அமுதாவுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது.. சீமை ஓட்டு வீட்டின் சூட்டைவிட எதிர்வீட்டு பங்கஜத்தின் பேச்சில் சீமப்பட்ட வெயில்.. இன்றும் அப்படியொரு ஓத்தாம்பாட்டுவிடுகிறாள்.. போனவாரம்தான் பள்ளிக்கூடத்தில் இருந்தபோது வாத்திகளின் முன்னாடியும் புள்ளைகள் முன்னாடியும் வெண்ட வெண்டையா பேசி மானத்தை வாங்கினாள்..

‘’ஏ தேவிடியா..வெளிய வாடி.. டீச்சருன்னா பெரிய இவன்னு நெனப்பாடி.. உன் புருஷன் உட்டுட்டு ஓடிப்போயிட்டா என் மவந்தான் கெடச்சானாடி ஒனக்கு.. எங்க ஆம்படையான் கெடைப்பான்னு அலையறீயாடி.. போவ வேண்டியதுதாண்டி லாட்ஜ் கீட்ஜ்ன்னு.. சங்கக்கெட்ட ஒடம்ப வச்சிக்கிட்டு எப்பிடிதான் ஒன்னால நடமாட முடியுதோ..ச்சீ மானம் கெட்ட மாடே’’

பங்கஜத்தின் குரல் அந்த மாரியம்மனுக்கும் கேட்கவில்லையா.. ஐயோ தெய்வமே.. காதைப் பொத்தாமல் சிலையாக ஒடுங்கி உட்கார்ந்திருந்தாள். வெளியே வெயில் ஆதிசேஷனின் ஆயிரம் தலைகள்போல பளபளத்துக்கொண்டிருந்தது

‘’நான் அன்னிக்கே செத்துருக்கணும்.. நண்டும் சிண்டுமா நாலு நிக்குதே.. பாவிப்பய.. அவன் நல்லா இருப்பானா.. கட்ட மொளச்சி கட்டயில போவானா.. புத்து வச்சி பொசுக்குன்னு போவானா’’

ஓடிப்போன புருஷன் நினைவு வர ஈரக்குலை நடுங்கியது அமுதாவுக்கு ஆத்திரமும் அழுகையுமாக வந்தது. சீமை ஓட்டு வீட்டின் சூட்டைவிட, ‘’எப்படித்தான் மனசு வந்ததோ அவனுக்கு.. என் வாழ்க்க பாக்காமப் போச்சே.. ஐயோ.. என் வாழ்க்க கேக்காமப் போச்சே’’.. மனசு ராப்பூனையாகக் கிடந்து கெதாவிக்கொண்டிருக்கிறது.

‘’இந்த லச்சணுத்துக்கு காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அந்த நாய் நாலு புள்ள பொறக்கறவரைக்கும் நல்லாத்தான் இருந்தான்.. அன்னக்கிளி உன்னத்தேடுதேன்னு பாடிக்கிட்டு என்னையே சுத்துக்கிட்டுதான் கிடந்தான்..’’

‘’இந்த சின்ன ஊருக்கு நானும் அவனும் வந்த அந்த பொழுது இப்ப நினைச்சாலும் பொசுக்குண்ணு தண்ணி வந்துடுது கண்ணுல.. அவ்ளோ இனிப்பு.. முதலில் பொண்ணு அடுத்தது மூணும் ஆணு போதும் போதும்னாலும் விடமாட்டான். ஆனா பன்னிக் குட்டி போடற மாதிரி வருஷத்துக்கொன்னு பெக்கறேன்னு என்னியத் திட்டுவான் பொறம்போக்குப்பய.. ஆப்பரேசன் பண்ணிக்கச்சொல்லி நச்சரிச்சிப்பாத்துட்டு கடசியில அவனே போயி பண்ணிக்கிட்டு வந்துட்டான்’’

ஏதேதோ நினைவுகள் எல்லாம் வந்து கோலாட்டம் போட்டன அமுதாவின் கண்களுக்குள்.

பள்ளிக்கூடத்தில் வைத்து பங்கஜம் பேசுன பேச்சக்கேட்டு ஊரு சனங்களே வா ஓஞ்சிப்போச்சி.. ’’டீச்சரு பாவம்’’ புருஷன் ஓடிப்போனது இல்லாம ஊரு நாயிவோ தொல்ல வேற.. இதுல இந்த நாடுமாரி வேற வாயில வந்தபடி பேசுறா’’ என்று பங்கஜத்தைக் காணாமல் பேசினார்கள்.

அவளுக்கு நரகலை மிதித்துவிட்டதைப்போல இருந்தது.. உடம்பு சதா நடுங்கிக்கொண்டே இருந்தது.. யாருமற்ற அநாதையாக நாலு பிள்ளைகளோடு நல்லதங்காள் மாதிரி இரவெல்லாம் அழுதுகொண்டே இருந்தாள்.

சேதி கேள்விப்ப்பட்டு கிளம்பி வந்துவிட்டார் எண்பெத்தெட்டு வயசான அப்பா.

‘’அந்தக் கெடாயனுக்கு பக்கத்து ஊரு ஸ்கூலுல வேல.. பக்கத்துலியே ஒரு பால்வாடி ஸ்கூலு.. பத்தாங்கிளாஸ் புள்ளங்களுக்கு கணக்கு வாத்தியா இருந்த இந்த நாயி பால்வாடி டீச்சர் மேல ஆசப்பட்டுருக்கு. அந்தக் குட்டியும் ரொம்ப நெருக்கமா பழகியிருக்கா.. ஒருநாள் ரெண்டு நாயும் வந்து நிக்குது மாலையும் கழுத்துமா.. அமுதா எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்கறான் பேமானிப்பய..’’

அமுதா முறத்தை எடுத்து விளாசிவிட்டாள்.. ’’ஓடிப்போயிடுங்க நாயிங்களே. எம் முன்னாடி நின்னியின்னா கொலவிழும் ‘’..

‘’இன்னிக்கில்லாம் கண்ணகி இருந்தா இதத்தான் செஞ்சிருப்பா’’ அவளுக்கு அவளே சொல்லிக்கொள்வாள் ஆத்திரம் கிளம்பும்போது.

‘’பின்னங்கால் பொடனியில அடிக்க போனவன் போனவந்தான்.. இந்த பக்கம் திரும்பவேயில்ல..’’ இந்த நேரத்திலும் அவளுக்கு சிரிப்பாக வந்தது.. ’’எனக்கு எழுத்தக் கோணலா எழுதியிருந்தாலும் ஆண்டவன் அவன புடுக்கடிச்சி விட்டுட்டான்னு என்னமோ ஒரு சின்ன சந்தோஷம்‘’

‘’அவன் போனப்புறம் எத்தனைக் கொடுமை.. ஏதோ இந்த சத்துணவு டீச்சர் வேலைக் கிடைச்சதாலே ஒரு கௌரவமா ஓட்ட முடியுது இந்தப் பொழப்ப.. வாலிபத்துல இருக்கறவள சும்மா வுடும்மா நாயிங்க.. ஒரு மலக்கொரங்கு ஓட்டப்பிரிச்சி உள்ளக் குதிக்குது. ஊர் பெரியவன் வீட்டுக்கு கூப்பிட்டுவிட்டு கையத்தடவுறான்.. கூட இருக்க வாத்திப்பய பச்சயாவே கேக்கறான்.. ’ராத்திரிக்கி வரட்டுமா அமுதா. ‘போதும்டா சாமின்னு புள்ளங்களுக்கு ஏதாச்சும் கொடுத்துட்டு செத்துடலாம்னு தோண்றப்பெல்லாம்.. இல்ல நானும் ஒரு மனுசியா இந்த ஜீவனுங்கள வளத்து ஆளாக்கிக் காட்டணும்னு ஒரு வெறிவரும்.. அப்புடியே அதுங்களக் கட்டிப்பிடிச்சிக்கிட்டுத் தூங்கிப்போயிடுவேன்..’’

பங்கஜம் கத்திக் கத்தி ஓய்ந்துபோய்விட்டாள்.

அப்பா எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தார்.

பங்கஜத்தின் மகனைப்பற்றி விசாரித்தார்.

‘’அவன் ஒரு ரெண்டாலங்கெட்டவன்பா சூது வாது தெரியாதவன்.. யாரு அடிச்சிட்டுக் கொடுத்தாலும் வாங்கி சாப்புடுவான்.. ராத்திரியில நம்ம வீட்டுக்கு வெளிய தாவாரத்துல வந்து படுத்துக்குவான்போல.. நான் கதவப்பூட்டிக்கிட்டு பிள்ளைங்களோட உள்ள படுத்துப்பேன்… அவன் இங்க வந்து முடங்க்கிறான்னு ரொம்ப நாளு கழிச்சிதான் எனக்கே தெரிய வந்தது. அதுக்குள்ள அவன் ஆயாக்காரி போனவாரம் ஸ்கூல்ல வச்சி கொஞ்சப்பேச்சி கொறஞ்சப்பேச்சின்னு இல்லாம என்னப் பேசிப்புட்டா.. தே பாத்தல்ல இன்னிக்கி வுட்டுக்கட்னாளே..’’

வெத்தலக் கொதப்பின வாயோட எங்கிருந்தோ வந்து உட்கார்ந்தான் ஊமையன்.. பங்கஜத்தின் மகன்.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை… பதினாறு வயதினிலே சப்பாணி மாதிரி.. கெடச்ச வேலய செஞ்ச்சிகிட்டு கொடுக்கறத வாங்கிக்கிட்டு அவன் பாட்டுக்கு இருப்பான்.

‘’அன்னக்கி ஆத்தாக்காரி பேசுன பேச்சக்கேட்டுக் கடுப்பாயிட்டான் மொவங்காரன்.. எப்பவும் ஒரு சொல்லு பேசாதவன் எங்கிட்ட வந்து சொல்றான் நேத்து.. இனிமேட்டுக்கு இங்கதான் என் வாழ்வும் சாவும்..நீ துரத்தனாலும் நான் போவமாட்டன்.. ஒனக்கும் புள்ளிவளுக்கும் ஒரு நெவுலா இருந்துட்டுப் போறன்’’

அமுதா சொல்வதைக் கேட்டுவிட்டு அழுத்தமாக சொன்னார் அப்பா.

‘’இருந்துட்டுப் போவுட்டுமா.. ஒனக்கு ஒரு காவலா.. இந்த ஊரு நாயிங்கக்கிட்ட இருந்து ஒன்னக் காப்பாத்திக்கணும்னா இத வூட்டோட வச்சிக்கும்மா’’

சொல்லிவிட்டு வெளியே பார்த்தார்.வெயில் தாழ்ந்திருந்தது. அமுதா டீச்சர் கண்களில் ஒரு நாய்க்குட்டியின் கெஞ்சுதல் தெரிந்தது.

சுப்பு அருணாச்சலம்.

நான், சுப்பு அருணாச்சலம் என்ற பெயரில் 1998 முதல் சிறுகதைகளும் கோகிலாராஜ் என்ற பெயரில் கவிதைகளும் எழுதி வருகிறேன். நெய்வேலி சொந்த ஊர்.

ரேகை பதிந்த வீடு எனது முதல் தொகுப்பு 2002 -ல் வந்தது. சுந்தரசுகன் எனது யுத்தம் என்ற முதல் கதையை வெளியிட்டது. பிறகு ஆனந்த விகடன், கணையாழி,செம்மலர், சதங்கை,தினமணி கதிர் முதலிய இதழ்களில் கதைகளும் கவிதைகளும் வெளிவந்தன. 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *