ஆசிரியர்: சுகன்யா ஞானசூரி
பிரிவு: கவிதைத் தொகுப்பு
பதிப்பகம்: கடற்காகம்
சிறப்பான அட்டைப்படம். வேலிக்குள்ளிருந்து எழுதும் கைகள்.
கவிஞர் யவனிகா சிரீராம் அவர்களின்,’தொலைவான காலத்திலும்கூட நம்பிக்கையூட்டும் எதுவும் தென்படவில்லை’ என்னும் நடராஜா சுசீந்திரனின் மேற்கோளுடன் தொடங்கும், மிகச் சிறந்த அணிந்துரை.
நாடிலி – நாடற்றவன்
ஏதிலி – அகதி
இந்த சொற்களின் பொருள் எவ்வளவு வலியுடையது.
கவிதைத் தொகுப்பு முழுக்க வலி, வலி, வலி.
இத்தகைய வலியை சொற்களால் கடத்தியிருக்கிறார் கவிஞர். சொந்த நாட்டைவிட்டு வந்தால், வந்த நாட்டிலும் வலியே தொடர்வது எவ்வளவு பெரிய சோகம்.
அவல முகாம் கவிதை இப்படி முடிகிறது:
உங்களுக்கு யாழ்ப்பாணம் தெரிவதைப் போல
யாழினிகள் தெரியவில்லை!
அகதிகள் வீடடைதல் கவிதை நெஞ்சை உலுக்கும் அவலம்:
கால் நூற்றாண்டு அகதி வாழ்வில்
ஆஸ்பெஸ்டாஸ் சீற்றுக்கு மாறியிருக்கிறது
பத்துக்குப் பத்து என்பதொரு கணித சூத்திரம்
இன்னும் மாற்றாமல் இருக்கிறார்கள்
கல்லறையின் அளவை
….
இரவுகளை
அடக்கம் செய்யவே விரும்புகிறோம்
அகதி வாழ்வு கவிதை அதிர்வு:
மஞ்சள் கனியொன்றின்
பற்குறியில்
உறைந்து கிடக்கும்
குருதியென வீச்சமடிக்கிறது
இந்த வாழ்வு
நட்சத்திரங்களினூடே… கவிதை சோகம்:
அவனுக்குத் தெரிகிறது
எண்ண எண்ண
நட்சத்திரங்கள் மறைந்துகொண்டே வருவது
இரவு கவிதையில் சிறப்பான படிமம்:
தேவையற்று வளர்ந்துகிடக்கும்
புற்றுக்கட்டியைப் போல்
துருத்திக்கொண்டிருக்கிறது
என் விருப்பத்துக்கு மாறாய்
நிர்பந்தப்பட்டிருக்கும் இன்றைக்கான இரவு
கொடிய நிழல் கவிதை நிதர்சனத்தின் வலி:
சீவல் தொழிலற்று
சீவியம் போன மூத்த குடியானவன் பிள்ளை
பனை நிழலும் அற்றுப் போனான்
,
இந்த கவிதைத் தொகுப்பின் மொத்த செய்தியையும், ‘எம் வாழ்வின் மிச்சமாய்…’ கவிதை கடத்துகிறது. எனக்கு மிகவும் பிடித்த கவிதையும் கூட:
,
காலைக் கதிரவன்
பின்காலைக்குள் செல்லும் வேளை
ஓய்ந்திருந்தது சுடுகுழல் சத்தம்
கனத்த மௌனத்தின்
பெரு வெளியில்
பதுங்கு குழி தாண்டியும்
பரவிக் கிடந்தன பறவையின் இறகுகள்
முறிந்த மரக்கொப்புகளோடு
பறக்க மறுத்து
சிதறிக் கிடந்த
ஒவ்வோர் இறகெடுத்து
எத்தனை கதைதான் நானெழுத
,
ஏன் என்னை அகதியாக்கினீங்கள்? கவிதையின் தலைப்பும் கடைசி வரிகளுமான விடையற்ற இக்கேள்வியை எல்லாக் குழந்தைகளும் தனது தந்தைகளிடம் கேட்பார்கள் தானே?
ஊமைக்காற்று கவிதை தகப்பனின் மற்றொரு வலி:
மகள்
இப்போது
என் தாய்நாடு பற்றி வினவுகிறாள்
நான்
பிரபஞ்சத்தின் மேலிருந்து
ஒற்றைச் சுருக்கில் தொங்குகிறேன்
,
நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம் கவிதையின் கோபத்தணலை யாராலும் தணிக்கவே இயலாது:
நாம் அகதியாய் அடுக்கப்பட்டிருக்கிறோம்
யாதும் ஊருமில்லை
யாவரும் உறவு மில்லை
உதிரிகளின் வாழ்வு கவிதை அகதிகள் உதிரிகளாகிப் போன அவலத்தைப் பேசுகிறது:
நிச்சயமற்ற வாழ்வில்
பொய்த்துப் போகும் சொற்களுக்காக
ஒருபோதும் சபித்துவிடாதீர்கள்
கிளிகளை
,
செவ்வரி பூத்த வானம் குறுங்கவிதைகளில், கீழ்க்கண்ட கவிதையின் கடைசி வரிகள் கன்னத்தில் அறைகின்றன:
முன்னொரு
மழைநாளில்
வானம் செந்நிறமானது
தரையெங்கும்
சிதறிக் கிடந்தன
செங்காந்தளைச் சுமந்த உடல்கள்
,
அகதி முகாமில் தீபாவளி கவிதை முகாம்களின் அவல நிலையை தெரிவிக்கிறது. எவ்வளவு கொடுமை:
கந்து வட்டியில்தான் இந்த வருடமும்
எமக்கான தீபாவளி
அடமானம் வைக்கப்பட்டிருக்கிறது
புனித அப்பங்கள் கவிதை அதிகாரங்களின் துரோகங்களைப் பேசுகிறது:
உங்களுக்கும் சேர்த்தே ஏற்றுக்கொண்டது பணிகளை
ஆணிகொண்டு அறையப்பட்ட குருதிக்கரங்கள்
இப்போது உங்களுக்கான
புனித அப்பங்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது
யூதாஸின் கரங்களால்
,
மஞ்சள் நெருப்பு கவிதை துயரத்தின் நிறத்தைச் சொல்கிறது. நாடற்றவனுக்கு மஞ்சள் என்றும் துயரம். ஏனெனில் எரியும் நெருப்பு மஞ்சள்.
கார்ட்டூன்களுக்குள் உலவும் அரசியல் கவிதை தகப்பனின் வலி:
மகளிடத்து இன்னும் சொல்லாமல் வைத்திருக்கிறேன்
பிஸ்கெட்டை சுவைப்பதற்குள்
சுடப்பட்ட சிறுவனையும்
வனங்களுக்குள் கொன்றொழிக்கப்பட்ட சனத்தையும்
நினைவுகளில் சுமந்தபடிக்கு
நாடற்று அலையும் நாடோடியான
என் கதையை
நவதிசை கவிதை அகதிகளின் தினசரி அவஸ்தை:
எண்திசைகள் குறித்து
யாரும் அலட்டிக்கொள்வதில்லை
இடதுபக்கம் கருவேலங்காடும்
வலதுபக்கம் தைலமரக்காடும்
ஆண்டுகளுக்கும் பெண்களுக்குமான
வெளித்திசை என்பது
முகாம்வாசிகளின் ஒன்பதாவது திசை
,
மழையைப் பார்க்கையிலும் தங்களின் கண்ணீர் தான் நினைவுக்கு வருகிறது கவிஞருக்கு:
இப்படிப்
பொங்கி வழிந்தோடுகிறதே
நிலமெங்கும் வெள்ளமென
அகதிகளின் கண்ணீராய்
அகதியின் பாதம் எப்போதும் தனது நிலத்தையே தேடுகிறது:
கடல்மீதும்
சிறுதுண்டு நிலம்
தேடும்
அகதியின் பாதம்
புலம்பெயராது இறந்திருக்கலாம் கவிதை நல்ல நாட்களை நம்பி வந்தவனின் ஏமாற்றம்:
,
தினந்தினம் இப்படி இறப்பதைக் காட்டிலும்
போர் நிலத்தில்
ஒருகணம்
இறந்தேபோயிருக்கலாம்
புலம்பெயராது
காலப்பெருவெளியில் கவிதை அகதிகளின் நம்பிக்கை இழப்பு:
இலையுதிர் காலத்தின்
மரங்களைப் போல்
என் நம்பிக்கைகள்
உதிர்ந்துகொண்டிருக்கின்றன
அதிகாரத்தின் கசையடித் தழும்புகள் கவிதை, கவிஞரின் கவிதை மொழியின் கண்ணீர்ப் பிண்ணனி:
பலநூறு கசையடித் தழும்புகளில்
எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன்
என் மொழியை
இப்படி 96 பக்கங்களில் ஒரு சமூகத்தின் வலி.
படித்தபின் கண்கள் கலங்குவதை நிறுத்த இயலவில்லை. நாம் அனுபவிக்கும் இந்த சுதந்திரம் எவ்வளவு மதிப்புடையது என்று நமக்குத் தெரியவில்லை. படித்ததும் ஒரு சிறு குற்ற உணர்ச்சி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
சிறப்பான வாசிப்பு அனுபவம்.
++
கண்ணன்
வசிப்பது சேலம் தாரமங்கலத்தில். பெங்களூரில் பன்னாட்டு நிறுவனத்தில் பணி. முதல் கவிதை விருட்சத்தில் 30 வருடங்களுக்கும் முன்பு வெளியாகியது. செந்தூரம், புரவி, தளம், நடுகல் ஆகிய இதழ்களில் கவிதைகள் வெளியாகியுள்ளது.