“On the collapsed royal dynasties,

The sweat of humans rises from their ashes”                                          

 —Quế Mai  

தமிழில் அதிகம் கவனிக்கப்படாத இலக்கிய உலகு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் இலக்கிய படைப்புகள் எனலாம். மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழர்களின் பல படைப்புகள் இங்கு அறியப்பட்டுள்ளது. எனினும், மலாய் மொழியிலேயே எழுதிய மலாய எழுத்தாளர்கள், அல்லது கம்போடிய மொழியில் எழுதிய எழுத்தாளர்கள் அல்லது ViệtNam அல்லது இந்தோனிசிய படைப்பாளிகள் பற்றியோ, அவர்களது படைப்புகள் பற்றிய இங்கு அதிகம் கவனப்படுத்தப்படவில்லை.

சர்வதேச விருதுகளை அப்படைப்பாளிகள் பெறும்போது ஒருவேளை அப்படைப்புகள் மொழி பெயர்க்கப்படலாம் என எண்ணுகிறேன். VietNam. சிறுவயது முதலே எனக்கு மிகவும் பிடித்த நாடுகளில் ஒன்று. குறிப்பாக வட VietNam. உள்நாட்டுப் போரின் காரணமாக அதிகபட்ச பாதிப்புக்கு உள்ளான நாடு.

அமெரிக்காவை படுதோல்வியை சந்திக்க வைத்த மண். 60களின் பிற்பகுதியில்,70களின் முற்பகுதியில் அமெரிக்க இளைஞர், இளைஞிகள், கலைஞர்கள், படைப்பாளிகள்,சமூக ஆர்வலர்கள் என பலதரப்பட்டவர்களிடமும் பெரும் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்தியது VietNam போர்.

போர் எதிர்ப்பு என்பதை எப்படி நடத்தப்பட்ட வேண்டும் என்பதற்கு அடையாளமாக இன்றும் விளங்குவது VietNam போர். அமெரிக்கா அங்கு நடத்திய அட்டூழியங்கள் வரலாற்றில் அழிக்க முடியாதது. அமெரிக்க போர் வீரர்களால் வியட்நாமிய பெண்கள் அடைந்த துயரத்திற்கு அளவில்லை. அதனால் ஒரு தலைமுறையே பாதிக்கப்பட்டது. இன்றும் அதன் தாக்கம் தொடர்கிறது. போரின் காரணமாக அங்கிருந்து படகில் வெளியேறிய அகதிகள் “படகு அகதிகள்” என அழைக்கப்பட்டனர். கம்போடிய நாட்டிலிருந்து வெளியேறிய அகதிகள் பற்றிய ஜான் ஐசக் கருணாகரனின் “படகு அகதிகள்” புகைப்படத் தொகுப்பு முக்கியமான ஆவணம்.

வியட்நாமிய பெண்ணுக்கும் அமெரிக்க வீரருக்கும் பிறந்த குழந்தைகள் அமெரேசியர் என இழிவாக  அழைக்கப்படுகிறார்கள். “bụi đời”( தூசி வாழ்க்கை) என்ற சொல் வியட்நாமில் கலப்பு இனக் குழந்தைகளை, குறிப்பாக அமெரிக்க தந்தையையும் -வியடநாமிய தாயையும் கொண்டவர்களை அடையாளப்படுத்தும் ஒரு இழிவானச் சொல். தூசியானது  சிதறடிக்கப்பட்ட , தொலைந்த, வேர்கள் இல்லாத,கைவிடப்பட்ட,ஆதரவற்ற குழந்தைகளின் நிலையை பிரதிபலிக்கிறது.

அப்போது வியட்நாமில் நிலவிய சூழலின் காரணமாக பெற்றோர்களால் கைவிடப்பட்ட இக்குழந்தைகளில் சிலர் பிற்காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கிடையே அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த போதும் சமூக பாகுபாட்டையும், களங்கத்தையும் சுமக்க நேர்ந்தது.

இத்தகைய குழந்தைகளின், பெற்றோர்களின் நிலையை பல சிக்கல்களுக்கிடையே ஆராய்ந்து   Nguyễn Phan Quế Mai   எழுதியது தான் “DUST CHILD” நாவல்.

வட வியட்நாமில் பிறந்து ,தென் வியட்நாமில் வளர்ந்தவர் Nguyễn Phan Quế Mai. இவரது முதல் நாவல் “THE MOUNTAINS SING” பல சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது. DUST CHILD இவரது இரண்டாவது நாவல். பன்னிரெண்டு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. “THE SECRET OF HOA` SEN” கவிதைத் தொகுப்பு முக்கியமானது. வியட்நாமிய மொழியிலிருந்து முக்கிய கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அதேபோல் ஆங்கிலத்தில் இருந்து வியட்நாமியில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார். அமெரேசியர்களின் குடும்ப உறுப்பினர்களை ஒன்றிணைக்க உதவும் தன்னார்வலராகவும், சட்ட ஆலோசகராகவும் பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2021 ஆம் ஆண்டு Forbes இதழால் வியட்நாமின்  வலிமையான பெண் என அழைக்கப்பட்டவர்.

1969 இல் நடந்த நிகழ்வுகளையும், 2016 ஆம் ஆண்டில் நடக்கும் நிகழ்வுகளையும் முன்னும் பின்னுமாக நகர்த்திச் செல்கிறது நாவல். நான்கு முக்கிய கதாபாத்திரங்கள்.

1.  Phong`-அமெரேசிரியர். இரு குழந்தைகளுக்கு தந்தை, இசைக் கலைஞர், தச்சுத் தொழிலாளி.

2.  டேனியல் ஆஷ்லண்ட்- வியட்நாமில் ராணுவ ஹெலிகாப்டர் விமானியாக பணிபுரிந்த அமெரிக்கர்.

3.  Trang`- ஃபூ மோ கிராமத்தைச் சேர்ந்த இளம் வியட்நாமிய பெண். கவிதையில் ஆர்வம் கொண்டவர்.

4.  Quỳnh – Trang`- ன் துடுக்குத்தனமும், அழகும் கொண்ட சகோதரி.

2016 ஆம் ஆண்டில் வியட்நாமின் தலைநகரான Hồ Chí” Minh Cityல் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தில் Phong` விசா ஒப்புதலுக்கான நேர்க்காணலுக்காக பதற்றத்துடன் காத்திருக்கிறார்.

வியட்நாமில் அமெரிக்க வீரர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு அமெரிக்க குடியேற்ற அந்தஸ்தை வழங்க 1989 ஆம் ஆண்டு அமெரிக்க காங்கிரஸால் செயல்படுத்தப்பட்ட “அமெரேசியன் ஹோம் கம்மிங்”சட்டத்தை பயன்படுத்தி அமெரிக்கா செல்வதற்கான நேர்காணல் அது. தன் தந்தையை கண்டுபிடித்திடவும், தன் குடும்பத்தின் எதிர்காலத்தை எண்ணியும் அவர் அமெரிக்கா செல்ல விரும்புகிறார்.தன்னை அந்நியனாகவும், இரண்டாம் தரமாகவும், வியட்நாம் சமூகத்தின் கருமை புள்ளியாகவும் பார்க்கப்படுவதிலிருந்து மீளவும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என விரும்புகிறார்.

ஒரு அமெரிக்க கருப்பின ராணுவ வீரருக்கும்(?) வியட்நாமிய பெண்ணிற்கும் பிறந்தவர். கைக்குழந்தையாக இருக்கும் போதே தாயால் கைவிடப்பட்டு ஆசிரமத்தில் கன்னியாஸ்திரிகளால் வளர்க்கப்பட்டவர். Sister Nhã, அவர் மீது உண்மையான அன்பும், அக்கறையும் கொண்டவர். அவர்  வாலிப வயதை நெருங்கும் சமயம் Sister Nhã அவரது தாயாரைப் பற்றிய சில தகவல்களை அவரிடம் கூறுகிறார். ஆதாரபூர்வமற்ற சில குறிப்புகளையும் அளித்துவிட்டு காலமாகி விடுகிறார். அதன்பின் தன் தாயைத் தேடி Sài Gòn நகருக்கு வருகிறார். bụi đời ஆகிறார். தன் சுய அடையாளத்தை மறுக்கும் இந்த சொல்லை அவர் வெறுக்கிறார்.

சில வீரர்கள் வாழ்க்கையின் பிற்பகுதியில் தங்கள் குழந்தையைப் பற்றி அறிய விரும்புகிறார்கள். அவர்களுடன் தொடர்பு கொள்ள முயலுகிறார்கள். DNA சோதனை மூலம் உறவு சரிபார்க்கப்பட்டு அக்குழந்தைகள் வளர்ந்த பிள்ளைகளாக பெற்றேருடன் இணைகிறார்கள். ஆனால் அந்த வாய்ப்பு எல்லோர்க்கும் கிடைப்பதில்லை. பல வீரர்கள் அக்குழந்தைகளை ஏற்றுக் கொள்வதில்லை. அக்குழந்தை விரும்பியோ விரும்பமற்றோ அத்தாய்க்கு சுமையாக மாறி விடுகிறது. அப்பெண்கள் புதிதாக அமைந்த கம்யூனிச அரசு தங்களை பழி வாங்குமோ என அஞ்சுகிறார்கள்.

ஒரு பெண், குழந்தையைப் பெறத் தயாராக இல்லாதபோது, போதுமான பொருளாதார வசதிகள் இல்லாமல் இருக்கும் நிலையில், அக்குழந்தைக்கு தேவையானவற்றை அளிக்க முடியாத சூழலில் சுமை கூடுதலாகிறது. உயிர்பிழைத்தலே கேள்விக்குறியாக மாறுகையில் குழந்தையாவது ஏதோ ஓர் இடத்தில் நல்லபடியாக வளரட்டும் என்ற எண்ணத்தில் ஆனாதை ஆசிரமங்களில், அரசு பராமரிப்பு இல்லங்களில் கனத்த இதயத்துடன் விட்டுச் சென்று விட நேர்கிறது. அதுதான் Phong’கும் நிகழ்கிறது.

பெற்றோரின் தவறின் காரணமாக அக்குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுதும் குற்றவாளியாக பார்க்கப்படுகிறார்கள். தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுகிறார்கள்.

டேனியல் அடிப்படையில் கால்நடை மருத்துவர். திருமணமானவர்.  மனைவி லிண்டா. வியட்நாமிய போரில் ஹெலிகாப்டர் விமானியாக பணியாற்றியவர். போரின் காரணமாக நிகழும் இழப்பும், துயரமும், கண்ணீரும், வலியும் அவரை வாழ்நாள் முழுவதும் துரத்துகிறது. ஓர் போர் வீரானாக செய்த செயல்கள், தவறுகள் அவரை குற்ற உணர்ச்சிக்கு தள்ளுகிறது.

வியட்நாமிய பெண்ணை காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக வாக்களிக்கிறார். ஆனால் எல்லா வீரர்களைப் போலவே அப்பெண் சூல் கொண்ட நேரத்தில் அவளை கைவிட்டு அமெரிக்கா திரும்ப நேர்கிறது.   வியட்நாமில் டேனியால் கைவிட்ட பெண்ணைப் பற்றி லிண்டாவிற்கு எதுவும் தெரியாது.லிண்டாவுடன் ஆன டேனியலின்  வாழ்வில் அவரது கைவிடப்பட்ட காதல் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை.

பல வருடங்களுக்குப் பின்பே டேனியல் post-traumatic stress disorder என்ற நோய்க்கு ஆட்படுகிறார்.அதிலிருந்து குணமடைய பாவ மன்னிப்புக் கோரும் வகையில் அதுவரை அவரது நினைவிலிருந்து விலகி இருந்த வியட்நாமிய காதலியையும், அவளுக்கு பிறந்து வளர்ந்து இருக்கும் பிள்ளையையும் தேடி வியட்நாம் வருகிறார். தன் காதலியையும், வளர்ந்த பிள்ளையையும்   கண்டடைவதன் மூலம் தன் ptsd சிக்கலிருந்து சற்றே மீள முடியும் என நம்புகிறார். லிண்டாவுடன் Sài Gòn (தற்போது அதன் பெயர் Hồ Chí” Minh City) வந்து சேர்கிறார். உள்ளூர் நண்பர் Thiễn உதவியடன் தன் காதலியையும், பிள்ளையையும் தேடத் துவங்குகிறார்.

ஃபூ மோ கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் Trang`, Quỳnh. தங்கள் வயதான பெற்றோர்களின் நலனுக்காகவும்,குடும்ப கடன்களை அடைக்கவும், தங்களது எதிர்காலத்தை முன்னிட்டும் Sài Gòn  நகருக்கு  தோழியின் உதவியுடன் வந்து சேர்கிறார்கள்.

தோழி பணிபுரியும் மதுபான விடுதியில் Bar girl ஆக பணிபுரியத் தொடங்குகிறார்கள். அங்கு அவர்கள் அடையாளங்கள் மறைக்கப்பட்டு புதிய பெயர் சூட்டப்படுகிறது. Trang` “கிம்”எனவும் , Quỳnh “லான்” எனவும் நாமகரணம் சூட்டப்படுகிறார்கள்.

அந்த மதுவிடுதி அமெரிக்க வீரர்கள் அதிகம் வரும் இடம். அவ்வாறு வரும் வீரர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதே இப்பெண்களின் பணி. இந்தப் புதிய வாழ்க்கையை Quỳnh எளிதாக ஏற்றுக் கொள்ள முயல்கிறாள். Trang`, தான் மிகவும் நேசிக்கும், பாதுகாக்கும் நற்பண்புகளை விட்டுக் கொடுப்பதில் கலக்கமுறுகிறாள். இதுவரை கட்டிக் காத்து வந்த பண்பாடு, கலாச்சாரம், குடும்ப மதிப்புகளை இழந்து நிற்க நேரிட்டதை எண்ணி மனம் நொந்து குமைகிறாள்.

அமெரிக்க படைவீரர்களை சந்தித்து மகிழ்வித்து பணம் ஈட்டும் பணி நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. மது விடுதியில் Trang` டேனியலை சந்திக்கிறாள். மெல்ல அது நட்பாக பரிணாமிக்கிறது. மதுவிடுதிக்கு அருகே உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் டேனியலுடன் குடியேறுகிறாள். கருவுருகிறாள். நாட்டில் பற்றி எரியும் போரின் தடுக்க முடியாத தீப்பிழம்புகளில் அடித்துச் செல்லப்படுகிறது அவர்களது வாழ்க்கை.

Sài Gòn வீழ்ந்த பிறகு அவர்களின் வாழ்க்கை சிதறிப் போகிறது. டேனியல் எல்லா போர் வீரர்களைப் போல் அவளை கைவிட்டு அமெரிக்கா சென்றுவிட Trang`ன் வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. Quỳnh, Trang`-டேனியல் நட்பை எப்போதும் ஏற்றுக்கொள்ளவதில்லை. தன் சகோதிரியை பெரிதும் நேசிக்கும் அவள் டேனியலை வெறுப்புடனே நடத்துகிறாள். டேனியல் அமெரிக்க சென்று விட்டதை அறிந்து டேனியல் மீது கடுங்சினமும், வெறுப்பும் கொள்கிறாள்.

டேனியல் தன் மனைவியுடன் நேரில் வந்து தான் செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்கும் போதும் Quỳnh தன்நிலையை மாற்றிக் கொள்வதில்லை. அவளது சகோதரியின் துர்மரணத்திற்கு டேனியலே காரணம் என்பதில் அவளுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவளைப் பொறுத்தவரை டேனியல்  மன்னிப்புக்கு உரியவன் அல்ல.

டேனியல் Trang`யும் குழந்தையும் தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகையில் Sài Gòn-ல் phong` யை சந்திக்க நேர்கிறது. அவர் மூலம் Quỳnh யை கண்டுபிடிப்பது சாத்தியமாகிறது. Trang` ஒரு வெடி விபத்தில் உயிர் இழந்தது விட்டதை அறிந்து உடைந்து போகிறார். அவரது பெண்குழந்தை” Thu hoa“”, Quỳnh வளர்க்க இயலாத சூழல் என்பதால் வேறு ஒரு குடும்பத்திற்கு தத்து கொடுக்கப்பட்டு விட்டதை அறிந்து மனம் நொந்து போகிறார். அடையாளம் தெரியாத அக்குடும்பத்தை தேடத் துவங்குகிறார்.

Phon`ன் தாய் Quỳnh தான் என்பது DNA சோதனை மூலமும், sister Nhã, Phong` இடம் கூறியிருந்த தகவல்களின் அடிப்படையிலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

போர் பற்றிய நாவல் என்றாலும் நேரடியாக அதைப்பற்றி பேசுவதில்லை. நாவலின் மையப் புள்ளி போரால் விழையும் தீங்குகள். போர் சூழலில் ஒரு சமூகம் எந்தளவிற்கு பாதிக்கப்படுகிறது என்பதையும், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பற்ற வாழ்க்கையையும் பேசு பொருளாக்குகிறது.

அமெரிக்க வீரர்களுடன் தொடர்பு கொண்டிருந்த பெண்கள் போருக்குப் பின் சந்தேகத்துடன் பார்க்கப்படுகிறார்கள்.அமெரேசிய குழந்தைகளின் தாய்மார்கள் கம்யூனிச அரசிற்கு பயந்து குழந்தைகளை கைவிடுகின்றனர். சிலர் படகேறி தப்பி ஓடுகிறார்கள்.

வியட்நாமியர்களால் கருப்பு ஏப்ரல் என குறிப்பிடப்படும் நாள் ஏப்ரல் 30,1975. அன்றுதான் வியட்நாம் போர் முடிவுக்கு வந்தது. சுமார் 30,000அமெரேசிய குழந்தைகள் அமெரிக்க வீரர்களாலும்,பெற்ற தாயாரலும் கைவிடப்பட்டு நிராதரவர்களாக மாறுகிறார்கள். கல்வி, உணவு, பராமரிப்பு, பாதுகாப்பான தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகிறது.

கம்யூனிச அரசின் மீது தென் வியட்நாமிருக்கு இருந்த நம்பிக்கையின்மை சமூக கட்டமைப்பில் ஆழமான பிளவை உருவாக்குகிறது. கடும் உளவியல் சிக்கலுக்கு இருதரப்பு வியடநாமியர்களும் உள்ளாகின்றனர். சொந்த மண்ணில் அந்நியர்களாகிறார்கள். Sài Gòn வீழ்ச்சிக்குப் பிறகு புதிய அரசினர் துன்புறத்துவார்கள் என்கிற தவறான எண்ணத்தில் பயந்தும், சுதந்திரத்தை தேடியும் பலர் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். அவர்கள் படகு அகதிகள் என அழைக்கப்பட்டனர்.

Quỳnh போன்றோர் வெற்று வாக்குறுதிகளின் காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட நேர்கிறது. மோசமான சூழலில் பெரும் துயரங்களுக்கு உள்ளாக நேர்கிறது. Quỳnh இதிலிருந்து மீண்டு ஒரு புதிய வாழ்க்கையை தொடங்கி, பிறர் மதிக்கும் வகையில தன் சொந்த வியாபாரத்தை நடத்துகிறார். இது ஒரு விதிவிலக்கு மட்டுமே.

கம்யூனிச அரசு அமெரேசியர் நலத்திற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இதன் விளைவாக அமெரேசியர் பலர் தங்கள் பெற்றோரை கண்டடைய முடிகிறது.

Phong` பொறுத்தவரை கலப்பு இன பாரம்பரியம் வாழ்க்கை முழுவதும் துரத்துகிறது. தயாரால் கைவிடப்பட்டு, அமெரேசியராக, பன்னிரெண்டு வயது முதலே உயிர் வாழ கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. திருட நேர்கிறது, அமெரிக்கா செல்ல தான்தான் அவரது தாய் என ஆள் மாறாட்டம் செய்பவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டியிருக்கிறது. இரு குழந்தைகளுக்கு தந்தையாகிய பின்னரும் அவர் நிலையற்ற வாழ்வே வாழ்கிறார்.

அமெரேசிரியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை கண்டுபிடிக்க DNA சோதனையையே சார்ந்துள்ளனர். அதில் phong’ தோல்வியே சந்திக்க நேர்கிறது. யார் அவரது உண்மையான தந்தை????

Quỳnh போன்ற பெண்கள் தாங்கள் உயிர்வாழ செய்ய விரும்பாத ஒன்றை செய்ய நேர்கிறது. அதன் காரணமாக மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுகிறது. பிற்காலத்தில் தங்களைத் தாங்களே புதுபித்துக் கொண்டாலும் அவமானதிற்கு அஞ்சி, தற்போதைய நல்வாழ்வில் பிறந்த குழந்தைகள் உண்மையை அறிந்தால் எங்கே தங்களை புறக்கணித்து விடுவார்களோ என பயந்து தங்கள் சோகங்களை, இழப்புகளை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அமெரேசிய குழந்தையை வைத்திருப்பது அவர்களின் குற்றத்திற்கான சான்றாக ஆக்குகிறது.

காதல், குடும்பம், இழப்பு,துயரம், மன்னிப்பு என அனைத்தையும் வெவ்வேறு கதாபாத்திரங்களின் செயல்கள், எதிர்வினைகள், எண்ணங்கள், உணர்வுகளை புரிய வைப்பதன்மூலம் ஆழமாக நாவலாசிரியர் காட்டுகிறார். எந்தவொரு போர்ச்சூழலிலும் முதலில் பாதிப்பிற்கு உள்ளாவது பெண்களும, குழந்தைகளும் தான் என்பதை உண்மையான பின்னணியில் இருந்து அறிந்து எழுதப்பட்ட இந்நாவலும் ஓரு சாட்சி.

நாவலின் பல பகுதிகள் உணர்வுபூர்வமானவை. நடுவே வரும் பாடல் வரிகளும், கவிதைகளும் சூழலை நோக்கி நம்மை அழைத்துச்  செல்கின்றன. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவலின் இறுதியில் phong` ன் தாய் Quỳnh என அடையாளப்படுத்தப்படுவது மட்டும் நாடகத்தனமாக இருக்கிறது.

நாவலில் நம்மை அதிகம் கவனம் கொள்ள வைப்பது Trang`, Phong`. Trang`ன் தூய அன்பும், அக்கறையும்,காதலும் ஒருபக்கம் எனில் வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள அவள் படும் பாடுகள், பிராயத்தனங்கள், ஏமாற்றங்கள்,வலிகள் மறுபுறம் நம்மை அவளை நோக்கி நகர்த்துகிறது. அவளது எதிர்பாரா மரணமும் ஒரு காரணம் எனலாம். அதேசமயம் Phong` தன் அடையாளத்தால் அடையும் மனச்சோர்வும் அதிலிருந்து மீண்டு விட எடுக்கும் முயற்சிகளும்,எப்படியேனும் தன் தந்தையை, தாயை கண்டுபிடித்திட வாழ்நாள் முழுவதும் தேடலில் ஈடுபடுவதும்,அவர் மீதும் அவரைப் போன்ற அமெரேசியர்கள் மீதும் நம் மனதை திரும்பச் செய்கிறது. அவரது துயரங்கள் தனி மனிதனின் துயரமல்ல.ஓரு சமூக அமைப்பில் நிராகரிக்கப்பட்ட குழந்தைகளின் துயரம்.

அமெரேசியராக பிறந்தது அவர்களின் தவறா? சமூகத்தின் தவறா? என்ற கேள்வியை முன் வைத்து கலப்பு இனக் குழந்தைகளின் சுதந்திர வேட்கையும்,உரிமைக்குரலையும்  இந்நாவல் மீண்டும் உயிர்பித்துள்ளது எனலாம்.

Nguyễn Phan Quế Mai ன் கவிதை ஒன்று

பூத்துக் குலுங்கும் ஒரு மரம்

நான்

பூத்துக் குலுங்கும் ஒரு மரம்

என்னையே வேரோடு பிடுங்கிக் கொள்கிறேன்

என் உறவினர்களிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும்,

என் மொழியிலிருந்தும்.

என் இலைகளை

காற்றில் உதிர்க்கிறேன்

தனியாக.

,

 நான்

 ஆழமான கடலைக் கடக்கிறேன்

 பய  அலைகள்

 ஒன்றையொன்று எதிர்த்து மடிகின்றன,

 அவை என்னை மூழ்கடிக்க விரும்புகின்றன

 அவை என்னை அழிக்க நினைக்கின்றன.

,

நான்

அந்நியர்களிடையே என்னையே நடுகிறேன்

என் வேர்கள் இரத்தம் கசியத் தொடங்குகின்றன

ஒரு புதிய தோட்டம் என்னை மேலே உந்துகிறது

பறவைகளின் குரல்களுக்கு மத்தியில்

நான் தனிமையாக இருக்கிறேன்

பரந்த பசுமைக்கு மத்தியில்

நான் தரிசாக இருக்கிறேன்.

,

சோம்பலில் இருந்து

நான் விலகுகிறேன்

பழைய விஷயங்களை

இலையென உதிர்க்கிறேன்

எனது வழமையான செயல்களை

அசைத்துப் பார்க்கிறேன்.

,

நான்

என் மரத்தின் ஒவ்வொரு செல்லையும் திறக்கிறேன்

பறவைகளின் ஒவ்வொரு குரலையும் அருந்துகிறேன்.

காற்றை உள்வாங்குகிறேன்.

புதிய மொட்டுக்களை வளர்த்தெடுக்கிறேன்

,

நான்

பூக்க நடுங்குகிறேன்

என் இரத்தம் கசியும் வேர்களிலிருந்து

என் பழங்களை உருவாக்குகிறேன்.

,

நான்

தன்னைத்தானே பிடுங்கிக் கொள்ளும்

ஒரு மரம்.

(The Secret of Hoa` Sen தொகுப்புலிருந்து)

குறிப்பு: கட்டுரையில் வியட்நாமிய பெயர்கள் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான காரணம் SCOTT SIMON வுடனான நேர்காணலில் Nguyễn Phan Quế Mai கூறியிருப்பது கவனிக்கதக்கது என்பதால்.

“SIMON: U.S. readers will find the spellings of ViệtNamese names in your novel different from what some of us grew up reading. What we might call Saigon is rendered as two words, Sài Gòn. Why was it important to you to do that?

Nguyễn Phan Quế Mai: When I wrote my first novel, “The Mountains Sing,” I made a difficult decision. I told my publisher I would rather keep my name and the names of the characters and the ViệtNamese words in my novel in the authentic ViệtNamese way to show respect for my culture rather than to sell more books.

The fact is throughout our long history, we have been colonized, occupied by so many empires, and we have suffered so much loss to our language. Whenever the ViệtNamese language is published as part of the English text, we are expected to take away the diacritics of our names to make it easy to the Western readers.

 And here I am to say that if we remove the diacritics, we misspell the ViệtNamese words.

For example, my name Quế, if it’s written in the right way, with – you know, with a hat and with a sac, it says qway (ph). That means cinnamon. But if you spell it, like, the normal English way – you remove the diacritics -Que- it becomes qware (ph), and it means a stick. Diacritics are really important to our language. You know, by reading my novels, the readers are embracing the ViệtNamese culture, ViệtNamese language.”

நன்றி: இந்நூலை பிறந்தநாள் பரிசாக  தந்த சகோதரி மகளுக்கு நன்றி.

Scott Simon-

நேர்காணல் -இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.

000

அ.முனவர் கான்

முனவர் கான் தனியார் பள்ளியில் முதல்வராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சேலத்தில் வசிக்கிறார். மொழிபெயர்ப்பாளர் பேராசிரியர் ஆர்.சிவகுமாரின் மாணவர். அவரது வழிகாட்டுதலில் நவீன இலக்கிய படைப்புகளை வாசிக்கத் துவங்கியவர். 

மற்ற பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *