தேஸ்பூரில் இருந்து கிளம்பி அடுத்த நாள் அதிகாலையில் சிலிகுரியை அடைந்தேன். சிலிகுரிக்கு இதற்கு முன்பு இரண்டு முறை வந்திருக்கிறேன். மேற்கு வங்கத்தின் முக்கியப் பெருநகரங்களில் ஒன்று என்பதோடு அம்மாநிலத்தின் மிக முக்கிய சுற்றலாத் தலமான டார்ஜீலிங் செல்வதற்கான நுழைவாயிலும் சிலிகுரிதான். சிலிகுரியில் இறங்கியதும் நேபாளம் செல்வது பற்றி வினவியயபோது இந்திய – நோபாள் எல்லையான பானி டாங்கிக்குச் செல்லும் சுமோவைக் காட்டினர். சிலிகுரியில் இருந்து 27 கி.மீ தொலைவில் உள்ள பானி டாங்கிக்கு 150 ரூபாய்க் கட்டணம். பானி டாங்கியில் இந்தியாவையும் நேபாளத்தையும் இணைக்கும் பாலத்துக்கு முன்னர் கூட்டிச்சென்று இறக்கி விட்டனர். பாலத்தைக் கடந்தால் நேபாளம் என்பதால் அங்கு செல்வதற்கென ஏதேனும் அனுமதி பெற வேண்டுமா என விசாரித்த போது எதுவும் தேவையில்லை ஆதார் அட்டை இருந்தால் மட்டுமே போதும் என்றனர். சொந்த நாட்டுக்குள்ளேயே சில மாநிலங்களுக்குச் செல்ல பெர்மிட் வாங்கும் கட்டாயம் உள்ள நிலையில் எந்த பெர்மிட்டும் இன்றி இன்னொரு நாட்டுக்குச் செல்ல முடிகிறது என்பதை நினைக்கையில் வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருந்தது.
பானி டாங்கியில் இருந்து எல்லையோர நகரமான காக்கர்பிட்டாவுக்குச் சென்றால் அங்கிருந்து காத்மாண்டுக்குப் பேருந்து கிடைக்கும் என்பதனைக் கேட்டறிந்தேன். ஆட்டோவில் 100 ரூபாய் கட்டணத்தில் காக்கர்பிட்டாவுக்கு வந்தேன். பெரிதாக எந்த சோதனைகளுமில்லை. மெச்சி ஆற்றின் மேல் அமைக்கப்பட்டிருக்கும் பாலத்தைக் கடந்ததும் ஆதார் அட்டையை மட்டும் காட்டச் சொல்லிக் கேட்டார்கள். மற்றபடி எதுவுமில்லை. காக்கர்பிட்டாவை காக்கர்விட்டா என்றும் அழைக்கின்றனர். அந்நகரம் மேற்கு வங்கத்தின் மற்றுமொரு நகரத்தைப் போலான உணர்வையே கொடுத்தது. வெளிநாட்டில் இருக்கிறோம் என்கிற உணர்வை நாமாக வலிந்து ஏற்படுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அந்நகரில் பணமாற்று மையங்கள் நிறைய இருந்தன. நான் 10 ஆயிரம் இந்திய ரூபாய் கொடுத்து அதற்கு நிகரான நேபாள் ரூபாய் மதிப்பு 16 ஆயிரம் ரூபாயில் 200 ரூபாய் கமிசன் போக 15,800 ரூபாய் வாங்கிக் கொண்டேன்.

இந்திய ரூபாய் மதிப்பை விட நேபாள் ரூபாய் மதிப்பு குறைவுதான். இந்த 16 ஆயிரம் நேபாள் ரூபாயைக் கொண்டே இந்தப் பயணத்தை சமாளித்து விட முடியும் என்று நினைத்தேன். ரூபாய் மதிப்புக் குறைவாக இருந்தால் செலவீனமும் குறைவாக இருக்கும் என்று நான் அதுகாலம் வரை நினைத்துக் கொண்டிருந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பது கொஞ்ச நேரத்திலேயே எனக்கு விளங்கியது. நேபாளில் விற்கப்படும் பொருட்களின் விலையை இந்திய ரூபாயோடு ஒப்பிட்டால் அது இந்தியாவில் விற்கப்படும் விலையைக் காட்டிலும் கூடுதலாகவே இருந்தது. இதற்கு முக்கியக் காரணம் நேபாளம் முழுக்க முழுக்க இந்தியாவைச் சார்ந்து வாழ்கிற நாடு என்பதுதான்.
சோப், ஷாம்பூ, டூத் பேஸ்ட் ஆகிய அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்கள் கூட இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படுபவைதான். அவற்றில் இந்திய விலைதான் பதிக்கப்பட்டிருக்கிறது. அங்கே சிப்ஸ் பாக்கெட் ஒன்று வாங்கினேன். அந்த பாக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்திய விலை 20 ரூபாய். ஆனால் இந்த சிப்ஸ் பாக்கெட் நேபாளில் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படியென்றால் 20 ரூபாய் சிப்ஸ் பாக்கெட்டின் விலை நேபாளில் கிட்டத்தட்ட 31 இந்திய ரூபாய். இந்த உதாரணத்தைக் கொண்டே நேபாளின் விலைவாசியைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும். காக்கர்விட்டாவில் இருந்து காத்மாண்டு 500 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆம்னி பேருந்தில் அதற்கு 1100 ரூபாய் கட்டணம் செலுத்தி காத்மாண்டை வந்தடைந்தேன்.
காத்மாண்டு பூகம்பத்தால் பாதிப்புண்ட நகரம். இன்னும் அதன் தடங்கள் அந்நகரில் இருக்கின்றன. காத்மாண்டு பேருந்து நிலையத்தில் இறங்கியதுமே குறைந்த வாடகையில் அறை தேடும் பணியில் இறங்கினேன். தேஸ்பூரில் இருந்து எடுத்துக் கொண்டால் ஆயிரம் கி.மீ பேருந்துப் பயணத்தின் வழியே இந்நகரை அடைந்தேன். இரண்டு இரவுகளைப் பேருந்தில்தான் தூங்கிக் கழித்தேன் என்பதால் சற்றே உடல் சோர்வடைந்திருந்தது. அப்போதைய தேவையெல்லாம் நல்ல உறக்கமாக மட்டுமே இருக்க பேருந்து நிலையத்துக்கு அருகில் இருந்த ஒரு விடுதியின் மூன்றாவது தளத்தில் 500 நேபாள் ரூபாய் வாடகைக்கு ஒரு அறையைத் தேடிப்பிடித்தேன். அந்த அறை விஸ்தாரமாகவே இருந்தது. அதன் இரண்டு புறத்திலும் மரக்கட்டில்கள் போடப்பட்டு மெத்தை விரிக்கப்பட்டிருந்தது. மரக்கட்டிலில் பெரும்பகுதி கார்ட்போர்ட் அட்டை கொண்டு அடிக்கப்பட்டிருந்தது. பின்புறத்தில் இருந்த முற்றத்தை ஒட்டியே கழிவறை. அந்த முற்றத்தில் இருந்து பார்த்தால் பழைய கட்டடங்கள், சிதிலமடைந்த வீடுகள். இந்த புத்தாயிரத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இருந்து காத்மாண்டு நகரம் இன்னும் மீண்டெழவே இல்லையோ என்கிற கேள்வி எழுந்தது. காலை உணவாக சௌமின் எனும் வறுத்த நூடுல்ஸ் சாப்பிட்டேன். மிகவும் அலுப்பூட்டக்கூடிய உணவாக இருந்தது. நன்றாகத் தூங்கி மாலை வேளையில் எழுந்து நடைபயிற்சி மேற்கொண்டேன். 10 கிமீ தொலைவு நடந்தேன். இரவு உணவுக்குப் பிறகு மீண்டும் நல்ல தூக்கம்.

அடுத்த நாள் கிளம்பி நேபாளின் புராதனத் தலங்களில் ஒன்றான பசுபதிநாத் கோயிலுக்குச் சென்றேன். இக்கோவிலை நேபாளத்தின் காசி என்கின்றனர். காத்மாண்டில் பொதுப்போக்குவரத்தே கிடையாது. நெடுந்தூர பயணத்துக்கு ஆம்னி பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்துக்கு டாடா மார்கோபோலோ போன்ற சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன. நிமிடத்துக்கு இரண்டு வண்டிகள் வந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு புழுதியை பரப்பியபடி சென்று கொண்டிருந்தன. இந்தச் சிற்றுந்துகளுக்கெல்லாம் பயணச்சீட்டோ இன்னதுதான் கட்டணம் என்கிற வரைமுறையோ கிடையாது. உள்ளூர்வாசிகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது தெரியும். மொழி தெரியாத என்னைப்போன்றவர்கள் நன்றாகவே ஏமாற்றப்படுகின்றனர். நான் பசுபதிநாத் கோயிலுக்குச் செல்லும் சிற்றுந்தில் ஏறி கட்டணம் வசூலிப்பவனிடம் நூறு ரூபாய்த் தாளை நீட்டினேன். அவன் மீதம் எதுவும் தரவில்லை. நான் அவனிடம் அழுத்திக் கேட்டதற்குப் பிறகு 20 ரூபாய் கொடுத்தான். 80 ரூபாயா என்று நான் அதிர்ச்சியாகக் கேட்க பதில் ஏதும் சொல்லாமல் கூட்டத்துக்குள் சென்று விட்டான். நெருக்கித் தள்ளும் கூட்டத்தில் என்னால் அவனிடம் சண்டைப் போட முடியாமல் விட்டுவிட்டு பசுபதிநாத் கோயில் நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டேன்.
பிரதான சாலையிலிருந்து கோயிலுக்குச் செல்கிற பாதை முழுக்க இரு புறமும் அர்ச்சனைப் பொருள்கள் விற்கும் கடைகள். அனைத்துக் கடைகளிலும் அதிக எண்ணிக்கையில் ருத்ராட்ச மாலைகள் தொங்க விடப்பட்டிருந்தன. பிறகு விசாரிக்கையில்தான் பசுபதிநாத் கோயில் ருத்ராட்சத்துக்குப் பிரசித்தி பெற்றது என்பது தெரிந்தது. வெவ்வேறு அளவுகளிலான ருத்ராட்சங்கள் மாலைகளாக விற்கப்படுகின்றன. பெரிய ருத்ராட்சங்களை விட நன்கு இழைக்கப்பட்ட ருத்ராட்சங்களுக்கு விலை அதிகம். ஒரு பெண்மணி பிசிறில்லாமல் ஆங்கிலத்தில் பேசி ருத்ராட்சங்களை ஒவ்வொன்றாகக் காட்டி விளக்கினார். நான் இந்திய மதிப்புப்படி நூறு ரூபாய்க்குப் பேசி ஒரு ருத்ராட்ச மாலையை வாங்கி அணிந்தேன். அது என் அடிவயிற்றைத் தொடுமளவுக்கு நீளமாக இருந்தது.
கோயிலின் வெளிப்பிரகாரத்தில் காவி உடை தரித்த சாதுக்கள் பரவலாக இருந்தார்கள். பெண் சாதுக்களும் இவர்களுள் அடக்கம். வழிபாட்டுக்கு வருகிறவர்கள் தட்சணை கொடுத்து சாதுக்களிடம் ஆசி வாங்கிச் சென்றபடி இருந்தனர். பத்து ரூபாய் வாங்கிக் கொண்டு ஒருவர் எனக்கு திரிசூலத்தின் அச்சினை சாந்தில் தொட்டு என் நெற்றியில் பதித்தார். பிறகு நான் கோயிலுக்குள் சென்றேன். அக்கோயிலின் அமைப்பு கேரளத்து கோயில்களின் கட்டட அமைப்பின் ஓர்மை கொண்டிருந்தது. திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலை நினைத்துக் கொண்டேன்.



ஐந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பசுபதிநாதர் கோயிலுக்குள் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். செம்பால் ஆன மிகப்பெரிய நந்தி சிலைதான் கோயிலின் முகப்பில் இருந்து பார்க்கையில் காட்சி தருகிறது. பகோடா கட்டடக்கலை வடிவில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. கோயிலின் வெளிப்புறத்தில் மரத்தில் புத்த மதத்தின் தாரா தேவி சிலையும், வெள்ளியால் போர்த்தப்பட்ட சுற்றுப்புறத்தில் புத்தர் உருவமும் வார்க்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் சிவன் நான்முகனாகக் காட்சியளிக்கிறார். மூலவரான பசுபதி, லிங்க வடிவில் இல்லாமல் நாற்புறமும் நான்குமுகனாகக் காட்சி தருகிறார். சிவன் கோயில்களிலேயே மூலவரை லிங்க வடிவில் இல்லாமல் முகத்தோற்றத்தில் இங்குதான் முதல்முறையாகப் பார்த்தேன்.
கோயில் வளாகத்தில் நூற்றியெட்டு சிவலிங்கம் நிறுவப்பட்டிருக்கிறது. பக்தர்கள் அதனைத் தொட்டு வணங்கலாம். இக்கோயில் பாக்மதி எனும் ஆற்றின் கரையில் எழுப்பப்பட்டிருக்கிறது. கோயிலை ஒட்டிய பாக்மதி ஆற்றின் கரை ஆர்யாகாட் என்று சொல்லப்படுகிறது. எப்படி காசியில் கங்கை நதிக்கரையில் இறந்த உடலைத் தகனம் செய்வார்களோ அதே போல் இந்த ஆர்யா காட்டிலும் இறந்தவர்களை தகனம் செய்கின்றனர். அப்படி செய்யும்போது அவர்களுக்கு மோட்சம் கிடைக்கும் என்பது மத நம்பிக்கையாக இருக்கிறது.
பசுபதிநாத் கோயிலில் இருந்து வெளியே பாக்மதி ஆற்றைக் கடக்கப் பாலம் உண்டு. ஆற்றின் மறுகரையிலும் நிறைய சிவன் கோயில்கள் இருக்கின்றன. மறுகரை உயரமான பகுதி என்பதால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்துக்கள் அல்லாதவர்கள் அக்கரையிலுள்ள உயரமான இடத்திலிருந்து கோயிலைப் பார்க்கலாம். வெளிநாட்டுப் பயணிகள் பலரும் அப்படியாக பசுபதிநாத் கோயிலைக் பார்த்துக் கொண்டிருந்தனர்.
காத்மாண்டு நகரைச் சுற்றிலும் ஏழு புராதனத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் பசுபதிநாத் கோயிலுக்கு அடுத்து சுயம்புநாத் கோயில் நான் தங்கியிருந்த இடத்துக்கு மிக அருகில் இருந்ததால் அடுத்ததாக சுயம்புநாத் கோயிலுக்குப் போனேன்.
இந்துக்களின் புனிதத் தலம் பௌத்தர்களுக்கும் புனிதத்தலமாக இருப்பதையும், பௌத்தர்களின் புனிதத்தலம் இந்துக்களுக்கும் புனிதத்தலமாக விளங்குவதையும் சுயம்புநாத் கோயிலில் கண்டேன். இக்கோயிலுக்கு பௌத்தர்களுக்கு நிகராக இந்துக்களும் புத்த வழிபாட்டுக்காக வருகின்றனர். காத்மாண்டு நகரின் மையப்பகுதியில் ஒரு குன்றின் மீது இக்கோயில் அமையப்பெற்றிருக்கிறது.
மலைப்பாதை வழியாக வாகனங்களிலும் அக்குன்றின் அச்சிறுமலையின் உச்சிக்குச் செல்ல முடியும். நடந்து சென்றதால் நான் படிக்கட்டுகள் ஏறிச்சென்றேன். சுயம்புநாத் கோயிலை அடைந்ததும் முதலாக இந்திரனின் ஆயுதமாகக் கருதப்படும் வஜ்ஜிராயுதத்தைக் கண்டேன். அதனைக் கடந்ததும் வானில் ஏவத் தயாராக இருக்கும் விண்கலத்தினைப் போல எழுந்து நின்றிருந்த சுயம்புநாத் ஸ்தூபியைக் காண முடிந்தது. அரை உருளை வடிவிலான கட்டடத்தின் மேல் இந்த ஸ்தூபி அமைக்கப்பட்டிருந்தது. பொன்னிறத்தில் மிளிரும் இந்த ஸ்தூபியின் நான்கு புறங்களிலும் புத்தரின் கண்கள் வரையப்பட்டிருக்கின்றன. அதன் பார்வையில் அமைதி மேலோங்கியிருந்தது. இந்த ஸ்தூபிதான் சுயம்புநாத் ஸ்தூபி என்று சொல்லப்படுகிறது. இந்த ஸ்தூபியை மையமாகக் கொண்டு சுற்றிலும் புத்த மடாலயம், அருங்காட்சியகம், நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டிருந்தன. திபெத்திய பௌத்தமான வஜ்ஜிராயன பௌத்த வழியில்தான் இக்கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்து பிறப்புக்கு முன் நேபாளத்தை ஆண்ட லிச்சாவி அரச குலத்தினரால் இங்குள்ள பல கோயில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. கி.மு மூன்றாம் நூற்றாண்டிலேயே அசோகர் இங்கே புத்தத் தூண் மற்றும் புத்த விகாரத்தை நிறுவியதாகவும் அவை காலப்போக்கில் அழிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சுயம்புநாத் ஸ்தூபி கடந்த 15 நூற்றாண்டுகளில் 15 முறை சீரமைக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கிறது.



காத்மாண்டு பள்ளத்தாக்கே தாமரை மலர்களால் நிரம்பிய ஏரியாக இருந்ததாகவும் புத்தரின் அருளால் அந்த ஏரி சமவெளியாக மாறியதாகவும் ஏரியிலிருந்த தாமரை மலரே இந்த ஸ்தூபியாக உயர்ந்து நிற்கிறது என்றும் இதற்குப்பின் புராணக்கதை சொல்லப்படுகிறது. சுயம்பு என்றால் தானாக உருவாகுவது. இந்த காத்மாண்டு பள்ளத்தாக்கும் தானாக உருவானது என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் சுயம்பு என்கிற பொருளில் சுயம்புநாத் என்கிற பெயரால் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
இந்து மதத்தில் சுயம்பு என்கிற கருத்து ஆழமாகப் பதிந்திருக்கிறது. தமிழ்நாட்டிலேயே பல ஊர்களில் சுயம்புநாதர் கோயில்கள் உள்ளன. தானாய்த் தோன்றிய எனப் பொருள் தரும் இந்த சுயம்புநாத் கோயிலில் இந்துக் கோயில்களைப் போலவே தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். ஸ்தூபிக்கு எதிரே உள்ள மடாலயத்தை ஒட்டி சிறிய வடிவிலான கற்கோவில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அதன் வேலைப்பாடுகளில் நேபாள சிற்பக்கலை அம்சத்தைப் பார்க்க முடிந்தது.
பொதுவாகவே மலைப்பகுதிகளில் குரங்குகள் அதிகம் காணப்படும். இக்கோயில் குரங்குகளின் உலவிடமாகத் திகழ்கிறது. ஸ்தூபியைச் சுற்றி எங்கிலும் குரங்குகளைப் பார்க்க முடிந்தது. சிறிய ஸ்தூபிகள், வஜ்ஜிராயுதம் என பாராபட்சமின்றி அதன் சேட்டைகளை எங்கும் காண முடிகிறது. அதிக எண்ணிக்கையில் குரங்குகள் திரிவதால் இதனைக் குரங்குக் கோயில் என்றும் அழைக்கின்றனர். நான் சென்றிருந்த மாலை வேளையில் ஒளி மங்கிக் கொண்டிருக்க அந்த மலை உச்சியிலிருந்து காத்மாண்டு நகரைப் பார்த்தேன். அங்கிருந்து பார்க்கையில் காத்மாண்டு நகரின் நிலக்காட்சியைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது. இருள் சூழ்ந்ததும் மின் விளக்குகளின் ஒளியில் காத்மாண்டு நகரே நட்சத்திரக் குவியலைப் போலத் தெரிந்தது. சுயம்புநாத் ஸ்தூபியின் நாற்புறமும் மின் விளக்குகள் மூலம் ஒளிர்விக்கப்படுகிறது. தங்க முலாம் பூசப்பட்டிருப்பதால் விளக்கொளி படுகையில் ஸ்தூபி கூடுதல் பொலிவு பெற்று ஒளிர்ந்தது. உள்ளுணர்விலும் வெளிச்சத்தைப் பாய்ச்சியதைப் போல் அப்போது உணர்ந்தேன். பேரமைதி அப்போது என்னுள் நிலவியது. ஸ்தூபியையே நான்கைந்து சுற்றி வந்த பிறகு பெரும் நிறைவுடன் அங்கிருந்து கிளம்பி மலைப்பாதை வழியாக இறங்கிச் சென்றேன்.


காத்மாண்டு சமவெளியில் நகரினைச் சுற்றிலும் மன்னராட்சிகாலத்தில் உருவாக்கப்பட்ட நகரச்சதுக்கங்கள் நேபாளின் கலாசார மையங்களாகத் திகழ்கின்றன. காத்மாண்டு நகரைச் சுற்றியுள்ள ஏழு புராதனத் தலங்களில் பக்தபூர் நகரச்சதுக்கம், ஹனுமன் தோகா நகரச்சதுக்கம், பதான் நகரச்சதுக்கம் ஆகியவையும் அடங்குகிறது. பசுபதிநாத், சுயம்புநாத் கோயில்களுக்குச் சென்று வந்ததற்கு அடுத்த நாள் காலையிலேயே பக்தபூர் நகரச்சதுக்குக் கிளம்பிப் போனேன். தர்பார் ஸ்கொயர் என்று சொல்லப்படும் இந்த நகரச் சதுக்கம் என்பது முடியாட்சிக்காலத்தில் புகழ்பெற்றிருந்த பகோடா கட்டடக்கலையில் எழுப்பப்பட்டிருக்கும் அரண்மனைகள், கோயில்கள் மற்றும் வணிக வளாகங்களை உள்ளடக்கியதுதான்.
காத்மாண்டு நகரத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது பக்தபூர் நகரச்சதுக்கம். இரண்டு சிற்றுந்துகள் மாறி பக்தபூர் நகரத்தினை வந்தடைந்தேன். நிறுத்தத்தில் இருந்து இச்சதுக்கத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. நகரச் சதுக்கத்தில் நுழைந்ததுமே இன்றைய நேபாளத்தில் இருந்து துண்டிக்கப்பட்டு வரலாற்றுக் காலத்தினுள் நுழைந்து விட்டவனைப் போன்ற உணர்வு மேலோங்கியது. அதன் காரணம் வரலாறு மற்றும் கலாசாரப் பெறுமதி தாங்கி எழுந்திருக்கும் கட்டடங்கள்தான். முடியாட்சிக் காலத்தில் முன்பு நேபாளத்தின் தலைநகராகவே பக்தபூர் விளங்கியிருக்கிறது. காத்மாண்டு சமவெளியை ஆண்ட மல்லர் அரசர்களால் பக்தபூரில் இந்த நகரச்சதுக்கம் நிறுவப்பட்டிருக்கிறது. அதன் பிறகு கூர்க்கா மன்னர் வம்சத்தைச் சேர்ந்த நாராயணன் ஷா 1768ம் ஆண்டு மல்லர் அரசுக்கு எதிராகப் போர் புரிந்து பக்தபூர், லலித்பூர் மற்றும் காத்மாண்டு ஆகிய நகரங்களைக் கைப்பற்றியிருக்கிறார். அதன் பிறகு பக்தபூர் நகரச்சதுக்கம் கூர்க்கா மன்னர் வம்சத்தின் ஆளுகைக்குக் கீழ் வந்தது என்பதுதான் பக்தபூரின் வரலாற்றுச் சுருக்கம். காத்மாண்டில் வரலாற்று நெடுகிலும் அடுத்து அடுத்து என நிலநடுக்கங்கள் ஏற்பட்டு பெருத்த சேதாரத்தை விளைவித்திருக்கின்றன. பக்தபூர் நகரச்சதுக்கம் 1681ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்திலேயே பெரும் சேதாரத்துக்கு ஆளாகியிருக்கிறது. அதன் பிறகு 1833ம் ஆண்டு நில நடுக்கத்தாலும், 1934ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தினாலும் உண்டான சேதங்கள் சரி செய்யப்பட்டன. 2015ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளை சில இடங்களில் காண முடிந்தது. சேதமடைந்திருந்த கட்டடங்களில் மீள் கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. வரலாறே இடிபாடுகளால் ஆனதுதானே. அவை நிகழ்ந்தவையா இல்லை நிகழ்த்தப்பட்டவையா என்பது மட்டுமே வரலாற்றுக்குப் போதுமானதாக இருக்கிறது. மிகப்பரந்த இந்நகரச்சதுக்கத்தில் 99 வாயில்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது 6 வாயில்கள் மட்டுமே இருக்கின்றன. அப்படியிருந்தும் அந்நகரச்சதுக்கம் பரந்து விரிந்திருந்தது. அதனை முழுமையாகச் சுற்றிப் பார்க்க ஒரு நாளின் பகல் பொழுது முழுமையும் தேவைப்பட்டது.
இந்துத் தலமாக விளங்கும் இந்நகரச் சதுக்கத்திலும் பசுபதிநாதர் கோயில் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும், ராமேஷ்வர் கோயில், வத்சலா தேவி கோயில், உக்கிர பைரவர் கோயில், பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில் கோபிநாத் கோயில் ஆகிய கோயில்கள் இச்சதுக்கத்தில் அமையப் பெற்றிருக்கின்றன. வத்சலா கோயில் மற்றும் பௌத்த விகாரங்களும் 2015ம் ஆண்டு நிலநடுக்கத்தில் இடிந்து போயிருக்கின்றன. ஒவ்வொரு கோயிலின் முகப்பிலும் படிக்கற்கற்களின் இருபுறத்தே கற்சிலைகள் எழுப்பப்பட்டிருந்தன. ஆளுயரத்தைத் தாண்டி மிகப்பிரம்மாண்டமாக சிங்கம், யானை, மனித உருவங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டிந்தன. மிக நேர்த்தியான வேலைப்பாடுகள் கொண்ட கற்சிற்பங்கள் அவை. கட்டடங்களைத் தாங்கி நிற்கும் மரத்தூண்கள் மற்றும் பரண்களில் மரச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. கட்டிடங்களின் அடிப்பகுதி கற்களால் ஆகியது. அக்கற்களில் நாய், பன்றி சிலைகளும் செதுக்கப்பட்டிருக்கின்றன. நகர சதுக்கத்தின் மையப்பகுதியில் தூண் எழுப்பப்பட்டு மன்னர் பூபேந்திரரின் சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் கைகூப்பித்தொழும்படியாக அச்சிலை வடிக்கப்பட்டிருக்கிறது. பூபேந்திரர் சிலையை ஒட்டியே கல்தூணில் இரும்பால் செய்யப்பட்ட மிகப்பெரிய மணி தொங்கவிடப்பட்டிருக்கிறது. நகரச் சதுக்கத்தின் மத்தியில் நின்று 360 டிகிரி கோணத்தில் பார்த்தால் எங்கும் இந்தப் பழமை தாங்கிய கட்டடங்களே தெரியும். அடுத்து அடுத்து என நகர்ந்து சென்றால் எங்கிருந்து எங்கு வந்திருக்கிறோம் என்று குழம்பும்படியான பல வழிகள் கொண்ட விரிந்த பழங்காலத்தைய நகரம் அது. அச்சதுக்கத்துக்குள்ளாகவே கலைப்பொருட்கள் விற்கும் கடைகளும் உண்டு. அணிகலன்கள், அலங்கரிக்கும் ஓவியச் சட்டகங்கள் என வாங்கும் ஆர்வத்தைத் தூண்டுகிற பொருட்கள் விற்கப்பட்டாலும் விலை சற்றுக்கூடுதலாக இருந்ததால் எதுவும் வாங்கவில்லை. வாள்கள் மட்டுமே விற்பனை செய்யும் கடையைப் பார்த்தேன்.





நெடுவாள் குறுவாள் என அனைத்தும் அக்கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. வாளுக்கான உறைகளில் கலைநயமிக்க வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அந்த வாளினை கூக்கரி என்று சொல்கிறார்கள். படை வீரர்களான கூர்க்காக்கள் பயன்படுத்தும் வாள் என்பதால் கூட கூக்கரி என பெயர் வந்திருக்கலாம் எனத்தோன்றியது. நேபாளில் முக்கிய வணிகத்தலங்கள் அனைத்திலும் கூர்க்காக்கள் பயன்படுத்தும் கூக்கரி என்கிற இது போன்ற வாள்கள் விற்கப்படுவதைப் பார்க்க முடிகிறது. இந்த வாள் நேபாளிகளின் வீரப் பண்பாட்டின் அடையாளமாகக் கருதப்படுவதால் நேபாளிகள் அனைவரது வீடுகளிலும் கூக்கரி என்கிற இந்த வாள் பெருமை தாங்கி வைக்கப்பட்டிருக்கும். கூக்கரி என்பது ஆயுதம் மட்டுமல்ல அது அழகிய கலைப்பொருள். அதன் வேலைப்பாடுகளுக்குத் தகுந்தாற்போல அவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. 4 ஆயிரம் ரூபாயில் இருந்து லட்சங்கள் வரை இந்த வாள்கள் விற்கப்படுகின்றன. பிச்சுவாக்கத்தி என்று சொல்வோமே அந்த அளவில் கூட இந்த கூக்கரிகள் கிடைக்கும். யூட்யூப் விலாக் செய்யப் போகிறேன் என்று சொன்னதும் எதை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளும்படி அனுமதி தந்தார்கள். பல விலைகளில் பல அளவுகளிலான வாள்களை உரையிலிருந்து உருவி எடுத்து வீடியோ பதிவு செய்தேன். அதனைக் கைக்கொண்டிருக்கும்போதே தன்னிச்சையாக எனக்குள் மிடுக்கு கூடியதை உணர முடிந்தது. வாள்களைக் காட்டிலும் கத்திகளே என்னைக் கவர்ந்தன. அதன் வடிவ நேர்த்தியும் மின்னும் கூர்மையும் எனக்குள் அதனை வாங்கி விடுகிற உந்துதலைக் கொடுத்தது. அவற்றின் விலை அன்றைய சூழலில் எனக்குச் சாத்தியமற்ற விலையாக இருந்ததால் வீடியோ மட்டும் எடுத்தேன். ‘எங்க உறையை விட்டு வாளெடுத்தா ரத்த ருசி காட்டி வைக்கும் பழக்கம் எங்க குல வழக்கமடா’ என்கிற பாடலுக்கு கூக்கரிகளைக் கொண்டு ரில்ஸ் செய்திருக்கலாம்தான்.
புராதனத் தலங்களைக் கடந்து காத்மாண்டின் வண்ணமயமான இரவு வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள முற்பட்ட போது தாமிலுக்குச் செல்ல வேண்டும் என்பதை அறிந்தேன். காத்மாண்டில் கொண்டாட்டத்திற்கான ஒரு பகுதி என்றால் அது தாமில் தான். தூங்கா நகரமான தாமிலில் ஒரு இரவு முழுமைக்கும் உலவித் திரியலாம். இரவு 8 மணிக்கு மேல் தாமிலுக்குச் சென்றேன். தாமிலின் தெருக்களில் வரிசையாகக் கடைகள், நடன விடுதிகள், மேற்கத்திய இசைக்கச்சேரிகள் நடத்தும் மதுபான விடுதிகள். அத்தெருக்களில் சுற்றுலாப் பயணியரே நிறைந்திருந்தனர். அவர்களில் மேற்குலகப் பயணியரே அதிகம்.
ஒவ்வொரு கடையின் முன்பும் ஜப்பானியக் காகிதப் பந்து விளக்குகள் (paper latern light) பல வண்ணங்களில் தொங்க விடப்பட்டிருக்க அத்தெருக்கள் பல வண்ணங்களில் பிரகாசித்தன. நடன விடுதிகளில் ஒலிக்கவிடும் பாடல்கள் தெருக்களில் கேட்டன. இசைக்கச்சேரிகளில் இசைக்கப்படும் கிட்டாரின் இசையும் கடந்து செல்கையில் சன்னமாகக் கேட்டன. தாமிலின் இரவே கொண்டாட்டமென மிளிர்ந்தது.



காகித விளக்குகளை விற்பதற்கென்றே தனியே கடைகள் இருந்தன. உருளை வடிவில் மட்டுமின்றி வெவ்வேறு வடிவங்களிலும், வண்ணங்களிலும் காகித விளக்குகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் அச்சிடப்பட்டிருந்த ஓவியங்களால் அவை கலைப்பெறுமதி கொள்கின்றன. புத்தரின் படம் அச்சிடப்பட்ட டி சர்டுகள் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. சால்வைகள், ஜெர்க்கின்கள், போர்வைகள் கூட இங்குள்ள கடைகளில் விற்கப்படுகின்றன. உடைகளுக்கு அடுத்தபடியாக கலைப்பொருள்கள் விற்கும் கடைகளே தாமிலில் அதிகம். உலகின் ஒரே இந்து நாடான நேபாளில் இந்து மதத்தோடு பவுத்தமும் பெரும் செல்வாக்கு கொண்டிருக்கிறது. விநாயகர், சரஸ்வதி தேவி போன்ற இந்துக் கடவுளர் சிலைகள் விற்கப்படுவதோடு புத்தர், தாரா தேவி சிலைகளும் விற்கப்படுகின்றன. அவற்றின் விலை லட்சத்துக்கும் அதிகம் என்பதால் கண்டு ரசிக்க மட்டுமே இயலும்.
தாமிலில் என்னை மிகவும் கவர்ந்தது அங்கே விற்பனை செய்யப்பட்ட இசைப் பாத்திரம்தான். ‘சிங்கிங் பவுல்’ என்று சொல்லப்படும் செம்பு நிறத்திலான இப்பாத்திரங்கள் தாமிலில் மட்டுமல்ல நேபாளில் பல இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. கைப்பிடிக்கு வாகாக செதுக்கப்பட்டிருக்கும் சிறிய மரக்கட்டையைக் கொண்டு அப்பாத்திரத்தில் தட்டுகையில் எழுகிற ஓசை நல்ல அதிர்வலைகளை உண்டாக்கும். இப்பாத்திரம் 7 விதமான உலோகங்களால் செய்யப்பட்டிருக்கிறது. இதன் வெளிப்பகுதியில் பவுத்த மந்திரங்கள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இப்பாத்திரத்தில் தட்டும் இடத்திற்கேற்ப எழுகிற ஓசையும் வேறுபடும். தட்டிய பிறகு எழும் அதிர்வலை அடங்கவே சில நேரமாகிறது. முறையாகத் தட்டுகையில் அதனுள்ளிருந்து எழும் ஓசை இசையாக மாறும். ஆகவேதான் இப்பாத்திரத்தினை மியூசிக் தெரபிக்காகப் பயன்படுத்துகின்றனர். இதனை சாப்பிடவும் பயன்படுத்தலாம் என்றனர். குறைந்தபட்சமாக ஏழாயிரம் ரூபாயிலிருந்து லட்சத்துக்கு அதிகமான விலையில் விற்கப்படும் இந்த இசைப்பாத்திரத்தில் யாருக்கேனும் சாப்பிடுகிற யோசனை வருமா என்றுதான் நினைக்கத் தோன்றியது. நான் வீடியோ பதிவு செய்வதற்காக இதனை இசைக்கச் சொல்லிக் கேட்டேன். தட்டி இசைப்பது மட்டுமின்றி அதன் மேல் வாயில் தேய்ப்பதன் வழியாகவும் எழுகிற ஓசை ஆற்றுப்படுத்துவதாய் இருந்தது. ஒலி அலைகள் வரிசையாக எழுந்து பின் மெல்ல அடங்குகின்றன. இப்பாத்திரம் தட்டு வடிவிலும் உண்டு. நூலால் கட்டி மேலே அதனைப் பிடித்தபடி இசைக்கலாம். நானே சில பாத்திரங்களை எடுத்து இசைத்தேன். இசைக்க இசைக்க அதனை வாங்கி வர வேண்டும் என்கிற பேராவல் எழுந்தது.
யூ ட்யூபில் தாமிலைப் பற்றிய வீடியோக்களில் இதனை ஒரு சிவப்பு விளக்குப் பகுதி என்பதாக பலரும் சித்தரித்திருக்கின்றனர். பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கூட்டுவதற்காக மட்டுமே இப்படியான தலைப்புகள் வைக்கப்படுகின்றனவே தவிர தாமில் சிவப்பு விளக்குப் பகுதியெல்லாம் இல்லை. குடும்பமாக வந்து கூட உலாவலாம். தாமிலில் பாலியல் தொழிலே நடப்பதில்லையா என்றால் நடக்கிறதுதான். ஆனால் வெளிப்படையாக நடப்பதில்லை. பல இடங்களில் நடப்பத்தைப் போலத்தான் இங்கும் ஸ்பா சென்டர்களில் நடக்கின்றன. தாமிலில் நடன விடுதிகள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. காதைக் கிழிக்கும் இரைச்சலான இசையில் துண்டாடைகள் உடுத்தியபடி பெண்கள் ஆடினர். ஒரு மேற்கத்தியப் பயணியரைக் கூட இது போன்ற நடன விடுதிகளில் பார்க்க முடியாது. அவர்கள் விரும்புவதெல்லாம் மேற்கத்திய இசைக்கச்சேரிதான். மல்டி க்யூசன் ரெஸ்டாரண்டுகளில் ஒயின் கிளாஸை ஏந்தியபடி அவர்கள் அந்த மெல்லிசையில் திளைத்துக் கொண்டிருந்தார்கள். எந்தக் கொண்டாட்டங்களுக்கும் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத நிலையில் ஒரு பார்வையாளனாக மட்டுமே நான் அனைத்தையும் கடந்தேன். இரவு 11 மணிக்கு மேல் வரிசையாக கடைகள் அடைக்கப்படுகின்றன. இக்கொண்டாட்டங்கள் அரங்கேறும் இரண்டு தெருக்கள் மட்டும் விடிய விடிய இயங்குகின்றன. மிதமான தட்பவெப்பநிலையில் அன்றைக்கு நள்ளிரவு வரையிலும் தாமிலின் தெருக்களில் சுற்றித் திரிந்து விட்டு எனது அறைக்குத் திரும்பினேன்.
அடுத்தடுத்த நாள்களில் சங்கு நாராயணன் கோயிலுக்கும், ஹனுமன் தோகா நகரச்சதுக்கும் போய் விட்டு இறுதியாக பதான் நகரச்சதுக்கத்துச் சென்றேன். மற்ற இரு சதுக்கங்களைப் போல வடிவ ஓர்மை கொண்டிருந்தாலும் பதான் நகரின் அரண்மனை விஸ்தாரமாக இருந்தது. இன்றைக்கு நேபாளத்தின் மாவட்டமாக இருக்கக் கூடிய லலித்பூர் வரலாற்றில் மல்லர் அரசர்களின் தலைநகராக இருந்துள்ளது. ஆகவே லலித்பூருக்கு அருகே உள்ள பதான் நகரச்சதுக்கத்தில் மல்லர்கள் தங்களது அரண்மனையை கட்டியெழுப்பியிருக்கின்றனர்.
பதான் நகர உருவாக்கம் குறித்து துல்லியமான வரலாற்றுத் தகவல் இல்லை. புத்த மதத்தைப் பரவலாகக் கொண்டு சென்ற அசோகரால் கிமு 250ம் ஆண்டில் இந்த இந்த நகர் உருவாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. முக்கியமான பௌத்த நகராக இந்த பதான் நகரம் விளங்கியிருக்கிறது. இந்நகரைச் சுற்றி 1,200 பௌத்த நினைவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. பதான் நகரில் எழுப்ப்பட்டிருக்கும் கட்டடங்கள் பெரும்பாலானவை மல்லர்களின் ஆட்சியில் 16 – 17ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. 2015ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தின் விளைவாக பழமை தாங்கிய அக்கட்டடங்களின் சில பகுதிகள் சிதைவுக்கு ஆளான நிலையில் அதனை புனரமைக்குப் பணிகள் இங்கும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
பதான் நகரம் தொடக்கத்தில் பௌத்த நகரமாக விளங்கிப் பிறகு இந்துத் தலமாக மாறியிருக்கிறது. கிருஷ்ணன் கோயில், பீமன் கோயில், விசுவநாதர் கோயில், தலேஜு பவானி கோயில், கேசவ நாராயணன் கோயில், சுந்தரி கோயில் இந்துக் கடவுளர் கோயில்கள் அச்சதுக்கத்தில் எழுப்பப்பட்டிருந்தன. மிக நிதானமாக இங்குள்ள கட்டடங்களின் வேலைப்பாடுகளையும், கட்டடங்களைத் தாங்கி நிற்கும் மரத்தூண்கள் மற்றும் பரண்களில் செதுக்கப்பட்டிருக்கும் மரச் சிற்பங்களையும் பார்த்தபடியே உலவினேன். கட்டடங்களின் அடிப்பகுதி கற்களால் ஆனது. அவற்றில் கற்சிலைகள் வடிக்கப்பட்டிருந்தன. நகரின் மையப்பகுதியில் இரும்பால் செய்யப்பட்ட கலை வேலைப்பாடுகள் கொண்ட மிகப்பெரிய அளவில் மணி ஒன்று கல் தூணில் தொங்க விடப்பட்டிருந்தது.
அரண்மனையின் ஒரு பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. மல்லர்களின் வரலாறு மற்றும் பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட பதான் நகரச்சதுக்கத்தின் புகைப்பட்டங்கள், மல்லர் வம்சத்து மன்னர்கள் பயன்படுத்திய பொருள்கள், புத்தர், தாரா தேவியின் உலோகச் சிலைகள் எனப் பலவையும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பகோடா முறையில் கட்டப்பட்டிருக்கும் இக்கட்டடங்கள் பெரும்பாலும் இரு தளங்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மேல் தளத்துக்குச் சென்று நகரச்சதுக்கத்தை இன்னும் விரிவாகப் பார்க்கையில் சுற்றிலும் அதன் சுற்றுப்புறத்தில் அமையப்பெற்றிருக்கும் ஜன்னல்களுக்குக் கீழே இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் உட்கார்ந்தவாறே பதான் நகரச் சதுக்கத்தை சற்று விரிவாகக் காண முடிந்ததுது. பீரியாடிக் ஜெட்லீ படங்களில் காட்டப்படும் சீனத்து நகரத்தினைப் போல இந்த பதான் நகரும் காட்சியளித்தது.
கல் மற்றும் மரச்சிற்பங்களில் மிளிரும் கலைப்பெறுமதியின் பிரமாண்ட வடிவமாக அரண்மனை எழுந்து நின்றிருந்தது. தீர்த்தக் கிணற்றைச் சுற்றி எழுப்பப்பட்டிருக்கும் பவுத்தச் சிலைகளே அதற்குச் சாட்சியமாக விளங்குகிறது. அரண்மனைக்குப் பின்புறம் உள்ள நந்தவனத்தில் அமைக்கப்பட்டிருந்த குளத்தின் நாற்புறமும் கற் சிற்பங்களிலான நுழைவு அமைக்கப்பட்டிருக்கிறது. மல்லர் அரச வம்சத்தினர் நீராடிய குளமல்லவா ஆகவே பயணிகள் குளத்துக்குள் இறங்க அனுமதி இல்லை. நிறைவான அனுபவத்தோடு பதான் நகரச்சதுக்கத்திலிருந்து காத்மாண்டு நகருக்கு வந்தேன். எனது அடுத்த திட்டம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான முக்திநாத் செல்வதாக இருந்தது.
-வளரும்

கி.ச.திலீபன்
ஈரோடு மாவட்டம் தூக்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர். 2009-ம் ஆண்டிலிருந்து ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். கலை இலக்கிய சூழலிய இதழான ஓலைச்சுவடி இணைய இதழின் ஆசிரியர். ‘இன்னும் மிச்சமிருக்கிறது’ என்கிற இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு 2019-ம் ஆண்டு வாசகசாலை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
பயணங்களில் அதீத ஈடுபாடு கொண்ட இவர் 2022ம் ஆண்டு வட கிழக்கு இந்தியாவில் 21 நாள்கள் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை ‘Back பேக்’ என்கிற பெயரில் விகடனில் தொடராக எழுதினார். பின்னர் நடுகல் பதிப்பகத்தின் வழியாக 2022ம் ஆண்டு அது நூலாக வெளிவந்தது. 2023ம் ஆண்டு 114 நாள்கள் இந்தியா முழுவதும் மேற்கொண்ட பயணத்தின் அனுபவங்களை தீரா உலா என்கிற இத்தொடரில் எழுதுகிறார்.