1.
காற்றால் உடையாது
நீரால் அழியாது
நெருப்பால் வேகாது
வருடங்கள் ஆயினும் வளர்ந்து கொண்டே இருக்கும்
எங்கள்
நட்பெனும் விருட்சம்
2.
உள்ளிருக்கும் பாரத்தையெல்லாம்
உடனே கரைத்திடும்
சஞ்சீவி மூலிகை
சிரிப்பு
3.
உடனடி ஞானம்
நட்பெனும் போதி
4.
எங்கெங்கோ சுற்றினாலும்
இறுதியில் சங்கமம்
நட்பெனும் கடலில்
5.
எத்தனை முறை வீழ்ந்திடினும்
மீண்டும் எழுந்திடுவேன்
உன் கரம் போதும் நண்பா
6.
காரணமின்றி நாம் கைகோர்க்கவில்லை நண்பா
மாயக்கரமொன்று
சேர்த்திருக்கிறது நம்மை
7.
அடிபட்ட காலோடு
அமர்ந்திருந்தேன் தனியே
நண்பன் அழைத்ததும்
எழுந்து ஓடினேன்
8.
அத்தனை சிகரங்களிலும் நம் காலடி பதிப்போம்
எழுந்து வா நண்பா
உறங்கியது போதும்
9.
உன் புன்னகையைக்
கையிலேந்தி
இறுதி ஆயுள் வரை
ஓடித்தீர்ப்பேன் நண்பா
10.
பற்றிய கையை என்றும் விடாமல்
வா நண்பா
மிச்ச தூரத்தையும்
சிரித்தே கடந்திடுவோம்.
00

கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.

