-சிவபிரசாத்

000

இறுதி யுத்தத்திற்குப் பிறகு வெளியான ஈழ நாவல்களில் இயக்கத்தின் செயல்பாடுகளைக் குறித்து விரிவாக எழுதும் போக்கைக் காண முடிகின்றது. இதை இரண்டு விதங்களில் புரிந்துக் கொள்ளலாம். ஒன்று இறுக்கம் தளர்ந்த சுதந்திரத்தைப் படைப்பாளர்கள் இப்போது உணரத் தொடங்கி இருக்கலாம் அல்லது வீழ்ச்சிக்கானக் காரணங்களைத் தங்கள் படைப்புகளின் வாயிலாக ஆராய முற்பட்டிருக்கலாம். இதில் ”நகுலாத்தை” இரண்டாவது வகை. மற்ற நாவல்களிலிருந்து இது வேறுபடும் புள்ளி வீழ்ச்சியையும் விமர்சனத்தையும் மட்டும் பேசாமல் தங்கள் தொன்மம் சார்ந்த கதைகளைச் சொல்லி இருப்பது இந்த நாவலுக்கு புதிய பரிமாணத்தைக் கொடுக்கிறது.

வன்னி காட்டின் அடிவாரத்தில் அமைந்த கிராமத்தின் வாழ்வை, நம்பிக்கையை, வீழ்ச்சியை அந்த மண்ணிற்கே உரித்தான மொழியில் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. கீரிக்குளம், கீரிப்பிள்ளை மேடு, ஆத்தை கோயில் என்று அந்த கிராமத்தின் அடையாளங்கள் தொன்மக் கதைகளால் சூழப்பட்டவை. திசைகளுக்கு ஒரு தெய்வம் என்ற கணக்கில் கிழக்கே மூத்த கன்னி தெய்வம் நகுலாத்தை, மேற்கே காக்கைவதனன், வடக்கே தச்சுக்காளி, தெற்கே சின்னாசி வைரவர் என்று நான்கு திசைகளுக்கும் நான்கு குறுதெய்வங்கள் கிராமத்தைக் காப்பதாக மக்களின் நம்பிக்கை.

கீரிபிள்ளை மேட்டிற்கு பாம்புகள் வருவதில்லை, இது வரை கிராமத்து மக்களை கொத்தியதில்லை என்பதில் காவல் தெய்வமான நகுலாத்தையின் அனுகிரகம் இருக்கிறது. கீரிக்குளத்தைக் கட்டி, காவல் தெய்வமாக மாறிய சொத்தி முனியின் கீர்த்தி தான் அந்த குளத்தைக் காப்பதாய் நம்பிக்கை. இந்த குளத்தைப் பற்றி நிறையக் கதைகள் சொல்லப்படுகிறது. இதில் அம்மான் கண் கதை, வெள்ளைக்காரர்கள் குளத்தை உடைத்த கதை சிறப்பானவை. இந்த தொன்மக் கதைகள் இந்த நாவலை வேறுபடுத்திக் காட்டுகிறது. 

ஆத்தை கோயில் பூசாரியான ஆச்சி மரபான நம்பிக்கைகளை முன்னெடுப்பவளாகவும் அந்த கிராமத்தை வழிநடத்துபவளாகவும் இருக்கிறாள். பேயோட்டுவது, விஷக்கடிக்கும் பலவித வியாதிகளுக்கும் மருந்தளிப்பது, மக்களின் அச்சம், கவலை, குழப்பத்திற்கு அருள்வாக்குச் சொல்வது என்று கிராமத்தின் தலைவியைப் போல இருக்கிறாள். 

அச்சியின் கணவன் பெரியப்பு இறப்பிற்குப் பிறகு மகன் சண்முகம், மருமகள் யோகம், பேரப்பிள்ளைகள் தாமரை, அட்சயன், அனு ஆகியோரே அவளின் உலகம். ஆச்சிக்கு அவளின் தம்பி அறுமர் மீதும் அவரின் மகள் (கிளியன்ரி) மீதும் பிரியம் அதிகம். ஆத்தை கோவிலின் பூசாரித்தனம் வழிவழியாக வாரிசுகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. தனக்குப் பிறகு அறுமரின் மகள் தான் பூசாரியாவாள் என ஆச்சி நம்பிக்கையோடு இருக்கிறாள். ஆனால் அவளோ தன்னுடைய தீராத வியாதியின் பொருட்டு மந்திரவாதியின் சீடராக பாதை மாறுகிறாள். அதில் ஏமாற்றமடைந்த ஆச்சி அவளோடு பேசுவதையே நிறுத்தி விடுகிறாள். ஆச்சியின் கடைசி நம்பிக்கை தாமரை தான். அவளிடம் பிரியத்தோடு இருக்கிறாள்.

பள்ளிப் படிப்பை இன்னும் முடிக்காத தாமரையை இயக்கம் வீட்டிற்கு ஒருவர் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்று கட்டாயமாகப் பிடித்துச் செல்கிறது. தாமரையை மீட்க ஆச்சியும் அவளின் குடும்பமும் போராடுகிறது. தாமரையின் எதிர்காலம் என்ன ஆனது? என்பதான கேள்வியை நோக்கி நாவல் பயணிக்கிறது.

ஆச்சியின் கதை நாவலின் ஒரு மெல்லிய சரடு தான். இதைப் போல அந்த கிராமத்தில் வசிக்கும் பலரின் கதைகள் சொல்லப்பட்டிருக்கிறது. தாமரையின் உயிர் தோழியான வெரினிக்காவின் கதை, அவளின் அம்மா நிர்மாலா, அப்பா மரியதாஸ், அம்மாவின் இரண்டாம் கணவன் புலேந்திரன் இவர்களுக்கு இடையில் நிகழும் உறவுச் சிக்கல்கள். பனையேறி காங்கேசன் அவனின் இளம் மனைவி துரிதம், ஆச்சியின் நிழல் போல் இருக்கும் சின்ராசன், கிராமத்திற்குப் புதிதாக வந்த தமயந்தி அவளின் கணவன் நீதன், குழந்தை கோதை, பன்னிரெண்டு பிள்ளைகள் பெற்ற மார்க்கண்டுத் தாத்தா, நீலோற்பலம் ஆச்சி, கீதாஞ்சலி டீச்சர் அவளின் அன்பு மகன் சாரங்கன், அன்னம்மாள் அவளின் மகன் ராசரத்தினம் என்று அந்த கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரைப் பற்றியும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பற்றியும் நாவல் விரிவாகப் பேசுகிறது.

இந்த மக்கள் ராணுவத்திற்கு பயப்படுவதைக் காட்டிலும் இயக்கத்தின் பிரதிநிதியாக இருக்கும் விந்தனுக்கு தான் பயப்படுகிறார்கள். விந்தன் ஒரு சர்வதிகாரியைப் போல இந்த மக்களிடம் நடந்துக் கொள்கிறான். ஒருமுறை இயக்கத்திற்காக தொலைத் தொடர்பு ஆன்டனாக்களை பள்ளிக்கு அருகிலேயே பொருத்துகிறார்கள். ஆச்சியும் கிராமத்துப் பெரியவர்களும் வேறு இடத்தில் வையுங்கள் என்ற அவர்களின் கோரிக்கையைக் கண்டுகொள்வதில்லை. இந்த அலச்சியப் போக்காமல் ஆத்தைக் கோவிலின் பண்டிகை நடைபெறும் இரவில் ஆன்டனாக்களின் பொருட்டு ராணுவம் வான்வழித் தாக்குதில் நிகழ்த்துகிறது. அந்த கிராமத்தில் நிகழ்த்தப்படும் முதல் தாக்குதல் அது. இந்த எளிய மக்களைக் காப்பதற்காகவே ஆயுதம் தூக்கினோம் என்று பிரகடனம் செய்த இயக்கத்தின் அலட்சியப் போக்குகள், நடவடிக்கைகள் எவ்வாறு இந்த அப்பாவி மக்களைப் பாதிக்கிறது என்பதை கதையின் போக்கில் உணர முடிகிறது.

இயக்கத்தின் பொறுப்பாளர்களில் ஒருவரான நீதன் அவனின் மனைவி தமயேந்தியிடம் நிகழ்த்தும் காமம் சார்ந்த வன்முறைகள், மற்றொரு இயக்கப் பொறுப்பாளரான புலேந்திரன் நிர்மலாவின் கணவன் உயிரோடு இருக்கும் போதே உறவில் இருப்பது என்று போராளிகளின் மறுபக்கம் வேறொன்றாக இருக்கிறது. இதை தனிநபர் சார்ந்த ஒழுக்க மீறலாகப் பார்ப்பதா? இல்லை இயக்கம் சார்ந்த ஒழுங்கின்மையாக உணர்வதாக என்றக் குழப்பம் எழுகிறது.

இந்த கிராமத்தில் யாருக்கும் திருமணம் நடப்பதே இல்லை. காங்கேசன், தூரிதம் இருவரின் திருமணம் மட்டும் நடக்கிறது. இதில் தூரிதம் சற்றே மனபிரழ்வு கொண்டவளாக இருக்கிறாள். அதனால் இயக்கம் தூரிதத்தை விட்டு வைத்திருக்கிறது. இப்படி முறையான திருமணங்கள் நடக்காமல், எந்த சூழலிலும் போர் குறித்த பதட்டத்தோடே வாழ்வதால், பாலியல் சார்ந்த பிரழ்வுகளை நாவலில் நிறையக் காண முடிகிறது. தாமரைக்கும் அவளின் தோழி வெரினிக்காவுக்கும் இருக்கும் ஒருபால் ஈர்ப்பு, நிர்மலா புலேந்திரன் கள்ள உறவு, தமயேந்திக்கும் சாரங்கனுக்குமான உறவு, கிளியன்ரிக்கும் சிறுவன் அட்சயனுக்கு இடையே முகிழும் உறவு என்று பொருந்தாக் காமம் நிறைய இருக்கிறது. இவற்றை வாசிக்கும் போது அதிர்ச்சியாக இருந்தாலும் போர் சூழலின் பின்விளைவுகளாகத் தான் இவற்றைப் புரிந்துக் கொள்ள முடிகிறது. 

 இந்த நாவலின் மற்றொரு சிறப்பம்சம் அதன் கூறுமுறை. விந்தனின் ஆட்கள் கிராமத்தில் இருக்கும் இளைஞர்களையும் இளைஞிகளையும் கட்டாய ராணுவத்திற்கு தூக்கிச் செல்கிறார்கள். அதைக் குறித்த அச்சம் கிராமம் முழுவதும் இருக்கிறது. கீதாஞ்சலி டீச்சரின் மகன் சாரங்கன், நிர்மலாவின் மகள் வெரினிக்கா, ஆச்சியின் பேத்தி தாமரை முதலானவர்களை இயக்க ஆட்களின் கண்ணில் படாமல் தலைமறைவாக வைத்திருப்பது குறித்து மிக விரிவாகச் சொன்ன யதார்த்தன் அவர்கள் பிடிபட்டதை மற்றொரு அத்தியாயத்தில் இரண்டு கதாபாத்திரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாக எழுதியிருப்பார். மார்கழி பிடிபடுவது மட்டும் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கும். மற்ற அனைவரையும் இயக்கம் எப்படி பிடித்துச் சென்றது என்பதை சொல்லாமல் விட்டிருப்பார். இது நல்ல யுத்தி. இது நாவல் முழுவதும் தொடர்ந்திருந்தால் நாவல் இன்னும் சிறப்பான தருணங்களைத் தொட்டிருக்கும். ஆனால் நாவலின் இறுதி அத்தியாயங்கள் வழக்கமான நேரடி கதைச் சொல்லல் முறைக்குச் சென்று விடுகிறது. நிறைய கதாபாத்திரங்கள் நாவல் நெடுகிலும் வருவதால் வாசிப்பில் சில இடங்களில் தோய்வையும் தீவிர தன்மையையும் இழக்க நேரிடுகிறது.

 இந்த நாவலில் நிறைய பெண் போராளிகளின் வாழ்க்கையைத் தெரிந்துக் கொள்ள முடிகிறது. இவற்றில் முக்கியமானது தயிவாளை என்கிற சுபதிணியின் கதை, மார்கழியின் கதை. கட்டாயத்தின் பேரில் அழைத்துச் செல்லப்படும் பெண்பிள்ளைகள் வேறு வழியில்லாமல் அந்த சூழலுக்கு தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். இயக்கத்தால் பிடிபட்டு முகாமில் இருக்கும் தாமரையை மீட்க திருமணமாகி குழந்தை இருக்கிறது என்று பொய் சொல்ல, உன் குழந்தைக்கு பால் கொடு என்று சொல்லும் பெண் போராளியும், இயக்கத்திற்கு கட்டாயமாகப் பிடித்து வந்த தன் மகனை விட்டுவிடும் படி கெஞ்சும் தாயிடம் கோவப்படும் தாமரையும் அடைந்திருக்கும் மனமாற்றம் என்பது வியப்புக்குறியது. இயக்கம் இந்த மனமாற்றத்தை தான் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றதோ என்று தோன்றுகிறது. இந்த வன்முறையின் உச்சம் இறுதிக் கட்டத்தில் பயிற்சி பெறாத பள்ளிச் சிறார்களின் கைகளில் ஆயுதம் தந்து போராட விடும் நிலைக்குச் செல்கிறது. இந்த நுட்பமானப் புள்ளிகளையெல்லாம் நாவல் கதையின் போக்கில் இயல்பாகத் தொட்டுச் செல்வது சிறப்பு.

0

இந்த நாவலில் எனக்கு நெருக்கமானது இரண்டு பகுதிகள். ஒன்று காட்டுமாடு பிடிக்க செல்லும் அத்தியாயம். மற்றொன்று முத்துசாமியின் கதை. இவை இரண்டையும் நாவலின் மிக முக்கியமான பகுதிகளாக கருதுகிறேன். இந்த நாவல் எனக்கு பிடிப்பதற்கு இவைதான் காரணமாகக் கூட இருக்கலாம்.

கண்ணனும் அவனின் சகாக்கள் மூவரும் காட்டுமாடு பிடிக்கச் செல்லும் அத்தியாயம் எனக்கு “ஓநாய் குலச்சின்னம்” நாவலில் வரும் வேட்டையாடலை நினைவுபடுத்தியது. மான் கூட்டத்தை விரட்டிச் சென்று தந்திரமாக ஆற்றின் கரையில் நிறுத்தி ஓநாய்கள் நடத்தும் தாக்குதல் எழுதப்பட்ட விதத்திற்கு சற்றும் குறையாமல் யதார்த்தன் காட்டுமாடு பிடிக்கும் வேட்டை அனுபவத்தை எழுதியிருப்பார். ஓநாய்க் குலசின்னம் வாசித்த நாட்களில் இதுபோல நம் தமிழ் நாவல்களில் எழுதப்படாதா என்ற ஏக்கம் இருந்தது. அதை இந்த நாவல் போக்கிவிட்டதாகவே உணர்கிறேன்.

இந்த வேட்டை சம்பவம் திருவிழாவின் ஒருபகுதியாக சடங்காக மாற்றப்பட்டிருக்கிறது. இந்த சடங்குகளின் மற்றொரு வடிவத்தை நான் பணிசெய்த கல்வராயன்மலையில் பழங்குடி மக்களிடமும் கண்டிருக்கிறேன். இங்கே பொங்கல் திருவிழாவின் இறுதி நாளில் கிராமத்தில் இருக்கும் ஆண்களும் குழந்தைகளும் நரி வேட்டைக்குப் போவார்கள். இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் நரியைப் பிடித்து வந்து பூசை செய்து ஊர்முழுதும் ஊர்வலமாக அழைத்துச் சென்று மீண்டும் காட்டில் விடுவார்கள். இப்படி செய்தால் அந்த வருடம் நல்ல மழையிருக்கும், விவசாயம் தழைக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. வேட்டை சமூகம் தன்னுடைய பாரம்பரியத்தின் எச்சங்களை சடங்குகளாக மாற்றி வைத்திருக்கிறது என்பதாகத் தான் இதைப் புரிந்துக் கொள்கிறேன்.

முத்துசாமியின் கதை சாதியத்தின் கொரூரத்தை நம் கண்முன் நிறுத்தும் கதை. வேளாளர்களும் செட்டிமார்களும் நிலபுலங்களோடு இருக்கும் வன்னிநிலத்தில் அவர்கள் வயலில் வேலை செய்யும் கூலியாக முத்துசாமி இருக்கிறான். கிருஸ்துவத்தை வளர்க்க வரும் பாதிரியாரின் கருணைப் பார்வை இவன் மீது பட்டு, அவரின் விசுவாசமிக்க வேலைக்காரனாக இருக்கிறான். அதன் பலனாய் சிறிய நிலம் அவனுக்கு கிடைக்கிறது. அந்த நிலத்தை ஒழுங்கு செய்து உழுது வாழ்கிறான். ஆனால் ஆதிக்க சாதிகளால் அதை தாங்க முடியவில்லை. அவனை அழிக்க நினைக்கிறார்கள். ஆனால் முத்துசாமியோ அவர்கள் எதிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறான். வெள்ளைக்காரர்களைப் பகைத்துக் கொண்டு வாழ முடியாது என்று அமைதிக் காக்கிறார்கள். இலங்கைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டு வெள்ளையர்கள் நாட்டை விட்டு வெளியேறியதும், ஆதிக்க சாதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முத்துசாமியைத் தாக்கி, அவனின் கைகளைக் கட்டி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என்று அவனின் உடலில் சிறுநீர்க் கழிக்கிறார்கள். இது நாள் வரை அவர்களில் அடக்கி வைத்த ஒட்டு மொத்த வன்மத்தையும் காட்டி முத்துசாமியைக் கொன்று விடுகிறார்கள். அவனின் மனைவியோ தன்னுடைய மகள் அன்னம்மளோடு ஆத்தைக் கோவிலில் ஒழிந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறாள். பின் சட்டத்தின் உதவியோடு நிலத்தை மீண்டுக் கொள்கிறாள் முத்துசாமியின் மகள் அன்னம்மாள். ஆனால் முத்துசாமியின் இந்த தியாகத்தைக் குறித்த எந்த புரிதலும் இல்லாத அன்னம்மாளின் மகன் ராசாரத்தினம் நிலத்தை விற்கச் சொல்லி அவளிடம் சண்டை செய்கிறான். ஒரு தலைமுறையின் தியாகங்கள் அதற்குப் பின் வரும் தலைமுறைகளுக்கு புரியாமலேயே போய்விடுகிறது. ஈழத்தின் இயக்க வரலாறும் அவ்வாறு ஆகாமல் இருக்க, அதன் நிறைகளையும் குறைகளையும் தொடர்ச்சியாகப் பேசுவதன் மூலமாகவே அடுத்த தலைமுறைக்குக் கடத்த முடியும். அந்த வகையில் நகுலாத்தை மிக முக்கியமான நாவல்.

000

சிவபிரசாத்

பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவர் சேலத்தில் வசிக்கிறார். இவருடைய சிறுகதைகளும் விமர்சனங்களும் தமிழின் முக்கிய சிறுபத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளன. மறைந்த எழுத்தாளர் நஞ்சுண்டனின் கட்டுரைத் தொகுப்பான ‘காற்றின் நிழல்’ என்கிற புத்தகத்தின் தொகுப்பாசிரியர். சொற்சுனை இலக்கிய அமைப்பின் முக்கியமானவர்களில் இவரும் ஒருவர்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *