ஊர்ச் சாவடியில் முனியாண்டியும் சுப்பையாவும் தாயம் வெளயாடிக் கொண்டிருந்தனர். செவனாண்டிக் கெழவன், “மயிலை ஆடு மண்ணுக்குள்ள” “மயிலை ஆடு மண்ணுக்குள்ளனு” பித்துப் பிடித்துப் புலம்பிய படியே சென்றான். சுப்பையா முனியாண்டியிடம், ஏய் முனியாண்டி ஒனக்கு தெரியுமிலப்பா, நீ தான் வயசுல மூத்தவரு. இந்த கெழவன் ஏன் பைத்தியம்புடிச்சுப் போய் திரியீறான்யா. “கெழவன் ஆடுகள் கொட்டம் நெறைய கெடந்துச்சு. ஆடுகள் பூராவும் கருப்புக்கெழவன் வயலுல வெளஞ்சு கெடந்த கேப்பையை மேய்ஞ்சு தின்டு, ஒழவடிச்ச மாதிரி போட்டு வந்துருச்சாம்”
“மேய்ஞ்ச ஆடுகள பூராம் வெட்டிச் சாய்ச்சு, தாழிப்பானையில அள்ளிட்டு போய்ச் சுடுகாட்டுலப் பெதச்சுப்பிட்டு வந்துட்டானாம் கருப்புக்கெழவன்”. அன்னக்கி புடிச்ச பைத்தியந்தான் செவனாண்டிக் கெழவனுக்கு, “மயிலை ஆடு மண்ணுக்குள்ள”, “மயிலைஆடு மண்ணுக்குள்ள” அலஞ்சு திரியிறான் கெழவன்.
காணியில் கதிரறுத்துவிட்டு வேர்த்து விறுவிறுத்துப் போய் வந்தான் கொத்தன். முழியன் வீட்டுக் கொட்டத்தில் மாடுகளும் ஒழவு காளைகளும் தீயில் வெந்த காயங்களோடுத் தும்புத் தெறிச்சு ஊரை வட்டமடித்தன. ரெண்டு படப்புகளிலும் பாதி ஒசரத்துக்கு எழும்பி எரிந்து கொண்டிருந்தது.
“அய்யோ அய்யோனு”, கூட்டங்கள் கூடியது. மாரிலும் தலையிலும் அடிச்சு அழுதாள் மஞ்சம்மா. ஊர்ச்சாவடியிலிருந்து முனியாண்டியும் சுப்பையாவும் முழியன் வீட்டு கொட்டத்துக்கு ஓடினர். பேரு பாதி எரிஞ்சு சாம்பாலாயிற்று.
“கொட்டத்துல தீயு, கொட்டத்தில தீயு”
“இன்னைக்கு, கோவாரம் எரிஞ்சிரிச்சே”.,
“படப்பு ரெண்டும் எரிஞ்சிரிச்சு”
“படப்பு ரெண்டும் எரிஞ்சிரிச்சு”
”இன்னைக்கு,பாத்த கண்ணும் பூத்திரிச்சு”.,
முழியன் வீட்டுக் கொட்டத்தில மஞ்சம்மாளின் அழுகையும் ஒப்பாரியும் கண்களைக் கசிய வைத்தன.
கரும்புகைகள் அப்பி அலைந்தன.தும்புத் தெறிச்சு ஓடிப்போன மாடுகளும் ஒழவு காளையும் கொட்டத்துக்கு வந்துச் சேர்ந்தது.குளுதாணியில் கருஞ்சாம்பல் மிதந்தது.கனல்கள் தணிந்து பொட்டலாய்க் காட்சியளித்தன. காடிகளும், கட்டுத்தரைகளும் இருந்த எடம் தெரியாமல் கெடந்தன.
அடுப்பைப் பற்ற வைத்து விட்டு, கருக்கா அரிசியை சொளகில் போட்டு புடைத்துக் கொண்டிருந்தாள் அன்னக்கொடி. தட்டுத் தடுமாறி வீட்டிற்குள் நொளஞ்சான் முனியாண்டி .
ஏய்யா ,எங்க போனேங்க. மூனு பிள்ளைகளும் சின்னஞ்சிறுசுகளா இருக்குக.
மூத்தவனுக்கு , “கண்ணும் தெரியாது.காதும் கேட்காது” இவனுக்குக் கூடயே ஒரு ஆளு இருக்கனும். “வேலவெட்டிக்குப் போய்ச் சம்சாரித்தனம் செய்ஞ்சாத்தான, இந்தப் பிள்ளைகளக் காப்பாத்த முடியும்”. நித்தம் தாயம் போட, போதை அடிக்க இப்படி வந்தா நான் என்ன செய்ய. இது சரிபட்டு வராது. நான் எங்கப்பன் ஆத்தா வீட்டுக்கு போறேன். ஓங்கூட காலந்தள்ள பெலனு இல்ல. பேசாம தாலியத் தீந்திட்டுப்போ. பிள்ளைகளை நான் வளத்துக்கிறேன்.முனியாண்டியிடம் எந்தப் பேச்சுமில்லை.
தைப்பிறப்பு, வீடு வாசல்களை மொளுகித் தீத்திச் சுண்ணாம்புக் கோலங்கள் போட்டாள் அன்னக்கொடி. நடுத்தாலு, ஆடு மாடுகளை குளிப்பாட்டக் கண்மாய்க்குப் பத்திக் கொண்டுப் போனான். ஏம்மா, முனியாண்டி இருக்கானா? இல்ல மாமா.வெள்ளனத்தில எந்திரிச்சு, கெளம்புனவரு தான் ஆளு இன்னும் வீட்டு வாசப்படி மிதிக்கல. மாடுகளுக்கு மூக்கணாங் கயிறு போடனும், முனியாண்டி செத்த நேரம் வந்தான்டா இந்தக் மூக்குகயிறுகள மாத்திருவேன். இந்த செனைக்கு திரிகிற மாடுகளைப் புடிக்க முடியல, உயிரப் போட்டு வாங்குதும்மா. முனியாண்டி வந்தா, கம்மாய்க்கரைக்கு ஒரு எட்டு வரச்சொல்லுமா. சேரிங்க மாமா. வந்தாகனா சொல்லுறேன்.
“அன்னக்கொடிக்கும் முனியாண்டிக்கும் பத்து வருசங் கழிச்சு பிறந்த தல பிள்ளைக்கு, கண்ணு மாறு கண்ணாப் போச்சு, கையிலயும் காலிலயும் ஒரு சோடி வெரல்கள் கூடி பன்னிரெண்டாக மொளைச்சிருந்தன. ஆண்டிச்சாமினு பேரு வச்சிருந்தனர். யாருக்கு என்ன பாவம் செய்ஞ்சாங்களோ” “தலபிள்ள மொடமா போய்க் கெடக்கேனு”ஊரார்கள் விம்முகின்றனர்.
நடுத்தாலுவின் மாடுகளுக்கும் ஒழவு காளைகளுக்கும் புதுக் கயிறு, தும்பு மாற்றிவிட்டான் முனியாண்டி. மாடுகள் ஒன்னோடு ஒன்னு எக்குப் போட்டது. அதட்டிப் பத்திக் கொண்டேக் கம்மாய்க்கரையில் இருந்து எறக்கினான் நடுத்தாலு.
“ஏலே முனியாண்டி,கோழி கூப்பிட எங்க போன. வீட்டுல ஓம் பொண்டாட்டி தான் இருந்தா. பிச்சக்குடும்பன் கெணம் தோண்டுனும்னு சொன்னாரு. இன்னைக்கு, ரெண்டு அடி தோண்டி சாமி கும்பிடனும்னு சொன்னாரு அதேன் வெள்ளனத்தில நடயைக் கட்டிட்டேன்”. சரி சரி பொழப்ப பாரு. ஒம் பொண்டாட்டிப் பாவம் ஒத்தையில கெடந்து இழுபடுறா.
“ஒரு கெடாரிக் கன்று ஒன்னு குடுங்க, “ரூவா கூடத் தாரேன்”. ஏலேய், “ஏய் என்னடா ரூவா கிவானு” பேசுற, அந்த மறைக்கெடாரியைப் புடிச்சுட்டுப் போடா. போய் ஓம்பொண்டாட்டிக் கையில குடு. அவ காடு மேடு கம்மாய்க்கரனு வளர்த்துப் பிருவா. பெரிய சம்சாரி வீட்டுப் புள்ள”.
அன்னக்கொடிக் கஞ்சியைத் தூக்குச் சட்டியில் ஊத்தி வைத்தாள். மம்பட்டி, கடப்பாரை, தட்டுகளைத் தலையில் வைத்துக் கொண்டு கெளம்பினான் முனியாண்டி. மத்தியான வெய்யில் ஒரச்சது. பிச்சக்குடும்பன் உருமாவைக் கட்டிக் கொண்டு திங்கு திங்குனு நடந்து வந்தார் கெணத்து மேட்டுக்கு.
ஏலே முனியாண்டி , “ஆழம் போயிருச்சா”, “ஊத்து கீத்து கசியுதா”.
இப்பத்தான், “ஊத்துக் கெழக்கதலயா கசியுதா”.
பிச்சக்குடும்பன் மொகத்தில் பூத்தது சிரிப்பூ. கெணத்து மேட்ல நெடுஞ்சாண்கெடையாக விழுந்து எழுந்தான். மண்ணை அள்ளி நெற்றியில் அப்பிக் கொண்டான்.
கெணத்து வேல முடிஞ்சு கையோடு, சாராயம் காய்ச்சும் எடத்துக்குப் போனான்.அடுக்குப்பானைகள வச்சு சாராயம் காச்சிக் கொண்டிருந்தாள் கழுவாயி. ஏலே முனியாண்டி,“இந்தச் சரக்கு சுத்தமான சரக்கு”. “ரெண்டு மடக்குக் குடிச்சுப்பாரு”. “பாதி வானத்துக்கு பறந்து போவ”.
அப்பிடியா கழுவாயி. இந்தத் தூக்குச் சட்டியில ஊத்து.அகப்பையில மோர்ந்து ஊத்தினாள் கழுவாயி. தூக்குச்சட்டியோடுப் பொதரு மண்டிய கருவைத்தூருக்குப் போனான். ஒக்கார்ந்து ஒரு செம்பு இழுத்தான். மிச்சத்தை பொதருக்குள்ளப் போட்டு மூடி மறைச்சுவச்சிட்டு எழுந்தான். கழுவாயி சொன்னது போலவே பாதி வானத்தில பறந்தான். பொடிநடையாய் மொட்டக்கருப்புக் கோயிலை அடஞ்சான் முனியாண்டி.
குலவைத் தெறிக்க பொம்பளங்கப் பொங்கல் பானைகளோடு ஊர் சுற்றி வந்தனர். செவ்வரளி மாலைகளோடு அலம்பி குலுங்கியது கெடாக்கள். காரியாபட்டி கொட்டுக்காரர்கள் அடித்த அடியில் ஊர் அதிர்ந்தது. கெடாவெட்டு முடிஞ்சு,தோலு,தல,காலு ஏலம் விட்டனர். முனியாண்டி ரெண்டு ஆட்டுத் தோலும், எட்டு காலும் ஏலத்தில் எடுத்தான். மடிவத்திச் சொணங்கிய பசுவைப் போல கெடந்தக் கம்மாயில, தள்ளாடி வந்தான். பனைகளில் ஆந்தைகளின் அலறல்கள் விகாரமாய் ஒலித்தது. எப்படியோக் கம்மாய்க்கர வந்து சேர்ந்தான். குத்துக் காலிட்டு மூத்திரம் பெய்தான். மெல்ல எழுந்து ஆட்டுத் தோல்களைக் கழுத்துலப் போட்டுகிட்டு ஏய் அன்னக்கொடி ஏய் அன்னக்கொடி என்று கத்தினான்.
நடுச்சாமம் அன்னக்கொடி ஒறங்கி விழுந்தவ, அவக்குதவக்குனு எழுந்து கதவைத் தொறந்தாள். ஏய் என்னய்யா இது. இந்த “ராத்திரில ஆட்டுத் தோலும்,காலும்”,மொட்டக் கருப்புக் கோயில் ஊருப் பொங்கல். ஏலம் எடுத்திட்டு வந்தேன்.
சாமக்கோழி கூப்பிட்டது. முனியாண்டி போதையில ஆழ்ந்துப் பறந்தான் வானத்தில். நாக்கில் சலுவா வடிந்த படியிருக்கிறது. கட்டுவிரியன் முனியாண்டியை கொத்தி விட்டு, நகரமுடியாமல், தலமாட்டில் சுருண்டது. வெளிக்கி இருக்க எந்திரித்தாள் அன்னக்கொடி.
“அய்யய்யோ அய்யய்யோ, பாம்பு கொத்திக் கெடக்கானே”, “ஓடியாங்க ஓடியாங்க”, அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.முனியாண்டிக்குப் பேச்சு மூச்சு இல்லை. உடல் வெறைத்துக் கெடந்தான்.
“கம்மாய்க்கு அந்தப் பெறம்”,“கம்மாய்க்கு அந்தப் பெறம்”
“கட்டுவிரியன் கூட வந்து”,
“கடிச்சு எடம் காணலயே”,“கடிச்ச எடம் காணலயே”,
“காண சனம் வந்திருச்சு”.,
“கனத்த மகன் கட்டிலிலே”, “கனத்த மகன் கட்டிலிலே”
“காரும் வந்திருச்சு”, “கதவும் தெறந்திருச்சே”., கனத்த அழுகையும் கூப்பாடுகளும் முனியாண்டி வீட்டைச் சூழ்ந்தன.
“அடப் பாதகத்திகளா பாவம் அன்னக்கொடி என்னச் செய்ஞ்சா புருசன் செத்து, மூனுப் பிள்ளைகளோட அனாதயாக் கெடக்கா. தாய்க்கு தல மகன் இப்படியா பெறக்கனும், கண்ணு தெரியாத ஆண்டிச்சாமிய்ய காலம் பூராம் வச்சு கஞ்சி ஊத்தனும். எழவு கேட்க வந்த ஒறவுக் காரர்கள் உக்கிப் போய் சென்றார்கள்”.
நடுத்தாலுக் குடுத்தக் கன்று நெறசெனையில, இன்னக்காப் பெறகானு மடிப் பெருத்து ஈனுவதற்குக் கத்திக்கொண்டு இருந்தது. தூத்தல் விழ ஆரம்பித்தன.
தண்ணிக்கொடம் ஒடஞ்சு ரெட்டை கன்று போட்டது. ரெண்டும் தாயப்போல கெடாரி. அன்னக்கொடிக்கு மொகத்தில பூத்தது ஆவாரம்பூ. ஒன்னு ரெண்டுனு மாடுகள் பெருக ஆரம்பித்தன. பிள்ளைகளும் வெவரம் தெரிய வளர்ந்தன.
காடு கர கம்மாக்கரனு மாடுகள இழுத்து அழுத்துப் போனான் அன்னக்கொடி. சடை போட்டு பின்னிக் கெடந்தது தல. தாயமங்கலம் முத்துமாரிக்கு மொட்டைப் போட்டுப் பொங்க வக்கிறேனு நேர்த்திக்கடன் நேர்ந்திருந்தாள். மாடு கன்றுகள தண்ணிக்கு விட்டுக் கொட்டத்துலக் கட்டி வச்சிட்டு, காடில அஞ்சாறு வைக்கலப் போட்டுக் கெளம்பினாள் அன்னக்கொடி.
மொட்டைப் போட்டுப் பொங்கப் பானைகளோடு வீட்டுக்கு வந்தவளுக்கு நெஞ்சுப் பதைபதைத்து. மாடு கன்றுக அம்புட்டும் செத்து வெறைத்துக் கெடந்தது.
குளுதாணியில நஞ்சைக் கலந்து விட்டு, அன்னக்கொடி மாடு கன்றுகள ஒத்த உறுப்படி இல்லாம ஆக்கிவிட்டார்கள் சதிகாரர்கள். அன்னக்கொடி புருசனுக்கு நஞ்சு பாம்பாய் இருந்து. மாடு கன்றுகளுக்கு நஞ்சாய் எந்தப் பாவிப் பய இருந்தானோ.
“குளுதாணித் தண்ணியில, குளுதாணித் தண்ணியில”
“கூடி வந்த மாடுகன்னு, கூடி வந்த மாடுகன்னு”
“கூட்டித்தான் அள்ளிப் போட்டேன், குறுமலைச் சாணியே”
”இந்தப் பாதகத்தி மகளுக்கு
குறுமருந்து வச்சிட்டானே”.,
ம்அ அஅம்அஅ…
“புருசனையும் குடுத்துட்டேன்”
”புடிமாட்டையும் குடுத்துட்டேன்”
“இன்னிப் பிறப்பதோர் யாருண்டோ”.,
ம்அஅ ம்ம் அஅஅ ம்ம்அஅ….
000
அய்யனார் ஈடாடி
மதுரை மாவட்டம், மாடக்குளம் அருகிலிருக்கும் தானத்தவம் எனும் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். வேதிப் பொறியியல் துறையில் பி.டெக் பட்டம் பெற்றவர். தற்போது தொழில் முனைவோராக உள்ளார்.
கல்லூரிக் காலத்திலேயே படைப்புகளை எழுதத் தொடங்கியவர். வேளாண் தொழில் குடும்பப் பின்புலமும், தமிழின் மீதான பற்றாலும், இயற்கையின் கொண்டிருக்கும் அதீதக் காதலாலும் கவிதைகளைப் படைப்புகளாக வடித்தெடுக்கிறார்.
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதை நூலை 2022லும் , மதுரை வட்டார கிராமத்து எளிய மக்களின் பாடுகளையும் , வரலாற்று சரித்திரத்தையும்
எனதூர் சரித்திரம் எனும் சிறுகதை நூலாக தொகுத்து 2023ல் வெளியிட்டிருக்கிறார்.