நோய்ப்பாடு
புலரியில் உயிர்த்து நாளிதழ் எடுத்து
முதல் முப்பக்க விளம்பரம் ஒழித்து
உட்பக்கச் செய்திகள் மேய்ந்தால்
வாயின் முதற்சொல் கேவல வசவு!
காட்சி ஊடகம் காண அமர்ந்தால்
கூகுள் வாட்ஸ் ஆப் பார்த்தால்
மனதில் எழும் சொல் பிறப்பைப் பழிப்பது!
கீழ்மை அடைந்ததோ எம் சிந்தனைத் தளம்?
நுங்கும் நுரையுமாய் நாற்றச் சுழலாய்
கறுத்துப் பாயுதோ நம்
நோய்ப்பட்ட மனம்?
மாரீசம்
சநாதனம் என்பது பொற்கிழி பெற்றுப்
பிரசங்கம் செய்வதா?
அதன் நெறிப்படி வாழ முயல்வது
எம்மதமும் அவ்விதமே
மார்க்சியம் காந்தியம் அம்பேத்காரியம்
பெரியாரியம் பேரியம் தோரியம்
இருடியம் காரீயம் வெள்ளீயம்
யாவற்றுக்கும் பொருந்தும் அது-*
“நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே!
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ?
பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே!
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ?
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?”
*சுப்பிரமணிய பாரதி
நாஞ்சில் நாடன்
1989-லிருந்து கோவையில் வசித்து வரும் நாஞ்சில் நாடன் நவீன தமிழ் இலக்கியத்தில் இதுவரை 6 நாவல்கள், 19 கட்டுரைத் தொகுப்புகள், 4 கவிதைத்தொகுப்புகள்,29 சிறுகதைத் தொகுப்புகள் கொண்டுவந்துள்ளார். கலைமாமணி விருது, சாகித்ய அகாடமி விருது, கனடா நாட்டு இயல் விருது என்பன இவர் பெற்ற சிறப்புகள்.