மகா.இராஜராஜசோழன்
இந்த இரவு எல்லா இரவைப் போலவும் அவளுக்கு நகர்ந்துவிட வாய்ப்பில்லை.
முதல் மாடியில் அமர்ந்து நிலா வடிவத்தில் கம்பிகளை வளைத்துச் செய்யப்பட்ட சன்னலின் மூன்றாம் கதவுகளையும் திறந்து வைத்துவிட்டு எதிர் வீட்டில் வெளிப்புரமாக அமைக்கப்பட்டிருந்த மாடிப்படிகட்டையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
இன்னும் அவளுக்குப் பேச தெரியாது. மழலைப் பேச்சை இப்போதுதான் தொடங்கி இருக்கிறாள். வாயிலிருந்து வரும் எச்சிலோடு சேர்ந்து சொற்கள் தாத்தா என்றும் ஆச்சி என்றும் அண்ணா என்றும் வழுக்கி விழுகின்றன.
அவள் உயரம் நாற்காலியின் மீது ஏறி நின்றால் சன்னலின் பாதி உயரம் வளர்ந்திருக்கிறாள். இப்போதைக்கு எதிர் வீட்டுப் படிக்கட்டில் எப்போதும் படுத்துத் தூங்கும் பிளாக்கியைப் பார்ப்பதற்குப் போதுமான உயரம்.
முதலில் அவளுக்கு அறிமுகமாகி இருக்கும் விலங்கு பிளாக்கிதான். அவள் குறும்பு செய்தால் இதோ எலி பாரு, இதோ பூனை பாரு, என்று
சொல்லி பயம்காட்டவோ , விளையாட்டு காட்டவோ எந்த உயிரினமும் குறுக்கும் நெடுக்குமாக ஓட முடியாத அடுக்கு மாடிக்குடியிருப்பு வாழ்க்கை.
திலிபனின் வாழ்க்கை அப்படியானது அல்ல; கிராமத்து வாழ்க்கை. ஆடு, மாடு, நாய், பூனை, கோழி என எல்லாமும் தன்னைச் சூழ்ந்திருக்க வளர்ந்தவர். அவரின் சிந்தனை இப்போது தன் இளமை காலம் நோக்கி நகர்ந்திருந்தது.
“திலிபன் டேய்! உன்னதான் காதுல விழுதா இல்லையா?”
“விழுது தாத்தா ஏன் கத்தறீங்க?”
“என்ன கத்தறேனா? உனக்கு நல்லது சொல்ல கூப்பிட்டா கத்தறேனா? “
“மன்னிச்சுடுங்க தாத்தா. சொல்லுங்க ஏன் கூப்பிட்டிங்க தாத்தா?”
“பக்கத்துத் தெருவுல இருந்து தாத்தா வருவாருள அவர் வீடு தெரியுமா?”
“தெரியும் தாத்தா? செட்டிதாத்தா வீடு தானே சொல்றீங்க?”
“சரியா சொன்ன திலிப், அவங்க வீட்டுல ஒரு வெள்ளநாய் இருக்கு பாத்து இருக்கியா ? “
“பாத்து இருக்கேன் தாத்தா…”
“அந்த நாய் குட்டி போட்டு இருக்கு”
“அப்படியா தாத்தா… ஐ ஜாலி தாத்தா”
“என்னது ஜாலியா? அந்த நாய் குட்டி போட்டதுல இருந்து வரவங்க போறவங்க எல்லாறையும் துரத்திட்டுக் கடிக்க ஓடி வருதுடா… அந்தப் பக்கம் போனினா கவனமா போ… என்ன சொல்றது புரியுதா? “
கையில் பனங்காயால் செய்த வண்டியை முன்னும் பின்னும் அசைத்துக் கொண்டே
“சரி தாத்தா கவனமா இருக்கேன் தாத்தா …
தாத்தா தாத்தா நாய் கடிச்சுட்டா என்ன செய்யனும் தாத்தா?”
“நாய் கடிச்சுட்டா அப்பா அம்மாகிட்ட மறைக்காம சொல்லனும் “
“சொன்னா அம்மா திட்டுவாங்க தாத்தா”
“திட்ட மாட்டாங்க திலிப்; சொல்லாம மறைச்சிட்டா ரேபிஸ் நோய் வரும் உடல் நலம் இல்லாம போய்டும்”
“அப்படியா தாத்தா? அம்மாவும் இப்படித்தான் சொன்னாங்க? நாய் கடிச்சுச்சுனா அம்மா அப்பாகிட்ட சொல்றேன் தாத்தா; மறைக்கலாம் மாட்டேன் தாத்தா…”
சொல்லிக் கொண்டே பனங்காய் வண்டியை வீதியில் உருட்டியபடி தன் நண்பனைக் கூப்பிட்டுக் கொண்டே ஓடத் தொடங்கிவிட்டான்.
அவன் மனதில் இப்போது ஆசை வந்துவிட்டது எப்படியும் நாய்க்குட்டிகளைப் பார்த்துவிட வேண்டும் என்று; பனங்காய் வண்டியை உருட்டிக் கொண்டே நாய் இருக்கும் இடத்திற்குப் போய் நின்று நாயைப் பார்க்கிறான்.
அந்த வெள்ளை நாய் ஆறு குட்டிகளோடு வீட்டு வாசலில் நின்று குட்டிகளுக்குப் பாலூட்டிக் கொண்டிருக்கிறது.
ஆறு குட்டிகளும் கருப்பும் வெள்ளையுமாகத் தாய் நாயின் மடிக்கு எம்பியவாறு தலையை மேலை நிமிர்த்தி காம்புகளில் வாய்வைத்துப் பால் குடித்துக் கொண்டிருந்தன.
திலிப் பார்த்துவிட்டான். அமைதியாக நாய் துரத்த முடியாத தூரத்தில் நின்று கொண்டு; ஒன்று இரண்டு எனக் குட்டிகளை எண்ணியவன் வீட்டுக்கு ஓடி வருகிறான்; ஓடிவந்தவன்.
“தாத்தா தாத்தா நாய்க்குட்டிகளைப் பார்த்துட்டேன். அழகா இருக்குத் தாத்தா… இரண்டு வெள்ளைக்குட்டி இரண்டு கருப்புக்குட்டி இரண்டு குட்டிங்க கருப்பு நிறமும் வெள்ளை நிறமும் கலந்து இருந்துச்சி தாத்தா, அதுங்கல பார்க்கவே அழகா இருந்துச்சி தாத்தா” மகிழ்ச்சியில் சொல்லிக் கொண்டிருக்கிறான்.
தாத்தா காதில் வாங்கியது பாதி வாங்காதது பாதியுமாக வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டிருந்தார்.
தன் இளமைகால நினைவுகளில் மூழ்கி இருந்த திலிப்பை மகள் இயல்மொழி்
“அப்பா அப்பா ” எனத் தட்டுகிறாள். திரும்பிப் பார்க்கிறார், வண்ணம் தீட்டும் ஓவியப் புத்தகத்தில் நாய் இருக்கும் பக்கத்தைக் காட்டி
“அப்பா அப்பா த்தோதோ த்த்தோதோ” என்கிறாள்.
“ஆமாம் இயல்மொழி த்தோ த்தோ எங்க நாய் சொல்லு, நாய் சொல்லு பார்க்கலாம்.
அவளுக்கு இன்னும் நாய் என்ற சொல்லை அவளால் சொல்ல முடியவில்லை.
ஓவியப் புத்தகத்தைத் தூக்கிக் கொண்டு ஜன்னல் இருக்கும் ஹாலுக்கு ஓடுகிறாள்.
”இயல்மொழி பிளாக்கி எங்க” என்று கேட்ட உடனே ஓவியப்புத்தகத்தைக் கீழே போட்டுவிட்டு நாற்காலியை ஜன்னல் பக்கம் வேகமாக நகர்த்தி் அதன் மீது ஏறி நின்று ஜன்னல் வழியே எதிர் வீட்டு வாசலிலைப் பார்க்கிறாள். அங்கே பிளாக்கி இல்லை. படிக்கட்டுகள் மட்டுமே தெரிகின்றன.
அதிர்கிறாள். பிளாக்கி இல்லாமையை அவளால் சொற்களால் சொல்லமுடியவில்லை. அந்தச் சொல்லை இன்னும் அவள் கற்றுக் கொள்ளவில்லை.
“அப்பா அப்பா த்தோஓஓ த்தோஓஓ ஊ ஊஊ ஊஊ” இரண்டு கைகளையும் இல்லை என்பது போல விரித்துக்காட்டி மீண்டும் மீண்டும் “அப்பா த்ஒதோஓத் த்தோஓஓ ஊ ஊ ஊ” என்று நாய் இல்லாமையைத் தன் இயலாமையால் வெளிப்படுத்துகிறாள்.
நம்பிக்கைக்கும் அன்புக்கும் உரிய மனிதர்களை நாம் தொலைத்துவிட்டாள் என்ன உணர்வை அடைவோமோ அதே உணர்வைக் காணாமல் போன பிளாக்கியால் அவள் அடைகிறாள்.
இரண்டு நாட்கள் கடந்து போய்விட்டது பிளாக்கி வந்தபாடில்லை.
நாற்காலியின் மீது ஏறி நின்று கொண்டு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தவள்…
“அப்பா அப்பா த்தோஓஓ த்தோஓஓ ஊ ஊ ஊ ஊ ” என மகிழ்ச்சியில் கத்துகிறாள்.
இயல்மொழியின் தந்தை பிளாக்கி வந்துவிட்டது போல என நினைத்து; ஓடி ஜன்னலின் வழி எட்டிப் பார்க்கிறார். வெள்ளை நாய் ஒன்று எதிர் வீட்டின் படிக்கட்டில் ஏறி நிற்கிறது.
”இயல்மொழி உன்னோட நண்பன் பிளாக்கி வந்துட்டாம்மாஆஆஆ என மகிழ்ச்சியில் வெள்ளை நாயைக் கை நீட்டி மகளுக்குக் காட்டுகிறார்.
இயல்மொழி நாயைப் பார்த்து த்தோஓஓஓ த்தோஓஓ ஊ ஊ ஊ ஊ… எனக் கூறிக்கொண்டே நாயைப் பார்த்து கைகளால் சைகாட்டி வாவாவா த்தோஓ த்தோஓஓ வாவாவா என அழைத்துச் சிரிக்கிறாள்.
அன்பின் முன் நிறங்கள் ஒன்றும் பெரிதல்ல…
000


