கருவேலமுள்செடி நிழல் போதவில்லை. குத்துங்காலிட்டபடியே நகர்ந்தாள்  நவீனா. பளீரென வெயில். நகர்ந்து நகர்ந்து அம்மா செகது பார்வையிலிருந்து மறைந்தாள். திரும்பித் திரும்பிப் பார்த்து, கடுகடுத்து நின்ற செகது ‘ஆச்சாடீ?’ கேட்டாள்.

கள்ளிச்செடியில் சொருவியிருந்த கன்னுக்குட்டி நஞ்சுகொடியை எடுத்தாள் நவீனா. வைக்கோலினில் போன் இருந்தது. வைக்கோல் பிசிருகளை ஊதினாள். மார்பகத்தில் ஒளித்து வைத்திருந்த போன் பேட்டரி ஈரமாக இருந்தது. பேட்டரியை போனுடன் இணைத்து, வடிவேலுக்கு போன் செய்தாள்.

‘ஆச்சா.. இல்லயாடி.. எவ்வளவு நேரம் பேலுவ.’

‘வரேன் இரு, நிம்மதியா பேலக்கூட விடமாட்டுற.’

வடிவேலு சீக்கிரம் போனை எடுக்க விரும்பினாள். எடுக்கவில்லை. விடாமல் அடித்தாள். அம்மா வருகிறாளா என எட்டி எட்டிப் பார்த்தாள். அவளது உடலில் பொட்டுப் பொட்டாக வியர்வைத் துளிகள் கோர்த்தன. டூ விலரில் பின்சீட்டில் அமர்ந்து சென்றுகொண்டிருந்த வடிவேலு ஒரு வழியாக போனை எடுத்தான்.

‘செத்த இருடீ கூப்புடுறேன்.’

எடுத்ததும் கத்தி வைத்தான். வெம்மினாள். உடனே மீண்டும் அழைக்கலாமா வேண்டாமா என யோசித்தாள். போனை பாக்கெட்டில் வைத்து நிமிர்ந்தான். பாலத்தை வேகமாகக் கடந்த அரசு பேருந்தின் மீது அவனது ஸ்கூட்டி இடிக்கப் போனது. அக்கா சுபா கத்தியபடி ஹேண்ட்பாரைத் திருப்பினாள். வண்டி பாதை தவறி பாலத்திலிருந்து சறுக்கியது. செருப்பு அணியாத கால் மண்தரையினை பேத்து எடுத்தது. புழுதி கிளம்பியது. இரத்தம் வடிந்தது. காலில் ஆங்காங்கே தோல் பெயர்ந்தது. வலியை வெளியே காட்ட முடியமால் தவித்தாள் சுபா. இறக்கத்தில் கட்டுப்பாடின்றி இறங்கிய வண்டி பட்டுப்போன நொணான் மரத்தில் முட்டியது. மரம் முறிந்தது. சுபா என்ன செய்வதென்று குழம்பினாள்.  தம்பி வடிவேலைக் காணவில்லை. அங்குமிங்கும் தேடினாள். பாலத்தில் சறுக்கும்போது வண்டியிலிருந்து குதித்திருந்தான். வெள்ளைச் சட்டை முழுவதும் செம்மண். குதிக்கமாலிருந்தால் கூட இவ்வளவு அழுக்கு படிந்திருக்காது. ஆர்வக்கோளறு. எப்போதும் அவன் இப்படித்தான் என முணுமுணுத்தாள். அவளின் முட்டியில் சிராய்ப்பு. சேலையில் இரத்தம் படிந்திருந்தது. பேச தெம்பில்லமால் திணறினாள்.

‘கண்ண ரோட்டுல வச்சிருந்தியா இல்ல பரக்க பாத்துட்டு இருந்தீயா.’

‘ரோட்டதான் பாத்தேன்.’

‘இதான் ரோடா.’

‘இல்லடா, கொஞ்சம் புடியேன்’

சிரமப்பட்டு பைக்கை நிமிர்த்தாள். வடிவேலு கோபமாக மேட்டுக்குச் சென்றான். நவீனாவுக்கு போன் செய்தான். முதல் ரிங்கிலேயே எடுத்தாள்.

‘சும்மாய்க்கும் எதுக்கு அடிச்சிட்டுருக்க.?’

‘காலைலே எங்க போற.’

‘நான் எங்க போறேன், வீட்லதான் இருக்கேன்.’

‘அளக்காத, நான்தான் பாத்தேனே உன் அக்காகாரி கூட பைக்கல போனத.’

‘தெரியுதுல்ல, அப்புறம் எதுக்கு கேக்குற?’

‘சொன்னா செத்துப்போயிடுவியா, இல்ல, சொல்லக்கூடாதுன்னு ஒன் அக்கா மிரட்டி வச்சிருக்காளா?’

‘தெரியில, அவசரமா எங்கயோ போவுனும்னு சொல்லிச்சு.’

‘எப்டியும் என்கிட்ட வந்துதானே ஆவுனும் அப்பப் பேசிக்கிறேன், அது இருக்கட்டும் என் அப்பன என்னால சமாளிக்க முடியில, தாண்டு தாண்டுனு தாண்டுறான்.’

‘வந்துட்டுக் கூப்புடுறேன். மொதல போன வைய்.’

‘எப்ப கூப்புடுவ?.’

பதில் சொல்லாமல் துண்டித்தான். பன்றி அலறுடன் பேசும் சத்தம் கேட்க செகது வேகமெடுத்தாள். முட்செடிகள் கிழிப்பது கூட பொருட்மடுத்தாமல் நடந்தாள். நீண்ட முள்கொடி அவளது முந்தானையில் சிக்கியது. முந்தானையை முள்கொடியிலிருந்து இழுத்தெறியும் போது கட்டைவிரலில் முள் இறங்கியது. சுதாரித்த நவீனா படாரென எழும்போது தவறி விழுந்தாள். செகது வந்து பார்க்கும்போது குப்பிறக் கிடந்தாள்.

‘என்னடி பேச்சுச் சத்தம் கேட்டுச்சு.’

‘ஒருத்தி விழுந்துக்கிடக்கிறா அது ஒன்கண்ணுக்குத் தெரில.’

‘வேதியல போறவளே, கேட்டத்துக்குப் பதில் சொல்லுடி.’

‘நானே பன்னி முட்டி கீழ கிடக்குறேன்.’

சுற்றியும் நோட்டமிட்டாள் செகது. பன்றிகள் அலறிக்கொண்டு சென்றன. உள்ளங்கையில் வைத்திருந்த போனை இடுப்பில் முடிந்தாள் நவீனா. பாவாடையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு முன்னே போனாள். செகது காட்டை ஆராய்ந்தாள்.

சுபாவால் வண்டியை ஸ்டார்ட் பண்ண முடியவில்லை. அவளை முறைத்துக்கொண்டே செம்மண்ணைத் தட்டினான். சுபாவுக்கு போன் வந்தது. வண்டியை ஸ்டாண்டு போட்டு நிறுத்தி அங்கிருந்து நகர்ந்தாள். குசுகுசுவென போனில் பேசினாள். எதிர்முனையில் அவளது அம்மா சத்தமாகப் பேசினாள்.

‘போயாச்சா?’

‘இல்லம்மா, பக்கத்துல போயிட்டோம்.’

‘அவன்கிட்ட ஒன்னும் சொல்லுலேல?’

‘சொல்லல.’

‘சொல்லிக்கில்லி தொலச்சிடாத அப்புறம் வண்டியிலிருந்து குதிச்சிது ஓடிருவான்.’

‘நீ வய்ம்மா, போயிட்டு கூப்புடுறேன்.’

போனை வைத்து வண்டிக்கு வந்தாள். செல்ப் ஸ்டார்ட் எடுக்காததால், கிக்கரை ஓங்கி உதைத்தாள். ஒரே உதை. வண்டி ஸ்டார் ஆனது. உட்கார்ந்தவள் வடிவேலுவைப் பார்த்தாள்.

‘யாரு போன்ல, உங்க ஆயிய்யா?.’

‘ஆமா.’

‘என்ன சொல்லாதானு, சொல்லுது.’

‘ஒன்னுமில்ல, இப்ப நீ ஏறுறியா, என்ன.’

அதட்டினாள். வடிவேலு வண்டியில் ஏறிக்கொண்டான். நிறுத்தாமல் ஒட்டினாள். கோணப்பபாதை கிராமத்துக்குள் நுழைந்தனர். அதற்குமேல் சுபாக்கு வழி தெரியவில்லை. குத்துமதிப்பாக ஒரு திசையில் சென்றாள். தார்ரோடு கடந்து மண்ரோடு முடிந்து ஒத்தையடிப் பாதை வந்தது. வண்டியை நிறுத்தி கிழக்கு மேற்குப் பார்த்தாள். ஒருவரும் கண்ணுக்கு அகப்படவில்லை. வண்டியைத் திருப்ப கஷ்டமாக இருந்தது. வடிவேலு வண்டியிலிருந்து இறங்கினான்.

‘இப்ப எங்க போற?’

‘என்னடா நொய்நொய்ன்ட்டு இருக்க.’

‘சொல்லித் தொலைச்சா என்ன, குடியா முழுகிப் போவுது.’

பதில் சொல்லாமல் வண்டியை முறுக்கினாள். கடுப்பில் ஏறினான். ஊரின் மையத்துக்கு வந்தடைந்தனர். ஆலமரத்தடியில் ஒன்றிரண்டு வயதானவர்கள் மட்டுமே இருந்தனர். அவர்களும் புது ஆட்களைக் கண்டதும் மூக்கினைத் துண்டால் மூடினார்கள்.

‘அய்யா..இங்க சோனி வீடு எங்கன இருக்கு?’

‘முருங்கமரம் தாண்டி சோத்துக்கை பக்கம் திரும்புனா நாலாவது வீடு.’

‘செரிங்கய்யா.’

முருங்கைமரத்தை நோக்கிப் போனாள். வரிசையாக ஓட்டு வீடுகள். நான்காவது வீட்டை நெருங்கினர். வீட்டின் எதிரே மாட்டுத் தொழுவத்தில் நான்கைந்து பேர் கூடியிருந்தனர். சட்டையில்லாமல் இருமிக்கொண்டு நோஞ்ஜான் தோற்றத்தில் இருந்தான் பரமசிவம். அவனை சோனி முன்பிருந்த பலகையில் அமர வைத்தனர். சோனி மஞ்சள் சட்டையும், சிவப்பு வேஷ்டியும் உடுத்தியிருந்தான். கையில் முழங்கை அளவுக்கு ஊதுகுழல் வைத்திருந்தான். வறட்டு இருமலுடன் சளியினை வேட்டியில் துடைத்தான் பரமசிவம். அவனின் மனைவி வசந்தா, அவளின் அம்மா பெரியக்கா, மாமியார் மூக்காயி எல்லாரும் சோனியைக் கும்பிட்டனர். சோனி திடமான ஆளில்லை. பாக்குமரம் போலிருந்தான். வளத்தியான கைகள். நெஞ்சில் கைகூப்பிச் சுடுக்காட்டுச் சாமி சிவனை வேண்டினான். கண் மூடிக்கொண்டு வேகமாகப் பாடினான்.

‘சொல்லு, உனக்கு என்ன குற?’

கேட்டவுடன் வசந்தா கண்கள் மிளிர திக்கித் திக்கிப் பேச ஆரம்பித்தாள்.

‘போவாத ஆஸ்பத்திரி கெடயாது, வேண்டாத சாமி கெடயாது.’

‘ஓய்ய்ய்.. விசயத்த சொல்லு, எதுக்கு இப்ப மடியேந்தி நிக்கிற.’

உடலை உலுக்கிக் கத்தினான் சோனி. பயத்தில் சொல்ல தடுமாறினாள் வசந்தா. முறைத்தாள் மாமியார் மூக்காயி.

‘கல்லுமாரி இருந்த மனுசேன், அவக்கிட்ட படுத்ததுலேந்து இப்டி நெளிஞ்சு போயிட்டாரு, ஆஸ்பத்திரில வாயிக்குள்ள நொழையாத பேரா சொல்றாங்க, என்னமோ T.B யாம், எனக்கு அதுல துளிக்கூட நம்பிக்கல்ல, அந்த நாத்தமெடுத்தவதான் ஏதோ பண்ணிருக்கா’

’கலங்காதமா சிவென் எல்லாத்தையும் கண்டுருவான்.’

சிவன் பாடலை முணுமுணுத்தான் சோனி. எல்லாரும் அமைதியாக சோனியின் வாக்குகாகக் காத்திருந்தனர்.

‘வீட்டுத் தெக்க, நேத்து ஒரு உசுர ரத்தமா கிடந்துச்சா?.’

‘ஆமாம், ஆமாம்.’

பதறியடித்துச் சொன்னாள் மூக்காயி. வசந்தாவுக்கு அப்படி எதுவும் பார்த்த மாதிரி நினைவில்லை. மாமியார் சொன்னதுக்கு மறுத்தாள் வில்லங்கம் வந்துவிடுமென ஆமோதித்தாள்.

‘கொக்கராட்டான் கோவிலுல கோழி அறுத்து ஒன் வீட்டு வாசல்ல வீசிருக்கா.’

சோனி தீர்க்கமாகச் சொன்னான். மூவரும் சந்தேகித்தது சரிதான் என்று ஒருவரையொருவர் பார்த்தனர்.

‘கவலப்படாதீங்க, இப்ப எடுத்தருலாம், சிவென்கிட்ட வந்துட்டீங்கல்ல எல்லாம் சரியாடும்.’

மூவரும் நிம்மதியாக மூச்சுவிட்டனர். பரமசிவம் திகைத்தபடி பார்த்தான்.

‘டப்பா வாங்கிட்டு வந்துருக்கிங்களா?.’

‘இருக்கு.’

பெரியக்கா எடுத்து கொடுத்தாள். வாங்கினான். பாக்கெட் சைஸ்லிருந்த சிவன் படத்தின் முன்பு வைத்துப் பாடினான். பக்கத்தில் ஊதுகுழாயையும் வைத்தான். தியானத்தில் சற்று நேரம் சிவன் ஆணைக்குக் காத்திருந்தான். சோனி மேலே பார்த்தான். அனைவரும் மாட்டுத் தொழுவத்தின் கூரையைப் பார்த்தனர். திடீரெனச் சோனி சம்மனமிட்டபடியே எம்பி எம்பி ஊதுகுழலை எடுத்தான். பரமசிவம் நடுங்கினான். வசந்தா பரமசிவத்தின் தாவங்கட்டையை அழுத்தி வாயைத் திறக்க வைத்தாள். சோனி ஊதுகுழலின் ஒரு முனையைப் பரமசிவத்தின் வாயினுள் நுழைத்து மற்றொரு முனையைத் தன் வாயில் வைத்து உறிஞ்சினான். பரமசிவத்தின் வாயிலிருந்து மெதுவாக ஊதுகுழலை எடுத்து அருகிலிருந்த டப்பாவில் இழுத்த காற்றை அடைத்தான். மீண்டும் மீண்டும் அதே மாதிரி இழுத்து இழுத்து உறுஞ்சி டப்பாவில் காற்றை நிரப்பினான். பேயடித்ததுப் போல் வடிவேலு பார்த்துக்கொண்டிருந்தான். கடைசியாக ஊதுகுழலைப் பரவசிவத்தின் வாயினுள் விட்டு இழுக்கும்போது, பரமசிவத்தின் நெஞ்சு எலும்புகள் புடைத்தன. டப்பாவினை அழுத்தி மூடினான் சோனி. வசந்தாவிடம் ஒப்படைத்தான்.

‘பொழுது இறங்குறதுக்குள்ள கொலசாமி கோவில் கிழக்கல யாரு கண்ணுப்படாம புதைச்சிட்டுத் திரும்பிப் பாக்காம போயிடு’

எனக் கட்டளையிட்டான். பரமசிவம் எழ முடியாமல் சரிந்தான். அவனைத் தூக்கிக்கொண்டு கிளம்பினார்கள். கடைசிவரை அவர்கள் திரும்பிப் பார்க்காமல் சென்றனர்.

சோனியின் பார்வை வடிவேலிடம் திரும்பியது. சுபா வணக்கம் வைத்தாள். பதிலுக்குச் சிரித்தான் சோனி. சுபா இரண்டடி முன் வந்தாள். வடிவேலு சுபாவின் கையைப் பிடித்து இழுத்தான்.

‘என்ன பண்ணப் போற?’

‘மருந்து எடுக்கனும்டா.’

‘பைத்தியமா நீ, இப்பதான் கொரானா வந்துட்டு போயிருக்கு, அந்தாளு வாயில ஊதாங்கல்ல வச்சு இழுக்கறான்.’

‘டேய் அது சாமி ஊதாங்கல்லு ஒன்னும் ஆவாது.’

‘நீயெல்லாம் திருந்தமாட்ட. என்னமோ பண்ணித் தொல.’

‘வாடா.’

‘நான் வர்ல, நீ போ.’

‘தம்பி, ஒனக்குதான்டா, அம்மா எடுக்கச் சொல்லுச்சி.’

‘மூடிட்டுப் போயிடு அடிச்சிபுடுவேன்.’

‘டேய் வாடா, பிளீஸ்டா, எடுக்காம போன அம்மா கறிச்சிக்கொட்டும்.’

‘எக்காவ், மென்டல் மாரிப் பேசாத, கண்டவன் வாயிலவுட்டு எடுத்துட்டுருக்கான்.’

‘ஒன்னும் ஆவாதுடா.’

‘எக்கா, போறீயா என்ன, இந்த விளையாட்டு மயிறுலாம் என்கிட்ட ஆவாது பாத்துக்கோ.’

சுபா தடாலென வடிவேலின் காலில் விழுந்து மன்றாடினாள்.

‘தம்பி வாடா, சொன்னா கேளுடா, நவீனா வீட்ல உனக்கு மருந்து வச்சிருக்காங்க.’

‘ஒனக்கு என்ன கிறுக்கு பிடிச்சிருக்கா?’

காலை உதறினான். அவள் உடும்புபிடி பிடித்திருந்தாள். கொஞ்சினாள்.

‘அக்காக்கொசறோம் ஒரு வாட்டி வாடா, எல்லாம் எடுத்துடலாம், அப்புறம் அவ பின்னாடி இப்டித் திரிய மாட்ட.’

தேம்பித் தேம்பி அழுதாள். வடிவேலு மனம் இறங்கியது.

‘எக்காவ், சொன்னா கேளு, இப்ப எதுக்கு அழுவுற, மொதல எந்திரி.’

அவள் தோள்பட்டையைப் பிடித்துத் தூக்கினான். அவள் காலை விடுவதாக இல்லை. எப்பாடுபட்டாவது சம்மதிக்க வைக்கப் போராடினாள். வடிவேலும் முட்டிப்போட்டுக் கதறினான்.

‘வேணும்னா கொஞ்ச நாள் கழிச்சு வந்து எடுத்துக்கலாம், நானே உன்னக் கூட்டியறேன், இப்ப தயவுசெஞ்சி எந்திரி.’

அவள் உரக்க அழத் தொடங்கினாள். அவளின் பிடிவாதம் வடிவேலுக்கு நன்றாகத் தெரியும். அழுது சாதித்துவிடுவாள். இவனும் அவளிடம் அழ முயன்றான்.

‘ஏன்க்கா, இப்டி அசிங்கப்படுத்துற, நீயெல்லாம் டிகிரி படிச்சவ மாரியா பண்ணுற, எந்திரி இன்னொரு நாள் வரலாங்கிறான்ல.’

இருவரும் மாறி மாறி அழுவதைப் பார்க்க பூசாரி சோனிக்குச் சகிக்கவில்லை. எழுந்து புகையிலை போட்டான். குழந்தை அடம்பிடிப்பதுபோல் விடாது அழுதாள். வடிவேலு கலங்கினான். அம்மாவின் மீது கோபம் வந்தது. போனதும் இழுத்துப்போட்டு இரண்டு கொடுக்க வேண்டுமெனத் தோன்றியது. சுபா குத்துக்கல்லாட்டம் கிடந்தாள். அழுகையால் மனம் மாறியது. அரை மனதோடு வடிவேலு சம்மதித்தான்.

‘வந்து தொல.’

சோனியின் முன்னால் இருக்கையில் சம்மனமிட்டான். சுபா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு அருகில் அமர்ந்தாள். சோனி சிவனை வணங்க ஆரம்பித்தான். சுபா கண்களை மூடி வேண்டினாள். தியான நிலைக்குச் சென்றான் சோனி. மிகுந்த எரிச்சலுடன் வடிவேலு காணப்பட்டான். சுபா வேகமாக ஓடினாள். வண்டியின் டிக்கியிலிருந்து ஒரு டப்பாவை எடுத்து வந்து சோனியின் அருகில் வைத்தாள். சோனி ஓரக்கண்ணால் பார்த்தான். உட்கார்ந்தபடியே எம்பி எம்பி ஊதுகுழலை எடுத்தான். சுபா வடிவேலின் வாயைத் திறக்க முன்வந்தாள். அவளை முறைத்தபடி தானாக வாய் திறந்தான். ஊதுகுழலை வடிவேலு வாயினுள் புகுத்தினான். சோனி அவனது வாயில் மறுமுனையை வைத்து உறுஞ்சினான். வடிவேலுக்கு வயிறு புறட்டிக் குமட்டியது. வாந்தி வருவது போலிருந்தது. ஊதுகுழலை எடுத்ததும் பித்த வாந்தி எடுத்தான். காலையில் சாப்பிடாத வெறும்வயிறு என்பதால் சளியும், நீரும் வந்தன. சோனி வாந்தி எடுக்கக்கூடாதெனச் சுபாவிடம் சைகையில் காட்டினான். சுபா வடிவேலின் தலையை இழுத்து, ஊதுகுழலின் ஒரு முனையினைத் திணித்தாள். வடிவேலின் கண்களில் நீர் வடிந்தது. கண்கள் சிவந்தன. சுபா கண்டும் காணாமலிருந்தாள். சோனி சுருட்டை வலித்து இழுத்தது போல் இழுத்தான். வடிவேலுக்குத் தலை சுற்றியது. விட்டால் போதுமென சோனியிடம் கை கூப்பினான். சுபாவிற்குப் பேரனாந்தம் கூடியது. வடிவேலு அவனாக வணங்கவில்லை, அவன் உடம்பிலுள்ள மருந்துதான் அவனை மண்டியிட்டு வணங்க வைக்கிறது என எண்ணினாள். சோனிக்கு அடுத்த கிராக்கி யாரும் வரவில்லை. கடைசி ஆள் என்பதால் நிறுத்தி நிதானமாக உறுஞ்சினான். டப்பாவினுள் ஊதி ஊதி இழுத்த காற்றினை அடைத்தான். சிவனிடம் டப்பாவினை காட்டி சுபாவிடம் கொடுத்தான். பயபக்தியோடு வாங்கித் திரும்பிப் பார்க்காமல் வண்டியை எடுத்தாள். வடிவேலு வண்டியில் ஏறுவதை சைடு மிரரில் உறுதிப்படுத்தினாள். சர்ரென்று புறப்பட்டாள். பெரும் சாதனை செய்த நினைப்பில் மிதந்தாள். அம்மா இன்னும் பல வருடங்கள் இதைப் பற்றித்தான் பேசுவாள் எனப் பூரித்தாள். மயங்கி சுபாவின் மீது விழுந்தான் வடிவேலு. கடைப்பக்கம் நிறுத்தி சோடா வாங்கி முகத்தில் அடித்தாள். தண்ணீரும் தெளித்தாள். ஆனால் குடிக்க ஒரு சொட்டு தரவில்லை.

‘கூட கொஞ்சம் குடிச்சிக்கிறேன், கலப்பாருக்கு.’

‘செத்த இரு, கோவில் போயி குடிக்கலாம்.’

வண்டியினை எடுத்தாள். வேகம் கூடியது. பேருந்தை முந்திச் சென்றாள். அம்மாவிடம் நடந்தவற்றை உடனே சொல்லத் துடித்தாள்.

சூரியனை உற்றுப் பார்த்தாள் செகது. கண் கூசவில்லை. இன்னும் ஒரிரு மணிநேரம் கடந்தால் சூரியனைப் பார்க்க முடியாது. கண் டாக்டர் சொன்ன நாள் முதல் தினமும் பார்க்கிறாள். பார்வை சில நேரங்களில் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. பார்வை குறைபாட்டை யாரிடமும் சொல்லாமல் வாழ்கிறாள். ஊரில் ஐ கேம்ப் நடந்தபோது கண் குறைப்பாட்டைப் பற்றி டாக்டர் சொல்லிருந்தார்.

துணைக்கு அழைத்துச் சென்ற நவீனா வடிவேலுடன் அன்யோனியமாகப் பழகுவதை அன்றுதான் கண்டாள். கேம்ப் நடந்தது பள்ளிக்கூடத்தில். சீறுநீர் கழிக்க கழிப்பறை சென்றபோது அங்கு இருவரும் முத்தமிட்டு கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவர்களும் செகதுவை நேருக்கு நேராகப் பார்த்துப் பதற்றமானார்கள். நவீனாவை மிரட்டி வைத்தாள். அவள் அடங்கவில்லை. பதினெட்டு வயது முடிந்துவிட்டது. எப்போது வேண்டுமானாலும் ஓடிப் போய்விடுவாள் என அஞ்சினாள்.

செகதுவின் தம்பி வெளிநாட்டில் வேலை செய்கிறான். இந்த விடுப்பில் அவன் வரும்போது பேசி முடித்துவிட வேண்டுமென உறுதியோடு இருந்தாள். இதனை நவீனாவைத் திட்டும்போதும் அடிக்கும்போதும் அடிக்கடி சொன்னாள். நவீனா எதையும் பொருட்படுத்தாமல் அம்மாவின் அத்தனை அடக்குமுறைகளையும் மீறி தன் காதலைத் தொடர்ந்தாள்.

காயத்ரி முள்ளுக்காட்டுக்கு வந்தாள். செகதைக் கண்டாள். வெற்றுப் புன்னகையுடன் கடந்து போனாள். போன் ஒளித்து வைத்திருந்த கள்ளிச்செடி அருகே வந்தாள். அங்கே சிறு பாறையின் மீது நவீனா அமர்ந்திருந்தாள்.

‘ஏய், நீ தான் போன எடுத்துட்டு போனதா?’

‘ஆமாம்டி, எங்காயி எங்க போனாலும் கூடவே வருது.’

‘நான் கூட எதுக்கு இந்த வேகாத வெயிலுல நின்னுட்டு கிடக்கேன்னு பாத்தேன்.’

‘சத்தம் போடாத வந்துடும்.’

‘ஏன் மாட்டிக்கிட்டியா.’

‘எத்தன வாட்டி மாட்டுறது.’

இருவரும் சிரித்தார்கள். நவீனா வடிவேலுக்கு போன் அடித்தாள். அணைத்து வைக்கப்பட்டிருந்தது. சலிப்படைந்தாள்.

‘பேசிட்டீய்யா.’

‘இல்லடீ, காலைல எங்கயோ அக்காகாரி கூட்டிட்டுப் போனா. இன்னும் ஆளக் காணும்.’

‘விடுடீ, அக்காகாரிதானே வருவான், பயபடாத.’

‘இல்ல, காலையில எங்க இழுத்துட்டுப் போயிருப்பானு சந்தேகமாயிருக்கு.’

‘செரி, போனை கொடு. என் ஆளுக்கிட்ட பேசுனும்.’

‘மாத்திர போட்டிய்யாடீ.’

‘இல்லடீ, அத வாங்கிட்டு வரச்சொல்லி தான் நேத்துலிருந்து கேக்குறேன், இந்த வரேன் சொல்லுது, ஆனா இன்னும் ஆள காணும்.’

‘செரி வரேன், பேசிட்டு இங்கேயே வச்சிரு, நான் இந்த பேட்டரிய சார்ஜ் போட்டு வக்கிறேன்.’

அம்மாவைக் கடந்து போனாள் நவீனா. ‘இந்தாடி, ஏய் இந்தாடி .’ எனச் செகது கத்தியபடி அவளைப் பின்தொடர்ந்தாள்.

வன்னிமரத்தின் பூக்களை உடலில் சிரங்கு இருக்குமிடத்தில் தேய்க்கிறார் வடிவேலின் அப்பா கலியன். பூக்கள் கொட்டுகிறது. காய்கள் காய்த்து நிறைந்திருக்கிறன. உடைத்துத் தூளாக்கக் காய்களைத்  தேர்வு செய்கிறார். தேங்காய் உடைக்கும் கல்லில் காய்களை அரைக்கிறார். அரைத்த பொடியை முழங்காலில் அப்புகிறார்.  

‘பூ மட்டும் தேய், கண்டத தேய்க்காத புண்ணாயிடும்.’

அறிவுரைச் சொன்னாள் வடிவேலு அம்மா விஜயா. மரத்திலிருந்து பத்தடி தொலைவிலுள்ள அடிபைப்பில் குளித்தாள். ஈரப்புடவையுடன் மரத்தின் அருகே வந்தாள். சூலத்தில் எலுமிச்சைப் பழத்தைக் குத்தினாள். ஏரிக்கரை மேட்டில் இருக்கிறது கோவில். கண்ணுக்கு எட்டும் தொலைவில் முருகாயி ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறாள். சுபா மேடு பள்ளத்தில் கண்டபடி வண்டியைவிட்டு வருகிறாள். வண்டி சத்ததைக் கேட்டதும் மரத்தை வேகம் வேகமாக சுற்றுகிறாள் விஜயா.

வேட்டியினை உதறிக் கட்டுகிறான் கலியன். பாக்கெட்டிலில் வைத்திருந்த மூன்று நூறு ரூபாய் தாள்களைக் கையில் மடித்து வைத்துக்கொள்கிறார். வண்டியை நிறுத்திய வேகத்தில் அம்மா விஜயாவிடம் விரைந்தாள் சுபா. விஜயாவின் கைகளைப் பிடித்து அட்டிக் குதூகலித்தாள். வடிவேலின் கோபத்தை உணர்ந்த விஜயா, சுபாவின் கையை உதறிவிட்டு மரத்தைச் சுற்றினாள். கலியன் ரூபாய் தாள்களை எண்ணி வடிவேலிடம் கொடுத்தார். வாங்கி சட்டையில் முடிந்துகொண்டு வண்டியை எடுத்துப் புறப்புட்டான்.

‘என்னத்துக்கு அவனுக்கு காச கொடுக்குற, கஷ்டப்பட்டு அலைஞ்சது நான், காசு மட்டும் அவனுக்கா?.’

‘கம்முனு இரும்மா, எல்லாம் ஒரு காரணத்துக்குத்தான் கொடுத்தேன்.’

கலியனும் மரத்தைச் சுற்றினான். சுபா வேண்டாவெறுப்பாக நின்றாள்.

‘இல்ல பாப்பா, நம்ம பண்ண காரியத்துக்கு இந்தக் காசும் கொடுக்காம இருந்தா இன்னாரம் பெரிய அழிச்சாட்டியம் பண்ணிருப்பான், என்ன ஒரு பாட்டில் காசு, அவ்வளவுதான் அவேன்.’

சுபாவைச் சமாதானப்படுத்தும் விதமாக சொன்னான் கலியன். சுபா சோனிக் கொடுத்த டப்பாவை அவரிடம் நீட்டினாள். அவர் வாங்கி சூலத்தின் அடியில் வைத்தார்.

பலமான காற்று வண்டியை ஒரு பக்கமாகத் தள்ளியது. ஏரிக்கரை வரப்பிலே யோசித்துக்கொண்டே போனான். போனை எடுத்துப் பார்த்தான் சார்ஜ் இல்லாமலிருந்தது. ஒயின் ஷாப்பை வந்தடைந்தான். பூட்டியிருந்தது. கடைக்கு எதிரே நூர்ஜம்மா சாக்குப் பையில் சரக்குடன் இருந்தாள். அவளிடம் அப்பா கொடுத்தக் காசைக் கொடுத்தான். உருண்டையான பாட்டிலுடன், கிளாஸ், மாங்காய்க் கீத்தும் மிளகாய் தூளும் உப்பும் தந்தாள்.

அவளுடன் பேச்சு கொடுக்க விருப்பமில்லாமல் சென்றான். நூர்ஜம்மா அவனை உற்றுப் பார்த்தாள். வயற்காட்டை ஒட்டிய தண்ணீர்த் தொட்டி மேல் அமர்ந்தான். கிளாஸைத் தண்ணீர் தொட்டியில் அலசினான். பூஞ்சைகள் நிரம்பியிருந்தன. அலசிய கிளாஸில் பூஞ்சை ஒட்டியது. மீண்டும் கழுவினான். பச்சை பச்சையான திட்டுகள். நூர்ஜம்மாவிடம் சிறிய வாட்டர் பாக்கெட்டை வாங்கினான். கிளாஸில் தண்ணீரைப் பீச்சி அடித்தான். கிளாஸ் வெளீரென மாறியது. பாதி சரக்கை கிளாஸில் உற்றினான். வெறும் மிளகாய் தூளை நக்கினான். ஏதோ மறந்தவன் போல நூர்ஜம்மாவை நோக்கி விரைந்தான்.

‘பூஸ்ட்னு வாய் தொறந்து கேட்டாதான் கொடுப்பீயா? ஆளா பாத்தா கொடுக்கனும் தெரியாதா.’

‘மூஞ்ச திருப்பிக்கிட்டு போனா, வழியான்னு வருவாங்களா, புடிடா மயிராண்டி.’

பூஸ்ட் பாக்கெட்டை விட்டெறிந்தாள். பிடித்தான். கிளாஸ் காற்றில் ஆடியது. ஓடினான். கீழே விழப் போனது. கிளாஸைத் திட்டிலிருந்து கபீரென தூக்கினான். மடமடவென குடித்தான். தொண்டை கவ்வியது. பூஸ்ட் பாக்கெட்டைப் பிரித்து வாயில் கொட்டினான். இதமாக இருந்தது. மீதமிருந்த சரக்கைத் தொட்டி கீழே வைத்தான். நூர்ஜம்மாவிடம் சென்று போனை ஜார்ஜ் போட சொன்னான். அவளும் போனாள். சாக்குப்பையின் அருகே குந்தினான். ஒத்த பெடலை அழுத்திக்கொண்டு வந்தான் மாக்கான்.

‘எங்கய்யா, நூர்ஜம்மா?.’

‘வீடு வரைக்கும் போயிருக்கு, என்ன?.’

‘இல்ல, பத்து ரூவா கம்மியாருக்கு. ஒன்னு கொடே.’

‘எப்ப நமக்கு அது சரிப்பட்டு வராது, செத்த பொறு வந்துடும்.’

‘கொடுயா, நான் சொல்லிக்கிறேன்.’

‘பறக்காத வரும், நீயே பேசிக்கோ.’

‘கொடு பங்காளி, நான் சொல்லிக்கிறேன்ல.’

உறவு வைத்தது அழைத்தவுடன் ஒரு பாட்டிலை எடுத்துக் கொடுத்தான். அவனும் தண்ணீர்த் தொட்டி பக்கம் சென்றான்.

‘பங்காளி, கல்லுக்கிட்ட பாட்டில சாச்சி வச்சிருக்கேன், தள்ளி விட்டுறாதா.’

‘செரியா.’

மாக்கானைக் கண்டு நூர்ஜம்மா எட்டிப் போட்டு நடந்து வந்தாள்.

‘டேய், காசு கரெட்டா கொடுத்தானா?.’

‘பத்து ரூவா பாக்கி வச்சிருக்கான்.’

‘அவன்கிட்ட இதே ரோதனையா போச்சு. நீ என்ன மயிதுக்கு கொடுத்த?’

‘சொல்லிக்கிறேன் சொன்னாப்பால.’

‘ஒனக்கு உதவ போயி, பத்து ரூவா போச்சு. எடத்த காலி பண்ணு நீ, கிளம்பு.’

விரட்டியடித்தாள். அமைதியாகப் போனான் வடிவேலு. மாக்கான் முதல் ரவுண்டு அடித்துக்கொண்டிருந்தான். வடிவேலின் மாங்காயை எடுத்துச் சாப்பிட்டான்.

‘பங்காளி, ஒரு துண்டு மாங்கா எடுத்துக்கிட்டேன்.’

‘தின்னுயா, இதுல என்ன கிடக்கு.’

செருப்பைத் தரையில் போட்டு அதன்மேல் குந்தினான் வடிவேலு. மாக்கான் புகையிலையை வாயினுள் போட்டு நாக்கால் இடப்பக்கமாகக் குவித்தான். பிசிரு புகையிலையைத் துப்பினான். வடிவேலுக்கு வேண்டுமா எனக் கேட்டான். வேண்டாமென வடிவேலு மீதி சரக்கை கிளாஸில் ஊற்றினான். மடமடவெனக் குடித்து பூஸ்ட்டை முழுங்கினான்.

‘யோவ், மெல்ல கவுரு, எதுக்கு இந்த அவுதிப்படுற.’

‘பொறுமையா குடிச்சா எகித்துட்டு வருது பங்காளி.’

கரகரத்தக் குரலில் சொன்னான் வடிவேலு.

‘யோவ், நீ வச்ச பாக்கிக்கு, என்ட்ட நூர்ஜம்மா எகிருது.’

‘விடுயா, அது எப்பவும் அப்டிதான்.’

‘தேவ இல்லாம பேச்சு வாங்க வேண்டிருக்கு உன்னால.’

‘அடுத்தவாட்டி வரப்ப சேத்துக் கொடுத்துறேன், நீ எங்க போன காலங்காத்தால?’

‘தொக்கம் எடுக்கப் போனோம்.’

‘யாருக்கு?’

‘எனக்குத்தான்.’

‘நல்லதாப் போச்சு பங்காளி, நானே சொல்லனும் இருந்தேன்ப்பா.’

‘என்னான்னு.’

‘ஏய், எனக்கு எல்லாம் தெரியும்ப்பா.’

‘என்ன தெரியும்.’

‘அட தெரியுங்கிறேன்ல.’

‘அதான் என்ன தெரியுங்கிறேன்.’

‘நீ செகது மவக்கூட முள்ளு காட்டுல ஒதுங்கிறதுதான்.’

‘ஒனக்கு யாருய்யா சொன்னா?’

‘யாரு சொல்லனும், நானே பாத்தேன், நீ போனத’

‘எப்பப் பாத்த?’

‘அது கிடக்கட்டும், தொக்கம் எடுத்துட்டியா?’

‘எடுத்தாச்சி.’

‘செரி, இனியாவது ஒழுங்கா இருப்பீயானு பாப்போம்.’

பாட்டிலை வாய்க்குள் தலைகீழாக கவிழ்த்தான் மாக்கான். யோசித்து யோசித்து மண்டை வெடித்துவிடும் போலிருந்தது வடிவேலுக்கு.

‘பொடி வக்காம, சொல்லு பங்காளி.’

‘செகது மவ, சரியில்லய்யா.’

‘எப்டி சொல்லுற?.’

‘கரையான் மவன் கூட சுத்துச்சிய்யா.’

‘யோவ், அப்ப அவ வயசுக்கே வருல.’

‘எது, போன மாசம் வரைக்குமா வயசுக்கு வராம இருந்துச்சி? போன மாசம் கரையான் மவன் கூட போனத பாத்தேன்’

‘நெசமா?’

‘நாங்க சொன்னா ஒன் புத்திக்கு ஏறாது அவ மயக்கி போட்டுருக்கா, அவ வீட்டுல வச்ச மருந்து அப்டி, அத பெரியாயி எடுக்கனும்னு சொல்லி அழுதுச்சி, நான்தான் கோணபாதை சோனி நம்பரு கொடுத்தேன், எல்லாம் நல்லபடியா நடந்தா செரிதான். பங்காளி, பெரியப்பேன் சொல்றது கேளு, நான்தான் ஆதரவில்லாம இப்டி திரியிறேன், நீயாவது நல்ல புத்தியோட பொழெ.’

மனதில் உள்ளதை மொத்தமும் கொட்டித் தீர்த்தது போல் சொன்னான் மாக்கான். குடித்த சரக்கின் போதை தெளிந்தது போலிருந்தது வடிவேலுக்கு. குழப்பத்துடன் கிளம்பினான். அவன் வண்டி எடுப்பதைப் பார்த்த நூர்ஜம்மா.

‘எலே, போன் வேண்டாமா?.’

‘எடுத்துட்டு வா.’

‘நான் வர வரைக்கும் ஒன்னும் விக்காத, நான் வந்து வித்துக்குறேன்.’

புடவையைத் தூக்கிப்பிடித்து நடந்தாள். நவீனா மேல் சந்தேகம் வலுத்தது. வீட்டில் நிறைய பொய் பேசுவாள். அதேமாதிரி தன்னிடம் சொல்லிருப்பாளோ? பல விசயங்களை மறைத்திருப்பாளோ? சந்தேகப்பட்டான். மாக்கான் சொன்னதில் உண்மைகள் இருப்பதாகத் தோன்றியது. ஒருநாள் கரையான் மகனுடன் போனில் பேசியதாக நவீனாவே சொல்லியிருக்கிறாள். கவனத்தைச் சிதறிவிட்ட வடிவேலிடம் நூர்ஜம்மா.

‘எடுப்பட்ட பயலே, இந்தா புடி, என்னத்த யோசிச்சிட்டுக் கிடக்க.’

அவளிடம் பேசாமல் போனை வாங்கிக்கொண்டு வண்டியை எடுத்தான். போனை எடுத்துப் பார்த்தான். ஜார்ஜ் அறுபது சதவீதமிருந்தது. கோயிலுக்குப் போகும்வரை நவீனா அழைக்கவில்லையென்றால், மாக்கானும் குடும்பமும் சொன்னது போல் அவள் மருந்து வைத்திருப்பது உறுதி. அடிக்கடி போனை எடுத்துப் பார்த்தான். நவீனாவிடமிருந்து மெசெஜ், கால் எதுவும் வரவில்லை. கோயிலை அடைந்தான்.

நெடுஞ்சாணாகச் சாமியை விழுந்து கும்பிட்டான். விஜயாவுக்குப் பெருமகிழ்ச்சி உண்டானது. அவளும் விழுந்தாள். சுபாவும், கலியனும் நின்றபடி வணங்கினார்கள். வடிவேலுக்கு மேலும் ரூபாய் நோட்டுகளை எண்ணாமல் அள்ளிக் கொடுத்தார் கலியன். கருங்கல்லிருந்து மஞ்சள் எடுத்து வடிவேலு நெற்றியில் இட்டாள் சுபா. கலியன் அருவாளை வைத்துக் குழி தோண்டினார். விஜயா டப்பாவினைப் புதைத்தாள். நால்வரும் திரும்பிப் பார்க்காமல் சென்றனர்.

வடிவேலு நூர்ஜம்மாவிடம் விரைந்தான். பாட்டில் வாங்கிச் சடுதியில் குடித்தான். மாக்கானுக்கு போன் அடித்தான்.

‘பங்காளி, சட்டுனு வடக்கா வா, ஒனக்கு வேண்டியது எல்லாம் வாங்கிட்டேன்.’

‘இருயா, அடிவாரம் வரைக்கு வந்துருக்கேன், பத்து நிமிசத்துல வரேன்.’

‘யோவ் சீக்கிரம் வா, அப்புறம் கடுப்பாயிடுவேன்.’

‘வரேன்யா.’

நூர்ஜம்மாவிடம் மொத்த பணத்தையும் காட்டினான்.

‘சாக்க வச்சிட்டு கிளம்பு, மொத்தம் எத்தன இருக்கு?’

‘என்னடா மாப்பா.’

‘ஏய் எவ்வளவுனு சொல்லிட்டுப் கிளம்புற வழிய பாரு.’

‘போடா செவுனிலே விட்டுருவேன்.’

‘இந்தா.’

அவளது கையில் திணித்தான்.

‘டேய், இந்த இஷ்காரு பிடிச்ச வேலயிலாம் வேண்டாம், பணத்த ஒழுங்கா எண்ணி பாக்கெட்ல வச்சிக்கோ, அப்புறம் கொடுத்த காச காணும்னு நைட்டு வீட்டுக் கதவ தட்டுவ.’

வடிவேலைத் தள்ளிவிட்டாள்.

‘என் பங்காளி மாக்கான் வரான், அவன்கிட்ட கொடு.’

‘அவனே, வீட்ட கூட்டி கொடுத்த பய, ஒன்னுக்கு ரெண்டா முடிச்சு போடுறவன், போயும் போயும் அவன்கிட்ட கொடுக்க சொல்லுற பாரு, கிளம்பு இல்லனா நவீனாவுக்குச் சொல்லி விட்டுருவேன்.’

‘அவளே வேண்டான்னுதான் இருக்கேன், அவள கூப்புடுவீயா, கூப்புடு, வருட்டும், வச்சு தெச்சிவுடுறேன்.’

‘நல்ல பேசுவடா, நல்ல அவகூட மேஞ்சிட்டு இப்ப அவுத்துவிடுவா.’

‘அவ மட்டும் யோக்கியமா?’

‘நீ யோக்கியமானவனா, அவளப் பேச வந்துட்டு, மூடிட்டு போடா.’

‘இரு மாக்கான் வரான், எல்லாத்தயும் புட்டு புட்டு வப்பான்.’

‘அவன் பேச்ச கேட்டுத் திரிஞ்ச அவன மாரித்தான் ஊரு மேயிவ.’

‘அப்புறம் ஒன் பேச்ச கேக்க சொல்லுருய்யா.’

‘டேய், நீ மொத கிளம்புற வழிய பாரு.’

‘அவ வீட்ல மருந்து வச்சிருக்கானுங்க, ஒனக்குத் தெரியுமா.’

‘இந்த மூஞ்சிக்கு மருந்து வேற வப்பாங்க.’

‘எல்லாத்தயும் எடுத்தாச்சி, துடி உள்ள சாமிகிட்ட வேண்டியாச்சி, இனி அவ நினைச்சாலும் என்கிட்ட நெருங்க விடாது சாமி.’

‘செரி செரி, பாப்போம்.’

‘அவளுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குறல, கடசியா ஒன்னு கேக்குறேன்.’

‘கேளு.’

‘நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் சொல்லு.’

‘கேட்டுத் தொல.’

‘என்னை தவிர, அவ வேற எவன் கூடயும் போவுல.’

‘அவ இதுக்குள நொழஞ்சிக்கோ, எவன் எவனுது வருதுன்னு பாரு. வேற வேல மயிரே இல்ல.’

‘அவ வண்டவாளம் எல்லாம் தெரிஞ்சிருச்சு.’

‘வடிவேலு சொன்னா கேளு போயிடு.’

‘இப்ப அவ என் கூட மட்டும்தான் படுக்குறாளா? அத மட்டும் சொல்லு. நான் போறேன்.’

‘படுக்குறப்ப தெரியலியா, ஆசப்பட்டவன்கூட படுக்குறாளா? ஆசைக்குப் படுக்குறாளானு, அதுக்கூட வித்தியாசம் தெரிலன்னா நீ என்னடா ஆம்பள.’

வாயடைத்துப் போனான் வடிவேலு. மாக்கானுக்குத் தொடர்ந்து போன் அடித்தான். அவன் எடுக்கவில்லை.

‘அது எப்டி தெரியும்.’

‘உங்காயிகிட்ட கேளு சொல்லுவா.’

இனிமேல் கேள்வி கேட்டால் குதறிவிடுவாள் நூர்ஜம்மா. மாக்கான் தட்டுத் தடுமாறி நடந்து வந்தான்.

‘ஏய் பங்காளி, நில்லுய்யா, வரதுக்குள்ள, அவ்வளவு அரெஜன்ட்டு. தொள்ளாயிரம்வாட்டி கூப்புடுவ.’

மாக்கான் கூப்பிடுவதைக் காதில் வாங்காமல் வண்டியை எடுத்துப் புறப்பட்டான். கோவிலுக்குச் சென்றான். சில நேரம் அமைதியாகச் சாமியை உற்று நோக்கினான். ஏரிக்கரையில் மீன் பிடிக்கும் சிறுவர்களைப் பார்த்தான். பொழுது சாயும் வரை வண்டியிலே ஊர் சுற்றினான். சுபா நம்பரிலிருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது. எடுத்துப் பேசவில்லை. நவீனா நம்பரை நினைவு படுத்திப் பார்த்தான். ஞாபகமில்லை. நவீனா வடிவேலின் நம்பரை மனப்பாடம் செய்ததைப் போல் ஒப்பிப்பாள். கலியனிடமிருந்து போன் வந்தது. எடுத்தான்.

‘தம்பி எங்கய்யா இருக்க?’

‘ஏன்?’

‘காலையிலிருந்து இன்னும் சாப்புடுலய்யாம்ல?.’

‘என்ன சோறு.’

‘கறி எடுத்துருக்கு வாய்யா.’

‘வரேன்.’

போனை வைத்தான். நவீனா நம்பருக்கு அழைத்தான். ஸ்விட்ச் ஆப் என வந்தது. விரக்தியில் வண்டியைக் கிளப்பினான். வேகமாக வீட்டுக்கு வந்து சேர்ந்தான். தெரு சத்தமின்றி அமைதியை உள்வாங்கிருந்தது. நவீனாவின் சிரிப்பொலி கேட்கவில்லை. பக்கத்துத் தெருவிலுள்ள குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருப்பாள். அவளது பேச்சும் சிரிப்புச் சத்தமும் தெருவில் எப்போதும் நிறைந்திருக்கும். விஜயா வாசல் கதவைத் திறந்தாள். வாசல் படியேறினான். மனம் ஒப்பவில்லை. மாடிப்படி பக்கம் சென்றான். விஜயாவைப் பார்த்து

‘சோத்த மாடிக்கு எடுத்துட்டுவா.’

எனச் சத்தமிட்டுச் சொன்னான். மொட்டைமாடியிலிருந்து தெருவினைப் பார்த்தான். விஜயா சாப்பாட்டை எடுத்து வந்தாள். இலையை விரித்துப் போட்டாள். தண்ணீர்ச் சொம்பை நீட்டினாள். கை கழுவினான். மகனுக்குப் பக்குவமாகப் பரிமாறினாள். சாப்பாட்டை அள்ளி அள்ளி உண்டான்.

வடிவேலு அளவுக்கு அதிகமாகக் குடித்திருப்பதை அறிந்தும் அதட்ட முடியாமல் இருந்தாள். பதிலுக்கு ஏடாகூடமாகப் பேசுவான். அடிக்க வருவான். தலைக்கு மேல் வளர்ந்துவிட்டபின் எதுவும் கேட்க முடியவில்லை. சாப்பிட்டு முடித்தான். விஜயா இலையினை மடித்து ரோட்டில் எறிந்தாள். நாய் இழுத்துச் சென்றது. கை கழுவினான். பாத்திரத்திலிருந்த தண்ணீரைச் சொம்பில் தளும்ப தளும்ப நிறைத்துச் சென்றாள். சுபா பாய் கொண்டு வந்து விரித்தாள். போனில் முழ்கியிருந்தான். நவீனா அனுப்பியிருந்த பழைய குறுஞ்செய்திகளைப் படித்துக்கொண்டிருந்தான்.

சுபா சென்றவுடன் படுத்தான். தூங்கினான். கீழே வீட்டிலும் அனைவரும் உறங்கினார்கள். டி.வி மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. தூக்கத்தலிருந்து எழுந்து போனைப் பார்த்தான். நவீனா அழைப்புக்காகக் காத்திருந்தான். அவளிடம் பேச வேண்டுமெனத் தோன்றியது. வீட்டு ஆட்கள் சொன்னது போல் அவள் வீட்டில் மருந்து வைத்திருக்க வாய்ப்பு உண்டு. காரணம் சாதி மட்டும்தான். பலவிதமாகச் சிந்தித்தான். அவனை அறியாமலேயே தூங்கிப்போனான். நடுசாமத்தை எட்டியதும் நாய்களும் உறங்கிப் போயின. தட்டான் சிறகடித்துப் பறக்கும் சத்தம் எதிரொலித்தது.

வடிவேலின் போன் அடித்தது. அசந்து தூங்கியவன் எடுக்கவில்லை. மீண்டும் ஒலித்தது. அரைத் தூக்கத்தில் எடுத்தான். மறுமுனையில் நவீனா.

‘எரும, தூங்கிட்டீயா?’

‘ம்ம்..’

‘ஏன் மாடில படுத்துருக்க?’

‘நீ வருவேன்னு தான்.’

‘எரும, எப்ப பாரு அதிலே இரு.’

‘சொல்லு.’

‘எங்க சுத்திட்டு வர.’

‘மாக்கான் வீட்லதான் இருந்தேன்.’

‘அவேன்கூட சுத்தாத.’

‘ஏன்?.’

‘அவேன் பொம்பளைப் பொறுக்கி, ஒதுங்கும்போது ஒளிஞ்சு நின்னு பாப்பான்.’

‘சும்மா கதவிடாத.’

‘ஏய், உண்மையாதான், எங் கையாலே அடிவாங்கியிருக்கான்.’

‘ஏன் நீ காலைலிருந்து போன் பண்ணல.’

‘போன காயத்ரி தூக்கிட்டு போயிட்டா.’

‘செரி ஒன்னு கேப்பேன் உண்மய சொல்லனும்.’

‘கேளு.’

‘நெஜமா என்ன மட்டும்தான் லவ் பண்றியா?’

‘ஏன் ஒனக்கு திடீர்ன்னு இந்த கேள்வி.’

‘சொல்லு.’

‘ஆமாம்.’

‘எப்படி நம்புறது.’

‘அதுக்கு என்ன பண்ணும்.’

‘இப்பவே எங்க மொட்டைமாடிக்கு வா.’

‘என்ன வெளையாடுறீயா, தெருவில யாராச்சும் பாத்துடுவாங்க.’

‘அப்ப, நீ என்ன லவ் பண்ணல.’

‘மடையன்மாரி பேசாத.’

‘நான் ஒனக்கு வேணும்னா, இப்ப வா, இல்லாட்டி இதோட போன வச்சிட்டுப் போ.’எனத் துண்டித்தான்.

உடனே போனை அணைத்து வைத்தான். சாமி இருக்கிறது, இனி நவீனா தலைகீழாக நின்றாலும், அவனை நெருங்க முடியாது என எண்ணினான். அசந்து தூங்கினான். விஜயா சிறுநீர் கழிக்க வீட்டின் எதிர் சாக்காடைக்கு வந்தாள். நவீனா வீடு அடைத்திருக்கிறதா எனப் பார்த்தாள். அடைத்திருந்தது. நிம்மதியாகச் சிறுநீர் கழித்தாள். கால் கழுவிவிட்டு வீட்டை அடைத்தாள். சில நேரம் கடந்து மாடிப்படி கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது.

பதறியடித்து எழுந்த வடிவேலு. எட்டிப் பார்த்தான். பாதங்களை மெல்ல ஊன்றிக் கொலுசு சத்தம் எழாதபடி வந்தாள் நவீனா. துள்ளிக்குதித்து ஓடினான். மனமும்,உடம்பும் வெடவெடத்தது. தெருவில் யார் வீட்டிலாவது லைட் எரிகிறதா எனப் பார்த்தான். கும்மிருட்டு. நவீனா வடிவேலை இருட்டில் கண்டும் மகிழ்ந்தாள். குனிந்து வரச் சொல்லி சைகை செய்தான். வடிவேலு முட்டிப்போட்டு நகர்ந்தான். நவீனா தைரியமாக நடந்தாள். கையைப் பிடித்து இழுத்தான். பாயில் சரிந்தாள்.

‘எதுக்குடீ வந்த?’

‘எரும, நீதானே வரச்சொன்ன.’

‘அதுக்கு?’

‘செரி, நான் போறேன்.’

‘வேண்டாம் இரு.’

படுக்கையில் சாய்த்தான். சிரித்தவாறு கிடந்தாள். பதட்டம் குறைந்தது வடிவேலுக்கு. அவள்மீது ஆர்வம் கூடியது. அவளை அணைத்தான். மறுக்கவில்லை. அவளும் அணைத்தாள். முத்தமிட்டனர். கண்களை மூடிக்கொண்டாள். குளிர்ந்தது. பனிக்காற்றும் பலமாக வீசியது. ஆடைகளை கலைய ஆரம்பித்தான்.

‘எரும, எனக்கு பயமா இருக்கு.’

‘எதுக்கு.’

‘இல்ல,வேண்டாம்.’

‘கம்முனு இரு.’

‘வேண்டாங்கிறன்ல.’

‘என்னடீ ஃபர்ஸ்ட்டு வாட்டி மாரி பயப்படுறா.’

‘இல்ல, டைம் இன்னும் வருல, அதான் பயமாருக்கு.’

‘என்ன சொல்லுற.’

‘ஆமாம், வயிறு வெளிய தள்ளுச்சின்னா அவ்வளவுதான்.’

‘பாத்துக்லாம்.’

‘நீ சொல்லிட்டு ஒன் வீட்டு பேச்ச கேட்டு சுத்துவா, நான் என்ன பண்ண?’

‘நான் பாத்துக்குகிறேனு சொல்றேன்ல.’

‘எனக்குத்தான் பதினெட்டு வயசு முடிஞ்ச்சுருச்சுல. வா ஓடிப் போலாம்.’

‘போயிட்டா எல்லாம் சரியாயிடுமா.’

‘வர வர எங்கப்பன் ரொம்ப அடிக்கிறான்.’

‘அவன் கிடக்கிறான்.’

‘அந்தாளு இப்ப வீட்டுல இல்ல, அதான் தைரியாம வந்தேன்.’

‘எங்க போயிட்டான்?.’

‘அந்தாளு கோணப்பாதைக்குப் போயிருக்காரு.’

‘இன்னுமா வருல.’

‘வரல,அந்த ஊர அடைச்சுப்புட்டாங்களா கொரானால. எங்கப்பன் வர முடியாம மாட்டிக்கிட்டாரு’

‘காட்டுல பூந்து வர வேண்டிதானே.’

‘அப்படிதான் வந்தாராமாம் வர வழியில அந்தாளு ப்ரெண்டு பரமசிவம் பாத்துட்டாரு போல, அந்தாளு வீட்டுலே குடிக்க உக்காந்துட்டாரு.’

‘செரி.’

‘என்ன, செரி செரி, போவும் போதுகூட எனக்கு அந்த அடி, குளவிக்கல்லத் தூக்கி போட வந்துட்டாரு, எங்கம்மாதான் தடுத்துச்சி.’

‘என்னவாம் அவனுக்கு.’

‘ஒன்னக் கட்டிக்கிட்டா செத்துடுவேனு மிரட்டுறான்.’

‘விடு சாவுட்டும்.’

‘போ.’

‘அப்புறமா நம்ம சாவுறதா, அந்தக் கதயெல்லாம் நம்மகிட்ட நடக்காது, அவனப் போய் சாவ சொல்லு.’

‘செத்துட்டானா.’

‘போவுட்டும்.’

கன்னத்தில் அடித்தாள். வடிவேல் அவளின் கையைக் கடித்தான். சினுங்களும் கொஞ்சலுமாக வெற்றுடம்போடு ஒட்டிக்கொண்டார்கள். நூர்ஜம்மா சொன்னது புரிந்தது வடிவேலுக்கு.

000

சதீஷ் கிரா

எனது சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள துறையூர். கோயம்புத்தூரில் பொறியியல் படித்தேன். தற்போது சினிமாத் துறையில் பணியாற்றி வருகிறேன். இலக்கிய வாசிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *