நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்று…

காலை விடிந்தும் விடியாமலும் இருந்த அந்த அதிகாலை நேரத்தில், இரவு நேர இருளைக் காலைக் கதிரவன் மெதுவாக விரட்டிக்கொண்டிருந்தான். சர்வேஷ் தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் புறப்பட்டான்.

“என்னங்க, கொஞ்சம் காபி குடித்துவிட்டுப் போகலாமே?” என்றாள் அவனது மனைவி சங்கரி.

“இல்லை சங்கரி, இந்த டெஸ்டை வெறும் வயிற்றில்தான் எடுக்க வேண்டும் என்று மருத்துவர் சொல்லிவிட்டார். அதனால்தான் இப்படி அவசரமாகக் கிளம்புகிறேன்.”

“சரிங்க, கவனமாகப் பார்த்துப் போயிட்டு வாங்க.”

“ஏங்க, இதைப்பற்றி நேற்று இரவே என்னிடம் ஏன் ஒன்றும் சொல்லவில்லை? இப்போது திடீரென்று எதற்காக இந்த டெஸ்ட் எல்லாம்?”

“அதுவா சங்கரி… இது நம்முடைய எதிர்கால நலனுக்காகத்தான். ஒரு காப்பீட்டுத் திட்டம் இருக்கிறது. அது நம் குடும்பத்திற்கு ஒரு பாதுகாப்புக் குடை போல. வருடம் தோறும் சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் கட்டினால் போதும். ஒருவேளை எதிர்பாராதவிதமாக நாம் விபத்தில் சிக்கினாலோ அல்லது அடிபட்டாலோ, அந்தக் காப்பீட்டிலிருந்து நமக்குத் தேவையான பணத்தைப் பட்டுவாடா செய்வார்கள்.”

“அது மட்டுமல்லாமல், ஒருவேளை என் உயிர் பிரிய நேர்ந்தால், கணிசமான தொகையாக, அதாவது சுமார் இருபத்தைந்து லட்சம் ரூபாய் உனக்குக் கிடைக்கும். மேலும், ஏதாவது நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், இந்தக் காப்பீட்டை மருத்துவச் செலவுகளுக்குக்கூட நாம் உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.”

“சரி, சரி… காலையில் ஏதேதோ பேசாமல், நிதானமாகப் போய் வாங்க. நீங்கள் வருவதற்குள், என் சமையல் வேலைகள் அனைத்தும் முடிந்துவிடும். மதிய உணவிற்கு என்ன வேண்டும் என்று சொன்னால், அதையும் செய்துவிடுவேன்.”

“அப்படியா, மதியத்திற்கு மணக்க மணக்க வத்தக்குழம்பும், பொன்னிறத்தில் மொறுமொறுப்பான உருளைக்கிழங்கு வறுவலும் செய்துவிடு.”

“ம்ம்… ஆகட்டும். அதையே செய்து தயாராக வைக்கிறேன். நீங்கள் வந்ததும் குளித்துவிட்டு வாங்க. சுடச்சுட, மணக்கப் பரிமாறுகிறேன். சாப்பிட்டுவிட்டு, மதியத்திற்கும் எடுத்துக்கொண்டு போங்க.”

சர்வேஷ் அவனது ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு பரிசோதனை மையத்திற்கு (டெஸ்ட் சென்டர்) வந்தடைந்தான். அங்குள்ள செவிலியர், அவனுக்கு ஏதேனும் உபாதைகள் இருக்கின்றனவா அல்லது கடந்த ஒரு வருடத்தில் ஏதேனும் அறுவை சிகிச்சை நடந்ததா என்று கேட்டு குறிப்பெடுத்துக்கொண்டார். காப்பீட்டு நிறுவனம் அந்தப் பரிசோதனைகளை எடுக்கச் சொன்னதால், அவர் சர்வேஷிடமிருந்து இரத்த மாதிரியை எடுத்துக்கொண்டார். “ரிப்போர்ட் வர இரண்டு நாட்கள் அவகாசம் தேவை, வந்தவுடன் போன் செய்து தெரிவிக்கிறேன்” என்று கூறி, அந்தச் செவிலியர் அவனை அங்கிருந்து கிளம்பச் சொன்னார். சர்வேஷும் தனது கைபேசி எண்ணைச் செவிலியரிடம் கொடுத்துவிட்டு, ரிப்போர்ட் வந்ததும் தகவல் தெரிவிக்குமாறு சொல்லிவிட்டு வீடு திரும்பினான்.

வீட்டிற்கு வந்தவன் காலை உணவு சாப்பிட்ட பிறகு, தன் ஸ்கூட்டரை எடுத்துக்கிட்டு அலுவலகம் சென்று, தனது அன்றாடப் பணிகளைக் கவனித்தான். மாலை அலுவலக வேலையை முடிச்சிட்டு, ஸ்கூட்டரைக் கிளப்பினான். ஆனால் ஸ்கூட்டர் ஸ்டார்ட் ஆகல. சிறிது நேரம் அதனுடன் போராடிப் பார்த்துட்டு, இனி இதை ஸ்டார்ட் செய்ய முடியாது என்று யூகித்து, தன் அலுவலகத்திலேயே வண்டியை விட்டுவிட்டு, மாநகரப் பேருந்தில் ஏறி தாம்பரத்திற்குச் சீட்டு வாங்கி, ஜன்னல் ஓர இருக்கையாகப் பார்த்து அமர்ந்தான்.

மாநகரப் பேருந்துப் பயணம் சுமார் ஒரு மணி நேரம் ஆகும். ஏனெனில், மாலை வேளையில் அதிகப் போக்குவரத்து நெரிசல் இருப்பதால், அனைத்து வண்டிகளும் ஊர்ந்துதான் செல்லும் இந்தச் சென்னை மாநகரத்தில். பேருந்து நகர ஆரம்பித்தவுடன், மெல்லிய காற்று அவன் முகத்தில் படவே, அவன் சற்றுக் கண் அயர்ந்தான் அந்த ஜன்னல் கம்பியின் மேல் சாய்ந்து. கண்களை மூடினானே தவிர, அவன் ஏதோ தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தான்.

அவனது நினைவில் பழைய நினைவுகள் எல்லாம் ஒரு வெண்ணிறத் திரைச்சீலையில் காட்சிகளாக ஓடின.

அன்றொரு நாள் அவனது அலுவலகத்தில்…

“ஹலோ சர்வேஷ் சார், எப்படி இருக்கீங்க?”

“எனக்கென்ன வெங்கட், நல்லா இருக்கேன்.”

“நீங்க சொன்ன மாதிரி உங்கள் லஞ்ச் டைம்லதான் வந்திருக்கேன். ஃபார்மாலிட்டீஸை முடித்துவிடலாமா?”

“சரி, ஆகட்டும் வெங்கட். எல்லா பேப்பர்ஸும் ரெடியா?”

“எல்லாம் தயார்நிலையில்தான் உள்ளது. சில குறிப்புகளை உங்களிடமிருந்து கேட்டு இந்தப் படிவத்தில் எழுதினால் போதும். எல்லாம் இரண்டு மூன்று நாட்களில் முடிந்துவிடும். உங்கள் காசோலை வங்கியிலிருந்து கிளியர் ஆவதைப் பொறுத்து, ஃபார்மாலிட்டீஸ் எல்லாம் சீக்கிரமே முடிந்துவிடும்.”

“நான் உங்களிடம் சொன்ன மாதிரி, இது மெடிகிளைம் பாலிசி. வருடம் தோறும் நீங்கள் பன்னிரண்டாயிரம் செலுத்தினால் போதும், சுமார் ஐந்து லட்சத்திற்கு நீங்கள் மெடிகிளைம் எடுத்துக்கொள்ளலாம்.”

“இந்த லிஸ்ட்டைப் பாருங்கள், இதில் இருக்கும் ஏதாவது நோய்க்குச் சிகிச்சை பெற்று வருகிறீர்களா?”

“இல்லை வெங்கட், எனக்கு இதில் குறிப்பிட்ட மாதிரி எந்த நோயும் இல்லை. கண்களுக்குக் கண்ணாடி போட்டிருக்கிறேன், இரத்த அழுத்தம் மற்றும் தைராய்டு இருப்பதால் அதற்கு மாத்திரை எடுத்துக்கொள்கிறேன் கடந்த நான்கு வருடங்களாக. இதைத் தவிர வேறு ஏதும் இல்ல.”

“சார், இந்தக் காலத்தில் யார்தான் கண்ணாடி போடல, யாருக்குத்தான் இரத்த அழுத்தம் வரல. அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த லிஸ்ட்டில் உள்ள வியாதிக்கு நீங்க மருந்தோ அல்லது அறுவை சிகிச்சையோ கடந்த ஒரு வருட காலத்தில் எடுக்கலை என்றால் போதும். இந்தப் படிவத்தில் உள்ள விவரங்களை நிரப்பி என்னிடம் கொடுங்கள். நான் ஒருமுறை பார்த்துவிட்டுச் சொல்கிறேன். அதற்குப் பிறகு காசோலையைப் பன்னிரண்டாயிரத்திற்கு எழுதிக் கொடுங்க, அவ்வளவுதான்.”

சில வினாடிகளில் வெங்கட், சர்வேஷிடம், “எல்லாம் சரியாக உள்ளது, உங்க காசோலையைக் கொடுத்தால் அடுத்த வேலையை நோக்கி நகரலாம்” என்று சொல்ல, சர்வேஷும் வெங்கட் சொன்னது போலப் பன்னிரண்டாயிரத்திற்கு எழுதிக் கொடுத்த பின், வெங்கட் விடை பெற்றுக்கொண்டான்.

இவை அனைத்தும் சர்வேஷின் மனதில் வந்து போயின, திடீரென்று விழிப்புத் தட்டவே கண் விழித்தான் சர்வேஷ். பேருந்து அப்போதுதான் கடற்கரை காந்தி சிலை நிறுத்தத்தை அடைந்திருந்தது. அவனது எண்ணம் மீண்டும் பழைய நினைவுகளை நோக்கியே ஓடியது. ஏனெனில், இன்னும் தாம்பரம் வருவதற்கு குறைந்தது நாற்பது நிமிடமாவது ஆகும் என்று அவனது மூளை சொல்லவே, அவன் மீண்டும் பழைய நினைவுகளில் மூழ்க ஆரம்பித்தான்.

அந்த மெடிகிளைம் பாலிசி எடுத்து, இதோ, அதோ என்று மூன்று வருடங்கள் கழிந்தன. காலம் நாம் நினைப்பது போல் நடந்துகொண்டால் நல்லாத்தான் இருக்கும். ஆனால், அப்படி ஒண்ணும் நடப்பதில்லை. நாம் ஒன்று நினைத்தால் அது வேறொன்றாக நடக்கும்.

உலகையே அச்சுறுத்தும் வகையில் கொரோனா பெருந்தொற்று வந்து, உலகையே ஆட்டிப்படைத்த சமயம். முதல் அலையில் சர்வேஷும் அவனது குடும்பத்தினரும் பாதிக்கப்படவில்லை. ஆனால், இரண்டாம் அலையில் சங்கரியும் சர்வேஷும் கொரோனாவால் தாக்கப்பட்டு, ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போதுதான் இந்தக் கார்ப்பரேட் மருத்துவமனையின் செயல்பாடுகளைப் பார்த்தார்கள். சங்கரி ஒவ்வொரு மருத்துவமனைக்கும் போன் போட்டுக் கேட்டாள். “என் கணவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளது, உங்கள் மருத்துவமனையில் இடம் உள்ளதா?” என்று. “இல்லை, அனைத்து படுக்கைகளும் நிரம்பி வழிகின்றன. வேறு ஏதாவது மருத்துவமனைக்குக் கொண்டு போங்க” என்றுதான் மறுமுனையிலிருந்து பதில் வந்தது.

மேலும், இதை அவர்களிடம் தெரியப்படுத்தியபோது, “நீங்க எந்த மருத்துவமனைக்குச் சென்றாலும், முதலில் உங்களுடைய சிடி ஸ்கேன் ரிப்போர்ட்டைத்தான் மருத்துவர் கேட்பார். அதனால், முதலில் சிடி ஸ்கேன் ரிப்போர்ட் எடுங்க, அதன் பிறகு மருத்துவமனைக்குப் போங்க” என்றனர்.

சங்கரி உடனே ஆம்புலன்ஸை அழைத்தாள். வந்த ஆம்புலன்ஸில் சர்வேஷை ஏற்றிக்கொண்டு தானும் அதே வண்டியில் ஏறி ஸ்கேன் சென்டருக்கு விரைந்தாள். அங்கு சென்டரில் உள்ளவர்களிடம் ஏதாவது மருத்துவமனையில் அனுமதி வாங்கிக் கொடுக்க முடியுமா என்று கேட்டாள். அங்கு பணிபுரியும் ஒருவர், “இந்த மருத்துவமனைக்குப் போங்க, கண்டிப்பாக இடம் இருக்கும்,” என்றார்.

ரிப்போர்ட்டை எடுத்துக்கொண்டு சர்வேஷுடன் அந்த மருத்துவமனைக்கு விரைந்தாள் சங்கரி.

துரிதமாக சர்வேஷை டிராலியில் அமரவைத்து உள்ளே அழைத்துச் சென்றனர் வார்டு பையன்கள். அங்கு டூட்டி டாக்டர் சர்வேஷிடம் அவனது பெயர், வயது மற்றும் என்ன செய்கிறது என்று கேட்டார். டாக்டர் கேட்ட கேள்விகளுக்கு சர்வேஷ் பதிலளித்தான். முதலில் அந்த டூட்டி டாக்டர் ஆக்ஸிஜன் லெவல், இரத்த அழுத்தம் போன்ற அடிப்படை சோதனைகளை எடுத்து குறிக்கத் தொடங்கினார்.

பின் சங்கரியும், சர்வேஷும் மாறி மாறி மருத்துவரிடம் படுக்கை உள்ளதா, உள்நோயாளியாக அனுமதியுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அதற்கு மருத்துவர், “முதலில் மேலே போய்ப் பார்த்துவரச் சொல்லியிருக்கிறேன். எங்க நபர் ஒருவர் சென்றிருக்கிறார், அவர் வந்தவுடன்தான் படுக்கை ஏதாவது உள்ளதா என்று தெரியவரும்,” என்றார். இவர்கள் இருவரும் விடாமல் கேட்டுக்கொண்டே இருந்தனர். போன நபர் வந்தார், வந்தவர் மருத்துவரிடம் ஏதோ தனியாகப் பேசினார். பின் மருத்துவர் இவர்களிடம் வந்து, “இடம் கிடைக்காது போல,” என்றார்.

இவர்கள் இருவருக்கும் தலையில் இடி விழுந்ததுபோல இருந்தது. சங்கரியிடம், “நீங்கள் இவரை வேறு இடத்திற்கு அழைத்துக்கொண்டு போங்க. நேரம் கடத்த வேண்டாம்,” என்றார். சங்கரியும் மருத்துவமனையில் மன்றாடிப் பார்க்கிறாள். ஆனால் அவர்கள் எதற்கும் பிடி கொடுக்காமல் மௌனம் சாதித்தார்கள்.

பின் முடியாத நிலையிலும், சர்வேஷ் டாக்டரிடம், “என்ன ஆனாலும் பார்த்துக்கொள்ளலாம். எவ்வளவு செலவானாலும் பார்த்துக்கொள்ளலாம், தயவுசெய்து அனுமதித்துக்கொள்ளுங்கள்,” என்றவுடன், சிறிது நேரம் யோசித்துவிட்டு வார்டு பையனிடம், “இவரைப் படுக்கையில் படுக்க வையுங்கள், இன்னும் நிறைய டெஸ்ட் எடுக்க வேண்டியது இருக்கிறது,” என்று கூறி, சங்கரியிடம், “நீங்க போய் அட்மிஷன் ஃபார்மாலிட்டீஸைப் பாருங்கள்,” என்று கூறி அங்கிருந்து அனுப்பினார்.

பிறகு அந்த மருத்துவமனையில் இருவரும் இருபது நாட்கள் அனுமதிக்கப்பட்டனர். அதில் சங்கரி சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டாள். ஆனால் சர்வேஷோ அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டான். முதல் ஏழு நாட்கள் சர்வேஷின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை. O2 சப்போர்ட்டில்தான் அவன் இயங்கி வந்தான். “இன்னும் சிறிது அப்சர்வேஷனுக்குப் பிறகு சொல்கிறோம்” என்று சங்கரியிடம் சொல்லிவந்தனர்.

சர்வேஷுக்கு ஒவ்வொரு நாளும் ஒரு யுகம் போல் தோன்றியது. ஏனெனில், அவனைப் போல் அருகில் இருப்பவர்கள் அல்லது வயதானவர்கள், சுவாசம் விடுவதற்குச் சிரமப்படுபவர்கள் இரண்டு நாட்கள் இருக்கிறார்கள், மூன்றாம் நாள் அவர்களைச் செவிலியர்கள் பேக் செய்கிறார்கள். இவன் அந்தச் செவிலியரிடம் கேட்டால், “அவர் இறந்துவிட்டார். அதான் அரசாங்க விதிகளின்படி பேக் செய்கிறோம்” என்கிறார்கள். இதைக் கேட்டவுடன் சர்வேஷின் இதயம் வெடிப்பது போல் தோன்றியது அவனுக்கு. கொஞ்சம் மீதமிருந்த நம்பிக்கையும் இந்தச் செயலைப் பார்த்த பிறகு அவனுக்குப் போய்விட்டது. மூன்று நான்கு நாட்களுக்கு ஒரு முறை அல்லது நோயாளி சிகிச்சைக்கு சரியாக ஒத்துழைக்கவில்லை என்றால், மருத்துவரின் அனுமதியுடன் போன் மூலம் வீடியோ கால் செய்து தெரிந்தவர்களிடம் பேச வைப்பார்கள். அப்போது சர்வேஷ் தன் மனைவியிடம், “என்ன சொன்னார்கள் மருத்துவர்கள்?” என்று கேட்பான். அவளும், “நீங்கள் இன்னும் கொஞ்ச நாட்கள் அப்சர்வேஷனில் இருக்கணுமாம். சரியானதும் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவீர்கள் என்று சொன்னார்கள்” என்பாள். அதற்கு அவன், “எனக்கு என்னவோ நம்பிக்கை இல்லை. ஊசிமேல் ஊசியாகக் குத்திக் குத்தி உடம்பில் எல்லா இடங்களிலும் ஓட்டைப் போட்டு வைத்திருக்கிறார்கள். எப்படியாவது அவர்களிடம் பேசி என்னைக் காப்பாற்றச் சொல்லு” என்பான்.

பெரிய போராட்டத்திற்குப் பிறகு, பத்து நாட்கள் கழித்து சர்வேஷை சாதாரண வார்டுக்கு மாற்றினர். மேலும் ஒரு பத்து நாட்கள் இருவரும் அங்கு தங்கி, முழுமையான சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். எழுபது கிலோ இருந்தவன், ஐம்பது கிலோவாக மெலிந்து போயிருந்தான். இந்த இருபது நாட்களுக்கு மொத்தத் தொகையாக ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் செலவானது. அவனிடம் இருந்த மொத்த சேமிப்பையும் இந்தச் செலவிற்குக் கொடுத்துவிட்டாள் சங்கரி.

மருத்துவமனையிலிருந்து அனைத்து டிஸ்சார்ஜ் சம்மரியையும் பெற்றுக்கொண்டு, வீடு வந்தவுடன், ஒரு வாரம் கழித்து வெங்கட்டிடம் கேட்டனர். அதற்கு வெங்கட், “நீங்க எல்லா டிஸ்சார்ஜ் சம்மரியையும் நகல் எடுத்து, நான் கொடுக்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதனுடன் உங்களுடைய டிஸ்சார்ஜ் சம்மரி நகலை இணைத்து காப்பீட்டு நிறுவனத்திற்கு அனுப்பி வையுங்கள். அவர்கள் நீங்கள் கொடுத்த அனைத்து ஆவணங்களையும் பரிசோதனை செய்த பிறகு, உங்கள் மெடிகிளைம் பாலிசியிலிருந்து நீங்கள் செலவு செய்த பணத்தைத் திருப்பித் தருவார்கள்” என்று கூறினான் வெங்கட்.

நாட்கள் வாரமாயின, வாரம் மாதமானது. சர்வேஷ் கோபப்பட்டு வெங்கட்டிடம், “என்ன ஆச்சு? இன்னும் பதில் வரவில்லையே” என்று கூறினான். அதற்கு வெங்கட், “நான் காப்பீட்டு அலுவலகம் போய் என்னவென்று கேட்டு வருகிறேன்” என்றான். ஒரு வாரம் கழித்து வெங்கட் சர்வேஷிடம் போன் செய்து, “நான் கேட்டுவிட்டேன், அவர்கள் விரைவில் உங்களுக்குப் பதில் அனுப்புவார்கள்” என்று சர்வேஷிடம் கூறினான். சர்வேஷும் சரி என்று காத்திருந்தான். இரண்டு வாரங்கள் ஆனதும் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதைப் பார்த்த சர்வேஷும் சங்கரியும் அதிர்ந்தனர். ஏனெனில், அவர்களுடைய கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஏன் என்று பார்க்கையில், பாலிசி எடுத்த சமயம் தவறான தகவல்களைத் தந்ததால் இது மறுக்கப்பட்டுள்ளது என்று எழுதியிருந்தது.

என்னவென்றால், மெடிகிளைம் எடுக்கும் சமயம் இவன் வாயால் சொன்னதை வெங்கட் எழுதத் தவறியதால்தான். அதாவது, தைராய்டு மற்றும் இரத்த அழுத்தத்திற்கு மாத்திரையை நான்கு ஆண்டுகளாக எடுத்துவருவதாகச் சொன்னதை வெங்கட் எங்கும் குறிப்பிடவில்லை. இப்போது இந்த டிஸ்சார்ஜ் சம்மரியில், அவன் மேலே குறிப்பிட்ட இரண்டு வியாதிகளுக்காக மாத்திரை எடுத்துக்கொண்டிருப்பதை உறுதி செய்திருக்கிறான். இதனால் காப்பீட்டு நிறுவனம் அவனுடைய மெடிகிளைமை நிராகரித்தது. இவனது பணம்தான் செலவானது, பாலிசிக்கு வருடா வருடம் பணம் கட்டியும் பிரயோஜனம் ஏதுமில்லை.

இந்த எல்லா நினைவுகளும் சர்வேஷுக்கு அவனது மனதில் வந்து போயின. மீண்டும் விழிப்புத் தட்டவே, அவன் உடனே தூக்கத்திலிருந்து எழுந்தான். பேருந்து தாம்பரம் சானடோரியத்தை அடைந்திருந்தது. அடுத்த நிறுத்தம் தாம்பரம் என்பதால் அவனும் தயாரானான். தாம்பரம் வந்தவுடன் பேருந்திலிருந்து இறங்கினான்.

வீடு வந்தவன், முகம், கை, கால்களைச் சுத்தம் செய்த பிறகு, ஏதோ கடமைக்கு இரவு உணவை முடித்துவிட்டுப் படுக்கைக்குச் சென்றான்.

அவன் முகவாட்டத்தைக் கண்ட சங்கரி, “என்னங்க, டெஸ்ட் எடுக்கப் போனீங்களே, ரிப்போர்ட் வந்ததா?” என்றாள்.

“ஆம்… எதிர்பார்த்ததுதான். முடிவுக்காகக் காத்திருக்கிறேன்,” என்றான் சோர்வாக.

“ஆமாம், போன முறை பட்ட காயம் இன்னும் ஆறவில்லை. இந்த முறையாவது எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், நஷ்டம் நமக்குத்தான்,” என்றாள் அவள் குரலில் எச்சரிக்கை தொனிக்க.

“சரியாகச் சொன்னாய் சங்கரி. இந்தத் தடவை எதையும் தவற விடமாட்டேன். காப்பீட்டு ஏஜென்டிடம் எல்லா குறிப்புகளும் சரிவர எழுதியிருக்கிறாரா என்று ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்த பிறகே காசோலையைக் கொடுப்பேன்.”

“இது நமக்கும் ஒரு பாடம். முக்கியமாக, ஏஜென்டுகளும் காப்பீடு எடுப்பவர்கள் சொல்வதை முழுமையாகக் காதுகொடுத்துக் கேட்டு, அனைத்து விவரங்களையும் குறித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல், இதுபோன்றுதான் நடக்கும்.”

“இதில் தவறு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, இருவர் பக்கமும் உள்ளது. வெங்கட் நான் சொன்னதைக் குறித்துக்கொள்ளாதது அவன் குற்றம் என்றால், அதை நான் அலட்சியப்படுத்தியது என் குற்றம். ஆனால் கடைசியில் பாதிப்பு என்னவோ காப்பீடு எடுத்தவருக்குத்தான்! அதனால், அனைவரும் காப்பீடு எடுக்கும்போது, ஏஜென்ட்டுகள் விண்ணப்பப் படிவத்தில் எல்லாக் குறிப்புகளையும் சரியாக எழுதுகிறார்களா என்று ஒருமுறைக்கு இருமுறை சரிபார்த்த பிறகே செயல்பட வேண்டும். சங்கரி, இது நமக்கும் கிடைத்த ஒரு சரியான பாடம்.”

00

பாலமுருகன்.லோ

பிறந்த இடம் கரூர் மாவட்டம். பள்ளிப் படிப்பு அனைத்தும் கரூரில் முடித்த பிறகு. வேலை நிமித்தமாகச் சென்னைக்கு 1997-ல் வந்தவன் பல நிறுவனங்களில் பணிபுரிந்து தற்போது ஒரு ஜெர்மானிய நிறுவனத்துக்கு ஆஃப்டர் சேல்ஸ் அண்ட் சர்வீஸ் பிரிவில் வேலை செய்துவருகிறேன். சிறு வயதிலிருந்தே எனக்கு எழுதும் ஆர்வம் இருந்தது. ஆனால் வளர வளர படிப்பு, வேலை திருமணம், பிள்ளைகள் என்று வந்த பிறகு எழுதும் ஆர்வம் சற்று மங்கிக் காணப்பட்டது. ஆனால் என்னாலும் மீண்டும் எழுத முடியும் என்று என்னை நான் முழுமையாகக் கண்டுகொண்ட வருடம் 2020 என்று கூறலாம். 2019-ல் இருந்து தீவிரமாகக் கதை மற்றும் கவிதைகளை வாசித்து ஒரு வாசகராக என்னை முழுமையாக மாற்றி இருக்கிறது இந்தக் கலை இலக்கிய உலகம் .

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *