கோவை வ.உ.சி. மைதானத்தில் புத்தகத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏற்கனவே உள்ள நூல்களோடு, கண்காட்சிக்காகவே அச்சிடப்பட்ட புத்தம் புதிய நூல்களுடன் பதிப்பகங்கள் களமிறங்கியிருந்தன. பி.ஓ.டி. முறையில் முப்பது, நாற்பது பிரதிகள் அச்சடிக்கப்பட்டு, சுடச் சுட பார்சல்கள் வந்து இறங்கிக்கொண்டும் இருந்தன.

வழக்கப்படியே சமையல், கோலம், மெஹந்தி, நகப்பூச்சு முதலான கலைகள், அழகுக் குறிப்புகள் புத்தகங்களுக்கு பெண்கள் படையும்; வாஸ்து, தன்னம்பிக்கை, ஊக்கமூட்டல், கோடீஸ்வரக் கனவு, பேலியோ, தொடு சிகிச்சை புத்தகங்களுக்கு ஆண்கள் பட்டாளமும் சுனாமிக் கடலெனத் திரண்டு சுருட்டிக்கொண்டு போயினர். ஜனரஞ்சக நாவல்கள், வழுவழுப்புக் காதல் கவிதைத் தொகுப்புகளுக்கும் அமோக விற்பனை. இலக்கியத் தரப்பில் முன்னணி பதிப்பக ஸ்டால்களில் அவரவர் ஆஸ்தான எழுத்தாளப் பிரபலங்களின் ஒளிப்படங்களோடு ஃப்ளக்ஸ் பேனர்கள் காணப்பட்டன. பகல் பொழுதுகளில் நட்சத்திர எழுத்தாளர்கள் இறக்குமதியாகி, வாசகர்களுக்கு அன்புடன் கையொப்பம் இட்டுக்கொண்டிருந்தனர். அதனால் அங்கு எப்போதும் கணிசமான வாசக, வாசகியர் கூட்டம் தென்பட்டது. கண்காட்சியை ஒட்டி வெளியீட்டு விழா, வாசகர்களுடன் உரையாடல் வைபவங்களும் நடந்தன. 25 ஆயிரம், 50 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிற மைக் முழுங்கிகளின் மாலை நேரப் பேச்சு நிகழ்ச்சிக்குப் பெருங்கூட்டம் முண்டியடித்து வந்து, புத்தக ஸ்டால்கள் பக்கம் எட்டியும் பார்க்காமல், தள்ளுவண்டிக் கடைகளில் மிளகாய் பஜ்ஜி, பேல் பூரி, காளான் ஃப்ரை சாப்பிட்டுவிட்டுப் போயின. 

ஆயினும், இந்த இலவச இணைய இதழ், திருட்டு மின்னூல் வாசிப்பு யுகத்திலும் அச்சு நூல்களைக் காசு கொடுத்து வாங்கி வாசிக்கிற வாசகப் பெருந்தகைகள் இருக்கவே செய்கின்றனர். இல்லாவிட்டால் இப்படி மாநிலம் முழுதும் உள்ள பெருநகரங்கள் தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடக்குமா? முன்னணி, நடுத்தர பதிப்பகங்கள், விற்பனையகங்கள் யாவும் பணத்தை அள்ளுகின்றன. பின்னணிப் பதிப்பகங்கள், விற்பனையகங்களின் ஸ்டால்களிலும் வருமானத்துக்குக் குறைவில்லை.

அன்று மூன்றாவது நாள். பூந்தளிர் பதிப்பகம் ஸ்டாலில் புத்தக விற்பனையாளராகப் பணி புரிந்துகொண்டிருந்த சிங்கை பசுபதி மிகுந்த உற்சாகத்தோடு காணப்பட்டார்.

அவர் ஒரு ப்ரொஃபஷனல் பொழைக்கத் தெரியாதவர். சிங்கப்பூரில் ஏழெட்டு ஆண்டுகள் பணி புரிந்து முக்கால் கோடி சம்பாதித்திருந்தார். தாய்நாடு திரும்பியதும், தெரிந்தவர்களை நம்பி தெரியாத தொழிலில் இறங்கி, அத்தனை பணத்தையும் இழந்தார். கிடைத்த விலைக்கு சொந்த வீட்டை விற்று கடன் கட்ட வேண்டியதாயிற்று. பின்னர் வாடகை வீட்டில் குடியிருப்பு. மனைவி சம்பாத்தியத்தில் குடும்பம் உருண்டுகொண்டிருக்கிறது. பசுபதிக்கு வேலை, தொழில் எதுவும் அமையாமல் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. வீட்டு வேலைகளை கவனித்துக்கொண்டு, நண்பர்கள், வேண்டப்பட்டவர்களுக்கு சகல வித உதவிகள், உபகாரங்களைச் செய்வதுதான் இப்போது அவருக்கு வேலை எனலாம். தொழில் ரீதியாக உதவி செய்யும்போது சிறு தொகைகள், அரைக் கூலி – கால் கூலியாகக் கிடைக்கும். பெரும்பாலும் பைக்குக்குப் பெட்ரோல் செலவே இவர்தான் நட்டப்படுவார்.

“உங்குளுக்கு உதவி, உபகாரம் செய்யத் தெரியுமே தவுத்து, உளைப்புக்கு உண்டான கூலியாவது வேணும்னு கேக்கறக்கு வாய் வராது. அதனாலதான் உங்களைப் பத்தி நல்லாத் தெரிஞ்சவீக உங்க தலைல மொளகாச் சட்னி அரைச்சு, இட்லிக்குத் தொட்டு சாப்டுட்டுப் போயர்றாங்க. எளுவது லச்சத்தை ஏப்பமுட்டு, உங்க நெத்தீல பட்டை நாமம் சாத்துனது ஆச்சரியமே இல்ல” என்பார் பூந்தளிர் வைத்தியலிங்கம். 

     பூந்தளிர் நூல் நிலையம் காந்திபுரத்தில் உள்ள ஒரு சிறிய கடை. பி.ஓ.டி. புண்ணியத்தில், கடைப் பெயரிலேயே பதிப்பகம் தொடங்கி, நூலாசிரியர்களிடமே மொத்தப் பணம் பெற்று நூல் வெளியீடும் நடக்கிறது. நகரின் முதன்மைப் பகுதியில், நகரப் பேருந்து நிலையத்துக்கு அண்மையிலேயே உள்ளதால் அந்தக் கடை உள்ளூர் இலக்கியவாதிகளின் சந்திப்பு மையமாகவும் திகழ்கிறது. சிங்கை பசுபதி நெடுங்கால இலக்கிய வாசகர். அதனால் உள்ளூர், வெளியூர் இலக்கியவாதிகள் பலரையும் பழக்கம். பூந்தளிர் நூல் நிலையத்துக்கு சிற்றிதழ்களும் புத்தகங்களும் வாங்கச் சென்று, வைத்தியலிங்கத்துடனும் நல்ல பழக்கமாகிவிட்டது.

     புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் நடக்கும்போதே, “இந்தவாட்டி கொஞ்சம் பெரிய ஸ்டாலாப் போடலாம்னு இருக்கறன். சேல்சுக்கு இன்னொரு ஆள் போடணும். புத்தகப் பொளக்கத்துல இருக்கற ஆளா இருந்தா நல்லது நீங்க வந்தா ரொம்ப சௌரியம். அதுக்கு உண்டான சம்பளம் போட்டுக் குடுத்தர்றேன்” என்றார்.

உரிய சம்பளமும் கிடைக்கும்; பத்து நாட்களும் புத்தகத் திருவிழாவில் இருப்பது இலக்கியக் கொண்டாட்டமாகவும் அமையும் என்பதால் பசுபதி இரட்டிப்பு மகிழ்ச்சியோடு ஒத்துக்கொண்டு பணிக்கு வந்திருந்தார்.

கண்காட்சிக்கு கோவை வட்டார இலக்கியஜீவிகள் தவறாமல் விஜயம் செய்வார்கள். அண்டை மாவட்ட இலக்கியர்களில் சிலரும் வரக்கூடும். அவர்களையெல்லாம் பார்க்கவும், பேசவும் முடியும். அதோடு, பத்து நாள் சம்பளமாக ஏழாயிரம், எட்டாயிரமாவது கிடைத்தால், “இந்த மாசம் வீட்டு வாடகையை நானே கட்டீர்றன்” என்று மனையிடம் கெத்தாக சொல்லலாம். அல்லது அந்தத் தொகையை வைத்து அடுத்த மூன்று மாதங்களுக்குத் தன்னுடைய தனிப்பட்ட செலவுகள், போக்குவரத்து செலவுகளையாவது பார்த்துக்கொள்ளலாம். அவரது உற்சாகத்துக்குக் காரணம் இவைகளே.

*******

     பிற்பகல் சுமார் மூன்றரை மணி இருக்கும். வாடிக்கையாளர்கள் வரத்து இல்லாமல் ஸ்டால்கள் மதியத் தூக்கத்தில் வழிந்துகொண்டிருந்தன. பசுபதி புதிய நூல் ஒன்றை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தார். புலனத்தில் செய்தி வந்ததின் அறிவிப்பு ஓசை ஒலித்தது. அலைபேசியை எடுத்துப் பார்த்தார். முப்பதாண்டு கால நண்பரும் கோவை இஸ்லாமிய எழுத்தாளருமான ஃபெரோஸ் இளவரசன் அனுப்பியிருந்தார்.

     ‘புத்தகக் கண்காட்சிக்குப் போனீங்களா…? என்னென்ன புத்தகம் வாங்குனீங்க?’

     பசுபதிக்கு முகம் சுழிந்தது.

இரவல் வாசிப்புக்குக் கேட்கத்தான் விசாரிக்கிறார். அது தவறொன்றும் அல்ல. நூல் வாசிப்பாளர்களிடையே இரவல் வாசிப்பும், பரிமாற்றங்களும் இயல்பானது. பசுபதி, ஒவ்வொரு நூல் பிரதிகளையும் குறைந்தது ஐந்து பேராவது வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். அதனால் தன்னிடம் உள்ள சிறந்த நூல்களைத் தானாகவே முன்வந்து எழுத்தாள, வாசக நண்பர்களுக்கு வாசிக்க இரவல் கொடுக்கவும் செய்வார். தனக்கு இனி வேண்டாம் என்றால் யாருக்காவது அன்பளிப்பாகவே கொடுத்துவிடுவார். யாருக்கும் வேண்டாத பழைய, புதிய நூல்களை நூலகங்களுக்கு அன்பளிப்பார். ஆனால், ஃபெரோஸ் இளவரசன் தனி ரகம். அவருடன் இது தொடர்பாக நேர்ந்த சில கசப்பான அனுபவங்கள், அவருக்கு ஒருபோதும் இரவல் கொடுக்கக் கூடாது எனத் தீர்மானிக்க வைத்துவிட்டிருந்தது. எனவே, புலனச் செய்திக்கு பதில் அளிக்கவில்லை. செய்தியை எடுத்துப் படித்தோமா இல்லையா என்பது அனுப்பியவருக்குத் தெரியாதபடி செட்டிங் செய்து வைத்திருக்கிறார். அதனால் இவர் பார்த்துவிட்ட விபரம் அவருக்குத் தெரியவும் செய்யாது.

ஃபெரோஸ், அரசு அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணியில் இருந்தபோதும் சரி; பிற்பாடும் சரி. சக இலக்கிய நண்பர்கள் எவருக்கும் ஒரு சிறு நூலைக் கூட அன்பளித்ததில்லை. வாசித்துப் பாருங்கள் என்று கொடுத்ததும் இல்லை.

மரக்கடை பகுதியில் உள்ள ஃபெரோஸ் இளவரசனின் வீட்டுக்கு எப்போதாவது இவர் போவதுண்டு. அலமாரியிலும் அடுக்கறையிலும் நிறைய நூல்கள் வைத்திருப்பார். அவற்றில் பாதிக்கு மேல் வாசிக்காமலேயே கிடக்கும். பெரும்பாலானவை பசுபதி வாசித்தவையாகவோ, அவருக்கு வேண்டாதவையாகவோ இருக்கும். விருப்பமான நூல்கள் இருப்பின் வாசிக்கக் கேட்டால், “இந்த வாரம் அதைப் படிக்கலாம்னு நெனைச்சுட்டிருக்கறன்”, “அது இன்னொருத்தரு கேட்டிருந்தாரு” என ஏதாவது சாக்குப்போக்கு சொல்லித் தட்டிக் கழிக்கப் பார்ப்பார். “இதை வேண்ணா எடுத்துட்டுட்டுப் போங்களேன்” என்று மட்டமானவற்றை மனமுவந்து கொடுப்பார். எப்போதாவது இவர் கேட்ட நூல்களை, “வேற யாருக்கும் குடுத்தறாதீங்க. திரும்பி வல்லீன்னா அப்பறம் மறுபடியும் காசு குடுத்து வாங்க முடியாது” என்ற எச்சரிக்கையோடு தருவார். இரண்டாவது நாளிலிருந்தே, படித்துவிட்டீர்களா, எப்போது திரும்பக் கிடைக்கும் எனக் குறுஞ்செய்திகள் வரும். அல்லது புலனத்திலோ, முகநூல் மெசஞ்சரிலோ விசாரிப்பார். திரும்பக் கொடுத்த பிறகே நிம்மதியாக இருக்க முடியும். இந்தத் தொந்தரவினால் பிறகு அவரிடம் இரவல் கேட்பதையே விட்டுவிட்டார்.

     ஆனால், அவர் இவரது வீட்டுக்கு வந்தபோது இவரின் நூல் சேகரங்களைப் பார்த்து, “ஐட்ராபாஞ்சன்! தலைகாணி நாவலுகல்லாம் உங்ககிட்ட இருக்குதே…!” என அவற்றின் மீது பாய்ந்தார். “போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள், நூற்றாண்டுத் தனிமை, ஓநாய் குலச் சின்னம், என் பெயர் சிவப்பு… இதெல்லாம் கண்டிப்பா வாசிச்சே ஆகோணும்னு இருந்தனுங்க. அவ்வளவு பணம் குடுத்து வாங்கறதான்னு வாங்குல. இங்கிருக்கற நண்பர்கள்கிட்டக் கேட்டுப் பாத்தா, அவுங்களும் வாங்குல. நல்லவேளை, நீங்க வாங்கியிருக்கறீங்க” என்றவர் உடனடியாக அவற்றையெல்லாம் உருவிக்கொண்டார். தன்னிடம் இல்லாததும் வாசிக்காததுமான மற்ற முக்கிய நூல்கள் சிலவற்றையும் அள்ளிக்கொண்டார். பைக் பெட்டி போதாததால், பசுபதி வீட்டுக்குள்ளிருந்து கட்டைப் பையை எடுத்து வந்து கொடுத்தார். போனதில் ஓன்றிரண்டு திரும்ப வந்தன. தலையணை மொழிபெயர்ப்பு நாவல்கள் உள்ளிட்ட பல நூல்கள் வரவே இல்லை. கேட்டால், இன்னும் வாசிக்கவில்லை, தொண்ணை தொண்ணையாக இருப்பதால் வாசித்து முடிக்கவில்லை, வாசித்துவிட்டுத் தருகிறேன், எங்கே வைத்தேன் என்று ஞாபகமில்லை என சால்ஜாப்பு சொல்வார்.

அலைபேசியில் பேசும்போதும் நேரில் சந்திக்கும்போதும், “நீங்கதான் அடிக்கடி புக்கு வாங்குவீங்களே…! சமீபத்துல என்ன வாங்குனீங்க? படிச்சுட்டீங்களா? எப்புடி இருக்குது? எனக்கு எப்பத் தர்றீங்க?” என மறக்காமல் விசாரிப்பார்.

பசுபதி பொய் சொல்ல மாட்டார். உண்மையைச் சொல்லாமல் இருக்கவும் முடியாது. அணில் வாயாக அத்தனையும் ஒப்புவித்து, தனக்குத் தானே கேடு விளைவித்துக்கொள்வார். போனால் திரும்பி வருமா என்பது உறுதியில்லை. சரி, புத்தகம்தானே, அதுவும் அவர் எழுத்தாளரும் அல்லவா என்பதால் நஷ்டத்தையோ, அவரது கல்யாண குணங்களையோ பொருட்படுத்தாமல் கேட்கிற நூல்களைக் கொடுத்துவிடுவார்.   

     கடந்த முறை தான் வாசித்துக்கொண்டிருந்த ஒரு புத்தகம் பற்றி இவர் சிலாகித்துப் பேச, “படிச்சு முடிச்சதும் வேற யாருக்கும் குடுத்தறாதீங்க. மொதல்ல எனக்குக் குடுங்க” என்றார்.

     இரண்டாம் நாளிலிருந்து படிச்சாச்சா, இன்னும் முடிக்கலையா, எப்ப எனக்குக் கெடைக்கும், இந்தப் பக்கம் வரும்போது மறக்காமக் கொண்டுவந்து குடுங்க என தினந்தோறும் புலனச் செய்தியில் தொல்லை. ஒரு கட்டத்துக்கு மேல் பசுபதிக்கு வெறுத்துப் போய், பதில் அளிப்பதை விட்டுவிட்டார். 

அடுத்ததாக, அவரிடமிருந்து ஒரு ஏவுகணை: ‘தம்பி, டீ இன்னும் வர்ல!’

     பசுபதிக்கு வந்த கடுப்பில் அவரை ப்ளாக் செய்துவிடலாமா என்று ஆகிவிட்டது. இத்தனை வருடப் பழக்கத்தை நினைத்துப் பொறுத்துக்கொண்டார். பதில் எழுதாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

     ஃபெரோஸ் விடுவாரா? அழைத்துக் கேட்டார். 

“நானே உங்க வீட்டுக்கு வல்லாம்னு பாத்தா, வெட்டியா பெட்ரோல் செலவு ஆயிரும். அதனாலதான் நீங்க இந்தப் பக்கம் வரும்போது உங்களையவே கொண்டுவரச் சொல்றன்.”

     “அது நல்ல புக்குங் பாய். நூத்தம்பது ருவாதான். மரக்கடைலருந்து பொடி நடையா நடந்து போனீங்கன்னா, விஜயா பதிப்பகத்துல வாங்கீர்லாமே…!” என்றார் இவர்.

     “அது எதுக்குங்க வெட்டிச் செலவு? அதுதான் உங்ககிட்ட இருக்குதாச்சே…! வரும்போது மறக்காமக் கொண்டுவந்து குடுங்க!”

     பசுபதிக்கு அலைபேசியை சுவற்றில் ஓங்கி எறிந்து உடைத்துவிடலாமா என்றிருந்தது.

     சொந்த வீடு; மாதம் முப்பதாயிரத்துக்கு மேல் ஓய்வூதியம். தவிர, இளம் மருத்துவராக உள்ள மகனின் சம்பளம் வேறு. இத்தனை இருந்தும் நூற்றைம்பது ரூபாய் கொடுத்து ஒரு புத்தகம் வாங்க மாட்டாராம். பத்து வருடங்களாக வேலையில்லாமல் அல்லாடிக்கொண்டிருக்கிற தான் வாங்கிவைத்திருப்பது இரவல் வேண்டுமாம். அதையும் ஆட்டையப் போட்டாலும் போடுவார்.

     இவற்றால்தான் ஃபெரோஸுக்கு இரவல் கொடுக்க விரும்பவில்லை; புலனச் செய்தி விசாரிப்புக்கு பதில் அளிக்கவுமில்லை.

*******

தொண்ணூறுகளின் முற்பகுதியில், கோவை இஸ்லாமியர் எழுத்து என்ற வகையில் ஃபெரோஸ் இளவரசன் இலக்கிய வட்டாரத்தில் கவனத்துக்கு உள்ளாகிக்கொண்டிருந்தார். அப்போதிலிருந்து இவருக்குப் பழக்கம். பசுபதி பொது உடைமை, மார்க்சியம், முற்போக்கு, திராவிட சித்தாந்தங்கள் கொண்டவர். ஈ.வெ.ரா., அம்பேத்கர் சிந்தனைகளால் கவரப்பட்டவர். அதனால் ஒடுக்கப்பட்ட ஜாதியினர், சிறுபான்மை மதத்தினர் மீது சார்பும், அக்கறையும், ஆதரவும் கொண்டிருப்பார். அந்த வகையில் இஸ்லாமியர்களின் கதைகளை எழுதுகிற இஸ்லாமிய எழுத்தாளர் என்ற முறையில் ஃபெரோஸ் இளவரசன் மீது நல்ல அபிப்ராயமே இருந்துவந்தது.  

தொடக்க காலங்களில் பொது மனிதத்தன்மையோடு மித இலக்கியத் தரப்பிலான நல்ல கதைகளை எழுதிக்கொண்டிருந்தார். பிறகு அவரது போக்கு மாறி, பெரும்பாலும் இஸ்லாமிய மத இதழ்களிலேயே எழுதலானார். அவை இஸ்லாமியர்களின் குடும்ப – சமூக – மதப் பிரச்சனைகள், இஸ்லாமியர்கள் கடைபிடிக்க வேண்டிய மதக் கொள்கை – கோட்பாடுகளை வலியுறுத்துதல், இந்து – இஸ்லாமிய மதக் கலவரங்கள் சம்மந்தமானவையாகவே இருக்கும். பிரச்சார ரீதியிலான அவை இலக்கிய மதிப்பீட்டில் குறைந்தவை. சீரிய சிந்தனைகளோ, சிறந்த அழகியலோ, நடுநிலையோ அவற்றில் இராது. மதச் சார்பும் மதவாதமும் கொண்டிருக்கும். எனவே, அவரது எழுத்துகளில் இவருக்கு அவ்வளவாக மதிப்பு இல்லாமலாகிவிட்டது.

அதைப் பற்றி அவரிடமே சொன்னபோது, “முஸ்லீம் எளுத்தாளர்ங்கறதுனால அவங்க எங்கிட்டக் கதை கேக்கறாங்க. அந்தப் பத்திரிகைகளுக்குத் தகுந்த மாதிரி, இன்னின்ன விஷயங்களை வெச்சுக் கதை எளுதிக் குடுங்கங்கறாங்க. அதனாலதான் அப்புடி” என்றார்.

     “மதப் பத்திரிகைகள்ல அவுங்க தேவைக்கு அப்படித்தான் கேப்பாங் பாய். நீங்க ஏன் அதுக்கு ஒத்துக்கறீங்க? எப்பவும் போல இலக்கிய இதள்கள்லயும், ஜனரஞ்சக இதள்கள்லயும் எளுத வேண்டியதுதானே! எத்தனை இஸ்லாமியப் படைப்பாளிக அப்படி இருக்கறாங்க. இலக்கிய இதள்கள்ல வெளியான உங்களோட எத்தனை கதைக அருமையான கதைகளா இருக்கில்ல? இலக்கியச் சிந்தனை விருதே வாங்கியிருக்கறீங்களே…!” என்று கூறி, உதாரணங்களையும் குறிப்பிட்டார்.

     “ஆமாங்க, இனி அந்த மாதிரி எளுதணும்” என்றார்.

     அவ்வாறே அவரது ஓரிரு கதைகள் இலக்கிய இதழ்களில், இலக்கியத் தரத்தோடு வரவே செய்தன. ஆனால், அதிகப்படியாக எழுதுவது தற்போதைய அவரது வழக்கப்படியே தொடர்ந்தது.

ஃபெரோஸ் இளவரசன் இஸ்லாமிய இலக்கியப் போராளி என்ற கருத்து பலருக்கும் உள்ளது. கோவை குண்டுவெடிப்பு தொடர்பான சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல் ஆகியவற்றால் அதிகம் அறியப்படுபவர் அவர். குண்டுவெடிப்புக்குப் பிறகு அது தொடர்பாக இஸ்லாமிய சமூகம் பாதிக்கப்பட்டது பற்றி மட்டும் எழுதுவார். அப்பாவி முஸ்லீம்கள் பாதிக்கப்படுகிறார்கள், அப்பாவி முஸ்லீம்கள் பாதிக்கப்படுகிறார்கள், அப்பாவி முஸ்லீம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதே திரும்பத் திரும்ப அவரது கதைக் கருக்களாக இருக்கும். அதற்கு மூல காரணம் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்பது பற்றிப் பேசவே மாட்டார். அந்தத் தொடர் குண்டுவெடிப்பில் அநியாயமாக அறுபதுக்கு மேற்பட்ட அப்பாவி இந்துக்கள் கொல்லப்பட்டது பற்றிக் கவலைப்பட்டதும் இல்லை. இந்த வகையில் அவர் ஒருதலைப்பட்சமானவர் என்பது மிக வெளிப்படையானது.

அதை இஸ்லாமிய எழுத்தாளர்கள், வாசகர்களில் 99% பேர் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமிய ஆதரவு என்ற பேரில் இஸ்லாமிய மதவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கிற, இஸ்லாமியர் அல்லாதவர்களான கட்சிக்காரர்கள், அமைப்பினர்கள், சமூக ஆர்வலர்களும் இரட்டைத் தாழ் போட்டுக்கொள்வார்கள். 

நடுநிலைவாதிகளான சிலர் பேச்சிலும், சிலர் எழுத்திலும் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். அதில் பிற மதத்தவர்களைவிட இஸ்லாமிய இலக்கியவாதிகளே சொன்னது குறிப்பிடத்தக்கது.

ஆனைமலை இதயதுல்லாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழா கோவையில் நடந்தது. இஸ்லாமிய சமூகம் பற்றி வெளிப்படையாக எழுதுகிறவரும், அதனால் காஃபிர் என்று பேரெடுத்தவருமான வீரனூர் உசேன், நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுவதற்காக வந்திருந்தார். இதயதுல்லாவும் உசேனும் டே போட்டுப் பேசுகிற அளவுக்கு நெருங்கிய நண்பர்கள். கோவைச்செழியனும் உசேனும் சம காலத்தில் எழுத வந்தவர்கள். அப்போதிருந்தே இருவருக்கும் பழக்கம். செழியனுக்கு இதயதுல்லாவை சமீப வருடங்களாகப் பழக்கம். அவரும் கூட்டத்துக்கு வந்திருந்தார். 

அப்போதுதான் அரங்கில் நாற்காலிகள் போடப்பட்டுக்கொண்டும், மேடை ஏற்பாடுகள் நடந்துகொண்டும் இருந்தன. ஆட்கள் சுமார் பத்து பேர்தான் வந்திருந்தனர். பசுபதியும் கோவைச்செழியனும் வெளியே உசேனோடு நின்று சிகரெட் புகைத்தபடி பேசிக்கொண்டிருந்தனர். ஒரு முறை ஃபெரோஸின் சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கு செழியன் முகநூலில் வாசிப்பு அனுபவம் எழுதியிருந்தார். இது பற்றிக் குறிப்பிட்ட உசேன், “அவுரெல்லாம் ஒரு ஆளு; அதெல்லாம் கதைகன்னு மெனக்கெட்டு உக்காந்து படிச்சதுமில்லாம, அதைப் பத்தி எழுத வேற செஞ்சிருக்கறீங்களே…!” என செழியனிடம் டென்ஷனானார். 

அப்போது அங்கு வந்த இதயதுல்லா, “ஃபெரோஸ் ஒரு இமாம். அதனாலதான் மதபோதனைக் கதைகள் எளுதறாரு” என்றுவிட்டு, “முஸ்லீமுக எல்லாரும் நல்லவங்க; இந்துக்கள் எல்லாரும் கெட்டவங்கங்கறதுதான் அவரோட இருவத்தஞ்சு கதைகளுக்கு மூலக் கரு. அதை வெச்சு இன்னும் அம்பது சிறுகதைகள் வேண்ணாலும் எளுதுவாரு” என்றார்.

பசுபதியும் மற்றவர்களும் சிரித்தனர்.

விழாவுக்கு ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த 98 இப்ராஹிமுடன் ஃபெரோஸும் வந்திருந்தார். முற்போக்கு இலக்கிய வட்டக் கூட்டம் என்பதால் அந்தத் தரப்பு இலக்கியர்களே அதிகமும். நூலை வெளியிட்டுப் பேசிய உசேன், “இதயதுல்லா என்னோட நீண்ட கால நண்பன்ங்கறது வேற விசியம். அதுக்காக அவனோட கதைகளை சிறந்த கதைகள்னு சொல்லிட மாட்டேன். அவன் எளுதறது எல்லாமே முற்போக்கு இலக்கியப் பிரச்சாரக் கதைகள், ஜனரஞ்சக மசாலாக் கதைகள் மட்டும்தான். ஒரு கதை கூட இலக்கியத் தரத்துல தேறாது. ‘இதை நான் மேடைலயே சொல்றக்கு நீ ஒத்துகிட்டா, உன்னோட நூலை வெளியிட்டுப் பேசறேன். இல்லாட்டி, வெளியிடறதோட நிறுத்திக்கறேன்’னு சொன்னேன். அதுக்கு அவன், ‘நீ என் கதைகளைக் குப்பைன்னு காறித் துப்புனாலும் சம்மதம்டா!’ன்னான். அவனோட அந்த நேர்மைக்கும், துணிச்சலுக்கும் என்னோட மனமார்ந்த பாராட்டுகள். ஆனா, அவனோட கதைகள் பிரச்சாரக் கதைகள்தானே தவிர, நடுநிலை தவறுனதோ, மத சார்போட எளுதப்பட்டதோ இல்ல. அப்படி எளுதறவங்களும் ஏராளமா இருக்கறாங்க. அதோட ஒப்பிட்டா, இதயதுல்லாவோட கதைகள் மிக மேலானது” என்றார்.

அரங்கிலிருந்து பலத்த கைதட்டல். ஃபெரோஸுக்கு முகம் இறுகிவிட்டது.

ஏற்புரையின்போது இதயதுல்லா, “இந்தத் தொகுப்புல இருக்கற ஒரு கதைல, ஒரு பார்ப்பனர் நல்லவரா இருக்கறாரு; நன்மை செய்யறாரு. அதைப் படிச்சுட்டு எங்காளுகள்ல சில பேரு கோவிச்சுகிட்டாங்க. அதெப்படி நீ பாப்பானை நல்லவன்னு எளுதலாம்னு சண்டைக்கு வந்தாங்க. பார்ப்பனர்கள் எல்லாருமே கெட்டவங்கதானா? அந்த ஜாதில நல்லவங்களே இல்லையா? இல்ல,… பார்ப்பனர்கள் நல்லவங்களா இருக்கக் கூடாதா? என்னதான் உங்க நெனப்பு? முஸ்லீமுகன்னாலே தீவிரவாதிகளாத்தான் இருப்பாங்கன்னு பொது சமூக மனப்பான்மை இருக்கறது மாதிரித்தானே இதுவும்? என்னோட கதைகளைப் பொறுத்த வரைக்கும், கலைத்தன்மைல குறை இருக்கலாம். ஆனா, உள்ளடக்கத்துல தவறு, நேர்மையின்மை, சார்பு இருக்கக் கூடாதுங்கறதுல உறுதியா இருக்கறேன். மாண்ட்டோ, பஷீர், தஸ்லீமா நஸ்‌ரீன் மாதிரி நடுநிலையா இருந்து, ரெண்டு பக்க சரி – தவறுகளையும் சுட்டிக் காட்டறதுதான் என்னோட நோக்கம்” என்று குறிப்பிட்டார்.

அதற்கும் பலத்த கைதட்டல். ஃபெரோஸுக்கு முகம் கடுத்தது.

அவருக்கு அந்தப் பக்கம் அமர்ந்திருந்த 98 இப்ராஹிம், மெல்லிய குரலில், “உசேனும் இதயதுல்லாவும் இந்துப் பெண்ணைக் காதலிச்சு, மதம் மாத்தாமக் கல்யாணம் பண்ணிட்டவங்கதானே! உசேனோட மகளுக்குக் நிக்கா பண்றப்பத்தான் உசேனோட வொய்ஃப் மதம் மாறுச்சு. இதயதுல்லாவோட மூத்த மகளுக்கும் நிக்கா முடிஞ்சிருச்சு. ஆனா, இன்னும் அவரோட வொய்ஃப் இந்துவாத்தான் இருக்குது, இல்லியா?” என ஃபெரோஸிடம் கேட்பது, இந்தப் பக்கம் அமர்ந்திருந்த பசுபதிக்கும் சன்னமாகக் காதில் விழுந்தது. இதன் மூலம் அவர் சொல்ல வருவது என்ன என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.

*******

98 இப்ராஹிமுக்கு ஏன் அந்தப் பெயர் என்று பசுபதிக்கு முதலில் தெரியாது. தொண்ணூறுகளின் முற்பகுதியில் ஃபெரோஸ், கோவைச்செழியன் முதலான இளம் இலக்கியஜீவிகள் நட்பான சமயம் இப்ராஹிம்மை ஓரிரு இலக்கியக் கூட்டங்களில் பார்த்திருக்கிறார். இஸ்லாமிய இளைஞர் ஒருவர், தனது இஸ்லாமிய அடையாளம் தெரியக் கூடாது என்பதற்காக, தமிழ்நெஞ்சன் என்ற புனைப் பெயரில், இலக்கியக் கேடயம் என்ற சிற்றிதழை நடத்திக்கொண்டிருந்தார். அவ்விதழ் சார்பில் மாதாந்திரக் கவியரங்கங்கள் நடத்தப்படும். இப்ராஹிம்மை அதிகமும் அக் கூட்டங்களில்தான் பார்த்திருந்தார். இலக்கியக் கேடயத்துக்கு அவர்தான் துணையாசிரியர்.

பசுபதிக்கு அவரோடு பழக்கம் இல்லை. அனேக சிற்றிதழ்களையும் போலவே இலக்கியக் கேடயமும் இரண்டு ஆண்டுகளில் நின்றுவிட்டது. கவியரங்கம், இலக்கியக் கூட்டங்கள் நடத்துவதும் இல்லை. ’95 வாக்கிலிருந்து இலக்கியக் கேடயக் குழுவினர் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. அவர்களில் யாரையும் மற்ற இலக்கியக் கூட்டங்களில் காண முடியவில்லை. பத்திரிகைகளில் அவர்களது கவிதைகளும் தென்படவில்லை. பதின் வயதுகளில் தொடங்கி இளமையின் துவக்கம் வரை இலக்கிய ஆர்வத்தோடு வெட்டியாக சுற்றித் திரிகிற அனேகம் பேர், பிறகு வேலை, குடும்பம் என்று ஆன பின், வாழ்வின் பாடுகளில் ஒடுங்கிவிடுவது இயல்பு. அப்படித்தான் அவர்களுக்கும் நேர்ந்திருக்கும் என பசுபதி எண்ணியிருந்தார்.

‘98 கோவை தொடர் குண்டுவெடிப்பு நடந்த பிறகு, அது தொடர்பான கைது, தேடல், தலைமறைவு செய்திகள் வெளியானபோது இலக்கியக் கேடயக் குழுவில் இருந்த இஸ்லாமியர்கள் சிலருக்கும் சம்பவத்தில் தொடர்பு உண்டு, அவர்கள் தீவிரவாத இயக்கங்களில் செயல்பட்டிருந்தார்கள், இப்போது தலைமறைவு ஆகிவிட்டார்கள் என்றெல்லாம் கோவை இலக்கிய வட்டாரத்தில் பேசப்பட்டது. பிற்பாடு என்ன ஆயிற்று, யாரேனும் கைதானார்களா என்பதெல்லாம் தெரியவில்லை.

25 ஆண்டுகளுக்குப் பிறகு திடீரென முகநூலில் ஆதவன் இப்ராஹிம் என்கிற பயனர் பெயரில் இப்ராஹிம் தோன்றினார். பழைய இலக்கிய நட்புகளை முகநூல் வழி புதுப்பித்துக்கொண்டார். இந்தியாவில் இஸ்லாமியர்கள் சந்தேகத்துக்கு உரியவர்களாகவே பார்க்கப்படுவதன் அவலம், துயரம், வேதனை, வருத்தம், துக்கம் ஆகியவற்றை நீண்ட பட்டியலிட்டு, நாங்களும் இந்தியாவை நேசிக்கிறோம், இந்துக்கள் எங்களின் தொப்புள் கொடி உறவுகள் என முடித்திருந்த அவரது நீள் கவிதை வைரலாகி, நூற்றுக் கணக்கான விருப்பங்கள், ஐம்பதுக்கு மேல் பகிர்வுகள், சில நூறு நட்புக் கோரிக்கைகளை சம்பாதித்துக் கொடுத்தது. அந்தக் கவிதையில் நெக்குருகி பசுபதியும் நட்புக் கோரிக்கை விடுத்தார்.

ஆதவன் இப்ராஹிம் அச்சு இதழ்களிலோ, இணைய இதழ்களிலோ கவிதைகள் எழுதுவதில்லை. முகநூல் மட்டுமே அவரது செயல் களம். அவற்றில் எப்போதாவது கவிதைகள் எழுதுவார். அவ்வப்போது இஸ்லாமிய சமூகம், அரசியல், சங்கி எதிர்ப்பு தொடர்பான பதிவுகளும் வெளியிடுவார்.  ஃபெரோஸுடன் இலக்கியக் கூட்டங்களுக்கும் வரலானார். அப்போது ஃப்ரோஸ் மூலம் பசுபதிக்கு அவருடன் நேரடிப் பழக்கமும் ஆயிற்று. அலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டனர்.

வாரம், பத்து நாளுக்கு ஒருமுறை இப்ராஹிமிடமிருந்து சாதிய எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு, இஸ்லாமிய ஆதரவு, இஸ்லாமிய மதவாதப் பிரச்சாரம் தொடர்பான யூ ட்யூப் காணொளிகளின் இணைப்பு, இணையக் கட்டுரைப் பகிர்வுகள் ஆகியவை வரும். இலக்கியம், கலை தொடர்பான பகிர்வுகள் எதுவும் இராது. பசுபதிக்கு இப்ராஹிம்மின் நோக்கங்கள் புரிந்தன. எனினும், நண்பர்கள் யாரையும் அவ்வளவு சீக்கிரம் மறுதலித்தோ, எதிர்த்தோ பேச மாட்டார் என்பதால் அவரது நுண் அரசியல் செயலுக்குத் தடை எதுவும் தெரிவிக்கவில்லை.

இப்ராஹிம்மோடு நட்பில் உள்ள தனது இலக்கிய நண்பர்களிடம் இது குறித்துப் பேசியபோது, “எனக்கும் இப்புடித்தானுங் அனுப்பிச்சிட்டிருக்கறாரு. ஏதோ அஜண்டாவோடதான் மறுக்காவும் வந்து ஃபேஸ்புக்குலயும், வாட்ஸப்புலயும் தீவிரமா இயங்கீட்டிருக்கறாருங்கறது தெரியுது. இது மாற இன்னும் பல பேரு இருப்பாங்கன்னு நெனைக்கறன்” என்றார் ஒருவர்.

“தெரியாத்தனமா நான் அவுருக்கு என்னோட கவிதைத் தொகுப்பைக் குடுத்துத் தொலைச்சுட்டனுங்க. அதப் பத்தி ஃபோன்ல பேச ஆரம்பிச்சாரு. அப்பறம் மாசத்துக்கொருக்கா கூப்புட்டுப் பேசுவாரு. ஆனா, இலக்கியம் பேச மாட்டாரு. சனாதனம், ஜாதிக் கொடுமை, பார்ப்பனியம், சங்கிக – சொங்கிகன்னே பேசீட்டிருப்பாரு. அவுரு முஸ்லீமு. அவுங்களுக்கும் சாதிக்கும் என்ன சம்மந்தம்? சாதிப் பிரச்சனை இருக்கற இந்துக்கள் அதப் பாத்துக்கட்டும். இவுரு ஷட்டர் சாத்திட்டு முஸ்லீமுக காரியத்தைப் பாக்க வேண்டீதுதான?” என்றார் இன்னொருவர்.

“இந்துக்களுக்கு எடைல ஜாதிப் பிரச்சனையைப் பத்தவெச்சு, சனாதனம், பார்ப்பனியம், தலித்தியம்னு பெட்ரோல் ஊத்திவிட்டு, தாள்த்தப்பட்டவங்களை முஸ்லீமா மாத்தறதுதான் அவரோட அஜண்டான்னு தோணுது.” முதலாமவர் சொன்னார்.

“இப்புடித்தான் ஐ.எஸ்.காரனுக உலகம் பூரா மூளைச்சலவை மூலமாவும், ஏளைகளுக்குப் பணத்தாசை காட்டியும், முஸ்லீமா மதம் மாத்தி, தீவிரவாதிகளா ஆக்கீட்டிருக்கறதா நியூஸ் வந்துட்டே இருக்குதே…!” இரண்டாமவர் சுட்டிக் காட்டினார்.

கோவைச்செழியனின் அனுபவம் விரிவாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

“எனக்கு ஈ.வெ.ரா. போட்டோ அனுப்புனாரு. பதிலுக்கு நான் அலிசினா போட்டோ அனுப்புனேன். அதுக்கு அவுருக்கு ஓப்பாளம் வந்துருச்சு. அப்ப, நாம என்ன கூமுட்டைகளா? அதுல கோவிச்சுட்டு கொஞ்ச நாள் பேசாம இருந்தாரு. மறுக்காவும் அவுரே கூப்புட்டு சமாதானம் பேசுனாரு. அப்பறம் அப்புடியே உங்குளுக்கு அனுப்புன லிங்க்குகளை எனக்கும் அனுப்புனாரு. இந்த மாற ஜாதி, மதம், கட்சி, அமைப்புகளோட பிரச்சாரம், விளம்பரம், ஆள் புடிப்பு எதையும் எனக்கு அனுப்பாதீங்கன்னு மெசேஜ் அனுப்புனேன். கூப்புட்டுப் பேசி வாதம் பண்ணுனாரு. ‘சங்கிக உங்களை மூளைச் சலவை பண்ணியிருக்கறாங்க’ன்னாரு. ‘செரி, நாளைக்கு என் மூளையக் கள்ட்டிக் குடுக்கறன். நீங்க அளுக்காக்கிக் குடுங்க’ன்னேன். அப்புடி இப்புடின்னு பேசீட்டு, ‘செரி, நாம இனிமே இலக்கிய விவாதம் மட்டும் பண்ணுவோம்’னாரு. ‘உங்ககிட்ட இலக்கிய விவாதம் பண்ணித்தான் நான் தெரிஞ்சுக்கணும்கற அவசியம் இல்ல. நீங்க உங்க ஜமாத்துலயோ, இயக்கத்துலயோ போயி இலக்கிய ஞானஸ்னானம் குடுங்க’ன்னுட்டேன். அதோட சங்காத்தம் கட்டு.”

“கரெக்டுங்க. உங்களையாட்ட பதிலடி குடுத்தாத்தான் இந்த மாற ஆளுக அடங்குவாங்க. இல்லாட்டி விதவிதமா வாலாட்டீட்டே இருப்பாங்க.”

“அவுரைத் தொண்ணூத்தெட்டு இப்ராஹிம்னு சில பேரு சொல்றாங்களே…! அது ஏன்?” பசுபதி கேட்டார்.

“தொண்ணூத்தெட்டு சம்பவம்தான் காரணம். தொண்ணூத்தி ஆறுலருந்து தொண்ணூத்தியெட்டு வரைக்கும் அவரும் தீவிரவாத இயக்கத்துல இருந்தவருதானாம். அதை அவரே எங்கிட்ட சொல்லியிருக்கறாரு.” கோவைச்செழியன் சொன்னது மற்றவர்களுக்குப் பல வித யூகங்களையும் உறுதிப்படுத்தியது.

இஸ்லாமியத் தீவிரவாதிகள் குண்டு வைத்ததாக சொல்லப்படும் செய்திகள் யாவும் பொய்யானவை என்பது பசுபதியின் வலுவான நம்பிக்கை.

“இந்தியாவுல முஸ்லீம் தீவிரவாதிக குண்டு வெச்சதே கெடையாதுங்க. அது எல்லாமே அவுங்க பேரைச் சொல்லி சங்கிக வெச்சதுதான். கோவை குண்டுவெடிப்பும் அப்புடித்தான்” என்றார் அவர்.

 நண்பர்கள் இவரை வினோதமாகப் பார்த்தனர்.

“இந்தியாவுல இருக்கற எந்த ஒரு மூஸ்லீமும் கூட இந்த அளவுக்கு சொல்ல மாட்டான். உங்களோட அதி பயங்கர நம்பிக்கைக்கு என்னோட சல்யூட்.” கோவைச்செழியன் இடது கையில் சல்யூட் வைத்தார். மற்றவர்கள் சிரித்தனர்.

“சில சமயம் முஸ்லீம் தீவிரவாதிக பேரைச் சொல்லி இந்துத்துவாக்காரங்க அவுங்க ஆஃபீஸ்லயும், பொது எடத்துலயும் குண்டு வெச்சது வாஸ்த்தவம். ஆனா, அதெல்லாம் உயிர் சேதாரமோ, பெரிய பொருள் சேதாரமோ இல்லாம நடத்தப்பட்ட குட்டி குண்டு வெடிப்புக, இல்லாட்டி பெட்ரோல் பாம்தான். அதுக்காக மும்பை குண்டுவெடிப்பு, கோவை குண்டுவெடிப்பு மாதிரி பயங்கர வெடிப்புகளையும் இந்துத்துவாக்காரங்கதான் பண்ணுனாங்கங்கறது உலக மகா அறியாமை.”

     98 இப்ராஹிம் தீவிர சங்கி எதிர்ப்பாளர். அதனால், அட்டட்ரா சங்கி – மங்கி, சங்கி – மங்கி, சங்கி – மங்கி…, அட்டட்ரா சங்கி – மங்கி, சங்கி – மங்கி, சங்கி – மங்கி… என்று உற்சாகமாக சங்கியெதிர்ப்புப் பதிவுகளை வெளியிட்டுக்கொண்டிருப்பார். கர்நாடகப் பள்ளி மாணவிகள் ஹிஜாப் விவகாரத்தின்போது ஃபெரோஸ் இளவரசன் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் பலத்த ஆதரவும், சங்கி அரசு எதிர்ப்புக் கண்டனங்களும் வெளியிட்டுக்கொண்டிருந்தனர். 98 இப்ராஹிம் புனிதப் போர்க் குரலாகவே முழங்கி, ஒளிப்படங்களோடு ஆவேசப் பதிவுகளையும், மூர்க்கக் கவிதைகளையும் பதிவிட்டார். இந்து நண்பர்கள் சிலர் பழனிக்குப் பாத யாத்திரை போனபோது காவி வேட்டி அணிந்து சென்றதால் அவர்களுடனான நட்பை முறித்துக்கொண்டார்.

     ஒரு நாள் முகநூலில், முழுதான, நல்ல நிலையில் உள்ள நாலைந்து ஆரஞ்சுப் பழங்கள் சாக்கடையில் கிடக்கிற ஒளிப்படம் ஒன்றுடன் செய்தி வெளியிட்டிருந்தார். அவரது மனைவி ஆப்பிள், ஆரஞ்சுப் பழங்களை வாங்கி வந்திருந்தாராம். தொண்ணூத்தெட்டு இப்ராஹிம் வெகுண்டெழுந்து, “எதுக்கு இந்த சங்கிப் பளங்களை வாங்கிட்டு வந்திருக்கற?” என்று, அந்த ஆரஞ்சுகளை சாக்கடையில் வீசியெறிந்துவிட்டார். அதற்கு 54 விருப்பங்கள், கருத்துப் பகுதியில் 13 வீரகோஷங்கள் வந்திருந்தன.

பசுபதிக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் புரிந்தது, அந்தப் பழம் காவி நிறம் போன்ற ஆரஞ்சு நிறத்தைத் தோலாக உடுத்தியிருக்கிறதே என்று.

*******

நாலரை மணி இருக்கும். கண்காட்சி வளாகத்துக்குள் வாடிக்கையாளர்கள் ஓரிருவராக வரலாயினர். பூந்தளிர் ஸ்டாலுக்கு இன்னும் யாரும் வரவில்லை. பசுபதி புத்தக வாசிப்பை நிறுத்திவிட்டு கடைக்கு முன் நின்றபடி, தெரிந்த இலக்கியஜீவிகள் யாரேனும் வருகிறார்களா என்று பார்த்துக்கொண்டிருந்தார். அலைபேசி ஒலித்தது. எடுத்துப் பார்த்தார். ஃபெரோஸ்தான்.

எடுக்கலாமா, வேண்டாமா என யோசித்து, சும்மாதானே இருக்கிறோம் என்று பச்சையைத் தொட்டார்.

“மெசேஜ் பாத்தீங்களா இல்லையான்னு தெரியல. அதனாலதான் கூப்புட்டே கேக்கலாம்னு கால் பண்ணுனேன். புத்தகக் கண்காட்சிக்குப் போனீங்களா?”

“அங்கதான் இருக்கறனுங் பாய்.”

“அப்படியா?! என்னென்ன புக்கு வாங்குனீங்க?”

“புக்கு வாங்க வல்லீங் பாய். புக்கு விக்கற வேலைல இருக்கறன், மூணு நாளா…”

“என்னது…?!”

விபரம் தெரிவித்ததும், “ஐட்ராபாஞ்சன்…! நான் உடனே வர்றன்!” என்றார். அங்கே ஒரு குதி குதித்திருப்பார் என்று தோன்றியது. குரலில் தெரிந்த உற்சாகம், நேரே வந்து ஐயாயிரம் பத்தாயிரம் ரூபாய்க்குப் புத்தகம் வாங்கிவிடுவாரோ என்றும் எண்ண வைத்தது.

“என்னோட ரெண்டாவது நாவல் ஆதர் காப்பி வந்தது இருக்குது. அஞ்சு காப்பி உங்ககிட்டக் கொண்டுவந்து குடுக்கறன். வித்துக் குடுங்க.”

இதற்குத்தான் அந்த ஐட்ராபாஞ்சனா…?!

“செரி,… கொண்டு வாங்க” என்று அழைப்பைத் துண்டித்தார்.

ஃபெரோஸ் இளவரசனின் முதல் நாவல் கோவை குண்டுவெடிப்பு தொடர்பானது. இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் மூன்று நாவல்கள் எழுதப்பட்டுள்ளன. மூன்றுமே, மேற்படி குண்டு வெடிப்புக்குப் பின் 19 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியானவை. மூன்றும் இஸ்லாமிய எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. மற்ற இருவரும் கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள வேற்று ஊர்க்காரர்கள். ஃபெரோஸ் மட்டுமே கோவை நகரத்தைச் சேர்ந்தவர். அந்தக் கொடூர மதத் தீவிரவாதச் செயல் நடந்த பிறகு இதன் விளைவாக கோவை நகரில் இஸ்லாமிய சமூகத்தினர் அதிகமாக வசிக்கும் கோட்டைமேடு, மரக்கடை, ஆத்துப்பாலம், கரும்புக்கடை ஆகிய பகுதிகளில் போலீஸ் வேட்டைகள் நடந்தன. கைது, வழக்கு, தலைமறைவு, தேடல் என வெகு காலம் நீடித்த இதில் அப்பாவி இஸ்லாமியர்கள் பல வகையிலும் பாதிக்கப்பட்டனர். இந்த மூன்று பேரும் எழுதிய நாவல்களின் மையம், அப்பாவி முஸ்லீம்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதுதான். இது தொடர்பாக இந்துத்துவா மீதான கடுமையான எதிர்வினைகளும் அந்த நாவல்களில் விரிவாகப் பதிவாகியிருக்கும். ஆனால், இஸ்லாமியத் தீவிரவாதம் பற்றி மற்ற இரு நாவலாசிரியர்களும் ஒன்றுமே பேசியிருக்க மாட்டார்கள். ஃபெரோஸ் மட்டும் பட்டும் படாமல் மயிலிறகுச் சொற்களால் அதை நாலைந்து வரிகளில் கண்டித்துவிட்டு, இந்துத்துவா பற்றி பக்கம் பக்கமாக சம்மட்டி அடி, சவுக்கடிகளால் விளாசியிருப்பார்.

முஸ்லீம்கள் மட்டுமல்ல; இஸ்லாமிய ஆதரவு, சிறுபான்மை அக்கறை காட்டும் இலக்கியர், கட்சியினர், அமைப்பினர்கள் இந்த மூன்று நாவல்களையுமே கொண்டாடினர். அவற்றில் உள்ள அப்பட்டமான ஒருதலைப்பட்சத்தைப் பெரும்பான்மையரும் சுட்டிக் காட்டவில்லை. அவர்களின் கண்களுக்கு அது தெரியவில்லையா, தெரிந்தும் கமுக்கமாக மூடி மறைத்தார்களா, அல்லது அது சரிதான் என்பது அவர்களின் தரப்பா?

இந்த நாவல்கள் வெளியான சமயம், கூட்டாஞ்சோறு காலாண்டிதழில், கோவையைச் சேர்ந்த ஸமீரா என்ற கல்லூரி மாணவி, முத்தலாக் என்ற சிறுகதையை எழுதியிருந்தார். அதுதான் அவரது முதல் சிறுகதை என்று ஆசிரியர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கதையை வாசித்தால் பல்லாண்டு காலம் எழுதித் தேர்ந்த கை போல் இருந்தது. ஆத்துப்பாலம் பகுதியில் ஒரு வீட்டில் நடப்பது போன்ற கதை. முத்தலாக்கால் பாதிக்கப்படும் நாயகியின் தவிப்புகளையும், உள்ளக் குமுறல்களையும், அத்தகைய பாதிப்புக்கு உள்ளான அனைத்து இஸ்லாமியப் பெண்களின் குரலாகவும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியிருந்தார்.

கோவைச்செழியன் அக் கதையை வாசித்துவிட்டு, ‘இந்த ஒரே ஒரு சிறுகதை மூலம் மூத்த, இளம் கோவை இலக்கியவாதிகள் அனைவரையும் இடது புறங்கையால் பின்னுக்குத் தள்ளிவிட்டார் ஸமீரா’ என்று முகநூலில் எழுதியிருந்தார். அது ஃபெரோஸுக்குத் தாழ்வுணர்ச்சியையும் எரிச்சலையும் உண்டாக்கியிருக்கும் என்றாலும் அவர் காட்டிக்கொள்ளவில்லை. விருப்பமோ கருத்தோ தெரிவிக்கவும் இல்லை. சில இஸ்லாமியர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வந்து எதிர்ப்பும், கண்டனங்களும் தெரிவித்தனர். ‘இது எனது ரசனை, எனது மதிப்பீடு. அதைச் சொல்லவும் எழுதவும் எனக்கு உரிமை உண்டு. அது குற்றம் என்றால் போய் வழக்குப் போடுங்கள்’ என்றுவிட்டார் கோவைச்செழியன்.

பசுபதி ஆனைமலை இதயதுல்லாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, “ஃபெரோஸ் ஏன் இந்த மாதிரி எளுத மாட்டீங்கறாரு? முத்தலாக் சப்ஜெக்டை அவரு தொட்டதே இல்லியே…!?” என்றார். 

“அவரு எப்படிங்க இந்த மாதிரி எளுதுவாரு? முத்தலாக் வேணும்கறதுதான் அவரோட எண்ணமா இருக்கும். அதை எளுதுனாப் பிற்போக்குவாதி, அடிப்படைவாதின்னு சொல்லிருவாங்கன்னுதான் எளுதாம இருந்திருப்பாரு” என்றார் அவர்.

     “ஃபெரோஸ் மத விஷயங்கள்ல பிற்போக்குவாதிதான். அவுரோட மகளைப் பத்தாவதுக்கு மேல படிக்க வெக்கல. ஸ்கூல் முடிஞ்சதுமே மாப்பளை பாத்து, பதினாறு வயிசுல கல்யாணம் பண்ணி வெச்சுட்டாருல்ல?”

“முஸ்லீம் சமுதாயத்துல அது சகஜம்ங்க. இருந்தாலும் இவுரு ஒரு எளுத்தாளரா இருந்துட்டு அப்படிச் செஞ்சது மகா தப்பு.”

இஸ்லாத்தில் பெண்ணடிமைத்தனம் நிறைய இருப்பதாகப் பரவலாக சொல்லப்படுகிறது. பர்தா எனப்படுகிற புர்கா அணிவதும் அப்புடித்தான் என்றும் சொல்கிறார்கள். மாறாக, அது அவர்களின் மத உடை, ஆண்களால் விளையும் பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கக் கூடியது என்ற கருத்தும் அழுத்தமாகவே முன்வைக்கப்படுகிறது. அந்தப் பெண்கள் விருப்பப்பட்டு அவற்றை அணிந்தால் அதை மறுக்கவோ, எதிர்க்கவோ, விமர்சிக்கவோ துளி கூட நியாயம் இல்லை. ஆனால், சமீப காலங்களாக அடிப்படைவாத அமைப்புகள் தலைதூக்கி, அவர்கள்தான் புர்கா அணியக் கட்டாயப்படுத்துகிறார்கள் என்றும், கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாக பர்தா அணிவது பல மடங்கு அதிகரிக்கக் காரணம் அதுதான் என்றும் இஸ்லாமிய மதத்தவர்களே சொல்லவும், எழுதவும் செய்துள்ளனர். அது அவர்களது மதத்தின் உள்விவகாரம் என்பதால் பசுபதி அதில் தலையிடுவதில்லை. தகவல்களை அறிந்துகொள்வதற்காக மட்டும் தெரிந்துவைத்துக்கொள்வார்.

முகநூல் நட்பில் உள்ள இஸ்லாமியர் ஒருவர், ‘புர்கா அணியாத பெண்கள் எல்லாம் தன் உடலை ஆண்களுக்குக் காட்சிப்படுத்திக் கவர்ந்து இழுத்து பாலியல் தொழில் செய்கிற விபச்சாரிகள்’ என்று பதிவிட்டிருந்தார். அதற்கு ஆயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர். முன்னூறுக்கு மேற்பட்ட ஆதரவுக் கருத்துகள் வந்திருந்தன. நூற்றி அறுபது பகிர்வுகள்.

பசுபதிக்கு அப் பதிவில் சொல்லப்பட்டிருந்ததில் நியாயமான கோபம் எழுந்தது. ‘பெண்கள் என்று பொதுவாகச் சொல்லியிருப்பது முறையற்றது. அது பிற மதப் பெண்களையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. உங்கள் மதப் பெண்களைப் பற்றி நீங்கள் சொல்வதாயின் இஸ்லாமியப் பெண்கள் என்று திருத்திக்கொள்ளுங்கள்’ எனக் கருத்து இட்டிருந்தார். பதிவு இட்ட நபர் நன்றி என பதில் அளித்திருந்தார். ஆனால், திருத்தம் செய்யவில்லை. அப்படியானால் பிற மதப் பெண்கள் யாவரும் விபச்சாரிகள் என்பதாகத்தானே அர்த்தம்? இவரது கருத்துக்கு ஒரு இஸ்லாமியர், ‘இது இஸ்லாமியர்களுக்கான பதிவு. காபிர்கள் இங்கே வந்து கருத்து நீட்ட வேண்டியதில்லை’ எனத் திமிரான பதில் அளித்திருந்தார்.

அவர்கள் பொது இஸ்லாமியர்கள் அல்ல; இஸ்லாமிய மதவாதிகள், மத அடிப்படைவாதிகள் என்பதால் பிறகு பசுபதி அந்தப் பக்கம் தலைகாட்டுவதில்லை. அந்த முகநூல் கணக்குடனான நட்பைத் துண்டித்துக்கொள்ளவும் செய்தார்.

அந்தத் தகவல்களைத் தெரிவித்துவிட்டு, “ஃபெரோஸ் அதைப் பத்தியும் ஒண்ணும் கதையாவோ, கட்டுரையாவோ, முகநூல் பதிவாவோ எளுதுனதில்லீங்ளே…!” என்றார், ஆனைமலையாரிடம்.

“நானுந்தாங்க அதையெல்லாம் எளுதறதில்ல. எங்க மத நம்பிக்கை, மதக் கொள்கை, மத வளக்கங்களுக்கு எதிரா எளுதப்போனா பெரிய சிக்கல் ஆயிரும். ஒரு கவிதைல ரெண்டு வரி, நாலு வரி அப்புடி எளுதுனதுக்கே ஒரு கவிஞரையும், கவிதாயினியையும் ஜமாத்லருந்து தள்ளி வெச்சுட்டாங்கல்ல! கொலை மிரட்டல் கூட வந்துச்சே…! சங்கிகளையா இருந்தா ஜங்கு ஜங்குன்னு குதிச்சுக் குதியாட்டம் போட்டு, வெளுத்து வாங்கீர்லாம். இவுங்ககிட்ட அப்புடிப் பேசவோ, எளுதவோ முடியாது. அதனாலதான், இந்துத்துவா இந்துத்துவான்னு மூச்சுக்கு முன்னூறு வாட்டி சௌண்டு உடற முஸ்லீம்களாகட்டும், முஸ்லீம் ஆதரவாளர்களாட்டும், இஸ்லாமித்துவாங்கற வார்த்தையக் கூட சொல்ல மாட்டாங்க. அப்புடி ஒண்ணு இருக்கறதாவே காமிச்சுக்க மாட்டாங்க.”

கூட்டாஞ்சோறு அடுத்த இதழில், ‘கோவைக் கலவர இலக்கியத்தில ஒருதலைப்பட்சம்’ என்னும் தலைப்பில் ஸமீராவின் விமர்சனக் கட்டுரை வெளியாகியிருந்தது. சமரசமற்ற நடுநிலையோடு, காத்திரமாக எழுதப்பட்ட கட்டுரை அது. ஃபெரோஸ் இளவரசனும் மற்ற இரு இஸ்லாமிய நாவலாசிரியர்களும் செய்துள்ள ஒருதலைப்பட்ச படைப்புச் செயல்களைத் தோலுரித்திருந்தார். மற்ற இரு நாவலாசிரியர்களும் மார்க்சியப் போர்வையில் இந்த செயலைச் செய்வதைக் கேள்விக்குள்ளாக்கியும் இருந்தார்.

“அப்பாவி முஸ்லீம்கள் பாதிப்புக்கு உள்ளானது பற்றி நாவல் நெடுக ரத்தக் கண்ணீர் வடிக்கும் இந்த மூன்று நாவலாசிரியர்கள், அறுபதுக்கு மேற்பட்ட அப்பாவி இந்துக்களை முஸ்லீம் தீவிரவாதிகள் கொடூரமாகக் கொன்றது பற்றிக் கிஞ்சித்தும் வருந்தாதது ஏன்? காஃபிர்களின் உயிர்கள் ஈ, எறும்புகளுக்குச் சமானமா? அவர்களை இழந்த குடும்பங்களின் கதி என்ன? குண்டுவெடிப்பால் எத்தனை குடும்பங்கள் நாசமாயின? தொழில் நகரமான கோவையின் வியாபாரமே பல வருடங்களுக்கு பாதிக்கப்பட்டதே! அந்தத் தீவிரவாத வெறியாட்டத்தில் கோவையே சுடுகாடாகிவிட்டது. இந்த நாவலாசிரியர்களுக்கு அதெல்லாம் பொருட்டில்லை. இவர்களுக்கு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறதா?” – என முள் சவுக்கில் விளாசியிருந்தார் அவர்.

     இந்தக் கட்டுரை பற்றி கோவைச்செழியன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டும் இருந்தார். ஃபெரோஸ் அதற்கு, ‘நல்ல ஆய்வு’ என்று மட்டும் கருத்து தெரிவித்திருந்தார். மற்ற இரு நாவலாசிரியர்களும் செழியனின் நட்பில் இல்லாவிட்டாலும், அவர்களும் அதை வாசித்து அறிந்துதான் இருந்தனர். மூவருமே ஸமீராவின் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை. புனிதமான கள்ள மௌனம் சாதித்து, மகத்தான மயான அமைதியை நிலைநாட்டினர்.

     ஃபெரோஸின் இரண்டாவது நாவல், இஸ்லாமிய சமூகத்தின் உள் விவகாரங்கள் பற்றியது. ஆகவே அது அந்த சமூகத்தினருக்கானது மட்டுமாகவோ, அல்லது அந்தத் தன்மை அதிகமாக உள்ளதாகவோ இருக்கும். அதனால் பசுபதி அதை வாங்கவும் இல்லை; வாசிக்க விரும்பவும் இல்லை. விற்கக் கொண்டுவந்து கொடுப்பார் அல்லவா; வாய்ப்பிருந்தால் புரட்டிப் பார்க்கலாம் என்று பட்டது.

*******

இஸ்லாமியப் படைப்பாளிகள், இதழாசிரியர்கள், பதிப்பாளர்கள், இலக்கிய அமைப்பாளர்கள் ஆகியோர் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியப் படைப்புகளுக்குமே முன்னுரிமையும் சலுகைகளும் கொடுப்பது பற்றி இந்து, கிறிஸ்துவ இலக்கியவாதிகள் சிலர் பேசுவதுண்டு.

முக நூலில் இஸ்லாமியப் படைப்பாளிகளுக்கு சேர்கிற நட்பில் இஸ்லாமியர்கள் அதிகமாக இருப்பார்கள். அது இலக்கியத்துக்கான நட்பல்ல. மதத்துக்கான நட்பு. இஸ்லாமியப் படைப்பாளிகளின் பதிவுகளுக்கு வருகிற மத ரீதிக் கருத்துகளிலிருந்தும், மத கோஷங்களிலிருந்துமே அது நிரூபணமாகும். கவிஞர் ரூமிதாசனை கவிதை ஜிகாதி என்றும், ஃபெரோஸ் இளவரசனை கதை ஜிகாதி என்றும் ஒருவர் பாராட்டியிருந்தார். முஸ்லீம் அமைப்புகள், மதராஸா, முஸ்லீம் பொதுக் கூட்டங்கள் ஆகியவற்றுக்கு அழைத்து கௌரவிக்கவும் செய்வார்கள்.  

ஃபெரோஸ் பணியில் இருந்தபோது பகுதி நேர முகநூல் செயல்பாட்டாளராக இருந்து, இடையே நேரம் கிடைக்கும்போது அலுவலக வேலைகளையும் பார்த்துவந்தார். இப்போது முழு நேர முகநூல் செயல்பாட்டாளர். முகநூல் பதிவுகளிலும் இஸ்லாம் சமூக சார்பில் அரசியல் கருத்துகள். எதிர்வினைகள், கண்டனங்கள், ஆவேசக் கொந்தளிப்புகளை வெளியிட்டுக்கொண்டிருப்பார். நூல் வாசிப்பு அனுபவங்கள், விமர்சனங்கள் எழுதுவதும் அதிகபட்சம் இஸ்லாமிய எழுத்தாளர்களுடையதாகவே இருக்கும். அவரது பொதுப் பதிவுகளுக்கு 30 – 40 விருப்புகள் வரும். இஸ்லாமியப் பதிவுகளுக்கு 60 – 70 விருப்புகள், 20 – 25 பகிர்வுகள் கிடைக்கும். அதற்கு அடிமையாகிவிட்டதால் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாகவே அவர் முகநூலில்தான் அதிக நேரம் செலவழிக்கிறார். படைப்புக்கும், வாசிப்புக்கும் நேரம் ஒதுக்குவது மிகக் குறைவு.

     இலக்கிய எழுத்தில் பணம் வராது என்பதால் இலக்கியவாதிகளின் பெற்றோர், மனைவி / கணவர், மக்கள் ஆகியோர் அவற்றை விரும்ப மாட்டார்கள் என்பது உலக நடைமுறை. ஆனால், ஃபெரோஸின் மனைவி இதற்கு நேர் எதிர். 

அவர்களின் வீட்டுக்குப் பசுபதி சென்றிருந்தபோது ஒரு முறை,

“இவரு கதை, நாவல் எளுதறதையே விட்டுட்டாரு. எப்பப் பாத்தாலும் ஃபேஸ்புக்குலயே உளுந்து கெடக்கறாரு. அதுக்கு அடிமையா இல்ல; கொத்தடிமையாவே ஆயிட்டாரு. வேலைல இருந்தப்பவாச்சும் அப்பப்ப ஒண்ணு, ரெண்டு கதைக பத்திரிகைல வந்துட்டிருக்கும். இப்ப ரிட்டையர்மென்ட்டுல வீட்டுலதான் இருக்கறாரு. சும்மா இருக்கறக்கு எளுதிக் குமிக்கலாமல்ல? ஆனா, ஒண்ணு கூட எளுத மாட்டீங்கறாரு. பீரோலயும், செல்ஃபுலயும் அத்தனை புஸ்தகங்க அடுக்கி வெச்சிருக்குது. அதுல பாதிக்கு மேல படிக்காததுதான். அதையாவது எடுத்துப் படிங்கன்னா அதுவும் கேக்கறதில்ல” என அங்கலாய்த்தார்.

     “இப்புடிச் சொல்ற வொய்ஃப் எந்த இலக்கியவாதிக்காவது கெடைப்பாங்களா? உங்களை முகநூல் தெற்கு மண்டல மேலாளர்னு செளியன் கிண்டலடிக்கறாரே…! கண்டதுக்கெல்லாம் கொந்தளிச்சு ஃபேஸ்புக்குல பதிவு போட்டுட்டு இருக்கற நேரத்துல கதை, நாவல் எளுதற வேலையப் பாக்கலாமே…!” என்றார் பசுபதி.

     “கதை அனுப்புனா நெறையப் பத்திரிகைல போடவே மாட்டீங்கறாங்க. அதனாலதான் எளுதறக்கு இன்ட்ரஸ்ட்டே வர்றதில்ல.”

     அதற்கு அவரது மனைவி சொன்ன பதில், பசுபதியை அசர வைத்துவிட்டது.

“நீங்க முஸ்லீமுகளைத் தூக்கிப் புடிச்சு, இந்துக்களை மட்டம் தட்டி எளுதுவீங்க. அதை முஸ்லீம் பத்திரிகைக வெளியிடும். பொதுப் பத்திரிகைல வெளியிடுவாங்களா? எளுதுனா எல்லாருக்கும் பொதுவா, நடுநிலையா எளுதணும். முஸ்லீமுக தப்பே பண்ணுல, அவுங்கல்லாம் யோக்கியருக, இந்துக்கள்தான் கெட்டவங்க, தப்பெல்லாம் அவங்கதான் பண்ணுனாங்கன்னு எளுதுனா பொது மக்கள் ஒத்துக்குவாங்களா?”

     ஃபெரோஸ் இவரிடம் திரும்பி, “என்னோட கதைக இஸ்லாமியப் பத்திரிகைகள்லதான் அதிகமா வெளியாகுது. அவுங்கதான் கேட்டு வாங்கிப் போடறாங்க. இஸ்லாமியத் தீவிரவாதத்தைப் பத்தியும், இஸ்லாமியர்களோட மத்த தவறுகளைப் பத்தியும் கதை எளுதி அனுப்புனா, அவங்க அதை வெளியிடறதில்லை. ‘இதைப் பத்தி எல்லாம் நாம சொல்லக் கூடாதுங்க பாய். இந்துக்கள் நம்ம சமூகத்துக்கு செய்யற பாதிப்புகளைப் பத்தி மட்டும் எளுதுங்க’ன்னு சொல்றாங்க” என்றார்.

“மதவாதிக, மத வியாபாரிக அப்படி ஒருதலைப்பட்சமா இருக்கலாங் பாய். நீங்க ஒரு படைப்பாளி அப்புடி இருக்கலாமா? எளுத்தாளன் எல்லாருக்கும் பொதுவானவனா இருக்கணும்னு நீங்களே எளுதியிருக்கறீங்களே…?”

பதில் சொல்லாமல் மௌனம் காத்தார்.  

ஜனரஞ்சக நட்சத்ர நாவலாசிரியர் குமாரபாலனின் நாவல்கள் பற்றி ஃபெரோஸ் ஒரு முறை முகநூலில் பதிவிட்டிருந்தார். ‘குமாரபாலன் எனக்குப் பிடித்தமான நாவலாசிரியராக இருந்தார். அவரது நாவல்களை ஆர்வத்தோடு வாசிப்பேன். அவர் யோகம், தியானம், ஆன்மீகம், சாமியார் பற்றியெல்லாம் நாவல்களில் எழுதத் துவங்கியதும்தான் வெறுத்துப் போய் அவரது நாவல்களை வாசிப்பதையே விட்டுவிட்டேன். மதத்தையும், ஆன்மீகத்தையும் அவரவர் வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும். எழுத்தாளன் எல்லோருக்கும் பொதுவானவனாக இருக்க வேண்டும்’ என்று எழுதியிருந்தார். 

கோவைச்செழியன் இது பற்றி கடுமையான எதிர்வினையாற்றி, அவருக்கும் இவருக்கும் இடையே நீண்ட, தொடர் சச்சரவுகள் ஏற்பட்டு ஓய்ந்தது.

அதை நினைவூட்டிய பசுபதி,

“அப்ப நானும் ஒரு பாய்ன்ட்டை உங்ககிட்டக் கேக்கலாம்னு இருந்தனுங் பாய். ஏன் பொதுவெளில அதைக் கேட்டுட்டுன்னுதான் உட்டுட்டேன். நீங்க சொல்ற மாதிரி குமாரபாலன் மதத்தைத் தூக்கிப் புடிக்கவெல்லாம் கெடையாது. இந்து மதம், இந்துக் கடவுள்கள், யோகம், தியானம், காத்தாடி சாமியார் பத்தி எளுதியிருக்கறாரே தவுத்து, எங்கயாவது, இந்து மதம்தான் உயர்ந்தது, மத்த மதங்கள் தாள்ந்ததுன்னு எளுதியிருக்கறாரா? அவுங்கம்மா ஏசு பக்தை. அவுங்க எறந்தப்ப, தற்செயலா அங்க கொக்கு பட டைரக்டர் இருந்திருக்கறாரு. அவரு கிறிஸ்துவராச்சே…! அவருதான் அந்தம்மாவோட சடலத்தைத் தூக்கி கட்டில்ல கெடத்துனாராமா. அவுங்களுக்கு ஏசுவோட அருள் இருந்ததுனாலதான் ஒரு கிறிஸ்துவரால அவங்க சடலம் கிடத்தப்பட்டுச்சுன்னு நெகிழ்ந்து சொன்னவரு குமாரபாலன்.

“நீங்க உங்க கதைகள்ல மதத்தைத் தூக்கிப் பிடிக்கலன்னு செளியனுக்கு பதில் சொல்லியிருந்தீங்க. ஆனா, இந்து – முஸ்லீம் கலவரங்கள் பத்தி எளுதும்போது, முஸ்லீமுக பக்கம் ஒரு தப்பும் கெடையாது, இந்துக்கள் பண்றதுதான் எல்லாமே தப்புன்னு எளுதறீங்களே…! அது நியாயமா? தன்னோட மதத்தைத் தூக்கிப் புடிக்கறதைவிட, இது ஆயிரம் மடங்கு மோசமானதில்லையா? குற்றத்துக்குத் துணை போறதில்லையா?” என்று கேட்டார்.

ஃபெரோஸ் வாயே திறக்கவில்லை. வேற்று மதப் படைப்பாளியை விமர்சித்து எழுதியது. தனக்குப் பொருந்தாது என்று எண்ணிக்கொண்டிருந்தாரோ என்னவோ!

*******

வளாகத்தில் வாடிக்கையாளர்கள் சற்று கூடி, ஒவ்வொரு ஸ்டாலாகப் பார்வையிட்டபடி வந்துகொண்டிருந்தனர். இவர்களின் ஸ்டாலிலும் நாலைந்து பேர் இருந்தனர். அப்போது 98 இப்ராஹிமுடன் ஃபெரோஸ் இளவரசன் வந்தார்.

வைத்தியலிங்கத்துக்கு ஃபெரோஸுடன் பழக்கம் இல்லாவிட்டாலும் நன்கு தெரியும். மரியாதை நிமித்தம் நலம் விசாரித்து, குடும்ப காரியங்களையும் கேட்டார்.

“உங்க மக வயித்துப் பேத்திக ஐஸ்கூல் போகறக்கு ஆயிருச்சு. மகனுக்கு ஜீஹெச்சுல டாக்டர் வேலையும் வாங்கீட்டீங்க. அவனுக்குக் கல்யாண ஏற்பாடு ஏதாவது பண்ணீட்டிருக்கறீங்களா,… எப்புடி?”

“நிச்சயம் முடிஞ்சிருச்சுங்க.”

பசுபதிக்கு அந்த விஷயம் தெரியாது. அதனால் ஆவலோடு, “அப்படியா? சொல்லவே இல்ல? பொண்ணும் டாக்டரா?” எனக் கேட்டார்.

‘சேச்சே…! இந்தக் காலத்துல வேலைக்குப் போற பொண்ணுகல்லாம் எங்க ஒளுக்கமா இருக்குதுக? அதனாலதான் படிச்சுட்டிருக்கற பொண்ணப் பாத்து நிச்சயம் பண்ணிட்டோம்.”

வேலைக்குப் போகிற இளைஞிகள் ஒழுக்கமாக இருக்க மாட்டார்கள் என்ற அவரது கூற்றைக் கேட்டதும் இவருக்குத் தூக்கிவாரிப் போட்டது. அதிர்ச்சியோடு வைத்தியலிங்கத்தைப் பார்க்க, அவரும் அவ்வாறே இவரைப் பார்த்துக்கொண்டிருந்தார்.

ஃபெரோஸ் பிற்போக்குவாதி என்று தெரியும். ஆனால், இந்த அளவுக்கு பெண்கள் மீது இழிவான கண்ணோட்டம் கொண்டவராக இருப்பார் என்று எண்ணிப் பார்க்கவில்லை. இவரெல்லாம் ஒரு எழுத்தாளர் என்று சொல்வது எவ்வளவு வெட்கக் கேடு! இப்படிப்பட்டவரிடமிருந்து பொதுப் பெண்கள் சமூகத்துக்கோ, இஸ்லாமியப் பெண்கள் சமூகத்துக்கோ கிடைக்கக் கூடியது என்னவாக இருக்கும்? சிறு நன்மையாவது கிடைக்குமா?

“கல்யாணம் எப்பங் பாய்?” வைத்தியலிங்கம் கேட்டார்.

“பொண்ணு படிச்சுட்டிருக்குது. இந்த வருசத்தோட முடிஞ்சிடும். அடுத்த வருசம் கல்யாணம்.”

“காலேஜ் ஃபைனல் இயரா?”

“இல்லீங்க. ப்ளஸ் டூ படிச்சுட்டிருக்குது. ஏன்யுவல் எக்ஸாம் எளுதி முடிச்சதும் கல்யாணம்.”

இது அடுத்த அதிர்ச்சி.

ஆனால், 16 வயதில் மகளைக் கட்டிக்கொடுத்தவர், 17 – 18 வயதில் மகனுக்குப் பெண் பார்த்திருப்பது ஒன்றும் வியப்பில்லைதான். 

பசுபதி எதுவும் சொல்லாமல் ஃபெரோஸிடமிருந்து பையை வாங்கி, அவரின் நாவல் பிரதிகள் ஐந்தையும் ரேக்கில் நன்கு தெரிகிற விதமாகக் காட்சிப்படுத்தலானார். ஃபெரோஸும் அருகே வந்து நின்று அதைப் பார்வையிட்டார்.

 “எவ்வளவு காப்பி வந்துச்சுங் பாய்? எவ்வளவு வித்துச்சு?” உடன் இருந்த 98 இப்ராஹிம் வினவினார்.

     “அட, அதை ஏனுங் பாய் கேக்கறீங்க? ஆதர் காப்பி பத்து குடுப்பாங்க. அது வந்ததுமே போட்டோப் புடிச்சு ஃபேஸ் புக்குல ஸ்டேட்டஸ் போட்டன். வேணுங்கறவங்க பணம் அனுப்புங்கன்னு ஜீப்பே நம்பரு, ஐடி எல்லாம் குடுத்திருந்தேன். எரனூத்தம்பது லைக்கு, எளுவத்தி மூணு செவப்பு ஆர்ட்டின், நூத்தி அம்பத்தாறு வாள்த்துகள் வந்துச்சு. அஞ்சாறு பேரு மட்டும் எனக்கு வேணும்னாங்க. ஆனா, பணம் அனுப்புல. பத்துக் காப்பியும் அப்புடியே கெடந்துச்சு. தொண்ணூத்தெட்டு சம்பவம் பத்தி என்னையாட்ட நாவல் எளுதுன திருப்பூர் பாய்கிட்ட, நீங்களாச்சும் ஏதாவது பத்திரிகைல மதிப்புரை எளுதுங்க பாய்ன்னு சொல்லி ஒரு காப்பி அனுப்பி வெச்சேன். ஆறு மாசமாச்சு. எளுதற பாட்டக் காணம்.”

     அப்போது புத்தகங்களைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த, ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த இளம் பெண் ஃபெரோஸைத் திரும்பிப் பார்த்துவிட்டு, பசுபதி காட்சிப்படுத்தி வைத்திருந்த அவரின் நாவலிலிருந்து ஒரு பிரதியை எடுத்தாள். எவ்வளவு விலை என்று பார்த்து பர்ஸிலிருந்து ஐநூறு ரூபாய்த் தாளை எடுத்து பசுபதியிடம் கொடுத்து, “ரசீதும் குடுங்க” என்றாள். பசுபதி நகர்ந்தார். தன் தோள் பையிலிருந்து ஜெல் பேனாவை எடுத்தவள், ஃபெரோஸிடம் வந்து நாவலின் முன் பக்கத்தை விரித்துப் பேனாவுடன் நீட்டி, “உங்க கையொப்பம் போட்டுக் குடுங்க ஸார்!” என்றாள்.

     ஃபெரோஸுக்கு அதி பரவசம். இத்தனை மாதங்களாக ஒரு பிரதி கூட விற்கவில்லை. இங்கே கொண்டுவந்து வைத்ததுமே ஒரு பிரதி விற்பனையாகிவிட்டதே! அதுவும், ஜீன்ஸ் அணிந்த இளைஞி ஒருத்தி தன்னுடைய நாவலை வாங்கி, கையொப்பமும் கேட்கிறாள் என்பது நம்பவியலாத ஆச்சரியத்தையும், எதிர்பாராத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

     “வளக்கமா எல்லாரும் கையெளுத்தும்பாங்க. நீங்க கரெக்ட்டா கையொப்பம்ங்கறீங்களே…! எனக்கே முப்பது – நாப்பது வருசத்துக்கப்பறம் இப்பத்தான் அந்த வார்த்தையே ஞாபகம் வருது” என்றவர், நூல் பக்கத்தில் இன்னாருக்கு அன்புடன் என்று எழுதுவதற்காக, “உங்க பேரு?” என்று கேட்டார்.

     “ஸமீரா.”

     சிறு யோசனையோடு பார்த்தார்.

     “உங்களோட மொதல் நாவலுக்கு கூட்டாஞ்சோறுல விமர்சனம் எழுதுன அதே ஸமீராதான்!” என்றாள் சரியான ழகர உச்சரிப்போடும், புன்னகையோடும்.

     அவருக்குத் திகைப்பு. பிறகு சமாளித்துக்கொண்டு, “நீங்கதானா அது?” என்று சிரிப்பைக் காட்டிக்கொண்டார். எழுதிக் கையொப்பம் இட்டுக் கொடுத்துவிட்டு, “வீடு எங்க?” என விசாரித்தார்.

     அதைச் சொல்லிவிட்டு, “நாங்க உங்களுக்கு தூரத்து சொந்தம்தான் ஸார்” என்று கூறி, அதை விளக்கிக்கொண்டிருக்கையில் பசுபதி பாக்கிப் பணமும் ரசீதும் கொண்டுவந்து கொடுத்தார்.

     “மொதல் நாவலைத் தொவைச்சுக் காயப் போட்டுட்டீங்க. இதைக் கிளிச்சுக் குப்பைல போட்டுருவீங்களோ என்னமோ…!” என்றார் ஃபெரோஸ்.

     அவள் மீண்டும் புன்னகைத்து, “உள்ளது உள்ளபடி எழுதணுமில்லீங் ஸார்! படைப்பானாலும் சரி, விமர்சனமானாலும் சரி…”

     புன்னகை மாதிரி ஒன்றைக் காட்டித் தலையாட்டிக்கொண்டார். 

     98 இப்ராஹிம் அவளது கதையையோ, விமர்சனக் கட்டுரையையோ வாசித்ததும் இல்லை, கேள்விப்படவும் இல்லை போலும். “ஏம்மா,… புர்கா போட மாட்டயா? அட்லீஸ்ட், ஹிஜாப்பாவது போட்டுக்கணுமில்ல?” என்று கேட்டார்.

     கூரிய பார்வையால் அவரைத் துளைத்தபடி, “என்னை புர்காவோ, ஹிஜாப்போ போடச் சொல்றக்கு நீங்க யாரு? உங்களுக்கு என்ன உரிமை?” எனக் கேட்டாள்.

     98 இப்ராஹிம்மின் முகம் சூம்பியது. ஃபெரோஸுக்கும் முகம் சுண்டியது.

     ஹிஜாப் விவகாரத்தில் முகநூலில் அவர்கள் இருவரும் முழங்கிய வாசகங்கள் பசுபதிக்கு நினைவில் ஆடின.

     ஸமீரா முகநூலில் இல்லை. எனவே, அங்கு நடக்கும் கோலாகலங்கள் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கோவைச்செழியன் அவளது முத்தலாக் சிறுகதையை வெகுவாகப் பாராட்டியிருந்தது பற்றி அவளிடம் சொல்லலாமா? அது தொண்ணூத்தெட்டுக்கும், ஃபெரோஸுக்கும் கூடுதல் சங்கடத்தை உண்டாக்குமே… என யோசித்துக்கொண்டிருக்கையில் அவள் நாவலையும் ரசீதையும் தோள் பையில் வைத்துக்கொண்டு ஸ்டாலை விட்டு வெளியேறிவிட்டாள்.

*******

     இப்ராஹிமுக்கு அவமானம் தாளவில்லை. மூஞ்சியைத் தூக்கிக்கொண்டு வெளியே போய் நின்றுகொண்டார்.

ஃபெரோஸ் அலட்டிக்கொள்ளவில்லை. மீன்கொத்திப் பார்வையோடு புத்தகக் காட்சிப்படுத்தலைப் பார்வையிட்டு, ஆங்காங்கே கொத்தியெடுத்து, மேஜைக் கரையில் வைக்கலானார். மூன்று பெரிய தமிழ் நாவல்கள், கனமான இரு மொழிபெயர்ப்பு நாவல்கள், ஒரு தடித்த சிறுகதைத் தொகுப்பு, குண்டான ஒரு கட்டுரைத் தொகுப்பு. அடேங்கப்பா, இவ்வளவும் வாங்கப் போகிறாரா? என்னடா இது, அதிசயமாக இருக்கிறதே என பசுபதிக்குப் பேராச்சரியம் தாளவில்லை. 

 ஃபெரோஸ் வேண்டியவற்றைச் சேகரித்து முடித்ததும், தான் கொண்டுவந்த பையில் போட்டுக்கொண்டு, “செரி, வருட்டுங்ளா…?” எனக் கிளம்பிவிட்டார்.

பணமும் கொடுக்கவில்லை, ரசீதும் போடவில்லை. விலை எவ்வளவு என்று கூடப் பார்க்கவில்லை. இவருக்கு என்ன செய்வது என்று பிடிபடவும் இல்லை. கூப்பிட்டுக் கேட்டால் அது அவருக்கு கௌரவக் குறைச்சலாக ஆகிவிடுமோ என்று தவிர்த்துவிட்டார்.

“என்னங், பணம் குடுக்காமப் போறாரு?” வைத்தியலிங்கம் கேட்டார்.

“அவரோட புக்கு குடுத்திருக்கறாரில்ல. அதுல களிச்சுக்கலாம்.” சமாளிக்க முற்பட்டார்.

“என்னென்ன புஸ்தகம் எடுத்தாரு? மொத்தம் எவ்வளவு ஆகுதுன்னு பாத்தீங்ளா?”

விற்பனையாளர் வேலையை சரியாகச் செய்யாமல் தவறிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சி உறுத்தியது.

“என்னென்ன எடுத்தாருங்கறது ஞாபகம் இருக்குதுங்க. அதோட எக்ஸ்ட்ராக் காப்பிக இருக்கும். அதுல வெலை பாத்துக்கலாம்” என்றுவிட்டு, அந்தப் பிரதிகளை எடுத்து விலைப் பட்டியல் குறித்தார். 2,780 ரூபாய் ஆயிற்று. ஃபெரோஸின் நாவல் ஐந்து பிரதிகளின் மொத்தத் தொகை 1,350.

“மிச்ச தொகைக்கு என்ன செய்யறது?” வைத்தியலிங்கம் கேட்டார்.

பசுபதி பதில் தெரியாமல் விழித்தார்.

*******

கண்காட்சி முடிந்த மறு நாள் கடையைக் காலி செய்து, மீதமுள்ள புத்தகங்கள் பூந்தளிர் நூல் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டது. ஃபெரோஸ் இளவரசனின் நாவலில் நான்கு பிரதிகளும் அதில் இருந்தன.

“கண்காட்சிலயே விக்குல. கடைல வெச்சு விக்கப்போகுதா?” என்றார் வைத்தியலிங்கம்.

பசுபதிக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

“அவுரு அள்ளிட்டுப் போன புக்குகளோட பில் தொகைக்கு என்ன பண்றதுங்க?”

அதுவும் இவருக்குப் பிடிபடவில்லை. ஃபெரோஸிடமே நிலவரத்தைத் தெரிவித்து பணம் கொண்டுவந்து தரவோ, அனுப்பவோ சொல்லலாமா என்ற யோசனை, தலைக்குள் வராமல் தருகித் தருகி பொடனிக்குப் பொறகாலயே பம்மிக்கொண்டிருந்தது. சேச்சே,… அதெல்லாம் மரியாதையாக இருக்காது என்று தனக்குள் சொல்லிக்கொண்டு, “எனக்குக் குடுக்கற சம்பளத்துல அந்த அமௌண்ட்டக் கம்மி பண்ணிருங்க” என்றார்.

அவ்வாறே 2,780 ரூபாய் குறைக்கப்பட்டு சம்பளம் கைக்கு வந்தது. வாங்கிய சம்பளத்தில் கால் பாகத்துக்கு மேல் அனாமத்தாகப் போய்விட்டதே என நொந்துகொண்டே வீடு வந்து சேர்ந்தார்.

சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிக்கொண்டிருக்கும்போது அலைபேசியில் ஃபெரோஸின் அழைப்பு. எடுத்துச் சென்ற புத்தகங்களுக்கான பணத்தைப் பற்றி இவரிடம் அவர் எதுவும் சொல்லவோ, கேட்கவோ இல்லை.

“வாட்ஸப்புல என் மகன் நம்பரை உங்குளுக்கு அனுப்பி வெச்சிருக்கறனுங்க பசுபதி. அவன் எப்பப் பாத்தாலும் எங்கிட்ட, ‘இலக்கியம் எளுதி என்ன பிரயோஜனம், வாப்பா? அதுல பணமா கெடைக்கப் போகுது?’ன்னு கேட்டுட்டே இருப்பான். என்னோட நாவல் எத்தனை காப்பி வித்திருந்தாலும், அந்த அமௌண்ட் மொத்தத்தையும் அப்புடியே நேரா என் மகனுக்கு ஜீப்பேல அனுப்பிவிட்டுருங்க. நான் அவங்கிட்ட சொல்லீர்றேன்…” என்றார்.

     கெட்ட வார்த்தைகளே பேசாத பசுபதிக்கு வந்த கோபத்தில், மகா கெட்ட வார்த்தைகள் வரிசை பிடித்து வாய் வரைக்கும் வரலாயின. நாக்கைக் கடித்து அடக்கிக்கொண்டார்.

*******

ஷாராஜ்

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்டவர். தற்போது பொள்ளாச்சியில் வசித்துக்கொண்டிருக்கிறார். தமிழ் வழிக் கல்வியை பள்ளி இறுதி வரை மட்டும் பயின்றவர். 90-களின் துவக்கம் முதல் இலக்கியத்தில் ஈடுபட்டுவரும் இவர், சுயமாக நுண்கலை ஓவியம் கற்றுக்கொண்டு நவீன தாந்த்ரீக ஓவியராகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். 5 சிறுகதைத் தொகுப்புகள், நான்கு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, ஒரு மொழிபெயர்ப்பு ஆகியவை வெளியாகியுள்ளன.

சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளும், சில விருதுகளும், நுண்கலை ஓவியத்துக்காக கே.எம்.கோபால் நினைவு விருதும், கவிதைக்காக நெருஞ்சி இலக்கிய விருதும் பெற்றவர். 2023-ம் ஆண்டில் சௌந்தரா கைலாசம் நாவல் போட்டியில், நீர்க்கொல்லி என்ற இவரது நாவல் பரிசு பெற்றது.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *