள்ள ஊர்களுக்குச் போகும்போது கடைசி நேரம் என்றாலும் ஒருமுறை காலி இருக்கைகள் இருக்கிறதா என்று சோதிப்பது நல்லது. ரயில் நிலையத்தில் உலவி நேரத்தைக் கடத்திய பிறகு காலை அமிர்தசரஸ் செல்லும் ரயிலில் ஏறினேன். நாற்காலியைப் போன்ற இருக்கையில் சாய்வு வசதி நன்றாக இருந்தது. நான்கு மணிநேரப் பயணத்தில் அமிர்தரசரஸை அடைந்தேன். அன்றைக்கு நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு அடுத்த நாள் கிளம்பி பொற்கோயிலுக்குச் சென்றேன்.

அமிர்தசரஸின் பொற்கோயிலுக்கு சீக்கியர்கள் மட்டுமின்றி எல்லா மதத்தினரும் சென்று வணங்க அனுமதிக்கப்படுகிறார்கள். இசுலாமியர்கள் தொழுகையின் போது அணிவதைப் போல தலையை முழுமையாக போர்த்திக்கொண்டு வர வேண்டும் என்கிற விதி முக்கியமானது. ஆண்களாக இருந்தால் ருமாலைக் (கைக்குட்டை அளவிலான துணி) கொண்டோ, தலைப்பாகை அணிந்தோ வரலாம். பெண்கள் புடவையின் தலைப்பையோ, துப்பட்டாவையோ முக்காடாகப் போட்டுக்கொள்ள வேண்டும்.

கோயிலின் நுழைவாயிலில் இலவசமாகக் காவி நிறத்தில் ருமால் வழங்கப்படுகிறது. அவை ஏற்கெனவே பலரால் பயன்படுத்தப்பட்டவையே; உள்ளே சென்று திரும்பும்போது மீண்டும் அங்கேயே வைத்துவிட்டு வர வேண்டும். நானும் ஒரு காவி ருமாலை எடுத்துத் தலைக்குக் கட்டிக்கொண்டு உள்ளே நுழைந்தேன்.

உக்கிரமான கோடையின் தீண்டலில் பொற்கோயில் பிரகாசமாக ஒளிர்ந்தது. அமிர்த சரோவர் என்கிற அமுதக்குளத்தில் பொற்கோயிலின் பிரதிபலிப்பு அலை அலையாகத் தெரிந்தது. பொற்கோயிலையும் அதன் பிரதிபலிப்பையும் ஒரே சட்டகத்தில் கண்டபடி சிறிது நேரம் நின்றிருந்தேன். பின்னர் கருவறைக்குச் செல்லும் நீண்ட வரிசையில் இணைந்தேன். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் வரிசையில் நின்றிருந்தவர்களுக்குக் குளிர்ச்சியாக தண்ணீரும், குளிர்பானமும் வழங்கும் சேவையும் நடந்து கொண்டிருந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஸ்ரீ ஹர்மந்திர் சாஹிப் உள்ளே சென்றேன். கருவறையின் உள்ளே வணங்கப்படுகிறவர் யார் என்பதை அதுவரையிலும் நான் அறிந்திருக்கவில்லை. உள்ளே தங்க மேடையில் பட்டுத்துணியின் மீது உயர்த்தி வைக்கப்பட்டிருந்தது ஒரு புத்தகம் என்பது முற்றிலும் புதியதாக இருந்தது. ஸ்ரீ குரு கிரந்த் சாஹிப்  அல்லது ஆதி கிரந்த் என அழைக்கப்படுகிற அது வெறும் புத்தகம் மட்டுமல்ல; சீக்கியர்களின் குரு. இதற்கு முந்தைய  சீக்கிய குருக்களால் எழுதப்பட்ட அந்நூலில் உள்ள பாடல்களே குருபாணியாகப் பாடப்படுகின்றன. உள்ளே ஆதி கிரந்தைச் சுற்றிலும் அமர்ந்திருந்த ராகிகள் குருபாணி பாடிக்கொண்டிருந்தனர். முற்றிலும் புதிய இறையனுபவத்துக்குள் சென்றிருந்தேன். முன்பே இதனைப் பற்றித் தெரிந்து கொண்டு வந்திருந்தால் இன்னும் நெருக்கமாக உணர்ந்திருக்க முடியும் எனத்தோன்றியது. வழிபட்ட பிறகு வெளியே வந்ததும் டாக்சி ஓட்டுநர்கள் வாகா எல்லைக்குப் போகிறீர்களா என அனைவரையும் கேட்டுக் கொண்டிருந்தனர். புதிய பயணத்திட்டங்களை வகுக்கும் சூழலில் நான் இல்லை. முக்கியமாய்க் காண நினைத்த தலங்களுக்கு மட்டும் போய் விட்டு வீடு திரும்புவதென முடிவெடுத்திருந்ததால் வாகா எல்லைக்குப் போவது குறித்து யோசிக்கவில்லை. எனது அடுத்த திட்டம் அஜ்மீர் செல்வதாக இருந்தது.

000

.ச.திலீபன்

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கலை இலக்கிய சூழலிய இதழான ஓலைச்சுவடி இணைய இதழின் ஆசிரியர். ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ என்கிற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பயணங்களில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் 2022ம் ஆண்டு வட கிழக்கு இந்தியாவில் 21 நாள்கள் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை ‘Back பேக்’ என்கிற பெயரில் விகடனில் தொடராக எழுதினார். பின்னர் நடுகல் பதிப்பகத்தின் வழியாக 2022ம் ஆண்டு அது நூலாக வெளிவந்தது. 2023ம் ஆண்டு 114 நாள்கள் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை தீரா உலா என்கிற இத்தொடரில் எழுதுகிறார்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *