பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான வரலாற்றுத் தொடர்பை மேலோட்டமாக அறிவேன் என்றாலும், இந்திய – மியான்மர் எல்லைப்பகுதியில் உள்ள ஒரு நகரில் மூன்றில் ஒரு பங்குத் தமிழர்கள் வாழ்கின்றனர் என்பதை மோரே சென்ற பிறகுதான் தெரிந்து கொண்டேன். அங்காள பரமேசுவரி கோவில் வாசலில் என்னை இறக்கி விட்டபோது மிதமிஞ்சிய பரவசம் என்னுள் எழுந்து அடங்கியது. அக்கோவிலின் முகப்பில் ‘அருள்மிகு அங்காள பரமேசுவரி திருக்கோவில் மோரே’ என்று தமிழில் பதிக்கப்பட்டிருந்தது. ஓர் ஊரைப் பற்றிய எந்த அறிதலும் இல்லாமல் போய் நேரடியாக அறிந்து உணரலாம் என்பதாகத்தான் எனது பெரும்பாலான பயணங்கள் இருந்திருக்கின்றன. அப்படியாகப் பயணிக்கையில் எதிர்கொள்ள நேரிடுபவைகளில் பலவையும் இனிய அதிர்ச்சி தரக்கூடியதாய் அமையும். அந்தப் பெருவியப்பு இனிய மதுவென எனக்குள் ஊறிச் சிலிர்ப்பூட்டுவதால் பெரும்பாலும் செல்கிற இடத்தைப் பற்றி முன்கூட்டி அறிந்து கொள்ளாமலேயே பயணப்படுகிறேன். உண்மையில் இது நல்ல பயிற்சி கிடையாது. பயணம் செய்யத் திட்டமிடும்போது நாம் செல்லவிருக்கும் இடத்தின் வரலாற்றுப் பெறுமதி, தட்பவெப்பநிலை, போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் என அனைத்தையும் தெரிந்து கொண்டுதான் பயணப்பட வேண்டும். ஓர் இடத்தின் வரலாறு மற்றும் பண்பாட்டு மதிப்பைத் தெரிந்து கொண்டு பயணம் செய்கையில் அந்த இடத்தை இன்னும் நுணுக்கமாக அணுகி அறிய இயலும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஹிமாச்சல பிரதேசத்தின் மணாலி நகருக்குச் சென்ற போது அங்குள்ள நகார் மாளிகையில் ‘வணக்கம் பாஸ்’ என்கிற ஒரு தமிழ்ப்பயணியின் குரல் என்னை வந்தடைந்தது. அக்கணத்தில் ஏற்பட்ட மெல்லதிர்ச்சியும், அணுக்கமும் தமிழ்நாட்டில் இருந்து 3 ஆயிரம் கிலோ மீட்டர்கள் அப்பாற்பட்ட ஒரு நிலப்பரப்பில் திராவிடக் கட்டடக்கலையில் எழுப்பப்பட்ட அக்கோவிலைக் காண்கையில் உண்டானது. தமிழர்கள் மட்டுமின்றி மோரேவில் வாழும் வேற்றின மக்களும் அக்கோவிலில் நிறைந்திருந்தார்கள். உள்ளே நுழைகையில் எங்கள் ஊரின் முத்து மாரியம்மன் கோவிலுக்குச் செல்கிற ஓர்மையை உணந்தேன். வலப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடத்தில் அன்னதானம் நடந்து கொண்டிருந்தது. வேட்டியை மடித்துக் கட்டியபடி அன்னக்கூடையை ஏந்தியபடியும் சாம்பார் வாளியைத் தூக்கிக் கொண்டும் சமையல் கூடத்துக்கும், அன்னதானக்கூடத்துக்கும் நடந்தபடி உணவு பரிமாறிக் கொண்டிருந்தனர். தமிழ் முகங்களை அங்கு எளிதில் பிரித்து அடையாளம் காண முடிந்தது. சமையல் கூடத்தில் பணிகள் வெகுதீவிரமாய் நடந்து கொண்டிருந்தன. குறுக்கு வழியினுட்புகுந்து தமிழ்நாட்டுக்குத் திரும்பி விட்ட உணர்வோடுதான் நான் அங்கு நடப்பவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அங்குள்ளவர்களிடம் கோவில் அறங்காவலரைப் பார்க்க வேண்டும் எனச்சொன்னதும் சமையல் கூடத்தைக் கை காட்டினர். அங்கே அவர் குர்தா அணிந்திருந்து வேட்டியை மடித்துக் கட்டியபடி சமையல் வேலைகளைக் கண்காணித்துக் கொண்டிருந்தார். அவரது பெயர் சேகர். அவரிடம் நான் தமிழ்நாட்டில் இருந்து வருகிறேன் எனச்சொல்லி மோரேவில் தமிழர்கள் குடிபுகுந்த வரலாறு தொடர்பாகப் பேட்டி வேண்டும் என்று கேட்டேன். அன்னதானம் முடிந்த பிறகு அவசியம் பேசலாம் என்று சொன்னவர் நீங்களும் போய்ச் சாப்பிடுங்கள் என்றார். என்னை சாப்பிட வைக்கும்படி ஒருவரை அனுப்பினார். பந்தியில் இல்லாமல் தனியாக எனக்குத் தட்டில் சோறு போட்டு அதனுள் சாம்பார் ஊற்றிக் கொடுத்தனர். அப்படியே அதனை அள்ளிப் பூச வேண்டும் என்கிற வேட்கை எனக்குள் எழுந்தது. வட இந்தியர்களுக்கு சாம்பார் என்றால் என்னவென்றே தெரியாது. அது தென்னிந்திய உணவு என்கிற அளவில் மட்டுமே அறிந்திருக்கின்றனர். பருப்பைக் கொண்டு கடையும் தாலும் சாம்பாரும் ஒன்றல்ல என்பதை அவர்கள் அறிந்திருக்கக்கூடும் என்றே நம்புகிறேன். சாம்பாரின் வாசனை நுகர்ந்தே 3 வாரங்களுக்கு மேல் ஆகியிருந்த நிலையில் மறுசோறு வாங்கிச் சாப்பிட்டு முடிக்கிற வரையிலும் வேறெந்த சிந்தனைக்குள்ளும் என்னை உட்படுத்திக்கொள்ளவில்லை. இறுதியாக ஜவ்வரிசிப் பாயசத்தை வாங்கிச் சாப்பிட்ட பிறகுதான் நிறைவாகச் சாப்பிட்ட உணர்வே உண்டானது.

அன்னதானக்கூடத்துக்கு எதிரே, அதாவது கோவிலின் பக்கவாட்டுச் சுவரில் சிறிய நுழைவு அமைக்கப்பட்டிருந்தது. அதன் கேட் வழியாக பலரும் உள்ளே வருவதும் போவதுமாக இருந்தனர். சாப்பிட்டு முடித்ததும் போன் பேச வேண்டி அந்த வழியாக வெளியே சென்றேன். அது ஓர் ஒற்றையடிப்பாதை. காலடித்தடம் பதிந்த இடத்தைத் தவிர புற்களும் செடிகளும் முளைத்திருந்த அப்பாதையை ஒட்டியே மினார் ஆறு ஓடிகொண்டிருந்தது. கேட்டின் அருகேயே நின்றபடி போன் பேசிக் கொண்டிருந்தேன். சற்று நேரத்துக்கெல்லாம் ஒருவர் கேட்டின் உள்ளே நின்றபடியே என்னைக் கூப்பிட்டார். “உள்ள வந்து போன் பேசுப்பா… நீ நிக்கிறது மியான்மர்ல… மிலிட்டரிக்காரங்க சுட்டாலும் சுட்டுடுவாங்க” என்று சொல்லி என்னை அழைத்த போது சற்று மிரட்சியாகத்தான் இருந்தது. ஒரு நாட்டின் எல்லையை ஒரு கோவிலின் பக்கவாட்டுச் சுவர் வழியாகவே கடக்க முடிகிறதா என்கிற கேள்வி என்னுள் எழ, எவ்வகையிலோ மியான்மரில் கால் பதித்து விட்டேன் என்கிற அற்ப மகிழ்வில் சற்றே திளைக்க, எல்லை கடந்தமைக்காக ராணுவம் சுட்டுக்கொன்று விடும் என்கிற தகவல் தந்த அதிர்ச்சியும் மேலோங்க நான் கோவிலுக்குள்ளே நுழைந்தேன்.

“என்னங்க சொல்றீங்க… இந்த கேட்டுக்கு அந்தப்பக்கம் பர்மாவா?”

“ஆமாம்பா… இந்த கேட் வழியா வந்துட்டுப் போறவங்க எல்லாரும் மியான்மர்காரங்க… சாமி கும்பிடுறதுக்காக இந்த வழியா வந்து இதே வழியில போயிடுவாங்க… இந்தியாக்காரங்க யாராவது இந்த கேட் வழியா வெளியே போய் அதை அவங்க பார்த்துட்டாங்கன்னா சுட்டுருவாங்க” என்றார்.

மியான்மரின் ராணுவ ஆட்சியில் உள்நாட்டு மக்களையே சுட்டுக்கொல்கிற நிலையில் என்னைச் சுடுவதற்கான சாத்தியங்களைப் பற்றியெல்லாம் யோசனையே செய்யத் தேவையில்லை. நல்ல வேளையாக அவர் வந்து என்னை அழைத்தார். இல்லையென்றால் மோரேவாசிக்கான எந்த அறிகுறியும் இல்லாத நான் சுடப்பட்டிருக்கவும் வாய்ப்புகள் அதிகம். எதற்காகச் செத்தோம் என்றே தெரியாமல் செத்துப் போயிருப்பேன். அது எத்தகைய துயரம்… இனி எல்லையோரப் பகுதிகளுக்குச் செல்கையில் கூடுதல் கவனத்தோடு இயங்க வேண்டும் என்பதை என்னுள் பதித்துக் கொண்டேன்.

அக்கோவில் அறங்காவலரான சேகர் மோரே வாழ் தமிழர்களின் பிரதிநிதி. மோரேவில் இயங்கி வரும் தமிழ்ச்சங்கத்துக்கும் அவர்தான் தலைவர். அன்னதானம் முடிந்து மக்கள் கூட்டம் ஓய்ந்ததற்குப் பிற்பாடு அவர் என்னை அழைத்தார். எனது யூ ட்யூப் சேனலுக்காக அவரை நான் பேட்டி எடுத்தேன். மோரேவில் தமிழர்கள் வாழும் வரலாறு பற்றிய தவறான தகவல்கள் பரவி வருவதாகக் கூறிய அவர் சமீபத்தில் ஒரு ஊடகத்தில் ‘மியான்மர் செல்ல எல்லையில் காத்துக் கொண்டிருக்கும் தமிழர்கள்’ என்று வெளியாகிய செய்தி முற்றிலும் தவறானது. நாங்கள் யாரும் மியான்மர் செல்ல நினைக்கவில்லை என்று கூறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் கட்டமைத்த இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்த தென்னகத் தமிழர்கள் சுதந்திரத்துக்குப் பிறகு மியான்மரிலேயே தங்கி விட்டனர். 1962ம் ஆண்டு மியான்மரில் நிகழ்ந்த ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு குறிப்பிட்ட அளவிலான தமிழர்கள் அங்கிருந்து வெளியேறி தமிழ்நாட்டுக்குத் திரும்பினர். அவர்களுக்கு இந்தியக் குடியுரிமையும் வழங்கப்பட்டது. அரசியல் சூழல் சாதகமான பிறகு அவர்களில் சிலர் மியான்மருக்குத் திரும்ப நினைக்கையில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்களை மியான்மர் அரசு அனுமதிக்க மறுத்த நிலையில் இந்திய – மியான்மர் எல்லைப்பகுதியில் காடாக இருந்த பகுதியை அழித்துத் தமிழர்கள் குடியேறினர். அதன் பிறகு மணிப்பூர் மற்றும் நாகாலாந்துப் பழங்குடிகளும் அங்கே குடியேற மோரே என்கிற நகரம் உருவாகியிருக்கிறது.

1980கள் வரை மோரேவில் தமிழர்களே மிகவும் செல்வாக்குப் பெற்றவர்களாக இருந்திருக்கின்றனர். பழங்குடி மக்களுக்கான தனித்தொகுதியான மோரேவில் இரண்டு முறை பழங்குடிகள் இரட்டை இலை சின்னைத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கின்றனர். அப்படியாக மோரேவில் தமிழர்களின் செல்வாக்கு மிகுந்திருக்கிறது. 1984ம் ஆண்டு வரையிலும் மோரேவில் 14 ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்துள்ளனர். வேலை வாய்ப்பு, கல்வி உள்பட பல்வேறு காரணங்களுக்காக இடப்பெயர்வு நடந்து தமிழர்களின் எண்ணிக்கைக் குறைந்தது. மணிப்பூரின் பூர்வகுடிகளான குக்கி இனப் பழங்குடிகள் அதிக அளவில் மோரேவில் குடியேறிய பிறகு 1995ம் ஆண்டு குக்கி இனப் பழங்குடிகளுக்கும் தமிழர்களுக்கும் இனவாத மோதல் உண்டாகியிருக்கிறது. இந்த மோதலில் 8 பேர் வரை கொல்லப்பட்டும் இருக்கின்றனர். இன்றைக்கு மோரேவில் வாழும் தமிழர்கள் அனைவரும் இத்தகைய நெருக்கடியான சூழல்கள் அனைத்தையும் தாண்டி வாழ்கிறவர்கள்தான்.

மோரே தமிழ்ச்சங்கத்தின் கட்டுப்பாட்டில்தான் இந்த அங்காள பரமேஸ்வரி கோவில் இருக்கிறது. தமிழ் இசுலாமியர்களுக்கான பள்ளி வாசலும், கிறித்தவர்களுக்கான தேவாலயமும் மோரேவில் அமையப்பெற்றுள்ளது. அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலுக்கு தமிழர்கள் மட்டுமல்ல மோரேவில் உள்ள குக்கி, மெய்த்தி உள்ளிட்ட பழங்குடியினரும் வந்து வழிபடுகின்றனர். மியான்மர் எல்லையோர கிராமங்களில் உள்ள மக்களுக்கும் இக்கோவில் முக்கியமானதாக இருக்கிறது. திருவிழாவை ஒட்டி மியான்மர் ராணுவம் இக்கோவிலுக்குச் சென்று வர அவர்களுக்கு சிறப்பு அனுமதி வழங்கியிருக்கிறது. பக்கவாட்டுச் சுவரில் உள்ள சிறிய நுழைவின் வழியாக உள்ளே வரும் அவர்கள் தரிசனத்தை முடித்து விட்டு அந்த வழியாகவே வெளியே சென்று விட வேண்டும். நான் சாப்பிடுகையில் என்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த பலரும் மியான்மர் நாட்டவர்கள்தான் என்று அறங்காவலர் சொன்னார். அவரிடம் பேசி முடித்த பிறகு மோரே எனக்கு மேலும் அணுக்கமான ஊராகியது. எது குறித்த பதட்டமும் இன்றி மோரேவின் சாலைகளில் சாவகாசமாக கைவீசிச் செல்லலாம் என்கிற உணர்வு மேலெழ  தரிசனத்தை முடித்து விட்டு கோவிலில் இருந்து விடுதி அறை தேட வேண்டிப் புறப்பட்டேன்.

மோரேவை நகரம் என்று சொல்வதைக் காட்டிலும் குறுநகரம் என்றுதான் சொல்ல வேண்டும். இரண்டு கடைத்தெருக்கள் மட்டும்தான். கடை விரித்திருப்பவர்களில் தமிழ் முகங்களைத் தேடிக் கண்டடைய முடியவில்லை. நாலாந்து, மணிப்பூர் பழங்குடிகளே பெரும் எண்ணிக்கையில் கடைகள் அமைத்திருந்தனர். நகரின் மையத்தில் இருந்து இடப்புற வரிசையில் சாலையோரக் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. அக்கடைகளில் பெரிய அவரைக்காய்களை கூவிக்கூவி விற்பனை செய்து கொண்டிருந்தனர். முழங்கை அளவைத் தாண்டியும் நீண்டிருக்கிற இந்த அவரைக்காய்க்கு யோங்சாக் என்று பெயர். இதன் பூர்விகம் தாய்லாந்து என்பதால் இப்பெயர் பெற்றிருக்கிறது. தாய்லாந்து அளவுக்கு மணிப்பூரிலும் இந்த யோங்சாக் விளைவதனால் மணிப்பூரின் முக்கியக் காய்கறியாக இது திகழ்கிறது. அந்த வரிசையைத் தாண்டுகையில் ஒரு பெண் இரண்டு கொத்து அவரையோடு மூன்றாவதாக ஒரு கொத்தைச் சேர்த்து என் முன் நீட்டி அவர்கள் மொழியில் விலை சொன்னார். “இதை வெச்சு நான் என்ன பண்றது” என சிரித்தபடியே கேட்டேன். அவர் எதுவும் சொல்லாமல் அடுத்த வாடிக்கையாளரை எதிர்நோக்கியபடி நின்றார். ‘சாவு கிராக்கி’ என அவர் நினைத்திருக்கலாம். 

நகரின் மையப்பகுதியில் வரிசையாக நான்கைந்து சாலையோரக் கடைகளில் பெண்கள் மது விற்பனை செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். இந்நகரம் எனக்குத்தர வேண்டி இன்னும் எத்தனை ஆச்சரியங்களைத்தான் ஒளித்து வைத்திருக்கிறது எனத் தெரியவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கையில் இந்நகரில் மது விற்பனை செய்யப்படுவது எல்லையோரப் பகுதிகளுக்கு அளிக்கப்படும் சிறப்பு அனுமதி என்பது புரிந்தது. இருந்தும் என்னை பெரு வியப்புக்கு ஆட்படுத்தியது அங்கு விற்பனை செய்யப்படும் உயர் ரக மது பானங்கள்தான். ஜாக் டானியல்ஸ், ரெட் லேபிள், ப்ளாக் லேபிள், க்ளென்ஃபிட்ச் போன்ற எலைட் மதுபானங்கள் எல்லாம் சாலையோரக் கடைகளில் விற்பனை செய்யப்படுவதைப் பார்க்கையில் ஆச்சரியத்தைத் தாண்டி வேறென்ன உணர்வு எழுந்து விடக்கூடும். அங்கிருந்த மதுபானங்கள் பலவையும் மியான்மர் நாட்டு பானங்கள். இங்கு விற்கப்படும் மதுபானங்களின் விலை மிகவும் குறைவு. அவை மியான்மர் நாட்டின் விலை மதிப்போடு விற்கப்படுவதுதான் காரணம். மாண்டலே என்பது இந்திய எல்லைக்கு அருகே உள்ள மியான்மரின் பெருநகரம். அந்நகரின் பெயரிலேயே ஒரு ரம் ப்ராண்ட் இருந்தது. முழு பாட்டிலின் விலை 200 மட்டுமே என்று சொன்னதும் ஒற்றை பாட்டிலை மட்டும் எடுத்துக் கொண்டேன்.

மோரேவில் வசிக்கும் பிற இன மக்களில் பலர் தமிழ் மொழியை ஓரளவுக்குப் பேசத் தெரிந்திருக்கின்றனர். குறைந்த வாடகையில் விடுதி தேடிக்கொண்டிருக்கையில் ஒரு மணிப்பூர்வாசி என்னை அணுகித் தமிழில் பேசினார். பின்னர் தினசரி 200 ரூபாய் வாடகைக்கு ஓர் அறையைப் பிடித்துக் கொடுத்தார். அந்த அறை ஒரு மரக்கூடாரம். அதன் மேல் தளத்தில் இரண்டு இரண்டு அறைகள் அமைக்கப்பட்டிருந்தது. அறைக்குச் செல்ல மரத்தில் அமைக்கப்பட்டிருந்த படிக்கட்டுகளில் ஏறுகையிலேயே ஒட்டுமொத்த கூடாரமும் அதிர்ந்து குலுங்கியது. அந்த மரக்கொட்டகையில் ஒரு கட்டில் மெத்தை தவிர எதுவுமில்லை.  மின் விசிறியும், ஒரு நிலைக் கண்ணாடியும் மாட்டப்பட்டிருந்தன. குலுங்கும் அம்மரக்கொட்டகையோ, சற்றே இறுகியிருக்கும் அந்த மெத்தையோ கூட என பிரச்னையாகத் தோன்றவில்லை. மேலே கழிவறை கிடையாது. சிறுநீர் கழிக்கக்கூட கீழேதான் செல்ல வேண்டும் என்பதுதான் சற்று சலிப்பாக இருந்தது. 200 ரூபாய்தான் வாடகை என்பது தந்த ஆசுவாசம் எதையும் ஏற்றுக் கொள்ளத் தயார்படுத்தியதால் 1000 ரூபாய் முன் பணமாகக் கொடுத்து அந்த அறையினை எடுத்துக் கொண்டேன்.

அன்று மாலை நடைபயிற்சியாக அந்நகரைச் சுற்றக் கிளம்பினேன். நகர்ப்பகுதியைக் கடந்து அயர்ன் கேட் வரையிலும் மினார் ஆற்றை ஒட்டியே நடை சென்றேன். வெயில் சரிந்து கொண்டிருந்த அவ்வேளையில் மக்கள் நடமாட்டமே இல்லை. இந்திய – மியான்மர் ஃப்ரண்ஷிப் கேட் போலவே, அயர்ன் கேட்டும் ஓர் இரும்புப் பாலம்தான். அப்பாலத்தின் ஊடாக மினார் ஆற்றினைக் கடந்தால் மியான்மருக்குள் நுழைந்து விடலாம். மரத்தட்டி கொண்டு அந்த இரும்புப் பாலத்தை சாத்திப் பூட்டியிருந்தனர். எப்படிப்பட்ட அரண் என நினைக்கத் தோன்றியது. எதிர்ப்புறத்தில் மியான்மர் ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தியபடி நின்று கொண்டிருந்தனர். மரத்தட்டியை எகிறிக்குறித்து அப்பாலத்தினுள் நுழைந்தால் வேண்டுமானால் அவர்களது தோட்டாக்கள் எனது மாரைப் பிளக்கலாம். அயர்ன் கேட் முன்பு நின்று ஒரு தற்படம் எடுத்துக் கொண்டிருந்த போது ஒரு ராணுவ வீரர் வந்து என்னை விசாரித்து விட்டு இத்தோடு திரும்பி விடும்படி சொல்லிவிட்டுக் கிளம்பினார். இந்த அயர்ன் கேட்டைத் தாண்டி இருப்பதெல்லாம் காடுதான். மோரே நகரின் சுற்றளவு 2 கிலோ மீட்டர் கூட முழுமையாக இருக்காது. இந்த ஊரை மொத்தமாக சுற்றிப்பார்க்க ஒரு நாள் கூட தேவைப்படாதுதான். மிகச்சிறு வாழ்பனுவத்தையாது இங்கும் பெற வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

அறைக்குத் திரும்புகையில் நாய்க்கறி வறுவல் விற்பனை செய்யப்படும் கடையைப்பார்த்தேன். வறுவல் தனியாகவும், ஈரலைத் தனியாகவும் வைத்து விற்பனை செய்தனர். நாகாலாந்து மக்களிடையே நாய்க்கறி உண்ணும் பழக்கம் இன்னும் தொடர்ந்து வருகிறது. நாகாலாந்து சென்றபோது கூட நாய்க்கறி விற்கும் உணவகத்தை நான் பார்த்திரவில்லை. மோரேவில் நாகாக்களும் வாழ்கின்றனர் என்பதால் இங்கே நாய்க்கறி விற்பனை செய்யப்படுகிறது. இக்கறியை விற்பனை செய்து வந்த பெண்களிடம் அனுமதி வாங்கி நாய்க்கறி வறுவலை வீடியோ எடுத்தேன். சற்றே பன்றி வறுவலின் சாயலை ஒத்திருந்தது. அதற்குக் காரணம் நாயின் தோல் பகுதிதான். ஆடு, மாடு ஆகியவற்றை இறைச்சியாக்கும்போது அதன் தோலை உரித்து விடுவார்கள். பன்றி இறைச்சியில் அப்படியல்ல, நெருப்பில் வாட்டி தோல் மீதுள்ள ரோமங்களைப் பொசுக்கி விடுவார்கள். பன்றியின் தோல்பகுதிதான் அந்த இறைச்சியின் அதிசிறப்பான அம்சம் என்பது என் தனிப்பட்ட கருத்து. நாய்க்கறியிலும் அதே வகையில் தோலை வாட்டுகின்றனர் என நினைக்கிறேன். ஒரு சிறிய டீக்கோப்பை அளவு நாய்க்கறி வறுவலின் விலை நூறு ரூபாய். ஒரு ப்ளேட் நாய்க்கறி வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவர், “சாப்பிட்டுப்பார் நன்றாக இருக்கும்” என்று ஆங்கிலத்தில் சொன்னார். எனக்கு விருப்பமில்லை என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பினேன். அசைவ உணவைப் பொறுத்த வரை ஏற்பு/மறுப்பு என்பதெல்லாம் எனக்கு இல்லை. நாய்க்கறியை சாப்பிட வேண்டும் என்கிற எண்ணமே எனக்குள் உருக்கொண்டிருக்கவில்லை.

அடுத்ததாக ஒரு கடையைப் பார்த்தேன். பல வண்ணங்களில் வெவ்வேறு வடிவங்களில் மிட்டாய்களைப் பரப்பி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தனர். போய் விசாரிக்கையில் அவை அனைத்தும் மிட்டாய்கள் அல்ல… மீன்கள் என்று சொன்னார்கள். நாம் வேண்டியதைத் தேர்வு செய்து கொடுத்தால் அதனை எண்ணெயில் பொரித்துத் தருவதாகச் சொன்னார்கள். அவற்றின் விலை 10 – 30 ரூபாய்க்குள் என்பதால் நான் மூன்று மிட்டாய் மீன்களைத் தேர்வு செய்து கொடுத்தேன். அதனைப் பொறித்து லெட்டிஸ் இலைகளை வைத்துக் கொடுத்தனர். 30 ரூபாய்க்கு நிச்சயமாக நல்லதொரு மாலைநேரத் தீனி. பிறகு கிளம்பி கூடாரம் குலுங்கப் படியேறி எனது அறைக்குப் போனேன். யாஷிகாவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது மேலும், மாண்டலே பாட்டிலைத் திறப்பதற்கான நேரமும் வந்திருந்தது.

உலவித் திரிவோம்… 

கி.ச.திலீபன்

ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கலை இலக்கிய சூழலிய இதழான ஓலைச்சுவடி இணைய இதழின் ஆசிரியர். ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ என்கிற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

பயணங்களில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் 2022ம் ஆண்டு வட கிழக்கு இந்தியாவில் 21 நாள்கள் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை ‘Back பேக்’ என்கிற பெயரில் விகடனில் தொடராக எழுதினார். பின்னர் நடுகல் பதிப்பகத்தின் வழியாக 2022ம் ஆண்டு அது நூலாக வெளிவந்தது. 2023ம் ஆண்டு 114 நாள்கள் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை தீரா உலா என்கிற இத்தொடரில் எழுதுகிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *