தூக்குச்சட்டியில் பழயக் கஞ்சியை ஒரு கையிலப் புடிச்சும், தொத்த மாட்டை ஒரு கையில புடிச்சும் களயெடுப்புக்குக் கெளம்பினா வெள்ளத்தாயி.
அம்மை வச்சிட்டுப் போன மிச்சக் கஞ்சியக் காசியும் மொக்கையும் குடிச்சுப்பிட்டு வெறகுக்குக் கெளம்பினர்.லேசாக உச்சித் தூற்றல் தூற ஆரம்பித்தன. ஒத்தயடி பாதையில சுக்கான் கல்லுகள எடுத்து வந்தான் காசி. கருவைக் காட்டுக்குள்ள நொளஞ்சவுடன், நல்ல பொட்டல் பார்த்து ஒக்கார்ந்தனர்.
மொக்கை கல்லுகள ஒடச்சு மணல் போல பொடியாக்கினான். காய்ஞ்ச மஞ்சணத்தி தூருக் கட்டையைப் பொரட்டிக் கொண்டு வந்தான் காசி. பொடிமணலைப் போட்டு அருவாக்களைக் கூர் தீட்டினான். ஒரே போடுல, சில்லு சில்லுகளாத் தெறிக்கிறப் பதம்.
‘ஏலே மொக்கை .,வாடா சாமியைக் கும்பிட்டுட்டு வேலையத் தொடுவோம்’.
‘சரிண்ணே’., அருவா,கம்பு,கோடாரி, கொக்கி அருவாக்களைக் கெழக்கே பார்த்தபடி போட்டுவிட்டு நெடுஞ்சாண்கெடையாக விழுந்து எழுந்தனர்.
காட்டுக்குருவிகளின் சத்தம் விகாரமாய் ஒலித்தது.‘காலு கையல முள்ளு மொடி அடிச்சு, காயங்கீயம் வராமப் பாத்து வீடு திரும்பனும்.,பள்ளிக்கொடமும் போகணும்.’ ஏக்குத் தாப்பாச்சானா ,அம்மைகிட்ட பூசையும் விழும். நெனச்சுக்கிட்டே வேலய தொட்டனர்.
கவக்கம்புவ வச்சு கருவைத் தூரை ஆளு நின்னு வெட்டுறதுக்கு எசவா, முள்ளு மொடியை அகற்றினான் காசி. தூறல் போட்ட மேகத்தில வெயில் சூடு பிடிக்க எழுந்தது.
மொக்கைக் கருவத்தூறுகளை வெட்டிச் சாய்த்து அரக்கி, குச்சிகள ஒரு பக்கமும், கனத்த வெறகுகள ஒருபக்கமும் ஒதுக்கிப் போட்டான். மத்தியான வெய்யில் ஒறச்சது. ‘ஏலேய் காசி ,செத்த கையை ஆத்திக்கிருவோம். நல்ல எணலு பாரு, அப்புடியே, கஞ்சிய குடிச்சுருவோம்.’
தூரு கனத்தக் கருவை எணல், காலு வைக்க எடமில்லாம, பறவைகளின் எச்சம். துத்தி மாருகள வச்சு எழ தழ முள்ளுக கூட்டி ஒக்கார்ந்தனர் காசியும் மொக்கையும்.
‘அம்மை களைக்குப் போய்ட்டு வீடு வர பொழுதாகும். அவளுக்குக் கெடந்தக் கஞ்சியை, நாம ஊத்திக் கொண்டாந்துட்டோம்.’ என்ன செய்யப் போறாளோ?., மொகத்தை சுளித்துக் கொண்டு, பழய கஞ்சியைக் குடிச்சு, மொளகா தொவயல தொட்டு நக்கினர் இருவரும்.
வயிறும் வட்டஞ் சேர்ந்தது. பழயபடி வெறகுகள அரக்க ஆரம்பித்தனர்.
முள்ளுகள ஒதுக்கிப் போட்டு அடுத்தத் தூருக்க நகர்ந்தனர். வேலிப் பருத்திக் கொடிகளும் செடிகளும் பின்னிக் கெடந்தது.
‘மழ காத்துக்கு சேதமில்லாம தெடமாக் கூட்டைக் கட்டியக் குருவி அதுக்குள்ள, நாலு முட்டையை இட்டு இருந்தது’.
முட்டைக பூராவும் பழுத்த ஆரஞ்சாய் மின்னின.
காசிக் கூட்டைத் தூக்கப் போனான். ’ஏலே காசி பாவம்டா.,அந்தப் பாவம் நம்மள சென்மத்துக்கும் சும்மா விடாது,. யாருக்கு என்ன செய்ஞ்சாங்களா? அப்பன் இல்லாம நாம அலையுறோம்,.. அந்தத் தூரு விட்டுட்டு, அடுத்த கருவைத்தூருக்கு போ’. மொக்கை குத்துக் காலிட்டு மூத்திரம் பெய்தான்.
வேலிக்கொடிய இழுத்து அறுக்கையில அருவா வந்து காசி முழங்கால விழுந்தது. பொழுது சாயும் நேரம்,ரெத்தம் ஊத்தியது. ‘அய்யய்யோ அறுவா வெட்டிருச்சு., அய்யய்யோ அறுவா வெட்டிருச்சு.,’ கருவேலங்கொழுந்தை உருவிக் கசக்கி கட்டுப் போட்டுவிட்டான் மொக்கை.
’ஏலேய், அம்மைகிட்ட என்னத்த சொல்லி சமாளிக்க?,. வெறகுக்கு போனவங்க காயத்தோட வந்தா, என்ன நெனப்பா,. இன்னும் ரெண்டு நாள்தான் இருக்கு, பள்ளிக்கொடம் தொறக்க’. கருவைக்காட்டுல இருந்து கைத் தாங்கலா காசியக் கூட்டியாந்தான் வீட்டுக்கு.
வெள்ளத்தாயி கொட்டடியில் சாணி சகதிகள அள்ளிக் கொண்டிருந்தாள். மாடு கத்திக் கொண்டே இருந்தது. காலு கைய அலம்பிவிட்டு தவிடு அள்ளுவதற்கு அடுப்படிக்கு வந்தவ, காசியை பாத்து பதறிப் போனா.
’பாத்துக் கோளாற வெட்டக் கூடாதா சாமி. முட்டியில் லேசான பொட்டுப்போன்ற பள்ளம் விழுந்திருந்தது. குப்பைமேனியும் துத்தியையும் கசக்கி புழிஞ்சு மாத்துக் கட்டு போட்டு விட்டா அம்மை. எரிச்சலும் காந்தலும் செத்த நேரத்தில் அழுகையை வரவச்சது. அலுப்புல, நல்லா ஒறங்கிட்டான் மொக்கை.
பளாருனு விடிய மொக்கை அருவாக்களோடு கெளம்பினான்.
’ஏலே காசி நீ வீட்ல இரு. நான் மட்டும் போயிட்டு வாறேன்’.
முனுமுனுத்துக் கொண்ட அம்மை, ’ஏலேய் மொக்கை, நீ மட்டும் ஒத்தையில கெடப்பையா. தம்பியும் கூட கூட்டிட்டுப் போ ,. பேச்சுத் தொணைக்கு ஆளு வேணாமா?’
பேசிக் கொண்டே நடந்தனர். காசி நொண்டி நொண்டி வந்தான். ஒரு மயிலு தொலவு தாண்டுனதும் தம்பிய முதுகுலத் தூக்கிச் செமந்தான்.
நேத்துச் சாய்ச்சுவிட்டுப் போனக் கருவைகளை அரக்கினான்.
செத்த நேரம் ஒக்கார்ந்து இருந்த காசி, குச்சி வெறகுகளை பிரிச்சுப் போட்டான். கனத்த தூரு, பொடிக்குச்சிகள் எல்லாஞ் சேர்ந்து ஒரு டிரை சைக்கிள் நெரம்பும். இன்னைக்கு வெறகுக்களத்துக்கு ஏத்தாட்டி, ஈரமும் காய்ஞ்சும் போகும். வெலயும் கொறஞ்சு போகும்.
‘வெறகு ஏவாரி கண்ணுச்சாமித் தேவருக்கு சேதி சொல்லியும் வந்து அள்ளிட்டுப் போகல’,.ஊருக்குள்ளக் கருப்பையா வீட்லப் பழைய டிரை சைக்கிள் ஒண்ணு கெடந்ததக் காசிப் பார்த்ததா, மொக்கையிடம் சொன்னான்.
வெள்ளத்தாயி மகன் மொக்கையைக் கூட்டிக்கிட்டுக் கருப்பையா வீட்டுக்கு போனா. கருப்பையா திண்ணையில படுத்து கெடந்தான்.
‘எண்ணே, கருப்பையா எண்ணே .,வெறகு ஏத்தனும் வாரயா?,. ’நா வரலதாயி. எனக்கு மூனு நாளா சொகமில்லா,. வேணும்னா,. வண்டிய எடுத்துட்டு போங்க’.
’அதேன் ஒம்மயன் மொக்கை இருக்கான்ல. நல்லா இழுப்பான்ல’.
டிரைசைக்கிளை இழுத்துட்டு வந்தான் மொக்கை. பிள்ளையும் குட்டியுமாய் மூனு பேரும் வெறகுகளைச் செமந்து வந்துப் போட்டு அடுக்கினர்.
பாதித் தொலவு வரை, வெள்ளத்தாயி டிரை சைக்கிள் தள்ளி வந்தா. காசியும் மொக்கையும் மாத்தி மாத்தி இழுத்தனர். சாமிப் பாத்துக் கோளாறப் போய் எறக்கிட்டு வாங்க. நான் ,அம்மை வீட்டுக்குப் போறேன். மாடு ஒத்தையில கெடக்கு.
வேர்த்து விறுவிறுத்துப் போய், மேல்மூச்சுக் கீமூச்சு வாங்கிக் கண்ணுச்சாமித் தேவர் வெறகுக் களத்திற்கு வந்தனர். கண்ணுச்சாமித் தேவரும் சுந்தரவள்ளியம்மாவும் வெறகு ஒடைத்துக் கொண்டு இருந்தனர்.
‘அய்யா., ஆத்தா,. வெறகு வந்திருக்கு. ஏலே யாருடா இது.? மொக்கையா’,.
’ஆமய்யா’.
‘பள்ளிக்கொடம் லீவாக்கும்’
‘ஆமய்யா’.
’நீங்க,ஆளுவிட்டுச் சொல்லியும் வரல. அதேன் நாங்க ஏத்தியாந்தோம்’.
’ஏலேய், இங்க ஆளுக யாரும் இல்லை. ஒத்தையிலப் போட்டுபுட்டு நா வரமுடியாதுல.’
சுந்தரவள்ளியம்மாச் செம்பு நெறைய மோர் கொண்டு வந்து குடுத்தா.
காசியும் மொக்கையும் வாங்கிக் குடித்தனர்.
‘ஏலேய் ,ஓங்க ஆத்தா எப்புடி இருக்கா?,.சொகமா இருக்காலா?’
’சொகமா இருக்கா. பாதித் தொலவு வரை, அவதான் பின்னாடி வந்தா’.
’சரி சின்னவனுக்கு காலுல என்ன கட்டு?’
‘வேலிப் பருத்திக் கொடிய அறுக்கிரம்னு, கால அறுத்துகிட்டயான் ஆத்தா.’
‘அய்யோ அய்யோ,. பாத்துச் சூதானமா பாக்க கூடாதா,.’
வெறகுகளை எறக்கி எடை போட்டனர். பத்துத் தூக்கு இருந்தது.
தூக்கு இருபது ரூவானு,. எறநூறு ரூவா கொடுத்தாரு.. கண்ணுச்சாமித் தேவர். காசியும் மொக்கையும் ரூவாவை வாங்கித் துண்டுல சுத்திக் கட்டி டவுசரு பைக்குள்ள வச்சு வீடு வந்து சேர்ந்தனர்.
‘அம்மையிடம் எறநூறையும் கொடுத்தனர். பூராம் ஒரூவா, ரெண்டு ரூவா சில்லறை காசு. அம்பது ரூவா எடுத்துக் கிட்டு, மிச்சம் நூத்தைம்பது ரூவாய சரி பாதியாப் பிரிச்சு எடுத்து கொடுத்தா. காசியும் மொக்கையும் சாமிவீட்டுக்குள்ளக் குழிதோண்டி மண்ணு உண்டியல பதிச்சு இந்த காசுகளைப் போட்டு வச்சு சேமித்தனர்.
மாசப்பெறப்புக்கு இன்னும் ஒரு வாரந்தான் கெடக்கு. காசியும் மொக்கையும், அம்மை வெள்ளத்தாயியை நச்சு எடுத்தனர் துணிமணிக வாங்குவதற்கு.
மூவரும் ஒத்தக்கடைச் சந்தைக்கு வந்தனர். பானை, சட்டி, மொளகு, சீரகம், மஞ்சனு வீட்டுச் சாமான்களை வாங்கி முடித்தனர். அம்மையின் சுருக்கப்பை காலியானது.
வெறகு வெட்டிச் சேர்த்த ரூவாயில இருந்து ரூவாய எடுத்துக் குடுத்தான் மொக்கை.
மூனு பேருக்கும் துணி மணிக, மாட்டுக்கு புடி கவுறு, மூக்குக்கவுறு, தும்பு வாங்கி நாருப்பொட்டியோடு எறக்கினா வெள்ளத்தாயி. கழுத்துப் புருசன் இல்லாட்டியும் வயித்துப் புருசனாக இருக்குற பிள்ளைகள நெனச்சுத் தன்னை தேற்றிக் கொண்டாள்.

அய்யனார் ஈடாடி
மதுரை மாவட்டம், மாடக்குளம் அருகிலிருக்கும் தானத்தவம் எனும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். வேதிப் பொறியியல் துறையில் பி.டெக் பட்டம் பெற்றவர். தற்போது தொழில் முனைவோராக உள்ளார்.
கல்லூரிக் காலத்திலேயே படைப்புகளை எழுதத் தொடங்கியவர். வேளாண் தொழில் குடும்பப் பின்புலமும், தமிழின் மீதான பற்றாலும், இயற்கையின் கொண்டிருக்கும் அதீதக் காதலாலும் கவிதைகளைப் படைப்புகளாக வடித்தெடுக்கிறார்.
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதை நூலை 2022லும் , மதுரை வட்டார கிராமத்து எளிய மக்களின் பாடுகளையும் , வரலாற்று சரித்திரத்தையும்
எனதூர் சரித்திரம் எனும் சிறுகதை நூலாக தொகுத்து 2023ல் வெளியிட்டிருக்கிறார்.