ஆர்னிகா நாசர்
முஹம்மது மீரான் வயது 60. செக்கச்சிவந்த அழகன். தலையில் கருப்பு எம்ப்ராய்டரி தொப்பி. சிரித்த முகம். வசீகரக்குரல். குற்றாலத்தில் பழக்கடை வைத்திருக்கிறார்.
மீரான் தனது இரு பேரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். ஒரு பேரனுக்கு வயது நான்கு. இன்னொரு பேரனுக்கு வயது இரண்டு.
மூத்தபேரன் மீரானின் தோளில் ஏறி அவரின் தலைதேசத்தை கொத்தாய் பிடித்து இழுத்தான். இரண்டாவது பேரன் மீரானின் கையை கடித்து வைத்தான்.
“முடியை பிடிச்சு தாராளமா ஆட்டு ஆனா விழுந்திராத. நீ கையக்கடி வேணாங்கல வாய் வலிக்காம பாத்துக்க!”
சட்டைப்பையிலிருந்து இரு லாலிபாப்கள் எடுத்து ஆளுக்கொன்றாய் நீட்டினார்.
வாசலில் காலடி அரவம் கேட்டது.
எட்டிப் பார்த்தார் மீரான். “யாருல அது?”
“அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வஅலைக்கும் ஸலாம்… யாருன்னு தெரியலையே…” வெளி வாசலுக்கு வந்து எட்டி பார்த்தார். மாநிறமாய் 35 வயதில் ஓர் ஆண் நின்றிருந்தார்.
“என்ன மதரஸா டொனேஷனா?”
“மீரான் பாய் என்னை தெரியல? நான்தான் அத்தெரிமானின் மகன் சையது அலி…”
“எந்த அத்தெரிமான்?”
“மறதி உங்களுக்கு அதிகமா போச்சு. நாசுவன் அத்தெரிமான் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?”
ஓவ்! நாசுவன் அத்தெரிமானை மறக்க முடியுமா? அப்துல் ரகுமான் என்கிற பெயர்தான் மருவி அத்தெரிமான் ஆயிற்று.
நாசுவன் என்றால் முடிவெட்டுபவர், நாவிதர், அம்பட்டன் என பொருள். நாவிதர் அம்பட்டன் போன்ற வார்த்தைகள் இப்போது தடை செய்யப்பட்டு விட்டன. மரியாதையாக சிகைக்கலைஞன் என்கிறோம்.
போன தலைமுறையில் இஸ்லாமியர்களில் பலர் நாவிதர்களாக பணி புரிந்திருக்கின்றனர். அத்தெரிமான் எங்கள் வீட்டு ஆண்கள் அனைவருக்கும் வீட்டுக்கு வந்து சிகை திருத்துவார். எங்கத்தாவுக்கு சவரம் செய்வார். எங்கள் குடும்ப மருத்துவரும் அவரே. அவர் எங்களின் நாடிகளை துல்லியமாக பார்த்து நோய்க்குறி கூறி நாட்டு மருந்து தருவார்.
எங்கள் வயல்களில் வருடத்திற்கு இரண்டு பூ விளையும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை அத்தெரிமானுக்கு அரை மூட்டை நெல் கொடுப்போம்.
பக்ரீத்துக்கு பக்ரீத் அவருக்கு ஆட்டுத்தலையும் குடலும் கொடுப்போம். 27-ம் கிழமைக்கு துட்டு கொடுப்போம்.
சையது அலியை ஆழமாக பார்த்தார் முஹம்மது மீரான். “அப்படியே அத்தும்சுத்தும் உங்கத்தா மாதிரியே இருக்க? வா வந்து உக்காரு… நல்லாயிருக்கியா? வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?”
“ பரவாயில்ல… நிக்கேன்…”
“அது அந்த காலம். இப்ப முடிவெட்றதுக்கு நட்சத்திர அந்தஸ்து வந்து விட்டது. சிகை கலைஞர்கள் விமானத்தில் பறக்கிறார்கள்!”
எதிரில் தயக்கமாக அமர்ந்தான் சையத் அலி.
“அலி! என்ன தொழில் பாக்க?”
“நானும் சலூன் கடை தான் வச்சிருக்கேன்…”
“எங்க?”
“கடையத்தெருவுல…”
“உங்க சலூன் கடை பேரென்ன?”
“அப்துல் ரகுமான் சிகை திருத்த நிலையம்…”
“கடை எப்படி ஓடுது?”
“ஆண்டவன் புண்ணியத்ல சிறப்பா நடக்குது!”
“சுன்னத்தெல்லாம் நீ பண்ணுறியா?”
“எங்கே? எங்கத்தா காலத்ல சுன்னத்தை சுன்னத்கல்யாணம் என்று கொண்டாடுவார்கள். சுன்னத் பண்ணப்படப்போற பையனை கோட் சூட் பூ மாலை சேரா அணிவிச்சு குதிரை மேல ஊர்வலம் கூட்டிட்டு போவாங்க. குடத்து மேல உட்கார வைச்சு சுன்னத் பண்ணி விடுவோம். அப்புறம் தினம் வந்து சுன்னத் காயம் ஆறி விட்டதான்னு பாத்து காளமேக செந்தூரம் தூவுவோம். உலக்கு வைத்து சுன்னத் பகுதியை அழுந்த மூடிக்கொண்டு குளிக்கச் சொல்வோம். சுன்னத் பண்ணப்பட்ட பய்யன்களுக்கு புஷ்டி ஏத்த பச்சைப்பால் முட்டை அடிச்சு குடிக்க கொடுப்பாங்க. உளுந்தங்களி தின்ன கொடுப்பாங்க. நாட்டுக்கோழி அடிச்சு சாறை கொடுப்பாங்க. இப்ப யாரு நாசுவனை வச்சு சுன்னத் பண்றாங்க?”
“சுன்னத்துக்கொன்று மிகப்பெரிய சரித்திரம் இருக்கு. 8000 ஆண்டுகளுக்கு முன்னமே ஆண்கள் சுன்னத் செய்திருக்கிறார்கள் என்பதை பண்டைய குகை ஓவியங்கள் ஆதாரப்படுத்துகின்றன.
ஆப்பிரிக்கர்கள், மத்திய கிழக்கு ஆசியர்கள், எகிப்தியர்கள், கோல்சியன்கள், எதியோப்பியன்கள், போனோசியன்கள், சிரியன்கள், யூதர்கள், முஸ்லிம்கள் சுன்னத் செய்து கொள்கின்றனர். தற்சமயம் மற்ற மதத்துக்காரர்களும் மருத்துவக் காரணங்களுக்காக சுன்னத் செய்து கொள்கின்றனர். இஸ்லாமுக்கு புதிதாக மதம் மாறுபவர்களும் சுன்னத் பண்ணுகின்றனர். முன்தோல் குறுக்கத்தை போக்க சுன்னத் பயன்படுகிறது!”
“உண்மைதான்!”
“என்னிடம் நீ ஏதாவது சொல்ல விழைகிறாயா?”
“ஆமாம்!”
“சொல்!”
“சுன்னத் வருமானத்தை நம்பி நான் இல்லை!”
“இப்ப யாரும் நாசுவர்களிடம் சுன்னத் பண்ணுவதில்லை. ஸ்டாப்ளர் இஸட்எஸ்ஆர் முறை, லேசர் முறை, டிஸ்யூ அட்கசிவ் க்ளூ மெத்தடு மற்றும் பிளாஸ்டிபெல் முறைகளில் நவீன சுன்னத் செய்து கொள்கின்றனர். சௌதில கூட குழந்தையை பிரசவம் பார்த்து வெளியே எடுக்கும் போதே தொப்புள்கொடியை கட் செய்து சுன்னத்தும் செய்து விடுகிறார்கள். சுன்னத்தை சுன்னத் கல்யாணமாக யாரும் கொண்டாடுவதில்லை!”
“அடுத்த மாதம் முதல் வாரம் அத்தாவின் பிறந்தநாள் வருகிறது!”
“சரி!”
“அவரின் ஞாபகார்த்தமாக மஹல்லாவில் இருக்கும் பத்து ஏழை சிறுவர்களுக்கு கத்னா செய்துவிட ஆசைப்படுகிறேன்… பணம் எதுவும் வேணாம்…”
முஹம்மது மீரான் யோசித்தார்.
“சுன்னத் கல்யாணம் நடத்த முப்பதாயிரம் நாப்பதாயிரம் ஆகும். பிளாஸ்டிபெல் சுன்னத்துக்கு வெறும் எட்டாயிரம் செலவு. எட்டாயிரம் கூட செலவில்லாமல் ப்ரீயா சுன்னத் பண்ணிறோம்னா ஆள் வரத்தானே செய்யும்!”
“பாய் நீங்க பண்ண வேண்டியதை சொல்றேன்!”
“சொல்லு…”
“பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் சங்க கட்டடத்திலேயே பத்து பேருக்கு சுன்னத் பண்ணிருவோம். நீங்க மொதல்ல ஜமாஅத்ல பேசி சம்மதம் வாங்குங்க. பள்ளிவாசல் மைக்ல அனவ்ன்ஸ் பண்ணுங்க. சுன்னத் பண்ணப்படப் போற பத்துசிறுவர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யுங்க. சுன்னத் பண்ணப்படப் போற பசங்களுக்கு நானே புதுத்துணி எடுத்து தருகிறேன். சுன்னத் முடிந்ததும் சிறுவர்கள் கையில் ஆயிரம் ஆயிரம் ரூபாய் திணிப்போம்!”
“நல்ல முயற்சி உங்கத்தா எத்னை சுன்னத் பண்ணிருப்பாரு?”
“குறைந்தபட்சம் இரண்டாயிரம்…”
“கிரேட்!”
“உங்க பேரக் குழந்தைகளுக்கு சுன்னத் பண்ணியாச்சா?”
“பண்ணல பண்ணனும். நீ பேசுறத கேட்டதும் எனக்கு ஒரு யோசனை வருது. உன்னை வச்சே என் பேரன்களுக்கும் சுன்னத் பண்ணனும்…. பத்து பேரோட இல்ல… தனியா ஜாம்…ஜாம்னு சுன்னத் கல்யாணமா”
“மகிழ்ச்சி!”
“உன் கைபேசி எண்ணைக் கொடு… முத்தவல்லியிடம் பேசி சம்மதம் வாங்கி தேதியைக் குறிப்போம்!” கைபேசி எண்ணைக் கூறினான்.
-பள்ளிவாசல் சங்கக்கட்டடம். கட்டட வெளிவாசலில் டிஜிட்டல் பேனரில் அத்தெரிமானின் ஒளிப்படம் அனைவரையும் வரவேற்றது.
பத்து சிறுவர்களுக்கும் ஊர் சூழ சுன்னத் பண்ணினான் சையது அலி.
துள்ளிய ஆண்குறி நுனிகளை சாம்பலில் போட்டு ஒரு மண் பாண்டத்தில் பதுக்கினான் சையதுஅலி.
சுன்னத் சிறுவர்கள் அவரவர் வீடுகளுக்கு தூக்கிச் செல்லப்பட சையதுஅலி கிளம்பினான். அரசு பிரசவ மருத்துவமனையின் பின்புறத்தில் பத்து ஆண்குறிதுண்டுகளை வீசி பிரார்த்தித்தான். “யா அல்லாஹ்! பிரசவங்களில் நிறைய ஆண் குழந்தைகள் பிறக்கட்டும் ஆண் குழந்தைகளை பெற்றவர்கள் நவீன சுன்னத்முறை பக்கம் போகாமல் எங்கள் மரபு சார்ந்த சுன்னத்தே செய்து கொள்ளட்டும். நான் செய்யும் சுன்னத்துகள் அனைத்தும் என் அத்தாவுக்கே சமர்ப்பணம்… ஆமீன்!”
00

ஆர்னிகா நாசர்
(13.11.1960) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சுகாதார அதிகாரியாக இருந்து ஓய்வு. மனைவி வகிதா மகள் ஜாஸ்மின் மகன் நிலாமகன். 2000சிறுகதைகள் 250 நாவல்கள் 50 தொடர்கதைகள்120 தொகுப்புகள். பத்துக்கும் மேற்பட்ட பட்டங்கள். பாவனை விஞ்ஞானக் கதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.

