சுந்தரவனம் மிகப்பெரிய வனம். அங்கே வகை வகையான பெரும் பெரும் மரங்கள் வானுயர்ந்து அடர்ந்து நின்றிருந்தன. வனத்தைச்சுற்றிலும் ஆங்காங்கே அருவிகளும் பல இருந்தன. சுந்தரவனத்தினுள் அனைத்து விலங்குகளும் பறவைகளும் உணவுக்கும், நீருக்கும் தட்டுப்பாடின்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்துவந்தன.
போக ஒவ்வொரு காலத்திற்கும் வகை வகையான கனிகள் மரங்களில் கொத்துக்கொத்தாய் காய்த்துப்பழுத்துத் தொங்கின. சுந்தரவனத்தில் வாழும் பறவையினங்களுக்கு அந்தக்கனிகள் உணவாகின. தாவர உண்ணி விலங்கினங்களுக்கு சுந்தரவனம் சொர்க்கமே தான்.
இப்படியிருக்க வனத்தில் வட்டிக்கரடியார் தன் குடும்பத்துடன் மெய்யருவி அருகில் வாழ்ந்துவந்தார். மெய்யருவியில் வருடம் முழுக்கவும் நீரோட்டம் இருந்துகொண்டேயிருக்கும். மழைக்காலங்களில் நீரானது பெருக்கெடுத்து ஓடும். அருவியின் அருகில் மூங்கில் மரங்கள் அடர்த்தியாய் வளர்ந்திருக்கும். அந்த மூங்கில் மரத்தில் மலைத்தேனீக்கள் பெரும் பெரும் தேன்கூட்டை கட்டி வாழும்.
கரடியார் அந்த மூங்கில்காடு முழுவதுமே தன்னுடையது என்று உரிமை பாராட்டிவந்தார் ஏனைய வன விலங்குகளிடம். அதைக்கேட்கும் மற்ற விலங்குகள் தங்களுக்குள் நகைத்துக்கொள்ளும். ‘ஏன் வனமே உன்னுதுன்னு சொல்லிக்கோயேன். அதென்ன மூங்கில்காடு மட்டும் உன்னுதுன்னு சொல்றே?’ என்று நினைத்துக்கொள்ளும்.
கரடியார் தன்னுடைய மூதாதையர்களைப்பற்றியெல்லாம் அவ்வப்போது கட்டுக்கதைகளை தன்னிடம் வட்டிக்கு பணம் வாங்க வரும் ஏழை எளிய விலங்குகளிடம் அள்ளி வீசிக்கொண்டிருப்பார்.
‘அந்தக்காலத்துல எங்க தாத்தன் இதே வனத்துல குதிரை மேல ஏறித்தான் வலம் வருவாரு தெரியுமா?’ ‘அந்தக்காலத்துல எங்க பாட்டி மரத்துல எவ்ளோ உயரத்துல தேன்கூடு தெரிஞ்சாலும் மரத்துல கீழ இருந்தே தலைகிழுதாத்தான் ஒசக்க ஏறுவா.. தெரியுமா?’ என்று கேட்கும் விலங்குகள் வாயில் சிட்டுக்குருவியே நுழைந்து எட்டிப்பார்த்துவிட்டு செல்லுமளவு வாய்பிழந்து கேட்க வைக்கும் கலையை கரடியார் பெற்றிருந்தார்.
‘வட்டி குட்டி போடும்!’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருக்கும் வட்டிக்கரடியார் தன்னைத்தேடிவந்து தொகை கேட்கும் விலங்கினங்களின் அடிப்படை புத்தியை நன்கு அறிந்திருப்பார். வனத்தில் இருந்து அவ்வப்போது வரும் நரிகளுக்கு, அவைகள் என்னதான் கெஞ்சினாலும் பணம் தரவே மாட்டார்.
முன்பாக ஒருமுறை மாரிமுத்து நரியான் மீது பரிதாபப்பட்டு ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு வனம் முழுக்க அவனைத்தேடி அலையோ அலையென அலைந்து வட்டிக்கரடியார் கால்கள் வீங்கிப்போனதுதான் நடந்தது. இன்னமும் மாரிமுத்து நரியான் வட்டிக்கரடியார் கண்ணில் படவேயில்லை. யாரை விசாரித்தாலும் ‘தெரியாது’ என்றே இன்னமும் சொல்கிறார்கள்.
அதிலிருந்து காலிலேயே விழுந்து கதறி காசு கேட்டாலும் நரிகளுக்கு மட்டும் கரடியார் வட்டிக்கு பணம் கொடுப்பதேயில்லை. நல்ல மாட்டுக்கு ஒரு சூடு தானே!
வட்டிக்கரடியாரிடம் பணம் வாங்க வரும் சுந்தரவன விலங்குகள் எல்லாமே தங்கள் பிள்ளைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றோ, தங்கள் பெற்றோருக்கு உடம்புக்கு முடியலை என்றோ சொல்லிக்கொண்டு தான் வந்து பணம் கேட்பார்கள். அதிசயமாக சுந்தரவனத்தில் திருவிழா என்று வந்தால் மட்டும் சில விலங்குகள் வட்டிக்கு பணம் வாங்க ஓடோடி வரும்.
வட்டிக்கரடியாருக்கு பணம் கேட்பவர் கூறும் கதைகளை அவ்வளவாக காதில் கேட்கவே மாட்டார். பணம் வாங்கும் ஆள் திருப்பி பணத்தை வட்டியோடு தருவானா? ஏமாற்றிப் போய்விடுவானா? அந்தக்கணக்கில் தான் யோசித்தபடியிருப்பார்.
அன்று அப்படித்தான் மெய்யருவியில் வட்டிக்கரடியார் ஆழமில்லாத இடத்தில் நின்றுகொண்டு அருவி நீரில் துள்ளியபடி வந்துகொண்டிருக்கும் மீன்களில் கனமானதை கண்வைத்து கப்பெனப்பிடித்து வாயில் போட்டு மென்று தின்று கொண்டிருந்தார். அவரது மகன்கள் இருவரும் அருவியின் மறுபுரத்தில் இவரைப்போன்றே மீன்களைப்பிடித்து வாயிலிட்டு மென்று சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
அந்த சமயத்தில்தான் வனத்தில் பிரபலமான பாம்புக்கடி வைத்தியரான நரியார் சோர்வான நடைபோட்டுக்கொண்டு மூங்கில்காட்டுக்கு வந்து சேர்ந்தார். அவர் தன் இருப்பிடத்திலிருந்து கிட்டத்தட்ட நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்துவந்து சேர்ந்திருந்தார். அவருக்கு வயதும் இப்போது அதிகமாகிவிட்டதுதான்.
அவரது சின்ன மகனுக்கு தனது வைத்திய முறைமைகளை மிகப்பொறுமையாய் சமீப காலங்களில் கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்தார். சீக்கிரம் இந்த வன உலகிலிருந்து யாம் விடைபெற்றிடுவோமென்ற எண்ணம் சமீப காலமாய் அவர் மனதில் இருந்துகொண்டேயிருந்தது.
சுந்தரவனத்தில் நாகக்குடும்பம் ஒன்று ரொம்ப காலமாகவே இருந்துவந்தது. அந்தக்குடும்பம் தனது உணவுத்தேவைகளாய் எலி, பெருக்கான், முயல், உடும்பு, கீரியென பிடித்து உண்டு வாழ்ந்து வந்தது. அப்படியிருந்தும் அந்தக்குடும்பம் விளையாட்டுப்பேர்வழிக்கூட்டமாய் இருந்தது.
அசந்து நிழலில் தூங்கும் பெரிய விலங்கினங்களை கொத்தி விளையாடி விட்டு மாயமாய் மறைந்துவிடும். அப்படி பல விலங்குகள் நாகக்குடும்பத்தால் கொத்து வாங்கி உயிரைக்காப்பாற்றிக் கொள்ள பறந்தடித்து வைத்தியர் நரியிடம் வந்து சேர்ந்துவிடும்.
பாம்புக்கடி ஸ்பெஷலிஸ்டான நரியார் கடிபட்ட விலங்கினங்களை படுக்க வைத்து வைத்தியம் செய்து முடித்தபின் கடிபட்ட இடத்தில் வேப்பை இலைக்கொத்தால் பாடம் படித்து அனுப்பிவிடுவார். நரி வைத்தியரிடம் வைத்தியம் செய்தபிறகுதான் அந்த விலங்குகளுக்கு உயிர்மீதான பயம் தெளிவடையும். அதுவரை ‘போயிடுவோமோ! போயிடுவோமோ!’ என்றே பயந்து அலரும்.
இதனால் வனத்திலுள்ள ஏனைய விலங்கள் அனைத்துமே அந்த நாகக்கூட்டத்தைத்தேடி வனமெங்கும் கோபவெறியோடு அலைந்தன. ஆனால் அவைகளின் கண்களுக்கு தென்படுவனவெல்லாம் மஞ்சள் சாரை, கட்டுவிரியன், கருஞ்சாரை வகை பாம்பினங்கள் தான். அந்த நாகக்குடும்பம் மட்டும் அவைகளின் கண்களுக்கு சிக்குவதில்லை.
அப்படிச்சிக்கினால் கடித்துக்கண்டம் துண்டமாய் வீசிவிட பல விலங்குகள் வனத்தில் கங்கணம் கட்டிக்கொண்டு திரிந்தன. இருந்தும் வைத்தியரிடம் அன்றாடம் எப்படியும் இரண்டு மூன்று விலங்குகள் நாகனிடம் கடிபட்டு வந்தவண்ணமே இருந்தன. இது மாபெரும் குழப்பமாய் அந்த வனத்தில் பல வருடங்களாய் தொடரும் சம்பவமாய் இருப்பது ஒரு சாபக்கேடுதான்.
விஷக்கடி வைத்தியர் நரியார் பாம்புக்கடி வாங்கி உயிருக்குப்போராடி வரும் விலங்குகளுக்கு வைத்தியம் செய்து முடித்தபிறது தனக்கான தொகையை எப்போதும் பெற்றுக்கொள்வதேயில்லை. பாம்புக்கடிக்கு தொகை வாங்கிவிட்டால் வைத்தியம் பலிக்காது என்று நரியாரின் மூத்தோர்கள் சொல்லியபடி அவர் நடந்துகொள்கிறார்.
ஆனால் மற்ற வைத்தியங்கள் செய்தால் அவரது தின்னூரு தட்டத்தில் வியாதியஸ்தர்கள் அவர்களால் இயன்ற தொகையை போட்டுவிட்டு போய்விடுவார்கள். அது வைத்தியர் குடும்பத்துக்கு போதாமையாக இருந்தாலும் அதிலேயே அரைவயிறும் கால்வயிறும் நிரப்பிக்கொண்டு வைத்தியம் செய்து பிழைப்பை ஓட்டிவந்தார்கள்.
கடந்த இரு வாரங்களாக வைத்தியருக்கு வியாதியஸ்தர்களின் வரவு குறைந்து போயிற்று. ஒருவேளை உணவுக்கு கூட அவர் குடும்பத்திற்கு போதுமான வருமானமில்லை. பையன்களில் மூத்தவன் வைத்தியத்தொழில் நச்சுத்தொழில் என முடிவெடுத்து வனத்தில் வேட்டையாடி உணவு உண்ணும் பழக்கத்திற்கு மாறிப்போனான்.
எப்போதேனும் குகைக்கு வருபவன் தன்னை பெற்றெடுத்த தாயாருக்கு மட்டும் முயல்கறி கொண்டு வருவான். சின்னவனுக்கு வைத்தியத்தொழில் மீது அக்கறை அவ்வளவாக இல்லையென்றாலும் கிழவரின் ஆசைக்காக அதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டு வந்தான்.
குகையில் நிலைமை கவலைக்கிடமாக மாறிய சமயத்தில் கிழவி நரியாரின் யோசனையின்பேரில் வட்டிக்கு பணம் வாங்கிட கரடியாரைத்தேடி வைத்தியர் நரி மெய்யருவி வந்து சேர்ந்திருந்தார். வந்த களைப்பு தீர அருவி நீரில் சலப்புத்தண்ணீர் குடித்த நரியார்.. மீன் பிடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்த கரடியாரை தொந்தரவு செய்ய மனமில்லாமல் மூங்கில்காட்டின் முகப்பில் வந்து கால்நீட்டிப்படுத்தார். அவர் பார்வை கரடியாரை பார்த்தவண்ணமே இருந்தது.
கிட்டத்தட்ட அரைமணி நேரம் கழித்து நீரில் முக்குளி போட்டு முடித்த வட்டிக்கரடியார் தண்ணீர் உடம்பிலிருந்து ஒழுக ஒழுக மூங்கில்காட்டை நோக்கி காலை இழுத்து இழுத்து நடந்தபடி வந்தார். திடீரென சூரியனைப்பார்த்து நின்றவர் தன் உடலை ஒரு சிலுப்பு சிலுப்பினார். உடலிலிருந்த நீரெல்லாம் மழைத்துளி போன்று தெறித்தது அவரைச்சுற்றிலும். ‘அக்ஸ்’ என்றொரு தும்மலைப் போட்டவர் நரியாரை நோக்கி அன்னநடை போட்டபடி வந்தார்.
மரியாதை நிமித்தமாக வைத்தியர் நரியார் கரடியார் வரவும் எழுந்து நின்று வாலை ஆட்டிக்காட்டினார்.
“வராத மகராசன் இந்தப்பக்கமா வந்திருக்கே? என்ன விசயம்?” என்றார் கரடியார்.
“நம்மளப்பார்க்கத்தான் வந்தேன் கரடியாரே!”
“என்னையவா? என்னையென்ன பாம்பா கடிச்சு வச்சிட்டுது? யாராச்சிம் வனத்துக்குள்ள புளுகி வச்சுட்டானா?.. வட்டிக்கரடியானை பாம்பு கொத்தீட்டுதுன்னு? சொன்னாலும் சொல்லுவானுக.. வட்டி தரமாட்டாப்பசக!”
”அப்படியெல்லாம் யாரும் என்கிட்ட வந்து புளுகலை கரடியாரே! வீட்டுல ரெண்டு வாரமா சிரமமா இருக்குது. கிழவி உன்னைப்பார்த்துட்டு வரச்சொன்னா.. அதான்!”
“வீட்டுல சிரமம்னா என்னையப்பார்த்தா எல்லாம் செரியாகிப் போயிருமா? அப்பிடி கிழவி சொன்னாளா? பார்த்துட்டீல்ல மகராசனா கிளம்பு”
“தமாஸ் பண்ணக்கூடாது கரடியாரே! ரெண்டு வாரம் சிரமமில்லாம குடும்பத்தை ஓட்ட கொஞ்சம் பணம் வாங்கீட்டு போலாம்னு வந்தேன்!”
“இப்ப என்கிட்ட கைவசம் தொகை இல்லையே நரியாரே! எல்லாப்பணமும் வனம் முழுக்க இருக்கு. யாரும் அசலைக்கூட திருப்பித்தரலை. பேசாம நான் வட்டிக்கி விடற தொழிலை விட்டுட்டு வனத்துல மீன்கடை போடலாமான்னு யோசனை பண்ணீட்டு இருக்கேன். பசங்க வேற சத்தம் போடறானுங்க! கடனுக்கு வந்து மீனு வாங்கீட்டு போயிருவாங்களாமா எல்லாரும்!”
“கரடியாரே! உன்கிட்ட பணமில்லையின்னா உலகத்துல யாருகிட்டயும் பணமே இருக்காது! ஏழை வைத்தியனுக்கு வயித்துக்கு சாப்பாட்டுக்கு வழியை பண்ணிக்குடு!”
“நீயி வைத்தியன். வைத்தியத்துக்கு வர்றவங்க அவங்களா உன்னோட தட்டுல போட்டுட்டு போற சில்லரைக்காசை வச்சு குடும்பம் ஓட்டுறவன். இப்ப தட்டுல காசு விழலைன்ன ஒடனே வயிறு ஞாபகம் வந்துடுச்சு. வயிறு இருக்குதுல்ல வயிறு.. அது நேரமாச்சுன்னா பசிக்க ஆரம்பிச்சுடும். வயிறே இப்ப என்கிட்ட உணவில்லை.. போயிட்டு நாளைக்கி மத்தியானமா வந்து பசிச்சா சோறு என்கிட்ட இருக்கும்! அப்பிடின்னு நீ வயித்துக்கிட்ட நாயம் பேச முடியுமா? உலகத்துல இருக்குற எல்லாருக்கும் வயித்துப்பசி ஒன்னுதான் பிரச்சனை.”
“நான் உன்கிட்ட பணம் வாங்கிட்டு போகத்தான் வந்தேன். நீ என்னடான்னா பசி, வயிறுன்னு ராவு ராவுன்னு ராவுறே? நான் தட்டுல விழுற சில்லரைக்காசை வச்சு பொழப்பை ஓட்டுறவன் தான். ஆனா என்கிட்ட நேர்மை இருக்கு. நீ எனக்கு குடுக்குற காசு நிச்சயம் உன்கிட்ட வந்து சேர்ந்துடும். ஆபத்துக்கு உதவுறவனைத்தான் உலகமே போற்றும். இதெல்லாம் உனக்கே தெரியுமே!”
“என்னை இந்த சுந்தரவனமே போற்றலை.. இதுல உலகம் வேற தனியா போற்றனுமா? எத்தனைபேருக்கு சமயத்துக்கு நான் உதவியிருக்கேன். எவனாச்சிம் என்னை வாழ்த்தி ஒரு பாட்டு படிச்சிருக்கானா? அவனவனுக்கு அவசர ஆத்தரத்துக்கு நான் ஒருத்தன் சிக்கீட்டேன். பணம் வாங்குற வரைக்கும் கண்ணீர் சிந்துறானுங்க, கால்ல விழறானுங்க.. வாங்கினதும் மையம் பறந்துட்டு ஓடீர்றானுங்க! நாம தேடிப்போய் அவனுங்களை மிரட்டி.. அவனுங்க குகையில, வங்குல இருக்குற ஜாமான் செட்டுகளை தூக்கிட்டு வந்த பொறகு பணத்தை எடுத்துட்டு பின்னாடியே ஓடியாறானுங்க. அந்தப்பணத்தை மொதல்லயே இங்க தேடிவந்து குடுத்துட்டு போகலாம்ல! செய்ய மாட்டானுங்க! செய்யும் தொழிலே தெய்வம்னு நம்புறேன். எந்தத்தொழில் செஞ்சாலும் ஒரு நீதி, நேர்மை, நியாயம் லொட்டு லொசுக்கு வேணும். கடவுள் எல்லோரையும் பார்த்துட்டேதான் இருக்காரு. என் தொழிலையும் என்னையும் நிச்சயம் பாராட்டுவாரு.”
“அவரு என்னையும் பார்த்துட்டேதான் இருக்காரு. இந்த வனத்துல பாதியில போற எத்தனை உயிர்களை காப்பாத்தி நடமாட வச்சிருக்கேன் நான். அவனவனுக்கு அவனவன் தொழில் பெருசு தான். சரி எனக்கு தொகை வேணும் கரடியாரே! வட்டியோட ரெண்டு வாரம் கழிச்சு இதே இடத்துக்கு வந்து உன் தொகையை நான் குடுத்துடறேன். ஒரு சொல்லு ஒரு பேச்சு!”
“அடுத்த வாரத்துல வனத்துல விஷக்காய்ச்சல் வந்துருமா? நீ நிறைய சம்பாதிச்சிருவியா? உன்னோட என்னால பேசமுடியல நரியாரே. இப்ப கைவசம் என்கிட்ட பணமில்லெ! எதுக்கும் அடுத்தவாரம் வா. உனக்கு நான் பணம் தர்றேன்!”
“தாகம் எடுக்குறப்பத்தான் தண்ணி வேணும் கரடியாரே! சரி.. நீ எங்க நரி இனத்துக்கே பணம் தர்றதில்லைன்னு முன்னயே கேள்விப்பட்டிருக்கேன். சரி வனத்தினோட வைத்தியன் அப்படிங்கற நினைப்புலயாச்சும் பணம் தருவீன்னு நம்பிக்கை வச்சு வந்தேன். பரவால்ல கரடியாரே! நான் வேற எங்காச்சும் பார்த்துக்கறேன். போயிட்டு வர்றேன்!” கும்பிடு ஒன்றை கரடியாரை பார்த்து போட்டுவிட்டு நரியார் அங்கிருந்து கிளம்பினார்.
வைத்தியர் நரியாரை இரண்டாவது நாள் காலையில் வட்டிக்கரடியார் தேடி ஓடோடி வந்தார். அப்போது வைத்தியர் நரியார் சூரிய நமஸ்காரத்தில் அமர்ந்திருந்தார். கால்மணி நேரத்திற்கும் மேலாக தியானத்தில் அமர்ந்திருக்கும் அவரை யாரும் தொந்தரவும் செய்யக்கூடாது. ‘வைத்தியரே! வைத்தியர் நரியாரே!’ என்று தியானத்தில் அமர்ந்திருக்கும் நரியாரின் அருகில் நின்று பதைபதைப்புடன் சப்தமிட்டு அழைத்தார் கரடியார்.
இதைக்கவனித்த நரியாரின் துணைவியார் கரடியாரை நோக்கி வாயில் கைவைத்து சைகை செய்து தன்னருகில் வரும்படி அழைத்தாள். கரடியார் குண்டான் குண்டானென கிழவியிடம் ஓடி நின்றார். அவருக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிற்று.
“தியானத்துல இருக்குற வைத்தியர் கிட்டப்போய் கத்துறே? அறிவிருக்கா உனக்கு? நீ என்ன கத்துனாலும் வைத்தியர் காதுல ஏறாது தெரிஞ்சுக்கோ. ஆமா என்ன உன் பிரச்சனை? ஏன் இப்பிடி வெந்தண்ணியில காலை உட்டவனாட்டம் குதியாலம் போடுறே? சொல்லு!” என்றாள் நரிகிழவி.
“அது வந்து நரியம்மா.. என் பெரிய பையனை கொஞ்சம் நேரத்திக்கி முந்தி நாகனொன்னு கொத்திப்போட்டுது நரியம்மா.. ஆளு லொய்யோ லொய்யோன்னு கீழாற படுத்து உருளுறான். அவனை நாங்க தூக்கியாறவும் முடியாது. ஆளு மலைமாடாட்டம் ஒடம்பை வளர்த்தி வச்சிருக்கான். மூங்கில்காடு வரைக்கிம் வைத்தியரை நான் கையோட கூட்டிட்டு போக நீங்க அனுமதி தரணுமம்மா! தாயே! மகராசியா இருப்பே நீயி! எம்பட கட்டித்தங்கத்தெ நான் காப்பாத்தியாவனுமே தாயே!”
“அட நீயொன்னும் பயப்படாதே! நீ முன்னாடி போ.. இப்ப எந்திருச்சுவாரு வைத்தியரு.. நான் உன் பின்னாடியே அனுப்பி உடறேன்.”
“தாயே.. நான் நின்னு கையோட கூட்டிட்டு போறேன்மா! என்னோட பையன் துள்ளுற துள்ளு கண்ணுக்குள்ளயே இருக்கே தாயே! அவன் உசுரு பொழச்சா போதும் தாயே! எம்பட உசுரு போனாக்கூட போயிட்டு போவுது! அன்னிக்கி பணம் வேணும்னு வைத்தியன் வந்தானே.. பணமில்லையின்னு சொல்லி தாட்டி உட்டுட்டேனே.. அதை மனசுல வச்சுட்டு வராம போயிருவானம்மா வைத்தியன்!”
“இது உசுரு விசயம்டா.. அதா எந்திரிச்சுட்டாப்ல வைத்தியரு.. வந்துருவாரு கூட்டிட்டு போ! இப்பிடி பயந்து சாவுறானா! பாம்பு கடிச்சவனை காப்பாத்துறதெல்லாம் என் ஊட்டுக்காரருக்கு தூசுமாதிரி சமாச்சாரம் தெரிஞ்சுக்கோ! அவரு கைவச்சு பொழச்சவங்க ஆயிரம் பேரு இன்னும் சுந்தரவனத்துல சுத்துறாங்க!” என்றாள் நரிக்கிழவி.
தன் வைத்தியப்பெட்டியுடன் மெய்யருவி வந்துசேர்ந்த நரி வைத்தியர் வாயில் நுரை கொஞ்சமாய் தள்ளி உருண்டு கொண்டிருக்கும் கரடியானை பார்த்தார். உடனடியாக வைத்தியத்தை ஆரம்பித்தார். வைத்தியம் முடிய அரைமணி நேரமாயிற்று. பாம்புக்கடிபட்ட கரடியான் இப்போது கொஞ்சம் அமைதியாய் கிடந்தான். மூச்சு சீராய் வந்து கொண்டிருந்தது அவனிடமிருந்து.
கடைசியாக வேப்பையிலை கொத்தை ஒடித்து வந்து கடிவாயில் படுமாறு வைத்து பாடல் படித்தார். வைத்தியபெட்டியிலிருந்து எடுத்த திருநீரை அவன் நெற்றியில் பூசிவிட்டு, வாயைத்திறக்கச்சொல்லி வாயிலும் திருநீரை வீசி சப்பி விழுங்கச்சொன்னார்.
“வைத்தியரே! பொழச்சுக்குவான்ல எம்பட பையன் இனி?”
“இன்னும் கொஞ்ச நேரத்துல மீனுப்புடிச்சுத்திங்க ஓடீருவான் கரடியாரே! ஒன்னும் கவலப்படாதே! உன் பையன் என்ன.. என் பையன் என்ன? எல்லாரும் எனக்கு பசங்க மாதிரிதான். நான் எதுக்கு இருக்கேன் வைத்தியரா இந்த சுந்தரவனத்துல? எல்லோரையும் காப்பாத்தத்தான். சரி நான் புறப்படறேன் கரடியாரே!” என்ற நரியார் தன் வைத்தியப்பெட்டியை கையில் எடுத்துக்கொண்டு கிளம்ப ஆயத்தமானார்.
வட்டிக்கரடியார் வைத்தியருக்கு பணத்தை எடுத்து நீட்டினார். பணத்தையும் கரடியாரையும் ஒருமுறை பார்த்தார் நரியார்.
“எங்க பரம்பரையில யாரும் பாம்புக்கடிக்கு வைத்தியம் பார்த்தா பணங்காசு வாங்குறதில்லை கரடியாரே! நான் கிளம்புறேன்!” என்று சொல்லிவிட்டு நடையைக்கட்டினார்.
நடந்து செல்லும் நரியாரையே பார்த்தபடி நின்ற வட்டிக்கரடியார் அன்றிலிருந்து வனத்தில் எல்லோரிடமும் வட்டி வாங்கும் வழக்கத்தையே விட்டொழித்தார். நரிக்கூட்டத்திற்கு பணம் கொடுக்கும் வழக்கத்தை விட்டிருந்த கரடியார் அவர்களுக்கும் கேட்ட பணத்தை கொடுத்தார். அவர்களாக மூங்கில்காடு கொண்டுவந்து அசலை தரும் வரை பொறுமை காத்தார். அப்படி வாழ்வதும் கரடியாருக்கு அழகாகவே இருந்தது.
000
வா.மு.கோமு
வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலைக்கும் மேற்கே 12 கிலோ மீட்டரில் இருக்கும் வாய்ப்பாடி என்கிற கிராமத்தை சேர்ந்தவர். 91ல் திருப்பூரிலிருந்து நடுகல் என்கிற சிற்றிதழை கொண்டு வந்தவர். சமீபமாக நடுகல் இதழ் மீண்டும் காலாண்டு இதழாக வெளிவருகிறது. 91ல் இலக்கியகளம் இறங்கியவரின் சிறுகதைகள் பல்வேறு சிற்றிதழ்களில் வெளியாகத்துவங்கின. மனதில் நினைத்தவற்றை எழுத்தில் சொல்ல சிறிதும் தயக்கம் காட்டாத எழுத்தாளர் என்ற பெயரை கூடிய சீக்கிரமே பெற்றவர். கள்ளி, சாந்தாமணியும் இன்னபிற காதல் காதல் கதைகளும், எட்றா வண்டியெ, மங்கலத்து தேவதைகள், 57 சினேகிதிகள் சினேகித்த புதினம், மரப்பல்லி, சகுந்தலா வந்தாள், நாயுருவி, சயனம், ரெண்டாவது டேபிளுக்கு காரப்பொரி, தானாவதி, ராட்சசி, குடும்ப நாவல்.. ஆட்டக்காவடி, கள்ளி -2, நெருஞ்சி என்கிற நாவல்களை வெளியிட்டுள்ளார். கொங்கு வாழ்வியலை அப்பட்டமாக காட்டும் எழுத்துக்குச் சொந்தக்காரர்.