ஆசிரியர்: ஜி.சிவக்குமார்
பதிப்பகம்: பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
அழகான சிற்பத்தின் படத்துடன் கூடிய அட்டைப் படம், நெகிழனின் அருமையான வடிவமைப்பில் வெளிவந்துள்ளது இக்கவிதைத் தொகுப்பு.
புத்தகம் முழுவதும் குறுங்கவிதைகள், கடைசிப் பகுதியில் சில பெரிய கவிதைகள். கவிஞரின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு.
மூன்று பிரிவுகளாக உள்ளது. ஒரே பாடுபொருள் குறித்து பல குறுங்கவிதைகள், தீ நுண்மி காலத்தின் கவிதைகள், கவிஞரின் மிகவும் அந்தரங்கமான ஒரு காலக்கட்டத்தைப் பற்றிய கவிதைகள். மிகவும் எளிமையான வரிகளில் எழுதப்பட்ட அழகான கவிதைகள்.
எனக்குப் பிடித்த சில கவிதைகள்:
எவ்வளவு அழகு இக்கவிதை:
உற்சவர்களுக்கும் வாய்ப்பதில்லை
குழந்தைகளுக்கு வாய்க்கும்
தகப்பனின், தாத்தாவின் தோள் ஆசனங்கள்
எத்தனையோ எண்ணங்களைத் தூண்டும் பின்வரும் கவிதை:
ஒருபோதும் நிலைக்கு வராமல்
அசைந்து கொண்டேயிருக்கிறது
நீங்கள் பார்த்த தேர்
மிகச் சிறப்பான ஒரு காதல் கவிதை நான்கே வரிகளில்:
சாவதற்குள் ஒருமுறையாவது
உன்னைப் பார்த்து விட வேண்டும்
சாகும் வரை
உன்னைப் பார்த்து விடவே கூடாது.
–
தொகுப்பின் தலைப்புக் கவிதைகளில் அருமையான இரண்டு:
–
பேசும் உன் பாடல்களுக்கு
நடனமிடுகிறது
ஜிமிக்கி
பாலாஜி ஜுவல்லரியில் தவமிருந்த
அத்தனை தோடுகளில்
ஒன்றுக்குத்தான் வரம் கிடைத்தது
மேலும் சில அழகான கவிதைகள்:
கவனம்.
மிதித்து விடாதீர்கள்.
வாசலெங்கும் விரல்கள்
இருள்தான் இறுதி
என்றாலும்
ஒளிரும் சுடர்.
விலகித்தான் அமர்ந்திருக்கிறோம்
தழுவிக் கிடக்கின்றன
நிழல்கள்.
சுழல் ராட்டினத்தில்
பேரனுக்குப் பின்னிருக்கும்
காலி இருக்கையில்
கைகள் விரித்து அமர்ந்திருக்கிறார்
ஓரமாய் நின்றிருக்கும் தாத்தா
–
கொரோனா கால கவிதைகள் அருமை. சிறப்பான இரண்டு கவிதைகள்:
–
பிழைக்க வந்த இடங்களில்
இருந்து வாழ முடியாதவர்கள்
நடந்து சாகிறார்கள்
எனக்கே பேரச்சமாகிப்போனேன்
வீட்டிற்குள் நுழையும் நான்
இரண்டு குழந்தைகள் பிறக்கும் போதும் அவருக்கு இருந்த மனநிலை கவிதையில் அழகாக வெளிப்படுகிறது. நம்மையும் நமது நாட்களுக்கு கைபிடித்து அழைத்துச் செல்கிறார்.
மிளகுப்பால் போன்ற கவிதைகளை தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து.
குறுங்கவிதைகள் எழுதுவது, கயிறு மேல் நடப்பது போல. கொஞ்சம் பிசகினாலும், ஸ்டேட்மெண்ட்டாக மாறிவிடும் அபாயம் உள்ளது.
கவிஞர் சிவக்குமார் அழகாக இதைக் கடந்து விட்டார்.
அருமையான வாசிப்பு அனுபவம்.
++
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.