‘I don’t want to see you here anymore, get out of here soon’ என்றாள் அந்த ஆப்பிரிக்கன் அமெரிக்கன் தாதி. நடுத்தர வயதுடையவர். தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கருமை நிறம். சாந்தமான முகம். கருணை பொழியும் கண்கள். ‘I will try’ என்றேன்.’No more Try, you should ‘ என்றாள். நாங்கள் பேசிக் கொண்டிருந்தது அமெரிக்காவின் புகழ்பெற்ற அலெக்ஸியன் பிரதர்ஸ் மருத்துவமனையில். இங்கு வந்து இரண்டு மாதங்கள் ஓடி விட்டது. வருவேன் எனக் கனவிலும் நினைக்கவில்லை. இதுவரை இந்தியாவில் இருக்கும் பெற்றோர்களுக்கோ, சகோதரர்களுக்கோத் தெரியாது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு, நாட்கள் சற்று மந்தமாக கழிந்து கொண்டிருந்தன. ஒரு கிளையண்ட்டில் புராஜக்ட் முடிந்த இடைவெளி. நாங்கள் தங்கியிருந்த சிறு நகரத்தின் பெயர் ஏர்லிங்டன் ஹைட்ஸ். இல்லினாய்ஸ் மாநிலத்தில் இருக்கும் இவ்வூரில், நிறைய இந்தியர்கள் வசித்தனர். நானும் ராஜு மற்றும் ரஜினி ஆகியோர் ஒரு சிங்கிள் பெட்ரூம் அபார்ட்மெண்ட்டில் தங்கியிருந்தோம். பக்கத்திலேயே ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோர் மற்றும் பார்மசியும் இருந்தன. வார இறுதியில் ஸ்டாருக்குச் சென்று, பொருட்கள் வாங்கி வருவோம். பலர் பொருட்களோடு டிராலியையும் தள்ளி வந்து விடுவர். ஸ்டோரிலிருந்து வந்து டிராலிகளை எடுத்துச் செல்வார்கள். சுழற்சி முறையில் சமையல் செய்வோம். ராஜு பக்கத்து நகரத்தில் உள்ள ஒரு இந்தியக் கடையில் வேலை செய்து வந்தான். ரஜினி மற்றொரு இந்திய கன்சல்டன்சி கம்பெனியில் ரெக்ரூட்டராக வேலை செய்து வந்தான். ராஜு மட்டும் ஒரு பழைய கார் வைத்திருந்தார். வெளியே செல்லப் பெரும்பாலும் பேருந்துகள் மட்டுமே. சிகாகோ செல்கையில் ரயில். குளிர் காலத்தில் பேருந்து நிலையம் செல்வது மிகவும் கடினமான வேலை. உறை பனியில் வழுக்காமல் நடக்க தனித்திறமை வேண்டும். பழக்கம் இல்லாத பலர் கீழே விழுந்து கையோ காலையோ உடைத்துக் கொள்வதுண்டு. மொத்தமான ஜாக்கெட், சரியான காலணி, கையில் கிளொவ்ஸ், தலையில் குல்லாய். புதிதாக இந்தியாவிலிருந்து வந்த போது, அபார்ட்மெண்ட் ஹீட்டர் சூடு தாங்காமல் கொப்புளங்கள் கூட வந்தது. பிறகு உடல் தன்னை குளிருக்கு தயார் செய்து கொண்டது.

 நான் மெக்னாலி சிஸ்டம்ஸ் என்னும் கன்சல்டன்சி கம்பெனியில் அனலிஸ்ட் புரோகிராமராக பணி செய்து கொண்டிருந்தேன். பெயர்தான் அமெரிக்கக் கம்பெனியைப் போல இருந்தாலும், அது ஒரு இந்தியக் கம்பெனி. இது போன்ற இந்திய கன்சல்டன்சி கம்பெனிகள் அமெரிக்காவில் புற்றீசல் போல இருந்தன. இரண்டாயிரத்தில் ஒய்டுகே பிரச்சினை தொடங்கியதிலிருந்து இவை இன்னும் அதிகரித்தன. கம்பெனி அதன் நிறுவனர் வெங்கட் ஆந்திராக்காரர். தொடர்ச்சியாக சிகரெட் பிடிப்பவர். மிகவும் கோபக்கார மனிதர். கோபம் வந்தால் கதவை ஓங்கி சாத்துவார். அனைவருக்கும் பயம் வயிற்றைக் கலக்கும். நல்ல உயரம். கிட்டப்பார்வைக்கு ஸ்டைலான கண்ணாடி அணிந்திருப்பார்.யாரையும் கவரும் பேச்சு வல்லமை கொண்டவர். புராஜெக்ட் இல்லாத போது, கம்பெனியில் அமர்ந்து படிப்பதும் அடுத்த புராஜெக்ட்டுக்கான இன்டர்வியூ எனப் பொழுது போகும்.

கடந்த இரண்டு நாட்களாக, எனக்கு உடம்பு மிகவும் அயர்ச்சியாக இருந்தது. நேற்றிலிருந்து லூஸ் மோஷன் ஆரம்பித்திருந்தது. பாத்ரூமுக்கும் பெட்ரூமுக்கும் நடந்து நடந்து கால்கள் ஓய்ந்து போனது. இன்று வாந்தியும் ஆரம்பித்திருந்தது. ஓவர் தி கவுண்ட்டர் மாத்திரைகளில் இரண்டு நாட்கள் கடந்தது. ரஜினி டாக்டரிடம் சென்று பார்க்கச் சொல்லி கட்டாயப் படுத்தினான்.

பக்கத்தில் இருந்த மற்றுமொரு சிறு நகரம் மௌன்ட் பிராஸ்பெக்ட். அங்கிருந்த டாக்டர் கானின் மருத்துவமனை இந்தியர்களிடம் மிகவும் பிரபலமான ஒன்று. நம்மூர் பாஷையில் சொன்னால் கைராசிக்காரர். டாக்டர் கான்  ஒரு பாகிஸ்தானியர். மேல் படிப்புக்காக வந்து, அமெரிக்கப் பிரஜை ஆனவர். மருத்துவ காப்பீடு இல்லாமல் பலருக்கும் மருத்துவம் செய்தார். புராஜெக்ட்டில் இருந்ததால் எனக்கு நல்ல மருத்துவக் காப்பீடு இருந்தது. அவருக்கே உரித்தான சிரிப்புடன் வரவேற்று, பரிசோதனைகள் செய்தார். நான் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தை மறைக்காமல் சொன்னேன். சிறிது நேரத்தில், உடனடியாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்க வேண்டும் எனக்கூறி அலெக்ஸியன் பிரதர்ஸ் மருத்துவமனையிலிருந்த நுரையீரல் மருத்துவருக்கு கடிதம் கொடுத்தனுப்பினார். இதற்குள் ராஜுவும் ரஜினியும் வந்து சேர்ந்தனர். ஆம்புலன்ஸில் ஏறும் போதுதான் எனக்கு பிரச்சினை பெரியது எனப் புரிந்தது.

அலெக்ஸியன் பிரதர்ஸ் மருத்துவமனை சிகாகோ டவுன்டனிலிருந்தது. வரவேற்பில் மருத்துவக் காப்பீட்டைச் சரிபார்த்த பின்னர், ஸ்டெரக்ஸரில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர். தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. டிவி இருந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது. பிரசாத் என்னும் இந்திய மருத்துவர் பல பரிசோதனைகள் செய்தார்.  இப்போது கொஞ்சம் மூச்சுத்திணறல் இருந்தது. தொடர்ச்சியாக இருமல் வந்தபடியே இருந்தது. பெஞ்சமின் என்ற நுரையீரல் நிபுணர் பல பரிசோதனைகளுக்குப் பின்னர், அறுவை சிகிச்சைக்கு நாள் குறித்தார்.

அறுவை சிகிச்சையன்று, காலையில் வெறும் வயிற்றில் பல சோதனைகள் செய்தனர். ஜூஸ் மட்டும் கொடுத்தார்கள். ‘How are you my friend?’ என்றபடி அறைக்குள் நுழைந்தார். ‘very tired doctor’ என்றேன். ‘you will be alright ‘ என்றபடி, காலையில் எடுத்த முக்கியமான பாராமீட்டர்களைக் கொண்ட ரிப்போர்ட்டைப் படித்தார். பின்னர், ‘you are going to have a minor surgery today’ என்றார். பிறகு வரிசையாக என்ன நடக்கவிருக்கிறது என்பதைச் சொன்னார். நுரையீரல் நிபுணர் பெஞ்சமின் இந்த அறுவை சிகிச்சையை செய்யவிருப்பதைத் தெரிவித்தார். எனக்கு பயம் வயிற்றைக் கவ்வியது. எச்சிலை விழுங்கிக் கொண்டேன். கைகள் சற்று நடுங்கின. மூச்சுத் திணறல் சற்று அதிகமானது. முப்பது ஆண்டுகளில் இதுதான் முதல் அறுவை சிகிச்சை. அப்பா அம்மா சகோதரர்கள் யாரும் இல்லாத  அனாதையாக, எங்கோ ஒரு தூர தேசத்தில், நண்பர்களின் துணையுடன் ஒரு அறுவை சிகிச்சை நடக்கப் போகிறது. ரஜினி எனக்காக கையெழுத்திட்டான். சற்று நேரத்தில், எனது உடை மாற்றப் பட்டு, நீல நிற கவுன் அணிந்திருந்தேன். அறுவை சிகிச்சை அறைக்கு ஸ்டெரக்ஸரில் அழைத்துச் செல்லப் பட்டேன். அனஸ்தீஸிஸ்ட் மயக்க மருந்தைச் செலுத்தினார். கண்கள் சொருகி, சிறிது சிறிதாக நினைவை இழக்க ஆரம்பித்தேன்.

எவ்வளவு நேரம் அப்படியே இருந்தேன் என்று தெரியவில்லை. கண் விழித்த போது, நர்ஸ் ஒருவர், ‘can you hear me?’ எனக் கேட்பது போல இருந்தது. ‘please count for me’ என விரல்களைக் காட்டி எண்ணச் சொன்னார். சற்றே தடுமாறி, சரியாகச் சொன்னேன். வலது புறம் திரும்ப முயற்சி செய்தால், முடியவில்லை. வலது புறத்தில், விலா பகுதியிலிருந்து ஒரு குழாய் பொருத்தப்பட்டிருந்தது. அதிலிருந்து திரவம் வடிந்து கீழே வைக்கப்பட்டிருந்த கண்ணாடிக் குடுவையில் நிரம்பிக் கொண்டிருந்தது.  உடலை சற்று வலது புறம் திருப்பினாலும், மூச்சு வாங்கியது. சில சமயங்களில் தரையில் விழுந்த மீன் துடிப்பது போல, மூச்சுக் காற்றுக்குத் திணறினேன். இடையில் டாக்டர் பெஞ்சமின் வந்து பார்த்தார். ‘How are you feeling now?’ என்றார். ‘Feeling little better doctor ‘ என்றேன். ‘you will be alright very soon. God bless you’ என்றவர், கைகளிரண்டையும் கூப்பியபடி ‘நமஸ்தே’ என்றார். எனக்கு சில வினாடிகள் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ‘Thanks much doctor’ என்றேன். கடவுளாகப் பார்த்து டாக்டர் பெஞ்சமினை எனக்காக அனுப்பி வைத்திருப்பதாக உணர்ந்தேன்.

பிறகு டாக்டர் பிரசாத் மற்றும் நர்ஸ்களின் வழக்கமான பரிசோதனைகளும், மாத்திரைகளும், ஊசிகளும் தினமும் தொடர்ந்தது. இந்த சமயத்தில் தான், ஆப்பிரிக்க அமெரிக்க நர்ஸ் தினமும் என்னை நடைப்பயிற்சி செய்ய வைத்து, விரைவில் நான் இங்கிருந்து வெளியேற அன்புக் கட்டளை இட்டாள்.

இடையில் தொற்று நோய்க்கிருமி டாக்டர் மாலினியும் வந்து பார்த்தார். அவர் காச நோய்க்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறி, இன்னும் ஒரு வருடம் நான் மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும் எனப் பரிந்துரைத்தார்.

இந்நாட்களில், தொலைக்காட்சி தொடரான நண்பர்களே எனக்கும் நண்பர்கள். ராஜுவும் ரஜினியும் தினமும் ஒரு பதினைந்து நிமிடம் வந்து சென்றனர். வீட்டிற்கு சொல்ல வேண்டாம் என நண்பர்களிடம் சொல்லி விட்டேன். வெங்கட் தனது மனைவியுடன் ஒரு முறை வந்து பார்த்தார். ‘எநத்த ஆக்டிவ்கா உன்ன வாடு, இட்டல உண்ணாடே’ எனக்கூறி வருத்தப்பட்டார். என்னைப் பார்த்து, ‘தொரகா லேசி ரண்டி,  நெக்ஸ்ட் புராஜெக்ட் ஜாயின் செய்யாலி’ என்றார். ‘தொந்தரகா ஒச்சேஸ்தானு சார்’ என்றேன்.

சில நாட்களில் நார்மல் வார்டுக்கு மாற்றப் பட்டேன். இப்போது என்னுடன் ஒரு இத்தாலிய அமெரிக்க நோயாளியும் இருந்தார். பிறகு அவருடன் பேசிய குறைவான நேரத்தில், அவர் பெயர் கெவின் என்றும், இத்தாலிய இருந்து அமெரிக்கா வந்து செட்டில் ஆனவர் என்றும் தெரிந்து கொண்டேன்.

‘what happened Kevin?’ என்றேன். ‘I have stomach cancer and I got operated’ என்றார், காலை உணவு சாப்பிட்டேன் என்பது போல சாதாரணமாக.

இப்போது நர்ஸ் உதவியின்றி நடக்க ஆரம்பித்தேன். குழாய் அகற்றப் பட்டது. மூச்சுத் திணறல் சற்று குறைவாகவே இருந்தது.

அன்றைய காலையில், டாக்டர் பிரசாத் வழக்கமான பரிசோதனைகளுக்குப் பின்னர், ‘today you can go home, young man’  என்றார். ‘Thanks much doctor’  என்றேன்.

நீலநிற அங்கியிலிருந்து, ஜீன்ஸ் பேண்ட்க்கு மாறினேன்.

பக்கத்தில் இருந்த கெவின், பரிதாபமாக நான் தயாராவதையே பார்த்துக்கொண்டு இருந்தார். அவர் கண்கள் கலங்கியிருந்தது. அவர் கண்களில் மரண பயத்தைக் கண்டேன். நான் ஏதாவது சொல்ல மாட்டேனா என அவர் கண்கள் கெஞ்சுவதைப் பார்த்தேன்.

 ராஜுவும் ரஜினியும் வந்திருந்தனர். எல்லா பொருட்களையும் சேகரித்த பின், நர்ஸ் வந்து, தள்ளு வண்டியில் அமரச் செய்தார். மூன்று மாதங்களுக்குப் பிறகு, மறுபிறவி எடுத்த சந்தோஷம். வெளியுலகைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வம். கெவின் என்ற ஒருவரையே மறந்து விட்டேன். யாரோ பார்ப்பது போல இருந்ததால், திரும்பினேன். கெவினின் கண்கள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. நான் அவரிடம் எதுவுமே சொல்லாமல், அந்த மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தேன்.

இன்று நினைத்தாலும், நான் ஏன் அன்று அவ்வாறு இரக்கமின்றி நடந்து கொண்டேன் எனத் தெரியவில்லை. அந்த வருடத்திலேயே கெவின் இறந்திருக்கலாம். இன்றும் அவரின் விழிகள் என்னைத் துரத்தியபடியே இருக்கின்றன.

கண்ணன்

வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *