பாவாடை சாமி கைலி கட்டியிருந்தான். காலையில் திருமணத்தின் போது அணிந்திருந்த பட்டுச்சட்டையை இன்னும் கழற்றவில்லை. நைலக்ஸ் துணியில் பளபளவென்றிருந்த அந்தச் சட்டை பார்ப்பவர்களின் கண்களை கூசச் செய்தது. பாவாடை சாமியின் கண்களையும்தான். பாயில் சம்மணமிட்டு அமர்ந்திருந்த பாவாடை சாமியின் மெல்லிய மீசையில் பயமும் தயக்கமும் பதற்றமும் ஒன்று சேர்ந்து வேர்வைத் துளிகளை அரும்பச் செய்திருந்தது. பாவாடை சாமி தான் அமர்ந்திருந்த பாயினைப் பார்த்தான். பாயும் தலையணையும் மிகச் சிறியதாயிருந்தது. இருவர் படுத்துத் தூங்க இது போதாதே என்று யோசித்தான்.
பாவாடை சாமிக்கும் நண்பர்கள் உண்டு. அவனும் நிறைய சினிமாக்கள் பார்த்திருக்கிறான். முதல் இரவென்றால் என்னவென்று ஓரளவு அவனுக்கும் தெரியும். எதுவாக இருந்தாலும் பத்மினியைக் கேட்டு அதன் பின்பு செய்வதாக முடிவெடுத்திருந்தான். தான் சட்டையோடு இருக்கப் பிடிக்குமா சட்டையில்லாமல் இருக்கப் பிடிக்குமா என்பதைக்கூட அவள் விருப்பத்துக்கே விட்டிருந்தான். இது அவன் வீடுதான். இந்த வீட்டில் அவனும் அவன் அம்மா பூங்காவனமும்தான். முதல் இரவுக்கு இந்த வீட்டை பத்மினிக்கும் பாவாடை சாமிக்கும் ஒதுக்கித் தந்துவிட்டு பூங்காவனம் பக்கத்து வீட்டுக்குப் படுக்கப் போய்விட்டாள். இருவர் மட்டும்தானே என்று வீட்டை பெரிதாக இழுத்துக் கட்டவில்லை பூங்காவனம். இரண்டு அறைகள் ஒரு ஆளோடி என்று முடிந்துவிட்டது வீடு. சமையல் கொல்லைப்புறத்தில்.
பாயினில் அமர்ந்திருந்த பாவாடை சாமிக்கு லேசாக முதுகு வலிக்கத் தொடங்கும்போது வாசல் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டு கலாவதி அக்காவின் முரட்டுத்தனமான குரல், ‘‘பத்மினி கதவ தாப்பா போட்டுக்கோ. விடியசாமம் நாங்களே வந்து எழுப்புறோம்…” ‘‘தூங்கிராதீங்க. தூங்குனாதான எழுப்புறதுக்கு” தொடர்ந்து வந்த குரல் செல்வியுடையது. பாவாடை சாமிக்குள் வெட்கம் லேசாக சிரிப்பை படரவிட்டது. உள்ளே வந்த பத்மினி கையில் ஒரு பித்தளை சொம்பும் எவர்சில்வர் டம்ளரும் இருந்தன. எரிந்து கொண்டிருந்த மஞ்சள் விளக்கின் கீழே வந்து நின்ற பத்மினி மாநிறமாய் இருந்தாள். கட்டியிருந்த நீல நிற புடவையில் மஞ்சள் பூக்கள் அலை அலையாய் சிதறியிருந்தன. மஞ்சள் வண்ண ஜாக்கெட் கைகளின் இரு புறமும் இறுக்கிப் பிடித்திருந்தன. பெரிதான உயரமில்லை. அதனாலேயே உடம்பு கொஞ்சம் பூசியது போல் தென்படுவாள். தொடைகளின் திரட்சி மூடியிருந்த புடவையை மீறித் தெரிந்தன.
பாவாடை சாமியைப் பார்த்துச் சிரித்தாள். ‘‘பால் குடுக்கச் சொன்னாங்க அத்தே” என்றாள். அவன் அருகில் பாயில் அமர்ந்தாள். பதிலுக்குச் சிரித்த பாவாடை சாமி, பத்மினி நீட்டிய டம்ளரை வாங்கினான். பாவாடை சாமிக்குப் பால் குடித்துப் பழக்கமில்லை. எப்போதும் டீதான். டம்ளருக்குள் பார்த்தான். பால் மிகக் குறைவாக இருந்தது. ‘‘எல்லாத்தையும் குடிச்சிடவா” என்றான். ‘‘ம்… குடிங்க. செம்புலதான் நிறைய பால் இருக்கே…” என்றாள் பத்மினி சிரிப்பு மாறாமல். அந்த அறையின் மூலையில் சுற்றிக்கொண்டிருந்த டேபிள் ஃபேனின் காற்று அலைந்து அலைந்து எரிந்து கொண்டிருந்த விளக்கின் சுடரை நடுநடுங்க வைத்துக்கொண்டிருந்தது. விளக்கின் அருகில் ஒரு எண்ணெய் பாட்டிலும் இருந்தது. ‘‘சட்டைய அவுத்துடவா… இருக்கட்டுமா… கசகசன்னு இருக்கும்…” சட்டையை அவிழ்த்தான். ‘‘அவுத்துடுங்க…” என்றபடியே தன் முந்தானையை அவிழ்த்து மடியில் தவழவிட்டாள்.
ஜாக்கெட்டுக்குள் திமிறியிருந்த பத்மினியின் மார்பகங்களை பாவாடை சாமியின் கண்கள் பார்த்து எச்சில் விழுங்கின. இதயப் படபடப்பு அதிகமானது. ‘‘லைட்டை ஆப் பண்ணிடுறேன். சுவிட்ச் எங்கே இருக்கு” என்றாள் சுற்றிலும் பார்த்தபடி. ‘‘இங்கதான். தலைக்கி மேல” கைநீட்டி பாவாடை சாமி லைட்டை அணைத்தான். நடுங்கிய சுடரின் வெளிச்சத்தில் இன்னும் பேரழகாய் தெரிந்தாள் பாவாடை சாமியின் கண்ணுக்கு பத்மினி. சட்டையைக் கழற்றியிருந்த பாவாடை சாமியின் மார்பில் ரோமம் ஏதும் இல்லாமல் எலும்புகள் துருத்திக்கொண்டு தெரிந்தன. கண்களைத் தாழ்த்திக்கொண்டாள் பத்மினி. பெருமூச்சு விட்டாள். தலையை நிமிர்த்தாமலே பாவாடை சாமியின் கைகளைப் பிடித்து தன் தொடை மீது வைத்தாள்.
வினோதமாய் ஏதோ ஒரு ஒலி எழுந்தது பாவாடை சாமியிடமிருந்து. திடுக்கிட்டு நிமிர்ந்த பத்மினியின் பார்வைக்கு பாவாடை சாமியின் திரும்பிய முகம் தென்பட்டது. ‘ஈ ஈ ஈ ஈ ஈ…’ என்று வாய் திறந்து கண்கள் மேலே சொருகி இடதுகை நரம்புகள் புடைத்துத் தெரிய அவள் மீது மோதுவது போல் வந்து பாயில் சாய்ந்தான் பாவாடை சாமி. உடல் வெட்டி இழுக்கத் தொடங்கியது. ‘‘அய்யோ சாமி… அத்தே…” கத்திக்கொண்டே எழுந்தாள். அவனை என்ன செய்வதென்று தெரியாமல், ‘‘அத்தே… இங்க வாங்களேன்… அய்யோ அத்தே…” வெளியே ஓடிவந்து கதவைத் திறந்தாள். தெருவெங்கும் தெளித்திருந்த நிலா வெளிச்சத்தில் பாய்ந்தாள்.
()
திருமணத்துக்குப் பிறகான பத்மினியின் கனவில் அக்கரைக்குளம் பெரிது பெரிதான அலையுடன் ஆடி ஆடி படிக்கட்டுகளில் வந்து மோதியது. நடு குளத்தில் மக்குடு கட்டிக்கொண்டு நின்றிருந்த பத்மினியின் காலுக்குக் கீழே பொருக்கு மண் சேறாகி அவள் உள்ளங்காலிலும் புறங்காலிலும் புரண்டு கொண்டிருந்தது. சூரிய மிச்சத்தை ஆழத்தில் வாங்கியிருந்த சாயங்கால குளத்து நீரின் வெம்மையும் சில்லிப்பும் மாறிமாறி அவள் முகத்தில் மோதும் கணங்களிலெல்லாம் திடுக்கிட்டு விழித்தாள்.
()
மூன்றாம் மாதம் தாலி பிரித்துப்போடும் நிகழ்வுக்கு தன் அம்மா வீட்டுக்கு வந்திருந்த பத்மினியின் முகத்தில் முன்பிருந்த சிரிப்புமில்லை. களையுமில்லை. ‘‘ஏன்டி… நான் என்னமோ தெரிஞ்சி பண்ணின மாதிரில்ல மூஞ்ச தூக்கி வச்சிட்டு இருக்கே… அதுக்கு இப்படி இருக்குன்னு தெரிஞ்சா உன்ன கட்டிக்குடுத்தேன். என் தலையெழுத்துதான் இப்பிடி சீப்பட்டு கெடக்குதேன்னு அசலூர்ல பாத்து முடிச்சி வுட்டேன். சின்ன வயசுல வந்த வெட்டு இவ்ளோ நாள் கழிச்சி இப்போ வரும்னு யாருக்குத் தெரியும் சொல்லு… போகப்போக சரியாயிடும்டி. அம்மா ஒனக்கு தெரிஞ்சாடி கெட்டது பண்ணப்போறேன்… இப்டியே மூஞ்ச தூக்கி வச்சிகிட்டு எத்தன நாள் சுத்தப்போற…” திரும்பி தன் அம்மாவை முறைத்தாள் பத்மினி. ‘‘அஞ்சம்மாக்கா… நல்லதண்ணி வருது. புடிக்க வரலியா…” வாசலில் குரல் கேட்டதும் அவிழ்ந்திருந்த கூந்தலை அள்ளி முடிச்சிட்டு கொண்டை போட்டவள் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் குடத்தை எடுத்துக்கொண்டு வெளியேறினாள் பத்மினி.
பாவாடை சாமிக்கு என்று வேலை எதுவுமில்லை. அவனிடம் இருந்த ஒரு மா நிலத்தில் விளையும் நெல்லும் உளுந்தும் தரும் வருமானமே அவனுக்கான வருச சம்பாத்தியம். அவன் நிலத்துக்கு அருகில்தான் ரவிச்சந்திரன் நைனா நிலமும். எத்தனையோ முறை அவனிடம் அதிக விலை தந்து நிலத்தை அவர் வாங்க முயன்றும் பாவாடை சாமி ஒத்துக்கொள்ளவில்லை. அவனுக்கு அது சோறு போடும் சொத்து மட்டுமல்ல. அவனுக்கான பெரும் மதிப்பு. அந்த ஊரில் இருக்கும் குடியானவன் கையில் நிலம் என்றால் வசதி படைத்த எல்லோருக்கும் அது பெரும் அவமானம். விளைச்சல் காலத்தில் அறுவடை, மூட்டை கட்டுதல், எடை போடுதல், வீட்டுப் பத்தாயத்தில் நெல் சேமித்தல் என்று வேலை இருக்கும் பாவாடை சாமி பிற நாட்களில் சும்மாதான் இருப்பான். பெரிதான ஆசைகள் எதுவுமில்லாத பாவாடை சாமிக்கு இப்போதைக்கான சொத்து பத்மினி மட்டுமே.
அதன் பின்பான நாட்களில் பாவாடை சாமிக்கு வலிப்பு எதுவும் வரவில்லையென்றாலும் இரவில் நெருங்க இருவருக்குமே அச்சமாக இருந்தது. பகலில் பத்மினியை ஏறெடுத்தும் பார்க்காமல் மனம் கூசினான் பாவாடை சாமி. தான் தொட்டாலே வலிப்பு வந்து விடுமோ என்று பயந்து விலகினாள் பத்மினி. அரசு மருத்துவமனைக்குச் சென்று வந்து மாத்திரைகள் எழுதி வாங்கிவந்து சாப்பிடத் தொடங்கினான். பூங்காவனம் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் பத்மினியால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
‘‘சின்னப்புள்ளைல அவனுக்கு இசு மாதிரி வரும்மா. அதுவும் காச்ச வந்த நேரத்துக்கு மண்ட கொதிச்சிபோய் அப்பிடி இருக்கும். மாத்திர மருந்து தின்னா சரியாயிடும். பத்து வயசு வரைக்கும் அப்படி வந்துச்சி. அதுக்கப்புறம் இல்ல… இவ்ளோ நாள் இல்லாம இப்டி ஏதோ பதட்டத்துல வந்திருக்கும்மா… நீ எதுவும் மனசுல வச்சிக்காத. அவன பழயபடி நீதான் கொண்டுவரணும்”
()
அன்றிரவும் பத்மினிக்கு கனவு வந்தது. பாவாடை கூட அணியாமல் முழு நிர்வாணமாய் குளத்தின் நடுவில் நின்றிருந்தாள். அவளின் தாடை வரையிலும் குளத்து நீர் தளும்பிக் கொண்டிருந்தது. கால்களுக்குக் கீழான சேற்றுக்குழம்பின் அலைவு அவளை நேராக நிற்கவிடாமல் தடுமாற வைத்துக்கொண்டிருந்தது. தண்ணீருக்குள் கை நீட்டி தன் பாவாடையைத் தேடினாள். ஏதோ ஒரு ஆணின் கரம் அவள் ஆடையை இறுகப் பிடித்திருந்தது. நீரில் மிதக்கும் ரோமம் அடர்ந்த கை பத்மினியின் கண்களில் பட்டது. தண்ணீரின் வெப்ப நிலை மாறி அவள் மார்பைச் சுட்டபோது விழித்தாள்.
()
மாதங்கள் கடந்து வருடம் முடிந்தது. வசந்த காலமும் குளிர்காலமும் முடிந்து கோடை காலமும் தகிக்கத் தொடங்கியது. பஸ்ஸில் ஏறினால் வாக்கப்பட்ட இடத்திலிருந்து அம்மா வீட்டுக்கு பத்து நிமிடத்தில் வந்துவிடுவாள் பத்மினி. பாவாடை சாமியின் குலசாமி வீற்றிருக்கும் பரவை கிராமத்திலிருந்து நடந்தே புத்தூர் வந்து சேரும் மக்களையும் பத்மினி பார்த்திருக்கிறாள். அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள் பத்மினி. என்றும் இல்லாத ஊழியாய் அந்தக் கோடையின் வெப்பம் எல்லாவற்றையும் கருக்கியிருந்தது. குளிக்கப்போவதற்காக துண்டையும் சோப்பையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
‘‘அடியே… கொளம் வத்திப்போய் மாசமாகுது. எல்லாரும் ஊத்து தோண்டிதான் தண்ணி புடிச்சிட்டு வர்றோம். அந்தா கயிறு கட்டிருக்குல்ல வாளி. அதையும் எடுத்துக்க. கொஞ்சம் கொஞ்சமா மொண்டு படித்துறையில வச்சி குளிச்சிட்டு வா. ஆம்பளையாளுக யாரும் அங்கிட்டு வர்றதில்ல. ஒன் தோழி மாரெல்லாம் அப்டித்தான் குளிச்சிட்டு வர்றாளுக…” பத்மினி வாளியை எடுத்துக்கொண்டு குளம் நோக்கிச் சென்றாள்.
அக்கரைக்குளம். கிட்டத்தட்ட ஆயிரம் அடி நீளமும் அகலமும் கொண்ட பிரமாண்டமான குளம். மக்களின் உபயோகத்துக்காக வெள்ளைக்காரன் காலத்தில் உருவாக்கப்பட்ட பிரமாண்டம். அகண்ட குளத்தைச் சுற்றியுள்ள நான்கு கரைகளில் மூன்றில் மட்டும் மக்கள் குளிப்பதற்காக படித்துறை கட்டப்பட்டிருக்கும். ஒரு புறம் காவிரி தண்ணீர் வரும்போது திறந்து விடுவதற்கான பெரிய அளவு பைப் மட்டும் பொருத்தப்பட்டிருக்கும். அந்தப் பக்கம் செல்வதற்கு சரியான பாதை கிடையாது. அங்கிருந்து இடது புறம் ஆண்களுக்கான படித்துறை. வலதுபுறம் ஆண்களும் பெண்களும் குளிக்கக்கூடிய மிக நீளமான படிக்கட்டுகள் கொண்ட நடுவில் தடுப்பும் கொண்ட படித்துறை. நடுவில் உள்ள படித்துறையில் பெண்கள் மட்டுமே. ஆண்கள் செல்ல அனுமதியில்லை. பத்மினிக்கு எப்போதும் நடுத்துறைதான். இப்போது குளம் நீரின்றி வறண்டு நிலம் பொருக்குத் தட்டியிருந்தது. வெடித்து விட்டிருந்த நிலத்தின் மண் கட்டிகள் தோண்டி எடுக்கப்பட்டிருந்த அடையாளம் காட்டி வாய் பிளந்திருந்தன.
அங்கங்கே பத்தடி ஆழத்தில் குழி தோண்டி ஊறி வரும் தண்ணீரை கயிறு கட்டிய வாளியினை குழிக்குள் செலுத்தி தண்ணீரை சேமித்து வெளியே இழுத்து குடத்தில் நிரப்பிக்கொண்டு வீட்டுக்குப் போனார்கள். நிறைய நீர் ஊற்று அங்கங்கே தோண்டப்பட்டிருந்தன. பத்மினி பொருக்கு மண்ணின் மீது நடந்து நடுக்குளத்துக்கு வந்து நின்றாள். ஒரு நொடி தன் நெஞ்சின் மீது கைவைத்து இறுகப் பிடித்தாள். விஜய்ராஜின் விரல்கள் தண்ணீருக்குள்ளிருந்து நீண்டு அவளின் மார்பின் நடுவில் போடப்பட்டிருக்கும் பாவாடை முடிச்சைத் தொட்டுத் திரும்பின. அவள் காலுக்குக் கீழே குளம் கரைந்தது.
——————
விஜய்ராஜ். எப்போதும் கண்களில் ஒரு இறுக்கமான சிரிப்பு உறைந்திருக்கும். செந்தூரப்பூவே விஜயகாந்த் ரசிகர் மன்ற பொறுப்பாளர் என்ற பதவிக்கு கீழே விஜய்ராஜ் என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். அதன் அருகில் கருகரு மீசையும் உப்பிய கன்னங்களும் கண்களில் சிரிப்புமாய் இருக்கும் விஜய்ராஜின் புகைப்படத்தைப் பார்க்கும் எந்தப் பெண்ணுமே ஒரு நொடி வாழ்ந்து விடைபெறுவாள். போட்டோவை விட நேரில் இன்னும் கறுப்பாயிருப்பான். இன்னும் பளிச்சென்று வெள்ளையாய் இருக்கும் சிரிப்பு. அவனின் பக்கத்தில் தன்னை வைத்துப் பார்க்கும்போது தான் எவ்வளவு சிகப்பு என்று எண்ணி பூரித்துப் போவாள் பத்மினி.
விஜய்ராஜுக்கு அங்காடியில் அரிசி, சீனி அளந்து போடும் வேலை. எல்லோரிடமும் அளந்து அளந்துதான் பேசுவான் என்றாலும் பத்மினியிடம் மட்டும் அளவு தாண்டி கொஞ்சம் அதிகமாகவே. இது அரிசி, சீனி, கோதுமையிலும் தொடரும். அன்றும் அங்காடிக்குப் புறப்பட்டாள் பத்மினி. மேலே தெரிந்த கரண்ட் கம்பியின் மீது சிக்கி படபடத்துக் கொண்டிருந்தது அறுந்த பட்டத்தின் வால். வாலின் நிழல் சாலையில் விரவியிருந்த வெயிலில் பாம்பின் நிழலாய் நெளிந்ததைப் பார்த்தபடி காலை வைத்துக் கடந்தாள் பத்மினி. இரண்டு கைகளாலும் சைக்கிள் ஹேண்டில்பாரைப் பிடித்துக்கொண்டு தள்ளியபடி செல்வதற்கு சிரமமாக இருந்தது. பத்மினியின் நிதானமான உயரத்துக்கு சைக்கிளைப் பிடிக்க லேசாக கூன் போட வேண்டியிருந்தது. அதுவே அவளுக்கு மிக அசெளகர்யமாய் தெரிந்தது. பத்மினிக்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது.
அங்காடியில் சொற்பமாய் கூட்டம் சேர்ந்திருந்தது. நேற்றே வெளியில் உள்ள பலகையில் எழுதிப் போட்டுவிட்டார்கள். நாளை அரிசி, மண்ணெண்ணெய், சீனி போடப்படும். பத்மினிக்கு அரிசி மட்டும்தான் வேண்டும். பில் போடும் இடத்தில் ஆட்கள் யாருமில்லை. மண்ணெண்ணெய் வாங்குமிடத்தில்தான் கூட்டம் இருந்தது. இயல்பாக பார்ப்பதுபோல் கடை உள்ளே கண் ஓட்டினாள் பத்மினி. விஜய்ராஜைக் கண்டதும் அவசரமாய் பார்வையைத் திருப்பினாள். இரண்டு சிட்டுக்குருவிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகளின் மீது சிறிய சத்தத்துடன் தவ்விக் குதித்துக் கொண்டிருந்தன.
அவள் ரேஷன் கார்டை நீட்டினாள். பில் போடுபவன் கார்டை வாங்கி அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு சிரித்தானா என்று அவள் பார்ப்பதற்குள் தலையைக் குனிந்து பில் போடத் தொடங்கினான். ஜன்னல் வழியே உள்ளே பார்த்தாள். அவளையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தான் விஜய்ராஜ். கைகள் அரிசி மூட்டையின் முடிச்சை தானாய் அவிழ்த்துக்கொண்டிருந்தன. பில்லை வாங்கிக்கொண்டு கடை வாசலுக்கு வந்தவள் சாலை முனையைப் பார்த்தாள். வெயில் பளபளத்து நீண்டிருந்த சாலையை அளந்தபடி வந்துகொண்டிருந்தாள் அஞ்சம்மாள். அம்மாவைப் பார்த்ததும் சலிப்பாய் முகத்தைச் சுளித்த பத்மினி அங்காடி உள்ளே திரும்பி விஜய்ராஜைப் பார்த்தாள். அவன் அரிசியை அளந்து சாக்கு மூட்டையில் கொட்டும்போது அவன் காதுக்கு மட்டும் கேட்கும்படியாய், ‘‘சாயங்காலம் கொளத்துக்கு மறக்காம வந்துடு. பேசணும்” என்றாள். விஜய்ராஜ் எதுவும் பதில் பேசவில்லை.
தாவணி ஜாக்கெட் பிரா அவிழ்த்து வைத்துவிட்டு பாவாடையை மட்டும் மார்பு வரை ஏற்றிக்கட்டி முடிச்சிட்டாள். ஒரு கையால் பாவாடையின் கீழே சேர்த்துப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு படியாய் கால்வைத்து இறங்கி குளத்துக்குள் நழுவினாள். பாவாடையை இறுகப் பிடித்திருந்ததில் உள்ளிருந்த காற்று சட்டென்று உப்பி சில நொடிகளுக்கு வெங்காயத் தாமரை போல் மிதந்தாள் பத்மினி. கால்களை உதைத்து நகர நகர கையின் பிடி தளர்ந்து பாவாடை நீரில் நனைந்தது. சாயங்கால அக்கரைக்குளத்தின் மீது லேசான வெயிலின் மிச்சம் படிந்திருந்தது. வாய் நிறைய தண்ணீரைச் சேர்த்து கன்னத்தை உப்பலாக்கி உதடுகள் குவித்து தண்ணீரை வெளியேற்றினாள். கால்கள் நீரை உதைக்க கைகளால் இரு பக்கமும் தண்ணீரை விலக்கி விலக்கி நீச்சலடித்தாள்.
இந்நேரம் ஆண்கள் துறையிலிருந்து புறப்பட்டு விஜய்ராஜ் நடு குளத்துக்கு வந்திருப்பான் என்று எண்ணி வேகமாய் கைகளை அசைத்தாள். நீரின் அலைகள் பெரிதாகி பெரிதாகி அவள் பின்னே கடந்து கரையை முட்டிக் கலைந்தன. நடு குளத்தில் விஜய்ராஜ் காத்திருந்தான். பத்மினிக்கு பத்து நிமிடம் முன்னதாக வந்துவிடும் அவன் ஓர் ஆள் நிற்கும் அளவுக்கு சேற்றுப்பகுதியைத் தேடி காலூன்றி நின்றுகொள்வான். முன்னேயே பின்னேயோ நகர்ந்தால் ஆழம் காட்டும் குளம். முகம் நீரில் மூழ்க வாய்ப்புண்டு என்பதாலும் நின்றுகொண்டுதான் பத்மினியிடம் பேச முடியும் என்பதாலும் இப்படி ஒரு ஏற்பாடு நடக்கும். மறைந்து கொண்டிருக்கும் சூரியப் பின்னணியில் விஜய்ராஜ் இன்னும் கறுப்பாகத் தெரிந்தான்.
பத்மினி நெருங்கியதும் கை நிறைய நீரை அள்ளி அவள் மீது விசிறினான். அவன் கை தொடும் தூரத்தில் நின்றுகொண்டு கால்களால் சேறினை விரவி கட்டை விரலை ஊன்றி தன்னை நீர் நடுவே நிறுத்திக்கொண்டாள் பத்மினி. லேசாக மூச்சிரைத்தது. தூரமாய் படித்துறைகளில் அமர்ந்து துணி துவைத்துக் கொண்டிருந்தவர்களும் குளித்துக் கொண்டிருந்தவர்களும் சிறு உருண்டை உருவமாய் தெரிந்தார்கள். ‘‘எங்கம்மா டெய்லி என் உயிர எடுக்குதுடா…” என்றாள் விஜய்ராஜின் முகம் பார்த்தபடி.
இரு கைகளாலும் நீரை அள்ளி முகத்தைக் கழுவிக்கொண்டான். ‘‘நான் என்ன பண்ண முடியும். நீதான் எடுத்துச் சொல்லணும். உங்கம்மா ஒத்துக்கிச்சின்னா நான் என் அம்மாவோட வந்து மொறப்படி உன்ன பொண்ணு கேட்க முடியும்னு அன்னிக்கே சொல்லிட்டேன்ல…” தண்ணீருக்குள் நீண்ட விஜய்ராஜின் கைகள் பத்மினியின் கைகளைத் தேடிப்பிடித்து இறுக்கின. ஜட்டி மட்டும் அணிந்திருந்த விஜய்ராஜின் உடல் வெப்பத்தை தண்ணீர் பத்மினிக்குக் கடத்திக் கொண்டிருந்தது.
‘‘பரவையில இருக்குற அதோட நாத்தனார் மவனுக்கு என்னைய முடிக்கணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டுருக்கு. எனக்கு பயமாருக்குடா… கைய புடிச்சி நெறிக்காதடா எரும…” தண்ணீருக்குள் கைகளை உதறினாள் பத்மினி. ஏதோ ஓர் உருவம் அவர்களை நோக்கி வந்தது. ‘‘யாரது… இங்க வர்ற மாதிரி இருக்கு.” கைகளை விட்டு இருவரும் வரும் உருவத்தையே பார்த்தனர். கைகளை வீசி வீசி வந்த அந்த உருவம் நின்று நிதானித்தது. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு வந்த வழியே நீச்சலடித்து நகர்ந்தது.
‘‘சரி விடு. யாரோ வந்துட்டுப் போறாங்க. நீ ஏன் கைய உருவிட்டே…” மீண்டும் அவள் கையைத் தேடும் சாக்கில் இடுப்பில் கையை வைத்தான். ‘‘டேய்…” என்றபடி சற்றுப் பின்னோக்கி நகர்ந்தாள். அவர்கள் இருவரையும் சுற்றி ஒரு மெல்லிய நீர் வளையம் உருவாகி விரிந்துகொண்டே சென்றது. வளையத்தின் பாதையில் கண்களைச் செலுத்திய விஜய்ராஜ் புருவம் சுருக்கினான். நீர்ப்பாம்பு. பத்மினியின் முதுகுப்புறத்திலிருந்து தலையை மட்டும் நீருக்கு வெளியே நீட்டி உடல் நெளித்து வந்து கொண்டிருந்தது. ‘‘ஏய் அசையாத..” என்றபடி பத்மினியைத் தன் பக்கம் இழுத்து அணைத்து நிறுத்தி பாம்பு வரும் திசையைக் கை காட்டினான். பத்மினியின் நெஞ்சின் அதிர்வை உணர்ந்தான் விஜய்ராஜ். ‘‘தண்ணிப்பாம்புதான். வெரட்டிவிட்டா போயிடும். ஒண்ணும் பண்ணாது.” கை நிறைய தண்ணீர் அள்ளி பாம்பு வந்த திசையில் எறிந்தான்.
சட்டென்று தண்ணீருக்குள் தலையை மூழ்கடித்துக் காணாமல் போனது பாம்பு. அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இன்னொரு திசையில் எழுந்து வேகமாய் ஊர்ந்து சென்றது. பத்மினி விஜய்ராஜின் இடுப்பை ஒட்டி நின்றிருந்தாள். அவன் இவளை விட கொஞ்சம் உயரம். அவன் நின்றிருந்த இடத்தில் சேற்றுமண் சற்று ஆழத்தில் இருந்தது. பத்மினியால் கால் ஊன்றி நிற்க முடியவில்லை. கட்டைவிரல் ஊன்றி சமாளித்தாலும் மூக்கு வரை தண்ணீர் தளும்பியது. விஜய்ராஜின் தோள் மீது சாய்ந்து தாடையை ஊன்றினால் ஒழிய பத்மினியால் நிற்க முடியாது. கழுத்தில் கை வைத்து அணைத்தாள். பத்மினியின் இரு தொடைகளுக்கு நடுவில் விஜய்ராஜின் ஒற்றைக்கால் தாங்கியது. நீரில் நனைந்து மூழ்கியிருந்த விஜய்ராஜின் நெஞ்சு ரோமங்களை தன் கையால் அளைந்தவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். ‘‘பாம்பு போயிடிச்சி…” என்றபடி திரும்பி நின்று அவளை இறுக்கமாய் அணைத்தான்.
மெல்லிய பாவாடையின் பின்னிருந்த பத்மினியின் உடல் அச்சாய் அவன் உடல் மீது பதிந்தது. விபரீதமாய் ஏதோ உணர்ந்தவள் அவன் தோள்களில் கை வைத்து விலகினாள். ‘‘நான் போறேன்… நாளைக்கி பாக்கலாம்…” கைகளை அகல வீசி கால்களால் நீரை எட்டி உதைத்து விலகினாள். தண்ணீரின் அலை விஜய்ராஜின் காமத்தில் மோதியது.
அன்று இரவு பாயில் மலலாந்து படுத்துக்கொண்டு விட்டத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த பத்மினியை எரிச்சலாகப் பார்த்தாள் அஞ்சம்மாள். ‘‘ஏன்டி நான் என்ன சொல்லிட்டுருக்கேன். கொஞ்சம்கூட காதுல வாங்காம வளர்ந்த கழுத மாதிரி மல்லாக்கப் படுத்து விட்டத்தையே பாத்துட்டுருக்க சனியனே…” சனியனே என்றதும் திரும்பிப் பார்த்தாள் பத்மினி.
‘‘ஏம்மா கத்துற…”
‘‘பின்ன என்னடி. ஒன்ன புருசன் வீட்டுக்கு அனுப்பி விட்டேன்னா நான் நிம்மதியா செத்த கண் மூடுவேன்ல. வயசுப் புள்ளைய வீட்டுல வைக்கிறதும் வயித்துல நெருப்ப கட்டிக்கிறதும் ஒண்ணுதான்டி… ஒன் மனசுல என்ன நெனச்சிட்ருக்க நீயி… கேள்விப்படுறது எதுவும் நல்லால்ல ஆமாம்…”
‘‘அய்யய்ய அம்மா… செத்த சும்மாதான் இரேன் நொய்யி நொய்யினுகிட்டு. அங்காடில வேலபாக்குற விஜய்ராஜ எனக்குப் புடிச்சிருக்கு. அவருக்கும் என்னைய புடிச்சிருக்கு. நீ ம்னு சொன்னா அவர் அம்மாவோட வந்து பொண்ணு கேக்குறேன்னு சொல்லிருக்காரு….” எவ்வித பயமுமின்றி பலமுறை ஒத்திகை பார்த்த வார்த்தைகளாய் வந்து விழுந்தன.
‘‘ஏது… இந்த நாலு வீடு தள்ளி இருக்கிற பயலா…அங்கேர்ந்து இங்க வந்து பொண்ணு கேக்குறாராமாம்… அடி செருப்பால. சாதி ஒண்ணா இருந்தா சம்பந்தம் பேசிடலாம்னு நெனைக்கிறானா… நான் தான் இந்த சின்ன வட்டத்துல மாட்டி வெளில வர முடியாம கெடக்கேன். ஏன்டி நாம பொறந்த இந்த ஈன சாதில சொந்த வயவெளி நெலம் நீச்சுன்னு யாரையாவது பாக்க முடியுமா… இவன் அரிசி அளந்து கொட்டி சம்பாரிக்கிறான். அங்க ஒன் ஒறவு நெல்லு வெளவிச்சு ஊருக்கு குடுக்குது. நீ வாக்கப்பட்டு போற இடத்துலையாவது மூணு வேளையும் அரிசி சோறு சாப்புடணும்டி… இவன கெட்டுனேன்னு வச்சிக்க. சோத்துக்கு நத்தைய பொறுக்க விட்ருவான். சொல்லிப்புட்டேன். எவனும் இங்க பொண்ணு கேட்டு வரவேணாம். நான் நாளானைக்கே போயி தேதி குறிச்சிட்டு வந்துடுறேன்…”
பாவாடை சாமிக்கும் பத்மினிக்கும் அடுத்த ஒரு வாரத்தில் கல்யாணம் நடந்தது. விஜய்ராஜ் தந்த நீர் சூட்டின் வெம்மை தகிப்பு ஆறாமலே பாவாடை சாமிக்கு கழுத்தை நீட்டினாள் பத்மினி. வருடங்கள் கடந்தன. வயலிலிருந்து வீட்டுக்கு வரும் பாவாடை சாமி பக்கத்தில் படுத்திருக்கும் பத்மினியின் இளமையை கண்களால் மட்டுமே ரசித்துப் பழகினான். பத்மினியின் பெருமூச்சின் அனல் அந்த வீட்டின் பத்தாய இடுக்குகளில் பதுங்கி நிறைந்ததைக் கவனிக்க ஆளில்லாமல் போனது. மறு கோடைக்கு ஊருக்கு வந்தாள் பத்மினி. விஜய்ராஜுக்கு திருமணம் ஆகியிருந்ததை ஒட்டப்பட்டிருந்த ரசிகர்மன்ற போஸ்டர்களில் பார்த்தாள். மனதில் அப்பிக்கொண்ட துக்கத்துடன் நடு குளம் வந்து நின்றாள்.
நீர் வற்றியவுடன் குளத்தின் நடுப்பகுதி மாறிவிடுகிறது. தானும் விஜய்ராஜும் அணைத்தபடி நின்றிருந்த எதுவென்று தெரியாமல் சுற்றுமுற்றும் பார்த்துக் கண் கலங்கினாள். அவளை நோக்கி அஞ்சம்மாள் ஓடி வருவது தெரிந்தது. இரு கைகளாலும் மாரில் அடித்துக்கொண்டே வந்தாள். பத்மினி கண்ணுக்குச் சிக்கியதும், அய்யய்யோ பத்மினி…ஒன் தாலிக்கி ஆயுசு இல்லாம போச்சேடி… ஒன் பொட்டு நெரந்தரமா போச்சேடி…” தலையில் அடித்துக்கொண்டே பத்மினியைக் கட்டிப் பிடித்தாள். கொளத்துக்கு குளிக்கப்போன ஒன் புருசனுக்கு வலிப்பு வந்து வெட்டி இழுத்து தண்ணியில சமாதியாயிட்டாண்டி என் செல்லமே…” பத்மினி நின்றிருந்த குளத்தின் பொருக்கு மண்ணுக்குக் கீழே ஊற்று சரசரவென ஊறத் தொடங்கியது.
.
கணேசகுமாரன்
நாவல், சிறுகதைகள், கவிதைகள் என தொடர்ந்து எழுதிவருகிறார். “எறும்பு”. ’எழுத்தாளன்’, ’சிலிங்’, ‘சலூனில் காத்திருக்கிறான் சிந்துபாத்’, ’காந்தியின் தாடை’, ’பைத்திய ருசி’, ‘பித்து’, ’மெனிஞ்சியோமா’, ’மிஷன் காம்பெளண்ட்’ ஆகிய புத்தகங்கள் வெளிவந்துள்ளன.