01.நுண்கதை:

யாரையும் குறை சொல்வதில் அவருக்கு உடன்பாடில்லை. ‘உலகம் இப்படித்தானென்று’ நன்றாகவே தெரியும். தன் வாழ்வை ‘வாழ்தலில்’ பொருத்திக் கொண்டவர். இருப்பினும் சில நேரங்களில் ‘இந்தச் சாதாரண மானுட உடலும் மனமும் சார்ந்தோரால் சஞ்சலப்பட்டுப் போகிறது’ என்பதை அச்சூழலைக் கடந்து யோசிக்கும்போது உணர்ந்திருந்தார். மோட்டாரின் பட்டனை அழுத்தியவர் குழாயிலிருந்து பீறிடும் நீரின் ஓரத்தில் நின்றவாறே வாய் வைத்துக் குடித்தார். தடத்தில் புல்லட் சப்தம் கேட்டபோது தோகையுடைய மயிலொன்று அவரைக் கடந்தது.

0

02.குறுங்கதை

கோபாலுக்கு எரிச்சலாக இருந்தது. நரையும் திரையும் கூடி முதிர்ந்த பின்னும் இத்தகு உணர்வுகளை முற்றிலும் கடப்பதற்கான வழிகளை அறியாதிருந்தார்.

தோப்பின் ஒரு பக்க ஓரத்தில் இருந்த பாத்திகளில் கீரைகள் செழித்திருந்தன. தலையில் முக்காடிட்டபடி முருங்கை மரத்தடியில் நின்று மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாள் வேம்பாத்தாள்.

கோபாலுடன் தீவிரமாய் உரையாடிக் கொண்டிருந்த ராசு அணிற் கொரித்துச் சிதறிக் கிடந்தக் குரும்பைகளைச் சேகரித்து மரத்தடியில் குவித்தார்.

தோப்பின் ஓரத்தில் நடை பாதைக்கென ஒதுக்கியிருந்த தடத்தில் மாடுகளை பத்திக்கொண்டு வந்த வேம்பாத்தாள், தன் மடியிலிந்து எடுத்து இரு கொய்யாவை நீட்ட பெற்றுக்கொண்ட ராசு ஏதோ சொல்லிப் பகடி செய்தார்.

சற்று விரிவாகவே பல கதைகளைப் பேசி கோபாலைத் தேற்றியவர் தன் கையிலிருந்த பழங்களை நீட்ட, சொத்தையாக இருந்ததைத் தனக்காகத் தேர்ந்துக்கொண்டார்.

0

03.சிறுகதை

மொட்டைத் தென்னையைத் தேர்ந்து பறந்தமர்கிற மயில், தன்னை நிலைப்படுத்திக் கொண்டு அதன் நீளக் கழுத்தை மேலும் கீழும் அசைத்துச் சுற்றிப் பார்த்தபடி அகவுகிறது. உச்சிக்கு ஒரு பாகத்திற்குக் கீழே இருக்கும் பொந்திலிருந்து எட்டிப் பார்த்த கிளி மயிலெனத் தெரிந்ததும் அமைதியாய் உள்ளே போகிறது.

‘இந்த ஒலகம் எத குடுத்துச்சு? துரோகத்தைதானே. எத்தன எத்தனயோ இருக்கு. எல்லாத்தயும் பகிர்ந்துக்கணுமா என்ன? வேண்டாம். எல்லாம் ஏமாத்து. எங்க பாத்தாலும் சுயநலம். நம்ப மேல அன்பும் அக்கறயும் இருக்கதுபோல் காட்டிக்கிட்டு எல்லாத்தையும் ஆமா எல்லாத்தையும் தகத்துடுறாங்க. அதுல அறியாம மசுரு வேற வந்த ஒட்டிக்கிடும். என்னப்பா நா சொல்றது சரிதானே’ என்கிறார் கோபால்.

அவரின் செம்பட்டைப் பூத்திருந்த மயிர்கள் கலைந்திருந்தன; மூக்கு விடைத்திருக்க கண்கள் உதிரச் சிவப்பில் உள்ளன. அணிந்திருக்கும் சட்டையில் மேற்பட்டன்கள் இரண்டு இல்லை. மூன்றாவதும் உடைந்திருந்தது. வலப்பக்க கையின் கம்முக்கூட்டுப் பகுதி நைந்து கிழிந்திருந்தது. இரகசியங்கள் ஏதுமில்லை. ஊருக்கு உறவுக்கு என எல்லாவற்றையும் அழித்த கதை பொது. இழப்பதற்கு ஒன்றுமில்லை. ‘போதும்’ எனத் தோன்றியது கோபாலுக்கு.

கோபாலின் வினாவிற்குப் பதில் சொல்ல முடியாமல் தலையைக் கவிழ்த்தபடி பெருமூச்சு விட்டுக்கொள்கிறார் ராசு. இருவரும் நண்பர்கள். நாற்பத்தைந்து வருட நட்பு.

ராசு கேட்கிறார்,

‘என்ன செய்யலாம்ங்கற?’

‘எதுவும் செய்யச் சொல்லலை. வெறுத்து போச்சுப்பா’.

‘நம்ப யாருக்கும் கெடுதல் பண்ணாதப்போ ஏன் கிடந்து வருத்தப்பட்டுக்கற?’

அமைதியாக இருந்தார்.

‘இந்தாரு கோவாலு. நாம எதுவும் தெரியாம எதையும் பண்ணிப்புடலை. எல்லாமும் தெரிஞ்சுதான் பண்ணோம். இப்ப என்ன கெட்டுப்போச்சு? காசு பணம் சொத்து பத்து சேத்து வைக்கிலயே ஒழிய மனசுக்குப் புடுச்சத பண்ணிட்டு சந்தோசமாத்தானே பொழப்பு ஓடுது’.

‘இந்த ஊர்ல இவன் நிக்கிறான். ஐயோ பாவம். அவனுக்கு அப்படி ஆகிடுச்சு. இவனுக்கு இப்படி ஆகிடுச்சு. நாமதான்போயி காப்பாத்தனும்னு? எவனாது மெனக்கெடுறானா?’

‘இந்தா இப்ப வண்டியில போனாங்களே கருப்பன் ஊட்டுப் புள்ளைங்க. அவிங்க ஏன் நமக்கு வணக்கம் சொல்லணும்! அவிங்கள்ட்ட இல்லாததா?’

‘இப்பயும் எதுனாப் பஞ்சாயத்துனா ஏன் நாலு பேரு தேடி வர்றான்! நம்பிக்கையா! நம்பிக்கை! இவுக சொன்னா சரியா இருக்கும்ங்கற நம்பிக்கை’.

‘எல்லாத்தையும் குடிச்சா அழிச்சம். ஊர் பசங்க விளையாட இடம் இல்லை. நிலம் இருந்தா சொல்லுங்க நாங்க எல்லா உதவியும் பண்றோம்னு கலெட்டர் சொன்னப்ப இருந்த ரெண்டு ஏக்கரையும் குடுத்தாச்சு. ஊரே மெச்சிப்போச்சேயா!’

‘ஆமா. ஊர் மெச்சுனா போதுமா? இருக்கவங்களுக்குப் புரிய வேணாமா?’ என்கிறார் கோபால். ஒருவழியாகப் பிரச்சனை என்ன என்பதைப் புரிந்து கொள்கிறார் ராசு.

உடைந்து கிடந்த வேலி கருங்கல்லில் அமர்ந்திருந்த ராசு மண்வெட்டியைத் திருப்பிப் போட்டு அருகே கிடந்த குச்சியால் அதன் முனையில் ஒட்டியிருக்கும் மண்ணைச் சுத்தம் செய்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்.

தோப்பின் ஓரத்தில் நடைபாதைக்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் பழுப்பு மாட்டை முதலிலும் செவலையைப் பின்னாலும் விட்டு இடையில் நடந்துவரும் வேம்பாத்தா ‘என்ன மாமங்களா சோடி போட்டுட்டுக் கரயில ஒக்காந்து கீரப்பாத்திய கொத்துறிக போல’ என்றவாறு முந்தானையிலிருந்து செங்காயாக இருந்த கொய்யாவை நீட்டினாள்.

‘என்ன ஆத்தா’. தன் இடக்கண்ணைச் சிமிட்டியவாறே ‘நல்ல காயா இருக்கும் போலயே’ என்கிறார் ராசு. ‘கடிச்சுப் பாத்துட்டு சொல்லு மாமா’ என்கிறார் வேம்பாத்தாள். ‘இதுங்க வேற’ என முணங்குகிறார் கோபாலு.

சதுர வடிவத் தோப்பில் மூன்றில் ஒரு பங்கில் கீரையும் மற்ற இரு பங்கில் பூசணியும் இருக்கிறது. மோட்டாருடன் கூடிய கிணற்றுப் பாசனம். தேங்காய்க்கும் சேர்த்து ஆண்டிற்கு முப்பதாயிரம் குத்தகை பேசப்பட்டிருந்தது.

பூசணி இப்போதுதான் கொடியாக ஓடத் தொடங்கியிருந்தது. அதன் குருத்து பிறந்த குழந்தையின் தளிர் விரல்களை ஒத்திருந்தது. பாத்திகள் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மாசிப் பச்சையும் பொன்னாங்கன்னியும் தண்டுக் கீரையும் இருந்தது.

‘சரி கோவாலு. இப்பயும் ஒன்னுமில்லை. எல்லாத்தையும் பெரியவன்கிட்ட ஒப்படைச்சுட்டு எங்கயாச்சும் கிளம்பிடலாமா?’ என்கிறார் ராசு.

கோபாலு முறைக்க, லேசாகச் சிரித்துக்கொண்ட ராசு, தென்னையின் அடியில் அணிற்பிள்ளையால் கொரிக்கப்பட்டுக் கிடக்கும் குரும்பைகளை எடுத்து ஓரமாகப் போடுகிறார்.

‘ஆத்தா எதும் வைஞ்சுச்சா?’

கோபாலு பதில் சொல்லவில்லை.

‘அந்தப் புள்ளைக்கும் ஆசாபாசம் இருக்கத்தான செய்யும். பேரம்பேத்திகளுக்கு எதுனா செஞ்சு போடனும். அதுயிதுனு. அதுக்குப்போயி முறுக்கிட்டு நிக்கிறவன்’. மேலும் தொடர்கிறார்.

‘ஏம்பா! உனக்குத் தெரியாதா? இந்தா இந்தக் கீரையக் கட்டி எடுத்துட்டுப்போனா நெதம் எறநூறு முந்நூறு விக்கப்போகுது. அட அதவிடு. இந்தா இந்தப் பூசணி வந்துருச்சுனா மொத்தமா பிஞ்சுலயே வித்துடு. லோடுக்கு இவளோன்னு வர்ற வரும்படிய அந்தப் புள்ளை கையில குடுத்துடு. மனசுக்கு எதுனா எடுத்துக்கிட்டுப் போகுது. ஏப்பா! ஏதோ. அந்தப் புள்ளையா இருக்கவும் இத்தன வருசமா சமாளிக்கிது. மத்ததுனா, இவன் ஒரு கூரும் இல்லாதவன்னு எப்பயோ அத்துப்போட்டுட்டுப் போயிருக்கும்’.

‘நம்ப கவலைப்பட என்ன இருக்கு? சொல்லு!. கொமார வரச்சொல்லி வாரத்துக்கொருக்கா எளநி இறக்கிவிட்டுட்டு அதுல கெடக்குற காயைப் புடுங்கிப்போடச் சொல்லிட்டா சனிக்கிழமை சந்தயில வித்துக்கலாம்’. ‘போதும்’. என்றவர் நன்றாக அண்ணாந்துப் பார்த்து ‘மரமெல்லாம் களையெடுக்காமக் கெடக்குள்ள. பதமா நாலு தூத்தப் போட்டதும் எடுத்துட்டாத் தேவலாம்’ என்கிறார் ராசு.

எதுவும் பேசாமல் தரையில் அமர்ந்த கோபாலிடம் கொய்யாவை நீட்டுகிறார் ராசு. சற்றே உள்ளொடுங்கி பெண்கள் நெற்றியில் வைக்கும் கருப்பு ஸ்டிக்கர் பொட்டளவு நான்கைந்து இடங்களில் பூச்சி அடித்திருந்த காயைத் தனக்காகத் தேர்ந்துக்கொள்கிறார் கோபால்.

‘நேரத்துக்குச் சாப்டுட்டு வேலையப் பாருப்பா. சாயங்காலமா வீட்டுக்கு வர்றேன்’ என்றவாறு சுண்டுவிரல் தடிமனான தங்கச் சங்கிலி கழுத்தில் புரள, கரை வேட்டியை மடித்துக் கட்டியவாறு மடிப்புக் கலையாத வெள்ளைச் சட்டையின் பையில் வெளித் தெரியும் ரூபாய் நோட்டுக்களுடன் தனது என்பீல்ட் புல்லட்டில் அமர்ந்து கிக்கரை உதைக்கத் தொடங்குகிறார் ராசு.

00

சுஜித் லெனின்

திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவரான இவர் 2016 முதல் அச்சு மற்ரும் இணைய இதழ்களில் நுண்கதைகள் எழுதி வருகிறார். 2023 ஜனவரியில் ’பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்’ என்கிற சிறுகதை தொகுப்பு எதிர் வெளியீடு வாயிலாக வெளிவந்துள்ளது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *