ஜூன் 18ம் தேதி மாலை 05.45 மணிக்கு அமிர்தசரஸில் இருந்து அஜ்மீருக்கு ரயில் முன்பதிவு செய்திருந்தேன். காத்திருப்புப் பட்டியல் எண் குறைந்து கொண்டே வந்த நிலையில் எப்படியும் இருக்கை கிடைத்து விடும் என நம்பிய எனக்கு ஏமாற்றம்தான். இதனால் பொதுப் பெட்டியில் பயணம் செய்து அஜ்மீரை அடைந்தேன். அஜ்மீரில் கடுமையான மழை பெய்திருந்தது. சாலைகளில் மழைநீர் வெள்ளம் போலப் பாய்ந்து கொண்டிருந்தது. கெண்டைக்கால் அளவிலான தண்ணீரில் நடந்து சென்று அறை தேடினேன். ரயிலில் உட்கார்ந்தே வந்ததால் தூக்கம் சரிவர இல்லை. 400 ரூபாய் வாடகைக்கு ஒரு அறை எடுத்ததும் என்னை மீறித் தூங்கிவிட்டேன். எழுந்திருக்கவே முடியாத அளவுக்குக் களைப்பு. இரண்டு மணி நேரத் தூக்கத்துக்குப் பிறகு எழுந்து, குளித்து விட்டு அஜ்மீர் தர்க்கா நோக்கிப் போனோன். மலையடிவாரத்திலிருந்து மழை நீர் இறக்கத்தை நோக்கிப் பாய்ந்து கொண்டிந்தது. கால் பந்தை உதைப்பதைப் போல நீரைக் கிழித்தபடி  தர்க்கா ஷரீஃப்க்குச் சென்றேன். உள்ளே நுழைந்ததும் முதலில் கண்டது உலகின் மிகப்பெரிய கடாயைத்தான். கிட்டத்தட்ட 5 டன் உணவைச் சமைக்கக்கூடிய கடாய் அது. தர்க்காவின் பிரசாதம் அந்தக் கடாயில்தான் சமைக்கப்படுகிறது. படிகளில் ஏறி கடாயின் மேல்பகுதிக்குச் சென்று பார்த்தேன். சமைக்கப்படாத நேரங்களில் கடாயினுள் அரிசி மற்றும் ரூபாய் நோட்டுகளை மக்கள் காணிக்கையாக இட்டுச் செல்கிறனர். அந்தக் காணிக்கை மானுடத்தின் கூட்டு பலமாக அந்தக் கடாயினுள் பெருகியிருந்தது. கடாயைக் கடந்து குவை மாடத்துக்குப் போய் குவாஜா மொய்னுதீன் சிஷ்தியின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் தர்க்காவின் முன் சிரம் தாழ்த்தி வணங்கினேன்.   

இரவு மீண்டும் திரும்பச் சென்ற போது தர்க்கா ஷரீஃப் வேறொரு கோலம் பூண்டிருந்தது. விளக்கொளிகளின் மிளிர்வும், ஆழ்ந்த இறையுணர்வுக்குள் இட்டுச் செல்லும் கவ்வாலி இசையும் விழாக்கோலத்தைத் தோற்றுவித்தன. குவை மாடத்துக்கு அருகே கவ்வால் இசைக்குழுவினர் கவ்வாலி பாடிக்கொண்டிருந்தனர். கஸலுக்கும் கவ்வாலிக்கும் இடையிலான துல்லியமான வேறுபாட்டை அறிகிற அளவுக்கு எனக்குப் புலமை இல்லை. கட்டைகள் ஏற்றிப் பாடுவதைக் கொண்டு அது கவ்வாலியாக இருக்கலாம் என நானே முடிவுக்கு வந்தேன். ஹார்மோனியம், தபேலா இசைக்க கவ்வாலி பாடுவதைக் கேட்கையில் உஸ்தாத் நஸ்ரத் ஃபதே அலிகான் நினைவுக்கு வந்தார். அவரது கவ்வாலி பாடல்களில் எனக்குப் பெரும் ஈர்ப்புண்டு. அவரது ‘துமே தில்லஹி’ பாடல் விருப்புக்குரியது. அடுத்து கவ்வாலி என்றாலே மனதில் ஆழப்பதிந்திருப்பது ராக் ஸ்டார் படத்தின் ‘குன் ஃபய குன்’ பாடல்தான். ஏ.ஆர்.ரஹ்மானின் தலை சிறந்த ஆல்பங்களில் ராக் ஸ்டாருக்கு என்றைக்கும் இடமுண்டு. இது வரையிலும் ‘குன் ஃபய குன்’ பாடலை முந்நூறு முறையேனும் கேட்டிருப்பேன். அஜ்மீரில் கவ்வாலி குழுவினரைக் கண்ட போது ராக் ஸ்டார் நினைவில் எழுந்தது. சில வேளைகளில் ‘குன் ஃபய குன்’ பாடலை ஆழமாய்க் கேட்கையில் கண்ணீர் வடித்திருக்கிறேன். அஜ்மீர் தர்க்காவிலும் கவ்வாலி பாடல்களை அவ்வாறு ஆழ்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அந்தச் சூழலில் என்னை ஆட்கொண்டிருந்தது வெறுமை அல்ல, பேரனுபவத்தின் முன் அடங்கி நின்ற மனதின் சலனமின்மை.

தர்க்கா ஷரீஃபிலிருந்து வெளியே வந்ததும் எனது முகநூல் பக்கத்தைத் திறந்தேன். ஒரு பதிவில் டேவிட்சன் என்பவர் ‘உடனே உள்பெட்டியைப் பாருங்கள்’ எனக் கருத்திட்டிருந்தார். “நானும் அஜ்மீரில்தான் இருக்கிறேன்” என்று சொல்லி அவரது தொடர்பு எண்ணை எனக்கு அனுப்பியிருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு பேசினேன். டேவிட்சன் தென்காசியைச் சொந்த ஊராகக் கொண்டவர். இங்கேயே திருமணமாகி அஜ்மீரில் உள்ள பள்ளியொன்றில் நிர்வாகத் துறையில் பணியாற்றி வருவதாகச் சொன்னார். முந்தைய தினம் பெய்த மழையில் நகரின் பல பகுதிகளில் நீர் தேங்கியிருக்கிறது. அது தொடர்பாக முகநூலில் தேட வந்தவருக்கு நான் அஜ்மீருக்கு வந்ததும் இட்ட பதிவு தென்பட்டிருக்கிறது. உடனே எனக்குச் செய்தி அனுப்பியிருக்கிறார். அவரிடம் எனது பயணத்திட்டத்தைப் பகிர்ந்து கொண்டேன். அடுத்த நாள் என்னைச் சந்திப்பதாகக் கூறிய அவர் தர்க்காவைச் சுற்றி கேரள உணவகங்கள் இருக்கும் அங்கே சாப்பிடுங்கள் என்று சொன்னார். தென்னிந்திய உணவுகள் எங்கேனும் கிடைக்குமா எனத் தேடிப்பார்க்க முனைப்போடு இருந்த எனக்கு அந்தத் தகவல் அவசியமானது. வட இந்தியர்களின் உணவுப் பழக்கத்துக்கு நம்மைத் தயார் செய்து கொள்வது கடினம்தான். பயணம் செய்வதென முடிவெடுத்த பிறகு எதுவாயினும் ஏற்றுக்கொள்ளும் மனத் தயாரிப்பு கொண்டிருப்பது அவசியம்; ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது என்பதை சமீபத்தில் உணர்ந்தேன். நூறு நாள்களாக பல்வேறு மாநில உணவுகளைச் சாப்பிட்டு வருகிறேன். ஒரு கட்டத்தில் என்னால் அவற்றை உள்ளே தள்ள முடியவில்லை. முந்தைய தினம் அமிர்தசரஸில் இருந்து கிளம்புகையில் காலையிலிருந்தே சாப்பிடவில்லை. சாப்பிடுவதில் நாட்டம் எழவில்லை. 50:50 பிஸ்கெட் பாக்கெட்டுகள் வாங்கி வைத்து ரயிலில் சாப்பிட்டேன். இதனால் உடல் எதிர்கொள்ளும் பிரச்னைகள் அதிகம். டேவிட்சன் கேரள உணவகங்கள் எனச்சொன்னதும் புரோட்டாவும் பீஃப் கறியும் சாப்பிடுவதென முடிவெடுத்துத் தேடினேன். தர்க்காவுக்குப் பின்னால் இருந்த தெருவில் ஒரு கேரள உணவகம் இருக்கவே அங்கு புரோட்டாவும், பீஃப் வறுவலும் வாங்கிச் சாப்பிட்டேன். மிகவும் சுமார்தான்; இருந்தாலும் அதைப் பொருட்படுத்துகிற நிலையிலா இருக்கிறோம் எனத் தேற்றிக் கொண்டேன்.

அடுத்த நாள் காலையில் டேவிட்சன் எனது விடுதிக்கே வந்து அவரது பைக்கில் என்னை ஏற்றிக் கொண்டார். புஷ்கர் செல்ல வேண்டும் என அவரிடம் சொல்லியிருந்தேன். பிரம்மாவுக்கு எழுப்பப்பட்டிருக்கும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலான கோயில்களில் புஷ்கர் கோவில் முக்கியமானது. அங்கு என்னைக் கூட்டிச் செல்வதற்காக அவர் அரை நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு வந்தார். பயணம் அளிக்கும் கொடைகளில் ஒன்று எதிர்பாராத சந்திப்புகளின் விளைவே உண்டாகும் நட்புறவுதான். புஷ்கர் சென்றதும் ஓர் உணவகத்துக்குக் கூட்டிச்சென்றார். ராஜஸ்தானின் பாரம்பரிய உணவான தால் பாட்டி சுர்மா அங்கே நன்றாக இருக்கும் என்றார். அதுவரை சாப்பிட்டிராத உணவு. கோதுமை மாவில் ஓமம், சீரகம் மற்றும் உப்புக் கலந்து அதனை உருண்டையாக்கி நெருப்பில் சுட்டு எடுப்பதற்குப் பெயர்தான் பாட்டி. சுட்டு எடுத்த பிறகு இந்த உருண்டையை உடைத்து உள்ளே நெய் விடுகின்றனர். சாப்பிடும்போது அதனை நன்றாக உடைத்து தால் ஊற்றிச் சாப்பிட வேண்டும். ரவையால் செய்யப்பட்ட சுர்மாவும், சீரக அரிசிச் சோறும் ஒரு கின்னத்தில் கொடுக்கப்பட்டது. அதனுடன் ரோஸ் சிரப் ஊற்றி முந்திரி கலந்த லஸ்ஸியை மண் குவளையில் கொடுத்தார்கள். நிறைவான உணவாக அமைந்தது. சாப்பிட்டு முடித்ததும் கோயிலுக்குச் சென்று நான்முகானாகக் காட்சி தரும் பிரம்மனை வழிபட்டேன். பின்னர் புஷ்கரணி என்கிற குளத்துக்குச் சென்ற பிறகு ஒரு பாலை நிலத்துக்குக் கூட்டிப்போனார். அது பாலைவனம் அல்ல. நமது ஊர்களில் கிரிகெட் விளையாடும் தரிசு நிலத்தைப் போலதான் இருந்தது. அங்கே ஒன்றிரண்டு ஒட்டகங்களைப் பார்க்க முடிந்தது. இதைத்தான் பாலைவனம் என்று சொல்லி ஒட்டகத்தில் ஏற்றிக்கொண்டு சுற்றிக் காட்டி ஏமாற்றுகிறார்கள் என்று டேவிட்சன் சொன்னார்.

ராஜஸ்தான் பாலை நிலம் என்றாலும் எங்கும் பாலைவனங்களால் ஆனதல்ல. தார் பாலைவனம் போன்று நெடிய விரிந்த பாலைவனத்தைக் காண வேண்டுமென்றால் ஜெய்சல்மேர்தான் செல்ல வேண்டும். மதியத்துக்கு மேல் திரும்ப அஜ்மீர் வந்தோம். எனது முந்தைய பயண அனுபவ நூலான பேக் பேக் நூலின் பிரதியை டேவிட்சனுக்கு கையளித்த பிறகு அவருக்கு விடை கொடுத்தேன்.

இந்தப் பயணத்தைத் தொடங்கியபோது ஜோத்பூர், ஜெய்சல்மேர் செல்லும் திட்டம் இருந்தது. மணற்கடலாய் விரிந்து பரந்திருக்கும் பாலைவனத்தைக் காண வேண்டும் என்பதற்கான திட்டம் அது. பயணத்தை விரைவில் முடிக்க வேண்டிய சூழல் கருதி அதனைக் கை விட்டேன். மறுநாள் ஜெய்ப்பூர் கிளம்பினேன். ஜெய்ப்பூரின் அரண்மனைகளைப் பார்க்க வேண்டும் என்பது மட்டுமே திட்டமாக இருந்தது. அஜ்மீரிலிருந்து காலை புறப்பட்டு மதியத்துக்கு மேல் ஜெய்ப்பூரை அடைந்தேன். அந்த மாலை வேளையில் முதலாவதாக ஜல் மஹாலுக்குச் சென்றேன். 

ஜல் மஹால் என்பது மான்சாகர் ஏரிக்கு நடுவே பாதி மூழ்கியிருக்கும் கோட்டை. ராஜபுத்திரர்களின் கட்டடக்கலையில் எழுப்பப்பட்டிருக்கும் இக்கோட்டையும், மான்சாகர் ஏரியில் அதன் பிரதிபலிப்பும் தரும் காட்சியனுபவம் அபாரமானது. ஜல் மஹாலைப் பார்த்தபோது எனக்கு டணாய்க்கன் கோட்டையை அது நினைவூட்டியது. பவானிசாகர் அணைக்குள் மூழ்கியிருக்கும் அக்கோட்டையை கோடையில் அணையின் நீர்மட்டம் இறங்கும்போதுதான் காண முடியும். அதே போலதான் ஜல் மஹாலின் சில அடுக்குகள் நீரினுள் மூழ்கியிருக்கின்றன. பொழுது இறங்கிக் கொண்டிருந்த அந்தியில் கோட்டையின் மேல் விளக்கொளி பாய்ச்சப்பட்டது. அந்த ஒளி, பின்னால் நீண்டு செல்லும் ஆரவல்லி மலைகளையும், மான்சாகர் ஏரியையும் பார்வையிலிருந்து விலக்கி ஜல் மஹாலை மட்டும் தனியே முன்னிறுத்திக் காட்டியது. ஜல் மஹாலைப் பார்த்த பிறகு ஜெய்ப்பூரின் மையப்பகுதியான பேருந்து நிலையத்துக்கு வந்தேன். என்னைப் போன்ற ஒரு பயணியின் பார்வையில் எந்த ஊராக இருந்தாலும் அதன் இதயப் பகுதி பேருந்து நிலையமும், ரயில் நிலையமும்தான். பேருந்து நிலையத்துக்கு அருகே 400 ரூபாய் வாடகையில் அறை எடுத்துத் தங்கினேன்.

காலம் எல்லாவற்றையும் தீர்மானிக்கும் என்பார்களே அப்படியாகக் காலத்தின் தீர்மானத்துக்காக அதன் முன் இரண்டு திட்டங்களை வைத்தேன். ஜெய்ப்பூரில் இருந்து மங்களூருக்கு ரயில் முன்பதிவு செய்திருந்தேன். மங்களூரு சென்று விட்டால் அங்கிருந்து கேரளா வழியே கோவைக்குச் சென்று என் சொந்த ஊர் தூக்கநாயக்கன்பாளையத்தை அடைவது என்பதுதான் முதல் திட்டமாக இருந்தது. மங்களூர் ரயிலில் இரண்டு நாள்களாகவே காத்திருப்புப் பட்டியல் 29-ல் இருந்து குறையவே இல்லை. பயணத்துக்கு இன்னும் ஒரு நாளே மீதமுள்ள நிலையில் சீட்டு உறுதியாகும் என்பதே கேள்விக்கு இடமானதுதான். சீட்டு  உறுதியாகாவிட்டால் அகமதாபாத் வழியே டையூ, டாமன், மும்பை சென்று அதற்கடுத்து கோவா, கார்வார், ஜோக் அருவி, மங்களூரு என்பது இரண்டவது திட்டம். காலமும், இந்திய ரயில்வேயும் இதனைத் தேர்வு செய்யட்டும் என நினைத்தபடியே தூங்கி விட்டேன்.

ஜெய்ப்பூரின் கோட்டைகள் மற்றும் மாளிகைகள் அனைத்தையும் சென்று காண்கிற அளவுக்கான நேரமும் சூழலும் இல்லை என்பதால் ஆம்பர் கோட்டையை மட்டும் பார்த்தால் போதுமெனத் தீர்மானித்தேன். 12 கி.மீ தொலைவில் இருக்கும் ஆம்பர் கோட்டைக்குப் பேருந்தில் சென்றேன். 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோட்டை வரலாற்றுக்கு வடிவம் கொடுத்ததைப் போல் மிகப்பிரம்மாண்டமாக எழுந்திருந்தது. சூரிய வாயில் எனும் அக்கோட்டையின் முகப்பிலிருந்து கண்ணாடி அரண்மனையான ஷீஷ் மஹால் வரை சென்றேன். முகாலயக் கட்டிடக்கலையில் பளிங்குக் கற்களால் அவை பளபளத்தன. கோட்டையின் அரண்களான தடுப்புச்சுவர்கள் தொடங்கி அரண்மனையைச் சுற்றியிருந்த கட்டடங்கள் வரை செம்மண்கற்களால் கட்டப்பட்டிருந்தன. ரங்கோலியைப் போல வண்ணமயமான சுவரோவியங்கள் பதிந்த பளிங்கு மாளிகைகளும், ஓவியங்களினூடே கண்ணாடிகள் பதிக்கப்பட்டிருந்த ஷீஷ் மஹாலும் பெரும் கலைத்திரட்டாக விரிந்திருந்தது. அன்றைய நாளை ஆம்பர் கோட்டைக்கே முழுதாக அளித்திருந்தேன். ஆம்பர் கோட்டையை முழுவதுமாகக் காணவே அரை நாள் அத்தியாவசியம் தேவைப்படும். ஜெய்கர் கோட்டை, நாகர்கர் கோட்டை என இன்னும் இன்னும் என திட்டத்தை விரித்தெடுக்கும் சூழல் இல்லை என்பதால் ஆம்பர் கோட்டையிலேயே முழு நேரத்தையும் செலவிட்டு பூரணமான அனுபவத்தோடு ஜெய்ப்பூர் திரும்பினேன். 

திரும்புகிற வழியில் அண்ணன் தமிழ்ச்செல்வனிடம் பேசியபோது அவர் ‘ரான் ஆஃப் கட்ச்’ போகும்படி சொன்னார். அப்படியொரு உப்புப் பாலைவனத்தைப் பற்றி அதற்கு முன் எனக்குத் தெரியாது. ஆகவே புதிய அனுபவம் வேண்டி கட்ச் செல்வதென முடிவெடுத்தேன். ஜெய்ப்பூரிலிருந்து அகமதாபாத் – கட்ச் – சோமேஸ்வரர் கோயில் – டையூ – டாமன் – மும்பை – கோவா – கோகர்னா – மங்களூரு – தலச்சேரி – பாலக்காடு வழியே கோவை வருவதென்று திட்டத்தை மாற்றினேன். ஜெய்ப்பூரை அடைந்த பிறகு கேதார்நாத் பயணத்தில் சந்தித்த நண்பன் சிரீஷ் துபேவைச் சந்தித்தேன். சோன்ப்ரயாகில் இருந்து வயிற்று வலி காரணமாகத் திரும்பி விட்ட நிலையில் சிரிஷ் துபே மற்றும் அவனது நண்பன் அக்‌ஷயுடன் கேதார்நாத் செல்ல முடியவில்லை. ஜெய்ப்பூர் வந்தால் சந்திக்கலாம் என முன்பே அவனிடம் சொல்லியிருந்ததால் அவனை அழைத்தேன். அவன் என்னை ஒரு தேநீர் விடுதிக்கு வரச்சொன்னான் அங்கே இருந்த அவனது நண்பர்களுடன் இயல்பாகக் கலந்து உறவாட முடிந்தது. அகமதாபாத் செல்லும் திட்டத்தைக் கூறியதும் நேரடியாகச் செல்லும் தனியார் பேருந்துகள் இருப்பதாகச் சொன்னான். உடனே ரெட் பஸ் செயலியில் அன்றைக்கு இரவே அகமதாபாத்துக்குப் பேருந்து முன்பதிவு செய்தேன். சிரீஷும் அவனது நண்பர்களும் காரில் எனது விடுதிக்குக் கூட்டிச் சென்றனர். விடுதி அறையைக் காலி செய்து வந்ததும், ஜெய்ப்பூர் நகரை சிறு தொலைவு சுற்றினோம். நகரத்துக்குள்ளேயே இருக்கும் ஹவா மஹாலைப் பார்க்க முடிந்தது. பிரச்னையின் போது பிரயோகிக்க சில இந்திக் கெட்ட வார்த்தைகளை அவனும் அவனது நண்பர்களும் சொல்லிக் கொடுத்தனர். பயனுள்ள தகவல்தான். ஜெய்ப்பூர் நகரைச் சுற்றிய பிறகு அகமதாபாத் பேருந்தில் அவர்கள் என்னை வழியனுப்பினர். நான் அவர்கள் அனைவரையும் கட்டியணைத்து விடைபெற்றேன்.

மறுநாள் காலையில் பேருந்து குஜராத் எல்லைக்குள் நுழைந்ததுமே குஜராத் காவலர்கள் பேருந்துக்குள் ஏறி பரிசோதனை மேற்கொண்டனர். குஜராத்தில் மது விலக்கு அமலில் இருக்கிறது. மது அருந்த வேண்டுமென்றால் கூட அதற்கென உரிமம் பெற வேண்டும். மதுப்புட்டியோடு குஜராத்துக்குள் நுழைந்தோம் என்றால் கடத்தல் வழக்குப் பாயும் அபாயம் இருக்கிறது. அதற்காகத்தான் இந்தச் சோதனை. பாண்டிச்சேரியில் இருந்து தமிழ்நாடு திரும்புகையில் நிகழ்த்தப்படும் பரிசோதனைகள் அப்போது நினைவுக்கு வந்தன.

‘ரான் ஆஃப் கட்ச்’ செல்ல வேண்டுமென்றால் புஜ் நகருக்குதான் முதலில் போக வேண்டும் என்றார்கள். ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து மாநகரப்பேருந்து ஏறி மீரா மந்திர் பேருந்து நிலையத்துக்குச் சென்றேன். அகமதாபாத்தில் மாநகரப் பேருந்து நிறுத்தம் மெட்ரோ ரயில் நிலைய அமைப்பில் இருக்கிறது. பயணச்சீட்டு வாங்கிக் கொண்டு நமது பேருந்துக்கான முகப்பில் நின்றால், மெட்ரோ ரயில் போலவே சரியாக முகப்புக்கு வந்து நிற்கும் பேருந்தின் கதவும், நிலையத்தின் கதவும் ஒரே நேரத்தில் திறக்கின்றன. ஏறி மீரா மந்திர் பேருந்து நிலையத்தை அடைந்ததும் புஜ் நகருக்கு பயணச்சீட்டு முன்பதிவு செய்தேன். அகமதாபாத்தில் இருந்து 370 கி.மீ தொலைவில் உள்ள புஜ் நகருக்குச் செல்ல முன்பதிவுக் கட்டணம் உட்பட 205 ரூபாய்தான். போக்குவரத்தில் தன்னிறைவு மட்டுமின்றி தமிழ்நாடு அளவுக்குப் பயணக்கட்டணம் குறைவாக உள்ள மாநிலத்தை அதுவரையிலும் நான் கண்டதில்லை. குஜராத்தில் பேருந்துகளுமே நல்ல தரத்தில் இருந்தன.

அகமதாபாத்தில் இருந்து மதியம் 2 மணிக்குக் கிளம்பிய பேருந்து புஜ் நகரை அடைவதற்கு நள்ளிரவு 12 மணி ஆகி விட்டது. அந்நேரத்தில் புஜ் பேருந்து நிலையத்தைச் சுற்றி  உணவகங்கள் எதுவும் இல்லை. ஒரு சிற்றுண்டிக் கடையில் நூடுல்ஸ் விற்றார்கள். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ‘ரான் ஆஃப் கட்ச்’ செல்வதற்கான பேருந்து குறித்து விசாரித்தேன். காதுவா என்கிற கிராமம் வரை பேருந்து வசதி உள்ளதாகவும் அங்கிருந்து ஆட்டோவில் செல்ல வேண்டும் எனவும் கூறினர். அடுத்ததாக அவர்கள் சொன்னது என்னை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. அங்கு செல்வதற்கு இது ஏற்ற பருவம் அல்ல என்றும்  குளிர்காலத்தில்தான் அங்கே செல்ல வேண்டும் எனவும் சொன்னார்கள். அக்டோபர் – பிப்ரவரி மாதங்கள்தான் அதற்கான பருவம் என்பதோடு அப்போது நிறைய திருவிழாக்கள் அங்கே நடக்கும் என இணையத்தில் பார்த்தேன். திரும்பப் பேருந்து நிலையம் வந்து ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்தேன். நான் சென்றது ஜூன் மாதத்தில் என்பதால் வெள்ளைப் பாலைவனம் எனச் சொல்லப்படும் கட்ச் ஏரியின் கரையில் அந்த வெண்மையே இருக்காது என்றார். மேலும் அவர் இப்போது செல்வது எந்த விதத்திலும் பயனில்லை, தேவையின்றி பணத்தை வீணாக்காதே என்று சொன்னார். உள்ளூர்க்காரர்களின் அறிவுறுத்தலைக் கேட்டுக்கொள்வது மிகவும் அவசியமானது.

கட்ச் ஏரியின் கரையெனப் பரவியிருக்கும் வெளிதான் இந்த ‘வொய்ட் டெசர்ட்’ என்கிற ரான் ஆஃப் கட்ச். கண்கூசும் அளவுக்கான வெண்மையின் எதிரொலிப்பு இருப்பதால் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டுதான் அங்கு செல்ல வேண்டும் என்பர். அப்படியொரு இடத்துக்கு இந்தப் பருவத்தில் செல்வது உகந்ததல்ல எனத் தோன்றியது. கூட்டம் இருக்காது, விடுதி வாடகை குறைவாக இருக்கும் என்பதால் எங்கு சென்றாலும் சீசன் அல்லாத நாட்களில் செல்லவே விரும்புவேன். எல்லா இடத்துக்கும் இது பொருந்துவதில்லை. எப்படி மேகாலயாவின் பூரண அழகை குளிர் காலத்தில் காண முடியாதோ அது போல மழைக்காலத்தில் ‘ரான் ஆஃப் கட்ச்’ செல்வது பொருத்தமற்றது. ஆகவே திட்டத்தைக் கை விட்டுவிட்டு ஆட்டோ ஓட்டுநரிடம் விசாரித்து புஜ் நகரிலேயே 300 ரூபாய் வாடகையில் விடுதி அறை எடுத்துத் தங்கி விட்டேன்.

காலை 10 மணிக்கு மேல்தான் எழ முடிந்தது. உடல் மட்டுமின்றி மனமும் சோர்வெய்தியிருந்தது. எங்கும் செல்லத் தோன்றவில்லை. துணிகளைத் துவைத்துக் காயப்போட்டேன். முடித்திருத்தம் செய்து வந்தேன். மீசை, தாடியை நறுக்கிய பின்னர்தான் என் முகத்தையே எனக்குப் பார்க்கப் பிடித்தது. பயணங்களில் அழகுப்படுத்திக் கொள்வதற்கான யோசனைகள் பெரிதாக எழுவதில்லை. குளித்து விட்டு வெளியே வந்தால் விடுதிக்கு எதிரேயே ஒரு தள்ளு வண்டிக்கடையில் கேசரி போல் எதையோ விற்றுக் கொண்டிருந்தார்கள். குஜராத்தின் பாரம்பரியச் சிற்றுண்டி என நினைத்தேன். அதன் பெயர் டோக்லா. கடலை மாவில் சர்க்கரை கலந்து செய்கிறார்கள். சாப்பிடுவதற்கு பன் ரொட்டியைப் போல இருந்தது. ஒரு தட்டு அளவு வாங்கிச் சாப்பிட்டேன். 30 ரூபாய்க்கு நன்றாகவே இருந்தது. நாஸ்டா தின்றே வாழ்கிறார்கள் எனச்சொல்லும்படி இங்கே சிற்றுண்டிக் கடைகளே அதிகம். சிற்றுண்டி என்று வருகையில் நம்மால் வட இந்தியர்களைத் நெருங்கவே முடியாது. தமிழ் மக்களே வட இந்திய சிற்றுண்டிகளைத்தான் நம்பியிருக்கிறார்கள். டோக்லா பற்றி முகநூலில் பதிவிட்டதுமே அது எப்படி இருக்கும், சென்னையில் எங்கே கிடைக்கும் என்பது வரை தமிழ்நாட்டு நண்பர்கள் கருத்திட்டிருந்தனர். காலைக்கு டோக்லா பசி தீர்த்தது. மதிய உணவாக குஜராத் தாளி சாப்பிட்டேன். அதே பச்சரிசி சோறு, ரொட்டி, சப்ஜிதான் என்றாலும் மோர் கொடுத்தது ஆறுதலாக இருந்தது. 8 ரொட்டிகளும், 2 கப் சோறும் சாப்பிட்டேன். 4 டம்ளர் மோர் குடித்தேன்.

உப்புப் பாலைவனம் செல்லும் நோக்கோடு மட்டுமே புஜ் நகருக்கு வந்திருந்ததால் அந்நகரில் சுற்றும் எண்ணமே எழவில்லை. எனது பள்ளிக்காலத்தில் நான் கேள்விப்பட்ட முதல் இயற்கைப் பேரிடர் என்றால் அது குஜராத் பூகம்பம்தான். இங்கேதான் அந்த பூகம்பம் நிகழ்ந்திருக்கிறது. சமீபத்தில் கூட பெரும் புயல் தாக்கியதாகச் சொன்னார்கள். பேரிடர்களால் அழிவுக்குள்ளாகிய நகரம் இது. அந்த அழிவின் சுவடுகளைக் காண வேண்டும் என அப்போது நினைத்தேன் என்றாலும் அடுத்த இடத்துக்கு நகரத் தீர்மானித்தேன். இரவு 08.30 மணிக்கு புஜ் நகரிலிருந்து சோம்நாத்துக்குச் செல்லும் பேருந்தில் கிளம்பத் திட்டமிட்டேன். அதுவரையிலும் நன்கு ஓய்வெடுத்தேன். புஜ் நகரில் இருந்து 430 கி.மீ தொலைவில் உள்ள சோம்நாத்துக்கு 230 ரூபாய்தான் கட்டணம். உண்மையிலும் மிகக்குறைவான கட்டணம். குஜராத்தில் சாலை வசதிகள் சிறப்பாக இருப்பதோடு இரவு நேரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

அதிகாலையில் சோம்நாத்தை அடைந்த போது மழை. நனைந்தபடியே சென்று சோமநாதரை வழிபட்டேன். கஜினி முகமது 17  முறை இந்தியாவை நோக்கிப் படையெடுத்ததாகச் சொல்லும் தன்னம்பிக்கைக் கதைக்குப் பின் இருக்கும் யதார்த்தம் இந்த சோம்நாத் கோயிலைத் தரைமட்டமாக்கி உள்ளிருந்த தங்கத்தைச் சுரண்டிச் சென்றதுதான். பழமையான கோயில்களின் வரலாறே இடிக்கப்படுவதும் பின்னர் கட்டப்படுவதும்தான். முகலாய மன்னர்களால் பல முறை இடிக்கப்பட்டு மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட நெடிய வரலாறு கொண்ட இக்கோயிலின் இன்றைய வடிவம் சுதந்திரத்துக்குப் பிறகு படேலின் முன்னெடுப்பில் கட்டப்பட்டது. சோமநாதரின் தரிசனத்துக்குப் பிறகு கோயில் பின்புறத்தே வந்தேன். ஓசையெழுப்பிச் சீற்றத்தோடு எழுந்து அடங்கும் பிரபாஸ் பட்டினம் கடற்கரையில் சிறிது நேரம் கடல் பார்த்து நின்றேன். கடற்கரையில் எழுப்பப்பட்டுள்ள கோயில்களில் திருச்செந்தூருக்கு அடுத்து நான் சென்றது சோம்நாத்துக்குதான். கடலின் சலனம் என்னுள் இல்லை. வாழ்வின் எவ்வித கடின சூழல்களையும் கையாள்கிற, ஏற்றுக்கொண்டு நகர்கிற மன அமைப்பு என் வசம் எப்போதும் நிலைத்திருக்கட்டும் என்று மட்டும் சோமநாதரை வேண்டிக் கொண்டு டையூ தீவுக்குப் பேருந்தில் புறப்பட்டேன்.  

மழைச்சாலையில் அதுவரையிலும் பெயர் மட்டுமே அறிந்திருந்த சிறு தீவை நோக்கிய பயணம். எனது இந்த இந்தியப் பயணம் தொடங்கி 100 நாள்களைத் தொட்ட போது வெற்றிக்களிப்பும், பெருமிதமும் என்னை ஆட்கொண்டிருந்தது. அதுவரையிலும் தோராயமாக 15 ஆயிரம் கி.மீ பயணம் செய்திருப்பேன். இதற்குச் சமீபத்தைய நாள்களை கவனித்துப் பார்க்கையில் நான் பயணத்தில் இருக்கிறேன் என்கிற பிரக்ஞையே என்னிலிருந்து தொலைந்திருப்பதை உணர முடிந்தது. இந்தப் பயணம், எனது வாழ்வியலோடு ஒன்றிக் கலந்துவிட்ட உணர்வுதான் எழுந்தது. பொருளாதார நெருக்கடி மட்டுமே குறிப்பிட்ட நாள்களுக்குள் பயணத்தை முடித்தாக வேண்டும் என்று நிர்ப்பந்தித்தது. அந்த நிர்ப்பந்தம் மட்டும் இல்லையெனில் பரதேசம் போவதைப் போல இன்னும் இன்னும் பயணம் செய்து கொண்டே இருப்பேன் எனத்தோன்றியது.

சோம்நாத்தில் இருந்து இரண்டு மணி நேரத்தில் டையூ வந்தேன். ஒரு மழை நாளில் டையூவுக்கு வந்ததுதான் சிறப்பானது. மேற்குக் கடற்கரையில் அமைந்திருக்கும் மிகச்சிறிய தீவுதான் டையூ. பாலத்தின் வழியே குஜராத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் டையூ தீவல்ல… தீபகற்பம். இந்திய யூனியன் பிரதேசம் என்றாலும் கோவா, அந்தமான், லட்சத்தீவுகள் மற்றும் பாண்டிச்சேரியைப் போல டையூ சுற்றுலாப் பயணிகளால் தழும்பும் ஊர் இல்லை. அதன் நல் விளைவாக டையூவில் நிலவும் அமைதியும் அதன் இயல்பு மாறாத்தன்மையும்தான் எனக்கு வேண்டியதாக இருந்தது. மழை விட்ட பிறகு மிதமான தட்பவெப்பநிலையில் ஒரு மதுக்கடையைக் கண்டதும் டின் பீர் அருந்த வேண்டும் போலிருந்தது. அது அந்தச் சூழலின் ரம்மியத்தைக் கூட்டும் எனத்தோன்றியதால் ஒரு பட்வைஸர் டின் பீர் வாங்கி, எதிரே கடலை ஒட்டிய தடுப்புச் சுவரில் உட்கார்ந்து குடித்தேன். குஜராத் மாநிலத்தில் மது விலக்கு இருந்தாலும் சுற்றுலாவை மட்டுமே முதன்மை வருவாயாகக் கொண்டுள்ள டையூ – டாமனில் மது விலக்கு சாத்தியமில்லை. நான் அருந்திய டின் பீரின் விலை 80 ரூபாய் மட்டுமே. மத்திய அரசால் நேரடியாக ஆளப்படுகிற டையூ போன்றொரு சிறிய யூனியன் பிரதேசத்தில் மதுவுக்கு அதிக வரி விதிக்க வேண்டிய தேவை மத்திய அரசுக்கு இல்லை.

டையூவில் குறைந்தபட்ச விடுதி வாடகையே 800 ரூபாய். சற்றே உள்ளொடுங்கியிருந்த ஒரு விடுதியில் 700 ரூபாய் கேட்ட நிலையில் பேரம் பேசி 500 ரூபாயாகக் குறைத்தேன். அறை மிகவும் தூய்மையாக இருந்ததோடு, இருவருக்கான படுக்கை என்பதால் தூக்கத்தில் உருளும் பழக்கம் கொண்ட நான் தாராளமாகத் தூங்கலாம். சிறிது ஓய்வுக்குப் பிறகு வெளியே வந்தேன். பார்க்க வேண்டிய தலங்களுக்குச் செல்ல பொதுப்போக்குவரத்தோ, டாக்சிகளோ எதுவும் தட்டுப்படவில்லை. நான் டையூவின் தெற்கு விளிம்பில் இருந்தேன். இன்னும் சற்று முன்னே சென்றால் கிடைக்கும் எனத்தோன்றியது. டையூவின் தெருக்களில் சுற்றினால் அஃதோர் அமானுஷ்யம் போல் வெறுமையைப் போர்த்தியிருந்தது. கைவிடப்பட்ட நகரைப் போல எங்கும் மக்கள் நடமாட்டத்தையே பெரிதாகப் பார்க்க முடியவில்லை. எங்கும் காணும் போர்ச்சுக்கீசியக் கட்டடங்கள் இயல்பாகவே ஐரோப்பியத்தன்மையை அந்நகருக்குக் கொடுத்திருந்தது. பிரதான சாலைக்கு வந்த பிறகுதான் மனிதத்தலைகளே தென்பட்டன. அவர்களிடம் விசாரிக்கையில் டையூவைச் சுற்ற பைக் வாடகைக்கு எடுப்பது சிறந்தது என்றார்கள். டையூவின் பரப்பளவே 40 சதுர கிலோ மீட்டர்தான் என்பதால் பைக்கிலேயே முழுமையாகச் சுற்ற முடியும்.

அனைத்து வகையான பைக்குகளும் வாடகைக்குத் தரப்படுகிறது என்றாலும் ஆக்சஸ் 125 எடுத்துக் கொள்வது சிறந்ததெனத் தோன்றியது. இந்தப் பயணத்தில் இதற்கு முன் மசூரியை இந்த வண்டியில்தான் சுற்றினேன். ஓட்டுவதற்கு மிக எளிதாக இருக்கும், கியர் மாற்றிக் கொண்டிருக்கும் அவசியம் இல்லை. டையூவில் இதன் வாடகை நாளொன்றுக்கு 400 ரூபாய். பெட்ரோல் செலவு தனி என்பதை விசாரித்து விட்டு வந்தேன். அந்த இரவில் டையூவின் அமைதியான தெருக்களில் சிறிது தொலைவு சுற்றி வந்தேன். வட கோவாவில் கண்ட போர்ச்சுக்கீசியக் கட்டடங்களின் ஓர்மை இங்கு தென்பட்டாலும் இங்கே நிலவுகிற அமைதி அங்கு சாத்தியமில்லை. இந்த அமைதிக்காகவே டையூவில் மூன்று நாள்களேனும் தங்க வேண்டும் என முடிவு செய்தேன். விடுதியை ஒட்டியிருந்த சிறிய உணவகம் ஒன்றில் ரொட்டி, சப்ஜி சாப்பிட்டேன். டையூவில் கடல் உணவுகள் சிறப்பாக இருக்கும் என்றாலும் உணவு வேட்டையில் ஈடுபடும் பொருளாதார சூழல் இல்லை என்பதால் இதுவே போதுமானதாக இருந்தது. டையூ யூனியன் பிரதேசம் என்றாலும் உணவில் குஜராத்தின் தாக்கமே பெரிய அளவில் இருக்கிறதென்பது இயல்பான ஒன்றுதான்.

டையூவில் தங்கியிருந்த மூன்று நாள்களில் அந்தச் சூழலுக்குள்ளான எனது இருப்பே போதுமானதாக இருந்தது. டையூவின் தெருக்களில் நடந்தே சுற்றுவது, புதிய உணவகங்களில் பரிட்சார்த்த முயற்சிகளில் இறங்குவது என அந்நாள்கள் மகிழ்ச்சியாகக் கழிந்தன. மூன்றாம் நாள் ஆக்சஸ் 125 வண்டியை வாடகைக்கு எடுத்து 200 ரூபாய்க்குப் பெட்ரோல் போட்டேன். டையூவின் சில முக்கிய இடங்களை மட்டும் காண ஒரு நாளே போதுமானது. முதலில் நாகோவா கடற்கரைக்குப் போனேன். அது மட்டும்தான்  டையூவிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ளது. அச்சிறிய தீவில் பத்து கிலோ மீட்டரே பெருந்தொலைவுதான். டையூ நகரைக் கடந்த பிறகு நாகோவா கடற்கரை நோக்கிய பாதை எனக்குத் தெற்கு கோவாவை நினைவூட்டியது. உயர் ரக விடுதிகள், இரவு நேர நடன விடுதிகள், எண்ணற்ற மதுக்கடைகள்  என நம்முள் இருக்கும் கோவா குறித்த சித்திரம் வடக்கு கோவாவுக்குதான் பொருந்தும். மட்காவுவில் இருந்து தெற்கு நோக்கிப் போனால் பல கடற்கரைகள் இருக்கும். தென்னை/ பனை மரங்கள் சூழ பெரிய கூட்டம் ஏதுமின்றி அங்கு நிலவும் அமைதியான சூழலை டையூவிலும் கண்டேன்.

குட்டி கோவா என நாகோவா கடற்கரை சொல்லப்படுகிறதென்றால் அதற்குக் காரணம் நீர் விளையாட்டுகள்தான். பாரா கிளைடிங், பனானா ரைட், ஜெட் ஸ்கை முதலான நீர் விளையாட்டுகளுக்காக இக்கடற்கரைக்கு வருகிறவர்களே அதிகம். கடுமையான வெயிலில் நான் அக்கடற்கரையை அடைந்த போது பயணிகளின்றி, நீர் விளையாட்டுச் செயல்பாடுகளும் இல்லாமல் கடற்கரை வெறிச்சோடிக் கிடந்தது. சென்றடைகிற இடத்தைக் காட்டிலும் செல்லும் வழியே பிரதானம் என்கிற அடிப்படையில் நான் அதைப் பொருட்படுத்தவில்லை. அலை நனைக்கும்படியாக கடற்கரையில் சிறுதொலைவு நடந்து விட்டு டையூ நகருக்குத் திரும்பினேன்.       

டையூ நகருக்குள் வந்ததும் நேரே டையூ கோட்டைக்குச் சென்றேன். எனது விடுதியிலிருந்து மிக அண்மையில்தான் அக்கோட்டை எழுப்பப்பட்டிருக்கிறது. டையூவின் கிழக்கு முனையில் போர்ச்சுக்கீசிய அரசின் அரணாகத் திகழ்ந்த அக்கோட்டை இன்றைக்கு போர்ச்சுக்கீசிய அரசின் சாட்சியமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. டையூ துறைமுகத்தை ஒட்டி அதன் பாதுகாப்புக்காக 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோட்டை இது.  தொலைவிலிருந்து காண்கையில் கோட்டையினுள் நிறுவப்பட்டிருக்கும் கலங்கரை விளக்கமே முதலில் தெரிந்தது. அப்படியே நெருங்கிச் செல்லும்போது கோட்டை கொஞ்சம் கொஞ்சமாகப் புலனானது. நான்கு நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் இக்கோட்டையின் சுவர்கள், அவற்றின் மேல் தளத்தில் மூன்று திசைகள் நோக்கிப் பார்க்கும் பீரங்கிகள், செயிண்ட் பால் தேவாலயம், வரலாற்றுத் தடயங்களைத் தாங்கிய அருங்காட்சியம் என அக்கோட்டையை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கவே அன்றைய பகல் பொழுது கழிந்தது.

அன்றைய இரவே டையூவில் இருந்து டாமனுக்குப் பேருந்து முன்பதிவு செய்தேன். மறுநாள் மாலை 4 மணிக்குக் கிளம்பும் பேருந்து 650 கி.மீ தொலைவிலிருக்கும் டாமனுக்கு அதற்கும் அடுத்த நாள் காலையில்தான் சென்று சேரும். மறுநாள் டையூவில் இருந்து கிளம்பும்போது கடுமையான மழை. முந்தைய தினம் நாகோவா கடற்கரை செல்லும்போது மழையில் நனைவதற்குத் தயாராக டி சர்ட், சாட்ஸ் மட்டும் அணிந்து கொண்டு போன போது வெயில். அதற்கான தயாரிப்பில்லாமல் வரும்போதுதான் எதிர்பாராத தாக்குதலை நிகழ்த்துகிறது.  சரி என்னை ‘வழியனுப்ப வந்த மழை’ என சிலாகித்துச் சொல்லலாம்.

டையூவில் இருந்து புறப்பட்டு அடுத்த நாள் காலை டாமனை அடைந்தேன். டையூவிலிருந்து டாமன் முற்றிலும் வேறுபட்டிருந்தது. டையூவில் நிலவிய அமைதி டாமனில் இல்லை. அந்தப் பரபரப்பான நகரச்சூழல் என்னையும் தாண்டி அந்நகரிலிருந்து சிறு விலக்கத்தை உண்டாக்கியது. டையூ அளவுக்கு டாமன் பெரிய சுற்றுலாத் தலம் இல்லை என்றாலும் பொருளாதாரம் செழிக்கும் தொழில் நகரம். குஜராத் மாநிலத்துக்கான தொழில்கள் டாமனில் தழைத்தோங்கியிருக்கக் காரணம் யூனியன் பிரதேசத்துக்கான வரிச்சலுகைகள். பரபரப்பாக இயங்கும் பெரிய நகரமான டாமனுக்கு வந்து அறை எடுத்ததுமே பயணச்சோர்வினால் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டேன். மாலைதான் எழுந்து வெளியே வந்தேன். மதியம் மழை பெய்திருந்ததால் ஈர நிலத்தில் உலவியபடி டாமன் கடற்கரைக்குப் போனேன். அக்கடற்கரை நெடுகிலும் கருப்பு அரிசியைப் போல மணலும், கருங்கற்களுமாகக் கிடந்தன. டாமனின் சில கடற்கரைகளில் கருமணலையே அதிகம் பார்க்க முடியும். அதன் நிலவியல் அமைப்பு மற்றும் கனிமப் படிமங்கள் காரணமாக அவை உருவாகியிருக்கின்றன. கடற்கரையில் திரிந்து விட்டு அறைக்குத் திரும்பினேன். மின்வெட்டினால் இருண்டிருந்த அறையின் ஜன்னல் வழியே பார்வையை இருத்தியபடி உட்கார்ந்திருந்தேன். மழை எல்லாவற்றுக்கும் அழகு சேர்த்து விடுகிறது. டாமனில் வேறெங்கும் செல்லும் மனநிலை வாய்க்கவில்லை. கோவாவுக்கு முன்பதிவு செய்திருந்த ரயில் பயணம் உறுதியானது. மறுநாள் காலை டாமனிலிருந்து கிளம்பி மட்காவு சென்றேன்.

கோவாவிலும் மழை. தெற்கு கோவாவின் அழகே அதன் அமைதியும், துள்ளலும் துடிப்பும் இல்லாத அதன் இயல்புத்தன்மையும்தான். மழை நாளில் அந்நிலத்துக்கு மேலும் அழகு சேர்கிறது. கோல்வா கடற்கரைக்கு மட்டும் சென்று திரும்பிய பிறகு அத்தோடு எனது முடித்துக் கொள்வதெனத் தீர்மானித்தேன். கர்நாடகாவின் சில பகுதிகளுக்குச் செல்வதாக இருந்த திட்டத்தைக் கைவிட்டேன். இந்தியாவிலேயே மிக அழகான மாநிலம் என நான் கர்நாடகத்தையே கருதுகிறேன். மேற்குத் தொடர்ச்சி மலையின் பெரும்பகுதியைத் தன்னுள் கொண்டிருக்கிற கர்நாடகாவுக்கு மட்டும் தனியே ஒரு பயணம் மேற்கொள்ளலாம் என முடிவெடுத்து கோவாவில் இருந்து நேரே கோவைக்கு ரயிலில் கிளம்பினேன். கர்நாடகத்தின் மலைப்பகுதியை ஒட்டியே பயணித்த ரயிலின் வழியே கண்ட நிலக்காட்சிகளே போதுமானதாக இருந்தது. அப்படியாகக் கோவை வந்திறங்கி சத்தியமங்கலம் வழியே தூக்கநாயக்கன் பாளையத்தை அடைந்தேன்.     

இந்த 116 நாள்கள் தொடர்பயணம் தந்த அனுபவங்கள் என்னுள் எப்போதும் நிலைத்திருக்கக் கூடியது. இந்தியப் பயணம் என்று தொடங்கப்பட்டிருந்தாலும் இந்தியாவை முழுமையாகச் சுற்ற முடியவில்லை. ஏனென்றால் இந்தியா மிகப்பெரியது. நிலப்பரப்பில் மட்டுமல்ல அதன் தொன்மை, கலாசாரம் என அனைத்தையும் வைத்துப் பார்க்கையில் இந்தியாவை முழுமையாக தரிசிக்க இந்தப் பயணம் போதாது.

ஓராண்டு காலம் இப்பயணம் தொடர வேண்டும் என விரும்பினேன். சூழல் அதற்கு ஒத்திசைக்கவில்லை. காஷ்மீரில் எனது லேப்டாப் களவாடப்பட்டது இச்சூழலில் எனக்குப் பெரும் இழப்பு. நான் முழுமையாகத் திரும்பி வந்தாலே போதும் என்றெண்ணித்தான் இப்பயணத்தைத் தொடங்கினேன். ஆகவே லேப்டாப் குறித்துக் கவலைப்பட எதுவுமில்லை. இப்படியும் நடக்கும் எனத் தெரிந்து கொள்ள முடிந்ததே… அது போதும். 

கன்னியாகுமரி – குவஹாத்தி – தவாங் – பும்லா பாஸ் – தேஸ்பூர் – கோஹிமா – இம்பால் – மோரே – காத்மாண்டு – போகரா – முக்திநாத் – காசி – ரிஷிகேஷ் – கேதார்நாத் – டேராடூன் – மசூரி – சிம்லா – சண்டிகர் – ஜம்மு – ஸ்ரீநகர் – லே லடாக் – மணாலி – கசோல் – அமிர்தசரஸ் – அஜ்மீர் – ஜெய்ப்பூர் – டையூ – டாமன் – கோவா – கோவை என எத்தனையோ நிலங்கள், எத்தனையோ மனிதர்கள் அவர்களது கலாசாரம், வாழ்வியல் என இந்தப் பயணத்தின் வழியே மேலோட்டமாக அதைத் தொட்டுணர்ந்தேன். இதற்காகச் செய்த பொருட்செலவில் கடனுக்கு ஆளானேன். இதனையெல்லாம் கடந்து இனி வருங்காலத்துக்கான அற்புதமான நினைவுகளைச் சேகரித்திருக்கிறேன். ‘கரை வந்த பிறகே பிடிக்குது கடலை’ என்கிற உன்னதமான வரியைப் போல இனி நான் அசை போட நிறைய நினைவுகளை சேகரித்திருக்கிறேன். என் பயணத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. உலகியல் சார்ந்து யோசித்து அதற்கு இணங்கி நடந்துதான் ஆக வேண்டும் என்பதால்தான் கர்நாடகப் பயணத் திட்டத்தைக் கை விடும்படி ஆனது. ஒன்றும் பிரச்னை இல்லை. இத்தோடு இது நிற்கப்போவதுமில்லை.

-முற்றும்.

(2026 -சென்னை கண்காட்சியில் வாசகசாலை அரங்கில் இந்தத் தொடரின் திருத்தப்பட்ட, சேர்க்கப்பட்ட, புதிப்பிக்கப்பட்ட பயண அனுபவங்கள் ‘தீரா உலா’ என்கிற தலைப்பிலேயே புத்தகமாக வாசகர்களுக்கு கிடைக்கும்)

கி..ச.திலீபன்

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கலை இலக்கிய சூழலிய இதழான ஓலைச்சுவடி இணைய இதழின் ஆசிரியர். ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ என்கிற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. பயணங்களில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் 2022ம் ஆண்டு வட கிழக்கு இந்தியாவில் 21 நாள்கள் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை ‘Back பேக்’ என்கிற பெயரில் விகடனில் தொடராக எழுதினார். பின்னர் நடுகல் பதிப்பகத்தின் வழியாக 2022ம் ஆண்டு அது நூலாக வெளிவந்தது. 2023ம் ஆண்டு 114 நாள்கள் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை தீரா உலா என்கிற இத்தொடரில் எழுதுகிறார்

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *