பல நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவனைச் சந்தித்தேன். அவனைப் பார்த்து வெகுநாளாய் விட்டது. நானும் என் நண்பனும் கலாசாலையில் ஒன்றாய் வாசித்துக் கொண்டிருந்தோம். அதன்பிறகு ஒருவரை யொருவர் சந்திக்கவேயில்லை. எனக்குக் கலியாணம் நிச்சயமானவுடன் என் நண்பனை நேரிலேயே சந்தித்து அழைத்து வர அவன் வசிக்கும் கிராமத்திற்குப் போயிருந்தேன். இருவரும் சாயங்காலம் நதிக் கரைக்குப் பேசிக் கொண்டே வந்து உட்கார்ந்தோம். நாங்கள் பல பல விஷயங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பால்ய வயதில் கிராமத்தை விட்டுச் சென்ற நாங்கள், யௌவனத்தில் வந்து கலந்தோம். நகரத்தில் வாசித்துக் கொண்டிருந்த போது பட்டணமே சிறந்ததெனத் தோன்றியது. ஆனால் கிராமத்திற்கு வந்த பின்பு அந்த நினைவு வரவரக் குறைந்து நிழலைப் போல் மங்கிப் போயிற்று.
என் நண்பன் ராஜுவிடம் எனக்கு அளவற்ற அன்பு உண்டு. இல்லாவிட்டால் நானே நேரில் வந்து அவனைக் கூட்டிக் கொண்டு போவேனா? என் கலியாணத்தன்று அவன் பிரச்சனமாயிருப்பதில் எனக்கு அளவு கடந்த ஆனந்தம்.
முன்பொரு தடவை அவன் இருக்கும் கிராமத்திற்கு வந்த ஞாபகம். ஆனால் எப்பொழுது என்று திட்டமான நினைவு இல்லை. அப்பொழுது காணப்பட்டது போலவேதான் கிராமம் இன்றும் காண்கிறது. எவ்வித மாறுதலும் இல்லை. அந்த ஆற்றோரத்து ஊஞ்ச மரங்கள் இன்னும் மலர்களை ஆற்று நீரில் அள்ளி வீசிக்கொண்டே யிருக்கின்றன. நதிக்கரை யோரத்து இடிந்த கோவில், ஊர்க் கோடியிலிருந்த இரண்டு பாழடைந்த கூரை வீடுகள், தோட்டம் துரவு எல்லாம் அப்படியேயிருந்தன. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது அந்த மாலை வேளை. எங்களுக் கெதிரே மலர்கள் நிறைந்த சுகமயமானதோர் வாழ்க்கைச் சாலை திறந்து விடப்பட்டிருப்பதாக எண்ணினேன்.
“என்ன ராஜு, உனக்கு உற்சாகமாக இல்லையா? இதோ பார், எவ்வளவு அருமையாக ஜலம் தெளிவுடன் ஓடிக் கொண்டிருக்கிறது.
தூரத்தில் செல்லும் பசுக்களின் கழுத்தில் கட்டியிருக்கும் மணியின் சப்தம் உனக்குக் கேட்கவில்லையா? எப்படிப்பட்ட இன்பகரமான காலம் இது!” என்றேன்.
ராஜுவின் உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருந்த மகிழ்ச்சி பாட்டாக மலர்ந்தது. நான் சொன்னதைக்கூட அவன் கவனிக்க வில்லை. மெதுவாகப் பாட ஆரம்பித்தான். அவனது கண்டத்தி னின்றும் எழுந்த குரல் கேட்பதற்கு மிகவும் இனிமையா யிருந்தது. பித்தளைக் குடங்களிலும், மண் பாண்டங்களிலும் நீரை நிறைத்துக் கொண்டு ஒய்யாரமாக நடந்து சென்றனர் பெண்கள். சலசலப்பு மிகுந்த நதிக் கரையில்தான் அவன் பாடினான். ஆனால் அவன் பாட்டு என்னை மறுபடியும் கலாசாலை நாட்களை நினைவிற்குக் கொண்டு வந்தது. என்னுடன் இடை விடாமல் சதா விளையாடிக் கொண்டிருப்பான் சந்திரசேகரன். அவனுடைய குரலை என்ன வென்று சொல்வேன்! அடடா! எப்பேர்ப்பட்ட இன்னிசையைத் தன்னுள் அடக்கி வைத்திருந்தான் அவன்! அற்புதமாகப் பாடுவான். அவனைப்பற்றிச் சிந்தனை செய்து கொண்டே ஓடுகிற ஜலத்திலே மிதந்து வருகிற சருகுகளையும், பச்சை இலைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.
“என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?” என்று என் கரங்களைத் தட்டினான் ராஜு.
“என்ன ராஜு, யோசிப்பதற்கா ஒன்றுமில்லாமல் போயிற்று? நம்முடன் படித்துக் கொண்டிருந்தானே சந்திரசேகரன், அவனைப் பற்றித்தான் எண்ணிக் கொண்டிருந்தேன். உன்னுடைய சங்கீதம் தான் அவனை நினைக்கும்படி தூண்டிற்று!” எனச் சிரித்துக் கொண்டே சொன்னேன்.
“நம்ம சந்திரசேகரனா! அடடா, அவன்கூட வரச் சொல்லி யிருந்தான்; நாளைக் காலையில் போகலாமென்று இருந்தேன். நீயும் வந்து சேர்ந்தாய், நல்ல வேளையாக. இங்கே பக்கத்து ஊரில் நாடகம் நடக்கிறது. அதில்தானே அவன் இருக்கிறான். காலையில் அவசியம் போகலாம்,” என்றான்.
“சந்திரசேகரனா நாடகத்தில் சேர்ந்து விட்டான்! நான் ஒரு காலத்தில் இதை எதிர்பார்த்தெண்ணியிருந்தேன். பின்னால் தொடரப் போகும் அவன் வாழ்க்கைக்கு அறிகுறியாக முன்னாலேயே அதன் சாயல் தென்பட்டது. அவன் எப்பொழுதும் பாடிக் கொண்டே யிருந்ததினால்தான் இத்துறையில் கொண்டு வந்து விட்டது. அதிருக்கட்டும். கலாசலை வாலிபனொருவன் நாடகத்தில் நடித்துக் காலங் கழிப்பதென்பது அவனுக்கு உற்சாகத்தைக் கொடுக்குமென்று நான் நம்பவில்லை.”
“உன் அபிப்பிராயம் என்ன?” என்றேன்.
“கிருஷ்ணா! இன்னும் உனக்கு இந்த விஷயங்களெல்லாம் விளங்காம லிருப்பது ஆச்சரியமாயிருக்கின்றது. அவன் மிகவும் குதூகலத்துடனேயே காணப்படுகின்றான். அவனிடம் நானும் இக்கேள்வியைக் கேட்டேன். அவன் சொன்னான். “நகரத்தில் இருந்து இருந்து, சாலைகளிலிருந்து கிளம்பிய புகைப் படலத்தையும், பஞ்சாலைகளினின்றும் எழுந்த பேரரவத்தையும், கடுமையாக முகங்களை வைத்துக் கொண்டு செல்லும் மனிதர்களையும் பார்த்துக் கொண்டிருப்பதைவிட, இது எவ்வளவோ மேலல்லவா? அங்கே யாராவது உணர்ச்சி குன்றிக் காணப்படுகின்றார்களா? இவர்கள் காட்டும் உற்சாகம் முழுவதும் நடிப்பு மாத்திரமேயானாலும், அந்த உண்மையை அவர்கள் மறைக்க முயலவில்லை யல்லவா? உங்கள் நடிப்புக்கும், எங்கள் நாடகக் கூட்டத்தின் நடிப்புக்கும் இதுதான் வித்தியாசம்!’ என்றான்.
எனக்குச் சந்திரசேகரனைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் துடித்தது. பொழுது விடிந்ததும் புறப்படுவதென்று முடிவு செய்து கொண்டு, வீட்டிற்குப் போக எழுந்தோம். ஆற்றங்கரைக்குச் சந்தியா காலத்தில் ஜபம் செய்ய இரண்டு மூன்று பிராமணர்கள் வந்தனர். மேற்கு வானில் வேதகால நட்சத்திரம் உதயமாயிற்று.
அடுத்த நாள் அதிகாலையில் இருவரும் புறப்பட்டோம். மூன்று நான்கு மைல்களுக்குக் குறையாமலிருந்தும், வண்டிவாகன மொன்றுமில்லாமல் நடந்தேதான் போனோம். வழியில் சாலையில் வேப்பம்பூவின் மணம் நிறைந்திருந்தது. நாங்கள் பல அற்புதமான காக்ஷிகளைப் பார்த்துக் கொண்டே சென்றோம். பக்கத்துப் பூந்தோட்டங்களினின்றும் ‘கிளம்பி, எங்கும் நிறைந்திருந்த பரிமள சுகந்தம், பசுக்களை ஓட்டிச் செல்லும் இடையர்களின் பரவசப் பாட்டு, அவற்றின் கழுத்தில் கட்டியிருக்கும் மணியின் நாதம், இன்னும் காலை நேரத்தின் வசீகரம் பொருந்திய தென்றலின் தன்மை யாவும் எங்களுக்கு ஆனந்தத்தைத் தந்தன.
நாங்கள் சந்திரசேகரன் வசிக்குமிடத்தைக் கண்டு பிடித்து அவன் இருக்குமிடத்தை அடைந்தோம். சாதாரணமான ஒரு சிறிய அறையைத்தான் எடுத்துக் கொண்டிருந்தான். எங்களை மிகவும் அன்புடனும், மகிழ்ச்சியோடும் வரவேற்றான். அவன் ராஜுவின் வருகையை ஆவலுடன் எதிர் நோக்கிக் கொண்டிருந்தான். நானும் வந்து சேரவே மிகவும் பூரிப்படைந்து போனான். நாங்கள் நீண்ட நாளாக விட்டுப் பிரிந்திருந்த கோலத்தையும், இனியும் அம்மாதிரி கடிதப் போக்கு வரத்துக்கூட இல்லாமல், மூடத்தனமாயிருக்கக் கூடாதென்றும் பேசிப் பேசி முடிவு செய்து கொண்டோம். அடடா! அவன் முன்பு இருந்த நிலைமை என்ன! இன்று எப்படிக் காணப்படுகின்றான்! அவன் முகத்தில் வீசிக் கொண்டிருந்த பிரகாசம் இன்று மறைந்து போய்விட்டது.
நரை, திரை, மூப்பு எல்லாம் வந்தடைந்த வயோதிகன் போல் காணப்பட்டான்.
“ஏன் சந்திரா இந்தக் கோலத்திலிருக்கின்றாய்? நீ ரொம்ப மனச் சந்தோஷத்துடன் இருப்பதாகவல்லவா ராஜா சொன்னான்!” என்றேன். அவன் ஒரு மாதிரியாகச் சிரித்துக் கொண்டான். அந்தச் சிரிப்பிலே ஏமாற்ற மடைந்ததின் த்வனி ஒலித்தது.
“நான் என்னவோ உல்லாசமாக இருப்பதாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறேன். மனக்கவலை யொன்றும் எனக்கில்லை. இன்று நீங்கள் வந்ததினால் நான் எவ்வளவு ஆனந்தமடைகிறேன் தெரியுமா? அந்த இழந்து போன என் செல்வம் முழுவதும், திரும்பக் கிடைக்கப் பெற்றதாகக் களிப்படைகிறேன். கவனமாகக் கேள்,கிருஷ்ணா. இதெல்லாம் ராஜுவிற்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் உனக்குத் தெரிய நியாயமில்லை. என் இளமையிலேயே என்னைச் சேர்ந்தவர்களைப் பறிகொடுத்துவிட்டு, மாமன் வீட்டில் வளர்ந்து வந்ததும், அவருடைய உதவியினாலேயே காலேஜில் படித்துக் கொண்டிருந்தேனென்பதும் உனக்குத் தெரியும். அதன் பிறகு மாமா, என்னை ஏமாற்றிச் சொத்தை அபகரித்துக் கொண்டார். ஆனால் வியாபாரத்தில் பெருத்த நஷ்டமேற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நாட்களில்தான் நான் நாடகத்தில் சேர்ந்தது. இப்பொழுது நீ கேட்கிறாயே, அது போல ‘இந்தக் கோலம்’ எல்லாம் அதன் பிறகு ஏற்பட்டதே!” என்றான்.
சந்திரசேகரன் தன்னுடைய வாழ்க்கைக்கு அரிதாரம் பூசிக் கொண்டதாகத் தோன்றியது எனக்கு. அவனுடைய பிரயாணத்திலே நதிக் கரைக்கும், உத்தியான வனத்திற்கும், அந்தப்புரத்திற்கும் செல்லும் நேர்சாலைகளை விட்டு, கேவலம் கானல் நீர் போன்ற ஒரு பாதையில் இறங்கி விட்டான். அவனுக்கேற்பட்டிருக்கும் மனக்குறை என்னவென்பதைக் கண்டு கொள்ள முயன்றேன். ஆனால் நான் அறிந்து கொள்ளும்போது அவன் இல்லை.
பலத்த அந்தகாரத்தின் நடுவே நின்று கொண்டு ஒளிரேகை கண்ணுக்கெட்டிய தூரத்தில் எங்கேயாவது தெரிகின்றதா வென்று அவன் பார்த்தான். ஆனால் எங்கும் ஒளியில்லை.
“நீ நாடகத்தில் தோன்றுவதைக் காண எங்களுக்குள்ள ஆவலை அடக்க முடியாது போலிருக்கிறது, சந்திரா! எங்களுக்கு வாஸ்தவமாக அற்புதமான நாள் இது!” என்றான் ராஜு.
சந்திரசேகரன் சொன்னான்: “கம்பெனி மானேஜரின் மகளுக்கு உடம்பு சரியாயில்லை. இரண்டு நாள் ஓய்வு எடுத்துக் கொண்டால் தான் முடியும். அவளால் பேசக் கூட முடியாத நிலைமைக்கு வந்து விட்டாள். ஆகையால் இன்னும் இரண்டு நாட்களுக்குப் பிறகுதான் ஆரம்பிப்போம். பிரதானமான நடிகை யில்லாமல் நாடகம் நடத்துவதெப்படி? அவள்தான் முக்கிய வேஷம் தரிப்பவள். அதுவரையில் நீங்களும் என்னுடனேயே இருக்க வேண்டும். சலிப்படைந்த எனக்கும் சற்றுக் களிப்புண்டாகும்!” என்றான்.
அவன் கேட்டுக் கொண்டபடியே அந்த இரண்டு நாட்களும் அவனுடன் இருந்தோம். அவன் முன்பு இருந்த மாதிரி இல்லை, இப்பொழுது. எங்களிடம் மிகவும் உள்ளக் களிப்போடுதான் பேசிக் கொண்டிருந்தான். என்னதான் அவன் சிரித்துப் பேசி மகிழ்ந்திருக்க முயன்றாலும் அவன் நெஞ்சில் வேதனை நிறைந்திருந்ததாகவே எனக்குத் தோன்றியது. இனியுள்ள நாட்கள் அவனைச் சூழ்ந்து இருண்டு வருகின்றதாக நினைத்தேன். ஏனோ இக்கெட்ட நினைப்பு!
இப்பொழுதெல்லாம், கண்ணுக்கினிய கவர்ச்சிக் காட்சியும், மலரின் மணமும், பறவைப் பாட்டும், காற்றின் ஓசையும், கலகல கீதமும், அவன் நெஞ்சைக் கவர்வதில்லை. எவ்வளவு வெறுப்படைந்து விட்டான் அவன்!
அலங்காரமாயிருந்த அவனுடைய வாழ்க்கை இன்று இப்படி அலங்கோலமாகி விட்டதே, ஏன்?
“முதலில் என்ன நாடகம் நடத்தப் போகின்றீர்கள்?” என்று கேட்டதற்குச் சந்திரன் சொன்னதாவது, ‘காதலின் முடிவு!’ கதை உங்களுக்குக்கூடத் தெரிந்திருக்குமே. கதாபுருஷன் தன்னுடைய வீரத்தினாலும், அன்பினாலும், குண விசேஷத்தினாலும், கதா நாயகியின் காதலை அடைய முயலுகிறான். அவளோ அவனைத் திரஸ்கரித்து விடுகிறாள். அவனது பிரயத்தனங்கள் பலிக்காது போகவே, மனக் கிலேசமடைந்த அவன், தான் யாரைக் காதலித் தானோ, யாரை நம்பி உயிர் வாழ விரும்பினானோ அவள் கையால் கடைசி வெகுமதியாக விஷத்தைக் கொடுத்தாலும், அதுவே திருப்தியாகுமென எண்ணுகிறான். ஒரு கிண்ணத்தில் விஷம் கலந்த நீரை எடுத்துக் கொண்டு போகிறான். அவளிடம், ‘இந்தத் தண்ணீரை உன் கையினால் எனக் கருந்தக் கொடு. இதுவே உன்னுடைய அன்பிற் கறிகுறியா யிருக்கட்டும்; உன் திவ்ய கரஸ்பரிஸம் பட்ட இந்த ஜலம் என் தாகத்தைத் தணித்து விடும்!’ என்று சொல்லுகிறான். அவளும் கொடுக்கிறாள்….. நாடகம் முடிகிறது.”
“கதை சின்னதா யிருக்கிறதே!” யென்றேன் நான்.
“நடிக்கும்போது வேண்டிய அளவு நீடித்துக் கொள்ளலாம். மானேஜரின் மகள் சுகாமியைப் பார்க்க விரும்புகிறீர்களா? இஷ்டப் பட்டால் போகலாம். எழுந்திருங்கள்,” என்றான் சந்திரன்.
நாடகத்திலேயே பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டோம்.
அன்று ஜனங்கள் கொட்டகை முழுதும் நிறைந்திருந்தனர். நாடகம் ஆரம்பமாகிக் கொஞ்ச நேரத்திற்குள்ளாகச் சபையோரின் முழுக் கவனத்தையும் நடிகர்கள் கவர்ந்து விட்டனர். எல்லாரும் அவரவர் மேற்கொண்ட பாத்திரமாகவே மாறி மெய்ம்மறந்து நடித்தனர். சந்திரசேகரன் குரல் முன்னிலும் விசேஷ இனிமை கொண்டு ஒலித்தது. மனமுருகி அவன் பாடிய போது, ஜனங்களின் உள்ளமும் அதிலே லயித்துப் போய்விடும். கடைசிக் கட்டம்.
சந்திரனுக்கெதிரே அவனால் காதலிக்கப்பட்ட கன்னிகை. அவள் கரத்தில் அவன் கொடுத்த கோப்பையிருந்தது. அவள் கொடுத்தாள். சந்திரன் அந்த நீரைப் பருகுமுன் நாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தைப் பார்த்தான். ஒரே நிமிஷம். அதற்குள் எல்லாம் முடிந்து விட்டது. அவன் உட்கொண்ட தண்ணீர் நிஜமாகவே விஷ நீரே! அதற்கு முன்னாலேயே அவன் அதில் விஷம் கலந்திருந்தானென்பது யாருக்குத் தெரியும்!
கதைக்காக, அவனை நாடகத்தில் திரஸ்கரித்த காதலி, நிஜ வாழ்க்கையிலும் அவனது காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கவே, முடிவைத் தேடிக் கொண்டான் போலும்!
000
எமது நன்றிகள்.
1935 மணிக்கொடி, இதழ் தொகுப்பு, கலைஞன் பதிப்பகம்.
ஆர். ஷண்முகசுந்தரம் (1917-1977) தமிழக எழுத்தாளர். தமிழ்நாட்டின் கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இவர் எழுதிய “நாகம்மாள்” என்ற புதினம் இவரின் பெயரை முன் நிறுத்தியது.
பழைய கோவை மாவட்டத்திலிருந்த தற்போது திருப்பூர் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் செல்வாக்குமிக்க, வசதியுள்ள செங்குந்தர் கைக்கோள முதலியார்[1] குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஷண்முகசுந்தரம்.
நாகம்மாள் 1942, பூவும் பிஞ்சும் 1944, பனித்துளி 1945, அறுவடை 1960, இதயதாகம் 1961, எண்ணம் போல் வாழ்வு, விரிந்த மலர் 1963, அழியாக்கோலம் 1965, சட்டிசுட்டது 1965, மாலினி 1965, காணாச்சுனை 1965, மாயத்தாகம் 1966, அதுவா இதுவா 1966, ஆசையும் நேசமும் 1967, தனிவழி 1967, மனநிழல் 1967, உதயதாரகை 1969, மூன்று அழைப்பு 1969, வரவேற்பு 1969 முதலியன இவரது நாவல்கள்.
நந்தா விளக்கு, மனமயக்கம் (சிறுகதைத் தொகுப்பு)
மொழிபெயர்ப்புகள் :- பதேர்பாஞ்சாலி, கவி – தாராசங்கர் பானர்ஜி, 1944, அல்லயன்ஸ், சென்னை, சந்திரநாத், பாடகி, அபலையின் கண்ணீர், தூய உள்ளம், இந்திய மொழிக் கதைகள் (1964)
ஆர்.சண்முகசுந்தரம் பற்றி வந்துள்ள முக்கிய நூல்கள் வருமாறு:
கொங்கு மணம் கமழும் நாவல்கள் – டி.சி.ராமசாமி
ஆர்.சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை – பெருமாள்முருகன்
இலக்கியச் சிற்பிகள் வரிசை : ஆர்.சண்முகசுந்தரம் – சிற்பி பாலசுப்பிரமணியன்