விடியற்காலை பொழுது. மழை பொழிந்து கொண்டே இருக்கிறது. செல்ல மகள் செம்மொழி அவள் அப்பாவின் அருகில் படுத்திருந்தவள் கண்விழித்துப் படபட எனச் சத்தம் கேட்கும் பக்கம் திரும்பிப் பார்க்கிறாள். எரிந்து கொண்டிருக்கிற டியூப் லைட்டின் மீது பெரிய தும்பி ஒன்று பறந்து பறந்து மோதிக்கொண்டே இருக்கிறது. அந்த ஒளியின் வெளிச்சத்தில் வெளியேற வழித்தெரியாமல் அரைமணி நேரத்திற்கு மேலாக முட்டிமோதிக்கொண்டிருக்கிறது அது.

அவர்கள் படுத்திருப்பதற்குப் பக்கத்தில் கட்டிலின் மேலே அவளது அம்மாவும் பிறந்து இருபது நாட்களே ஆன அவளது குட்டித் தங்கையும் படுத்திருக்கிறார்கள். டியூப் லைட் வெளிச்சத்தில் முட்டி மோதிக்கொண்டே இருக்கிற தும்பியைக் கண்டவள் அதிர்ச்சியடைகிறாள்.

“அப்பா அப்பா அங்க பாருங்க தும்பி, பாப்பா மேல விழப் போவுதுபா ” எனக் கைகாட்டி. அச்சத்தோடு பார்க்கிறாள். அவளது தந்தை முன்போ தும்பி சுற்றி சுற்றி வருவதைப்பார்த்தாலும், மகள் கைநீட்டிக் காட்டியப் பின்பு மீண்டும் தும்பியைப் பார்க்கிறார்.

“டேய் மெதுவாடா மெதுவா போட, சத்தம் போடாம போ ” என்பதைச் சத்தம் போட்டுச் சொல்லாமல் செய்கையில் கைகளை அசைத்து முகத்தைச்சுழித்து, உதடுகளை அசைத்தும் சொல்கிறான் தமிழ்.

கால்களைக் குத்தவைத்து அமர்ந்து தட்டான்பூச்சி இருக்கும் இடம் நோக்கி கைநீள்வதுக்கூட தெரியாமல் மெதுவாகத் தட்டான்பூச்சி நோக்கி கையை நீட்டுகிறான் அறிவு.

தட்டான்பூச்சி பசுமை நிறைந்த புல்லின் தலையில் கைகளை ஊன்றி அமர்ந்து கொண்டு வண்ண விழிகளால் தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டிருந்தது. நான்கு சின்ன இறகுகள். பச்சையும் கருப்பும் கலந்த உடல் நிறம் அத்தனை அழகோடு அது இருந்தது.

எப்படியும் பிடித்துவிடலாம் என அறிவு மெல்ல மெல்ல நகர்கிறான். தட்டான்பூச்சியின் மிக அருகில் சென்று விட்டான். பிடிக்கும் விரைவில் கையை வேகமாக நகர்த்துகிறான். கை நகர்த்திய வேகத்தில் எழும் சிறிய சத்தத்தை உணர்ந்த தட்டான்பூச்சி ‘விர்ர்ர்ர்னு’ இறகுகளின் சத்தம் எழ பறந்து பக்கத்தில் இருக்கும் செடியின் மீது அமர்ந்துகொண்டு அறிவை நேராகப் பார்க்கிறது.

தட்டான்பூச்சியைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல. எந்தத் தட்டான்பூச்சியை எப்படிப் பிடிக்க வேண்டும் என்பதற்குச் சில வழிகள் இருக்கிறது.

ஊசித்தட்டான் சின்ன உடல் இறக்கையோட நீண்ட வால் இருக்கும். அந்த நீண்ட வலைப்பிடித்தால் வலைந்து பிடிப்பவரின் கையைக் கடிக்கும் அதானால அதோட இறக்கையைப்பார்த்து டக்குனு ஊசித்தட்டான கையைக் கடிக்காம பிடிச்சிடலாம்.

யானைத்தட்டான் தட்டான்பூச்சிலையே ரொம்ப பெரிய உடலோட இருக்கும். பச்சை நிறத்துல அதோட உடல் இருக்கும் பெருச இருக்கறதால கவனமா பிடிக்கனும் கைய கடிக்கும். அது கடி அப்படி வலிக்கும். அதனால இந்த தட்டான்பூச்சியையும் இறக்கையைப்பிடிச்சுத்தான் பிடிக்கனும்.

இதைவிட இன்னும் நிறத்திலும் உடல் பருமனிலும் அழகா இருக்கற தட்டான்பூச்சிய ஏரோ பிலேன் தட்டான்பூச்சினு சொல்வோம்… இது ரொம்ப உயரத்துலதான் பறக்கும் எப்பயாச்சும்தான் தாழ தாழப் பறந்து வந்து முள் வேலிகள்ல உயரத்துலதான் அமர்ந்திருக்கும் அதோட இறக்கைதான் அதோட அழகே. கருப்புநிறம் உடலோட பகுதிக்கும் இறக்கைப் பகுதிக்கும் இணைப்பதைப் போல இறக்கையில் பாதிவர அந்தக் கருப்பு அழகா இருக்கும். இது பறக்கும் போது பாத்தா ஏரோபிலேன் போல  இருக்கறனால இத ஏரோபிலேன் தட்டான்னு சொல்வோம்.

குட்டித்தட்டான்பூச்சி. தரையில, கல்லுமேல, புல்லு மேல உக்காந்து இருக்கும் இதலாம் உள்ளங்கைய குவிச்சி வேகமாக வீசுனா குவிச்சு இருக்கற உள்ளங்கைகுள்ள மாட்டிக்கும். அப்படி அதுங்க மாட்டுவது கைய குவிச்சி இலாவகமா வீசனும்.

“அறிவு பாவம்டா தட்டான்பூச்சி. அதுங்கள பறக்க விட்டுடுடா, அதுங்க பாவம்டா” சொல்லிக்கொண்டே அருகே போய் பார்த்தா பத்துத் தட்டான்பூச்சிங்க இருக்கும் எல்லாத்தையும் பறந்து ஓட முடியாம இறக்கையைப் பாதி கிள்ளி ஒரு தாளை விரிச்சு அதுல போட்டு வச்சுருக்கான்.

“அடே என்னடா பன்ற “

“போ வேகமா நட ம்ம்” என ஒரு ஈக்குக்குச்சிய வச்சி ஒவ்வொரு தட்டான்பூச்சியா தட்டி தட்டி நகர்த்திட்டு இருக்கான்.

“என்ன பண்ற அறிவு”

“இந்தத் தட்டான்பூச்சிய வச்சி ஏர் ஓட்டிட்டு இருக்கேன் தமிழ்   “

தமிழ் பார்க்கிறான் தட்டான்பூச்சிகள் இறக்கைக் கிள்ளப்பட்டு வலியோட சோகமா அமர்ந்திருதிருக்கிறது. இவன் தட்டான்பூச்சிகளைப் பிடித்து இப்படி செய்வான் என அவனுக்கு “மெதுவா போடா, பிடிடா” என்று சொன்னபோது தெரியாது. வருந்துகிறான்.

“என்ன அறிவு இப்படிப் பண்ணி வச்சுருக்க அதுங்க பாவம் இல்லையா? அதுங்களும் நம்ம போல உயிர் இருக்கறதுதானே? நமக்கு அடிப்பட்டா வலிக்குறபோல அதுங்களுக்கும் வலிக்கும்தானே?” சொல்லிகிட்டே தட்டான்பூச்சிகள் இருக்கற தாளைத் தட்டான்பூச்சிகளோட எடுக்கறான்.

அதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தவன்,

“தமிழ் அத தொடாத அதுங்கள நான் எவ்வளோ கஷ்டப்பட்டுப் பிடிச்சேன் தெரியுமா? தொடாத. என்ன பண்ணனும் அதுகள சொல்லு நானே செய்றேன்”

“சரி நீ அந்தத் தட்டான்பூச்சிகள வேலி ஓரமா கொண்டுபோய் எல்லாத்தையும் விடுடா” எங்கே விடவேண்டுமோ அந்தப் பக்கம் கையை நீட்டிக் காட்டுகிறான் தமிழ்.

அறிவு மெதுவா தட்டான்பூச்சி இருக்கிற தாளை எடுத்துக்கொண்டு தமிழ் விடச் சொல்லி விரல் நீட்டிக் காட்டிய திசைப்பக்கமா கொண்டுபோய் மெதுவா தாளை வச்சிட்டு,

“போங்க போங்க ஓடிப்போய்டுங்க போய்டுங்க,” எனக்கூறி தாளைத் தட்டுகிறான். எந்தத் தட்டான்பூச்சிகளாலும் பறக்கவே முடியவில்லை அங்கும் இங்குமாக களைந்து ஓடுகின்றன.

முன்பு போல ஒரு தட்டான்பூச்சியாலும் பறக்க முடியாததைப் பார்த்ததும் “அதுகளுக்கும் வலிக்கும்டா” தமிழ் சொன்னது நினைவுக்குவர அறிவுக்கு அழுகை வந்துவிட்டது. கண்களைக் கசக்கிக் கொண்டே தாட்டான்பூச்சிகள் விட்ட வேலி பக்கம் திரும்பி திரும்பி பார்த்து “மன்னிச்சுடுங்க என்னைய மன்னிச்சுடுங்க” சொல்லிக்கொண்டே வீட்டிற்கு வருகிறான்.

தட்டான்பூச்சி பிடித்துவிளையாடும் கிராமத்துக் குழந்தைகள் வலி என்றால் என்னவென்றே தெரியாமல் தட்டான்பூச்சிகளின் மீது நிகழ்த்தும் கொடுமைகள் ஏராளம். அவைகளும் வன்முறை என்பது அந்தக் குழந்தைகளுக்குப் புரிவதே இல்லை.

வானம் நிறைய தட்டான்பூச்சிகள் பறக்கின்றன அவைகள் கைக்கு எட்டாத உயரத்தில் மகிழ்ச்சியோடு ஆடிப் பாடி திரிகின்றன. தமிழும் அறிவும் வயல்வெளியில் ஏர் ஓட்டிக் கொண்டிருக்கும் தன் அப்பாவிற்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு போகிறார்கள்.

“தமிழ் தமிழ் அங்க பாரேன் எவ்வளோ தட்டான்பூச்சி பறக்குது பாரேன்” தட்டான்பூச்சிகள் பறக்கும் வான் நோக்கி அறிவு கை காட்டுகிறான்.

தமிழ் நிமிர்ந்து பார்க்கிறான். அத்தனை மகிழ்ச்சி அவனுக்கு வானெங்கும் தட்டான்பூச்சிகள். தன் தம்பி அறிவு இறக்கை கிள்ளி விளையாடி, வேலி ஓரத்தில் கொண்டுபோய் விட்ட தட்டான்பூச்சிகளும் இதில் இருக்கும் என்ற பெரிய நம்பிக்கையில் மீண்டும் மீண்டும் வான் நோக்கிப் பார்க்கிறான்.

“அப்பா அப்பா எங்கப்பா தும்பிய காணும் எங்கப்பா போய்டுச்சி அது பாவம்பா லைட்ல மோதிக்கிச்சுலப்பா அதுக்கு வலிக்கும்தானே?” இதற்கு என்ன பதில் சொல்வது மௌனமாய் மேல் நோக்கிப் பார்க்கிறார். சுவரில் ஓர் ஓரமாக அமர்ந்திருந்தது அந்தத் தும்பி.

“செம்மொழி இங்கப் பாரும்மா இதோ இருக்குப்பாரும்மா அந்தத் தும்பி. அதுக்கு வலிக்கலம்மா, அது மகிழ்ச்சியாத்தான் இருக்கு. அதனாலதான் அது இங்கயே இருக்குக் கொஞ்ச நேரம் கழிச்சி அது அவங்க நண்பர்களோட போய் சேர்ந்து விளையாடும்மா” இப்போதும் செம்மொழி அமைதியாகத் தட்டான்பூச்சியைப் பார்த்துக் கொண்டிருத்தாள். இல்லை இல்லை அவளின் மொழியில் அது “தும்பி”…

00

மகா.இராஜராஜசோழன்

குழந்தைகளுக்கான தமிழ் பயிற்றுநர், செம்மொழி தமிழ்க்கூடம், சீர்காழி.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *