தமிழ் இலக்கியத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் தி.ஜானகிராமனால் எழுதப்பட்ட படைப்பு “நளபாகம் “. நண்பர்களின் பரிந்துரையில் வாசிக்க வாய்ப்பு கிட்டியது. நறுமணங்களோடு தலவாழை இலையில் சோற்றைக்குழைத்துச் சாப்பிட்ட அனுபவத்தை உணர முடிந்தது. 

ஒரு காலத்தில் சமையல் வேலை என்றால் யாரும் செய்வதற்கு முன்வர மாட்டார்கள். சமையல்கார வேலை பார்க்கிறார் என்றால் பெண் கூட குடுக்கமாட்டார்கள். சமையல்காரன் என்றாலே ஏளனமாக இச்சமூகம் அவர்களை வைத்திருப்பதை நம் கண் கூடப் பார்த்திருப்போம். அதிலும் உயர்ந்த வகுப்பைச் சேர்ந்தவரென்றால் அவருக்கொரு மரியாதை. மற்ற வகுப்பைச் சார்ந்தவர்கள் என்றால் அவர்களை வேறு விதமான படி நிலையில் வைத்திருந்தது. அதிலும் குறிப்பாக பிராமணர்களுக்கு சமையல் வேலை செய்வதற்கென்று பிராமணர்கள் இருப்பார்கள். அவர்களை மட்டுமே வீட்டில் சமையல் செய்து கொள்வதற்கு வைத்திருப்பார்கள் பிராமணர்கள். இந்நாவலில் வரும் காமேச்வரனும் அப்படித்தான் ரங்கமணி வீட்டில் சமையல்காரனாக வேலை  செய்து வருகிறான். அங்கு நடைபெறும் பல்வேறு வகையான சமூக உரையாடல்களும் கருத்தாடல்களும் வண்ணமயமான கலைநயத்துடன் நாவலை முன் நகர்த்திச் செல்கின்றன

காவிரிப்படுகையில் அமைந்துள்ள ஒரு  பிராமணக் குடும்பத்தின் வாழ்வியலோடு சேர்ந்த சடங்கு சம்பிரதாயங்களை புனைகதை வழியாக விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்நாவலில் அகச்சூழலாக சமையல், ஆன்மீகம், மற்றும் காமத்தோடு அமையப் பெற்றுள்ளது. 

சலசலத்தோடு ரம்மியமாக ஓடிக்கொண்டிருக்கும் காவிரி நீரைப் போன்று நாவலாசிரியர் தி.ஜானகிராமனின் தேர்ந்த மொழியின் நடையைக் காணமுடிகிறது. கதையின் நிலப்பரப்பு பரந்து விரிவடைந்திருக்கின்றன.  நிகழ்காலத்தின் அசலைக் கூறும் பாங்கில் பரிணமிக்கின்றன. 

கரும்புகைகளை குபீர் குபீரென்று, சரளைகள் கொட்டிப் பரப்பிய நீண்ட நெடிய தண்டவாளத்தில் கக்கி ஊதிக் கொண்டு சென்று கொண்டிருக்கும்  ரயிலில் ஓராயிரம் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப இருக்கைகளைச் சார்ந்து பயணிக்கிறார்கள். ஒரு ரயில் பயணத்தில் மக்களின் துக்கம்,கவலை, துயரம், மகிழ்ச்சி அனைத்தையும் சுமந்து கொண்டே செல்கின்றன ரயில்கள். இந்ந ரயிலில் யாத்ரீகப் பயணமாக ரங்கமணி குடும்பமும் அவர்களோடு சமையல்காரன் காமேச்வரனும் செல்கிறான். வயல் வெளிகளுக்கிடையில் பூரானைப் போன்று ஊர்ந்து செல்லும் ரயிலை லயிக்கிறார்கள். யாத்ரீகப் பயணத்தை வாச்சையோடு கதைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார் இந்நூலாசிரியர் தி.ஜா.

அனுதினமும்  மூன்று நேர உணவுகளை தயார்செய்வதில் காமேச்வரன் கெட்டிக்காரன். ரங்கமணி வீட்டில் ஓடி ஓடி வேலை செய்து வருகிறான். சமையலை ஒரு வேலையாக பொருட்படுத்தாது ஒரு தெய்வீகக் கலையாக ஆன்மாவோடு ஒத்திசைந்து ஒரு தனிரசனையோடு செய்வதை இயல்பாகக் கொண்டிருக்கக்கூடியவையாக அமைந்துள்ளன. அடுக்களையிலிருந்து காவிரி ஆற்றுவரை அவன் பாதங்களின் தடங்கள் பதியப் பட்டுத்தானிருக்க வேண்டும். நறுமணச் சொற்கள் நிறைந்தைவையாகக் காணும் வகையில் இந்நாவல் தனித்துவமாக மிளிர்கின்றன.

ஆண்களின் அசைவுகளை ரசிக்கும் பெண்களை நேரடியாகவே குறிப்பிட்டிருக்கின்றன எந்தவொரு ஒளிவு மறைவு இல்லாமல். 

 சீட்டாட்டங்களின் குறும்புத்தனங்களையும் பொழுது போக்குகளையும் சிறார்களின் விளையாட்டுக்களையும் வேறுபடுத்திக் காண்பித்திருக்கின்றன. 

இயற்கை சார்ந்த விவரிப்புகள் நாவலில் ஆங்காங்கே கூறப்பட்டிருக்கின்றன. இறை நம்பிக்கையும் அவற்றுக்குண்டான பல்வேறு சடங்குகளும் சம்பிரதாயங்களும் முதன்மையாகக் கட்டமைத்திருப்பதைக் காண முடிகிறது. இவைகள் யாவும் கடலில் வீசிக்கொண்டிருக்கும் அலைகளைப் போலவும் நிலப்பரப்பில் ஒடிக்கொண்டிருக்கும் நீரோட்டங்களைப் போலவும் இருக்கின்றன.

எனினும் மாடக்குழியில் ஒட்டிக் கொண்டிருக்கும் எண்ணெய்ப் பிசுக்குகளாக கதைகள் படிந்திருக்கின்றன. நிழலும் வெயிலும் வண்ணத்துப்பூச்சிகளாக சிறகடித்து பரவிச் செல்லும் போது அவ்விடம் சுடர்விட்டு மிளிர்வதாய் இந்நாவல் காண்பித்திருக்கின்றன. 

காமேச்வரனை எள் என்றால் எண்ணெய்யாக இருப்பதை நினைத்து ரங்கமணி குடும்பத்தினர் ஆச்சரியப்படுகின்றனர்.  ரங்கமணியின் மகன் துரை வணிகக்கடையில் கணக்கராக வேலைக்குச் செல்வதும் வருவதுமாய் சளைக்காமல் உழைத்துக் கொண்டிருக்கிறான். இவனது மனைவி பங்கஜம் வீட்டிற்குள்ளே அடைகாக்கும் முட்டைக்கோழியைப் போன்று வெளியுலகம் ,ஏன் பக்கத்துத் தெருவின் பெயர் கூட தெரியாதவளாய் இருக்கிறாள். எவ்வளவு நாள் தான் ஒரு பெண்ணானவள் வீட்டிற்குள்ளே இருக்க முடியும். அவளுக்கும் வெளியுலகத்தை பார்க்க ஆசை  இருந்ததே இல்லையா. மாமியார் ரங்கமணி மற்றும் கணவர் துரை ஏதேனும் கட்டுப்பாடு வைத்திருந்தார்களா.பங்கஜத்தைப் போலவே இந்தியத் துணைக்கண்டத்தில் நிறைய பெண்கள் இருந்தனர். பொதுச் சமூகவெளியில் பெண்கள் சுதந்திரமாக இயங்குவதை சமூகம் விரும்புவதில்லை. ஆனால் பெண்கள் முன்னேற்றம்,பெண்ணுரிமை, பெண்கல்வி,பெண்விடுதலைப் பற்றிய விழிப்புணர்வுகளைப் பரவலாக்கி சமகாலத்தில் பங்கஜத்தைப் போன்று யாரும் இருக்கமாட்டார்கள். அந்தளவிற்கு தனிமனித சுதந்திரமும் முன்னேற்றமும் அடைந்திருக்கின்றன என்பது முற்றிலுமான உண்மை. 

பங்கஜம் தனது வீட்டைத் தவிர்த்து யார் வீட்டிற்கும் செல்வதுமில்லை. பேசுவதுமில்லை. காவிரிக்குச் சென்று குடத்தில் தண்ணீர் எடுத்துவர வேண்டும் ஆசை. எல்லாத்தெருக்களுக்கும் சென்று சகமனிதர்களோடு பேசிப்பழகி உறவினைப் பிணைக்கவேண்டும் என்ற ஆசை. திசைவாக்கில் பறந்து வந்து காதுகளில் விழுந்த  தெருக்களின் பெயர்களை நேரில் போய்க் காண விரும்புகிறாள்.

காவிரிக்கரை சிவன் கோவிலுக்கு தினமும் எண்ணெய் கிண்ணத்தோடு விளக்குப்போடச் செல்லும் தனது மாமியார் ரங்கமணியிடம் ஒரு வழியாகப் பேசி, தானும் வருகிறேன் என்று நச்சரிக்கிறாள். அவளும் பங்கஜத்தின் நிலையைப் புரிந்து கொண்டு அழைத்துச் செல்வதைப் பற்றிய பாடுபொருளை எடுத்துரைக்கின்றன. 

சீட்டாட்டம் ஆடிக்கொண்டிருப்பவர்களையும் சிறுவாண்டுகளின் விளையாட்டுக்களையும் மணல் பரப்பிய காவிரியாற்றங்கரையில் லயித்துக் கொண்டிருப்பதை வாசகனாக வாசிக்கையில் சூட்டுப்பழமாய் இருந்த உச்சந்தலையை தென்றல் வருடிச் செல்வதைப் போன்று இருந்தன. 

பிராமணர் வீட்டுக் கலியாணத்திற்கு உணவருந்த வந்திருந்த ஒருவன் கந்தலும் கிழிசலும் நரைத்த தாடியுடன் உட்கார்ந்திருக்க, ரங்கமணியின் கொள்ளுத்தாத்தாக்கள் அவனைத் தர தரவென இழுத்துப் பிடித்து வெளியே தள்ளியிருக்கின்றனர். அவன் ஒரேயொரு கேள்வியை பந்திக்கு வந்திருந்த பிராமணர்களின் முன் வைத்திருக்கிறான். 

“ஓய் எதுக்கு கல்யாணம் பண்றீரு “

“வம்ச விருத்திக்குத் தான… “

“என்னை வெளியே தள்ளிய ஒங்க வம்சத்துக்கு விருத்தம் வேணும்னா… “

“ஒருஆள்காரனோ, சமையற்காரன் மூலமாகத் தான் குழந்தை பிறக்கும்.  உங்கள் வீட்டு ஆண்கள் மூலம் வம்சம் விருத்தியடையாது” என்று சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறான். 

இந்தக்கதையை தேவாரம் அய்யங்கார் காமேச்வரனிடம் சொல்லி , ஏய் காமோச்வரா நீண்ட நாள்களாக குழந்தை இல்லாத பங்கஜம் நீ சமையல் வேலைக்கு வந்த பிறகு கருத்தரித்திருக்கிறாள் என்று சொன்னதும் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

செய்வதறியாது திகைத்து நிற்கிறான். தேவாரம் அய்யங்காரைப் போல இந்தச் சமூகம் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடும் என்று தன்னை வருத்திக் கொள்கிறான். எப்படியாவது ரங்கமணியின் வீட்டிலிருந்து வெளியே கிளம்ப வேண்டும். பல சாக்கு போக்குகளைச் சொல்லி மீண்டும் கும்பகோணத்திற்கு செல்கிறான் காமேச்வரன். 

எனினும் ஒருவரது பழிச்சொல் தலைமுறை தலைமுறையாக பாதிக்கும் என்பது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும். செய்யாத தவறுகளுக்காக பாவங்களைச் சுமக்க அவர்கள் என்ன வண்ணங்களால் குறியிட்டப்பட்டவர்களாக அல்லது விதிவிலக்கா என்று தோன்றுகிறது. 

இந்நூலில் இடம்பெற்றிருக்கும் அகவுரையும் புறவுரையும் பிராமணர்களின் கலாச்சாரத்தை பேசுபொருளாக முன் வைத்துச் செல்கின்றன. எனினும் பெண்கள் சார்ந்து இல்லற வாழ்வியல் குறித்தும், ஆன்மீகம் பற்றியும் பேசப்பட்டிருக்கும் நளபாகம் எனும் இந்நாவல் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். 

அய்யனார் ஈடாடி

மதுரை மாவட்டம், மாடக்குளம் அருகிலிருக்கும் தானத்தவம் எனும் கிராமத்தைப்  பூர்வீகமாகக் கொண்டவர். வேதிப் பொறியியல் துறையில் பி.டெக்  பட்டம் பெற்றவர். தற்போது தொழில் முனைவோராக உள்ளார்.

கல்லூரிக் காலத்திலேயே படைப்புகளை எழுதத் தொடங்கியவர். வேளாண் தொழில் குடும்பப் பின்புலமும், தமிழின்  மீதான பற்றாலும், இயற்கையின் கொண்டிருக்கும் அதீதக் காதலாலும் கவிதைகளைப் படைப்புகளாக வடித்தெடுக்கிறார்.

ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி எனும் கவிதை நூலை 2022லும் , மதுரை வட்டார கிராமத்து எளிய மக்களின் பாடுகளையும் , வரலாற்று சரித்திரத்தையும்

எனதூர் சரித்திரம் எனும் சிறுகதை நூலாக தொகுத்து 2023ல் வெளியிட்டிருக்கிறார்.

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *