“நம்காலத்தின்சிறந்தஉருதுக்கதைகள்’’

           “இப்போது ஒளியின் விதியை காற்று மட்டுமே தீர்மானிக்கும்

          ஆற்றல் கொண்ட விளக்கு மட்டுமே தொடர்ந்து எரியும்”

                                                                        -மாரார் பதயானி.

இந்திய இலக்கியத்திற்கு வளம் சேர்த்ததில் பெரும்பங்கு உருது மொழிக்கு உண்டு. மிகவும் பழமையும் இனிமையும், மரியாதையான பேச்சுமுறையும், செழுமையான இலக்கிய பாரம்பரியமும் கொண்ட மொழி. மக்களிடையேயும், கற்றவர்களிடமும் பெரும் செல்வாக்குடன் விளங்கிய மொழி.

கவிதைகள், பாடல்கள், கஸல்கள், சிறுகதைகள், நாவல்கள் என அதன் பங்களிப்பு அளப்பரியது.

நாவல்களின் அரசன் என்றழைக்கப்படும் முன்ஷி பிரேம்சந்த், புரட்சிக்கவிஞன் என்றழைக்கப்பட்ட ஜோஷ் மலிஹாபதி, சபீர் ஹாசன்கான், சையத் சாஸத் ஹைதர் ஹல்ராம், நியாஸ் ஃபதேபூரி, நிகர் பத்திரிக்கையின் ஆசிரியர் நியாஸ் முகம்மது கான் போன்றோர் ஆரம்ப கால உருது இலக்கியகர்த்தாக்கள். முற்போக்கு எழுத்தாளர் இயக்கம் உருவாகுவதற்கு முன் எழுதியவர்கள்.

பலவகையிலும் முன்ஷி பிரேம்சந்த் கதைகளை உருது சிறுகதைகளின் துவக்கப்புள்ளி எனலாம்.1932ல் வெளிவந்த “தீக்கதிர்கள்” என்ற தொகுப்பினை முற்போக்கு இயக்கத்தின் முதல் தொகுப்பு என்றழைக்கலாம். சாஸத் ஜாகீர், அகமத் அலி, முகம்மது உல் ஜாஃபர்,ரஷீத் ஜாஹான் ஆகியோர் அதில் பங்களிப்பு செய்திருந்தனர். அவர்களால் சித்தரிக்கப்பட்ட யதார்த்தவாதம்  என்பது அதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்த நெறிமுறைகளிலிருந்து விலகி சமூகத்தில் நிலவி வந்த பிற்போக்குத்தனங்களை, அவலங்களை அறச்சீற்றத்துடன் பதிவு செய்தது. சமூகத்தின் மீதான கோபத்தையும்,அதற்க்கெதிரான எழுச்சியையும் தீவிர மனநிலையில் வெளிப்படுத்திய கதைகளின் தொகுப்பு. மேற்க்கத்திய கல்விப்  பின்புலமும் இதற்கு ஒரு காரணம்.

ரஷீத் ஜாஹான் முக்கியமான பெண் படைப்பாளி. நேரடியான கதைக்கூறல் மொழியைக் கொண்டவை அவரது கதைகள். தனித்துவமான,எளிமையான பேச்சுவழக்கின் மூலம் உயிரோட்டமான ஆற்றல்மிக்க சூழலை தன் கதைகளில் தக்க வைத்துக் கொண்டவர். புது மருமகளின் புதிய மாறுதல்கள், ஏழைகளின் கடவுள், மற்றும் வெற்றிலை அவரது சிறந்த சிறுகதைகள். அகமது அலியின் என் அறை, மார்ச் மாத இரவு, சிறை, மரணத்திற்கு முன் ஆகிய கதைகள் இன்றும் அதிகம் வாசிக்கப்படுபவை.

சோதனை முயற்சியாக டி.எச்.லாரன்ஸ், ஜோம்ஸ் ஜாய்ஸை அடியேற்றி எழுதப்பட்ட கதைகள் காஸி அப்துல் கபூரின் “லைலாவின் கடிதங்கள்” மற்றும் நியாஸ் ஃபதேபூரின் “சொர்க்கத்தின் உண்மைகள்”.

பிரேம் சந்த் வழிவந்தவர்களாக சுதர்சன், அஸம் குர்வி, அலி அப்பாஸ் ஹூசைனி, சுஹைல், அகமதுவாதி மற்றும் அய்யதுல்லா அன்சாரியை குறிப்பிடலாம்.

அக்தர் அன்சாரி, அக்தர் அர்னன்பவி, பல்வந்த் சிங், தேவந்திர சத்யாதிரி, இஸ்மத் சுக்தாய், கிரிஷன் சந்தர், ராஜேந்திர சிங் பேடி, சதாத் ஹாசன் மண்டோ, உபேந்தர் நாத் அஷ்க் போன்றோர் முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனலாம். இவர்களின் பலபடைப்புகள் தமிழில் பலராலும் மொழி

பெயர்க்கப்பட்டுள்ளன. NBT உர்தூக் கதைகள் என்ற பெயரில் இரண்டு தொகுப்புகளை வெளியிட்டுள்ளது. (மொழிபெயர்ப்பாளர் ரா.விழிநாதன்) .

இஸ்லாமியருக்கு எதிராக நிலவி வரும் இன்றைய வெறுப்பு மனநிலையில் அதே அளவிற்கு செல்வாக்குடன் உருது மொழி இலக்கியம் செயல்படுகிறதா என்பது பெரும் கேள்விக்குறியது. கலீல் உர் ரஹ்மான் ஹஸ்மி உருது இலக்கியத்தின் முக்கிய விமர்சகர். தன் நூலில் உருதுக் கவிதையும், கஸல்களும் தன் ஆன்மாவை விட்டு விட்டன. தற்போது  இருப்பது உயிரற்ற உடல்களே என ஆதங்கப்படுகிறார். இத்தகைய சூழலில் தான் நவீன உருது மொழி எழுத்தாளர்களின் படைப்புகளை ரக்ஷந்தா ஜலீல் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார்.

ரக்ஷந்தா ஜலீல் (பிறப்பு: ஜூலை 20, 1963). இந்திய எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், விமர்சகர் மற்றும் இலக்கிய வரலாற்றாசிரியர் ஆவார்.

“டெல்லியின் அதிகம் அறியப்படாத நினைவுச்சின்னங்கள்’‘ என்ற அவரது புத்தகத்தின் மூலம் பெரிதும் அறியப்பட்டவர்: அவரது “விடுதலை மற்றும் பிற கதைகள்”  சிறுகதை தொகுப்பு நல்ல வரவேற்பைப் பெற்றது. உருது இலக்கியத்தில் பிரதிபலித்த முற்போக்கு எழுத்தாளர்களின் இயக்கம் பற்றியது அவரது முனைவர் பட்டம். ஹிந்தி-உருது இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட “ஹிந்துஸ்தானி ஆவாஸ்” என்ற அமைப்பை ஜலீல் நடத்தி வருகிறார். ரக்ஷந்தா ஜலீலின் புதிய மொழிபெயர்ப்புத்   தொகுப்பு “நம் காலத்தின் சிறந்த உருதுக் கதைகள்’.

உருது சிறுகதைகளின்  நான்கு தூண்கள் என அறியப்படும் சதாத் ஹாசன் மண்டோ, இக்மத்சுக்தாய், ராஜிந்நர் சிங் பேடி மற்றும் கிரிஷன் சந்தர்  இவர்களைத் தவிர்த்து பிற நவீன உருது எழுத்தாளர்களைப் பிரதிநிதிப்படுத்தும் விதமாக அமைந்த தொகுப்பு. உருது மொழியின் பழம்பெருமைகளைத் தவிர்த்து இன்றைய காலகட்டத்தில் அம்மொழியில் நிகழ்ந்துவரும் மாற்றங்களை கவனத்தில் கொண்டு இத்தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது என தொகுப்பாசிரியர் குறிப்பிடுவது முக்கியமானது.

உருதுபுனைக் கதைகள் முஸ்லீம் சமூகத்தைப் பற்றி மட்டுமே பேசக்கூடியவை என்பதை தொகுப்பின் முதல் கதையே மறுதலிக்கின்றது. சுரேந்திர பிரசாத்தின் “சோளக் கொல்லை பொம்மை” பிரேம்சந்தின் படைப்பான கோடனின் மையப் பத்திரமான முற்போக்கு சிந்தனை கொண்ட ஏழை விவசாயியான ஹோரி இக்கதையில் வயதான மனிதராக தனது மகன்களில் ஒருத்தனை விபத்திலும், மற்றொருவனை போலீஸ் என்கவுண்டரிலும் பறிகொடுத்தவராக வருகிறார். ஜந்து பேரக் குழந்தைகளுடன் குடும்பத்தை காப்பதற்காக இன்றும் கடுமையாக உழைக்கும் விவசாயி அவர். கடும் உழைப்பிற்குப் பிறகும் அவர் அடைவது வறுமையும் விரக்தி மட்டுமே. சுதந்திரத்திற்குப் பின் விவசாயிகளின் வாழ்வில் என்ன வகையான மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன? என  அவர் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. இன்று பிரிட்டிஷ் ஆட்சியில்லை, மாறாக நிலச்சுவன்தாதர்களின் பிடியில் விவசாயி சிக்கி உள்ளான். அதிகாரத்தின் கைகளுக்குள் அடிமைப்பட்டு கிடப்பதில் எந்த மாற்றமும் இல்லை. விவசாயின் சதையைப்  பிடுங்கி இரத்தத்தை உறிஞ்சும் வேதனையிலிருந்து அவனுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை. வாழ்வின் இறுதி கட்டத்தில் இருக்கும் ஹோரி தான்  இறந்தபின் தன்னை தன் வயலிலேயே சோளக் கொல்லை பொம்மையாக தொங்கவிடச் சொல்கிறார். அதன்மூலம் தன் வயலையும் பிற வயல்களையும் காப்பேன் என உறுதியளிக்கிறார். அதேபோல் அவர் இறந்ததும் அவரது பேரக் குழந்தைகள் அவரது உடலை சோளக் கொல்லை பொம்மையாக தொங்க விடுகிறார்கள்.  உலகின் எந்தவொரு பகுதியைச் சேர்ந்த விவசாயிக்கும் இது பொருந்தும். பயிரிடப்பட்டுள்ள பயிர்கள், வயலில் பாடும் பாடல்கள், ஓரிடத்தில் தேங்கி நின்றுவிட்டதான மனநிலை என விவரிப்பதன் மூலம் முழு நிலபரப்பின் தன்மையும் காட்சிபடுத்தப்படுகிறது.

தொகுப்பின் முதல் கதையில் பொதிந்துக் கிடக்கும் வெறுமை ஹைதரின் “அரைவழிப்பார்வையில்” கைவிப்பட்ட வயலின் பெட்டியில் பிரதிபலிக்கிறது. மாறுபட்ட வாழ்க்கைச் சூழல் கொண்ட இருபெண்கள் அவர்களுக்குச் சம்பந்தமற்ற ஓர் ஆணை அடைய விரும்புவதை விவரிக்கிறது. காதல் மற்றும் திருமணம் இருவேறு விஷயங்கள்.இங்கு அவை தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப பண்டமாக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப தீர்த்து வைக்கப்படுகிறது. இக்கதையில் புதிதாக உருவாகிவரும் சூழலுக்கு ஏற்றவாறு காதல் பலவீனமானதாக  பயன்படுத்தப்படுகிறது.இக்கதை முழுதும் தனித்த இசைத் தன்மை கூடிய பழைய பாடல்கள் மூலம் பிரிவின் துயரத்தை விவரித்துச் செல்கிறார் ஹைதர். இக்கதையின் இறுதிவரிகள்

“Kaaga Saba tan khaiyyo, chun chun  khaiyyo Maas

Dui naina mat khaiyyo piya Milan ki aas”.

ஓ காகங்களே உடலின் ஒவ்வொரு பாகத்தையும்

சுத்தமாக உண்ணுங்கள்

காதலியை சந்திக்கும் நம்பிக்கையில் நிறைந்திருக்கும்

கண்களை மட்டும் விட்டுவிடுங்கள்…

என கவிதையாக முடிகிறது.

கஸ்னாஃபரின் “காலித்தின் விருத்தசேதனம்”,குல்ஜாரின் “கற்காலம்”, அப்துல் சமதின் “நிறுத்தப்பட்ட புகைவண்டி”, அன்வர்கூமாரின் “கப்பலில் என்ன நடந்தது”, தாரிக் சத்தாரின் “வரிசை”, மற்றும் அலி இமாம் நக்வியின் “தூங்கர்வாடியின் கழுகுகள்” கதைகளின் அடி இழையாக  இருப்பது வன்முறையால் தூண்டப்பட்ட பயம்.

விருத்தசேதனம் செய்துக் கொள்ள இருக்கும் சிறுவன் காலித்தின் பார்வையில் விருத்தசேதனம் கதை சொல்லப்படுகிறது. சமீப காலங்களில் பிறப்புறுப்பைச் சார்ந்து நடைபெறும் வன்முறை, விருத்தசேதனம் செய்துக் கொண்டவர்கள் தாக்கப்படுவதும், உயிரிழப்பிற்கு உள்ளாவதும் சிறுவனின் மனதில் பலகேள்விகளையும் இனம்புரியாத பயத்தையும் உண்டாக்குகிறது. மதவாதம் இரத்தம் தோய்ந்த நீரோடையாக எங்கும் விரவியுள்ளதை நுண்ணியமான அவதானிப்புகள் மூலம் துல்லியமாக பதிவு செய்கிறது காலித்தின் கேள்விகள். இதே வகுப்புவாத வன்முறையின் பிரிதொரு முகத்தை அன்வர் கூமாரின் “கப்பலில் என்ன நடக்கிறது” கதை கண்டலாவிலிருந்து கப்பலில் கல்கத்தா வரும் அகதிகள் மேல் நிகழ்த்தப்படும் இனரீதியான வன்முறையை முன் வைத்து ஆதரவற்ற வீடற்ற ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் மீதான சமூகத்தின் அக்கறையை கேள்விக்கு உட்படுத்துகிறது.

இருளில் பாதி வழியில் ரயில் நிறுத்தப்படுகையில் பயணிகளின் மனதில் அச்சவுணர்வு பற்றிக் கொள்கிறது. ரயில்கள் வன்முறைத் தளங்களாக எளிதில் உருமாருகின்றன் பயணிகளின் முகங்கள் வெளிறிப் போகத் துவங்குகிறது. கண்களில் பயம் பரவ தொண்டைக் குழிக்குள் உயிரின் நிச்சயமற்றத் தன்மை உருளத் துவங்குகிறது. என்ன நடக்கப் போகிறது என்று அறிய முடியாமலும், என்ன நடந்தாலும் அதைக் கட்டுப்படுத்த தங்களால் இயலாத அவல நிலையை எண்ணியும் பரிதவிக்கிறார்கள். மதம், பக்தி என்ற போர்வையில் மனிதநேயம் வன்முறையால் படுகொலை செய்யப்படுகிறது. சொந்த தேசத்திலேயே அகதிகளாக்கப்படுகிறார்கள். எரிக்கப்பட்ட ரயில்கள் இரத்தம் கறை கூடிய மனித வரலாற்றின் அழிக்க முடியாத சாட்சிகளாக நிற்கின்றன. அப்துல் சமதின் “நிறுத்தப்பட்ட புகைவண்டி”, கதையை வாசிக்கையில் 2002 குஜராத் படுகொலைகளின் பாதிப்புகள் பிரதியின் ஊடே நடமாடுவதை தவிர்க்க இயலாது.

வன்முறைச் சூழலில் முதலில் பாதிக்கப்படுவது களங்கமற்ற குழந்தைகளின் மனதுதான். ஆப்கானிய சிறுவன் ஒருவனின் குழந்தைப் பருவ நினைவுகளில் நிற்பது வெடிகுண்டால் தகர்க்கப்பட்ட வீடும், கற்பழித்து கொல்லப்பட்ட சகோதரியின் உருவம் மட்டுமே.அச்சிறுவன் வளரும் காலத்தில் ஆயுதம் ஏந்தமாட்டான் என்பதற்கு எந்த உத்திரவாதத்தை இந்த சமூகம் கொடுக்க முடியும் எனும் குல்ஜாரின் கேள்வி மிகுந்த அர்த்தமுடையது.  

தாரிக் சத்தாரின் “வரிசை” வகுப்புவாதம் மதநல்லிணக்கத்தை முற்றிலுமாக அழித்ததன் விளைவால் ஏற்படும் இழப்புகளைப் பற்றிப் பேசுகிறது. மஞ்சள்-சிவப்பு வானம் ஓர் குறியீடாக மாறுகிறது. ஜென்மாஷ்டமி அன்று புல்லாங்குழல்  வாசித்தவாறே அச்சடங்குகளில் பங்கேற்கும் இஸ்லாமியச் சிறுவன் கொண்டாட்டங்களின் இறுதியில் கம்சனை கொல்வதற்கு வைக்கப்பட்டிருக்கும் கோடாரியால் வெட்டிக் கொல்லப்படுகிறான். கன்னையாவைப் போல் உடையணிந்து கொண்டாட்டத்தில் பங்கேற்கும் கனவு மதவெறியர்களின் இரத்தவெறிக்கு பலியாகிறது.

தொகுப்பின் முக்கிய கதை ஜாகியா முஷாதியின் “ஒரு எலியின் மரணம்”. இலக்கியத்தில் அதிகம் பிரதிநிதிப்படுத்தப்படாத முசாஹர் சமூகத்தைப் பற்றியது. சமூக அங்கத்தின் கடைக்கோடி விளிம்பில் மீள முடியா வறுமையில் வாழும் சமூகம். வறுமையின் கோரப்பிடி காரணமாக எலியை பிடித்து உண்பவர்கள். அச்சமூகத்தைச் சார்ந்த தீனா  தொலைதூர நகரில் நடக்க இருக்கும் ஒரு பேரணிக்காக எட்டு ரூபாய் கூலி கொடுத்து அழைத்துச் செல்லப்படுகிறான். தனக்குத்தானே பேசிக் கொள்ளும் இயல்புடையவன். உணவு அடிப்படையிலான அரசியல் அவனுக்கு அச்சமூட்டுகிறது. “இன்குலாப்” என்றால் என்னவென்று யாருக்குத் தெரியும்? எனக்கு தெரிந்ததும் தேவையானதும் பூரி,சப்ஜி,சர்பத் இல்லைனா ஒரு கொழுத்த எலி அவ்வளவுதான் என்ற மனப்பான்மையுடையவன். பேரணியில் எப்போதும் போல் நடைபெறும் கலவரத்தில் போலீஸின் வண்டிச் சக்கரத்தில் அனாதையாக உயிர் இழக்கும் தீனாவைப் பற்றி யாருக்கும் எந்தவொரு  கவலையுமில்லை.

நகரத்தில் ஒரு அசுத்தப் பிண்டமாக நடத்தப்படுகிறான். அவன் அசுத்தமானவன், புனிதங்களுக்கு எதிரானவன் என நகர மனிதர்களால் கட்டமைக்கப்படுகிறான். அவனைப்பற்றி எந்த தகவலையும் சேகரிக்க விரும்பாத காவல்துறை அவன் உடலை கோமதி ஆற்றில் தூக்கி எறிந்து விட்டு தன் கடமையை முடித்துக் கொள்கிறது. தொலைதூர கிராமத்தில் தன் அன்பானவர்கள் கொண்டு வர இருக்கும் எட்டு ரூபாய்க்கும் மிச்ச பூரிக்கும் காத்திருக்கிறார்கள் .

தாராளமயமாக்கல், அதைத் தொடர்ந்த பொருளாதர சந்தையின் விரிவாக்கம், விரைவான கட்டுப்பாடற்ற நகரமயமாக்கல், சித்தாந்தங்களைத் தவிர்த்த மத அடிப்படையிலான அரசியல்,அதனால் ஏற்படும் சிக்கல்களைப் பேசுபவையாக ஃபாயஸ் ரிஃபாத்தின் “ஒர் இரவின் சொர்க்கம்”, காலித் ஜாவேதின் “வாழ்ந்தோருக்கான இரங்கல் கடிதம்”, குர்ஷித் அக்ரமின்”மூச்சுத்திணறல்” கதைகள் அமைந்துள்ளன.

அசுத்தத்தை சட்ட விரோதமாக்கிய ஒரு நகரத்தைப் பற்றிப்பேசும் “வாழ்ந்தோருக்கான இரங்கல் கடிதம்” பெருந் தொற்றுக்குப் பின் நோய்தடுப்பு என்பதன் அடிப்படையில் சிறுநீர் கழிப்பதையும், மலம் கழித்தலையும் அருவெருக்கத்தக்கதாக மாற்றும் நிகழ்வை பதிவு செய்கிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவன் கழிவறையைத் தேடி அலையும் அலைச்சலின் இறுதியில் அவனுக்கு கிடைப்பது சிறைவாசமும் தண்டனையும் தான். எல்லாவற்றையும் சுத்தமானதாகவும், தூய்மையானதாகவும் மாற்றும் கிருமிநாசினி மனித உடலை அருவருப்பானதாக மாற்றுகிறது. நகரத்தின் தூய்மைச் சார்ந்த சட்டங்களுக்கு உட்படாதவர்கள் விரோதிகளாக்கப்படுகிறார்கள். வர்க்கம், சாதி, பாலினம், மதம், பொருளாதார காரணங்களால் பின்தங்கியவர்கள், சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்கள் பிரச்சனைகளைப் பற்றி பேச ஒரு நலிந்த நகரத்தை பின்புலமாக கொள்ளும் சலாம் பின் ரசாக் மாற்றத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். இடமின்மை, அதிகரித்து வரும் வேலையின்மை அதனால் உருவாகும் சமூக,பொருளாதார பிணக்குகள் மதவாதத்தை நோக்கிய இயக்கங்களின் செயல்பாடுகள் நிகழ்த்தும் நிரந்தர அழிவுகளைப் பற்றி கவனப்படுத்த வேண்டுகிறார்.

தொகுப்பின் இறுதிக் கதையான “தூங்கர்வாடியின் கழுகுகள்” (தூங்கர்வாடி-பார்சி இனத்தவர் இறந்தவர்களின் உடல்களை பறவைகளுக்கு உணவாக கிடத்தும் இடம். மும்பையில் உள்ளது). சமூகங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகளை கலைந்து அமைதியையும், ஒற்றுமையையும் ஏற்படுத்த தேவையான அர்பணிப்பு, விட்டுக் கொடுத்தலுக்கு மாறாக வேறுபாடுகளை வளர்த்தெடுத்து பகைமையை தூண்டி வன்முறை ஒன்றே இதற்கான முடிவைத் தரும் என தவறான வழிகாட்டுதலால் ஏற்படும் மனித உயிர் இழப்புகளைப் பேசும் கதை. தூங்கர்வாடிக்கு சில நாட்களாக கழுகுகள் வருவதில்லை. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடுக்கடுக்காக கிடத்தப்பட்டு முக்தி பெறாமல் கிடக்கின்றன. இதனால் கவலைக் கொள்ளும் தூங்கர்வாடியின் செயலர் தன் நண்பரான காவல்துறை உயரதிகாரியிடம் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். அப்போது உயரதிகாரி நகரில் நிகழ்ந்து வரும் மதக்கலவரத்தால் நகரங்கும் கொலையுண்டவர்களின் உடல்களை எடுக்க இயலவில்லை. அவை கழுகுகளுக்கு இரையாகி வருவதால் கழுகுகள் தூங்கர்வாடிக்கு வருவதில்லை என்கிறார். அமைதி ஏற்பட்டபின் கழுகுகள் திரும்பி வருமா என்பதற்கும் உத்தரவாதமில்லை. பல்வேறு காரணங்களால் நாடெங்கும் நிகழ்ந்து வரும் செயல்களால் அவற்றின் உணவிற்கு பஞ்சமில்லை என்கிறார். தங்களின் விலைமதிப்பற்ற சுவாசத்தை தவறான நம்பிக்கையின் விசுவாசத்திற்காக இழக்கிறார்கள். மரணம் தன்னை நெருங்கி வருவதை உணராதவர்களாக இருக்கிறார்கள்.

கழுகுகள் வரிசையாக வீழ்ந்துகிடக்கும் உடல்களின் மேல் நடந்து செல்கின்றன. அவை தான் உட்கொள்ளும் உடல்களின் பேரைக் கேட்பதில்லை. யார் சரியாக பேசினார்கள், யார் தவறாக பேசினார்கள் என்பதைப் பற்றியும் அக்கறைக் கொள்வதில்லை. மதம்,சாதி,இனம் எந்த வேறுபாடும் அதற்க்கில்லை. வேற்றுமையை, வன்முறையை வளர்த்து இனப் படுகொலையில் ஈடுபட்டவர்கள், பலியானவர்கள் அனைவரும் கழுகுகளின் வயிற்றில் ஒன்றாகவே சென்று சேர்கிறார்கள்.

14 சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பின் மைய இழையாக இருப்பது வன்முறையால் ஏற்படும் இழப்புகள். காதலை, துக்கத்தை, மனித மன பிணக்குகளை, வாழ்வின் சிதைவுகளை, மரணத்தைப் பற்றி பேசக் கூடியவையாக இக் கதைகள் உள்ளன. சமத்துவமற்ற போர்களால்  நிகழ்த்தப்படும் இனப் படுகொலைகள், இனஅழிப்புச் செயல்கள் மனித நேயத்திற்கு மிக கடுமையான  நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வகுப்புவாதம்,மதக் கலவரங்கள், ஆணாதிக்கம், சாதிய ஒடுக்குமுறை மற்றும் உணவு அரசியலைப் பேசு பொருளாக கொண்ட கதைகள் எந்த தீர்வை நோக்கியும் வாசகனை நகர்த்துவதில்லை. அதேசமயம் வாசக மனதினை நிலைகுலையச் செய்கின்றன. வாசிப்பவனின் பிரக்ஞையை தூண்டிவிடுகின்றன. உருது இலக்கியத்தின் இன்றைய படைப்பாளிகளையும் அதன் களத்தையும் அறிந்துக் கொள்ள உதவும் முக்கிய தொகுப்பு.

அ.முனவர் கான்

முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *