1.
கடந்த பருவத்தில்
நிரம்பியிருந்த குளம்
வற்றிக் கிடப்பது குறித்து
யாதொரு அதிர்ச்சியும் இல்லை
சிறகுகளுள்ள
வலசைப் பறவைக்கு.
2.
முக்குளிப்பான்கள்
பரபரப்பாகத் தலை சுழற்றி
மீண்டும் நீருக்குள் மூழ்கும்
எச்சரிக்கை மிகுந்த துறுதுறுப்போடு
நீச்சல் தெரியாததால்
கடைசிப் படி வரை
கால்களால் தடவித் தடவி
பாவாடை நீர்மேல் உப்ப
குளிக்கிற சிறுமிக்கு
துணி துவைக்கிற சாக்கில்
ஆற்றையேப் பிழிகிற
மனிதர்களை உணர்த்துகிற
பாட்டிதான் மூத்த பெண் யானை.
3.
கிழிந்து போன
கணக்கு நோட்டை
வேப்பம் பிசின் போட்டு ஒட்டி
ஆசிரியர் திருத்துவதற்கு
எல்லா நோட்டுகளுக்கும்
அடியில் வைத்ததை
ஒரு கணக்கோடு தேடி
முதலில் எடுத்துத் திருத்தி
போடப்பட்ட ஒற்றை இலக்க
மதிப்பெண்களில்
அப்பிக் கிடக்கிறது
பயம் கலந்த கசப்பு.
த.விஜயராஜ்
சோழன் மாளிகை கும்பகோணத்தில் பிறந்தவரான இவர் நீலகிரியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். 2011-ல் ‘தேவதைகளின் மூதாய்’ என்கிற இவரது கவிதைத்தொகுப்பை அகரம் வெளியிட்டுள்லது. 2021-ல் ‘யானைகளைக் கண்டிராத ஃபிளமிங்கோக்கள்’ சூழலியல் கவிதை நூலை வாசகசாலை வெளியிட்டுள்ளது.