நடலை எனும் இந்தக் கட்டுரைத் தலைப்புச் சொல் நிச்சயமாகக் கடலை, புடலை, விடலை, சுடலை போன்ற சொற்களின் எழுத்து பிழை அல்ல. பலகாலமாகச் செவிப்பட்டுக் கொண்டிருக்கும் திருநாவுக்கரசர் அருளிய திருத்தாண்டகம் பாடல் வரியின் சொல் அது. பாடலில் வரும் நடலை எனும் சொல்லை உத்தேசமாகப் பொருள் கொண்டு உணர்ந்து கடந்திருக்கிறேன். இன்று நடலை மனப் பரவசத்தில் கால்கொண்டு விட்டதால் இந்தக் கட்டுரை.

முழுப்பாடலையும் முதலில் சொல்வோம்.

“நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை

தாமார்க்கும் குடியல்லாத் தன்மையான சங்கரன்

நற்சங்க வெண்குழை ஓர் காதில்

கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க்

கொய்மலர்ச் சேவடி குறுகினோமே!”

மிகவும் கம்பீர உணர்வை, மிடுக்கை, செருக்கை, நெஞ்சத்து நிமிர்வைத் தரும் பாடல் இது. பாடலின் முதலிரண்டு அடிகள் எச்சமயத்தாராலும் ஏற்றுக்கொள்ளத் தகுதியானவை. சமய வரம்பு அற்றது. செம்மை மாந்தர் தலை நிமிர்ந்து சொல்வதற்கு உரியது. உண்மையில் இந்தப் பாடலை எனக்கு அண்மையில் நினைவூட்டியவர் கத்தோலிக்கத் திருச்சபையின் பிரிவான கிளாரெட் சபையின் அருட்தந்தை திருமிகு ஜெயபாலன் அவர்கள். நாள்-29 அக்டோபர் 2023. இடம்-கிளாரெட்பவன், கருமாத்தூர். மதுரை-தேனி சாலை, மதுரை மாவட்டம். சந்தர்ப்பம்-வாசிப்பை நேசிப்பது குறித்து அருள் திருமடத்தில் உரையாற்றச் சென்றிருந்த போது. அவையோர் – அருட்பணி மாணாக்கர், அருட் சகோதரியர், அருட் தந்தையர் என இருநூறு பேர்.

கிளாரெட் சபை, புனித அந்தோணி மரிய கிளாரெட் (1807-1870) என்ற ஸ்பானியரால் நிறுவப் பெற்றது. ஜெர்மனியில் இருந்து கிளாரெட் சபையை இந்தியாவுக்குக் கொணர்ந்தவர், புனித பிரான்சிஸ் சேவியர் டிரின் பெர்க்கர் என்ற புனிதர். இவர் ஹிட்லர் படையில் போர் வீரராக இருந்திருக்கிறார். 1993-ல் இறந்த இவரது கல்லறை கருமாத்தூர் கிளாரெட் பவன் வளாகத்தில் வாசலை ஒட்டி அமர்ந்துள்ளது. திருமடத்தில் நான் தங்கியிருந்த நான்கு நாட்களிலும் அவர் கல்லறையை மரியாதையுடன் கடந்திருக்கிறேன்.

அருட் தந்தையருக்கும் அருட் சகோதரியர்க்கும் இறைப்பணி மாணவருக்கும் எனது உரையின் போது திருநாவுக்கரசர், திருமூலர், பட்டினத்தடிகள், காரைக்கால் அம்மை, சிவவாக்கியர் பாடல்கள் சில சொன்னேன். முத்தாய்ப்பாக நான் சொன்ன வாசகம் ஸ்ரீ நாராயண குரு மலையாளத்தில் சொன்னது, ‘மதம் ஏதாயால் எந்தா? மனுஷ்யர் நன்னாவணும்!’

அந்த சந்தர்ப்பத்தில் நான் சொன்ன அப்பர் தேவாரப் பாடல் தான் தொடக்கத்தில் நீங்கள் கண்டது. நாம் எடுத்துரைத்த அந்தப் பாடலின் பொருள் என்ன?

‘எவர்க்கும் அடிமைக் குடியாய் இருந்தறியார்த் தன்மையன், உயிர்க்கெலாம் இன்பம் செய்பவன், வெண் சங்கினால் செய்தகுழையை ஒரு காதில் அணிந்தவன், அரசர்க்கெல்லாம் அரசனாகிய சங்கரன். புதிதாய்க் கொய்த மலர் போல் சிவந்த இணையடிக் கொண்ட அவன் பாதங்களை, இனி எக்காலமும் மீள முடியாதபடி வந்து அடைந்து விட்ட காரணத்தால்-

நாம் யார்க்கும் அடிமைக் குடி அல்லோம்

கூற்றுவனை அஞ்ச மாட்டோம்!

நரகம் சென்று இடர்ப்பட மாட்டோம்!

அல்லற்பட மாட்டோம்!

அரண் உடையவராக இருப்போம்!

நோயுற்று உழல மாட்டோம்!

எவர்க்கும் பணிய மாட்டோம்!

எந்நாளும் இனி இன்பமே, துன்பம் என்பதில்லை!

எத்தனை நம்பிக்கையும் உறுதியும் செம்மாப்பும் கொண்ட கூற்று. இப்பாடலில் இரண்டு சொற்களில் இடறி நின்றதுண்டு. ஒன்று ஏமாப்போம், இரண்டு நடலை.

ஏமாப்பு எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் முதற் பொருள் security, safe guard, அரிணாளுகை. மேற்கோள் அடக்கமுடைமை அதிகாரத்துத் திருக்குறள்.

‘ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப்பு உடைத்து”

ஐந்து உறுப்புகளையும் ஒரே ஓட்டுக்குள் அடக்கும் ஆமைபோல், ஐம்பொறிகளையும் அடக்கமுடியுமானால், ஏழேழ் பிறவிக்கும் அது அரணாகும் – இது பொருள்.

ஏமாப்புக்கு இரண்டாவது பொருள் – support, stay, வலியாகை. இதற்கும் மேற்கோள் நடுவு நிலைமை அதிகாரத்துத் திருக்குறள்.

‘செப்பம் உடையவர் ஆக்கம் சிதைவின்றி

எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து’

நடுவு நிலைமை உடையவரின் செல்வமும் சிறப்பும் சேதம் ஏதுமின்றி அவரது வழி வருபவருக்கும் வலிமை உடையதாக, ஆதரவாக இருக்கும் – இது பொருள்.

மூன்றாவது பொருள் – Pride இறுமாப்பு

நான்காவது பொருள் – Object, intention, Purpose, கருத்து (திவாகர நிகண்டு)

ஆக, அப்பர் சுவாமிகள் ‘ஏமாப்போம்’ எனச் சொல்லவிழைவது, ‘நாம் மிகுந்த பாதுகாப்பு உடையவர்களாக இருப்போம்’ என்பது.

அடுத்த சொல் நடலை. ‘நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்’ என்பது பாடல் வரி. நடலை எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் பொருள்கள் :

1. Guile, வஞ்சனை

2. Deceplion, illusion, பொய்மை

3. Pretence, Affectation. பாசாங்கு

4. Distress, suffering, Affliction, துன்பம் (பிங்கல நிகண்டு)

5. Trembling, shaking,அசைவு (சூடாமணி நிகண்டு)

எனவே திருநாவுக்கரசர் உரைக்கும் ‘நடலை இல்லோம்’ எனும் சொற்றொடர்க்கு – வஞ்சனை இல்லோம், பொய்மை இல்லோம், பாசாங்கு இல்லோம், துன்பம் இல்லோம், நடுக்கம் இல்லோம் – என எப்பொருளும் சொல்லலாம்.

பேரகராதியில் நடலமடித்தல் என்னும் சொல்லொன்று உண்டு. பொருள் – To Pretend, பாசாங்கு செய்தல். நடலம் என்ற சொல்லுக்கு செருக்கு, வீணாகச் செலவிடுதல், இகழ்ச்சி, பாசாங்கு, அதி நாகரிகம் காட்டுதல் எனப் பொருள் தரப்பட்டுள்ளன. யாழ் அகராதிப்படி நடலம் பண்ணுதல் என்றால் அதி நாகரிகம் காட்டுதல். அதாவது டாம்பீகம், பகட்டு காட்டுதல்.

கலித்தொகையில் மருதக்கலி பாடிய மருதன் இளநாகனார் பாடல் வரி –

“விடலை நீ நீத்தலின், நோய் பெரிது ஏய்க்கும்,

நடலைப் பட்டு, எல்லா நின் பூழ்”

என்கிறது. இங்கு விடலை என்றால் இளையவன் என்றும், நடலை என்றால் நடிப்பு என்றும் பொருள் தருகிறார் பாரத்துவாசி நச்சினார்க்கினியர்.

அப்பர் தேவாரத்தில் ஒரு பாடல் –

“நடலை வாழ்வு கொண்டு என் செய்தீர் நாண் இலீர்

சுடலை சேர்வது சொற்பிரமாணமே

கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால்

உடலினார் கிடந்தூர் முனி பண்டமே”

என்கிறது.

நாணம் இலாதோரே! துன்பம் தரும் இவ்வாழ்வில் நீங்கள் அடைந்ததென்ன? சுடுகாடு சேர்வது தவிர்க்க இயலாதது என்பது சான்றோர் வாக்கு. பாற்கடல் கடைந்தபோது பொங்கி வந்த நஞ்சு உண்ட சிவபெருமான் கைவிட்டால், நமது உடலானது அனைவரும் கைவிட்ட பாழ்ப் பண்டமாகிவிடும் என்றவாறு.

திருத்தக்க தேவரின் சீவக சிந்தாமணி காப்பியத்தின் எட்டாவது இலம்பகம் – விமலையார் இலம்பகம். அதன் பாடல் வரியொன்று – நடலையுள் அடிகள் வைக – என்கிறது. வருத்தத்துனுள் அடிகள் (விசையை) தங்க என்று உரை சொல்கிறார் நச்சினார்க்கினியர்.

திருவாசகத்தில், பெரிய புராணத்தில், நாலடியாரில், திருக்குறளில் நடலை எனும் சொல் ஆளப்பெறவில்லை. சங்க இலக்கியங்களில், பாட்டும் தொகையும் நூல்களில் கலித்தொகை நீங்கலாக வேறு எங்குமே நடலை இல்லை. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில் உண்டா என ஓய்வாகத் தேட வேண்டும். அறிந்தோர் இருந்தால் அறிவுறுத்துங்கள்.

‘நாமார்க்கும் குடியல்லோம்’ எனும் தேவாரப் பாடல் போல், திருநாவுக்கரசரின் இன்னொரு பாடலின் முதலிரு அடிகள் –

“அல்லல் என் செயும் அருவினை என் செயும்

தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என் செயும்?”

என்பன.

ஆன்ம பலம் தரும் பாடல் வரிகள். இங்கு தொல்லை எனும் சொல்லின் பொருள் தொந்தரவு என்பதல்ல. பழமையான, தொன்மையான என்பது. தொல்லியல் துறை, தொல்குடி என்பது போல. ‘தொல்லை வல்வினைத் தொந்தம் தான் என் செயும்?’ என்றால் தொன்மையான வல்வினைகளின் தொடர்ச்சிதான் என்ன செய்யும் என்று பொருள்.

திருநாவுக்கரசருக்குப் பல நூற்றாண்டுகள் பிற்பட்டவரான அருணகிரி நாதரின் கந்தர் அலங்காரம் பாடல் வரிகளும் இவ்விதமே மனத்திட்பம் தரும்.

“நாள் என் செயும்? வினை தான் என் செயும்

எனை நாடி வந்த

கோள் என் செயும்? கொடுங்கூற்று என் செயும்?”

என்பார் அவர். நாள், நட்சத்திரம் என்னதான் செய்துவிடும்? நல்வினை தீவினை எனப்படுபவை என்ன செய்து விடும்? என்னை நாடித் தேடி வந்த கோள் – கிரகங்கள் என்ன செய்யும்? தென் திசைக் கிழவன், நீலக்காலன், யம தர்மன், கொடுங்கூற்றுவன் என்ன செய்து விடுவான்? என்று வினவும் பாடல் வரிகள். சமகால சினிமாத் தமிழில் சொன்னால் – எதுவும் எவனும் எந்த ஆணியையும் புடுங்க முடியாது!

மிக மோசமான மனச் சோர்வில் இருக்கும் காலங்களிலும் மனதுக்கு ஊக்கம் தருவன இதுபோன்ற பாடல்கள். கிளாரெட் பவனில் என் உரையில் இந்தப் பாடல் வரிகளையும் சொன்னேன். உரையரங்கு முடிந்து மதிய உணவுக்குச் செல்லும் முன் சில அருட் சகோதரிகளும், அருட் தந்தையரும் என்னிடம் வந்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். ஒல்லியான, கருமை நிறமுடைய, மூத்த அருட்சகோதரி வந்து – “தம்பி, அக்கா உங்களுக்காக இன்று இரவு பிரார்த்தனை செய்வேன்” என்றார். எனக்குக் கண்கள் நிறைந்தன.

நடலை என்றால் வஞ்சனையோ, பொய்மையோ, பாசாங்கோ, துன்பமோ, ஒழுக்கமோ, அவற்றுள் ஒன்றிரண்டோ அல்லது அனைத்துமேயோ இன்று இந்த வடிவத்தில் வந்து நம்மை வதைக்கக் காத்திருக்கிறது என்று நான் சொல்லி நீங்கள் அறிந்து கொள்ளும் நிலையில் இல்லை. ஆனால் அழுத்தம் திருத்தமாக மனதில் என்னுள் பதிந்து நிற்பன தேவார வரிகள்.

நாமார்க்கும் குடி அல்லோம்

நமனை அஞ்சோம்

நரகத்தில் இடர்ப்படோம்

நடலை இல்லோம்

ஏமாப்போம் பிணி அறியோம்

பணிவோம் அல்லோம்

இன்பமே எந்நாளும் துன்பமில்லை!

*****

.

நாஞ்சில் நாடன்

1989-லிருந்து கோவையில் வசித்து வரும் நாஞ்சில் நாடன் நவீன தமிழ் இலக்கியத்தில் இதுவரை 6 நாவல்கள், 19 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள்,29 சிறுகதைத் தொகுப்புகள் கொண்டுவந்துள்ளார். கலைமாமணி விருது, சாகித்ய அகாடமி விருது, கனடா நாட்டு இயல் விருது என்பன இவர் பெற்ற சிறப்புகள்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *